நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், நவம்பர் 12, 2015

ஸ்ரீகுபேர பூஜை

திருக்கயிலை மாமலையில் - சிவபெருமானை வணங்கி வரங்களைப் பெற்ற இராவணன், ஆணவங் கொண்டு,

வடதிசைக்கு அதிபதியாக - சங்கநிதி, பத்மநிதி மற்றும் புஷ்பக விமானம் இவற்றுடன் விளங்கிய குபேரனிடமிருந்து - அவற்றை அபகரித்துக் கொண்டான்.

அத்துடன் நில்லாமல் குபேரனது நகரான அளகாபுரியில் இருந்தும் அவனை விரட்டியடித்து விட்டான்.

இத்தனைக்கும், குபேரன் - இராவணனின் சகோதரன்.  

இதனால் மனம் வருந்திய குபேரனைக் கண்டு இரங்கிய மாமுனிவர்கள் சிவவழிபாடு செய்யும்படி அறிவுறுத்தி வழிகாட்டினர்.

அதன் பல தலங்களுக்கும் குபேரன் சென்று ஈசனை வழிபட்டான். 

அப்படி வழிபட்டு வருங்கால் -  பராசர முனிவரின் துயரம் தீர்த்ததும் - தஞ்சகன் எனும் கொடியவனிடம் இருந்து மீள வேண்டி தேவர்கள் இறைவனைத் தஞ்சம் அடைந்ததும் ஆகிய, 

பராசர க்ஷேத்திரம் என வழங்கப்பட்ட தஞ்சபுரிக்கு வந்தடைந்தான். 

கருணையே வடிவான ஸ்ரீஆனந்தவல்லி அம்பிகையையும் ஸ்ரீதஞ்சபுரீஸ்வர ஸ்வாமியையும் கண்ணாரக் கண்டு வணங்கினான். நாளும் நறுமலர் கொண்டு வழிபட்டு மெய்யுருகி நின்றான்.

காலம் கனிந்தது. 

தஞ்சபுரீஸ்வரராகிய எம்பெருமானும் ஆனந்தவல்லியாகிய அம்பிகையும் குபேரனின் தவங்கண்டு மனம் இரங்கி ப்ரத்யட்சமாகினர்.


அந்த அளவில் -  குபேரன் அனுபவித்து வந்த துன்பங்கள் எல்லாம்,  தவிடு பொடியாகின. அனைத்துப் பெருமைகளும் குபேரனுக்கு அருளப்பட்டன. 

ஈசனின் முன்னிலையில் - யட்சர்களுக்குத் தலைவனாகவும், வடதிசைக்கு அதிபதியாகவும்  மீண்டும் முடி சூட்டப்பட்டான்.

இத்தனையும் நிகழ்ந்தது - துலா மாதமாகிய ஐப்பசியின் அமாவாசை தினத்தில் என்பது ஐதீகம். 

வாழும் உலகில் பொன் பொருள் மீது நாட்டம் இல்லாதார் யார்!.. 

இருப்பவரும் நாட, இல்லாதவரும் தேட - செல்வமோ ஓரிடத்தில் நில்லாது உருண்டோடிக் கொண்டிருக்கின்றது!.. 

மஹாலக்ஷ்மியின் திருவருள் பெருக்கினால் - குபேரனைப் போல் வாழ எல்லாருக்குமே ஆசைதான்!..

ஆனால் - நிலவுலகில் நில்லாத செல்வம்  - யாரிடத்தில் நின்று நிலைக்கும்?..

சாம கானம் பாடி - இறைவனை மகிழ்வித்து மகத்தான வரம் பல பெற்று வந்த-  ராவணன்  நிலைகெட்டழியக் காரணம் அவன் கொண்ட பெண்ணாசை!..

நிலமகளின் மகனாகத் தோன்றியும் - நிலைத்து வாழ முடியாமல் - அவள் கையாலேயே வதம் செய்யப்பட்டு, நரகாசுரன் மண்ணில் விழக் காரணம் -

அவன் கொண்ட மண்ணாசை!..

ஆசைகளை வென்றவரிடத்தில் தான்  - ஐஸ்வர்யம் நின்று நிலைக்கும்!..

குபேரன் வீழ்ந்ததைக் கண்டு சிரித்து மகிழ்ந்த இராவணன் - குபேரன் மீண்டும் எழுந்தபோது சிந்திக்க மறந்தான்!.. 

நேர்மையான வழியில் சென்றும் - ஒருவன் பொன்னையும் பொருளையும் இழக்க நேர்ந்தால் - அவனை ஈசனே முன்வந்து கை கொடுத்து தூக்கி விடுவான் என்பதே  -

ஸ்ரீ குபேரன் வ்ரலாற்றில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய மெய்ப்பொருள்!.. 

தகாத வழியில் பொருளைச் சேர்த்து உயர்ந்த நிலையில் இருப்பவரை - இன்றைய உலகம் காண்கின்றது.

ஆயினும்,

தரமற்ற செல்வம் - தலை குனிய வைத்து விடும் என்பதே சத்தியம்!..

தன்னலம், பேராசை - எனும் குணங்களை வதம் செய்து விட்டால் - குபேரனே - நேரில் வந்து நம்முடய நல்விருப்பங்களை நிறைவேற்றி அருள்வார்.

இது மாதிரிஎல்லாம் எளிதாகச் செய்து விட முடியுமா?..

ஒரேயடியாக முடியாது தான்!..

தன்னலம் பேணுவதையும் பேராசை கொண்டு அலைவதையும் -
கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்க.. - என்பது ஆன்றோர் திருவாக்கு..

முயன்றுதான் பார்ப்போமே!..

ஆயினும், தன்னலமும் பேராசையும் தொலைந்து விட்டால் -
பெருஞ்செல்வத்தை நல்கும் குபேரனின் அருள் எளிதாகக் கிட்டும்..

ஆனாலும் -
தன்னலமும் பேராசையும் தொலைந்து விட்ட நிலையில் -
பொன்னுக்கும் பொருளுக்கும் தேவையே இருக்காது..

இதுவும் - ஆன்றோர் திருவாக்கு தான்!..

என்னங்க.. இது.. முரண்பாடாக இருக்கின்றதே!..

ஆமாம்..

முரண்பாடுதான் வாழ்க்கை..
சுட்ட பழமும் சுடாத பழமும் நம்மிடையே தான் இருக்கின்றன..

ஆயினும்,
குபேர யாகம் செய்தால் அல்லது யாகத்தைத் தரிசித்தால் - நோய் நொடியின்றி வாழ்வதற்கு வற்றாத செல்வ வளத்தைப் பெறலாம் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு அமாவாசையிலும் ஸ்ரீகுபேர யாகம் அபிஷேக ஆராதனை ஆகியன ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் கோயிலில்  சிறப்பாக நடைபெறுகின்றது.

எனினும் ஐப்பசி அமாவாசையன்று நிகழும் மஹா குபேர யாகம்  மிகவும் விசேஷமானது.


இந்த அடிப்படையில், ஐப்பசி அமாவாசையாகிய நேற்று தஞ்சாவூர் ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் திருக்கோயிலில் நடத்தப் பெற்ற மஹா குபேர யாகத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறை தரிசனம் செய்தனர்.

செல்வச் செழிப்பினை நல்கும் ஸ்ரீ குபேரன் - தான் இழந்த பெருஞ்செல்வத்தை மீண்டும் பெறுவதற்கு ஈசனை வணங்கி வழிபட்டு தன் இன்னல்கள் தீரப் பெற்ற தலம் - தஞ்சபுரி எனப்படும் தஞ்சாவூர்..


பராசர முனிவரும் , ரோமரிஷியும், வசிஷ்ட மகரிஷியும், கோரக்க சித்தரும், கொங்கண சித்தரும், சிவவாக்கிய சித்தரும் வழிபட்ட திருத்தலம்.

தஞ்சகன் எனும் அசுரனால் அல்லலுற்ற தேவர்கள் - ஈசனைத் தஞ்சம் அடைந்த தலம்.

அதனால் தான் - தஞ்சபுரி எனப் பெயர்.

இத் திருத்தலத்திற்கு  அளகாபுரி எனவும் பெயர் உண்டு.

பின்னாளில் -

சித்தர் கருவூராரும், மகான் சதாசிவப்ரமேந்திரரும், ஸ்ரீ ராகவேந்திரரும் சத்ரபதி சிவாஜியின் குரு ஸ்ரீஸமர்த்த ராமதாஸரும் - திருப்பதங்கள் பதிய நடந்த திருத்தலம்.


தஞ்சை மாநகரில் - கரந்தை ஸ்ரீ கோடியம்மன் திருக்கோயிலைக் கடந்ததும் வெண்ணாற்றங் கரையின் தென்கரையில் அமைந்துள்ளது இத் திருக்கோயில்.

ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் உடனாகிய ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில்!.. 

மிகப் பழைமை வாய்ந்த இத்திருக்கோயில் மேற்கு நோக்கித் திகழ்கின்றது..


இத்திருக்கோயிலில், நேற்று (11/11-புதன்) மாலை வெகுசிறப்புடன் ஸ்ரீமஹாகுபேர யாகம் நிகழ்ந்தது.

சென்ற ஆண்டினைப் போல, இந்த ஆண்டும் - இந்த மஹா யாகத்தில் கலந்து கொள்ளும் பேறு எளியேனுக்கு கிடைத்தது.

அப்போது எடுக்கப்பட்ட சில படங்களை வழங்கியுள்ளேன்!..யாகத்தில் பூரணாஹூதி நிறைவேறியதும், அஷ்டலக்ஷ்மி மண்டபத்தில் அமைந்துள்ள ஸ்ரீஐஸ்வர்ய சிவலிங்க சந்நிதியில் ஸ்ரீஐஸ்வர்ய சிவலிங்கத்திற்கும் ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கும் ஸ்ரீ குபேரனுக்கும் சகல திரவியங்களுடன் மங்கலகரமாக அபிஷேகம் நடைபெற்றது..

அதன்பின் - யாகத்தில் பூஜிக்கப்பட்ட கடம் புறப்பாடாகியது..திருக்கோயில் வலமாக எடுத்து வரப்பெற்று -
ஸ்ரீஐஸ்வர்ய சிவலிங்கத்திற்கும் ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கும் ஸ்ரீ குபேரனுக்கும் மகா அபிஷேகமும் மஹா தீப ஆராதனையும் நிகழ்ந்தது..

மழை சற்றே ஓய்ந்திருந்ததால் பெருமளவில் பக்தர்கள் திரண்டிருந்தனர்.
கடந்த ஆண்டினைப் போலவே இந்த ஆண்டிலும் மிகவும் நெரிசல்.

இருப்பினும் - மனங்குளிர அருமையான தரிசனம்.

எதிர்வரும் ஆண்டுகளிலும் -
இதேபோல சிவதரிசனம் அருளப்பெற வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்
வலைத்தள நண்பர்கள் அனைவரது நலத்திற்கும் வளத்திற்கும் மனதார வேண்டிக் கொண்டேன்.

ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில் -  கும்பகோணம் செல்லும் சாலையில் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து - திருவையாறு, திருக்காட்டுப் பள்ளி, ஐயம்பேட்டை - ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகரப் பேருந்துகள் தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயிலின் அருகில் நின்று செல்லுகின்றன.

அரியலூர் மற்றும் கும்பகோணத்திலிருந்து தஞ்சைக்கு வருபவர்கள் - வெண்ணாற்றுப் பாலத்தைக் கடந்து (அரை கி.மீ. தொலைவில்) தஞ்சை மாமணிக் கோயில்கள் எனப்படும் பெருமாள் கோயில்களைக் கண்ணாரக் கண்டு வணங்கியபடி - ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் திருக்கோயிலை அடையலாம்.

மனம் மகிழ்வாக இருக்கின்றது.

ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே
நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே
ஸமே காமாந் காம காமா ய மஹ்யம்
காமேஸ்வரோ வைஸ்ரவணோத தாது
குபேராய வைஸ்ரவணாய மஹாராஜாய நம:

சங்கநிதி, பத்மநிதி சகித, 
ஸ்ரீ சித்ரலேகா சமேத ஸ்ரீ குபேர மூர்த்தி 
அனைவருக்கும் நல்லருள் பொழிவாராக.. 

நேர்மையான வாழ்வில் 
நாமும் நலம் பெறுவோமாக!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!..
***

18 கருத்துகள்:

 1. மிகச்சிறப்பான பகிர்வுகளுக்கும் ,
  அருமையான படங்களுக்கும் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களன்பின் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி..

   நீக்கு
 2. தஞ்சையிலிருந்து, தஞ்சபுரீஸ்வரர் கோயில் பதிவு கண்டேன். உங்களது மனம் அடைந்த மகிழ்வை எண்ணி நானும் இன்புற்றேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. அன்பின் ஜி அருமையான விளக்கத்துடன் வரலாற்று விடயங்கள் வழக்கம்போல படங்களும் அழகு அறியத்தந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. அன்பின் ஜி வணக்கம்
  தங்களை தொடர் பதிவு ஒன்றில் இணைத்திருக்கிறேன் எனது தளம் வருகை தந்து விபரம் அறிய அழைக்கின்றேன்.
  முகவரி -
  http://www.killergee.blogspot.ae/2015/11/1.html
  அன்புடன்
  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  12.11.2015
  U.A.E. Time: 03.36 pm

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் விருப்பத்தின்படி பதிவு வெளியாகி விட்டது.. மகிழ்ச்சி..

   நீக்கு
 5. அருமையான படங்களுடன் சிறப்பான பகிர்வு ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. படங்களுடன் விளக்கம் அருமை சார். குபேரன் அருள் எல்லோருக்கும் கிடைக்க ஆண்டவனிப் பிரார்த்திப்போம் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   எல்லாரும் நல்வாழ்வு வாழ பிரார்த்திப்போம்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. சிறப்பான படங்களும் சீரிய கருத்துகளும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 8. இந்த கோவில் பார்த்து இருக்கிறேன், ஆனால் குபேரபூஜை பார்த்தது இல்லை. ந்நெரில் பார்த்த உணர்வை ஏற்படுத்தின படங்களும், செய்திகளும்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   வருக.. வருக..
   த்ங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. ஆஹா தஞ்சபுரீஸ்வரரா,,,,,,, அருமை, அழகிய படங்கள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் - மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..