நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், அக்டோபர் 31, 2013

ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர்

பச்சைப் பட்டு விரித்தாற் போல - கண்ணுக்கு எட்டிய தூரம் வரை - பசுமை!..

செழுமை என்ற சொல்லுக்கு - சிறந்த முதல் உதாரணம்!..


இந்த இடம் இப்படி இருப்பதற்கு - யார், எது - காரணம் என்றெல்லாம் யோசிக்காமல், இதுவே - நமக்கு ஏற்ற நல்ல இடம்  எனத் தீர்மானித்தார்கள் - அவர்கள். 

அவர்கள்!.. - 

தஞ்சகன், தாண்டகன் மற்றும் தாரகன். மூவரும் சகோதரர்கள். 

இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் - ஆடு மாடுகளை மேய்ப்பதும் இயற்கையுடன் இணைந்து வாழ்வதும் தான்!..

இவர்கள் வந்து தங்கிய இடத்தின் பெயர் பராசரக்ஷேத்திரம் என்பதையும். பராசர முனிவரின் வேண்டுதலின் பேரில் மஹாவிஷ்ணு விண்ணிலிருந்து இறக்கித் தந்தருளிய விண்ணாற்றின் வற்றாத நீர் ஆதாரத்தினால் தான் அந்தப் பகுதி வளம் கொஞ்சுகின்றது என்பதையும் அவர்கள் அறிந்தார்களில்லை.

ஆனால் மகரிஷியாகிய பராசரர் - அவர்களைப் பற்றி அறிந்து கொண்டார். ஆயினும்,  அவர்களால் பெரிதாக இன்னல் ஏதும் விளைவதற்கு யாதொரு காரணமும் இல்லையென - பெருந்தன்மையாக இருந்து விட்டார். ஆனால்  - அதற்கு அப்புறம் தான் தொடங்கியது வினை!..

தஞ்சகனின் வளர்ப்பு பசுக்களில் ஒன்று நாளும் மறைவாக எங்கோ சென்று வருவதை உணர்ந்து கொண்ட அவன் - அன்று அந்தப் பசுவைத் தொடர்ந்தான். அது பரபரப்புடன் சென்று - அடர்ந்து வளர்ந்திருந்த வன்னி மரத்தின் கீழ் நின்றது. 

அங்கே சுயம்புவாக சிவலிங்கம்!.. அப்புறம் என்ன!.. பசு தன்னிச்சையாய் சிவலிங்கத்தின் மீது - பாலைப் பொழிந்தது. இதனைக் கண்ட தஞ்சகனின் மனதில் அன்பும் ஆதுரமும் மேலிட்டது.

''..ஒரு விலங்குக்கு உள்ள உள்ளுணர்வு கூட நமக்கு ஏற்படவில்லையே!.. இத்தனை நாள் பிழை செய்து விட்டோமே!..'' - என்று வருந்தி - தானும் தன் தம்பியருடன் சிவ வழிபாடு செய்து தவம் மேற்கொண்டான்.

அப்படி அவன் செய்த தவத்திற்கு மனம் இறங்கினார் -  சிவபெருமான். சிவதரிசனம் பெற்ற தஞ்சகன் - பெருமானிடம் மாறாத அன்பு வைத்திருக்கும் படியான வரத்தினைக் கேட்டான். ஈசனும் அவ்வாறே வழங்கி மேலும் பல வளங்களையும் அருளினார்.

நேசனாக வளர்ந்தவன்  - வரங்கள் பல பெற்ற பின் நீசனாக ஆனான்.

அங்கிருந்த முனிவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இன்னல்கள் அவனால் விளைந்தது. மனதிலிருந்து அன்பு அகன்று ஆணவம் குடி கொண்டது. தவமுனிவர்களுக்கு உதவுதற்கு வந்த தேவர்களையும் எதிர்த்து வீழ்த்தினான்.

வானவர் தலைவனை வளைக்க முயன்றான். தேவ அஸ்திரங்களால் அவனை ஏதும் செய்ய முடியவில்லை. அஞ்சி நடுங்கிய தேவர்கள் பரமேஸ்வரனைச் சரணடைந்தார்கள் -  ''..தஞ்சம் என்று!..''

ஆணவத்தில் சிகரத்தில் நின்று அடாது செய்யும் தஞ்சகனைக் கண்டு உள்ளம் கொதித்தாள் - சர்வேஸ்வரி!.. கோபம் கொதித்து - செந்தணலாகக் கொப்பளிக்க  - காளி என எழுந்தாள்.


அவளுடைய உக்ரத்தைக் கண்டு  - தேவர்கள் மேலும் பதற்றமாகினர். எல்லாம் வல்ல எம்பெருமான் நிகழ இருப்பதை அறிந்தவராக - தஞ்சம் அடைந்தவரைக் காக்கும் பொருட்டு, பூத நாயகனாகிய ஹரிஹரசுதனை அழைத்தார்.

தஞ்சம் என அடைக்கலம் ஆன தேவர்களைக் காக்கும் பொறுப்பினை ஹரிஹர சுதனிடம் ஒப்படைத்தார். தர்மசாஸ்தாவாகிய ஹரிஹரசுதனும் தேவர்களை பாதுகாப்பாக ஓரிடத்தில்  - சிறை  - வைத்து காத்தருளினார். ''ஸ்ரீசிறைகாத்த ஐயனார்'' - எனத் திருப்பெயர் பெற்றார்.

மூண்டது போர்.

எட்டுத் திக்கிலும் தீவண்ணங் கொண்டு சுற்றிச் சுழன்றாள் - ஸ்ரீ காளி.  அசுர குணம் கொண்டு அடாத செயல்களைப் புரிந்த தாண்டகனும் தாரகனும் சாம்பலாகி வீழ்ந்தனர்.

தஞ்சகன் மட்டும் தான் அறிந்த மாய வேலைகளை - மகாமாயை ஆகிய பராசக்தியிடம் காட்டியவனாக களத்தில் நின்று ஆடிக் கொண்டிருந்தான். அவனது அறியாமையை எண்ணிச் சிரித்த அம்பிகை - சீறிச் சினந்தபோது - அவளிடமிருந்து கோடி கோடி என தீப்பிழம்புகள் திக்கெட்டும் பரவி நின்றன.

அதைக்கண்டு அண்டபகிரண்டமும் நடுநடுங்கியது. தஞ்சகன் புத்தி பேதலித்தவனாக தடுமாறிக் கீழே விழுந்தான். காரணம் -

கோடி கோடி என வெளிப்பட்ட பிழம்புகள் அத்தனையிலும் அன்னையின் உக்ர முகம் விளங்கியது தான்!..

கீழே விழுந்தவன் மீது, திருவடியைப் பதித்து திரிசூலத்தினை  ஊன்றினாள்!..

அந்த விநாடியில் அம்பிகையின் இதயக் கமலத்திலிருந்த சிவபெருமான் - பெருங் கருணையுடன் - அன்னையின் சஹஸ்ர கமலத்தில் திருமுகங்காட்டி, ''..ஹே கெளரி!..'' - என அழைத்தருளினார்.

ஸ்ரீகோடியம்மன்
அந்த அளவில் அம்பிகை - சாந்தம் அடைந்தாள். கோடி முகம் காட்டியதால் ஸ்ரீகோடியம்மன் எனும் திருப்பெயர் அமைந்தது.

''தாயே!.. தகாதன செய்து கடையனான நான் - நின் திருவடி தீட்சையால் கடைத்தேறினேன். ஆயினும், என்னுள் ஒரு விருப்பம். என் ஆணவத்தினை அழிக்க - நீ எழுந்தருளிய இத்திருத்தலம் அகிலம் உள்ள அளவும் என் பெயரால் விளங்க வேண்டும்!. நீயும் இங்கேயே இருந்தருளி - உன்னை வணங்குபவரின் ஆணவத்தை அழித்து அருள வேண்டும்!..''. - என வேண்டிக் கொண்டான்.

தஞ்சகன் செய்த சிவபூஜையின் புண்ணியம் அவனைக் காத்தது.  பிரச்னை நீங்கிய அளவில் தஞ்சகனின் விருப்பப்படியே  அருளினர்.

அப்படி வழங்கப்பட்ட திருத்தலம்  -

தஞ்சாவூர்!.. 

ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில்
தமக்குத் தஞ்சம் அளித்த - சிவபெருமானை ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் எனப் போற்றி வணங்கிய தேவர்கள் - உக்ரம் தணிந்து நின்ற அம்பிகையின் திருவடிகளில் விழுந்து வணங்கினர். தம்மைப் பாதுகாத்த அம்பிகைக்கு தமது அன்பினை - ஆனந்தத்தை சமர்ப்பித்தனர். தானாகி நின்ற தற்பரை - தேவர்கள் அளித்த ஆனந்தத்தை அவர்களுக்கே வழங்கி -

தாயாக அருள் சுரந்து நின்றாள்.

ஸ்ரீஆனந்தவல்லி - எனும் திருநாமம் கொண்டாள்.

ஸ்ரீமஹாலக்ஷ்மி - குபேரன்
இந்தத் திருத்தலத்தில் தான் - வட திசைக்கு அதிபதியான குபேரன் தவமிருந்து - தான் இராவணனிடம் இழந்த அரும் பெரும் செல்வத்தையும் புஷ்பக விமானத்தையும் மீண்டும் பெற்றான் என்பது ஐதீகம்.


மாதந்தோறும் இங்கே - அமாவாசையன்று - கட ஸ்தாபனம் செய்து குபேர யாகத்துடன், அஷ்டலக்ஷ்மி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள குபேரனுக்கும் மஹாலக்ஷ்மிக்கும் மஹா அபிஷேகம்  நிகழ்கின்றது. அதிலும் குபேரனின் தவம் பலித்த ஐப்பசி அமாவாசையன்று மிகச் சிறப்பாக இந்த வைபவம் நிகழ்கின்றது.

இந்த மங்களகரமான - வைபவத்தில் கலந்து கொள்ளும் அன்பர்களின் கவலைகள் தீர்கின்றன. கண்ணீர் சுவடுகள் மறைகின்றன.. கடன்கள் தீரவும் தனதான்ய விருத்தி ஏற்படவும் வேண்டுவார் வேண்டும் வண்ணம் - ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் அருள்கின்றார்.

தஞ்சம் என்று தவித்து வருவோர் தம் வாட்டம் தீர்த்து - ''அஞ்சேல்!..'' என்று ஆனந்தத்தை அளிக்கின்றாள் அன்னை - ஸ்ரீ ஆனந்தவல்லி!..

தனது கோபத்தில் விளைந்த கோடியம்மனை நோக்கியவளாக ஸ்ரீஆனந்த வல்லி அருள் பாலிக்கின்றாள்.


கிழக்கு பிரகாரத்தில் - தெற்கு நோக்கிய வன்னியடி விநாயகர் வரப்ரசாதி!..

குபேரனும் மஹாலக்ஷ்மியும் குறைகளைத் தீர்த்து அருள்கின்றனர். நாடி வருவோர் நலம் பெறுவதை கண்கூடாகக் காணலாம்!..

தஞ்சை மாநகரில் உள்ள தொன்மையான திருக்கோயில்களில் இதுவும் ஒன்று. வன்னி மரம் தலவிருட்சம். வெண்ணாறு தீர்த்தம்.

வெண்ணாற்றின் தென் கரையில் உள்ள ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் திருக்கோயிலுக்கு  எதிர்புறம் - ஸ்ரீ வீரநரசிங்கப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. வைணவத்தில் இந்த சம்பவம் சற்றே மாறுதலாக இருக்கும்.

ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில் மேற்கு நோக்கிய திருக்கோயில் என்பது மிகச்சிறப்பான விஷயம்!..

பஞ்சம் தீர்க்கும் பஞ்ச க்ஷேத்திரங்களுள் - முதலாவது திருக்கோயில்!.. தவிரவும் தஞ்சை மாநகரின் ஈசான்ய மூலையில் திகழும் சிறப்பினையும் உடையது!.. மூர்த்தி தலம் தீர்த்தம் - என்ற சிறப்புடைய திருக்கோயில்..


ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சை - கும்பகோணம் சாலையில் அமைந்துள்ளது. பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருவையாறு, ஐயம் பேட்டை செல்லும் நகரப்பேருந்துகள் அனைத்தும் திருக்கோயிலின் அருகில் நின்று செல்கின்றன.

தன்னுடைய செல்வங்களை இராவணனிடம் இழந்ததும் பல தலங்களிலும் இறைவழிபாடு செய்த - குபேரன், தன் குறை நீங்கப்பெற்ற திருத்தலம்.

இந்தத் திருத்தலத்தினைப் பற்றி இன்னும் பல தகவல்கள் உள்ளன.

தீபாவளி அன்று மாலையில் வெகு சிறப்பாக குபேர வழிபாடு நிகழும். குறை இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் சந்நிதிக்கு வாருங்கள். வந்து சிவதரிசனம் செய்யுங்கள்!..

ஓம் யக்ஷாய குபேராய வைஸ்ரவணாய 
தன தான்யாதி பதயே
தனதான்ய ஸம்ருத்திம் மே 
தேஹி தாபய ஸ்வாஹா

- என்ற ஸ்லோகத்தினால்,  ஸ்ரீகுபேரனை சிந்தித்து வணங்குங்கள்.

வந்த குறையும்  - குறையும்!.. 
வருகின்ற குறையும் - மறையும்!..

ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை உடனாகிய 
ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் திருவடிகள் போற்றி! போற்றி!..
சிவாய திருச்சிற்றம்பலம்!..

செவ்வாய், அக்டோபர் 29, 2013

திருக்குடந்தை

திருக்குடமூக்கு எனவும் திருக்குடந்தை எனும் புகழப்படும் திருத்தலம்..




காயாரோகணத் திருத்தலங்களுள் குடந்தையும் ஒன்று..

நகருக்கு வடக்கே காவிரியும் தெற்கே அரசலாறும் இலங்குகின்றன..

திருக்குடந்தையைச் சூழ்ந்து - சகல தேவ சந்நிதானங்கள் விளங்குகின்றன..

மும்மூர்த்திகளுள் ஒருவரான பிரம்மனுக்கு திருக்கோயில் விளங்குவதும் - திருக்குடந்தையில் தான்!..

திருத்தலத்தில் பல திருக்கோயில்கள் விளங்கினாலும் ஸ்ரீகும்பேஸ்வரர் தான் பிரதான மூர்த்தி!..

வன்னி மரம் தலவிருட்சம். திரண்டு நின்ற அமுதமே மகத் தீர்த்தம். மகாமகக் குளம் எனப்படுவது. இதில் நதி மங்கையர் ஒன்பது பேரும் நீராடி புனிதம் பெற்றதாக - புராணம்..

ஸ்ரீ வியாழ சோமேஸ்வரர் திருக்கோயில்,
ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோயில்,

ஸ்ரீ அபிமுகேஸ்வரர் திருக்கோயில்,  
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், 

ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் -

என்பன நகருக்குள் விளங்கும் சிவாலயங்கள்..

ஸ்ரீ சார்ங்கபாணி திருக்கோயில்,
ஸ்ரீ சக்ரபாணி திருக்கோயில்,
ஸ்ரீ ராமஸ்வாமி திருக்கோயில்,
ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில்,
ஸ்ரீ வராகப் பெருமாள் திருக்கோயில் -

- என்பன வைணவத் திருக்கோயில்கள்..    



உலகோர் விடுத்த பாவங்களைச் சுமந்து களைத்த, நதிக் கன்னியரின் வேதனைகள் தீர - 

காசியிலிருந்து விஸ்வநாதப் பெருமானே அவர்களை அழைத்து வந்து, மகாமக தீர்த்தத்தில் நீராடச் செய்தார் என்பது ஐதீகம்.




அந்த நாளே பன்னிரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் - சூரியன் கும்பராசியிலும் தேவகுருவாகிய பிரகஸ்பதி சிம்ம ராசியிலும் விளங்க மக நட்சத்ரமும்  நிறைநிலவும் கூடிய நன்நாள்.  

மகாமகம் எனப்படும் பொன்நாள்!..

இதுவே - தென்னகத்தின் மிகப்பெரிய திருவிழா!..

எதிர்வரும் 2016 ல் மகாமகத் திருவிழா நிகழ இருக்கின்றது..


தவிரவும், ஆண்டு தோறும் மக நட்சத்திரத்தை பத்தாம் நாளாக அனுசரித்து, எட்டாம் நாளில் வெண்ணெய்த்தாழி, ஒன்பதாம் நாள் தேரோட்டம், பத்தாம் நாள் பஞ்சமூர்த்திகள் - மூஷிக, மயில், ரிஷப வாகனங்களில் எழுந்தருள பெருஞ்சிறப்புடன் மாசி மகோற்சவம் நிகழ்கின்றது.

திருத்தலத்தின் - விநாயகர் ஆதி விநாயகர். முருகன் - ஆறுமுகங்களுடனும் ஆறு திருக்கரங்களுடனும் விளங்குகின்றார்.

சூர சம்ஹாரம் செய்யும் முன் , இத்திருத்தலத்தில் தாயிடம், மந்த்ரோபதேசம் பெற்றார் - என்பது திருக்குறிப்பு.


ஐயனின் வடபுறமாக,  வாமபாகத்தில் - என்றும் பாகம் பிரியாதவளாக அம்மை விளங்குகின்றனள்.

அம்மையப்பனை வலஞ்செய்து வணங்கி - வேண்டும் வரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஞானக்கனி உட்பட!..

மங்களேஸ்வரி - பெயருக்கு ஏற்றபடி - (பெரும்பாலான சமயங்களில்) மஞ்சள் பட்டுடன் மங்கலம் பொழிகின்றாள். தயாபரியாகிய தாயின் முகத்தை - நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பசியே தோன்றாது.

அப்படி பசித்த வேளையில், பரிதவிக்கும் வேளையில் -  அவளே வந்து பாலூட்டுவாள்.  அப்படியொரு அனுபவத்தினை  - எளியேன் பெற்றுள்ளேன்.


வடக்குத் திருச்சுற்றில் - கிராத மூர்த்தி சந்நிதி - இத்திருத்தலத்துக்கே உரிய சிறப்பு!..

மக நட்சத்ர நாட்களிலும் செவ்வாய்க் கிழமைகளிலும் - ஸ்ரீ கிராத மூர்த்தியை வணங்க - பெரும் பிணி, வல்வினைகள், தாரித்ரயங்கள் -  அனைத்தும் அகலும்.

மக நட்சத்ரமும் செவ்வாய்க் கிழமையும் கூடி வரும் அபூர்வ நாட்களில்  - பெருமானை வழிபட - நாம் எய்தும் பேறுகளை விவரிக்க இயலாது.

திருத்தலத்தின் பிரதான தீர்த்தமான மக தீர்த்தத்துடன் - வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியும் தீர்த்தமாகின்றாள்.

குடந்தை நகரின் வட எல்லையாக புகழ் விளங்கும் பொன்னி நதி!..

கழைவளர் கவ்வைமுத்தங் கமழ்காவிரி யாற்றயலே
தழைவளர் மாவின்நல்ல பலவின் கனிகள் தயங்குங்
குழைவளர் சோலைசூழ்ந்த குழகன்குடமூக்கிடமா
இழைவளர் மங்கையோடும் இருந்தானவன் எம்இறையே!.(3/59)


- என்று திருஞானசம்பந்தப்பெருமானும்,

நங்கை யாள் உமையாளுறை நாதனார்
அங்கை யாளொடு அறுபதந் தாழ்சடைக்
கங்கை யாளவள் கன்னி எனப்படுங்
கொங்கை யாள்உறை யுங்குட மூக்கிலே!.(5/22)


- என்று அப்பர் சுவாமிகளும் வணங்கி வழிபட்ட திருத்தலம்.

கோலமுடன் அன்று சூர்ப்படையின் முன்பு 
கோபமுடன் நின்ற - குமரேசா
கோதைஇரு பங்கின்மேவ வளர் கும்ப
கோணநகர் வந்த - பெருமாளே!..(867)

- என்று அருணகிரிநாதர் போற்றிய திருத்தலம்.


தேவாரத்திலும் திவ்யப்ரபந்தத்திலும் திருக்குடந்தை எனப்பட்ட திருத்தலம்  - அருணகிரிநாதர் காலத்தில் - கும்பகோணம் என்றாகி விட்டது.

அருணகிரியார் தம் திருவாக்கினால்- ''வளர் கும்பகோண நகர்'' 
எனப் புகழந்தார்.

திருக்குடந்தை இன்று வரை சிறப்புடன் திகழ்கின்றது. இனியும் திகழும்.

துலா மாதத்தில் காவிரியின் புகழ் பேசப்படுகின்றது!..
நில்லாது ஓடும் நீர் போன்றது - இவ்வுலக வாழ்க்கை!..

புறந்தூய்மை நீரால் அமைவதைப்போல - 
அகந்தூய்மையும் காவிரியின் நீரால் அமையட்டும்!.. 

காவிரி கரை தழுவிச் செல்லும் குடந்தை மாநகர் குழகனை - 
அன்னை மங்களாம்பிகையுடன் இனிதே உறையும் 
ஆதி கும்பேஸ்வர மூர்த்தியை
அன்பெனும் மலர் சூட்டி வணங்குவோம்! 

காவிரியில் நீராடிக் கரையேறுவோம்!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..
***

ஞாயிறு, அக்டோபர் 27, 2013

ஸ்ரீஜம்புகேஸ்வரர்

நாவல் மரங்கள் அடர்ந்து விளங்கும் அழகான வனம்!.. 

அம்பிகை - காவிரி நீரை சிவலிங்கமாகத் திரட்டி வழிபட்ட புண்ணிய தலம்!..

ஸ்ரீஜம்புகேஸ்வரம்!..


''ஓம்'' எனும் மந்த்ரத்தின் அதிர்வினை அன்றி, அந்த வனத்தினுள் வேறு எந்த ஒலியும்  இல்லை.

உலர்ந்த இலைகளும் சருகுகளாய் - ஓசையின்றி உதிர -  சின்னஞ்சிறு பறவைகள் கண்களால் பேசிக் களித்துக் கொண்டிருந்தன!.. 

நான்முகனின் தவத்திற்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என!..
 
அதோ.. அந்த நாவல் மரத்தின் கீழ் - சிவபூஜை செய்து கொண்டிருக்கும் நான்முகனின் பிழை தீரும் நேரமும் வந்தது!.. 

பெரும் ஜோதிப் பிழம்பு - தன்னை சுற்றிச் சூழ்வதை உணர்ந்த நான்முகன் மெல்ல கண் விழித்தார். 

அழகு பொங்கித் ததும்பும் பருவ வயதினராக, இளந்தம்பதியராக - சர்வேஸ்வரனும் தேவியும் புன்னகையுடன் தன் எதிரே திகழ்வதைக் கண்டு நான்முகனின் கண்கள் கசிந்தன!..


பெண்ணின் நல்லாளொடு தன் பொருட்டு - எழுந்தருளிய பெருமானைப் போற்றி வணங்கினார்.  

''..என் பிழை பொறுத்தருளிய பெருமானே!.. இன்னும் என் மீது ஐயமா?.. திசைக்கு ஒன்றென முகம்  இருந்தும் என் சிந்தை திருகலானது. அதனால் மனம் கருகலானது. அந்தப் பிழை தீர வேண்டும் என நான் இழைத்த தவம் கண்டு இரங்கி வந்த எம்பெருமானே!.. இன்னும் என் மீது சந்தேகமா?.. ''

''..பூங்கணை தொடுத்த மன்மதன் பொடியாகிப் போனதை அறிந்தும் பிழை புரிவேனா?..''

''..கருத்தழிந்த கண்களின் காமக் கசடறுத்து என்னைக் கரையேற்ற வந்த கருணைக் கடலே - இனியும் நான் காமுறுவேனா?..''

''..படைப்பவன் எப்படி இருக்க வேண்டும் என்ற நல்லறிவை எனக்குப் புகட்டிய ஞானமூர்த்தி!.. இனியும் பிழை செய்வேனோ!.. பிழை செய்தால்  - நானும் நன்றாய் உய்வேனோ!..''

''..இனியும் என்னைச் சோதிக்காமல் - தேவனும் தேவியும் - திவ்ய மங்கள திருக்கோலத்தினைக் காட்டியருள்வீராக!..''

- என,  அழுது தொழுது - அகம் கசிந்து நின்றார். அந்த அளவில் - 


அம்பிகை ரூபமாக வந்த ஸ்வாமியும் ஐயனின் ரூபமாக வந்த அம்பிகையும் - நான்முகனின் மனம் குளிரும்படி திருக்காட்சி நல்கினர்.

திலோத்தமையின் அழகைக் கண்டு - இமைப்பொழுது நிலை மறந்த நான்முகனின் மனம் - வனாந்தரத்தில் வாடி வதங்கி தனித்துக் கிடந்த போது பக்குவம் அடைந்ததா!.. அல்லது மேலும் பாழ்பட்டுப் போனதா!.. என்பதை மற்றவர்கள் உணர்ந்து கொள்ளவே - ஐயனும் அம்பிகையும் இப்படி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினர்.

''உள்ளத்தால் உள்ளலும் தீதே!..'' - என்பதை உணராத நான்முகனின்  பிழை - உலகோர்க்குப் பாடமாக அமைந்தது.

அதன் பின்  -  ஈசனுக்கும் அம்பிகைக்கும் பெருந்திருவிழா ஒன்றினை நடத்தி - பிரம்மன் பேறு பெற்றார்.


இன்றும் திருஆனைக்காவில் - பிரம்மோத்சவ பெருந்திருவிழாவில் - ஐயனும் அம்பிகையும் - பிரம்ம தீர்த்தக் கரையினில் - பிரம்மனுக்கு  காட்சி தரும் வேளையில் மேளதாளங்கள் இசைக்கப்படுவதில்லை. 

மேலும் அம்பிகை - நித்ய கன்னியாக, ஈசனின் முன் அமர்ந்து போகத்திற்கும் யோகத்திற்கும் விளக்கம் கேட்ட தலம் ஆனதால் - இத்திருத்தலத்தில் திருக்கல்யாண வைபவம் கிடையாது. 

திருஆனைக்கா - ஞான க்ஷேத்திரம் ஆனபடியால் தான் - யானை, சிலந்தி என - சிந்திப்போர் எவரானாலும் அவர் சிந்தையுள்  ஜோதியாக -  சிவம் திகழ்ந்தது.

தலவிருட்சம் நாவல் மரம். பிரம்ம தீர்த்தம் , இந்திர தீர்த்தம் , சம்பு தீர்த்தம் , ராம தீர்த்தம் , ஸ்ரீமத் தீர்த்தம், அகத்திய தீர்த்தம், அக்னி தீர்த்தம், சூர்ய தீர்த்தம், சோம தீர்த்தம் - என நவதீர்த்தங்கள்.  ஆடி மற்றும் தை  மாதங்களில் - என இரண்டு முறை தெப்ப உற்சவம் நிகழ்கின்றது.


வைகாசியில் வசந்தவிழா. ஆடியில் ஆடிப்பூரமும்  சூர்ய தீர்த்தத்தில் தெப்பத் திருவிழாவும் நிகழும். புரட்டாசியில் நவராத்திரி. தை மாதம் ராம தீர்த்தத்தில் தெப்பத் திருவிழாவும் பெளர்ணமியில் நவ தீர்த்தங்களில் தீர்த்தவாரியும் நிகழும். மாசியில் தேர்த் திருவிழா. பங்குனியில் பிரம்மோற்சவம்.

ஒரு முறை உறையூர் சோழ மன்னர் காவிரியில் நீராடும் போது - அவர் அணிந்திருந்த விலை உயர்ந்த ரத்ன மாலை கழுத்திலிருந்து நழுவி நீரில் விழுந்தது. அதிர்ச்சி அடைந்த மன்னர் - ''இஃது இறைவர்க்கு ஆகுக!..'' என்றார்.  

இதன்பின் சில தினங்கள் கழித்து திருஆனைக்கா சென்றார் மன்னர். சந்நிதியில் சிவதரிசனம் செய்த போது மன்னருக்கு அதிர்ச்சியும் ஆனந்தமும் மேலிட்டது!.. 


ஏனெனில் - அன்று நீராடும் போது தவறி விழுந்த ரத்ன மாலையுடன்  ஸ்ரீஜம்புகேஸ்வரன்!.. 

வேந்தன் நடந்தவற்றைக் கூறி விவரம் கேட்டார்.  சிவாச்சார்யர்கள் கூறினர் - ''..காவிரி நீரை  அபிஷேகம் செய்த போது குடத்து நீருடன்  - ஈசனின் திருமேனியில் விழுந்தது!..'' - என்பதை.

மன்னன் நீராடும் போது கழன்று விழுந்த ரத்ன மாலையினை திருமஞ்சன குடத்து  நீரின்  -  மூலமாக ஈசன் ஏற்றுக் கொண்டருளியதை   - 

திருஞானசம்பந்தப் பெருமானும் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் தேவாரத்தில் பாடியருள்கின்றனர். 

வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத் 
தேனைக்காவில் இன்மொழித் தேவிபாகம் ஆயினான் 
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர் 
ஏனைக்காவல் வேண்டுவார்க்கு ஏதமேதும் இல்லையே!.. (3/53) 

- என்பது திருஞானசம்பந்தர் தேவாரம்.


தாரமாகிய பொன்னித் தண்துறை ஆடிவிழுத்து 
நீரில் நின்றடி போற்றி நின்மலா கொள்ளென ஆங்கே 
ஆரங் கொண்ட எம் ஆனைக்காவுடை ஆதியை நாளும் 
ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடையாரே!.. (7/75) 

-என்பது சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய தேவாரம்.

சிலந்தியும் ஆனைக்காவிற் திருநிழற்பந்தர் செய்து 
உலந்தவண் இறந்தபோதே கோச்செங்கணானுமாகக் 
கலந்தநீர்க் காவிரி சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள் 
குலந்தனில் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டானாரே!.. (4/49)

- என்று, கோசெங்கட்சோழர்  பிறந்த வரலாற்றினை அப்பர் ஸ்வாமிகள் குறுக்கை வீரட்டானத் திருப்பதிகத்தில் குறிப்பிடுகின்றார். தமது பக்தியால் சிவநேயச்செல்வராக உயர்ந்த கோச்செங்கட் சோழருக்கு இங்கு தனிச் சந்நிதி உள்ளது.

கெளரிசங்கர் எனப்படும் கல்யாணத் திருக்கோலத்தினை ஸ்தாபித்து  அகத்திய மாமுனிவர் தமது துணைவியராகிய லோபாமுத்ரையுடன்  வழிபட்டுள்ளார்.  அகத்தியர் தாம் வழிபட அமைத்ததே அகத்திய தீர்த்தம். திருச்சுற்றில் - அகத்தியர் லோபாமுத்ரை விளங்குகின்றர். 

ஸ்ரீ குபேரலிங்கம்
வெளிப் பிரகாரத்தில் கிழக்கு கோபுர வாயிலுக்கு அருகில் விளங்கும் குபேர லிங்கம் நான்காம் பிரகாரத்தில் பசுபதீஸ்வர பஞ்சமுகலிங்கம், மூன்றாம் பிரகாரத்தில் ஏகபாத திரிமூர்த்தி, 

இரண்டாம் பிரகாரத்தில் சிவகாமசுந்தரி, ஜுரஹர தேவர், பைரவர், கோசெங்கட்சோழர் முதல் பிரகாரத்தில் சுப்ரமண்யர், மஹாலக்ஷ்மி, ஹரிஹரசுதன், கல்யாணசுந்தரர், சஹஸ்ரலிங்கம் - என தரிசிக்க வேண்டிய திருமேனிகள்.

இறைவன் சித்தராக எழுந்து திருநீற்றினைக் கூலியாகக் கொடுத்து எழுப்பிய  மதில் - திருக்கோயிலின் வெளிப்புறத்தில் திருநீறிட்டான் மதில்  என விளங்குகின்றது. திருநீறிட்டான் மதிலைக் குறிப்பிட்டு,

ஆலைச்சாறு கொதித்து வயற்றலை 
பாயச் சாலி தழைத்திர தித்த அமுதாகத் 
தேவர்கள் மெச்சிய செய்ப்பதி - உறைவேலா 

ஆழித்தேர் மறுகிற்பயில் மெய்த்திரு 
நீறிட்டான்மதிள் சுற்றிய பொற்றிரு 
ஆனைக்காவினில் அப்பர் ப்ரியப்படு பெருமாளே!.. 

- என்று ஆனைக்காவின் முருகனை அருணகிரிநாதர் போற்றுகின்றார்.

திருஆனைக்கா!.. 

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் - என மூவராலும் திருப்பதிகங்கள் பெற்ற திருத்தலம். மாணிக்கவாசகரும் திருஅம்மானையில் திருஆனைக்கா அண்ணலைப் போற்றுகின்றார். 

ஆதிசங்கரர், ஐயடிகள் காடவர்கோன், கந்தபுராணம் அருளிய கச்சியப்பர், கவி காளமேகம் மற்றும் மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை - என இத்தலத்தைப் போற்றிய புண்ணியர் பலர்.

ஸ்ரீமூலஸ்தானம்
வருண திசையான மேற்கு நோக்கிய திருக்கோயில். ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் கருவறை சற்று பள்ளமாக விளங்குகின்றது. கருவறையினுள் செல்ல தென்புறத்தில் - சிறு வாசல் ஒன்று உள்ளது. தலை வணங்கி குனிந்து தான் உள்ளே செல்ல முடியும்

சந்நிதியின்  வாசல் நவ துவாரங்களை உடைய கல் சாளரத்தினால் அடைக்கப் பட்டுள்ளது. இந்த துவாரங்களின் வழியே தான் சிவ தரிசனம்!.. 


கருணையின் ஊற்றென விளங்கும் ஈசன் - காவிரி ஊற்றின் மத்தியில் சிவலிங்கம் எனத் திகழ்கின்றார்!..

கோடி கோடி - விளக்குகளாலும் விளக்க முடியாத, இயலாத - விரி பெருஞ்சுடர் என விளங்குகின்றது - சிவலிங்கம்!..

அன்பெனும் அகல் விளக்கினால் அறியப்படும் அப்பு லிங்கம்!..
சரணடைந்தார் நெஞ்சில் சந்தனமாய் மணக்கும்  ஜம்பு லிங்கம்!..

காவிரியின் பெருமைகள் பேசப்படும் துலா மாதத்தில் - 
காவிரி நீரின் மத்தியில் உறையும் கருணாசாகரம் ஆகிய 

ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஜம்புகேஸ்வர பெருமானை,  
நாம் சிந்திக்கப் பெற்றது - நம் முன்னோர் செய்த தவப்பயன்!.. 

காவிரிசூழ் தென் ஆனைக்காவானைத் தேனைப் பாலைச் 
செழுநீர்த் திரளைச் சென்றாடினேனே!..

என்று - அப்பர் பெருமான் நமக்கு வழிகாட்டும் வண்ணம்,

காவிரியில் நீராடிக் கரையேறுவோம்!..
சிவாய திருச்சிற்றம்பலம்!..

வெள்ளி, அக்டோபர் 25, 2013

ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி

அன்னை - அவளே அதைச் செய்தாள்!..

அருவுருவம் எனத் திகழும் சிவலிங்கத்திற்கு - உருவம் என்று ஒன்றில்லாத - நீரினால் வடிவம் கொடுத்தாள்.

திருஆனைக்காவில் - இன்று நாம் தொழும் சிவலிங்க ஸ்வரூபம் ஆதியில் நீர் வடிவில் திகழ்ந்தது. அதனைத் தான் அம்பிகை நாளும் வழிபட்டு வந்தாள்.

ஏன்?..

திருக்கயிலாயத்தில் ஒருநாள் - ஏகாந்த வேளை!..

''தான் அருகிருந்தும் - ஈசன் யோகத்தில் ஆழ்ந்திருப்பது ஏன்!..'' - என அன்னை ஆச்சர்யமுற்றாள்.

''..போகத்தையும் யோகத்தையும் - விளக்கியருள வேண்டும்!..'' - என ஐயனிடமே விண்ணப்பித்துக் கொண்டாள். 

ஐயன் புன்னகையுடன் - ''..பூவுலகில் - காவிரிக் கரையில், சம்பு முனிவன் தவமிருக்கும் நாவல் வனத்தில் விடை கிடைக்கும்!..'' - என அருளினார்.

அதன்படி பூவுலகுக்கு வந்த அன்னை, தான் வழிபட வேண்டி - தன் வளைக்கரத்தால் - தண்ணீரைக் கொண்டு சிவலிங்கம் ஸ்தாபித்தாள். 

அதற்கும் முன் ஒரு சம்பவம்!.. சம்பு எனப்பட்ட மகாமுனிவர் ஒருவருக்கு ஈஸ்வர ப்ரசாதமாக நாவற்பழம் கிடைத்தது. அதனை அப்படியே முனிவர் உட்கொண்டு விட்டார். நாவற்பழத்தின் கொட்டையைக் கூட,  வெளியே உமிழ வில்லை. 

அது அப்போதே முளைத்து முனிவரின் சிரசின் மீது வெளிப்பட்டது. அதனை உணர்ந்த முனிவர் ஈசனைப் பணிவுடன் வேண்டிக் கொண்டார். ''..ஸ்வாமி!.. இப்போது யான் செய்ய வேண்டுவது யாது?..'' - என. 

''..பின்னொரு சமயத்தில் அம்பிகை, உன் நிழலில் தவம் மேற்கொள்ள வரும் போது சிவசக்தி அனுக்ரகம் பெற்று முக்தி எய்துக!..''  - என ஈசன் அருளினார். 


அதன்படியே - ஜம்பு முனிவர்  - அம்பிகையின் வரவை எண்ணி - பூமியில் நாவல் மரமாக வேரூன்றி நின்றார்.  அந்த நாவல் மரத்தின் நிழலில் தான் அம்பிகை லிங்க ப்ரதிஷ்டை செய்து - தவமிருந்தாள். 

காலங்கள் கடந்தன. நாளும் கோளும் நற்பொழுதாயிருந்த வேளையில் - எம்பெருமான் ரிஷபாரூடராக ப்ரத்யக்ஷமானார். திருக்கயிலையில் அன்றொருநாள் - அம்பிகையின் மனதில் எழுந்த ஐயங்களுக்கு விளக்கம் அளித்தார். 

ஈசன் குருஸ்தானமாக வீற்றிருக்க அம்பிகை சிஷ்யையாக இருந்த புண்ணிய பூமிதான் - பின்னாளில்  ஜம்புகேஸ்வரம் என்று  வழங்கப்பட்டது.

இறைவன் ஜம்புகேஸ்வரர் எனப்பட்டார்.

இத்திருத்தலத்தில் - யானையும் சிலந்தியும் ஈசனை உணர்ந்து வழிபட  - யானைக்கு முக்தி கிடைத்தது. சிலந்தி கோபமுற்று வீராவேசத்துடன் யானையைத் தாக்கியதால் - பின்னும் ஒரு பிறவி - மாமன்னனாக -

சோழர் தம் குலத்தில் - கோச்செங்கணான் எனத் தோன்றி - யானை ஏற முடியாதபடிக்கு எழுபத்தெட்டு மாடக்கோயில்களைக் கட்டி - என்றென்றும் அழியா முக்தி ஆனந்தமாக  - சிவனடியார் திருக்கூட்டத்துள் ஒருவராக நிலை பெற்றது.


திருஆனைக்கா - சக்தி பீடங்கள் ஒன்று!.. வராகி பீடமாகத் திகழ்கின்றது. அகிலாண்டேஸ்வரிக்கு தண்டினி, தண்டநாயகி, சிதானந்த ஸ்வரூபிணி எனவும் திருப்பெயர்கள் வழங்குகின்றன.

அம்பிகை  - நீரைத் திரட்டி வழிபட்டதால் - பஞ்சபூதங்களுள் - நீருக்கு உரிய க்ஷேத்திரமாகியது திருஆனைக்கா!..

குரு வடிவாக விளங்கிய ஈசனிடம் , அம்பிகை - போக, யோக நிலைகளுக்கு விளக்கம் கேட்டுத் தெளிந்ததனால் - ஞானக்ஷேத்திரம்!..

''..தவறிழைத்தாய்!..'' - என அகலிகைக்கு சாபம் கொடுத்தார் கெளதம மகரிஷி. அப்படி சாபம் கொடுத்த - பாவம் நீங்கிட வழிபட்ட திருத்தலம் திருஆனைக்கா!.

ஒரு சமயம் ஏதேதோ காரணங்களால் அம்பிகை - உக்ரமாகிவிட - பக்தர்களால் எளிதில் அணுக இயலாமற்போனது. அப்போது  விஜயம் செய்த ஸ்ரீஆதிசங்கரர் அம்பிகையின் சந்நிதிக்கு எதிரில் கணபதியை பிரதிஷ்டை செய்து சாந்தப் படுத்தினார். அத்துடன் -

அம்பாளின் உக்ரத்தை தாடங்கம் எனப்படும் காதணிகளில் அடக்கி  - அவற்றை அம்பிகைக்கே  அணிவித்தார்.
ஜம்புகேஸ்வரருக்கு -  உச்சிகால பூஜையை - அம்பாள் நிகழ்த்துவதாக ஐதீகம்.


அதன்படி, உலக நாயகியாகிய அம்பிகை - ஈசனை வழிபட்டதனை உணர்த்தும் முகமாக - அம்பாள் சந்நிதியிலிருந்து சிவாச்சார்யார் புடவை தரித்து முடி சூடி, பூஜைப் பொருட்களுடன் மேள தாளங்கள் முழங்க மூன்றாவது திருச்சுற்று வழியாக வலம் வந்து ஸ்வாமி சந்நிதிக்குச் சென்று அபிஷேக ஆராதனை, கோபூஜை ஆகியவற்றை செய்கின்றார்.


பஞ்சப் பிரகாரத் திருக்கோயில் எனப்படும் திருஆனைக்காவில் - அம்பிகை  நான்காவது பிரகாரத்தில் கிழக்கு நோக்கியவளாகத் திகழ்கின்றாள். ஐந்தாவது பிரகாரத்தில் - ஜம்புகேஸ்வரர் - மேற்கு நோக்கியவராக அருள்பாலிக்கின்றார்.

1311ல் முகலாயர் படையெடுத்து திருஅரங்கத்தைச் சேதப்படுத்தும் முன்பு வரை - பங்குனித் திருவிழாவில் அரங்கன் திருஆனைக்காவுக்கு எழுந்தருளி - திருக்கோயிலின் உள் சென்று அகிலாண்டேஸ்வரி அம்பாள் சந்நிதியில் சேவை சாதித்து - இளநீர் அமுது செய்து, ஜம்பு தீர்த்தக்கரை மண்டபத்தில் சேவை சாதிப்பது வழக்கம் என்றும்,

பின்னர் - 1371ல் விஜய நகர அரசின் இரண்டாம் குமார கம்பணன் காலத்தில் பெருமாள் திருவரங்கம் - திரும்பிய பிறகு - பழையபடி பெருமாள் சேவையை நடத்தும் போது கலவரம் விளைந்து உயிர் சேதம் ஏற்பட்டதுடன் அந்த வைபவம் நின்று போயிற்று எனவும்  -

ஸ்ரீரங்கசரித்திரம் (நன்றி http://srirangacharithram.blogspot.com) தெரிவிக்கின்றது.

ஸ்வாமி சந்நிதியிலிருந்து அம்பாள் சந்நிதிக்குச் செல்லும் வழியில் ஸ்ரீமஹா லக்ஷ்மியும், அம்பாள் சந்நிதி பிரகாரத்தில் ஸ்ரீசரஸ்வதியும் குடிகொண்டு அருள்கின்றனர்.


திருஅரங்கத்தில் மடைப்பள்ளியில் பணி செய்த வரதனை தனது - தாம்பூல உச்சிஷ்டத்தினால்- கவி காளமேகம் என புலவனாக ஆக்கினவள் - அன்னை!..

திருச்சியை ஆட்சி செய்த விஜய ரங்க சொக்கநாத நாயக்கரிடம் பெருங் கணக்கராகப் பணி செய்து வந்தவர் தாயுமானவ ஸ்வாமிகள்.

அவர்  மனதினுள் - ஸ்படிகம் போல ஒளிர்ந்தவள் - அகிலாண்டேஸ்வரி!..

காலையில் லக்ஷ்மி , உச்சிப்பொழுதில் ஸ்வயம்பிரகாசினி,  மாலையில் சரஸ்வதி - என விளங்குகின்றாள்.

கருதலர் திரிபுர மாண்டு நீறெழ
மலைசிலை ஒருகையில் வாங்கு நாரணி
கழலணி மலைமகள் காஞ்சி மாநர் - உறை பேதை

களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி
கடலுடை உலகினை ஈன்றதாய் உமை
கரிவனம் உறை அகிலாண்ட நாயகி - அருள்பாலா!.. 

- என்று திருஆனைக்கா திருக்கோயிலில் உறையும் முருகனைப் போற்றி அருணகிரி நாதர் புகழ்கின்றார்.


பொன்னே வருக மூவுலகும் பூத்தாய் வருக நாயேனைப் 
புரந்தாய் வருக வழுதியர்கோன் புதல்வீ வருக முகிற்கிளைய 
மின்னே வருக மெய்ஞான விளக்கே வருக மறைநான்கின் 
விரிவே வருக பேரின்ப விளைவே வருக மிகுங்கருணை
அன்னே வருக அகநெகுவார்க்கு அணியே வருக அலர்மடவார்க் 
கரசே வருக உரைப்பருஞ்சீர் அம்மே வருக அழற்கரத்து 
மன்னேருடலம் பகிர்ந்த இளமயிலே வருக வருகவே 
மத மாதங்க வனத்து மடமானே வருக வருகவே!..

- என்று மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள், பிள்ளைத்தமிழ் பாடி - அன்னை அகிலாண்டேஸ்வரியை  அழைக்கின்றார்.

அன்னையின் பேரும் புகழும் இம்மட்டோ!.. அவளைக் குறித்து பேசவும் எழுதவும் இந்த ஒரு ஜன்மம்  போதாது என்பது தான் உண்மை!..

காவிரியின் பெருமைகள் பேசப்படும்  - துலா மாதத்தில்,

காவிரியின் புகழ் விளங்கும் - திருஆனைக்கா பற்றியும் அதன் அருமை பெருமைகளைப் பற்றியும் - நாம் பேசத் துணிந்தது -

அங்கே அருளாட்சி புரியும் அன்னை ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி நமக்களித்த பெருங்கருணை!..

இந்தப் பூவுலகில் - எங்கிருந்த போதும் 
கருணாசாகரியான அம்பாளின் கழலடிகளைச் 
சிந்தித்தவாறு

காவிரியில் நீராடி கரையேறுவோம்!..
சிவாய திருச்சிற்றம்பலம்!..