நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், அக்டோபர் 03, 2013

ஸ்ரீராஜகோபால ஸ்வாமி

பெயரைக் கேட்டதுமே -  நெஞ்சில் ஒரு தித்தித்திப்பு!..

இன்னும் மண் மணம் மாறாது விளங்கும் அழகான நகரம் மன்னார்குடி. 

 

அதன் பெருமைக்கெல்லாம் மூல காரணன் -

ஆனையால் ஆதி மூலமே - என அழைக்கப்பட்ட - பரி பூரணன்- ஆதி காரணன் -

வேத நாரணன்!..

அவன் தான்!.. அவனே தான்!.. 

கள்ளச் சிரிப்புடன் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கோபாலன்!..

ராஜகோபாலன்!..

பசுவும் இரு கன்றுகளும் சூழ  - இங்கே, திருக்காட்சி அருள்கின்றான்!.. 


இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டேஇருக்கலாம். பசி தாகம் எதுவுமே தோன்றாது!.. பொய்யில்லை!.. அனுபவித்த உண்மை!..

தஞ்சையில் இருந்து சற்றே தென்கிழக்கு திசையில், 35 கி.மீ. தொலைவில் பசுமையான வயல்கள் சூழ்ந்து விளங்கும் நகரம் மன்னார்குடி.  


அந்நகரின் நடுநாயகமாகத் திகழ்வது ஸ்ரீராஜகோபால ஸ்வாமியின் திருக்கோயில்!..  

ராஜேந்திர சோழனின் மகன் ராஜாதி ராஜனால் எழுப்பப்பட்டது  என்கின்றனர்.

பின்னர் பதினாராம் நூற்றாண்டுகளில் நாயக்க மன்னர்களால் பெரிதும் போற்றி வணங்கப்பட்ட பெருமைக்கு உரியவன் ராஜகோபாலன்!..  தன் பேரழகினாலும் பெருங்கருணைத் திறத்தினாலும் நாயக்க மன்னர்களை தன் அடிமையாகக் கொண்டவன்.

தஞ்சை மன்னர் அச்சுதப்ப நாயக்கர் கருட ஸ்தம்பத்தை நிறுவினார். விஜய ராகவ நாயக்கர் - ராஜகோபுரத்தை எழுப்பி, ஆயிரங்கால் மண்டபத்தைக் கட்டி உள்ளே விளங்கும் திருக்குளத்தை சீரமைத்தார். 


இவர் தம்மை ''மன்னார் தாசன்'' என அழைத்துக் கொண்டவர். கலை விற்பன்னரான  - விஜய ராகவ நாயக்கர் - தனது படைப்புக்களை ஆயிரங்கால் மண்டபத்தில் அரங்கேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 

இன்றும் இத்திருக்கோயிலின் பகல் பத்து உற்சவத்தின் போது , ஆயிரங்கால் மண்டபத்தில்  - மன்னர் விஜய ராகவ நாயக்கர் பெயரைக் கூவி கட்டியம் கூறுகின்றனர் எனில் அவரது பெருமை தான் என்னே!..


மூலவர் - வாசுதேவப்பெருமாள். 
தாயார் - செங்கமல நாச்சியார். 
உற்சவர் - ராஜகோபாலன். 

தல விருட்சம் - செண்பக மரம். தீர்த்தம் ஹரித்ரா நதி. 
ஆகமம் - பஞ்சராத்ரம். ஸ்ரீ விமானம் - ஸ்வயம்பு. 

ஸ்ரீகிருஷ்ண தரிசனம் வேண்டி மகரிஷிகள் தவமிருந்த திருத்தலம். செண்பகாரண்யம் என்னும் திருப்பெயர் உடையது. 

அவர்களுக்காக  - கண்ணன் இங்கே 32 லீலைகளை நிகழ்த்திக் காட்டியதாக ஐதீகம். 

கண்ணனோடு (யமுனை) நீரில்  விளையாடிய  கோபியரின் மஞ்சளால் பொலிந்த தீர்த்தம் என்பதனால் ஹரித்ரா தீர்த்தம். இது குளம் எனினும் நதியின் பெயரினால் வழங்கப்படுவது. 


ஆனி மாதப் பெருந் திருவிழாவின் பத்தாம் நாள் பெளர்ணமியை அனுசரித்து - தெப்பத் திருவிழா சிறப்புற நிகழ்வது இத்திருக்குளத்தில் தான்!.. 

இதன் நடுவே உள்ள திருக்கோயிலில் ஸ்ரீ வேணுகோபாலன் விளங்குகின்றார். 

திருக்கோயிலில் ஸ்ரீராஜகோபாலன் - பாலகனாக, வேட்டி தலைப்பாகையுடன் விளங்குகின்றார். திருக்கரத்தில் சாட்டையுடன் விளங்கும் ஸ்வாமியின் திருவடிகளில் கொலுசு, தண்டை, சலங்கை முதலான ஆபரணங்கள் இலங்குகின்றன. பால கோபாலனின் அழகுக்கு இணை ஏதும் இல்லை!.. 

ராஜகோபாலனின் வெண்ணெய்த் தாழி உற்சவம் சுற்று வட்டாரத்தில் வெகு பிரசித்தம்.

பங்குனியில் பதினெட்டு நாட்கள் பிரம்மோத்ஸவம். பதினாறாம் நாள் வெண்ணெய்த் தாழி. ஸ்வாமி வெண்ணெய்க் குடத்துடன் தவழ்ந்த திருக்கோலத்தில் வீதியுலா!.. திருக்கோயிலைச் சுற்றி வலம் வந்து ஊருக்குள் வெண்ணெய்த்தாழி மண்டபத்துக்குச் செல்லும் போது, வழி நெடுகிலும் பக்தர்கள் வெண்ணெய் வீசி மகிழ்கின்றனர். 

அன்று மாலையில் அங்கிருந்து தங்கக் குதிரை வாகனத்தில் சந்நிதிக்கு எழுந்தருள்வார்.


பதினேழாம் நாள் தேர்த்திருவிழா. ஊர்கூடித் தேர் இழுக்க  - பிரம்மாண்டமான தேர் ஆடி அசைந்தபடி நான்கு வீதிகளிலும் வலம் வருவதைக் காணக் கண் கோடி வேண்டும்.


இத்திருவிழாவில் - ஸ்வாமியின் ஆண்டாள் திருக்கோலமும் கண்டபேரண்ட பட்க்ஷி வாகனமும் குறிப்பிடத்தக்கவை. ஆஞ்சநேயனின் மீது  ஸ்ரீ ராமராக ஆரோகணித்து வலம் வரும் திருக்கோலம் மனதை விட்டு அகலாது. 

சித்திரை வைகாசியில் கோடை உற்சவம். ஆடிப்பூரம் நவராத்திரி ஆகியன கோலாகலமான வைபவங்கள்.  தை மாதம் நான்காம் நாள் - தாயாருடன் - ஏக சிம்மாசனத் திருக்கோலம். மாசியில் ஊஞ்சல் உற்சவம்.


செங்கமல நாச்சியாரின் சந்நிதி சிறப்பு வாய்ந்தது.  பூச நட்சத்திரத்தன்று விசேஷ திருமஞ்சனம் நிகழ்கின்றது.

பதினாறு கோபுரங்களுடனும் பதினெட்டு விமானங்களுடனும் ஏழு பிரகாரங்களுடனும் திகழும் திருக்கோயில். கண்ணனுக்கு முன் பிறந்த மாயா - துர்க்கையாக, பெருமானின் சந்நிதிக் கோஷ்டத்தில் வீற்றிருக்கின்றாள். ராகு காலத்தில் இவளுக்கு சிறப்பு வழிபாடுகள் நிகழ்கின்றன. புத்ர பாக்யம் வேண்டி இவள் முன்பாக - தொட்டில் கட்டுகின்றனர். 

செண்பகாரண்யம் எனப்படும் மன்னார்குடி

ஆழ்வார்களின் திருவாக்கினால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசம்  இல்லை - எனினும் இங்கே, மகத்துவத்துக்குக் குறைவில்லை.


மக்களின் மனம் நிறைந்தவன்  ராஜகோபாலன். அவன் கீர்த்திகளை எடுத்துரைக்க  - வார்த்தைகளே இல்லை!..

பல்வேறு சிறப்புகளுடன் - நகரத்திற்குரிய வசதிகளையும்  கிராமத்திற்கே உரிய  - அழகையும் தன்னகத்தே கொண்டு விளங்குவது  - மன்னார்குடி 

கிழக்கே திருஆரூர், தெற்கே பட்டுக்கோட்டை, மேற்கே தஞ்சாவூர், வடக்கே கும்பகோணம் - என  சிறப்பான நகரங்களால் சூழப்பட்ட மன்னார்குடி,  

தற்போது  - சென்னை, திருப்பதி, கோவை, மானாமதுரை ஆகிய நகரங்களில் இருந்து நேரடி இரயில் வசதியுடன்  திகழ்கின்றது. 

தஞ்சையில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலை வழியில் தான் - புகழ் பெற்ற வடுவூர் ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் உள்ளது.


பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் 
உள்ளம் பரவசம் மிகவாகுதே - கண்ணா!..

- என வாஞ்சையுடன் துதித்து மகிழும் அன்பர்களின் உள்ளங்களில் நித்ய வாசம் செய்பவன் கண்ணன்!.. 

மக்களின் மனங்களை ஆள்பவன் ஸ்ரீ ராஜகோபாலன்!.. 

புண்ணிய புரட்டாசியில் ஒரு முறை அவனை தரிசனம் செய்யுங்கள்!..

ஸ்ரீ கிருஷ்ண தரிசனம்  - கவலைகளை மாற்றும்!..
ஸ்ரீ கிருஷ்ண தியானம்  - பிறவிப்பிணிகளைத் தீர்க்கும்!..
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்!.. 

12 கருத்துகள்:

 1. மன்னார்குடி சிறப்புகள் அனைத்தும் அருமை ஐயா... நன்றிகள்...


  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் திரு. தனபாலன்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 2. திருக்கோயிலில் ஸ்ரீராஜகோபாலன் - பாலகனாக, வேட்டி தலைப்பாகையுடன் விளங்குகின்றார். திருக்கரத்தில் சாட்டையுடன் விளங்கும் ஸ்வாமியின் திருவடிகளில் கொலுசு, தண்டை, சலங்கை முதலான ஆபரணங்கள் இலங்குகின்றன. பால கோபாலனின் அழகுக்கு இணை ஏதும் இல்லை!..

  புண்ணிய தரிசனம் மனம் நிறைத்தது ஐயா...பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 3. அன்று அவசரமாகப் பதிவு செய்து விட்டு வேலைக்கு ஓடினேன். தாங்கள் வந்து கருத்துரையிட்ட பின் கண்கள் கசிகின்றன!..

  பதிலளிநீக்கு
 4. மக்களின் மனம் நிறைந்தவன் ராஜகோபாலன். அவன் கீர்த்திகளை எடுத்துரைக்க - வார்த்தைகளே இல்லை!..

  தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுக்கப்டுத்தப்பட்டிருக்கிறது .. வாழ்த்துகள்..

  http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_15.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!..

   நீக்கு
 5. மன்னார் குடி ராஜகோபாலனை உங்கள் பதிவில் சேவித்து மகிழ்ந்தேன். வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்மா!.. தங்களின் வரவும் கருத்துரையும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. என்றும் அன்பின் நன்றிகளுடன்!..

   நீக்கு
 6. பல்வேறு பணிகள் இருந்த போதிலும், இன்றைய வலைச்சரத்தில் எனது வலைப்பதிவின் அறிமுகம் பற்றிய தகவலை எனக்கு தெரிவித்த சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கு நன்றி! உங்களது பதிவு அறிமுகமும் கண்டேன். வாழ்த்துக்கள்!

  இன்று காலையிலிருந்து வெளி வேலைகள்தான் அதிகம். இப்போதுதான் ஓய்வில் வலைபதிவுகள் பக்கம், ஒவ்வொரு பதிவாக படித்து வருகிறேன். வலைச்சரத்தில் சகோதரர் குடந்தையூர் ஆர் வி சரவணன் அவர்களின் உங்களது பதிவின் அறிமுகமும் கண்டேன். http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_15.html வாழ்த்துக்கள்! தங்களை GOOGLE – இல் பின் தொடருகிறேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!.. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன். விரிவாகப் பதில் வழங்கியமை தங்களின் பண்பினைக் காட்டுகின்றது!.. என்றும் அன்பின் நன்றிகள்!..

   நீக்கு
 7. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் கலையன்பன்!.. தங்களுடைய வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..