நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், அக்டோபர் 29, 2013

திருக்குடந்தை

திருக்குடமூக்கு எனவும் திருக்குடந்தை எனும் புகழப்படும் திருத்தலம்..
காயாரோகணத் திருத்தலங்களுள் குடந்தையும் ஒன்று..

நகருக்கு வடக்கே காவிரியும் தெற்கே அரசலாறும் இலங்குகின்றன..

திருக்குடந்தையைச் சூழ்ந்து - சகல தேவ சந்நிதானங்கள் விளங்குகின்றன..

மும்மூர்த்திகளுள் ஒருவரான பிரம்மனுக்கு திருக்கோயில் விளங்குவதும் - திருக்குடந்தையில் தான்!..

திருத்தலத்தில் பல திருக்கோயில்கள் விளங்கினாலும் ஸ்ரீகும்பேஸ்வரர் தான் பிரதான மூர்த்தி!..

வன்னி மரம் தலவிருட்சம். திரண்டு நின்ற அமுதமே மகத் தீர்த்தம். மகாமகக் குளம் எனப்படுவது. இதில் நதி மங்கையர் ஒன்பது பேரும் நீராடி புனிதம் பெற்றதாக - புராணம்..

ஸ்ரீ வியாழ சோமேஸ்வரர் திருக்கோயில்,
ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோயில்,

ஸ்ரீ அபிமுகேஸ்வரர் திருக்கோயில்,  
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், 

ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் -

என்பன நகருக்குள் விளங்கும் சிவாலயங்கள்..

ஸ்ரீ சார்ங்கபாணி திருக்கோயில்,
ஸ்ரீ சக்ரபாணி திருக்கோயில்,
ஸ்ரீ ராமஸ்வாமி திருக்கோயில்,
ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில்,
ஸ்ரீ வராகப் பெருமாள் திருக்கோயில் -

- என்பன வைணவத் திருக்கோயில்கள்..    உலகோர் விடுத்த பாவங்களைச் சுமந்து களைத்த, நதிக் கன்னியரின் வேதனைகள் தீர - 

காசியிலிருந்து விஸ்வநாதப் பெருமானே அவர்களை அழைத்து வந்து, மகாமக தீர்த்தத்தில் நீராடச் செய்தார் என்பது ஐதீகம்.
அந்த நாளே பன்னிரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் - சூரியன் கும்பராசியிலும் தேவகுருவாகிய பிரகஸ்பதி சிம்ம ராசியிலும் விளங்க மக நட்சத்ரமும்  நிறைநிலவும் கூடிய நன்நாள்.  

மகாமகம் எனப்படும் பொன்நாள்!..

இதுவே - தென்னகத்தின் மிகப்பெரிய திருவிழா!..

எதிர்வரும் 2016 ல் மகாமகத் திருவிழா நிகழ இருக்கின்றது..


தவிரவும், ஆண்டு தோறும் மக நட்சத்திரத்தை பத்தாம் நாளாக அனுசரித்து, எட்டாம் நாளில் வெண்ணெய்த்தாழி, ஒன்பதாம் நாள் தேரோட்டம், பத்தாம் நாள் பஞ்சமூர்த்திகள் - மூஷிக, மயில், ரிஷப வாகனங்களில் எழுந்தருள பெருஞ்சிறப்புடன் மாசி மகோற்சவம் நிகழ்கின்றது.

திருத்தலத்தின் - விநாயகர் ஆதி விநாயகர். முருகன் - ஆறுமுகங்களுடனும் ஆறு திருக்கரங்களுடனும் விளங்குகின்றார்.

சூர சம்ஹாரம் செய்யும் முன் , இத்திருத்தலத்தில் தாயிடம், மந்த்ரோபதேசம் பெற்றார் - என்பது திருக்குறிப்பு.


ஐயனின் வடபுறமாக,  வாமபாகத்தில் - என்றும் பாகம் பிரியாதவளாக அம்மை விளங்குகின்றனள்.

அம்மையப்பனை வலஞ்செய்து வணங்கி - வேண்டும் வரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஞானக்கனி உட்பட!..

மங்களேஸ்வரி - பெயருக்கு ஏற்றபடி - (பெரும்பாலான சமயங்களில்) மஞ்சள் பட்டுடன் மங்கலம் பொழிகின்றாள். தயாபரியாகிய தாயின் முகத்தை - நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பசியே தோன்றாது.

அப்படி பசித்த வேளையில், பரிதவிக்கும் வேளையில் -  அவளே வந்து பாலூட்டுவாள்.  அப்படியொரு அனுபவத்தினை  - எளியேன் பெற்றுள்ளேன்.


வடக்குத் திருச்சுற்றில் - கிராத மூர்த்தி சந்நிதி - இத்திருத்தலத்துக்கே உரிய சிறப்பு!..

மக நட்சத்ர நாட்களிலும் செவ்வாய்க் கிழமைகளிலும் - ஸ்ரீ கிராத மூர்த்தியை வணங்க - பெரும் பிணி, வல்வினைகள், தாரித்ரயங்கள் -  அனைத்தும் அகலும்.

மக நட்சத்ரமும் செவ்வாய்க் கிழமையும் கூடி வரும் அபூர்வ நாட்களில்  - பெருமானை வழிபட - நாம் எய்தும் பேறுகளை விவரிக்க இயலாது.

திருத்தலத்தின் பிரதான தீர்த்தமான மக தீர்த்தத்துடன் - வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியும் தீர்த்தமாகின்றாள்.

குடந்தை நகரின் வட எல்லையாக புகழ் விளங்கும் பொன்னி நதி!..

கழைவளர் கவ்வைமுத்தங் கமழ்காவிரி யாற்றயலே
தழைவளர் மாவின்நல்ல பலவின் கனிகள் தயங்குங்
குழைவளர் சோலைசூழ்ந்த குழகன்குடமூக்கிடமா
இழைவளர் மங்கையோடும் இருந்தானவன் எம்இறையே!.(3/59)


- என்று திருஞானசம்பந்தப்பெருமானும்,

நங்கை யாள் உமையாளுறை நாதனார்
அங்கை யாளொடு அறுபதந் தாழ்சடைக்
கங்கை யாளவள் கன்னி எனப்படுங்
கொங்கை யாள்உறை யுங்குட மூக்கிலே!.(5/22)


- என்று அப்பர் சுவாமிகளும் வணங்கி வழிபட்ட திருத்தலம்.

கோலமுடன் அன்று சூர்ப்படையின் முன்பு 
கோபமுடன் நின்ற - குமரேசா
கோதைஇரு பங்கின்மேவ வளர் கும்ப
கோணநகர் வந்த - பெருமாளே!..(867)

- என்று அருணகிரிநாதர் போற்றிய திருத்தலம்.


தேவாரத்திலும் திவ்யப்ரபந்தத்திலும் திருக்குடந்தை எனப்பட்ட திருத்தலம்  - அருணகிரிநாதர் காலத்தில் - கும்பகோணம் என்றாகி விட்டது.

அருணகிரியார் தம் திருவாக்கினால்- ''வளர் கும்பகோண நகர்'' 
எனப் புகழந்தார்.

திருக்குடந்தை இன்று வரை சிறப்புடன் திகழ்கின்றது. இனியும் திகழும்.

துலா மாதத்தில் காவிரியின் புகழ் பேசப்படுகின்றது!..
நில்லாது ஓடும் நீர் போன்றது - இவ்வுலக வாழ்க்கை!..

புறந்தூய்மை நீரால் அமைவதைப்போல - 
அகந்தூய்மையும் காவிரியின் நீரால் அமையட்டும்!.. 

காவிரி கரை தழுவிச் செல்லும் குடந்தை மாநகர் குழகனை - 
அன்னை மங்களாம்பிகையுடன் இனிதே உறையும் 
ஆதி கும்பேஸ்வர மூர்த்தியை
அன்பெனும் மலர் சூட்டி வணங்குவோம்! 

காவிரியில் நீராடிக் கரையேறுவோம்!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..
***

10 கருத்துகள்:

 1. திருக்குடந்தை அறிந்தோம். நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 2. திருக்குடந்தை (கும்பகோணம் ) தகவல்கள் அனைத்தும் மிகவும் சிறப்பு... நன்றி ஐயா...

  படங்கள் அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 3. மன நிறைவு தந்த தெய்வீகப் பகிர்வு கண்டு மகிழ்ந்தேன் .பகிர்வுக்கு
  நன்றி வாழ்த்துக்கள் ஐயா .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..நன்றி!..

   நீக்கு
 4. படங்களிலும் தகவல்களிலும் தெய்வீக மனம் கமழ்கின்றது. பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்.. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. மிக்க நன்றி!..

   நீக்கு
 5. குடந்தை பற்றிய அருமையான கதவல்களுடன் அழகிய படங்களுடனும் பகிர்ந்த அற்புதமான பதிவு அய்யா. நன்றி. (தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்)..
  அன்பு சகோதரருக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின்..சகோதரர்..பாண்டியன்..தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..தங்களுக்கும் தங்களுடைய குடுக்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..