நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, அக்டோபர் 13, 2013

செந்தமிழ்ச் செல்வி

ஸ்ரீ சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!.. 

ஞானமும் கல்வியும் நல்லருட் செல்வமும் பெற்று இனிதே வாழ்க!..


திருநெல்வேலிக்கு அருகில் ஸ்ரீ வைகுண்டம் எனும் தலத்தில் சண்முக சிகாமணி - சிவகாமசுந்தரி எனும் தம்பதியரின் அருந்தவப் புதல்வனாகத் தோன்றியவர் குமரகுருபரர்.

ஆனாலும், ஐந்து வயது வரையில் வாய் திறந்து பேசாதிருந்த அன்பு மகனைத் திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் ஒப்புவித்து குறையிரந்து நின்றனர் பெற்றோர்.

ஒரு மண்டல கால வழிபாட்டின் பயனை செந்தில் நாதன் அருளினான்.

குமரகுருபரர் பேசவில்லை. பாடினார். மடை திறந்த வெள்ளம் என - தமிழ் அவர் நாவில் இருந்து பெருகியது.

அப்படிப் பெருகியது தான் - கந்தர்கலி வெண்பா.


செந்தில்நாதனின் கருணையால்  - வாக்கு அருளப் பெற்ற  குமரகுருபரர் -  அதன்பின் மாமதுரைக் கோயிலில் அன்னை மீனாட்சியின் திருமுன் பிள்ளைத் தமிழ் பாட, சின்னஞ்சிறு பெண் போல வந்து குமரகுருபருக்கு முத்து மாலையை சூட்டிச் சென்றாள் - அங்கயற்கண்ணி. 

இத்தனை சிறப்பெய்திய குமரகுருபரர் - தருமபுரத்தில் துறவறம் பூண்டு, தன் குருநாதரிடம் ஆசி பெற்று காசிக்குச் சென்றார். காசி - கங்கைக் கரையில் மடம் அமைக்க எண்ணினார்.  

அப்போது காசி - முகலாய மன்னன் ஷாஜஹானின் மகன் இளவரசன் தாரா ஷிக்கோவின்  ஆளுகையில் இருந்தது. தன் எண்ணத்தை ஆள்பவனிடம் நேரிடையாக சொல்ல விரும்பினார். 

ஆனால், குமரகுருபரருக்கு ஹிந்துஸ்தானி தெரியாது. 

அதனால் - வாணியைச் சரண் புகுந்தார். சகலகலாவல்லியின் திருவடிகளைப் பத்துப் பாடல்களால் போற்றித் துதித்தார். அன்னையின் திருவருளால் ஹிந்துஸ்தானி குமரகுருபரருக்கு சித்தியானது. 


மறுநாள் சிங்கம் ஒன்றை வசப்படுத்தி அதன் மீது ஆரோகணித்து அரசவை சென்றார். இவரைக் கண்டு அனைவரும் வியந்தனர்.  அரசவையில்  தன் விருப்பத்தைக் கூறினார்.  

இவரைப் பற்றி அறிந்திருந்த தாரா ஷிக்கோ எங்கே இடம் வேண்டும் என்று கேட்டான். கருடன் வட்டமிட்டுக் காட்டும் என்றார் ஸ்வாமிகள். 

அனைவருக்கும் மேலும் வியப்பு!.. ''..காசியில் கருடன் பறப்பதா!..''

''ஆம் !.. பறக்கும்!..''

''அப்படியானால் நாளை கங்கைக் கரையினில் சந்திக்கலாம்!..''

அரசவை கலைந்தது. 

மறுநாள். இளவரசன் தாராவும் மற்றவர்களும் கங்கைக் கரையில் கூடினர். ஸ்வாமிகள் சிங்கத்தின் மீது ஆரோகணித்து வந்தார். 

சில நிமிடங்களில் அனைவரும் காணும்படி - கருடன் வட்டமிட்டுப் பறந்தது.

கந்தன் அருள் பெற்ற கன்னித் தமிழ் வேந்தருக்காக  - கருடன் பறக்காதா - என்ன!..

கருடன் வட்டமிட்டுப் பறந்த இடம் ஸ்வாமிகளுக்கு வழங்கப் பெற்றது என்பது வரலாறு.

அந்த காசி மடத்தின் கிளை தான் இன்றும் கும்பகோணத்தை அடுத்துள்ள திருப்பனந்தாள் எனும் தேவாரத் திருத்தலத்தில் அமைந்துள்ளது. 


ஸ்ரீ குமரகுருபரர் நினைவைப் போற்றி, அரசு அவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு பெருமை தேடிக் கொண்டது. 

ஸ்ரீ குமரகுருபரர் அருளிய சகல கலாவல்லி மாலை  - கற்போருக்கு எல்லா நலன்களையும் தரும் என்பது காலகாலமாக நிரூபணமாகி வரும் உண்மை.

ஸ்ரீ குமரகுருபரர் 
அருளிய 
சகல கலாவல்லி மாலை.


வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்தாங்க என்வெள்ளைஉள்ளத்
தண்தாமரைக்குத் தகாதுகொலோ? சகம்ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே! சகலகலாவல்லியே! 1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய்! பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே! கனதனக்குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே! 2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்துஉன் அருட்கடலில்
குளிக்கும்படிக்கு என்றுகூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே! 3

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! 4
பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற் பாத பங்கேருகம்என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடும்தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத் தவிசுஒத்து இருந்தாய் சகலகலாவல்லியே! 5

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே! 6


பாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ஓதிமப் பேடே! சகலகலாவல்லியே! 7

சொல்விற்பனமும் அவதானமும் கவிசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய்! நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிதுஎன்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும்செல்வப் பேறே! சகலகலாவல்லியே! 8 சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தின் தோற்றம்என
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத் தாயே! சகலகலா வல்லியே! 9

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே! 10.

எல்லாருக்கும் எல்லா நலன்களையும் 
சகலகலாவல்லி அருள்வாளாக!..

14 கருத்துகள்:

 1. சரஸ்வதி பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் திரு.தனபாலன்.. தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி!.. எல்லாரும் எல்லா மங்கலங்களையும் எய்த நல்வாழ்த்துகள்!..

   நீக்கு
 2. சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் திரு.குமார்.. தங்களின் வருகைக்கும் அன்பின் நல் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி!.. எல்லாரும் எல்லா மங்கலங்களையும் எய்த நல்வாழ்த்துகள்!..

   நீக்கு
 3. ஸ்ரீ சரஸ்வதி பூஜை இனிய் நல்வாழ்த்துக்கள்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்.. தங்களின் மேலான வருகைக்கும் அன்பின் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி!.. எல்லாரும் எல்லா மங்கலங்களையும் எய்திட நல்வாழ்த்துகள்!..

   நீக்கு
 4. சரஸ்வதி பூஜை விஜயதசமி நல் வாழ்த்துக்கள் ஐயா!

  வழமைபோன்று இன்றும் சகலகலாவல்லி மாலையும் அழகிய படங்களும் சிறந்த பதிவும் அருமை!

  வாக்தேவி அனைவருக்கும் நல்ல ஞானத்தை வழங்கட்டும்!

  இனிய வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி!.. அன்னையின் நல்லருளால் எல்லா நலங்களையும் பெற்று வாழ்க!.. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!..

   நீக்கு
 5. அன்பும் அறமும் தளைத்தோங்க
  அழியாச் செல்வம் தந்தருளும்
  எங்கும் நிறைந்த சரஸ்வதியே
  எல்லா வளமும் அருளட்டும் !

  வாழ்த்துக்கள் ஐயா .சிறப்பான பகிர்வினைக் கண்டு
  உள்ளம் குளிர்ந்து .மிக்க நன்றி பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
 6. அன்பின் கவிதாயினி!.. தங்களின் வருகைக்கும் அழகிய கவிதையைப் பதிவு செய்தமைக்கும் அன்பின் நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!.. எங்கும் நிறைந்த சரஸ்வதி எல்லா நலன்களையும் அருளட்டும்!..

  பதிலளிநீக்கு
 7. செந்தமிழ்ச் செல்வி என்ற தலைப்பும் பதிவும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!.. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்!.. மிக்க நன்றி!..

   நீக்கு
 8. வெற்றி தின வாழ்த்துக்கள். காசிமடம் பற்றிய தகவல்கள் சுவாரசியம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!.. தாங்கள் வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி.

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..