நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், அக்டோபர் 16, 2013

வீரத்தின் விளைநிலம்

தர்மத்தின் வாழ்வினைச் சூது கெளவிய நேரம்!..

''..இம்!..'' - என்றால்  சிறை வாசம் !..

''..ஏன்!..'' - என்றால் வனவாசம்!..


எதற்காக?..

ஆயிரம் உண்டிங்கு சாதி  - எனில் அன்னியன் வந்து புகல் என்ன நீதி?..

- என கொதித்து எழுந்ததால்!..

ஏன் கொதித்து எழ வேண்டும்!..

கூழில் கொஞ்சம் உப்பு போட்டுக் குடித்து விட்டதால்!..

வியாபாரம் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு நாடு பிடிக்க வந்த நய வஞ்சகர்கள்  இம்மண்ணில் நடாத்தியவற்றை நடு நிலையில் நின்று யோசித்தால் கூட  - அவை அடாத கொடுஞ்செயல்கள் என்று தான் கூற முடியுமே அன்றி  - வேறு ஒரு வார்த்தையும் இல!..

''பிரித்தாளும் சூழ்ச்சி!..'' இது ஒன்றுதான் அன்று நாடு பிடிக்க வந்தவரின் குறிக்கோள்..

''அவன் கண்களை அவனே- அவன் கைவிரலால் குத்திக் கொள்ள வேண்டும்!.''  மூளையுள்ள மூர்க்கரின் ஆசை அதுதான்!..

அது அன்றைய சூழ்நிலையில் பல்வேறு காரணிகளால் பிரிந்து கிடந்த பாரத மக்களால் எளிதாக நிறைவேறியது!..

பாரத நாட்டில் மட்டுமா!..

அந்த பாதகர்கள் சென்றேறிய மணற்பரப்புகள் எங்கெங்கும் நடந்தவை அவையே!..

அமெரிகோ வெஸ்புகி  நுழைந்த பின் - அந்த மணற்பரப்பின் ஆதி மைந்தர்களுக்கு நிகழ்ந்தவைகளை அறியாததா - வரலாறு!..

அதன்படி, நாமே நம் கண்களை  - நம் கை விரலால் குத்திக் கொண்டோம்!..

இதை - ,

நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை செய்வாரடி கிளியே - வாய்ச் சொல்லில் வீரரடி!..

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே - செம்மை மறந்தாரடி!..

- என்று,  மகாகவி பாரதியார்  1908 - 10 அளவில் கண்ணீருடன் வடித்த கவிதை - 1799ல் நடந்த கொடுஞ் சூழலுக்கு பொருத்தமாக இருக்கின்றது.

''..நாவல் கனியே.. இத்தனை சுவை என்றால்  - அதை நித்தமும் தின்னும் குரங்கின் சதை எத்தனை சுவையாய் இருக்கும்!..'' என்று ஆசைப்பட்ட முதலையின் கதை நம்மிடம் இருந்தும்  - அதிலிருந்து நாம் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை எனில்,

கல்வி மறுக்கப்பட்டிருந்த - இடைச்சறுக்கலான ஒரு கால கட்டத்தில் மாக்களாய் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் எப்படி உணர்ந்திருக்க முடியும். அதை சற்றே உணர்ந்து செயல்பட முனைந்தாலும் துணிந்து தோள் கொடுக்க யாருமின்றி துவண்டு போன சோகம் தான் மிஞ்சியிருக்கின்றது.

வலிமையான இளங் காளைகள் நான்கு. அவைகளின் ஒற்றுமைக்கு வெடி வைத்தது  ஒரு சிறு நரி. விளைவு?.. கிழட்டு சிங்கத்திற்கு நான்கு எருதுகளும் இரையாகின. எலும்புகள் தான் மிச்சமாகின.

இதையும் கேட்டார்கள். கைதட்டினார்கள். போய் விட்டார்கள். சிந்தையில் எதையும் கொண்டார்களில்லை.

தமிழ் வளர்ந்த மண்ணில் - கொடி கட்டி வாழ்ந்த கோமகன் நெடுஞ்செழிய பாண்டியனே - நீதி நெறி பிறழ்ந்து - ''..கள்வனைக் கொன்று வருக!..'' - என்று ஆணையிட்டு களங்கம் தேடிக் கொண்டான். பின்னர் மனம் உடைந்து மாண்டாலும் கற்புக்கரசியின் வாழ்வு ?..

அவனே அப்படியிருக்கும் போது,  ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின், 

1279ல் சோழப் பேரரசு வளம் மிகுந்து பலம் குன்றியிருந்த வேளை. ஆட்சியில் இருந்த மூன்றாம் இராஜராஜன் போரில் வீழ்த்தப்பட்டான்.வீழ்த்தியவன் சுந்தர பாண்டியன். 

சோழரின் நகரங்கள் தீக்கிரையாயின. தஞ்சையும் கங்கை கொண்ட சோழ புரமும் தரைமட்டமாகின. அதுமட்டுமா!..  பொன் விளைந்த பூமி கழுதைகளால் உழப்பட்டு -  பேய்க்கடுகு விதைக்கப்பட்டது. 

அதன் பின்  - இவன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் எனப்பட்டான். 

ஆனாலும் இவன் தந்தை இவனை விடுத்து, தனது ஆசைநாயகியின் மகனான - வீர பாண்டியனுக்கு  (1296) முடி சூட்டினான். பொறுக்குமா நெஞ்சம்!..  

தமிழர் வரலாற்றில் அரியணைக்காக தந்தையைக் கொன்றவன் எனும் பெருமையையும் சுந்தர பாண்டியன் பெற்றுக்கொண்டான்(!?!). 

வீரபாண்டியனை (1310) விரட்டியடித்த சுந்தர பாண்டியன் - குருதியில் தோய்ந்த கொற்றக்குடையின் கீழ் அமர்ந்தான்.

ஆனாலும் அந்த சந்தோஷம் நிலைக்கவில்லை. 

கூடல் மதுரை  - மீண்டும் குருக்ஷேத்திரமானது. 

பொங்கியெழுந்த வீரபாண்டியன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினான். 

அவனால் துரத்தியடிக்கப்பட்ட சுந்தர பாண்டியன் - விருந்துடன் வெற்றிலை பாக்கு வைத்து -  அழைத்து வந்த கொள்ளையனின் பெயர் - மாலிக்காபூர்

விளைவு!?..

தன் சகோதரன் வீரபாண்டியனின் தலை அந்நியனால் - வீழ்த்தப்படுவதைப் கண்டு மகிழ்ந்தான் சுந்தர பாண்டியன்!.. 

அந்தோ .. பரிதாபம்!.. 

அந்த சுந்தரபாண்டியனின் தலையையும் அறுத்து மகிழ்ந்தான் - மாலிக்காபூர்!..

இத்தனையும் நிகழ்ந்தது - 1330 ஆம் ஆண்டளவில்!..

கண்டு கொண்டிருந்தவர்கள் கருத்தில் கொண்டார்களா - எனில்  - இல்லை!..

பின்னும், வந்தேறிகளால் நாடும் மக்களும் வதங்கிய போது -  திருச்செந்தூர் திருக்கோயில் டச்சுக்காரர்களால் பாழ்படுத்தப்பட்டது. திருக்கோயிலை விட்டு வெளியேற வேண்டுமானால்- 40,000 டச்சு நாணயங்கள் கப்பமாக வேண்டும் என திருமலை நாயக்கர் மிரட்டப்பட்டார். 

இத்தனைக்கும் இங்கே வியாபாரம் செய்து கொள்ள திருமலை நாயக்கர் தான் அனுமதி அளித்திருந்தார். அவருக்கே ''..பெப்பே!..'' என்றவன் தான்  - ஐரோப்பியன்!..

அப்போது நெல்லையில் ராஜப்பிரதிநிதியாக இருந்த வடமலையப்ப பிள்ளையும் திருக்கோயிலின் திரிசுதந்திரர்களும்  ஊர்மக்களும் ஒன்று கூடி ஆயுதம் ஏந்திப் போர் செய்தனர்.  


கந்தவேளின் திருமேனியைக் களவாடிக் கொண்டு  கயவர்கள்  கப்பலேறித் தப்பிக்கும் போது - வினையின் விளைவாக கடல் பொங்கியது. பயந்துபோன பாதகர்கள் - கந்தவேளின் திருமேனியைக் கடலுக்குள் போட்டு விட்டு உயிர் பிழைத்தோடினர். இந்த சம்பவம்  நடந்தது 1650 ல்.

இந்த டச்சுக்காரன் எல்லாம் கொள்ளையன் அல்லவாம்!.. பின்னே யார்?.. 

பசலி எனும் வரிவிதிப்பு ஆண்டினைப் புகுத்தி விளைநிலங்கள் மீது அதிக வரி விதித்து வசூல் செய்யப்பட்டது - முகலாயர்களின் பிரதிபிம்பமான - ஆற்காட்டு நவாப் நிர்வாகத்தில்.

இதனை எதிர்த்த மற்றவர்களுடன் சண்டைக்குப் போனவன் நவாப் தந்த  கூலியை கை நீட்டி வாங்கிய - கிழக்கிந்தியக் கம்பெனிக்காரன். நவாப்பு தனக்காக சென்ற கூலிப்படைக்கு தரவேண்டிய தொகையை தர முடியாமல் போனது.

பாக்கி நிலுவையானதால் - 1792ஆம் ஆண்டு  தென்தமிழகத்தின் வரி வசூல் உரிமை - ஒப்பந்தப்படி - நேரடியாகக் கம்பெனியின் கைகளுக்குச் சென்றது.

இப்படி அராஜகம் செய்தவன் எல்லாம் கொள்ளையன் அல்லவாம்!.. 

கூலிக்குச் சண்டையிட்டு - கொலை செய்தவன் எல்லாம் கொலைகாரன் அல்லவாம்!..

பின்னே யார்?..

இத்தனையையும் கண்ட வரலாறு  - 1798 அளவில்,

''..வந்தேறிக்கு எதற்கு வரி!?..''- என்ற கர்ஜனையைக் கேட்டு - திடுக்கிட்டு விழித்துப் பார்த்தது.


அந்த வீர கர்ஜனை - 2.2.1790ல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த கட்டபொம்மு நாயக்கர் எனும் சிம்மத்திற்குரியது.

வீரபாண்டிய கட்டபொம்மன் எனப்பட்ட இவருக்கும் மற்ற பாளையக் காரர்களுக்கும் - 

ஓரமாக ஒதுங்குதற்கு  இடம் கேட்டு வந்து  - நடு வீட்டில் உட்கார்ந்து நாட்டாண்மை எனும் நரித்தனம் செய்து கொண்டிருந்த ஆங்கிலேயனின் ஆட்சிக்குழு 1795ல் ஒரு அறிக்கையை அனுப்பியது. அதில், 

''..பாளையக்காரர்கள் அனைவரும் தங்களுடைய கோட்டைகளை இடித்துத் தள்ளி விட்டு, ஆயுதங்களை ஆங்கிலேய அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டு வரியை - பாக்கி இல்லாமல் செலுத்த வேண்டும்!..'' - என்றிருந்தது. 

அதற்கு உடன்பட்டவர் -  புகழப்பட்டனர். நல்லவர் - வல்லவர் என்று!..

முரண்பட்டவர் - இகழப்பட்டனர். கொள்ளையன் - கொலைகாரன் என்று!..
 
அளவுக்கு அதிகமாக - வரி கட்ட மறுத்ததால் - கட்டபொம்மன் 23 நாட்கள் அங்கும் இங்குமாக அலைக்கழிக்கப்படுகின்றார்.

அவமானப்படுத்தப்படுகின்றார். அவருக்கு உதிரம் கொதிக்கின்றது!.

(சில குறிப்புகளில் உள்ளபடி - முதலில் அறிவிக்கப்பட்ட வரித்தொகையும்  பின்னர் சொல்லப்படும் தொகையும் வித்தியாசப்படுகிறது. எனவே ஓரளவு சமாதானம் மக்கள் நலம் வேண்டி - வரித்தொகை செலுத்தப்பட்டிருக்கலாம்!.)

10.9.1798ல் இராமநாதபுரத்தில் - வரி வசூல் செய்யும் கலெக்டர் மைக்கேல் ஜாக்சன் என்பவனுடன் நடந்த பேச்சு வார்த்தை கலவரத்தில் முடிந்தது. அதன் பின் ஆங்காங்கே சிறு சிறு கலவரங்கள்.

திருச்செந்தூர் ஆவணிப் பெருந்திருவிழாவில் மக்கள் களித்திருந்த வேளை!..

5.9.1799ல் மேஜர் பானர்மென் - பாஞ்சாலங்குறிச்சியின் மீது போர் தொடுத்தான். முதல் நாள் வெற்றி  வீரபாண்டிய கட்ட பொம்மனுடையதாயிற்று.

மறு நாள் - பாஞ்சாலங்குறிச்சி கோட்டை சரிந்தது. அத்துடன் வீரபாண்டிய கட்டபொம்மனின் மெய்க்காவலான - வெள்ளையத் தேவன் மற்றும் அணுக்கத் தோழர் சுந்தரலிங்கம் எனும் மாவீரர்களும் வீரமரணம் எய்தி தாய் மண்ணில் தலை சாய்த்தனர்.

கோட்டைக்குள் புகுந்த குள்ள நரிகளுடன் வீரப் போரிட்ட நாகலாபுரம் செளந்தர பாண்டியனும் தானாதிபதி சுப்ரமணியப் பிள்ளையும் பிடிபட்டு - அப்போதே தூக்கிலிடப்பட்டனர்.

தானாதிபதிப் பிள்ளையின் மேலிருந்த கடுப்பினால் அவருடைய தலையை வெட்டி இடிந்த கோட்டை வாசலில் நட்டு வைத்தான் - கொடும்பாவி - பானர்மென்.

கோட்டையை விட்டு வெளியேறிய வீரபாண்டிய கட்டபொம்மன் 1.10.1799ல் புதுக்கோட்டையின் வனாந்திரத்தில் பிடிக்கப்படுகின்றார்.  மீண்டும் தெற்கு நோக்கிய பயணம்.

அன்று நாள் - 16.10.1799.

ஆயுதங்களைத் துறந்த மற்ற பாளையக்காரர்கள் அனைவரும் கயத்தாறு கிராமத்திற்கு வரவழைக்கப்படுகின்றனர். 

அவர்கள் பார்த்திருக்க -போலி விசாரணை ஒன்றை நடத்தினான் - பானர்மென்.

தீர்ப்பு  வாசிக்கப்பட்டது. மரண தண்டனை!..

விசாரணைக்கு முன்பே - தீர்ப்பு எழுதப்பட்டு விட்டதால் - குற்றவாளி எனப்பட்டவருக்கு கோழி பிரியாணி  குருமா -  என்று -  இன்ன பிற விருந்து ஏதும் இன்றி - அப்போதே நிறைவேற்றப்பட்டது.

வீரபாண்டிய கட்டபொம்மன் - 

தூக்குக் கயிறு தொங்கிக் கொண்டிருந்த புளிய மரத்தின் சமீபத்துக்கு வேகமாய் நடந்தார். சமீபத்திற் போனவுடன், 

''..என் கோட்டையை விட்டு வந்து விட்டேன். அதைக் காத்துக் கொள்ளுகிற விஷயத்திற் பிராணனை விட்டிருந்தால் நலமாய் இருந்திருக்கும்!..''

என்று சொன்னார். 

தூக்குக் கயிற்றைத் தானே தன் கழுத்தில் மாட்டிக் கொண்டார். அப்போது அவருக்கு வயது முப்பத்தொன்பது.

வாளுடன் தோன்றிய மூத்த குடி என்பதை மறந்தவர்களும், ''..இது கோட்டை இல்லீங்க.. குடிசை!..'' - என்றவர்களும் மீண்டும் உப்பரிகையிலேயே தங்கினார்கள். 

உயிர் இருந்தும் சடலமாக!..

அப்படியின்றி -

முறத்தால் புலியை விரட்டியவளின் முந்தானையின் ஊடாக - 
முலைப்பால் குடித்து வளர்ந்தவர்கள் 
சாலையோர புளிய மரக்கிளையில் தொங்கினார்கள். 

சடலமாகியும் சரித்திரமாக!..


இன்று 
வீரபாண்டிய கட்டபொம்மன் 
தூக்கிலிடப்பட்ட நாள்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில் 
ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு!..


மண்ணின் மானம் காத்த மாவீரனின் 
மலர்ப் பாதங்களில் 
தலை வைத்து வணங்குகின்றேன்!..

18 கருத்துகள்:

 1. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
  ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு!

  ஆழ்ந்த கருத்துடன் அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் மேலான வருகைக்கும் பாராட்டுரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 2. மிகவும் சிறப்பான பகிர்வு... அருமையாக தொகுத்து உள்ளீர்கள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்.. தங்களின் மேலான வருகைக்கும் பாராட்டுரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 3. வீர பாண்டியன், சுந்தர பாண்டியன் – இருவர் பற்றிய சிறுசிறு குறிப்புகள் தெரிந்து கொண்டேன். நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!.. தங்களின் மேலான வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 4. வீர பாண்டிய கட்ட பொம்மன் சரித்திரம் உணர்ச்சி வேகத்துடன் எழுதியிருக்கிறீர்கள் என்பது படிக்கும் போதே புரிகிறது. நன்றி பகிர்விற்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக.. தங்களின் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மிக்க நன்றி!.. பள்ளியில் ஒரு முறை வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாறு நாடகமாக நடிக்கப்பட்டது. அதில் எளியேன் தானாதிபதிப் பிள்ளையின் வேடம் தாங்கினேன்.

   நீக்கு
 5. கட்டப்பொம்மன் தூக்கிலிடப்பட்ட நாளில் அவரைப்பற்றி தெரிந்து கொள்ள அருமையான பகிர்வு.
  வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீ!..

   நீக்கு
 6. கட்டபொம்மன் தூக்கிலிடப் பட்டாலும், தமிழ் மனங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டேயிருப்பார். உணர்ச்சிமயமான பதிவு ஐயா. நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மிக்க நன்றீ!..

   நீக்கு
 7. உங்கள் பதிவு படித்ததும் எனக்கு நான் முன்பு எழுதி இருந்த “ கலாச்சாரக் காரணங்கள் “ என்னும் பதிவே நினைவுக்கு வந்தது. நேரம் இருந்தால் , விருப்பம் இருந்தால் சொல்லுங்கள் எளிதாத் தேட சுட்டி தருகிறேன். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்.. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!.. தாங்கள் குறிப்பிட்டபடி - இணைப்பினைத் தாருங்கள்.. அவசியம் படிக்கின்றேன்!..

   நீக்கு
 8. அன்பின் துரை ராஜ், “கலாச்சாரக் காரணங்கள்” என்ற பதிவின் சுட்டி இதோ
  gmbat1649.blogspot.in/2011/07/blog-post_18.html படித்துப் பாருங்கள் .நன்றி.

  பதிலளிநீக்கு
 9. நன்றி.. ஐயா.. தங்களின் பதிவினைப் படித்து - கருத்துரையும் பதிந்துள்ளேன்..

  பதிலளிநீக்கு
 10. கெட்டிபொம்மு என்கிற கட்டப்பொம்மன் அவ்வளவு நல்லவன் இல்லை. உண்மை வரலாற்றை எழுதுங்க ..

  இவர் பல கிராமங்களை சூரையாடிவன் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..