நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், செப்டம்பர் 29, 2014

ஸ்ரீ ஆனந்தலக்ஷ்மி

திருப்பாற் கடலில் தோன்றியவள். 
சகல செல்வங்களுக்கும் அதிபதியானவள்.

சர்வ மங்கலங்களையும் அள்ளித் தருபவள்.  
அனைத்து உயிர்களுக்கும் ஆனந்தத் தேனை அளிப்பவள்.
 
ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் வாசம் செய்பவள்.
பள்ளி கொண்ட பரந்தாமனின் திருமார்பினை அணைந்தவள்..நவராத்திரியின் நடு நின்ற நாயகி - ஸ்ரீ மஹாலக்ஷ்மி!..

நவராத்திரியின் முதல் மூன்று நாட்களில் - தீமையை வேரறுக்கும் ஸ்ரீதுர்கா தேவியின் திருவடித் தாமரைகளில் பூமாலையுடன் பாமாலையும் சூட்டிக் களித்தோம்!..


நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே சுரபூஜிதே
சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே!..

தொடரும்  வழிபாடுகளில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி போற்றி வணங்கப்படுகின்றாள்!..

வழிபடும் அன்பர்களின் துயர்களையும் துன்பங்களையும் தொலைத்து அழிப்பவள் ஸ்ரீ மஹாலக்ஷ்மி.

நம்முள் மண்டிக் கிடக்கும்  தீமை எனும் தாரித்ரியத்தை அழித்து ஞானம் எனும் ஐஸ்வர்யத்தினை அருள்பவள் ஸ்ரீ மஹாலக்ஷ்மி.

இக வாழ்வில் நமக்கு வேண்டும் வரங்களையும் வளங்களையும் வழங்கி -  நம்மை நடத்துபவள் - ஸ்ரீமஹாலக்ஷ்மி!..

வேண்டும் வரங்கள் - வளங்கள் எனில்,

நாம் வேண்டியதை அல்ல!.. நமக்கு வேண்டியதை!..

நமது பூர்வ ஜன்மத்தின் சஞ்சித ப்ராரப்த வினைகளை அனுசரித்து - நமக்கு எவற்றை வழங்க வேண்டுமோ அவற்றை வழங்கி அருள்வாள். 

அதன்படி எவற்றையெல்லாம் நாம் அனுபவிக்கும் படியான விதி இருக்கின்றதோ - அதை நாம் அனுபவித்தே தீரவேண்டும். 

இப்படி அனுபவிக்கும் வேளையில் - அல்லலும் துன்பமும் துயரமும் தொடருமேயானால் - அவற்றில் இருந்து நாம் மீள்வதற்கு பெரிதும் உதவியாய்த் திகழ்வன - வழிபாடுகள். 


விதியின்  வசமாக தொல்லைகளும் துயரங்களும் ஒரேயடியாகத் தொலைய வில்லை எனினும் - இடையறாத அன்பின் வழிபாடுகளினால் - விதியின் இறுக்கம் இளகுகின்றது. 

ஒருவன் அளவு கடந்த வறுமையிலும் தடுமாறாது, தடம் மாறாது நேர்வழியில் செல்வானாயின் அன்னையின் அருள் பரிபூரணமாகக் கிட்டும் என்பது பொருள். 

அதற்காகத் தான் வறுமையிலும் செம்மை என்று முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.

அத்தகைய மனோதிடம் அமையுமானால்  - சற்றும் குறைவில்லாமல் அருள் மழை பொழிவாள் என்பதற்கு பல்வேறு எடுத்துக் காட்டுகள் உள்ளன.

தமக்கென்று வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக் கனியை - பவதி பிக்ஷாம் தேஹி!.. என வந்த பாலகனுக்கு இட்டார் அந்தப் பெண்.

''பிக்ஷை ஏற்க வந்திருக்கும் பாலனுக்கு இடுவதற்கு இதை விட நல்லதாக வேறு ஒன்றும் இல்லையே..'' - என்று, மனவருத்தத்துடன் எண்ணிய எண்ணம் தான் - அன்று அங்கே பொன்மழை பெய்யக் காரணமாக இருந்தது. 

அத்தகைய மனோபாவம் அவளாலே அருளப்படுவது. 

இத்தகைய பெருமை வாய்ந்த ''கனகதாரா ஸ்தோத்ரம்'' - இன்றும் ஞானப் பொக்கிஷமாக விளங்குகின்றது எனில் அது மிகையில்லை.

நவராத்திரிப் பெருவிழா - தேசம் எங்கிலும் வேறு வேறு வழக்கங்களுடன் கொண்டாடப்பட்டாலும், நாம் செய்யும் வழிபாடுகள் அனைத்தும் அன்னை பராசக்தியின் அருளை வேண்டியே நடைபெறுகின்றன. 

அவளுடைய அம்சங்களான ஸ்ரீ மஹாலக்ஷ்மி மற்றும் ஸ்ரீ சரஸ்வதியின் அருள் வேண்டியே நடைபெறுகின்றன. 

இந்த அளவில் சர்வலோக சரண்யை ஆன அம்பிகையை ஒன்பது நாட்களும் வழிபடும் போது -


முதல் மூன்று நாட்கள்  - வீரம் , மனோதைரியம்  இவற்றை அருளும்  
ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி எனவும்,

அடுத்த மூன்று நாட்கள் - குன்றாத நலங்களையும் வளங்களையும் அருளும் 
ஸ்ரீ மஹாலக்ஷ்மி எனவும்,

கடைசி மூன்று நாட்கள் - கல்வி,  நல்லறிவு,  ஞானம் இவற்றை அருளும்
ஸ்ரீ மஹாசரஸ்வதி எனவும், வணங்கி நிற்கின்றோம்.

இல்லங்களில் மங்கலங்கள் தழைக்கவும் அனைவருடைய நலன் கருதியும் - தான் வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

அவற்றுள் பெண்களே முதலிடம் பெறும் வழிபாடு  - நவராத்திரி வழிபாடு!..

நவராத்திரி வழிபாடுகளில் மற்ற பெண்களையும் அன்புடன் அழைத்து அவர்களுக்கு  சந்தனம், குங்குமம், தாம்பூலம், பிரசாதம் - என வழங்கி அகம் மகிழும்போது அங்கே அன்னை மஹாலக்ஷ்மியும் மகிழ்கின்றாள். 

இப்படி தாம்பூலம் பிரசாதம் முதலானவற்றை முகம் அறியாதவர்களுக்கு வழங்கும் போது கிடைக்கும் பலன்கள் இரட்டிப்பாகின்றன. 


இப்படி அன்பின் வழி நின்று கொடுப்பதும் கொள்வதும் நிகழும் போது குற்றங்கள் அழிகின்றன. குறைகள் அகலுகின்றன. குலம் விளங்குகின்றது.

இப்படி நிகழ்த்தும் வழிபாடுகளில் அன்னை ஸ்ரீ மஹாலக்ஷ்மி  மனம் பூரிக்கின்றாள். ஏனெனில் அவள் - சாந்தமும் சாந்நித்யமும் உடையவள். 

உலகெங்கும் நாம் காணும் அனைத்திலும் வியாபித்து விளங்குபவள்.
சர்வ மங்கலங்களுக்கும் அவளே காரணி. 

அந்த காரணியை - பரிபூரணியைக் குறித்த ஸ்தோத்திரங்கள் பற்பல. 

அவற்றுள் ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்ரம் வெகு சிறப்பானது.

அதிலிருந்து சில கண்ணிகள் இன்றைய பதிவில்!..


கீர்தேவதேதி கருடத்வஜ சுந்தரி
சாகம்பரீதி சசி சேகர வல்லபேதி
ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளய கேளிஸு ஸம்ஸ்திதாய
தஸ்யை நமஸ் திரிபுவனைக குரோஸ் தருண்யை!..

வாக்தேவி சரஸ்வதியாகத் திகழ்பவளே!.  
கருடனைக் கொடியில் கொண்ட சுந்தரியே!...
சசிசேகர மூர்த்தியாகிய ஸ்ரீ பரமேஸ்வரன் - ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் எனும் மூன்றினையும் விளையாட்டாகச் செய்து கொண்டிருக்கும் போது அருகிருக்கும் சிவசக்தியாகவும் சாகம்பரியாகவும் திகழ்பவளே!.
மூவுலகங்களுக்கும் குருவான ஸ்ரீமந்நாராயணனின் தேவியே போற்றி!..

நமோஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை
நமோஸ்து பூமண்டல நாயிகாயை
நமோஸ்து தேவாதி தயாபராயை
நமோஸ்து சார்ங்காயுத வல்லபாயை!..

தாமரை மலரில் வீற்றிருப்பவளே!.. 
பூமண்டலத்தின் தனிப்பெருந் தலைவியே!.. 
தேவர்களின் மீது தயை கொண்டவளே!.. 
சார்ங்கபாணியாகிய ஸ்ரீமந்நாராயணனின் தேவியே போற்றி!.. 

நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை 
நமோஸ்து பூத்யை புவனப்ரஸூத்யை 
நமோஸ்து தேவாதிபி ரார்ச்சிதாயை 
நமோஸ்து நந்தாமஜ வல்லபாயை!.. 

பேரொளிப்பிழம்பு என தாமரையில் திகழ்பவளே!.. 
ஐஸ்வர்யங்களின் வடிவானவளே!.. 
இப்பேருலகைப் படைத்தவளே!.. 
தேவர்களால் வழிபடப்படுபவளே!.. 
நந்தகுமாரனாகிய ஸ்ரீமந்நாராயணனின் தேவியே போற்றி!..


மங்கலகரமான நவராத்திரி நாட்களில்
ஸ்ரீமஹாலக்ஷ்மியைப் போற்றி வணங்கி, 
நலங்களும் வளங்களும் பெறுவோம்!..

ஓம் மஹாலக்ஷ்ம்யை ச வித்மஹே 
விஷ்ணு பத்ந்யை ச தீமஹி  
தந்நோ லக்ஷ்மி: ப்ரசோதயாத்:

ஓம் தன லக்ஷ்மியே போற்றி.. ஓம் தான்ய லக்ஷ்மியே போற்றி..
ஓம் அன்ன லக்ஷ்மியே போற்றி.. ஓம் அம்ருத லக்ஷ்மியே போற்றி.. 
ஓம் அனந்த லக்ஷ்மியே போற்றி..  
ஓம் ஆனந்த லக்ஷ்மியே போற்றி..

சர்வமங்கல மாங்கல்யே சர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரயம்பகி கௌரி நாராயணி நமோஸ்துதே!..

ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்ம்யை நம:
* * *

வெள்ளி, செப்டம்பர் 26, 2014

அரைக்காசு அம்மன்

நாமெல்லாம் கவனக் குறைவாக ஏதாவதொரு பொருளை எங்கேயாவது வைத்து விட்டுத் தேடுவது உண்டு.

தவிரவும் எதையாவது தொலைத்து விட்டு அல்லல் படுவதும் உண்டு.

அந்த வேளைகளில் நமக்கு - அன்புக்குரிய அன்னையாக கை கொடுத்து உதவி செய்பவள் ஒரு அம்மன்!..

அவள் திருப்பெயர் - ஸ்ரீ அரைக்காசு அம்மன்!..


தொலைந்து போன பொருட்கள் கிடைக்க வேண்டி அரைக்காசு அம்மனை மனதார நினைத்து பிரார்த்தனை செய்து விட்டுத் தேடினால் தொலைந்த பொருள் உடனடியாகக் கிடைக்கின்றது.

அப்படி பொருள் கிடைத்த உடன் அவரவர் வீட்டிலேயே பூஜை மாடத்தில் வெல்லத்தை வைத்து அதை அம்மனாகப் பாவித்து தீர்த்தம் கொடுத்து பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

இந்த வெல்லத்தை வீட்டிலுள்ள அனைவரும் பிரசாதமாக உட்கொள்ளலாம்.

அவளுடைய திருவுருவப்படம் வீட்டில் இல்லாவிட்டாலும் கூட - 
அவள் திருவுருவம் எப்படி இருக்கும் என்பது தெரியாவிடாலும் கூட - 
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவுகின்றனள்.

மேலும் - களவு போன பொருட்கள் கிடைக்கவும், கொடுத்த பணம் ஒழுங்காகத் திரும்பி வரவும், இழுபறியாக இருக்கும் சொத்து தங்கள் கைக்கு வரவும் அரைக்காசு அம்மனை நினைத்து வழிபட்டால் நிச்சயம் அவள் உதவுகின்றாள்.

இத்தகைய பிரார்த்தனைகள் கைகூடியதும் அம்மனுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து நன்றிக் கடன் செலுத்தலாம்.

வாய்ப்பு கிடைக்கும் போது அவளுடைய திருத்தலத்திற்குச் சென்று சந்நிதியில் அவளைக் கண்ணாரக் கண்டு இன்புறலாம்.

சரி - அவள் எங்கே வீற்றிருக்கின்றாள்!?..

சில தினங்களுக்கு முன் சகோதரி இளைய நிலா இளமதி அவர்கள்  - இதைப் பற்றிய தகவல்களைக் கேட்டிருந்தார்கள். 

தொலைந்து போன பொருளை மீட்க உதவும் ஸ்லோகம். பிரசித்தமான கோயிலின் அன்னையின் பெயரில் பாடப்பட்டது அது. எழுதி வைத்திருந்தேன். எங்கோ தவறி விட்டது . முடிந்தால் தேடித் தாருங்கள்!.. பலருக்கும் பயன் கிட்டும்!.. - என்று.

நானும் அவர்களுக்காகத் தேடினேன். 

ஸ்லோகம் பாடப்பட்ட கோயில் எது?.. 

தெரியாது!..

அந்த அம்பாளின் பெயர்!..

அதுவும் தெரியாது!..

அப்புறம் எப்படித் தேடுவாய்?!..

அம்பாளைத் தேடுவதே ஆனந்தம் !..   - என்று தேடினேன்.

அந்த வேளையில் மிக வியப்பான தகவல்களை அந்த அம்பிகையே முன் வந்து அருளினாள்.

திருத்தலம் - திருக்கோகர்ணம், புதுக்கோட்டை நகர்.
ஸ்வாமி - ஸ்ரீ கோகர்ணேஸ்வரர்.
அம்பாள் - ஸ்ரீ பிரகதாம்பாள்.

 

தீர்த்தம் - கபில தீர்த்தம் எனும் வற்றாத சுனை.
தலவிருட்சம் - மகிழ மரம்.
தலப்பெருமை - சாபத்திற்கு ஆளான காமதேனு வழிபட்டு நலம் பெற்றதலம்.

ஸ்ரீ பிரகதாம்பாளின் செல்லப்பெயர் - அரைக்காசு அம்மன்.

திருக்கோகர்ணம் குடைவரைக் கோயிலாகும். புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் - புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது.

நாமறிந்த மொழியில், மலர் கொண்டு வழிபட - நூறு நூறு நன்மைகளை அள்ளித் தருபவள் அரைக்காசு அம்மன்!.. எனப் புகழ்கின்றனர் இறையன்பர்கள்.

அன்பு கொண்ட மனங்களைத் தேடி அவளே வருகின்றாள் - என்பதற்கு நிறைய சாட்சிகள்!..

இதோ - அன்னையின் திருவடிகளில் எளியேன் அர்ச்சித்த பாமாலை!..

ஸ்ரீ பிரகதாம்பாள் எனும் அரைக்காசு அம்மன் 
போற்றிப் பாமாலை.

108 மலர் வழிபாடு.

 ஓம்

அன்பின் உருவாம் பிரகதி போற்றி
நின்திரு மலரடி பணிந்தேன் போற்றி
நாவளர் நற்றமிழ் நங்காய் போற்றி
தூமலர் தூவித் துதித்தேன் போற்றி!.. {4}

கரிமா முகனைப் பயந்தாய் போற்றி
அரிபிர மாதியர்க் கரியாய் போற்றி
இளையவன் கந்தனை ஈந்தாய் போற்றி
விளைநலம் எங்கும் விதிப்பாய் போற்றி!..{8}

சுரும்பார் குழலுமை கௌரி போற்றி
வருந்தா வகையெனக் கருள்வாய் போற்றி
மங்கல நாயகி மாமணி போற்றி
எங்கும் நிறைந்திடும் இறைவி போற்றி!..{12}

யாழ்நிகர் மொழியாய் யாமளை போற்றி
சூழ்வினை தீர்க்கும் சூலினி போற்றி
பல்வளை நாயகி பார்ப்பதி போற்றி
நல்வழி அருளும் நாயகி போற்றி!..{16}

போகம் ஆர்த்த பொற்கொடி போற்றி
பாகம் பிரியாய் பராபரை போற்றி
ஐயாற மர்ந்த அறமே போற்றி
ஆனைக் காவின் அம்பிகை போற்றி!..{20}

உலகுயிர் வளர்க்கும் உமையே போற்றி
அலகில் புகழ்நிறை அம்பிகை போற்றி
சிவகாமி எனும் செல்வி போற்றி
நவமா மணியே நாரணி போற்றி!..{24}

கத்துங் கடல்தரு முத்தே போற்றி
நத்தும் நல்லவர் நட்பே போற்றி
கற்றவர்க் கின்பக் கதியே போற்றி
உற்றவர்க் குகந்த நிதியே போற்றி!..{28}

அற்றவர்க்கு ஆரமுது ஆனாய் போற்றி
செற்றவர் செருக்கு சிதைப்பாய் போற்றி
செண்டாடும் விடைச் சிவையே போற்றி
உண்ணா முலையெம் அன்னாய் போற்றி!..{32}

வடிவுடை நங்காய் வாழ்வே போற்றி
கொடியிடைக் கோமள வல்லி போற்றி
மங்கலம் அருளும் மங்கலி போற்றி
சஞ்சலம் தீர்த்திடும் சங்கரி போற்றி!..{36}

பாழ்மனம் பதைக்க எழுவாய் போற்றி
சூழ்பகை முடித்துத் தருவாய் போற்றி
யாழ்நகர் வளமுற வருவாய் போற்றி
யாழ்வளர் வளரென அருள்வாய் போற்றி!..{40}

கடம்பவ னத்துறை கயற்கண் போற்றி
கடவூர் வளரும் கற்பகம் போற்றி
அபிராமி எனும் அமுதே போற்றி
மயிலா புரியில் மயிலே போற்றி!..{44}

சிவகதி காட்டும் சுந்தரி போற்றி
பரகதி அருளும் தற்பரை போற்றி
தையல் நாயகித் தாயே போற்றி
வையம் காத்திட வருவாய் போற்றி!..{48}

இமவான் பெற்ற இளங்கிளி போற்றி!..
மலையத் துவசன் மகளே போற்றி
முப்புரம் எரித்த ஏந்திழை போற்றி
முத்தமிழ் வடிவே முதல்வி போற்றி!..{52}

ஒளிக்குள் ஒளியாய் ஒளிர்வாய் போற்றி
வெளிக்குள் வெளியாய் மிளிர்வாய் போற்றி
மண்முதல் ஐம்பெரும் வளமே போற்றி
கண்முதல் களிக்கும் நலமே போற்றி!..{56}

பஞ்சமி பைரவி ரஞ்சனி போற்றி
நஞ்சுமிழ் நாக பூஷணி போற்றி
சும்பநி சும்ப சூதனி போற்றி
சண்டன் முண்ட மர்த்தனி போற்றி!..{60}

சிம்ம வாகினி ஜனனி போற்றி
மகிஷ மர்த்தனி துர்கா போற்றி
நீலி பயங்கரி நின்மலி போற்றி
தாரக மர்த்தனி காளி போற்றி!..{64}

ஆரணி பூரணி காரணி போற்றி
மாலினி சூலினி மதாங்கினி போற்றி
சூளா மணியே சுடரொளி போற்றி
ஆளாம் அடியர்க் கருள்வாய் போற்றி!..{68}

மேலை வினைகடி விமலி போற்றி
வாலை வளந்தரு வராஹி போற்றி
திருவும் அருவும் திகம்பரி போற்றி
பருவரை மருந்தே பகவதி போற்றி!..{72}

வேற்கண் அம்மை மீனாள் போற்றி
நாற்பயன் நல்கும் நங்காய் போற்றி
மாதவர்க் கிளைய மடக்கொடி போற்றி
மாதவர் போற்றும் சிவக்கொடி போற்றி!..{76}

பவளவரை மேற்பசுங் கொடி போற்றி
தவளவெண் நீற்றோன் தலைவி போற்றி
தீபச் சுடரில் திகழ்வாய் போற்றி
பாவத் தீவினை தகர்ப்பாய் போற்றி!..{80}

குழையா அகத்தைக் குழைப்பாய் போற்றி
இழையாய் எம்மை இழைப்பாய் போற்றி
புவனப் பொருளிற் பொருந்தினை போற்றி
பவளக் கனிவாய்ப் பைங்கிளி போற்றி!..{84}

சந்த்ர சடாதரி சாம்பவி போற்றி
சுந்தரி சுலக்ஷண ரூபிணி போற்றி
கலைமகள் பணியும் மலைமகள் போற்றி
அலைமகள் அடிபணி நலமகள் போற்றி!..{88}

திருக்கோ கர்ணத் திருவே போற்றி
ஒருகோடி நலந்தரு வடிவே போற்றி
நான்முக ரூபிணி ப்ராம்ஹணி போற்றி
நாரண ரூபிணி வைஷ்ணவி போற்றி!..{92}

பண்ணின் நேர்மொழிப் பாவாய் போற்றி
கண்ணின் மணியாய்க் காவாய் போற்றி
குமிழ்தா மரைமலர் கொடியிடை போற்றி
தமிழினும் இனிமை திகழ்ந்தாய் போற்றி!..{96}

அற்றார் அழிபசி தீர்த்தருள் போற்றி
உற்றார் உவப்புற சேர்த்தருள் போற்றி
பெய்யும் வளங்களில் இந்திரை போற்றி
வையகம் காத்திடும் வைஷ்ணவி போற்றி!..{100}

புல்லர்கள் போயற புரிகுவை போற்றி
நல்லன நவின்றன நல்குவை போற்றி
குங்குமம் தந்தருள் திருவடி போற்றி
மங்கலம் தந்தருள் மலரடி போற்றி!..{104}

போற்றி நின்பொன்னடி புதுமலர் போற்றி
போற்றி நின்புகழ்நிறை திருவடி போற்றி
போற்றி நின்திருவடி பணிந்தேன் போற்றி
போற்றி பிரகதாம்பிகா போற்றி போற்றி!..{108}

ஓம்
* * *

இளமதி அவர்கள் கேட்டிருந்ததைப் போல ஸ்லோகம் அல்ல!..

தேடிச்சென்றபோது கிடைத்தது -  மலர் வழிபாட்டிற்கான பாமாலை.
108 வரிகளை உடையது.

அதனை முழுதும் வாசித்தேன். எழுத்துப் பிழைகளுடன் இருந்தது. ஒழுங்கு செய்து பதிவிடும் போது பிரத்யேகமான உத்தரவு. 

அதன் படி  - அந்த பாமாலையின் புது வடிவம் தான்  - இங்கே பதிவில் உள்ளது.
 
இந்த பாமாலையை நேற்று காலையில் நான் எழுதினேன். ஆனால் மூலப் பிரதி வேறு. அது  - சமீப காலத்தில் நல்ல மனம் கொண்ட இறையன்பரால் எழுதப்பட்டிருக்கின்றது.

பலருக்கும் அந்த மூலப் பிரதி கிடைத்து - நாள் வழிபாட்டில் இருக்கக் கூடும். அந்தப் பாமாலைக்கு இந்தப் பாமாலை மாற்று என்ற எண்ணத்தில் நான் இதனை எழுத வில்லை. அதைத் தான் பிழை திருத்தி வெளியிட முயன்றேன்.

ஆனால் - வேறு விதமாக அமைந்து விட்டது.

இதனைக் கொள்வோர் கொள்க!..


ஸ்ரீபிரகதாம்பாள் தான்  அரைக்காசு அம்மன் என அழைக்கப்படுபவள்!..

அரைக்காசு அம்மனை வேண்டினால் தொலைந்து போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும் என்பது பொதுவாக உள்ள கருத்து. 

அது உண்மையும் கூட. ஆனால் -

தொலைந்து போன பொருட்கள் கிடைப்பதற்கு மட்டுமின்றி நினைத்த நற்காரியங்கள் நிறைவேறவும் ஆத்மார்த்தமாக அம்மனை வழிபட்டு வருகின்றனர்.  

அப்படி நேர்ந்து கொண்ட காரியங்கள் கண்டிப்பாக நிறைவேறுகின்றன. 

புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்தபோது புழக்கத்தில் இருந்த காசுகள் இவை. பதினாறாம் நூற்றாண்டில் அச்சிடப்பட்டு மூன்று நூற்றாண்டுகள் புழக்கத்தில் இருந்தன இக்காசுகள். 

இந்தக் காசின் ஒரு புறம் ஸ்ரீ பிரகதாம்பாளின் அமர்ந்த திருக்கோலமும் மறு பக்கத்தில் ''விஜய'' என்ற தெலுங்கு வார்த்தையும் பொறிக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் காசு அப்போதைய அரை அணாவிற்கு சமமான மதிப்பை உடையது. 

அம்மன் சந்நிதியில் வைத்து நெல்லும் வெல்லமும் ஒரு கைப்பிடி அளவுக்கு அரைக்காசும் பக்தர்களுக்கு கொடுத்திருக்கின்றார்கள் அந்தக் காலத்தில்!..

அப்படிக் கொடுக்கப்பட்டதால் அம்மனும் அரைக்காசு அம்மன் என்று பெயர் பெற்று விட்டாள்.


நாற்பது ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டில் - சிறு கலசம் நிறைய இந்த காசுகள் இருந்தன. என் தந்தையும் தன் நண்பர்களுக்கு எல்லாம் இந்த காசுகளைக் கொடுத்தார். 

இப்போது - அதிர்ஷ்ட வசமாக ஒரே ஒரு காசு மட்டும் என்னிடம் உள்ளது.

இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னர் - அரைக்காசு அம்மனைப் பற்றிப் பதிவிடும் போது - அதன் மகத்துவத்தை நானும் தெரிந்து கொண்டேன்.

ஒரே ஒரு காசு மட்டும் என்னிடம்!.. - என்றால் - இங்கே குவைத்தில் என் பெட்டிக்குள் தான் இருக்கின்றது.

இத்தனை நாள் என்னுடன் இருந்த அரைக்காசு அம்மன் - தன்னை இப்போது வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றாள்..

என்னே - அவள் கருணை!..

இதற்காக இளைய நிலா இளமதி அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்!..

தொலைந்த பொருள் கிடைக்க 
அரைக்காசு அம்மனை வேண்டிக் கொள்க!.. 
அன்னை அருள் புரிவாள்!..

ஓம் சக்தி ஓம்
* * *

புதன், செப்டம்பர் 24, 2014

நவராத்திரி

அம்பிகைக்குரிய விசேஷங்களுள் மிக முக்கியமானது நவராத்திரி விழா.
ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சிறப்பினை உடையது.

சூரியன் கன்னி ராசியில் திகழும் புரட்டாசி மாதத்தின் வளர்பிறை பிரதமை திதியில் ஆரம்பித்து தசமி திதியுடன் நிறைவு பெறுவது நவராத்திரி விழா.


இது சாரதா நவராத்திரி எனப்படும். இதுவே வீடுகள் தோறும் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது.

ஆயினும், தை மாதம் ஸ்யாமளா நவராத்திரி, பங்குனியில் வசந்த நவராத்திரி, ஆடியில் ஆஷாட நவராத்திரி என மேலும் மூன்று நவராத்திரி வைபவங்கள் பாரதத் திருநாட்டில் ஆங்காங்கே தொன்று தொட்டு அனுசரிக்கப்படுகின்றன.  

சாரதா நவராத்திரி தவிர்த்த ஏனைய வைபவங்கள் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் முறையாக நடைபெறுகின்றன.

பொதுவாக நவராத்திரி பூஜைகள் சூர்ய அஸ்தமனத்திற்குப் பின் -  முன்னிரவு நேரத்தில் செய்யப்படும்.

சக்தி வழிபாட்டுக்குரிய விரதங்களில் வெள்ளிக்கிழமை விரதம், பெளர்ணமி விரதம், நவராத்திரி விரதம் என்பன மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

நவராத்திரி என்பது விரமிருந்து கொண்டாடப்பட வேண்டியது என்றாலும் விரதம் மேற்கொள்வது அவரவர் விருப்பம்.

ஈசனை வழிபடுவதற்கு ஒரு ராத்திரி எனில் ஈஸ்வரியை வழிபட நவராத்திரி.  

நவம் -   என்ற சொல்லுக்கு ஒன்பது என்றும் புதியது என்றும் பொருள். ஒன்பது இரவுகள் கொண்டாடப்படும் விழாவிற்குப்பின் பத்தாம் நாள் விஜய தசமி.

ஸ்ரீராமபிரான் ஸ்ரீதுர்கா பூஜை செய்த பின்னரே, இராவணனுடன் போர் புரிந்தார் - என்று ஆன்றோர் கூறுவர்.

மகாபாரதத்தில் பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் முடிந்ததும் வன்னி மரத்தின் உள்ளிருந்து ஆயுதங்களைத் திரும்பவும் எடுத்த நாள் விஜய தசமி. 


புரட்டாசிக்குப் பின் குளிரும் பங்குனிக்குப் பின் கோடையும் ஆரம்பிக்கின்றன. மக்களை -  பலவித பிணிகள் துன்புறுத்தி நலியச்செய்யும் காலம். 

இவ்வேளையில், பிணிகளின் தாக்குதலில் இருந்து தம்மைக் காத்துக் கொள்ள  - இறையருளை நாடுவது நவராத்திரியின் நோக்கம் என்பர் ஆன்றோர்.
தனிச் சிறப்புடைய நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. 

எனினும் - எல்லாரும் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். 

இதனால் அனைவரும் பெறுவது - மனமகிழ்ச்சியும் பரிபூரண திருப்தியுமே!..

நவராத்திரி எனும் ஒன்பது நாட்களில்-

ஸ்ரீதுர்கா பரமேஸ்வரி வழிபாடு மூன்று நாட்களும், 
ஸ்ரீமஹா லக்ஷ்மி வழிபாடு மூன்று நாட்களும்,
ஸ்ரீஞான சரஸ்வதி வழிபாடு மூன்று நாட்களும் - நிகழ்கின்றன
.விஜய தசமி எனும் பத்தாம் நாள்
அம்பிகை மகிஷாசுரனை வெற்றி கொண்டு 
காலடியில் போட்டு மிதித்த நாள். 

ஆணவம் அழிந்த நாள். 
மூர்க்கம் முடக்கப்பட்ட நாள். 
பெண்மை வென்ற நாள்.

வீரர்களின் இதயக்கோயிலில் உறைபவள் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி.  
அவளுடைய திருக்கோலங்கள் ஒன்பது. அவை -

வன துர்க்கை, சூலினி துர்க்கை , ஜாதவேதோ துர்க்கை, ஜ்வாலா துர்க்கை,
சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை, தீப துர்க்கை, சூரி துர்க்கை, லவண துர்க்கை.

ஸ்ரீதுர்கா பரமேஸ்வரி -  லக்ஷ்மி, சரஸ்வதி எனும் திவ்ய ஸ்வரூபங்களைத் - தன்னுள் கொண்டு முப்பெரும் சக்தியாக இலங்குபவள்.

இந்த முப்பெரும் சக்திகளும், மேலும் மும்மூன்று அம்சங்கள் கொண்டு  -

மகேஸ்வரி, கெளமாரி , வராகி, 

மகாலெக்ஷ்மி, வைஷ்ணவி, இந்திராணி,

சரஸ்வதி, நாரஸிம்ஹி, சாமுண்டி -

 - என ஒன்பது தேவியர்களாகப் பொலிகின்றனர்.

நவராத்திரியில் கன்யா பூஜை என்பது ஒரு மரபு.  

இல்லங்களில் சக்தி ஸ்வரூபம் அமைத்து நவராத்திரியின் ஒன்பது நாட்களும் புஷ்பாஞ்சலியுடன் தூப தீப ஆராதனைகள் செய்து தினமும் ஒவ்வொரு விதமான நிவேத்யம் படைத்து உள்ளன்புடன் வணங்க வேண்டும். 

அத்துடன் - ஏழைகளுக்கு தானமும் செய்தல் வேண்டும்.

வீட்டில் அழகாக கொலு வைக்கலாம். அதுவும் இயன்றால் தான். 

ஒன்பது நாளும் இயன்ற அளவில்  சுண்டலும் சித்ரான்னமும் பழவகைகளும் அம்பிகைக்கு நிவேத்யம் செய்வது அன்பின் வெளிப்பாடாக இருத்தல் வேண்டும். 

அன்புக்கு வசமாகும் அம்பிகை - ஆடம்பரங்களை வெறுப்பவள்!.. 

 

ஸ்ரீசரஸ்வதி மூலஸ்தானத்தில் வீற்றிருந்து அருள் பொழியும் திருத்தலம் கூத்தனூர். 

கவிச்சக்ரவர்த்தி ஒட்டக்கூத்தர் எழுப்பிய திருக்கோயில் இது. 

திருஆரூர் -   மயிலாடுதுறை  சாலையில் பூந்தோட்டம் எனும் சிற்றூருக்கு மேற்கே இரண்டு கி.மீ. தொலைவில் அரசலாற்றின் கரையில் அமைந்துள்ளது கூத்தனூர் கிராமம்.
 
கூத்தனூர் சரஸ்வதி திருக்கோயிலில்  நவராத்திரி விழா தொடங்கியுள்ளது.

இன்று (செப்/24) முதல் புரட்டாசி/19  (அக்/5) ஞாயிற்றுக்கிழமை வரை சிறப்பு அபிஷேக, அலங்காரங்களுடன்  நவராத்திரி விழா நடைபெறுகின்றது.

ஒவ்வொரு நாளும் காலையில் ஸ்ரீ சரஸ்வதி அம்பாளுக்கு அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் மஹாதீபாராதனையும் நிகழ்கின்றது. 

மாலை வேளைகளில் இலக்கியச் சொற்பொழிவுகளும் இசை நிகழ்ச்சிகளும் பரத நாட்டியக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

இரவில் ஸ்ரீவிநாயகப் பெருமான் திருவீதி உலா எழுந்தருள்கின்றார்.

முதல் நாள் : செப்டம்பர்/24 - பாலிகை இடுதல், ரக்ஷாபந்தனம்.

{1}செப்டம்பர்/24 புதன் - ஸ்ரீ துர்க்கா பரமேஸ்வரி அலங்காரம்.
{2}செப்டம்பர்/25 வியாழன் - சந்தனக்காப்பு அலங்காரம்.
{3}செப்டம்பர்/26 வெள்ளி - ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அலங்காரம்.

{4}செப்டம்பர்/27 சனி - ஸ்ரீ மகாலக்ஷ்மி அலங்காரம்.
{5}செப்டம்பர்/28 ஞாயிறு - ஸ்ரீ சாகம்பரி அலங்காரம்.
{6}செப்டம்பர்/29 திங்கள் - ஸ்ரீ சந்தானலக்ஷ்மி அலங்காரம்.
{7}செப்டம்பர்/30 செவ்வாய் - ஸ்ரீ மீனாக்ஷி அலங்காரம்.
{8}அக்டோபர்/01 புதன் - ஸ்ரீ மஹாசரஸ்வதி அலங்காரம்.
{9}அக்டோபர்/02 வியாழன் - ஸ்ரீ சரஸ்வதி பூஜை. ஸ்ரீபாத தரிசனம்.

பக்தர்கள் மூலஸ்தானத்தின் அருகில் சென்று அம்பாளின் திருவடித் தாமரைகளைத் தொட்டு வணங்கலாம்.
{10}அக்டோபர்/03 வெள்ளி - விஜயதசமி.
காலையில் - பால வித்யாரம்பம், ஸ்ரீ அம்பாள் ஏகாதச ருத்ராபிஷேகம்.
இரவு - நவசக்தி அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, ஸ்ரீ அம்பாள் திருவீதியுலா .
{11}அக்டோபர்/04 சனிக்கிழமை காலையில் ஸ்ரீஅம்பாள் மஹாஅபிஷேகம், மஹா தீபாராதனை. இரவு  ஸ்ரீ அம்பாள் திருவீதி உலா எழுந்தருளல்.

{12}அக்டோபர்/05 ஞாயிறு - ஸ்ரீ அம்பாள் ஊஞ்சல் உற்சவம்.
மஹா தீபாராதனை. விடையாற்றி. பாலிகை விடுதல். 

அக்டோபர்/06 முதல் அக்டோபர்/13 வரை தினமும் இரவு ஏழு மணிக்கு சஹஸ்ரநாம அர்ச்சனை. தொடர்ந்து மஹா தீபாராதனை நிகழ்கின்றது.
அக்டோபர்/13 காலை ஒன்பது மணியளவில் உற்சவர் பிராயசித்த அபிஷேகம், யதாஸ்தான பிரவேசம்.நவராத்திரி கொலு அமைத்தல் எனில் அவரவர் பாரம்பர்ய வழக்கப்படி அமைக்கலாம். 

கீழ்ப்படியில் ஓரறிவுடைய தாவரங்களின் அம்சங்களை அமைத்து மேலே செல்லச் செல்ல சிற்றுயிர்கள் பறவைகள் விலங்குகள்  மனிதர்கள் ஞானியர் தேவர்கள் என அமைத்து, 

மேல்படியில் முழுமுதற்பொருளான ஸ்வாமி அம்பாள்  ஸ்வரூபத்தினையும் பூரண கும்பத்தினையும் நிறுவ வேண்டும்.

நவராத்திரி விழாவின் போது ஒவ்வொரு வீடும் ஒருகோயிலாக ஆகின்றது.

நாளும் மாலை நேரத்தில் தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்!.. -  என கொலு மண்டபத்தில் ஆராதனைகளைச் செய்து, 

அருகில் உள்ளவர்களையும் உற்றார் உறவினர் நண்பர்களையும் அழைத்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். 

தீப ஆராதனைக்குப் பிறகு நிவேதன பிரசாதத்துடன் மங்கலப் பொருட்களை மகிழ்ச்சியுடன் கொடுத்து உபசரித்தல் மரபு. ஒருவருக்கொருவர் அன்பின் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வது அவசியம். 

ஏற்ற தாழ்வின்றி கொள்வதும் கொடுப்பதும் நவராத்திரியின் மாண்பு!..

புல் பூண்டுகள் எனத் தொடங்கி பூரண கும்பம் எனும் நிலையில் நிறைவுறும் கொலு அமைப்பினை உற்று நோக்கினாலே நவராத்திரி கொலுவின் அர்த்தம் விளங்கி விடும். 

நவராத்திரி கொலு என்பது ஒரு அருட்குறிப்பு. 

புல் பூண்டுகள் எனத் தொடங்கும் ஒவ்வொருவருடைய வாழ்வும் பூரண கும்பம் எனப் பொலிவுற வேண்டும். அதுவே நமது வேண்டுதல்!..


நவராத்திரி - அம்பாள் மகிஷனுடன் நிகழ்த்திய நாடகம்!..
அதன் மறைபொருள் - பெண்மையின் வெற்றி என்பது தான்!.. 

பெரும் சக்தியான பெண்மையைப் பேதைமைப் படுத்தும் எதையும் - பெண்மை வெற்றி கொண்டு வீழ்த்தும் என்பதே உண்மை!..

பெண்மை என்பது பேரறிவு!.. 
பெண்மை என்பது பெருஞ்செல்வம்!.. 
பெண்மை என்பது பேராற்றல்!..

சுந்தரி எந்தை துணைவி என்பாசத் தொடரை எல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே!..{8}
அபிராமி அந்தாதி

ஓம் சக்தி ஓம்.
* * *