நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், செப்டம்பர் 23, 2014

பலன் தரும் பதிகம்

திருவேதிகுடி.

திருமணத் தடையினை நீக்கும் திருத்தலமாகிய திருவேதிகுடியினைப் பற்றி கடந்த மார்ச் மாதம்,
- என மூன்று பதிவுகளை இறையருளால்  வெளியிட்டிருந்தேன். அவற்றில் திருத்தலச் சிறப்புகளுடன் - திருப்பதிகச் சிறப்பினைக் கூறும் போது,

திருஞானசம்பந்தப் பெருமான் - திருப்பதிகம் பாடி அதன் பலன் கூறியருளும் போது ஆணையிட்டு அருளிய திருப்பதிகங்கள் ஐந்தினுள் - திருவேதிகுடி திருப்பதிகமும் ஒன்று - எனக் குறிப்பிட்டிருந்தேன்.


அதனைத் தொடர்ந்து - வலைத்தள அன்பராகிய திரு. குமார் அவர்கள் - ஏனைய நான்கு திருத்தலங்களைப் பற்றியும் கூறுமாறு கேட்டிருந்தார். 

அவர் கேட்டிருந்தது - ஆகஸ்ட்/19 அன்று. 

அடுத்த சில தினங்களில் தருகின்றேன்- என, நானும் பதில் அளித்து விட்டேன். ஆயினும் விவரங்களை உடன் பதிவிட முடியாதபடி - அடுத்தடுத்த பதிவுகள்.

மிகவும் தாமதமாகி விட்டது. 

பன்னிருதிருமுறைகளுள் திருஞானசம்பந்தப்பெருமான் பாடியருளியவை முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. 

அவற்றுள் ஆணையிட்டு அருளிய பதிகங்கள் ஐந்தினைப் பற்றிய விவரங்கள் - இங்கே குறிக்கப்படுகின்றன.

திருத்தலம்
கழுமலம் என்று புகழப்படும் சீர்காழி.

 
இறைவன் - ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ பிரஹந்நாயகி

தலவிருட்சம் - பாரிஜாதம்
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம் முதலான 22 தீர்த்தங்கள்.

தலப்பெருமை:
காழி என்பது திருத்தலம். இதுவே சீர்காழி.
ஊழிப்  பிரளய காலத்தில் தோணி போல மிதந்த திருத்தலம்.

பன்னிரு தலங்களாக விளங்குவது. காழி, பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை,  கொச்சைவயம், கழுமலம் என்பன அவை. 

திருஞான சம்பந்தர்  அவதரித்த திருத்தலம்.

திருப்பதிகம்
மூன்றாம் திருமுறை.
திருப்பதிக எண் - 118

மடல்மலி கொன்றை துன்றுவா ளெருக்கும் வன்னியு மத்தமுஞ் சடைமேற்
படலொலி திரைகண் மோதிய கங்கைத் தலைவனார் தம்மிடம் பகரில்
விடலொளி பரந்த வெண்டிரை முத்த மிப்பிகள் கொணர்ந்துவெள் ளருவிக்
கடலொலி யோத மோதவந் தலைக்குங் கழுமல நகரென லாமே. {1}

கானலங் கழனி யோதம்வந் துலவுங் கழுமல நகருறை வார்மேல்
ஞானசம் பந்த னற்றமிழ் மாலை நன்மையா லுரைசெய்து நவில்வார்
ஊனசம் பந்தத் துறுபிணி நீங்கி யுள்ளமு மொருவழிக் கொண்டு
வானிடை வாழ்வர் மண்மிசைப் பிறவார் மற்றிதற் காணையும் நமதே!.
{11}
* * *

திருத்தலம்
திருவேதிகுடி.

 
இறைவன் - ஸ்ரீ வேதபுரீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ மங்கையர்க்கரசி

தலவிருட்சம் - வில்வம்.
தீர்த்தம் - வேத தீர்த்தம்.

தலப்பெருமை: 
நான்முகன் வழிபட்டு உய்ந்த திருத்தலம். ஈசன் ஒரு சமயம் வாழை மடுவில் தோன்றியருளியதாக ஐதீகம். திருமணத் தடை நீக்கும் திருத்தலம்.

திருப்பதிகம்
மூன்றாம் திருமுறை.
திருப்பதிக எண் -78.

நீறுவரி ஆடரவொ டாமைமன வென்புநிரை பூண்பரிடபம்
ஏறுவரி யாவரு மிறைஞ்சுகழ லாதிய ரிருந்தவிடமாம்
தாறுவிரி பூகமலி வாழைவிரை நாறவிணை வாளைமடுவில்
வேறுபிரி யாதுவிளை யாடவள மாரும்வயல் வேதிகுடியே.{1}

கந்தமலி தண்பொழினன் மாடமிடை காழிவளர் ஞானமுணர்சம்
பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு வேதிகுடி ஆதிகழலே
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்க ளென்னநிகழ் வெய்தியிமையோர்
அந்தவுல கெய்திஅரசாளும் அதுவேசரதம் ஆணைநமதே!..
{11}
* * *

திருத்தலம்
திருவெண்காடு.


இறைவன் - ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ பிரம்மவித்யா நாயகி

தலவிருட்சம் - ஆலமரம், கொன்றை, வில்வம்.
தீர்த்தம் - சூர்ய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம்.

தலப்பெருமை: 
அம்பிகையே குருவாக இருந்து - நான்முகனாகிய பிரம்மனுக்கு உபதேசித்த திருத்தலம்.

ஸ்வாமியும் அம்பாளும் திருமரமும் தீர்த்தமும் மும்மூன்றாகப் பொலியும் திருத்தலம்.

திருவேதிகுடி திருப்பதிகத்தில் திருமணம் கைகூடிவர அருளிய ஞானசம்பந்தர் திருவெண்காட்டில் பிள்ளைப் பேற்றுக்கு அருள்கின்றார்.

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே!..
{2/48/2}

திருவெண்காட்டில் உள்ள முக்குளங்களில் மூழ்கி எழுந்து, மூங்கில் போன்ற தோளினை உடைய உமையம்மையுடன் வீற்றிருக்கும் எம்பெருமானை  வணங்கி வழிபடுபவரை மாயை எனும் பேய்கள் விட்டு விலகிப் போகும். நல்ல மகப்பேற்றினை வேண்டிய மனவிருப்பம் இனிதே ஈடேறும். இதில் சிறிதும் ஐயம் வேண்டாம்!..  - என்று நமக்கு நல்வழி காட்டியருள்கின்றார்.

திருப்பதிகம்
மூன்றாம் திருமுறை.
திருப்பதிக எண் - 15.

மந்திர மறையவை வான வரொடும்
இந்திரன் வழிபட நின்ற எம்மிறை
வெந்தவெண் ணீற்றர்வெண் காடு மேவிய
அந்தமு முதலுடை யடிக ளல்லரே. {1}

நல்லவர் புகலியுள் ஞான சம்பந்தன்
செல்வன்எம் சிவனுறை திருவெண் காட்டின்மேற்
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோ டருவினை அறுதல் ஆணையே!.. {11}
* * * 

திருத்தலம்
திருச்செங்குன்றூர் - திருச்செங்கோடு.இறைவன் - ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ பாகம்பிரியாள்

தலவிருட்சம் - இலுப்பை.
தீர்த்தம் - தேவதீர்த்தம்.

தலப்பெருமை:
ஐயனும் அம்பிகையும் - மாதொருபாகனாக  பாகம் பிரியாளாக விளங்கும் திருத்தலம். திருமுருகன் செங்கோட்டு வேலனாகப் பொலியும் திருத்தலம்.
சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் திருத்தலம்.

திருஞானசம்பந்தர் தன் அடியாருடன் திருச்செங்கோட்டுக்கு வருகை தந்த போது கொங்குநாட்டில் விஷக்காய்ச்சல் பரவியிருந்தது. அந்த விஷ ஜூரம் அடியார்களையும் பற்றிக் கொண்டது.

விஷ ஜூரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களையும் அடியார்களையும் காத்தருள வேண்டி அருளிய திருப்பதிகம் இது.

செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்!..

ஒவ்வொரு திருப்பாடலின் இறுதியிலும் ஆணையிட்டருளி கொங்கு நாடு முழுவதும் பிணி தீர்த்தார். மக்களை வாட்டிய விஷ ஜூரம் நாட்டை விட்டே ஒழிந்தது - என்பது பெரிய புராணம் காட்டும் திருக்குறிப்பு.
 
திருநீலகண்டத் திருப்பதிகம் {பொது}
முதலாம் திருமுறை. 
திருப்பதிக எண் - 116 

அவ்வினைக்கு இவ்வினை யாமென்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாது இருப்பதும் உந்தமக்கு ஊனம் அன்றே
கைவினை செய்துஎம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்துஎமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
{1}

பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகி லிமையவர் கோனடிக்கண்
திறம்பயின் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே!..
 
{11} 
* * *       

திருத்தலம்
திருமறைக்காடு - வேதாரண்யம். 


இறைவன் - ஸ்ரீ மறைக்காட்டு மணாளன்
அம்பிகை - ஸ்ரீ யாழைப்பழித்த மொழியாள்.

தலவிருட்சம் - வன்னி.
தீர்த்தம் - மணிகர்ணிகை.

தலப்பெருமை: 
வேதங்கள் வணங்கிய திருத்தலம்.  சப்த விடங்கத் திருத்தலங்களுள் ஒன்று.

திருவிளக்கின் நெய்யினை உண்ண வந்த எலி தான்  - மகாபலி மன்னனாகப் பிறந்தது.

ஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் சுவாமிகளும் மகிழ்ந்து உறவாடி இருந்த திருத்தலங்களுள் ஒன்று. 

அக்காலத்தில் தென்பாண்டித் திருநாட்டில் புறச்சமயம் ஓங்கியிருந்தது.

சுவாமிகள் திருமடம் அமைத்துத் தங்கியிருந்த  போது -

சிவ சமயத்தை மீட்டெடுக்க  பாண்டிய நாட்டுக்கு எழுந்தருள வேண்டும்!..  

- என பாண்டிய நாட்டின் பட்டத்தரசியான மங்கையர்க்கரசி எனும் மாதரசி - ஞானசம்பந்தப் பெருமானுக்கு திருமுகம் அனுப்பியிருந்தாள். 

அதைக் கண்ட திருஞானசம்பந்தர் மதுரையம்பதிக்குப் புறப்படலானார்.

அப்போது, அப்பர் சுவாமிகள் - இவ்வேளையில் நாளும் கோளும் நல்லனவாக இல்லையே!.. - என, ஞானசம்பந்தரிடம் தனது கவலையைத் தெரிவித்தார். 

ஏனெனில் புறச்சமயத்தாரின் கொடுமைகளை  அனுபவித்து மீண்டு வந்தவர் அப்பர் சுவாமிகள்.

மனம் வருந்திய அப்பர் சுவாமிகளுக்கு ஆறுதல் கூறி - திருஞான சம்பந்தப் பெருமான் அருளிய திருப்பதிகம் இது!..

கோளறு திருப்பதிகம் {பொது}
இரண்டாம் திருமுறை. 
திருப்பதிக எண் - 85.

வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டுமுடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..{1}

என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி ஏழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..
{2}

உருவளர் பவளமேனி ஒளிநீறணிந்து உமையோடும் வெள்ளைவிடைமேல்
முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..
{3}

மதிநுதன் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..
{4}

நஞ்சணி கண்டன்எந்தை மடவாள்த னோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..
{5}

வாள்வரிய தளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடு உடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..
{6}


செப்பிள முலைநன்மங்கை யொருபாக மாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..
{7}

வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..
{8}

பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலு மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..
{9}

கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாக முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோ டமணைவாதில் அழிவிக்கும்அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..
{10}      

தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் 
துன்னி வளர் செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து 
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து 
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் 
வானில் அரசாள்வர் ஆணை நமதே!.. {11}
* * *
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறை இலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..
 * * *

21 கருத்துகள்:

 1. சீர்காழி தவிர ஏனைய தலங்களுக்குச் சென்றதில்லை. அதை போலவே தேவாரம் திருவாசகம் போன்றவற்றை ஆழ்ந்து படித்ததில்லை. பதிவுகளில் படிக்க நேருவதும் நல்ல வாய்ப்பே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..

   நீக்கு
 2. திருவெண்காடு தலத்தின் சிறப்பு பற்றியக் குறிப்பில் - மாயை எனும் பேய்கள் விட்டு விலகிப் போகும். நல்ல மகப்பேற்றினை வேண்டிய மனவிருப்பம் இனிதே ஈடேறும்.என்று குறிப்பிட்டிருக்கின்றீர்கள். மகப்பேறு அமையாததற்கான கர்மவினை எனும் மாயை நீங்கி, மகப்பேறு அமையும் என்பதே சரி. மாயை முழுவதுமாக நீங்க பல படிகள் கடக்க வேண்டும்....
  நல்ல பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   அவனால் ஆகாததும் உண்டோ?..தங்களின் விளக்கமும் இனிதே!..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..

   நீக்கு
 3. திருபதிகங்கள் பகிர்வு, திருத்தல வரலாறு, படங்கள் எல்லாம் அருமை.

  எங்கோ போகும் போது கோளறு திருப்பதிகம் படித்தபின் தான் போக வேண்டும் என்பார்கள் என் மாமனார்.

  வீட்டில் காய்ச்சல் வந்தால் உடனே அவ்வினைக்கு இவ்வினை என்ற பாடல் பாடவேண்டும் என்பார்கள் பத்தும் பாட முடியவில்லை என்றால் முதலும் கடைசிபாட்டும் பாடினால் போதும் என்பார்கள்.

  மகபேறு சமயத்தில் திருவெண்காடு பதிகம் படிக்க சொல்வார்கள் மாமாவிடம் மகபேறு இல்லை என்று சொல்பவர்களிடம் நம்பிக்கையோடு திருவெண்காட்டு பதிகத்தை படிக்க சொல்வார்கள்.
  தேவார பதிகங்களை கயிறு சாத்தி பார்த்து எநத பதிகம் வருகிறதோ அதை பாடுவார்கள் வினை நீங்க என்பார்கள்.

  அற்புதமான பகிர்வுக்கு நன்றி.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   சிவப்பழமாகிய தங்களின் மாமனார் அவர்களைப் பற்றி நினைவு கூர்ந்தது அருமை. அந்த காலகட்டத்தில் தேவாரமும் திருவாசகமும் திவ்ய பிரபந்தமும் விருந்தாகவும் மருந்தாகவும் விளங்கின என்பது தெளிவு!..
   தங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..

   நீக்கு
 4. பகிர்வு மிகவும் அருமை ஐயா...
  உங்களது ஆன்மீகப் பகிர்வுகளைப் படிக்கும் போது அந்தக் கோவிலுக்குச் சென்று வந்த சந்தோஷம் கிடைக்கிறது ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்களின் சந்தோஷமே எனது சந்தோஷம்..
   தங்கள் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..

   நீக்கு
 5. சீர்காழி செல்ல வேண்டுமென்ற வெகுநாள் ஆசை லேசாக தணிந்தது போன்ற உணர்வு நண்பரே,,,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்களின் கருத்துரை கண்டு மனம் நெகிழ்கின்றது. நன்றி..

   நீக்கு
 6. வணக்கம் !
  எம்பெருமான் அருள் எல்லோருக்கும் கிட்டட்டும் !சிறப்பான பகிர்வு
  இவை மேலும் தொடர வாழ்த்துக்கள் ஐயா .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. திருவேதிகுடி அறிந்தேன் ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. வணக்கம் ஐயா!

  எப்பொழுதும் சொல்வதுதான் மிக அருமை!
  பயன் தரும் நல்ல விடயத்தைப் பதிவு செய்தீர்கள்!.
  மிக்க நன்றி ஐயா!..
  வாழ்த்துக்கள்!

  ஐயா! ஒரு உதவி வேண்டும் எனக்கும்..
  நானும் தேடிக் களைத்துவிட்டேன்!
  தொலைந்த பொருள் மீட்க ஒரு ஸ்லோகம்! பிரசித்தமான ஒரு கோயில் அன்னை பெயரில் வேண்டிப் பாடப்பட்டது அது!

  என் கணவர் சுகமாக இருந்தபோது கோபுர தரிசனம் மாத இதழில் வெளிவந்ததாக எனக்குக் காட்டி அதை எதிலோ எழுதிவைத்திருந்தேன்.
  இடையில் அதனால் பயனும் அடைந்திருந்தேன்!..

  ஆனால் அதன் பின் புயலில் அகப்பட்ட என் வாழ்வு நிலையில் அந்த ஸ்லோகம் - மந்திரத்தைத்தை எங்கோ தவறவிட்டுவிட்டேன். அதுவே இப்போது தொலைந்துவிட்டது ஐயா!

  உங்களுக்கு இதுபற்றித் தெரிந்தால் இங்கு தந்தால் பலருக்கும் பயன்கிட்டும்!
  கிடைத்தால் தாருங்கள். மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   உங்களுடன் நானும் தேடுகின்றேன்..
   தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி..

   நீக்கு
 9. சீர்காழி மட்டுமே சென்றிருக்கிறேன் - அதுவும் சிறுவனாக இருந்த போது. மற்ற இடங்களுக்கும் செல்ல அண்ணல் ஈசன் அருள் புரியட்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரவேண்டும்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. Thanks Sir, my queries are cleared. I searched about these 5 but not able to get answers. But it is you who cleared my doubts first.

  Once again, I thank you a lot Sir.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகை குறித்து மகிழ்ச்சி..
   தாங்கள் அறியும் படிக்கு பதிவிடச் செய்த திருவருளுக்கு நன்றி..
   வாழ்க நலம்..

   நீக்கு