நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 25, 2021

வருகின்றான் வேலன்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நேற்று நள்ளிரவுப் போதில்
அன்புக்குரிய
ஸ்ரீமதி கமலாஹரிஹரன் எழுதிய
கனவும் கந்தனும்
பதிவினைப் படித்தேன்...

அதன் விளைவே
இன்றைய பதிவு...


வருவான் வருவான் வடிவேலன் அவன்
வருவினை தீர்த்திடும் கதிர்வேலன்..
தருவான் தருவான் திருமுருகன் அருள்
திருவினைப் பொழிவான் மால்மருகன்...

வண்ணக் குஞ்சரி ஒருபுறமும் அந்த
வள்ளிக் குறமகள் மறுபுறமும்
கொஞ்சிக் குலவிட குமரகுரு
குளிராய் முகிலாய் வருகின்றான்..

 வடிவேலுடனே வருகின்றான் வளர்
நிலவென வாகி வருகின்றான்..

வருந்திடும் மனதின் வலி தீர்த்து
மருந்திட மன்னவன் வருகின்றான்.


வைத்திய நாதனின் தவச் செல்வன்
வாஞ்சை மிகும் சிவதிருக் குமரன்
தையல்நாயகித் தாய் அருளால்
வையகம் காத்திட வருகின்றான்..

கவலை எதற்கென்று வருகின்றான்..
கமல மனம் தேற்ற வருகின்றான்..
அவலம் தனை மாற்ற வருகின்றான்..
அபயக்கரம் நீட்டி வருகின்றான்..

சிவ சிவ ஹர ஹர சரவண சரணம்

ஹர ஹர சிவ சிவ சண்முக சரணம்

ஃஃஃ

புதன், ஏப்ரல் 21, 2021

ஸ்ரீ ராம.. ராம..

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஸ்ரீ ராம நவமி..


ஒரு சொல் ஒரு வில் ஒரு இல் -
என்றுரைப்பர் ஆன்றோர்..

இவையே நம்மை
மேல் நிலைக்கு இட்டுச் செல்வன.


ராம ஜயம் ஸ்ரீ ராம ஜயம்
ராமனின் கைகளில்
நான் அபயம்...


ராம் ராம்.. ராம் ராம்..
ராம் ராம்!..
***

வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன

ஃஃஃ

செவ்வாய், ஏப்ரல் 20, 2021

அன்புள்ள நெஞ்சம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்றைய பதிவில்
அழகான காணொளி ஒன்று..


காக்கை குருவி எங்கள் ஜாதி.. என்றார் மகாகவி..

சிற்றுயிர்களைப் புரத்தல்
மிகப் பெரிய தர்மம்..

கரவாது கரையும் காக்கை
தனக்கு உணவளிப்பவர் சொல்கேட்டு உண்ணும் அழகே அழகு..

அந்த எளிய ஜீவனுடன் பேசியபடி உணவளிக்கும்
அன்பு நெஞ்சத்திற்கு
வணக்கம்
***

இக்காணொளியைக் கண்டதும் மதிப்புக்குரிய ஸ்ரீமதி கோமதி அரசு அவர்கள் தான் எனது நினைவுக்கு வந்தார்கள்..

காக்கை கரவாது கரைந்து உண்ணும் ஆக்கமும் அன்னநீரார்க்கே உள..

வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன

ஃஃஃ

வெள்ளி, ஏப்ரல் 16, 2021

காக்க.. காக்க..

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

கொரோனாவின் தாக்கம்
மீண்டும் அதிகரித்து வரும் வேளையில்
இணையத்தில் படித்த
கட்டுரை 
சில திருத்தங்களுடன்
இன்றைய பதிவில்!..
***

கொரோனா வைரஸ் குறித்த செய்திகள்,  மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. பாதிப்பு,இழப்பு - எனும் செய்திகளால் பலரும் உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.. இதுவும் ஒருவிதமான பாதிப்பே என்பதைப் புரிந்து கொண்டு அனைவரும் திடமான மனதுடன் வாழ்வதற்குப் பழகிக் கொள்ள வேண்டும் ..

கொரோனா அச்சத்தில் இருந்து வெளியேறி, கொரோனா பரவல் காலத்தில் தேவையற்ற பயத்தில் இருந்து மனதை மீட்டுக் கொள்வதற்காக உளவியலாளர்கள்  அளித்துள்ள பரிந்துரைகள் சிலவற்றை இங்கே காணலாம்..

வைரஸ் பற்றிய செய்திகளிலிருந்து உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் அது குறித்தான செய்திகள் அனைத்தையும் பல நாட்களாக நாம் தெரிந்து வைத்துள்ளோம்.


இறப்பு எண்ணிக்கையைப் 
பார்க்க வேண்டாம். சமீபத்திய புள்ளி விவரங்களை அறிந்து கொள்வதற்கு இது கிரிக்கெட் போட்டி அல்ல. எனவே அதனை தவிர்க்கவும்.

கொரோனா வைரஸ் குறித்து இணையத்தில் கூடுதல் தகவல்களைத் தேடாதீர்கள். இது உங்கள் மன நிலையை பலவீனப்படுத்தும்..

அபாயகரமான செய்திகளை மற்றவர்களுக்கு அனுப்புவதைத் தவிர்க்கவும்..

ஏனெனில் உங்களை போன்ற மன வலிமை மற்றவர்களுக்கு இருக்காது. எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனக் கருதி இதுப்போன்ற அபாயகரமான செய்திகளைப் பிறருக்கு அனுப்புவதால், அவர்களுக்கு மனசோர்வு ஏற்படலாம்..

முடிந்தால், வீட்டில் இனிமையான இசையைக் கேளுங்கள். குழந்தைகளை மகிழ்விக்க, கதைகள் சொல்வது, அவர்களுடன்  சேர்ந்து விளையாடுவது, எதிர்கால திட்டங்களை பகிர்ந்து கொள்வது என உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.


வீட்டில் அனைவரும் அடிக்கடி கைகளை கழுவுவது வெளியே செல்லும் போது கையுறை, முக கவசம் அணிவது, வங்கி முதலான பொது இடங்களில் சமூக இடைவெளி காப்பது போன்ற பழக்கங்களைப் பேணுங்கள்..


உங்களது நேர்மறையான மனநிலை உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்க உதவுவது போல - எதிர்மறையான  எண்ணங்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தைச் சோர்வடையச் செய்கின்றன.. வைரஸ்களுக்கு ஆதரவாக பலவீனப்படுத்துகின்றன..

தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்..

முக்கியமாக, இதுவும் கடந்து போகும்.. நாம் பாதுகாப்பாக இருப்போம் - என்று உறுதியாக நம்புங்கள்..


காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க..
ஃஃஃ

புதன், ஏப்ரல் 14, 2021

வருக.. வருக..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
அன்பின் இனிய
சித்திரைப் புத்தாண்டு
நல்வாழ்த்துகள்..


அன்பும் அருளும் பெருகிட வருக
ஆனை முகத்து அரசே வருக..
நன்மைகள் எங்கும் நிகழ்ந்திட வருக
நானிலம் நன்றாய்த் தழைத்திட வருக..

வெயிலினை உகந்த வேந்தே வருக
வினையினைத் தகர்க்கும் வித்தக வருக ..
மயிலினில்  ஏறும் மன்னவன் மகிழும்
மங்கல மா முக கணபதி வருக..


ஆணவத் தேரின் அச்சினை இறுத்த
ஐங்கர கணபதி அறிவினைத் தருக..
உச்சி மலைத்திரு விளக்கென நாளும்
உள்ளொளி பெருகிட பெரியோய் வருக..

தேரடி கணபதி தினமும் வருக
திருக்குள கணபதி திருவருள் தருக...
யாரடி தேடியும் நடவா வண்ணம்
மணக்குள கணபதி மங்கலம் தருக..

தூண்டுகை நாயக துணையாய் வருக
வேண்டிய தெல்லாம் விரைவாய் தருக..
ஆண்டகை ஐங்கர மூர்த்தி வருக
மூண்டெழும் தீவினை தொலைத்திட வருக..


கோளறு கணபதி குவலயம் காக்க
நாளொரு நாளாய் நன்மைகள் தருக
ஆலொடு அரசின் கீழமர் அரசே
நாலொடு நாலாய் செல்வங்கள் தருக..

அற்புதத் தமிழின் அழகாய் வருக..
அற்றவர்கட்கு அருள அமுதாய் வருக
கற்பக மூர்த்தி கனிவாய் வருக..
பொற்பத சதங்கை பொலிவாய் வருக..


ஏழைக்கு இரங்கும் எளியாய் வருக..
எம்குலம் காக்க இனிதாய் வருக..
காளைக் குமரன் கருதிடும் வண்ணக்
கழலடி காப்பு கணபதி வருக!..
***
ஓம் கம் கணேசாய நம:
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

செவ்வாய், ஏப்ரல் 13, 2021

தாய் என் தாய்

             


***
தகவல் அறிந்ததும்
பதிவின் வழியாகவும்
தொலைபேசி வாயிலாகவும்
ஆறுதல் மொழிந்த
நல்லோர்
அனைவருக்கும்
நெஞ்சார்ந்த நன்றி..

அன்பு நிறைந்த
அனைவரது வாஞ்சையிலும்
கட்டுண்டிருக்கின்றேன்..

நானும்
எனது குடும்பத்தினரும்
மீண்டும்
நன்றி கூறிக் கொள்கின்றோம்..
***

புவியினில் வந்தாய்
பூவென வளர்ந்தாய்
துரையுடன் பொலிந்தாய் 
துணையாய் வாழ்ந்தாய்..

எமையும் ஈன்றாய் 
இன்னமுது ஈந்தாய்
தமிழையும் தந்தாய்
தகைமையும் புரிந்தாய்..

அன்பினில் நிறைந்தாய்
அறிவினைச் சுரந்தாய்
விருந்தாய் புரந்தாய்
கனிவாய் கனிந்தாய்..

வாழ்வினில் நிறைந்தாய்
வயதினில் நலிந்தாய்
புண்ணியம் பொலிந்தாய்
புகழுடம்பு அடைந்தாய்..

உன்னையும் மறந்தாய்
உலகையும் துறந்தாய்
காற்றினில் கலந்தாய்
கனலினில் தணிந்தாய்..

நீரினில் கரைந்தாய்
இறையுடன் கலந்தாய்
நெஞ்சினில் உறைந்தாய்
நினைவினில் நிறைந்தாய்..
***

நீங்கா நினைவுகளுடன்
உனது மலரடிகள்
போற்றுகின்றேன்
அம்மா!..
***
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

வெள்ளி, ஏப்ரல் 09, 2021

தாயின் திருவடி

           

இன்று
விடியும் பொழுதிற்குச்
சற்று முன்பாக
(2:30 மணியளவில்)
எனது தாயார்
ஸ்ரீமதி லீலாவதி துரைராஜன் அவர்கள்
சிவபதம் எய்தினார்கள்..


எண்பத்தைந்து வயதினைக் 
கடந்த அளவில்
ஒன்றரை மாதத்துக்கு முன்
கடும் உடல் உபாதைக்கு
ஆளானார்கள்..

அப்போது காத்தளித்த இறைவன்
இப்போது தன் நிழலில் சேர்த்துக்
கொண்டான்..

உடல் மிகவும் தளர்ந்திருந்த போதிலும்
மேலதிகத் துன்பம் எதுவுமின்றி
தூக்கத்தில் பிரிந்திருக்கின்றது
உயிர்..


தேர்தல் நாளன்று
இளைய மகன் உடன் வர
உற்சாகத்துடன் வாக்களித்துத்
திரும்பியிருக்கின்றார்கள்..

அம்மாவை நல்லபடியாகக்
கவனித்துக் கொள்ளும் பேறு
எனது இளைய சகோதரனாகிய
மனோகரனுக்குக்
கிட்டியிருக்கின்றது..


மூன்று வாரங்களுக்கு முன்
இளைய மகனின் மகள்
(இளைய பேத்தி) சடங்காகிய
மகிழ்ச்சி அம்மாவுக்கு..

அம்மா உடல் நலக் குறைவுடன் இருந்தபோது காணொளியில்
பேசினேன்..

தவிரவும்
என்னுடன் பேசும் பொழுதெல்லாம்
கண் கலங்குவார்கள்..

விதியின் கைப் பாவையாகி விட்ட
என்னால் தாயின்
கண்ணீரைத் தாங்கிக்
கொள்ள முடிவதில்லை..

மறுபடியும் பேசியிருக்கலாம்
என்று பேதை மனம் இப்போது மருகுகின்றது..

சீக்கிரம் வந்து விடு செல்லையா..
என்று கலங்கினார்கள்...

அபுதாபியில் இருக்கும்
எனது மருமகன், மகள்
குழந்தைகளைக்
காண்பதற்குப்
பிரியப்பட்டார்கள்..

என்ன செய்வது?..
நினைப்பதெல்லாம்
நடந்து விடுவதில்லையே..

ஆயினும்
என் தாயின் திருவடி
என்றும் என் நெஞ்சில்
நிலைத்திருக்கும்..


ஐயிரண்டு திங்களாய் அங்கம் எல்லாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக்
கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி..
-: பட்டினத்தடிகள் :-

இறைவன் திருவடிகளில்
என் அன்னையின் ஆன்மா
இனிதிருக்கட்டும்..

ஆனாலும்
மீண்டும் நான் பிறக்கும் போது
என் அன்னையே என்னை
மடி தாங்குவாள்..

இவ்வரத்தை 
நல்க வேணும்
இறைவா..
எம்பெருமானே!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

செவ்வாய், ஏப்ரல் 06, 2021

நாடு வாழ்க..

 மச்சான்!...

என்னாடி என் தங்கம்?...

ஊரெல்லாம் ஒரே களேபரமா கெடக்கு... நீ எந்தக் கட்சிக்குப் போடப் போறே?..

நீ எந்தக் கட்சிக்குப் போடப் போறியாம்?...

ம்ம்.. அதெல்லாம் ரகசியம்!...


அப்ப.. இங்க மட்டும் என்ன வாழுதாம்!..

அது கிடக்கட்டும்.. கெரகம்.. இதென்ன ஓயாம பல்லு குத்திக்கிட்டு?..

இல்லே.. பிரியாணி தின்னது.. இடுக்குல சிக்கியிருக்கு.. அதான்!..

அதுக்காவ... கண்டதையும் எடுத்து பல்லைக் குத்துனா... சீக்கிரமே சின்ன இடுக்கு பெரிய இடுக்காவும்.. ஈறு கேடாவும்.. பல்லு தன்னால கழன்டு விழும்.. அப்புறம் பொக்கை வாய் தான்....

ஏ!... என்னா.. நீ ஒரேயடியா அளக்குற!..

நா.. ஒன்னும் அளக்கலை.. நெசத்தைத் தான் சொன்னேன்!.. இப்பவே பேசுறது புரிய மாட்டேங்குது!.. இன்னும் பொக்கை வாய் ஆகிப் போனா வெளங்கிடும்!... 

வாய் நெறைய தண்ணி எடுத்து நல்லா கொப்புளிச்சு - த்தூ!..ன்னு துப்புவியா?... அதை உட்டுட்டு.. குச்சிய எடுத்து குத்திக்கிட்டு இருக்குற!..

என்ன செய்யிறது.. உன்னைய உங்கப்பாரு படிக்க வெச்சுட்டாரு.. நீயும் நல்ல வெவரமா பேசுற!..

எதுக்கெடுத்தாலும் அப்பாரு.. அப்பாரு..ன்னு சொல்லிக்கிட்டு இருக்கே.. ஏன் நீயும் படிக்க வேண்டியது தானே!.. பள்ளிக் கூடம் போ.. ன்னு அனுப்பி வெச்சா... நீ.. சினிமா கொட்டாயில போயி நின்னே!...

அதனால என்னா.... உன்னைய கண்ணு கலங்காம வெச்சிக்கிறேனா.. இல்லையா?..

அதுக்கு ஒன்னும் கொறச்சலில்லே!.. நேத்து ஆட்டுத் தலை சின்னத்தப் பார்த்து போடுங்கம்மா.. ஓட்டுன்னு வேகாத வெயில்ல நாயி மாதிரி கத்திக்கிட்டுப் போனே?..

ஏய்!.. என்னாது?..
என்னைய நாயி ..ங்கிறே!..

ஏன்னா.. நாய்க்குத் தான் ஒரு லச்சியமும் கெடையாது... ரெண்டு நாளைக்கு முன்னால வௌவால் சின்னத்துக்கு ஓட்டு கேட்டுக்கிட்டு ஊரைச் சுத்துனே!.. நேத்து ஆட்டுக் குட்டி சின்னம்..  நாளைக்கு பச்சோந்தியா?..  விலாங்கு மீனா?..

தேர்தல்...ன்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம்..டி தங்கம்!..

ம்க்கும்!.. தங்கம்.. பித்தாளை..ன்னு கிட்டு!... ஏழை பாழை....ங்களுக்கு யாரால என்னா புண்ணியம்?.. அததுங்க தன்னால இருக்கிறதுக்கும் உழைக்கிறதுக்கும் எவ்வளோ கஷ்டப்படுதுங்க... 

இவனுங்க என்னான்னா கோடீஸ்வரனுங்க.. குளுகுளுப்பா கார்ல வந்து எறங்கி எங் கால்...ல விழுந்து ஓட்டு கேக்குறானுங்க...

அதானே தேர்தல்!...

ஆமா.. அதான் தேர்தல்!... அந்த ஆளுங்க ஜெயிச்சாலும் தோத்தாலும் மறுபடி இங்கே வந்து நிப்பானுவளா?.. 

ஏதாச்சும் ஒன்னு...ன்னா.. நாம தான் தேடிப் போயி கால்... ல விழணும்!... ஐயா... பாலத்தைக் கட்டிக் கொடுங்க... ஐயா.. கரண்டு கம்பி இழுத்துக் கொடுங்க.. அப்படின்னு!...

நீ.. நல்லாவுல பேசுற!.. உன்னைய கொண்டு போயி மேடையில ஏத்தியிருக்கலாம்!...

ஏன்?.. நாம நல்லா இருக்கிறது புடிக்கலையா.. உனக்கு!... 

இவங்கள்ளாம்.. நாம நல்லா இருக்கோணும்.. ங்க்கறதுக்காகவா ஓட்டு கேக்குறாங்க.. அவங்க .. எடுப்பு தொடுப்பு, புள்ள குட்டி, மாமன் மச்சான், பேரன் பேத்தி - இதுங்க எல்லாம் நல்லா இருக்கறதுக்காகத்தான் ஓட்டு கேட்டு அலையிறாங்க!...

..... ..... ..... ..... .....?..

காவேரி ஆறு கஞ்சியா ஓடுனாலும் நாய் பாடு நக்கித் தான் தீரும்!.. கோழி பாடு கொத்தித் தான் தீரும்!. அந்த மாதிரி - யாரு மந்திரியானாலும் தந்திரியானாலும் நம்ம பாடு உழைச்சாத்தான் தீரும்.. ஒவ்வொரு  பருக்கைக்கும் வேர்வை சிந்தியே ஆவணும்!..

நம்ம கஷ்டம் எல்லாம் தீர்க்கத் தானே... என்னென்னவோ சாமான் எல்லாம் சும்மாவே தர்றாங்களாம்!..

அட.. அறிவு கெட்ட மச்சான்.. ஒனக்கு மூளையே இல்லையா!...

ஏன் டி.. தங்கம்.. இப்படி கேக்கிற?..

யாரு வூட்டுக் காசை எடுத்து யாருக்கு கொடுக்கிறது?.. வேல வெட்டிக்குப் போகாம மூனு வேளையும் ஓசியில கிடைச்சதத் தின்னுபுட்டு சும்மாவே கிடந்தா என்னத்துக்கு ஆவும் இந்த ஒடம்பு!..

அதான் வைத்தியச் செலவுக்கும் பணம் தர்றாங்களே!..

ஆமா... அப்படியே.. மயானச் செலவுக்கும் கொடுத்திடலாம்!.. ஊரை அடிச்சி உலையில போட்ட மாதிரி - நம்ம நாட்டுப் பணத்தைக் கொள்ளை அடிச்சி தேசம் விட்டு தேசத்தில மூட்டையா கட்டிப் போட்டுருக்கானுங்களாம்!..

..... ..... ..... ..... .....?..

நாடு இன்னும் யார் யாரு கையில எல்லாம்  போய்ச் சேருமோ!.. பயமா இருக்கு மச்சான்!..

அதெல்லாம்.. விடு.. ராசாத்தி... யாரு வந்தாலும் முன்ன மாதிரி இல்லே.. இப்போ எல்லாம் ஜனங்க ரொம்ப வெவரமா ஆகிட்டாங்களாம்.. ஏன்.. எதுக்கு.. ன்னு கேக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்.... அப்படி... இப்படி..ன்னு சொல்லிக்கிட்டு யாரும் ஏமாத்த முடியாது..ன்னு... கல்லு வீட்டு சுந்தரி அக்கா சொன்னாங்க!..

நல்லாத் தான் சொல்லியிருக்காங்க!... ஆனாலும், நரி ஒரு நாளும் ஆட்டுக் குட்டிக்காக வருத்தப்படாது!...

சரி.. சரி.. வெயிலு எறங்கிடுச்சி.. வா.. கடலைக் கொல்லைக்குப் போவோம்.. சூல் இறங்கிற நேரம் தினசரி சுத்தி வரலே...ன்னா.. நாய் நரி பூந்து அழிச்சிடும்!.. பட்ட பாடு வீணா போய்டும்!... கடலைக் காடு தான் நம்ம சொத்து... அப்பன் பாட்டன் தேடி வெச்சது... அதைக் காப்பாத்த வேணும்...

அந்த மாதிரிதான் இந்த நாட்டையும் பார்க்க வேணும்.. கண்ட நரியும் உள்ளே நுழைஞ்சிடாம காப்பாத்த வேணும்!..


தங்கம்.. ஓட்டு போடறதுக்கு காலைலயே போயிடனும்... போன தடவை மாதிரி முதல் ஓட்டு நம்மளோடதா இருக்கணும்!...

அது சரிதான்.. கோழி கூப்புட எழுந்தா சரியா இருக்கும்!.. நீ பாட்டுக்கு எங்கேயும் போயி ஊரு வம்பை வாங்கிக்கிட்டு வந்திடாதே.. சொல்லிட்டேன்..

நீ சொன்ன வார்த்தையை.. நான் மீறவே மாட்டேன் தங்கம்!..

அங்கே தேவகோட்டை அண்ணாச்சி - ஓட்டைப் பிரிக்கிறான்.. ஓட்டைப் பிரிக்கிறான்.. ன்னு நடுராத்திரியில கனா கண்டுட்டு சத்தம் போட்டு பெரிய கலாட்டா ஆயிடிச்சாம்!..

அவுங்க சொன்னா... சரியாத்தான் இருக்கும்.. அப்படியே தடிக் கம்பை எடுத்து தலைல போட வேண்டியது தானே!..

அப்படி போட்டதுலதான்.. நாலு பேரு ஆஸ்பத்திரியில கெடக்காங்க ளாம்!...

நான் சொல்லலை!... அங்க பாரு ஒரு நரிய.. வேலியப் பிரிச்சிக்கிட்டு.. எட்றா கல்லை... ஓஹோய்!..

ஒரு நரியல்ல!.. 
ஒன்றன் பின் ஒன்றாகப் பல நரிகள்!..

கடலைக் காட்டின் வேலி இடுக்கிலிருந்து 
பிய்த்துக் கொண்டு தலை தெறிக்க ஓடி மறைந்தன..
***

சென்ற தேர்தலின்போது
எழுதப்பட்ட பதிவு இது..
மீண்டும்
புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது..
* * *

தேர்தல் நாளாகிய இன்று
தவறாமல் வாக்களித்து
ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவோம்..
***

நாடு வாழ்க
நலம் வாழ்க!..
***

ஞாயிறு, ஏப்ரல் 04, 2021

கோடி உற்சவம்

              

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

கடந்த
செவ்வாய்க்கிழமை முதல்
தஞ்சையில்
நடைபெற்று வந்த
ஸ்ரீ கோடியம்மன்
காளியாட்ட உற்சவம்
நேற்று முன் தினம்
நிறைவு பெற்றதன்
காணொளிக் காட்சிகள்..
Fb ல் வழங்கிய நண்பர்
திரு.குணசேகரன் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
***தஞ்சை மேல ராஜவீதி
ஸ்ரீ கொங்கணேஸ்வரர்
திருக்கோயிலில்
காளி பிரவேச தரிசனம்..கும்பிட்டார் குறையிரந்தார்
கோடியம்மன் சந்நதியில்
கோடியம்மன் எழுந்து வந்தாள்
குறை தீர்க்க வீதியினில்

நம்பி நின்றார் வாசலிலே
நாயகியும் தேடி வந்தாள்
நானிருக்க பயம் எதற்கு
என்றவளும் ஆடி வந்தாள்..

தேடி வரும் கோடியம்மா
போற்றி உந்தன் பாதம் அம்மா..
ஏற்றி வைக்கும் திரு விளக்கில்
முகம் காட்டும் கோடியம்மா..

பச்சை என்றும் பவழம் என்றும்
ஆடி வரும் கோடியம்மா..
ஊர் முழுதும் காத்துப் பகை
தீர்க்க வேணும் கோடியம்மா..

தீப மணித் திருவிளக்கே
கோடியம்மா கோடியம்மா..
தெய்வ மகள் பேர் வாழ்க
போற்றி போற்றி போற்றியம்மா!..

ஓம்
சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ