நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 28, 2013

புன்னைநல்லூர்


தமிழகத்தில் மாரியம்மன் குடிகொண்டுள்ள சிறப்பான தலங்களுள் தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலும் ஒன்று..


தஞ்சையின் கிழக்கே ஐந்து கி.மீ தொலைவில் பசுமையான வயல்களுக்கு மத்தியில்  அமைந்துள்ளது  புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில்.  



இன்றும் காணக்கூடிய அதிசயமாக - ஒவ்வொரு வருடமும் கோடை நாட்களில் அம்பாளுக்கு முகத்தில்,  முத்து முத்தாக  வியர்த்து தானாக உலர்கின்றது.  இதனாலேயே  அன்னை முத்துமாரி எனப்பட்டாள்.

கோபுரத்தடியில் விநாயகர், முருகன், நாகர் சந்நிதிகள். தென்புறத்தில் ஸ்ரீகாளியம்மன் மற்றும்  பூர்ண புஷ்கலைதேவியருடன் ஸ்ரீ ஐயனார் வீற்றிருக்கின்றார்.

 

ஆடி மாதம் - முத்துப் பல்லக்கு ஆவணி மாதம் - கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெறும். புரட்டாசி மாதம் - தெப்ப உற்சவம் மற்றும் நவராத்திரி திருவிழா.. 

தவிர ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் இத்திருக்கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பல ஊர்களிலிருந்தும் வந்து அம்பாளை தரிசித்து பேரானந்தம் அடைகின்றனர். 

வருடத்தின் சிறப்பு நாட்களான - தமிழ் புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல் தினங்களின் போதும் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கும்.

புகழ் பெற்ற பிரார்த்தனை தலமான இக்கோயிலுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் கூட்டம் குவிவது வழக்கம்.

அம்மை நோய் கண்டவர்கள் பெருமளவில் பிரார்த்தனை செய்து குணமடையப் பெறுவது இத்தலத்தின் சிறப்பு.

இத்தலத்தில் தங்கி வழிப்பட்ட சில தினங்களில் அம்மை இறங்கி குணமாகி விடுவது கண்கூடு.

அம்மை நோய் கண்டவர்கள் அம்மை இறங்கியவுடன் அம்மனுக்கு மாவிளக்கு  போடுகிறார்கள். குறிப்பாக கண் நோயால் பாதிக்கப்பட்டு குணமானவர்கள் கண்ணில் மாவிளக்கு போடுகின்றனர். 

வயிறு பாதிக்கப்பட்டு குணமானவர்கள் வயிற்றில் மாவிளக்கு இடுகின்றனர். 

உடம்பில் கட்டிகள் இருந்து குணமானவர்கள் வெல்லக்குளத்தில் வெல்லம் வாங்கிப் போடுகின்றார்கள்.

பொதுவாக உப்பு வாங்கிப் போடுதல் நேர்த்திக் கடனாகின்றது. 

ஆடு, மாடு, கோழி காணிக்கை தருகின்றனர். 

பெண்கள் திருமாங்கல்யம் சாத்துதல், முடிக்காணிக்கை, பால்குடம் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல் போன்றவையும் இத்தலத்தில் முக்கிய நேர்த்திகடன்கள் 

தவிர - அம்மனுக்கு எலுமிச்சம் பழங்களால் நிலைமாலை சாத்துதல் சிறப்பு வழிபாடு. 

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உஷ்ணத்தால் நோய்கள் ஏற்படும் சமயத்தில் அம்மனுக்கு பிரார்த்தனை செய்து கொண்டு உள்தொட்டி,  வெளித் தொட்டிகளில் நீர் நிரப்பினால் விரைவில் எவ்வித சிரமமும் இன்றி குணமடைதல் இன்றுவரை கண்கூடாக நிகழ்கின்றது.

தஞ்சை புன்னைநல்லூர் மாரிம்மன் கோயில் பிராம்மணாள் கைங்கர்ய டிரஸ்ட் சார்பில் வருடந்தோறும் வெகு சிறப்பாக நேற்று பால்குடத் திருவிழா நடைபெறும். 

முதல் நாள் நிகழ்ச்சியாக தஞ்சை மேல ராஜவீதி சங்கரமடத்தில் அம்பாள் கடஸ்தாபனமும், அம்பாளுக்கு சிறப்பு ஆராதனையும் நடைபெறும். 

இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை. 

மூன்றாம் நாள் காலையில் சண்டிஹோமம். மதியம்12 மணிக்கு பூர்ணாஹூதி மற்றும் கஞ்சி வார்த்தல்.

மாலையில் அம்பாளுக்கு சிறப்பு அலங்கார, ஆராதனை நடைபெறும்.

இதைத் தொடர்ந்து நான்காம் நாள் காலை 7.30 மணியளவில் ஏறத்தாழ 1,500 பேர் பால்குடங்கள் எடுத்து கொண்டு தஞ்சை சிவகங்கை பூங்காவிலிருந்து ஊர்வலமாக புறப்படுவர். 

மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி, கீழ ராஜவீதி, கீழவாசல் வழியாக பிற்பகலில் மாரியம்மன் கோயில் சென்றடைந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்வர்.. 

திருக்கோயில் வளாகத்தில் மாலை 6 மணிக்கு அம்மன் புறப்பாடு நிகழும்.

இந்த ஆண்டு பால்குட வைபவம் கடந்த 2/4/2013 அன்று நடந்தது.

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தலங்களுள் ஒன்றாக தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் விளங்குகிறது.

அம்பாளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் திருவிழா நடைபெறும். 


ஆடி மாதம் முத்து பல்லக்கு , ஆவணி மாதம் வருடாந்திர திருவிழாவும், கடைசி ஞாயிற்றுக்கிழமையும் தேரோட்டமும் , புரட்டாசி மாத தெப்ப உற்சவம் விடையாற்றி மற்றும் நவராத்திரி திருவிழாவும் சிறப்பாக நடைபெறும்.

ஆகம விதிப்படி பூஜைகள்  நிகழும் இத்திருக்கோயில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 திருக்கோயில்களுள் ஒன்றாகும்.

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தலங்களுள் ஒன்றாக விளங்கும் தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் திருக்கோயிலுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிவது வழக்கம்.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து - திருக்கோயிலுக்கு அடிக்கடி பேருந்துகள் இயங்குகின்றன. 

கண் திறந்து பார்க்கும் அருள் தெய்வம் நீயம்மா!..
இந்த மண்ணில் உன்னை மறவாத வரம் வேண்டும் அம்மா!..
* * *

வெள்ளி, ஏப்ரல் 26, 2013

சப்தஸ்தானம்

தஞ்சை நகரை அடுத்துள்ள (11கி.மீ.) திருவையாறு அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் சித்திரைப் பெருவிழா 16/4 அன்று,  கொடியேற்றத்துடன் சிறப்பாகத் தொடங்கியது. 


தொடர்ந்து - பல்வேறு வாகனங்களில் ஐயனும் அம்பிகையும் வீதியுலா எழுந்தருள,  24/4 அன்று  திருத்தேரோட்டமும் இனிதே  நிகழ்ந்தது.  

பக்தர்களுக்கு வர்த்தகப் பெருமக்கள் மற்றும் ஏனைய சிவநெறிச் செல்வர்கள் சார்பில் நீர்மோர் அன்னதானம் வழங்கப்பட்டு திருத்தேர் நிலையடி வந்து சேர்ந்தவுடன் காவிரியாற்றில் வாணவேடிக்கையும் சிறப்பாக நடந்துள்ளது. இத்திருவிழாவின் சிகரமாக - வரும் 27/4 - அன்று சப்தஸ்தான பெருவிழா. 

ஆதியில் சிவசக்தியரின் சுவீகார புத்திரனாகிய நந்தியம் பெருமானுக்கும் - வியாக்ரபாதரின் அன்பு மகள் சுயம்பிரகாசை தேவிக்கும், திருமழபாடியில் பங்குனி மாத புனர்பூசத்தன்று மங்கலகரமாக திருமணம் நிகழ்ந்த வேளையில் - திருப்பழனத்திலிருந்து பல்வகையான பழவகைகள் அனுப்பி சிறப்பித்தனர். 

திருச்சோற்றுத்துறையினர் திருமணவிருந்து உபசரிப்பு முழுவதையும்ஏற்றுக் கொண்டனர். திருவேதிக்குடியின் வேதவித்துக்கள் கல்யாண மங்கலங்களை நிர்வகித்துக் கொண்டனர். 

மாலை நேர சித்ரான்ன உபசரிப்புகள் திருக்கண்டியூரின் வசம் வந்தது. மங்கல வைபவங்களுக்கான பூக்கள் திருப்பூந்துருத்தியில் இருந்து வந்து குவிந்தன. திருநெய்த்தானத்திலிருந்து வந்த நெய் எட்டுத் திக்கும் நறுமணம் வீசியது. 

மங்கல வைபவம் நிகழ்ந்ததும் வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் மாப்பிள்ளையாகிய நந்தியம்பெருமானை விழுந்து வணங்கிய அதிசயம்- இங்குதான் நிகழ்ந்தது. மனம் நிறைந்திருந்த வேளையில் அருள்மிகு ஐயாறப்பரும் - அறம்வளர்த்த நாயகியும் விருந்தினர்களை வாழ்த்தியருளினர்.


அச்சமயம் - இந்த ஆறு ஊர் மக்களும் ஒருமித்தகுரலாக - மாப்பிள்ளையும் பெண்ணும் எங்கள் ஊருக்கு எழுந்தருள வேண்டும் - என வேண்டிக் கொண்டனர். அதன்படி,


சித்ரா பெளர்ணமியை அடுத்த விசாகத்தன்று அதிகாலை ஆறு மணியளவில் அருள்மிகு ஐயாறப்பர் - அன்னை தர்மசம்வர்த்தனி  கண்ணாடி பல்லக்கிலும், புதுமணத் தம்பதியரான நந்திகேஸ்வரர் - சுயசாம்பிகை வெட்டிவேர் பல்லக்கிலும் எழுந்தருள,  மாடவீதிகளில் வலம் வந்து புஷ்யமண்டபத்தில் பிரசாதித்த பின்,  காவிரியின் வடகரையில் கிழக்கே உள்ள திருப்பழனத்தை நோக்கி பல்லக்குகள் செல்கின்றன.

திருவையாற்றில் இருந்து புறப்பட்டு வரும் மாப்பிள்ளை ஊர்வலத்தினை -

திருப்பழனத்தில்,  பெரியநாயகி  - ஆபத்சகாயேஸ்வரரும்
திருச்சோற்றுத்துறையில்,  அன்னபூரணி  - ஓதவனேஸ்வரரும்
திருவேதிக்குடியில், மங்கையர்க்கரசி - வேதபுரீஸ்வரரும்
திருக்கண்டியூரில்,  மங்களாம்பிகை - பிரம்மசிரக்கண்டேசரும்
திருப்பூந்துருத்தியில்,  செளந்தர நாயகி - புஷ்பவனேஸ்வரரும்
திருநெய்த்தானத்தில்,  பாலாம்பிகை - நெய்யாடியப்பரும்

- எதிர்கொண்டு அழைக்கின்றனர். ஐயாறப்பர் பல்லக்குடனேயே தாமும் தனித் தனியே பல்லக்குகளில் எழுந்தருளி உடன் வருகின்றனர். அன்று இரவு திருநெய்த்தானத்தில் காவிரி ஆற்று மணலில் எல்லா பல்லக்குகளும் நிலை தாங்கப்பட்டு - வாணவேடிக்கையும் கலைநிகழ்ச்சிகளும்  நடைபெறுகின்றன. 

மறுநாள் காலையில் புறப்பட்டு,  ஆறு தலங்களின் பல்லக்குகளுடன் வரும்  ஐயாறப்பரையும் நந்தியம்பெருமானையும் சிறப்பாக வரவேற்கின்றனர்.  

ஏழூர் பல்லக்குகளுடன் திருவையாற்றின் வீதிகளில் மக்கள் வெள்ளத்தில் நந்திகேஸ்வரர் உலா வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.  


நிறைவாக தேரடியில் பொம்மை பூமாலை சூட்டுகின்றது. ஐயாறப்பருக்கு வேதமந்த்ரங்களுடன் தேவாரம் இசைத்து மங்கள ஆரத்தி செய்யும்போது ஐயாறப்பன் ஆனந்தமாக பண்டரங்கம் எனும் திருக்கூத்தினை நிகழ்த்தியபடி ஆலயப் பிரவேசமாகின்றார்.  

திருவிழா இனிதே நிறைவடைய சந்தோஷமாக எல்லா பல்லக்குகளும் அவரவர் நிலைக்குத் திரும்புகின்றன.

சுமார் 20 கி.மீ. தூரம் உடைய இந்த வழித்தடம் எங்கும், பல்லக்குகளுடன் வரும் தொண்டர்களுக்கும் தேவார திருவாசகங்களைப் பாடிப் பரவியபடி வரும் சிவனடியார்களுக்கும் பக்தர்களுக்கும் - நீர்மோர், பானகம், சித்ரான்னங்கள், மதிய உணவு - என வழங்கி மக்கள் அன்புடன் உபசரிப்பது  சிறப்பானதாகும்.

திருவையாற்றில் தொடங்கி ஆறுதலங்களையும் தரிசித்து மீண்டும் திருவையாற்றை அடைவதே சப்தஸ்தானம் எனப்படும் ஏழூர் வலம் வரும் திருவிழா ஆகும். 

இந்த ஏழு திருத்தலங்களும் தேவாரத் திருப்பதிகம் பெற்ற திருத்தலங்களாகும். இந்தப் பெருவிழா பலநூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறுகின்ற விழா ஆகும். இந்த விழாவினை அருணகிரிநாதர் தரிசித்து ஆறு தலங்களையும் திருவையாற்றுடன் இணைத்துத் திருப்புகழ் பாடிப் பரவியுள்ளார்.

ஏழூர் பல்லக்குகளும் திருவையாற்றில் திருவீதியுலா வந்து, தேரடியில் பொம்மை பூமாலை போடும் நிகழ்ச்சி 28/4- அன்று நடக்கிறது.

திருவிழா ஏற்பாடுகளை ஐயாறன் அருட்துணையுடன் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை குமாரசாமி தம்பிரான் ஸ்வாமிகள் தலைமையில், ஆலய நிர்வாகிகளும், அன்பர்களும், பொதுமக்களும் செய்து வருகின்றனர்.

அனைவரும் கலந்து கொண்டு திருவையாற்றுடன் ஆறு தலங்களையும் தரிசித்து வலம் வந்து வணங்கி, பெரும் பயன் பெற்றுய்யுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

முத்திசையும் புனற்பொன்னி மொய்பவளங் கொழித்துந்தப்
பத்தர்பலர் நீர்மூழ்கிப் பலகாலும் பணிந்தேத்த
எத்திசையும் வானவர்கள் எம்பெருமான்  எனஇறைஞ்சும்
அத்திசையாம்  ஐயாறார்க்கு ஆளாய் நானுய்ந்தேனே. 4/13.
                                                                                                                  - திருநாவுக்கரசர் 

ஐயாறன் அடித்தலமே போற்றி!... போற்றி!...

வியாழன், ஏப்ரல் 25, 2013

சித்ரா பெளர்ணமி

சித்ரா பௌர்ணமியன்று தான் இந்திரன் மதுரையம்பதியில் சொக்கநாதரை வழிபட்டுப் பேறுகள் பெற்றதாகக் கூறுவர். கள்ளழகர் திருவிழாவும் சித்ரா பௌர்ணமியன்று தான்.  விழுப்புரம் அருகில்  கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகள் கூடிக் கொண்டாடி மகிழ்வதும் சித்ரா பௌர்ணமியன்று தான். 

எட்டுக்குடியிலும் பட்டுக்கோட்டையை அடுத்த மஞ்சள்வயலிலும் முருகப் பெருமானுக்கு மிகச்சிறப்பாக  சித்திரை நிறைநிலா அன்று தான் - காவடித் திருவிழா  நிகழ்வதும்...

சித்ரா பௌர்ணமியன்று தஞ்சை பெரியகோயிலில்  - சித்தர் பெருவிழாவாக, நந்தியம்பெருமானுக்கும் கருவூராருக்கும் அபிஷேக ஆராதனையும் ஜோதி வழிபாடும் அன்னதானமும் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. 

தஞ்சை கீழவாசல் உஜ்ஜைனி மாகாளியம்மன் திருக்கோயிலில் திருவிளக்கு பூஜையும், மாவிளக்கு வழிபாடும், பால்குடங்களுடன் ஸ்ரீகாளி புறப்பாடும், அம்பாள் வீதியுலாவும் பாரம்பர்ய சிறப்புடன் நடைபெறுகின்றன.

தஞ்சை உஜ்ஜைனி மாகாளியம்மன்
தஞ்சை உஜ்ஜைனி மாகாளியம்மன்
மாதந்தோறும் பெளர்ணமி வந்தாலும், சித்திரையில் வரும் பெளர்ணமிக்கு என்று ஒரு தனி சிறப்பு உள்ளது. 

சித்ரா பௌர்ணமி அன்று திருஅண்ணாமலையை வலஞ்செய்து வணங்குவது விசேஷம். காரணம்,  ஈசனை வணங்கி வழிபடுவதற்கு வரும் தேவர்களின் அருளும் சித்தர்களின் ஆசியும் அன்றைய தினத்தில் அபரிமிதமாக கிடைக்கும் என்பது ஐதீகம்.

சித்ரா பெளர்ணமியை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.

‌சி‌த்ரா பெளர்ண‌மி அ‌ன்று காலை‌யி‌ல் கு‌ளி‌‌த்து முடி‌த்து - ‌குலதெய்வத்தை, இஷ்ட தெய்வத்தை, வீட்டு தெய்வத்தை எ‌ண்‌ணி வணங்க வே‌ண்டு‌ம். ச‌ர்‌க்கரை‌ப் பொ‌ங்க‌ல் நிவேதனம் செய்வது சிறப்பு.

மாலையில் சந்திர தரினம் கண்டு, அருகில் உள்ள திருக்கோயிலில் தெய்வ தரிசனம் செய்யவேண்டும்.
 
சி‌த்ரா பெளர்ண‌மி இரவில் அ‌ன்று ஆ‌ற்ற‌ங்கரை‌யி‌ல் இறைவனை எழுந்தருளச் செய்து வல‌ம் வந்து வணங்கி - குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுடன் நிலாச்சோறு உண்பதும் தொன்றுதொட்டு நிகழும் மரபு. 

‌சி‌த்‌திரை மாத‌த்‌தி‌ல் தாராளமாக‌க் ‌கிடை‌க்கு‌ம் மா, பலா, வாழை ஆகிய கனி வகைகளை இறைவனு‌க்கு படை‌த்து வணங்கி மகிழ்வார்க‌ள்.

அதிலும் - உற்றார், உறவினர், நண்பர்களுடன் உண்டு
மகிழ்வது என்பது அனைவருக்கும் பிடித்தமான விஷயம்தானே!...


திருக்கயிலை மாமலையில் பார்வதி ஒருசமயம் தோழியருடன் இருந்த போது - பொற்பலகையில் சித்திரம் ஒன்றை வரைந்தாள். மிகவும் அழகாக இருந்த சித்திரம் உயிர் பெற்றால் எப்படியிருக்கும் என்ற ஆவல் ஏற்பட்டது எல்லோருக்கும். 

அதன்படி - உமையாள்,  தான் வரைந்த சித்திரத்திற்கு உயிர் ஊட்டினாள்.

அந்த சித்திரத்தில் இருந்து வெளிப்பட்டவனுக்கு அகமகிழ்வுடன், சித்ரகுப்தன் எனத் திருப்பெயர் சூட்டினாள். அதன்பின் உலகைக் காக்கும் பரம்பொருளான சிவபெருமானிடம் சித்ரகுப்தனை அழைத்துச் சென்ற அன்னை - நடந்தவற்றை விளக்கினாள். சித்ரகுப்தனுக்கு ஏதாவது ஒரு பொறுப்பைக் கொடுத்து வாழ்த்தியருள வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டாள். 

இப்படி - சித்ரகுப்தன் தோன்றிய நாள் - சித்ரா பெளர்ணமி.

அதேசமயம் - தனியொரு நபராக கோடானுகோடி  மக்களின் பாவ, புண்ணிய கணக்குகளை பராமரித்து மேற்கொள்ளும் பணி கடினமாக இருக்கின்றது  தனக்கு உதவியாக ஒருவர் வேண்டும் என்று இந்திரனிடம் யமதர்மராஜன் முறையிட்டான்.  இருவரும் இறைவனை நாடி வந்தனர்.

ஈசனும் அவர்களின் கோரிக்கையை ஏற்று - சித்ரகுப்தனை - காமதேனுவின் வயிற்றில் பிறக்கச் செய்தருளினார். காமதேனுவின் வயிற்றில் பிறந்த சித்ர குப்தனை இந்திராணி வளர்த்து ஆளாக்கினாள். 

இளமையில் சித்ரகுப்தர் காஞ்சியில்  - சிவபெருமானைக் குறித்து கடுந்தவம் புரிந்தார். இறைவனும் - ஏடும் எழுத்தாணியும் வழங்கி, சித்ரகுப்தனை யமனின் உதவியாளனாக நியமித்து உயிர்களின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதிப் பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.

தக்க பருவம் அடைந்த சித்ரகுப்தனுக்கு மயனின் மகள்களான - நீலாவதி, கர்ணவதி ஆகிய இருவரையும் மணமுடித்து வைத்து -  சித்ரகுப்தனின் பொறுப்புகளை விளக்கி எமதர்மனுக்கு உதவி புரிய அனுப்பி வைத்தார்.

தன் மனைவியருடன் யமபுரிக்கு புறப்பட்ட சித்ரகுப்தர் அங்கே அமர்ந்து நம்முடைய பாவ, புண்ணிய கணக்குகளை எந்த தவறும் வராதபடி இன்றும் இப்பொழுதும் கணக்கெடுத்து எழுதிக் கொண்டிருக்கிறார்.

இதன் அடிப்படையிலேயே -  சொர்க்கமா நரகமா என்பது தீர்மானிக்கப்படும்.

சித்ரா பௌர்ணமி அன்று சில ஊர்களில் ஆங்காங்கே பந்தல் அமைத்து இரவு நேரத்தில் பெரியோர்கள் சித்ரகுப்த நாயனார் கதையினைப் படிப்பார்கள். மக்கள்  கூட்டமாக அமர்ந்து விடிய விடிய சித்ரகுப்தர் கதையைக் கேட்பார்கள்.  கதை சொல்லும் நிகழ்வினை ஏற்பாடு செய்தவர்கள், வந்தவர்களுக்கு - சர்க்கரைப் பொங்கல், கொழுக்கட்டை, பணியாரம் - என வழங்குவர்.

இவ்வாறு கதை சொல்வதும் கேட்பதும் - மக்கள் கீழான எண்ணங்களில் இருந்து நீங்கி பாவம் செய்யும் எண்ணத்தை விட்டு, புண்ணியச் செயல்களில்  ஈடுபட்டு மேல்நிலையினை அடையவேண்டும் என்பதற்காகவே!... 

சித்ரா பெளர்ணமியன்று சித்ரகுப்தனை நினைத்து - பசும்பால், தயிர், நெய் இவற்றை விலக்கி - விரதம் இருந்து வழிபட்டால் நல்லது. 

காலையில் விரதத்தை ஆரம்பித்து சித்ரகுப்தன் நினைவிலேயே இருக்க வேண்டும். மாலையில்  நிலவு உதயமானதும் சித்ர குப்தனுக்குப் பூஜை செய்ய வேண்டும்.  மாக்கோலம் இட்டு ஏடு எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து சர்க்கரைப் பொங்கலிட்டு பயற்றம்பருப்பும், எருமைப் பாலும் கலந்த பாயசத்தை நிவேத்தியம் செய்ய வேண்டும்.   

ஏழைகளுக்கு முடிந்த அளவிற்கு தானம் செய்ய வேண்டும். அதுவும்  படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அவர்களின் படிப்புக்கு உதவியாக - குறைந்த பட்சம் எழுது பொருட்களையாவது வழங்கலாம்.

சித்ரா பௌர்ணமி அன்று அன்னதானம் செய்வது மிகவும் சிறப்பு. 

உப்பு சேர்க்காமல் உணவு உண்டு விரதமிருந்தால் சித்ரகுப்தன் மகிழ்ந்து நம் பாவ புண்ணிய கணக்கை எழுதும்போது புண்ணியத்தை அதிகப்படுத்தியும் பாவத்தைக் குறைத்தும் எழுதுவார். இதனால் மரணத்திற்குப் பின் நாம் நரக வேதனையிலிருந்து விலகி  சொர்க்கத்தில் வாழலாம் - என்று சிலர் சொல்வதுண்டு. சில ஆன்மீக இதழ்கள் கூட இவ்வாறு குறிப்பிடுகின்றன.

நாம் தானமும் தவமும் செய்வது, நம் பாவவினைகள் குறைத்து எழுதப் படவேண்டும் என்பதற்காகவா!... அவ்வாறு சித்ரகுப்தன் எழுதினால்,  

நம்பிக்கையுடன் பொறுப்பை ஒப்படைத்த ஈசனுக்குத் துரோகம் செய்தது போல் ஆகாதா?... அம்பிகையால் உருவாக்கப்பட்ட பெருமையை உடைய சித்ரகுப்தன் நம்பிக்கைத் துரோகம் செய்வாரா?...

உண்மையான இறையன்பர்கள் ஒரு கணம் - சிந்திக்க வேண்டும்!...

நாம் செய்யும்  தானமும் தவமும்,  நம்முடைய சிந்தையும் செயலும் மேன்மை அடைவதற்குத் தானே அல்லாமல் -  பாவப்பதிவுகளை மாற்றி எழுதுவதற்காக அல்ல - என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்!..

சிந்தையும் செயலும் சீராகவே - சித்ரகுப்த வழிபாடு!...


திருஅண்ணாமலையில் காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தனுக்கு தனியாக சந்நிதிகள் உள்ளன. அங்கு சித்ரா பெளர்ணமியில் வழிபாடுகள் சிறப்பாக நிகழ்கின்றன.

பெளர்ணமியை அனுசரித்து தமிழகத்தில் பல்வேறு திருக்கோயில்களிலும் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. 

எ‌ங்கெங்கு‌ம் திரளான பக்தர் கூட்டத்தைக் காண்பதே ஆனந்தம்.

நம் எண்ணங்கள் நலமாகட்டும்!... 
நல்ல எண்ணங்களுடன் 
ஊருக்கும் மற்ற உயிர்களுக்கும் உபகாரமாக வாழ்ந்து 
நற்பலன்களை பெறுவோமாக!...

புதன், ஏப்ரல் 24, 2013

கள்ளழகர் வருகிறார்..

வைகையில் கலந்த கருணைக் கடல்!... 


108 திவ்யதேசங்களில் ஒன்றான ''திருமாலிருஞ்சோலை'' எனப்படும் அழகர் கோவிலின் சார்பில் சித்திரைத் திருவிழா தல்லாகுளம் பெருமாள் கோயிலில் 10/4 அன்று காலை பந்தல் கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. 


மதுரையில் மீனாட்சிக்கு சுந்தரேசுவரருடன் திருமணம் நிறைவேறியதும் அதைத் தொடர்ந்து அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும். இதன் பொருட்டு,

23/4  செவ்வாய் மாலை 5.30 மணிக்குமேல் 6 மணிக்குள் கள்ளழகர் கண்டாங்கிப் பட்டு உடுத்தி, கைத்தடி, கம்பு ஏந்தி தங்கப் பல்லக்கில் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்திலிருந்து புறப்பட்டு மதுரைக்கு வருகிறார். 

கள்ளந்திரி, அப்பன் திருப்பதி உள்பட வழிநெடுக 18 மண்டபங்களில் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். 

24/4 புதன் கிழமை அதிகாலையில் - 21 கி.மீ. தூரத்தைக் கடந்து - மதுரை மாநகருக்கு வரும் கள்ளழகரை மூன்று மாவடி பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்று  எதிர்சேவை நடத்துகின்றனர். 

அன்றிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் திருமஞ்சனம் நடைபெறும். பின்னர் இரவு 2 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை பெருமாள் ஏற்றுக்கொண்டு தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். 

அங்கு விடிய விடிய அழகருக்கு பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன. பின்னர் 3 மணிக்கு தல்லாகுளத்தில் ஆயிரம் பொன் சப்பரத்தில் திருக்காட்சி.

மறுநாள்  25/4 வியாழன் அன்று காலை 7.31 மணிக்கு மேல் 7.45 மணிக்குள் சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியாக - லட்சக் கணக்கான பக்தர்கள் - ''கோவிந்தா!... கோவிந்தா!...'' - என்று தரிசனம் செய்து மகிழ, 


மக்கள் வெள்ளத்தில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகின்றார். மக்கள் அனைவரும் ''அழகர் பச்சைப்பட்டு உடுத்தி வரவேண்டும்..'' - என்று ஏங்கியிருப்பர். இருப்பினும் உடுத்தும் பட்டு அழகரின் விருப்பம்.

அழகர் வரும்போது மக்கள், வெல்லம் பொரிகடலை கலந்து பிரசாதமாக ஒரு சொம்பில் வைத்து அதை வாழை இலையால் மூடி, அதன் மேல் கற்பூரம் ஏற்றி தாங்களாகவே - தங்கள் உளம் நிறைந்த - அழகருக்கு ஆரத்தி எடுத்து மகிழ்வர்.


கோடை வெயிலின் உக்ரம் குறைவதற்காக - கள்ளழகர் வேடமிட்ட பக்தர்கள்  மக்களின் மேல் நீரைப் பீய்ச்சி அடிப்பார்கள். நேர்த்திக் கடனாக மக்களுக்கு விசிறிகள் கொடுப்பதும், தண்ணீர், பானகம், மோர் வழங்குவதும் அன்னதானம் நடைபெறுவதும் - என மதுரையே கோலாகலமாக இருக்கும் தருணம்.

தொடர்ந்து காலை 11 மணிக்கு ராமராய மண்டபத்திற்கு செல்கிறார். அங்கு தீர்த்தவாரி நடைபெறும். 

அன்று பகலில் ராமராயர் மண்டபத்தில் அங்கப்பிரதட்சணம் நடைபெறுகிறது. இரவில் வண்டியூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் திருக்கோயிலில் பக்தர்களுக்கு தரிசனம்.

26/4- வெள்ளி அன்று காலை சேஷ வாகனத்தில் புறப்படும் கள்ளழகர், வைகை ஆற்றில் பிற்பகலில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிக்கிறார். அன்றிரவு -

ராமராயர் மண்டபத்தில் விடியவிடிய தசாவதாரத் திருக்கோலம் நிகழ்கின்றது.

27/4- அதிகாலை மோகினி அவதாரத்தில் கள்ளழகர் காட்சியளிக்கின்றார்.. பிற்பகல் ராஜாங்க திருக்கோலத்தில் அனந்தராயர் பல்லக்கில் புறப்படுகிறார். அன்றிரவு தல்லாகுளம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருள்கின்றார்.

28/4- அன்று கருப்பசுவாமி கோவிலில் விடைபெற்று, பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி திருமலையை நோக்கிப் புறப்படுகின்றார். அன்றிரவு அப்பன் திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் மண்டபங்களில் அழகரின் தரிசனம் வேண்டி  காத்திருப்பார்கள். 
29/4  திங்கள் காலையில் கள்ளழகர் - அழகர்மலை சென்றடைகிறார். 
30/4 செவ்வாய் அன்று விடையாற்றி - உற்சவ சாந்தி, மஞ்சள்நீர் சாற்று முறையுடன் சித்திரைத் திருவிழா மங்களகரமாக நிறைவு பெறுகிறது.
சித்திரைத் திருவிழா இனிதே நிறைவு பெற்றாலும், 
வீட்டின் வெளியே சாலையில் நம் பொருட்டு வழிநடையாய் எழுந்தருளிய கள்ளழகரை -  கண்ணாரக் கண்டு மகிழ்ந்து கை தொழுது வணங்கினாலும், வீட்டுக்குள் நுழைந்ததும் மனம் எண்ணும்  - 
அடுத்து எப்போது அழகர்  வருவார்?.... 
கள்ளழகர் திருவடிகளே சரணம்!...

திங்கள், ஏப்ரல் 22, 2013

மீனாட்சி திருக்கல்யாணம்

எனக்கென்ன மனக் கவலை!.... 
என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை!...

''...அவள் இருக்கையில் எனக்கு என்ன கவலை!... எல்லாவற்றையும்  அவள் பார்த்துக் கொள்வாள்!.... '' என நாம் இருப்பதால் தான் அவள்  எந்நேரமும் விழிப்பாகவே இருந்து தம் மக்களின் குறைகளை தீர்த்த வண்ணமாக இருக்கின்றாள். அதனாலேயே அவள் மீனாட்சி - கயற்கண்ணி எனப்பட்டாள்.

அவரவர் மனக்குறைகளை அவரவர்க்கேற்றபடி அவள் தீர்த்து வைப்பதால் தான், அவள் - அங்கயற்கண்ணி!....

வேண்டும் வரம் எல்லாவற்றையும் தந்தருளும் அன்னை மீனாட்சி நம் அருகில் இருக்கின்றாள் என்பதால் தான் - நம் மனம் கொஞ்சமேனும் நிம்மதியுடன் தூங்குகின்றது!...  

பக்தர்களின்  அத்தனை பிரார்த்தனைகளையும் அன்னை நிறைவேற்றித் தருவதால்தான் உலகம் முழுவதும் உள்ள கோடானுகோடி பக்தர்களின் இல்லங்களில் - அவள் பெயரைச் சொல்லியபடி  தீபங்கள் பிரகாசிக்கின்றன.

இரவும் பகலும் கண் இமையாத மீனைப் போல தேவியும் விழித்துக் கொண்டிருக்கின்றாள். அவள் விழித்துக் கொண்டிருக்கின்றாள் என்பதை உணர்ந்த உள்ளங்கள் தான் - தவறு செய்து தண்டனைக் குழிக்குள் சிக்காமல் தப்பித்துக் கொள்கின்றன.

வாழ்க்கை பிழையாத வண்ணம் நாம் பிழைத்துக் கொண்டால் போதும். ''குழையத் தழுவிய கொன்றையந்தார் கமழும் திருநெடுந்தோளுடன், வேரியம் பாணமும் வெண்ணகையுமாக'' - அன்னை நமக்குக் காட்சி தந்தருள்வாள்!....


அன்னை மீனாட்சியின் திருப்பெயர்களில் சொல்லச் சொல்ல தித்திப்பது எது?...

அபிஷேகவல்லி, அபிராமவல்லி, கற்பூரவல்லி, கனகவல்லி, மரகதவல்லி, சுந்தரவல்லி, மாணிக்கவல்லி,  கயற்கண்ணி, கருந்தங்கண்ணி, செந்தமிழ்ச் செல்வி, பாண்டியன் செல்வி,  தடாதகைப் பிராட்டி  - ? 

பாண்டிய மன்னன் மலயத்துவஜன் - காஞ்சனமாலை தம்பதியருக்குப் பிள்ளை இல்லாப் பெருங்குறையைத் தீர்க்க வந்த பெருமாட்டி. புத்திர காமேஷ்டி யாகம் செய்தபோது உமாதேவி மூன்று வயதுடைய பெண் குழந்தையாக வேள்விக் குண்டத்தினின்று மூன்று தனங்களுடன் திருக்கரத்தினில் பூச்செண்டுடன்  மரகதவல்லியாகத் தோன்றினாள்.

இயற்கைக்கு மாறாக குழந்தைக்கு மூன்று தனங்கள் இருப்பதைக் கண்டு அரசன் வருந்தியபோது இறைவன் அசரீரியாக, ''..மணாளன் எதிர்ப்படும் போது ஒரு தனம் மறையும்..''  என்று கூறியருளினார்.

"தடாதகை'' என்ற திருப்பெயருடன்  சிறப்பாக வளர்ந்த கயற்கண்ணி பல கலைகளிலும் சிறந்து விளங்கினாள். தந்தை மலயத்துவசன் வானகம் ஏகிய பின், தனயை பாண்டியப் பேரரசின் சிம்மாசனத்தில் செங்கோல் கொண்டு அமர்ந்து சிறப்பாக ஆட்சி செய்தாள்.

மணப்பருவத்தை அடைந்த தடாதகை, நால்வகைப் படைகளுடன்  திக்விஜயம் செய்து அனைத்து திசைகளையும் வென்றாள். இறுதியாகத் திருக்கயிலாய மாமலையை அடைந்தாள். பொழுது போகாமல் தூங்கிக் கிடந்த பூதகணங்கள் திடுக்கிட்டு விழித்தெழுந்தன. யாரென்று புரியாததால் - மீன் கொடியாளை எதிர்த்துப் போரிட்டன.

வெற்றிகரமாகத் தோற்று - ஓடி , ஈசனின் திருவடிகளில்- ''...பெருஞ்சினம் கொள்ளாதீர்கள் ஸ்வாமி!... அபயம்!... அபயம்!...'' என்றபடி விழுந்தன.

யோகாசனத்திலிருந்த ஈசன் திருமுகத்தில் குறுஞ்சிரிப்பு தவழ்ந்தது. ஒன்றும் புரியவில்லை பூதகணங்களுக்கு - ஒரே வியப்பு!.. அதற்குள் -

வில்லும் கணையுமாக, ''அருமறைகள் பழகிச் சிவந்த பாதாம்புயத்தாள்'' நூபுரங்கள் சலசலக்க -  திருமாமணி மண்டபத்தினுள் நுழைந்தாள்.. அங்கே -  மஹாமந்த்ர பீடத்தில் பெருமானைக் கண்டாள். கண்டவுடன் -

மூன்று தனங்களில் ஒன்று மறைந்தது. முன்பு ஒரு சமயம் - ''நீயின்றி நானில்லை!''- என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டதும் நினைவுக்கு வந்தது!... நாயகனைக் கண்டதும் நாணித் தலை குனிந்தாள்!...

மதுரையிலிருந்து புறப்பட்ட பின், முதன்முறையாக கயற்கண்ணியின் திருக் கரங்களிலிருந்து வில்லும் அம்பும் நழுவி விழுந்தன.

அன்று அறிவித்தபடி இறைவனே கணவன் என்பது உடன் வந்தவர்களுக்கும் புலப்பட்டது. பிறகென்ன!....

திருமணம் தான்!....  தேவர்களும் முனிவர்களும் திரண்டார்கள்.

மாமதுரையே மணக்கோலம் பூண்டது. திருமண மண்டபத்தில் - 

செம்பொற்சோதியான சிவபெருமானுக்கு அருகில் மரகதக்கொடி போல கயற்கண்ணி அமர்ந்திருந்ததை காணக் காண -  கண் தித்தித்தது.

மகிழ்ச்சியுடன் ஆரவாரித்துக் கொண்டிருந்த பெருங்கூட்டத்தை நந்தியம் பெருமான் சிவகணங்களுடன் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். கணபதியும் கந்தனும் கலைவாணியின் கரங்களைப் பற்றியவாறு ஆனந்தத்துடன் அம்மையப்பன் திருமண வைபவத்தைக் கண்டு களித்துக் கொண்டிருந்தனர்.

மங்கலச் சடங்குகளை பிரமதேவன் முன்னிருந்து நடத்தினார். மஹாலட்சுமி தோழியாய் கரம் பற்றி கயற்கண்ணியை அழைத்து வர, திருமால் உடனிருந்து கன்யாதானம் செய்து கொடுக்க -

சிவபெருமான், திருமங்கல நாணைப் பிராட்டியாருக்குச் சூட்டியருளினார். எல்லோரும் கண் பெற்ற பயனைப் பெற்று இன்புற்றனர்.


மதுரை - அம்மனின் சக்தி பீடங்களில்  ராஜமாதங்கி சியாமளா பீடம். இங்குள்ள மீனாட்சி அம்மனின் திருமேனி மரகதத்தால் ஆனது.

சித்திரை மாதம் வளர்பிறையில் நடக்கும் 12 நாள் விழாவில் முதல் நாள் கொடியேற்றம். பின் ஒவ்வொரு நாளும் அம்மனும் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவர்.

எட்டாம் நாள் மீனாட்சி பட்டாபிஷேகம், ஒன்பதாம் நாள் மீனாட்சி திக்விஜயம்,

பத்தாம் நாள் மீனாட்சி திருக்கல்யாணம், பதினோராம் நாள் தேர்த்திருவிழா, பன்னிரண்டாம் நாள் தீர்த்த விழா.

அழகர் கோவிலில் இருந்து கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கம்பு ஏந்தி தங்கப் பல்லக்கில் புறப்பட்டு வரும் கள்ளழகர் - வைகையில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி தருவதுடன் சித்திரைத் திருவிழா நிறைவடையும்.

வரலாற்று சிறப்புமிக்க சித்திரைத் திருவிழா - மீனாட்சி அம்மன் கோவிலில் 14/4 அன்று  கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

21/4-ல்  பட்டாபிஷேகமும், 22/4-ல் திக்விஜயமும் சிறப்பாக நடைபெற்றன.


நாளை (23/4) செவ்வாய்க்கிழமை காலை 8.17 க்கு மேல் 8.41 க்குள் மீனாட்சி - சுந்தரேசர்  திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நிகழ  இருக்கிறது.

24/4-அன்று அம்மனும், சுந்தரேசப்பெருமான் பிரியாவிடையும் அலங்காரத்  தேர்களில் மாசி வீதிகளில் பவனி வருகிறார்கள்.
 
25/4 - அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகின்றார்.


நம் பொருட்டு, நம் சந்ததியினர் நலமாக வாழும் பொருட்டு - அம்மையும் அப்பனும் திருமணக் கோலங்கொள்கின்றனர்.

இயன்றவர்கள் மதுரைக்குச் சென்று - நேரில் தரிசித்து இன்புறலாம்...

எல்லைகளைக் கடந்து வாழும் நிலையில் இருப்போர் - அம்மையையும் அப்பனையும் இதயக்கமலம் எனும் தேரில் இருத்தி, ஐம்புலன்கள் எனும் பிரகாரங்களில் வலம் வரச் செய்து நலம் பெறலாம்!...

மங்கலம் அருள்வாள் மதுரைக்கு அரசி!...

மீனாட்சி சுந்தரேசர் திருவடிகளே போற்றி!... போற்றி!...

சனி, ஏப்ரல் 20, 2013

குன்றிலிட்ட விளக்கு


தமிழகத்தில்  பட்டிதொட்டியெங்கும் பாமரரும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி - எளிய தமிழில் பத்திரிக்கையை வழங்கிய பெருமையை உடைய - ''தினத்தந்தி'' நாளிதழின் அதிபர் -

உயர்திரு. சிவந்தி ஆதித்தனார் அவர்கள் அமரத்துவம் எய்தினார். அவருக்கு வயது 76.


திருச்செந்தூருக்கு அருகில் உள்ள காயாமொழி கிராமத்தில் -

சி.பாலசுப்பிரமணிய ஆதித்தனார் - கோவிந்தம்மாள் தம்பதியருக்கு - 1936 செப்., 24ல், இரண்டாவது மகனாகப்  பிறந்தவர் சிவந்தி ஆதித்தனார். 

சிவந்தி ஆதித்தனார் - கல்வியாளர், தொழிலதிபர், பத்திரிகையாளர், ஆன்மிக வாதி, விளையாட்டு ஆர்வலர், விளையாட்டு நிர்வாகி -  என  பன்முக அடையாளத்துடன் திகழ்ந்தவர். 

கடந்த சில வாரங்களாக  உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை  தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வந்த சிவந்தி ஆதித்தனார்  நேற்று இரவு காலமானார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ., படிப்பை முடித்தவர். கல்லூரியில் தேசிய மாணவர் படைத் தளபதியாக இருந்ததுடன், சென்னை மாநகரில் உள்ள அனைத்துக் கல்லூரிகளின் என்.சி.சி. படைகளுக்கும்  தலைவராக நியமிக்கப் பட்டார்.

தமிழகத்திலும் தமிழர் வாழும்  பிற மாநில நகரங்களிலும் பிரபலமானது, "தினத்தந்தி'' நாளிதழ்.

அவரது தந்தை தொடங்கிய  ''தினத்தந்தி'' நாளிதழை, பொறுப்புடன் சிறப்பாக வளர்த்தார். நாளிதழ் அதிபரின் மகனாக இருந்த போதிலும், அச்சுக் கோர்ப்பவராக, அச்சிடுபவராக, பார்சல் கட்டுபவராக, பிழை திருத்துபவராக, நிருபராக, துணை ஆசிரியராக -  அனைத்து துறைகளிலும் -  பயிற்சி பெற்று தன்னை மேம்படுத்திக் கொண்டார்.

மதுரையில் 1942ல் தொடங்கப்பட்ட தினத்தந்தி நாளிதழின் நிர்வாகப் பொறுப்பை - 1959ல்  ஆதித்தனார் தன் மகனிடம் ஒப்படைத்தார். அச்சமயத்தில், மதுரை, சென்னை,  திருச்சி ஆகிய மூன்று நகரங்களில் இருந்து மட்டுமே  வெளிவந்து கொண்டிருந்த - தினத்தந்தி .

இவர்தம் நிர்வாகத் திறமையில் தற்போது - கோவை, சேலம்,  திருநெல்வேலி, நாகர்கோவில், தஞ்சை, திண்டுக்கல், ஈரோடு, வேலூர், கடலூர்,  புதுச்சேரி, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் இருந்து  - மொத்தம் 15 பதிப்புகளாக வெளியிடப்படுகிறது.

மாலைமலர், ராணி, ராணி முத்து, கோகுலம் கதிர், தினத்தந்தி TV, AMN TV,  ஹலோ FM ஆகியன  - தினத்தந்தி நிர்வாகத்தின் இணை ஊடகங்கள்

சமூகப்பணிகளில் ஆர்வம் கொண்ட சிவந்தி ஆதித்தனார் -  ஏழை மாணவர்கள் கல்வி பயில பல்வேறு உதவிகளை செய்து, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவுகளில் முதல் மூன்று இடங்களில் வரும் மாணவர்களுக்கு தினத்தந்தி சார்பில் பரிசுத்தொகை வழங்கி சிறப்பித்தவர்.  

பல்வேறு சமூக பணிகளையும், நலத்திட்ட உதவிகளையும் சிறப்பாகச் செய்து,  தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அறிஞர்களுக்கு பரிசுத்தொகையும், பொற்கிழியும் கொடுத்து அவர்களை கெளரவித்துள்ளார். 

திருச்செந்தூரில் ஏழை மாணவர்கள் கல்வி பயிலும் வண்ணம் பின்தங்கிய மக்களுக்கு சேவை செய்யும் நோக்கோடு ஏற்படுத்தப்பட்டு - இயங்கி வரும் ஆதித்தனார் கல்வி நிறுவன  அறக் கட்டளையில், 

தற்போது ஏழு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்வி நிறுவனங்களுக்கு சிவந்தி ஆதித்தனார் தலைவராக இருந்து பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். தமிழகத்தில் சிவந்தி ஆதித்தனாரின் கல்வி பங்களிப்பு  போற்றத்தக்கது. 

இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் சிறந்த சேவை புரிந்ததற்காக,  கடந்த 2008ல் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, கோவிந்தம்மாள் ஆதித்தனார் பெண்கள் கல்லூரி, ஆதித்தனார் கல்லூரி ஆகியவற்றின் தலைவராகவும், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற் கல்வியியல் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி ஆகியவற்றின் நிறுவனத் தலைவராகவும்,  மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் செனட் உறுப்பினராகவும், சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

மேலும் இவரது கல்வி சேவையைப் பாராட்டி,  மதுரை காமராசர் பல்கலைக் கழகம்,  அண்ணாமலை பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,  சென்னை பல்கலைக் கழகம் ஆகியன கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி மகிழ்ந்துள்ளன.

சிவந்தி ஆதித்தனார் ஒரு சிறந்த விளையாட்டு வீரர். பத்து ஆண்டுகள் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகவும் பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கு பொறுப்பாளராகவும் இருந்துள்ளார்.  

தொடர்ந்து இரண்டு முறை (1982, 1983) சென்னை மாநகர ஷெரீப் ஆக நியமிக்கப்பட்டு சிறந்த சேவை புரிந்துள்ளார்.

1989ல்  சர்வதேச வாலிபால் கூட்டமைப்பு -  இவரது சேவையை பாராட்டி தங்க பதக்கம் வழங்கியது. மேலும் விளையாட்டு துறையில் இவரது சேவையைப் பாரட்டி, "ஒலிம்பிக் ஆர்டர் பார் மெரிட்' என்ற விருதை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வழங்கியுள்ளது.

''தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் மறைவு பத்திரிகைத் துறை மற்றும் விளையாட்டுத் துறைகளுக்கு பேரிழப்பு'' - என தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உள்பட அனைத்து முக்கிய பிரமுகர்களும் புகழஞ்சலி செலுத்தி யுள்ளனர்.  

தினமலர், தினமணி, ஆனந்தவிகடன், நக்கீரன் - ஆகிய சகோதர இதழ்களும் அவரைச் சிறப்பித்து அஞ்சலி செலுத்தியுள்ளன.


சில ஆண்டுகளுக்கு முன் தென்காசி விஸ்வநாதர் திருக்கோயிலுக்கு சென்றிருந்த போது -  அங்கே

 ''வருங்காலத்தில் இந்த கோவில் ஏற்படும் பழுதுகளை திருத்தி , சீரமைப்பவரை  தலைவணங்குகிறேன்!..'' 

என்ற பொருளில் அரிகேசரி பாரக்கிராம பாண்டியன் என்கிற மன்னனால் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டினைக் கண்டேன்.   

அத்தகைய - தென்காசி திருக்கோயிலின்  திருப்பணிப் பொறுப்பினை  ஏற்று -  இடி விழுந்து சிதைவுற்றிருந்த - மிகப் பெரிய ராஜகோபுரத்தினை மீண்டும் பொலிவுடன் எழுப்பி கும்பாபிஷேகம் நிகழ்த்தியவர் திரு.சிவந்தி் ஆதி்த்தனார். 

நல்ல மனிதர். எளிமையானவர். பழகுவதற்கு இனிமையானவர். பெருமைக்கு உரிய பதவிகளை வகித்த நிலையிலும் பக்தியோடும் தன்னடக்கத்தோடும் திகழ்ந்தவர் எனப் புகழாரங்கள் சூட்டப்படுகின்றன..

ஒரு சமயம் சென்னையில் நள்ளிரவு நேரத்தில் தண்ணீர் லாரியில் அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் ஒருவரை - கூடியிருந்தவர்கள் வேடிக்கை மட்டுமே பார்க்க -

அந்த வழியாக வந்த சிவந்தி ஆதித்தனார் அவர்கள் கோர விபத்தில் சிக்கிக் கொண்டவரை விபத்திலிருந்து மீட்டு, தன்னுடைய காரில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனையில் பணம் செலுத்தி அனுமதித்து உயிர் அளித்துக் காத்த உத்தமர் என்று குறிப்பிடப்படும் பொழுது அவர் வாழ்வாங்கு வாழ்ந்தமை புலனாகின்றது.

தன் அருங்குணத்தால் குன்றிலிட்ட விளக்காகத் திகழ்ந்து சரித்தி்ரத்தி்ல் இடம் பெற்ற  பெருந்தகையாளர் - 

உயர்திரு.சிவந்தி் ஆதி்த்தனார்  அவர்கள்,   

தென்காசி விஸ்வநாதர் தம் திருவடி நிழலில் இளைப்பாற - எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

சிவந்தி ஆதித்தனாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

(நன்றி: தகவல் தொகுப்பில் உதவி - தினமலர் மற்றும் ஆனந்த விகடன்)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப்படும்..

செவ்வாய், ஏப்ரல் 16, 2013

ஸ்ரீராம நவமி

ஸ்ரீராம ராம... ஜயராம ராம...

ஸ்ரீ ராமன் தன்னை  அண்டினோர்க்கு என்றும் ஆனந்தத்தைத் தந்தவன். 



சுக துக்கங்களால் சலனம் அடையாமலும் சஞ்சலப்படாமலும் வாழ்ந்து காட்டியவன். 

பறவையாகிய ஜடாயுவுக்கு மகனாக நின்றவன். 

வானர வேந்தனான சுக்ரீவனுக்கும் கடைநிலையில் நின்ற குகனுக்கும் அசுரனான விபீஷணனுக்கும் சகோதரனாக ஆனவன். 

எல்லையற்ற வலிமையுடைய அனுமனுக்கு - அனைத்துமாக   நின்றவன்.

தான் சுவைத்த பழங்களைத் தந்த - சபரிக்கு முக்திக் கனியினை நல்கியவன்.

வசிஷ்டர், விஸ்வாமித்ரர், அகத்தியர், மதங்கர்  - என எல்லா மகரிஷிகளையும் தொழுது வணங்கிய தூயவன். வீரத்தை நிலைநாட்டி ஜானகியின் கரம் பற்றிய உத்தமன். தாய் தந்தை சொல்லே வேதம் என தலைமேற்கொண்ட தயாபரன். 



ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் - என இலங்கியவன். காகத்தின் வடிவு கொண்டு தகாததைச் செய்த ஜயந்தனையும் மன்னித்தவன். பகைவனுக்கும் அருளிய பண்பாளன்.

தர்மத்தைக் கைக்கொண்டு கடமை உணர்வுடன் வாழ்ந்த மாவீரன். தீயவைகளை வெறுத்து ஒதுக்கி - நன்மைகள் எங்கிருந்தாலும் அவற்றை ஆதரித்தவன். 

அதனால் தான் , 

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே 
ஸஹஸ்ர நாம ததுல்யம் ராம நாம வரானனே!...

ஸ்ரீராமன் எனும் ஒரு திருப்பெயர் ஆயிரம் திருப்பெயர்களுக்குச் சமம் என்று சிவபெருமான் அம்பிகையிடம் புகழ்ந்துரைத்தார். 

சிவபெருமான் புகழ்ந்துரைத்த திருப்பெயரினைத் தாங்கி, கருமாமுகில் என கருணை ததும்பி வழிய ஸ்ரீமந் நாராயண மூர்த்தி உலகம் உய்யும் பொருட்டு திருஅவதாரம் செய்தருளிய நாள் - நவமி.

சூர்ய குலத் தோன்றலாகிய தசரத மாமன்னன் - கோசலை, கைகேயி, சுமித்ரை எனும் பட்டத்தரசியருடன் அயோத்தி மாநகரை முறை தவறாது ஆட்சி செய்து வருகின்றார். வசிஷ்ட மகரிஷி குலகுரு. 

காலங்கள் கடந்தும் தனக்கு புத்திரப் பேறு கிட்டவில்லையே என வருந்தி - மகப்பேறு வேண்டி பெரும் யாகம் செய்கையில், யாக குண்டத்திலிருந்து பூதகணம் ஒன்று தோன்றி பாயச கலசத்தைக் கொடுத்து, ''தேவியர் அருந்துவதற்கு ''  - எனச் சொல்லி மறைந்தது.  

அவ்வண்ணமே யாகப்பிரசாதமாகக் கிடைத்த பாயசத்தை கோசலை, கைகேயி, சுமித்ரை மூவரும் அருந்த,  காலம் கூடிக் கனிந்தது. கோசலையின் மணிவயிற்றில் கருவாகி -   

சித்திரையில் சுக்ல பட்ச நவமி திதியன்று கடக லக்னத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் - நண்பகல் நேரத்தில் மகவாக அவதரித்தருளினான் அருட் கடலாகிய ஸ்ரீராமசந்திரன்.

 
ஸ்ரீராமன் பிறந்த வேளையில் - சூரியன், குரு, சனி, செவ்வாய், சுக்கிரன் எனும் ஐந்து கிரகங்களும் உச்சம் பெற்றிருந்தன.
 
ஸ்ரீராமனைத் தொடர்ந்து,  சுதர்சனமாகிய சக்கரம் - கைகேயியின் மகன் பரதனாக பூச நட்சத்திரத்திலும், ஆதிசேஷன் - லட்சுமணனாக ஆயில்ய நட்சத்திரத்திலும், வலம்புரிச் சங்கு - சத்ருக்னனாக மக நட்சத்திரத்திலும் சுமித்ரையின் மக்களாகத் தோன்றியருளினர்.  

அங்கே மஹாலட்சுமி தானும் மிதிலையில் ஜனக மகாராஜன் பொன் ஏர் பூட்டி உழும் போது தங்கப்பேழையில் குழந்தையாகத் தோன்றியருளினள். 

மண்ணில் தோன்றியருளிய மாணிக்கங்கள் மண்ணிற்கேற்றவாறே நடந்து கொண்டன. 

காலதேவனை உருவாக்கி அவனுக்குக் கட்டளையிடும் கருணையின் சிகரம்,  காரண காரியங்களை  உத்தேசித்து - காலதேவனுக்குக் கட்டுப்பட்டு - அதற்கும் இதற்கும் பரிகாரம் என்று தேடி அலையாமல், நீதியின் வழியில் -

கல்லிலும் முள்ளிலும் நடந்து காரியங்களை   நிறைவேற்றிக்  கொண்டது.
 
நீதியின் வழி நடத்தல் - அதுதான் ஸ்ரீ ராமாயணம்.

பத்து தினங்களுக்கு முன்னதாகவே ஸ்ரீ ராமாயண ப்ரவசனம் தொடங்கி, ஸ்ரீராமநவமி அன்று ஸ்ரீராம பட்டாபிஷேகத்துடன் மங்களமாக பூர்த்தி செய்வர். ஸ்ரீராமன் பிறந்த நாளில் ராமநாம ஜபம் செய்வதும் தொன்றுதொட்டு வரும் பழக்கம்.
 
ஸ்ரீராமகாவியம் படிப்பதும் கேட்பதும் மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும் என்பர்.

இன்றைய  காலகட்டத்தில் ஸ்ரீராமனின் வழி நடப்பது அதைவிட மிக மிக அதிக புண்ணியத்தைக் கொடுக்கும்

ஸ்ரீராமன் எழுந்தருளியுள்ள திருக்கோயில்களில் உபந்யாசங்களும் வழிபாடுகளும் திருவிழாக்களும் கோலாகலமாக நடக்கின்றன. 


ஸ்ரீராமனின்  மேன்மையை உணர்ந்து - அவன் வழி நடந்து கொள்வோம்!.. 

எதற்கும் உதவாத - காம, குரோத, மோக, லோப, மத, மாச்சர்யம் - எனும் தீய குணங்களை விட்டொழித்து, 

ஸ்ரீராமனின் நற்குணங்களைப் பின்பற்றி எல்லாரையும் நேசிக்கப் பழகுவோம்.

அத்தகைய மனப்பாங்கு நம்மிடம் வளரவேண்டும் என - அந்த ஸ்ரீராமனையே சரணடைவோம்!...

நல்ல குணங்கள் நம்மிடையே தழைக்கும் நாள் எதுவோ - 

அதுவே ஸ்ரீராமன் பிறந்த பொன்னாளாகும்!..  

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே 
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே 
இம்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்...
           - கம்பர். 


ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே 
ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நமஹ: 

ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜயராம்!...