நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், பிப்ரவரி 22, 2016

மகாமக தரிசனம்

மகோன்னத மகாமகம்..

இன்று மகாமக நீராடல்  -
மங்கலகரமாக - கங்கையினும் புனிதமாய காவிரியில் நிகழ்ந்தது..


அண்டசராசரத்திற்கும் அதிபதியான ஐயன் - ஐயாறப்பனாகவும்
அகிலமனைத்திற்கும் அமுதூட்டும் அன்னை - அறம்வளத்த நாயகியாகவும்
உறைந்திருக்கும் திருஐயாற்றில் - காவிரியின் புஷ்ய மண்டபப் படித்துறையில் தீர்த்தமாடினோம்..

மகாமகப் புண்ய காலத்தில் காவிரியில் - குடைந்தாடிக் குதுகலித்தோம்..

இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ இளமேதி இரிந்தங்கோடிச்
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல வயல்படியும் திருவையாறு!..

தென்னை மரத்தினின்று - தெங்கம்பழம்  - திடும் என்று வீழ்ந்த சப்தத்தைக் கேட்டு வெருண்ட எருமை இளங்கன்று -  தானும் திடு.. திடு.. - என,

செந்நெற்கதிர்களுடன்  செந்தாமரை மலர்களும் பூத்துக் கிடக்கும் வயல் வெளிகளைக் கலக்கியடித்துக் கொண்டு -

ஓட்டமாக ஓடி, நீர்நிலைக்குள் பாய்ந்து அமிழ்ந்து கொள்ளும் சிறப்பையுடைய திருஐயாறு!..

திருஞானசம்பந்தப்பெருமானின் திருவாக்கு அது!..

இத்தகைய பெருமை திருஐயாற்றுக்கு எப்படி உண்டானது!..

செண்டாடு புனல்பொன்னி செழுமணிகள் வந்தலைக்குந் திருவையாறு!..

மலர்ச்செண்டுகள் மிதந்து வரும் நீரினை உடைய காவிரியாள் -
செழுமணிகளையும் கொணர்ந்து கரைகளில் இறைக்கின்றாளாம்!..

இத்தகைய பொன்னியின் கரையில் தான் -
எண்தோளனும் முக்கண்ணனும் ஆகிய ஈசன் எம்பெருமான் -
இறைவன் இனிதாக திருக்கோயில் கொண்டு அமர்ந்திருக்கின்றான்..

திருஐயாறு - பஞ்சநதீஸ்வரம்!..

காசிக்கு நிகரான திருத்தலம்..

கங்கையினும் புனிதமாய காவிரி இங்கு  எல்லாருக்கும் செல்ல மகளாக இலங்குகின்றாள்..

ஆயினும் - அவளே எமக்கு அன்னையும் ஆயினள்..


ஸ்ரீ ஐயாறப்பர் திருமூலஸ்தானம்
பொன்னியின் நீரலைகளில் ஆடி மகிழ்ந்து அர்க்கியம் வழங்கிக் கரையேறி -
ஐயாறப்பனையும் அறம் வளர்த்த நாயகியையும் வணங்கித் துதித்தோம்..

தெற்கு ராஜகோபுரத்தில் உறையும் ஸ்ரீ ஆட்கொண்டார் சந்நிதியில் நின்றிருந்த போது தீர்த்தவாரிக்கென - அம்மையப்பன் காவிரிக்கு எழுந்தருளினர்..

காவிரிக் கரையிலும் திருக்கோயிலினுள்ளும் பெருந்திரளாக மக்கள்..

மாசி மக தீர்த்தமாடி அம்மையப்பனை வணங்கி வழிபட்டுக் கொண்டிருந்தனர்..

மகாமகத் தீர்த்தமாடுதற்கென - காலைப் பொழுதில் திருஐயாற்றுக்குச் சென்ற நாங்கள் சிவதரிசனம் செய்தபின் மதிய வேளையில் இல்லந்திரும்பினோம்..

இதற்கிடையில்,

திருக்குடந்தை மாநகரில் மகாமக தீர்த்தவாரி சிறப்பாக நிகழ்ந்திருக்கின்றது..

ஸ்ரீ மங்களாம்பிகா உடனாகிய கும்பேஸ்வரர் விடை வாகனனாக - மற்றுமுள்ள திருக்கோயில்களின் திருமூர்த்திகளுடன்
மகாமகத் திருக்குளக்கரைக்கு எழுந்தருள கூடியிருந்த மக்கள்
ஆனந்தப் பெருவெள்ளத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்..

மகாமக தீர்த்தவாரி நிகழ்ந்தபோது எடுக்கப்பட்ட படங்களை நண்பர்கள் Fb ல் அனுப்பியிருந்தனர்..

அவற்றைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்..

நிகழ்வுகளை வலையேற்றிய நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி..


முதல் நாளின் தேரோட்டம்














மாசிமகத் தீர்த்தவாரி 
மங்கலகரமாக நிறைவேறியுள்ளது..

மகாமகம் எனும் பெருந்திருவிழா
ஆன்மீகத் திருவிழா - ஆயினும்
தமிழர் தம் கலாச்சாரப் பெருவிழா!..
இனிதே நிறைவேறியுள்ளது..

அனைத்து தரப்பினருக்கும் நன்றி நவிலும் நெஞ்சம் 
அடுத்த மகாமகத்தினை எதிர்நோக்குகின்றது..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

ஞாயிறு, பிப்ரவரி 21, 2016

மகாமக நன்னாள்

திருக்கயிலாய மாமலை!..


அதன் அடிவாரத்தில், அன்ன வாகனத்தில் - வந்து இறங்கினார் நான்முகன்..

ஆங்கே கம்பீரமாக சேவை சாதித்துக் கொண்டிருந்தார் அதிகார நந்தி..

முதல் தரிசனம்!..

நந்தியம்பெருமானைச் சேவித்துக் கொண்டார்.

நந்திகேசன் வாழ்க!.. அனைவரும் நலந்தானே!..

நந்தியம்பெருமானை வாழ்த்தி வணங்கினார் நான்முகன்..

அண்டசராசங்களின் சகல உயிர்களையும் படைத்தருளும் பிரம்மதேவராகிய தாங்கள் இருக்கையில் நலங்களுக்குக் குறைவு தான் ஏது!.. அன்னை கலைவாணியின் அன்பு மணாளனாகிய தங்கள் மலரடிகளுக்கு எளியேனின் வணக்கம்!..

- என்றபடி, நந்தியம்பெருமானும் வணக்கம் தெரிவித்தார்..

நந்திகேசா!.. அம்மையப்பனைத் தரிசிக்க வந்துள்ளேன். ஆதரவான சமயம் எது என்று  - அதிகார மூர்த்தியாகிய தாம் அறிவிக்க வேண்டும்!..

நான்முகன் விண்ணப்பம் செய்து கொண்டார். 

மும்மூர்த்திகளுள் முதல் மூர்த்தியாகிய  தங்களுக்குத் தடையும் உண்டா!..

ஆனாலும், ஒவ்வொரு சமயம் நான் வில்லங்கத்தில் மாட்டிக் கொள்கிறேன். இத்தனை தவம் இருந்தும் என்ன புண்ணியம்?.. இன்னும் கோஷ்டத்தில் தான் குடியிருப்பு!.. என் பிழையினால் - எனக்கென்று ஒரு கோயில் கூட இல்லாமல் போனது!..''

நான்முகப் ப்ரம்மனின் நாலிரண்டு விழிகளும் - கலங்கின.

தர்மத்தின் தலைவனாகிய நந்தியம் பெருமான் நான்முகனைத் தேற்றினார்.

ஸ்வாமி!.. கலங்க வேண்டாம். மாற்றத்திற்கான வேளை வந்துவிட்டது.   தங்களுக்காக ஐயனும் அம்பிகையும் காத்துக் கொண்டிருக்கின்றனர்!.. -

- என, ஆறுதல்கூறி மீண்டும் நான்முகனை வணங்கினார் நந்தியம்பெருமான்.

நல்லது நந்தி!. உன் வாக்கு மெய்யாகட்டும்!.. - என்றபடி திருமாமணி மண்டபம் சென்று, அம்மையப்பனை வலம் செய்து வணங்கி நின்றார் நான்முகன்.

அங்கே அவர் கண்ட காட்சி அவருக்கு மனம் நிறைவாக இருந்தது.

மாமயில்கள் மகிழ்ச்சியுடன் தோகை விரித்து ஆடுதற்கேற்றாற்போல
குயில்களும் கிளிகளும் பண்பாடிக் கொண்டிருந்தன.


வடமொழியும் தென்தமிழும் ஆயினான் காண்!..

- என மாமுனிவர்கள் எழுவரும் தமிழிசை மலர் கொண்டு  ஈசனைப் போற்றி இசைத்தனர்..

கந்தர்வர்கள்,  வித்யாதரர்கள், கின்னரர்கள், நாகர்கள், யட்சர்கள் - பஞ்சவாத்யங்களை இசைத்துக் கொண்டிருந்தனர்..

அழகிற் சிறந்த தேவகன்னியர்கள் அனைவரும் - ஆடவல்லான் திருச்சந்நிதி முன்பாக நடனம் பயின்று கொண்டிருந்தனர்..   

ஆடல் பாடல் கோலாகலங்களுடன் - கலைமகளின் திருக்கரங்களில் திகழ்ந்த கச்சபி எனும் வீணையிலிருந்து நாதமும் தவழ்ந்து கொண்டிருந்தது.

நான்முகன் விழிகளாலேயே நாமகளை நலம் விசாரித்துக் கொண்டார்..

அவ்வேளையில் -
ஸ்ரீ ஹரிபரந்தாமனும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியுடன் - திருக்கயிலாய மாமலைக்கு கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

மங்கலம் பொலிந்து விளங்கிய அவ்வேளையில் -

நான்முகனே!.. நீரால் உலகம் நிலைப்பட இருக்கின்றது. இவ்வேளையில், அனைத்துக்கும் ஆதாரமாக மண் கொண்டு ஒரு கும்பம் அமைப்பாயாக!..

- என, அடுத்து ஆகவேண்டியவற்றை விவரித்தருளினார் -  எம்பெருமான்.

அதன்படியே இமைப்பொழுதில் கும்பம் தயாரானது. அதனுள், ஐயனும் அம்பிகையும் வேதமந்த்ர கோஷங்கள் முழங்க அமிர்தத்தை நிரப்பினர்.

திருக்கயிலாய மாமலையே யாக சாலை!..

அக்னி தானாகவே மூண்டெழுந்து வளர்ந்தது.

வைர வைடூர்யங்களும், தங்கம் வெள்ளி நவதான்யங்களும் -
தாமாகவே சென்று அமிர்தத்துடன் கலந்தன.

கும்பத்தில் நூல் சுற்றி தர்ப்பை, மாவிலைகளைச் செருகி சிகரமாக தேங்காய் வைத்தார் நான்முகன்..

எல்லாம் சரி.. பிள்ளையார் எங்கே!?.. - அனைவரும் தேடினர்..

அங்கும் இங்குமாக திருக்குமரனுடன் ஓடி விளையாடிக் கொண்டிருந்தார் பிள்ளையார்..

அவரைப் பிடித்து ஓரிடத்தில் அமர வைத்து அவர் முன்பாக கும்பத்தினை வைத்து,

அப்போதைக்கு இப்போதே!.. - என, வணங்கிக் கொண்டார் நான்முகன்.

மந்த்ரம், கிரியை, த்யானம் - என்பனவற்றுடன் யாகத்தீயின் சுடர் வலஞ்சுழித்து எழுந்தது.

வேத ஆகம பாராயண ஒலிகளுடன்  - அங்கே கூடிய முப்பத்து முக்கோடி தேவர்களுடைய நல் எண்ணங்களும் கும்பத்தினுள் ஐக்கியமாகின.


அம்மையப்பன் திருமேனியில் இருந்து அருட் பெருஞ்ஜோதியாக - திருவருள் வெளிப்பட்டு கும்பத்தில் நிலைத்தது..

கோடி சூர்ய ப்ரகாசத்துடன் சிவஸ்வரூபமாகத் திகழ்ந்தது - கும்பம்.

ஹரஹர மகாதேவ!..

அங்கிருந்த அனைவரும் கும்பத்தின் முன் விழுந்து வணங்கினர்.

நான்முகனே!.. கும்பத்தினை மேருமலையின் உச்சியில் நிறுவுக!.. ஊழிப் பிரளயத்தின் போது - நீரில் மிதக்கும் கும்பம் எங்கே கரை சேர்கின்றதோ அங்கே தவம் மேற்கொள்வாயாக!.. 

- ஈசன் எம்பெருமான் திருவாய் மலர்ந்தருளினார்.

உத்தரவு!..

நான்முகன் பணிவுடன் கும்பத்தை இரு கைகளிலும் ஏந்திக் கொண்டார்.

தேவர்கள் பூமாரி பொழிந்தனர்..

சிவ கணங்கள் வெண்கொற்றக் குடையை விரித்துப் பிடித்தன.. வெண் சாமரம் கொண்டு வீசின.. வெண்சங்கினை விளித்துப் பஞ்ச வாத்யங்களை முழக்கின..

வாயு நறுந்தென்றலாக வீசிட - வருணன் எங்கும் பன்னீர் தெளித்து நின்றான்..

சூரியனும் சந்திரனும் அக்னியும் சுடர் ஏந்தி முன் செல்ல -
அரம்பையர் ஆடியும் பாடியும் கொண்டாடிக் களித்தனர்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!..

ஐந்தெழுத்து மந்த்ர கோஷத்துடன் மேருமலையின் உச்சியில் கும்பம் நிறுவப்பட்டது. 

அனைத்தும் நலமாய் நடந்தன.

அடுத்த சில விநாடிகளில் ஊழிப் பிரளயம்.

அண்டப் பெருவெளியெங்கும் நீர்..

பூவுலகம் நீரால் சுத்திகரிக்கப்பட்டது. பொங்கிப் பெருகிய நீர் மேருமலையின் உச்சியைத் தொட, நான்ம்கன் அங்கே நிறுவியிருந்த அமுத கும்பம் மிதந்தது.

அப்படி மிதந்த கும்பம் தென் திசையை அடைவதற்கும் வெள்ளம் வடிவதற்கும் சரியாக இருந்தது.


ஊழிப் பெருவெள்ளம் பெருகி ஓடிப் பிரவகித்த வேளையில் -
கங்காள மூர்த்தியாய் நல்வீணை வாசித்துக் கொண்டிருந்தார் எம்பெருமான்..

அவ்வேளையில்,
ஈசன் திருமேனியில் இருந்து அமுத கலைகளுடன் அம்பிகை வெளிப்பட்டாள்.

எம்பெருமானை வலம் செய்து வணங்கினாள்.
ஐயனை ஆரத்தழுவி ஒன்றி உடனானாள்.

ஈசனின் திருவடியில் காத்திருந்த நந்தியம்பெருமான் அம்மையப்பனைத் தாங்கிக் கொண்டு இன்புற்றார்.

அம்மையும் அப்பனும் ஆடிக் களித்தனர்.
அண்டமெல்லாம் வாழ்க!.. - எனக் கூடிக் களித்தனர்.


ஊழியில் ஒடுங்கி  - இறைவனுள் ஒன்றியிருந்த எல்லாமும் மீண்டும் புதிதாய் தோற்றுவிக்கப்பட்டன.

ஈசன் திருமேனியிலிருந்து வெளிப்பட்ட நான்முகன் அம்மையப்பனை வலஞ் செய்து வணங்கினார்..

ஸ்ருஷ்டியைத் தொடங்க உத்தரவு பெற்றுக்கொண்டு - பூர்வ நினைவுடன் தென்திசையினை நோக்கி விரைந்து அங்கே கும்பத்தைக் கண்டு தொழுதார்.

அங்கே - அவருக்கு முன் விநாயகப்பெருமான் தியானத்தில் வீற்றிருந்தார்.

அமைதி.. எங்கும் பேரமைதி..

அவ்வேளையில் -


அம்மையும் அப்பனும் வேடுவராக வடிவங்கொண்டு ஆங்கே எழுந்தருளினர்.

பினாகம் எனும் தன்னுடைய வில்லில்  கணை தொடுத்து  எய்தார் - ஈசன்.


விவரிக்க இயலாதபடிக்கு பெருஞ்சத்தம்...

பிரபஞ்சம் எங்கும் பேரொளிப் பிழம்பு.. 

ஈசனின் பாணத்தினால் தாக்குண்ட கும்பம் சிதைந்தது..

கும்பத்தின் பவித்ர நூல், சந்தனம், வில்வம், மலர்ச்சரம், மாவிலை, தேங்காய் - என, பொருட்கள் அனைத்தும் நாலாபுறமும் சிதறின..

கும்பம் சிதறியதால் அதிலிருந்த அமுதம் வழிந்தது..

வழிந்து பரவிய அமுதம் ஓரிடத்தில் தேங்கி நின்றது.

வேடுவத் திருக்கோலத்திலிருந்த எம்பெருமான் -
அமுதம் கலந்து இருந்த மண்ணைத் தாமே -
தன் திருக்கரத்தினால் குழைத்தார்.


அது - உருவமா அருவமா!.. 
சிவசக்திக்கு அன்றி, விண்ணவர் மண்ணவர் - என, 
எவராலும் விவரிக்க இயலாத ஒன்றாக விளங்கியது!.. 

இறைவனும் இறைவியும் ஜோதியாய் அதனுட் கலந்தனர்.

பின்னும் அம்பிகை தான் மட்டும் அதனுள்ளிருந்து வெளிப்பட்டாள்.


கிழக்கு முகமாக - சர்வமங்கலங்களுக்கும் ஆதாரமாக நின்றாள். 

அப்போது - அவள் திருமேனியிலிருந்து 36,000 கோடி வேதமந்த்ரங்கள் வெளிப்பட்டன.

அதனை உணர்ந்து கொண்ட மாமுனிவர்கள்,

ஓம் மந்த்ரபீடேஸ்வர்யை போற்றி!..
ஓம் மங்களேஸ்வர்யை போற்றி!..
ஓம் மங்களநாயகியே போற்றி!..
ஓம் மங்களாம்பிகையே போற்றி.. போற்றி!..

- என, அம்பிகையைப் போற்றித் துதித்தனர்.

நான்முகனே!.. இனி, நீ ஸ்ருஷ்டியைத் தொடங்கலாம்!.. - என அம்மையும் அப்பனும் அருளாசி வழங்கினர்.

அம்மையப்பனின் நல்லாசிகளைத் தலைமேற்கொண்டு  - 

நீண்டு உயர்ந்து  நெடும் பாணத்துடன் ஜோதி மயமாக நின்ற சிவலிங்கத்தை -
ஸ்வர்ண புஷ்பங்களால் அர்ச்சித்தார் பிரம்மன்.


ஓம் கும்பேஸ்வராய நம:
ஓம் மங்களாம்பிகாயை நம:

நான்முகனின் அர்ச்சனை நாதம் எட்டுத் திக்கிலும் பரவியது..
அன்று தொட்டு அந்த அர்ச்சனை - இன்றும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றது.

இறைவன் - ஸ்ரீ கும்பேஸ்வரர்
அம்பிகை - மங்களாம்பிகை
தலவிருட்சம் - வன்னி
தீர்த்தம் - மகாமகத் திருக்குளம்.
***

திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் - திருக்குடமூக்கு, குடந்தைக் காரோணம் எனப் புகழ்கின்றனர்..

திருமங்கையாழ்வாரும் திருமழிசை ஆழ்வாரும் - திருக்குடந்தை எனப் போற்றுகின்றனர்

இன்றுவரை மங்காப் புகழுடன் விளங்குவது - திருக்குடந்தை..

திருக்குடந்தையைச் சூழ்ந்து - சகல தேவ சந்நிதானங்கள் விளங்குகின்றன..

அன்று - நந்தியம்பெருமான் கூறியபடி, நான்முக பிரம்மனுக்கு திருக்கோயில் விளங்குவதும் - திருக்குடந்தையில் தான்!..

திருத்தலத்தில் பல திருக்கோயில்கள் விளங்கினாலும் ஸ்ரீகும்பேஸ்வரர் தான் பிரதான மூர்த்தி!..

இதில் அமுதம் திரண்டு நின்ற மகாமகத் திருக்குளத்தில் - நதி மங்கையர் ஒன்பது பேரும் நீராடி புனிதம் பெற்றதாக - புராணம்.

உலகோர் விடுத்த பாவங்களைச் சுமந்து களைத்த, நதிக் கன்னியரின் வேதனைகள் தீர - காசியிலிருந்து விஸ்வநாதப் பெருமானே அவர்களை அழைத்து வந்து, மகாமக தீர்த்தத்தில் நீராடச் செய்தார் என்பது ஐதீகம்.



அந்த நாளே பன்னிரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் - சூரியன் கும்பராசியிலும் தேவகுருவாகிய பிரகஸ்பதி சிம்ம ராசியிலும் விளங்க மக நட்சத்ரமும்  நிறைநிலவும் கூடிய நன்நாள்.  

மகாமகம் எனப்படும் பொன்நாள்!..

இதுவே - தென்னகத்தின் மிகப்பெரிய திருவிழா!..

பன்னிரு ஆண்டுகளுக்குப் பின், நாளை (22/2) நிகழ இருக்கின்றது..


திருக்குடந்தை இன்று வரை சிறப்புடன் திகழ்கின்றது.. 
இனியும் திகழும்.

நீரினால் சிறப்புற்றது சோழ மண்டலம்..
இந்த சோழ மண்டலத்தினுள் 
நீர் கொண்டு நிகழும் பெருவிழா - மகாமகம்!..

நில்லாது ஓடும் நீர் போன்றது - வாழ்க்கை!..
இவ்வுலக வாழ்வில் நமது வாழ்க்கை
அகம் புறம் எனப் பேசப்படுகின்றது..

புறந்தூய்மை நீரால் அமைவதைப்போல - 
அகந்தூய்மையும் நீரால் அமையட்டும்!.. 

காவிரி கரை தழுவிச் செல்லும் குடந்தை மாநகர் குழகனை
அன்னை மங்களாம்பிகையுடன் இனிதே உறையும் 
ஆதிகும்பேஸ்வர மூர்த்தியை
அன்பெனும் மலர் சூட்டி வணங்குவோம்! 

மகாமகத் தீர்த்தத்தில் நீராடிக் கரையேறுவோம்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

வெள்ளி, பிப்ரவரி 19, 2016

மகாமகத்தில்...

நேற்று வியாழக்கிழமை (18/02)..

விடியற்காலையில் துயிலெழுந்து, நீராடி -
திருவிளக்கேற்றி வணங்கியபின் -
மகாமகத் திருக்குளத்தை நோக்கி முதலடி எடுத்து வைத்தோம்..


என் மகனுடன் நானும் என்மனைவியும்..

நெடுஞ்சாலைக்கு வந்து சேர்ந்த சிறுபொழுதில் -
கும்பகோணம் செல்லும் பேருந்து..

கூட்டம் அதிகமில்லை.. ஆயினும், அமர்வதற்கு இடமில்லை..

சிலர் நின்று கொண்டே பயணிக்க - எனக்கு கடைசி இருக்கையில் இடம் கிடைத்தது..

எங்களுக்கு சந்தேகம்.. இந்தப் பேருந்து குடந்தை நகருக்குள் செல்லுமா?..

நடத்துனர் கூறினார் - அங்கே சென்றால் தான் தெரியும்!..

தாராசுரத்தைக் கடந்ததும் - புறவழிச்சாலையில் திருப்பி விடப்பட்ட பேருந்து - மேலக்காவிரி வழியாக பாலக்கரையைக் கடந்து மருத்துவமனை சாலையில் சென்று நான்கு சாலை சந்திப்பு வழியாக பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தது..

அந்த இளங்காலைப் பொழுதில் - அங்கிருந்து நடந்து மகாமகத் திருக்குளத்தின் கீழ்க்கரையை அடைந்தோம்..

ஆரவாரமான மகிழ்ச்சி ததும்பிய முகங்களே எங்கெங்கும்..

மழலையர் முதல் முதியோர் வரை மாமாங்கம் காண்பதற்கு வந்திருந்த கோலாகலம்..


குளக்கரையில் புராதனமான அரச மரத்தடி விநாயகர் திருக்கோயில்..

அருள்தரும் ஐங்கரனை வலம் வந்து பணிந்தோம்..

நல்லபடியாக மகாமகத் தீர்த்தமாடி - இறைவழிபாடு செய்திட துணையாய் வருக!.. - என வேண்டிக் கொண்டு,

மகாமகத் திருக்குளத்தின் படிக்கட்டுகளில் இறங்கினோம்..

கடைசி படிக்கட்டில் நின்றபடி தீர்த்தத்தைத் தொட்டு வணங்கி -
கண்களில் ஒற்றிக் கொண்டு திருக்குளத்தின் நீரினுள் இறங்கினோம்..

என்ன ஒரு ஆனந்தம்.. பரவசம்!..

விவரிக்க வார்த்தைகளில்லை!.. வார்த்தைகளே இல்லை!..

ஸ்ரீ அபிமுகேசர் திருக்கோயில்
திருக்குளத்தின் கீழ் கரையிலிருந்து எதிர் கரை..
எண்திசைகளையும் கைகூப்பி வணங்கிய பின் - தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து அர்க்கியம் வழங்கினோம்..

திருக்குளத்தினுள் அவ்வளவாக கூட்டமில்லை..

பரவலாக - முழங்கால் அளவுக்கு நீர் மட்டம் இருந்தது..

ஆயினும், சுற்றிலும் மக்கள் திரள்..

திருக்குளத்தினுள் - கீழக்கரையில் உள்ள தீர்த்தக் கிணறுகளில் நீர் தெளிப்பான்கள் (Sprinkler) பொருத்தப்பட்டுள்ளன..

பத்தடி உயரத்தில் இருந்து சுற்றிலும் நீர் பீய்ச்சியடிக்கப்படுகின்றது..

தலைக்கு மேல் - நீர் தூறலால் மக்களுக்கு உற்சாகம்..

ஆனாலும், தீர்த்தக்கிணறுகளில் நீர் எடுப்பதற்கு முட்டிக் கொள்கின்றார்கள்.. மோதிக் கொள்கிறார்கள்..

வளர் இளம் பிள்ளைகளும் வயோதிகப் பெருமக்களும் நிறைந்திருக்கும் இடத்திலும் முரட்டுத் தனமான செயல்பாடுகள்..

அந்த வகையில் இரண்டு கால் மிருகம் ஒன்றினை நேரில் கண்டேன்..

அதனையெல்லாம் தவிர்த்து விட்டு நமக்கான குறிக்கோளினை எய்துவதே நலம்.. என, அடுத்தடுத்த தீர்த்தக்கிணறுகளில் நீராடி முடித்தோம்..



திருக்குளத்தின் மேல்கரையில் நின்றபடி - திருநீறு தரித்து மீண்டும் வணங்கி கரையேறினோம்..

இவ்வண்ணமாக - மீண்டுமொரு மகாமகம் காண்பதற்கு,
எல்லாம் வல்ல எம்பெருமான் நல்லருள் நல்குவானாக!..

கரையேறிய மக்கள் அனைவரும் வடக்குப் புறமாக திருப்பி விடப்பட்டனர்..

இதனால் - ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயிலின் முன் கடும் நெரிசல்...

கூட்டத்தைத் தவிர்த்து - வட புரமாக சுற்றியபடி மீண்டும் மகாமகத் திருக்குளத்தின் கீழ்க்கரைக்கு வந்து ஸ்ரீஅமிர்தவல்லி உடனாகிய அபிமுகேஸ்வரர் திருக்கோயிலில் தரிசனம் செய்தோம்..


பின் அங்கிருந்து வந்தவழியே திரும்பி நடைபயணம்..

அடுத்து - பாதாள காளியம்மன் தரிசனம்..

அருகில் ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோயில்.. திருக்கோயிலுக்குள் செல்ல இயலவில்லை.. கோபுர தரிசனம் மட்டுமே..

அடுத்து - உச்சிப் பிள்ளையார் தரிசனம்..

அங்கெல்லாம் நெரிசல் தான்..
அருகிலுள்ள உணவகத்தில் காலைச் சிற்றுண்டி..

ஸ்ரீ சார்ங்கபாணி திருக்கோயில்
ஆராவமுதன் ஸ்ரீ சார்ங்கபாணியின் திருக்கோயில்..
திருக்கோயிலின் தேர் திருவிழாவிற்குத் தயாராகிக் கொண்டிருந்தது..


பல்லக்கில் அன்னை மகாலக்ஷ்மி வீதி வலம் எழுந்தருளியிருந்தாள்..

அன்னையைத் தரிசனம் செய்தபடி - திருக்கோயிலினுள் புகுந்து பெருமாள் தரிசனம்..

மக்களை வரிசைப்படுத்தி அனுப்பிக் கொண்டிருந்தனர்..
சற்று தாமதம் ஆனாலும் நெரிசல் நெருக்கடி ஏதுமில்லை..

அடுத்து, ஸ்ரீதேனார்மொழியாள் சோமசுந்தரி உடனாகிய சோமேஸ்வரர் திருக்கோயிலில் தரிசனம்..

ஸ்ரீ வியாழ சோமேசர் திருக்கோயில்

ஸ்ரீ சோமேசர் கோயிலில் இருந்து பெருமாள் ராஜகோபுரம்
சோமேசர் திருக்கோயிலின் பின்புறம் பொற்றாமரைக் குளம்..

அகலம் குறைவான படித்துறையில் மக்கள் நெரிசல்..

பாதுகாப்புப் பணியிலிருக்கும் காவலர்கள் பலமுறை சொன்னாலும் மக்கள் கேட்பதாக இல்லை..

பொற்றாமரைக் குளத்தில் மூழ்கிக் குளித்து விட்டு - கரையேறி,
ஸ்ரீ மங்களாம்பிகை உடனாகிய ஸ்ரீ கும்பேஸ்வரர் திருக்கோயிலினுள் நுழைந்தோம்..

ஸ்ரீ கும்பேஸ்வரர் திருக்கோயில்


மிகுந்த ஜனத்திரள்.. ஆனாலும், இனிமையான மகிழ்ச்சியான தரிசனம்..

கும்பேஸ்வரர் திருக்கோயிலில் சற்று நேரம் ஓய்வெடுத்த பின் அடுத்து சென்ற திருக்கோயில் -

ஸ்ரீ சரநாராயணப்பெருமாள் திருக்கோயில்..

பெருமாளின் தசாவதாரங்களும் திகழ்கின்றன இந்தத் திருக்கோயிலில்..

இந்தத்திருக்கோயிலில் இப்போதுதான் தரிசனம் செய்கின்றேன்..

பரபரப்பான கடைதெருவில் ஸ்ரீ சக்ர படித்துறையை நோக்கி நடந்தோம்..

அப்போது, மாலை 3.30..

வழியில் ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில்..
கோயில் நடை அடைக்கப்பட்டிருந்தது

திரும்பி வ்ரும்போது தரிசிக்கலாம் என்று - ஸ்ரீ சக்ரபாணி திருக்கோயிலைக் கடந்து -

கங்கையினும் புனிதமாய காவிரிக்கரையை நோக்கிச் சென்றோம்..

ஸ்ரீ சாரங்கபாணியும் ஸ்ரீ சக்ரபணியும் தீர்த்தவாரி நிகழ்த்தும் -
ஸ்ரீ சக்ர படித்துறையில் நீராடி அர்க்கியம் வழங்கினோம்...

குறுகலான படித்துறை.. ஆதலால் ஓரளவுக்கு நெரிசல்..

திருவிழாவின் முதல் நாளில் மகாமகக் குளக்கரையில் ஏற்பட்ட சிறு பிரச்னையால் -

அங்கேயும், பொற்றாமரைக் குளக்கரையிலும் சக்ரப் படித்துறையிலும் பெண்கள் உடை மாற்றுவதற்காக மறைவிடங்கள் அமைக்கப்பட்டு அங்கெல்லாம் பெண் காவலர்கள் பணியில் இருந்தார்கள்..

காவிரியில் நீராடிய பின் -

ஸ்ரீ சுதர்சனவல்லி ஸ்ரீ விஜயவல்லி சமேத ஸ்ரீ சக்ரபாணி திருக்கோயிலில் தரிசனம்..

ஸ்ரீ சக்ரபாணி திருக்கோயில்

பெருமாள் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார்..

பெருமாளின் பின்புறமுள்ளது அறுகோண சக்கரம்!..

சிறப்பான அலங்காரத்தில் கண் நிறைந்த தரிசனம்..

திருவிழா ஆரவாரங்கள் ஓய்ந்தபின் இன்னொருமுறை தரிசிக்க வேண்டும்..

இத்தனை காலம்  - இத்திருக்கோயிலைத் தரிசிக்க இயலாததை நினைத்து வருந்தினேன்..

மாடக்கோயில். கட்டுமலையின் மீதிருக்கின்றது சந்நிதி..

ஸ்ரீ சார்ங்கபாணியின் திருக்கோயிலைப் போலவே -  தக்ஷிணாயன, உத்ராயண வாசல்கள்..

ஸ்ரீசக்ரபாணியின் சந்நிதிக்கு வடபுறமாக தனி சந்நிதியில் -
தாயார் ஸ்ரீ விஜயவல்லி!..

காலகாலமாக மூடிக் கிடந்ததால் மண்மேடாகிப் போனது கிழக்கு வாசல்..

அதனால் - சந்நிதித் தெரு ஐந்தடி அளவிற்கு உயர்ந்திருக்கின்றது..

சமீபத்தில் நடந்த குடமுழுக்கின் தொடர்பாக கிழக்கு வாசல் மீண்டும் திறக்கப்பட்டு மண் மேடு அகற்றப்பட்டுள்ளது..

உயரமான தெருவிலிருந்து - திருக்கோயிலுக்குள் சரிவாக புதிய பாதை அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள்..

ஸ்ரீ சக்ரபாணி திருக்கோயில் தரிசனத்திற்குப் பின் -
அதே தெருவில் திரும்பி வந்தபோது மணி 4.30..

அப்பொழுதும் ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமியின் திருக்கோயில் நடை அடைத்துக் கிடந்தது..

அருகிலிருந்த கடையில் விசாரித்தபோது  - கோயில் திறப்பதற்கு ஐந்தரை மணியாகும் என்றார்..

ஊரெல்லாம் கோயில்கள் திறந்திருக்க - இந்தக் கோயில் மட்டும் அடைத்துக் கிடந்தது..

அடுத்த தரிசனம்..

ஸ்ரீ ராமஸ்வாமி திருக்கோயில்..

தஞ்சையை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களிடம் அமைச்சராக விளங்கிய
ஸ்ரீ கோவிந்த தீக்ஷிதர் அவர்கள் கட்டப்பெற்றது - குடந்தை ஸ்ரீராமஸ்வாமி திருக்கோயில்..

ஸ்ரீ ராமஸ்வாமி திருக்கோயில்

திருக்கோயிலின் முன் மண்டபத்திலுள்ள சிற்பங்கள் மிகச் சிறப்பானவை..


சீரும் சிறப்பும் மிக்க ஸ்ரீ ராம பிரானின் தரிசனம்  கண்டு
கொடி மரத்தின் அருகில் விழுந்து வணங்கிய வேளையில் -

மாலைப் பொழுது மயங்கிக் கொண்டிருந்தது..

தஞ்சைக்கு திரும்ப வேண்டும்..

ஒரு சில இடத்தில் அருந்திய (Filter) காபி மட்டும் தான்!..
மதிய உணவு உண்ணவில்லை..

செருப்பில்லாமல் நடந்ததால் கால்கள் மட்டும் சற்று வலித்தன..

தஞ்சை செல்லும் பேருந்து இவ்வழியே வருமா?.. - என்ற சிந்தனையுடன் நடந்தபோது -

தஞ்சைக்கு செல்லும் நகரப்பேருந்து வந்து கொண்டிருந்தது..

மகாமக நெரிசலிலும் - அந்தப் பேருந்தினுள் அமர்ந்து கொள்ள இடம் கிடைத்தது..

முன்னிரவுப் பொழுதில் நல்லபடியாக இல்லத்திற்கு வந்து சேர்ந்தோம்..

இந்தப் பதிவில் இடம் பெற்றுள்ள படங்கள் அனைத்தும் எனது கைவண்ணம்..

இன்னும் எடுத்திருக்கலாம்..

கூட்ட நெரிசலான இடங்களில் ஆண்களும் பெண்களுமாய்...
வீண் பிரச்னைகள் - தேடிவரக்கூடும்..

மீண்டும் ஒரு நல்லதொரு பொழுது.. அப்போது பார்த்துக் கொள்ளலாம்!..


குவைத்தில் இருந்து
கடல் தாண்டி வந்ததன் காரணம் 
இனிதே நிறைவேறியது..
இன்னருள் புரிந்தனன் எம்பெருமான்..

அவ்வண்ணமே அனைவருக்கும் ஆகுக!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***