நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், பிப்ரவரி 08, 2016

ஆனந்தவல்லி அபிராமி

தமிழ் கூறும் நல்லுலகிற்குக் கிடைத்தவை பற்பல அந்தாதிகள்.. 

ஆனால் - அவற்றுள் பேரும் புகழும் அடைந்தது எது!?..
அந்தாதி  என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. 

ஒவ்வொரு பாடலிலும் இறுதியில் உள்ள எழுத்து அல்லது சொல் - இவற்றுள் ஏதேனும் ஒன்று -  அடுத்த பாடலின் தொடக்கமாக அமையும்.

முதற்பாடலின் தொடக்கமும் (ஆதி)
நூறாவது பாடலின் முடிவும் (அந்தம்)

நூறாவது பாடலின் முடிவும் (அந்தம்) 
முதற்பாடலின் தொடக்கமும் (ஆதி) 

ஒன்றாக இணைந்து  மாலையாகத் தோன்றும். 

தொடக்கமும் முடிவும்.. முடிவும் தொடக்கமும்!.. 

அந்தமும் ஆதியும் எங்கிருந்து தோன்றுகின்றன?..


அன்னையிடம்!.. பொலிந்து நிற்கும் பெண்மையிடம்!..

பெண்ணிற் பெருந்தக்க யாவுள!.. - என்று வியந்தார் வள்ளுவப்பெருமான்..

பெண்ணின் நல்லாள்!.. - என்று புகழ்கின்றார் திருஞானசம்பந்தர்..

அப்பன் நீ.. அம்மை நீ!.. - என்று ஈசனுடன் இறைவியைப் போற்றுபவர் அப்பர் ஸ்வாமிகள்..

இப்பேருண்மையை அவனிக்கு உணர்த்திய அபிராமி அந்தாதியே - பேரும் புகழும் பெற்று விளங்குவது..

அது தோன்றிய நாளில் இருந்து இன்றுவரை லட்சோபலட்சம் அன்பர்களால் நித்ய பாராயணம் செய்யப்படும் பெருமையையும் உடையது..

அமாவாசை அன்று இரவில் - வானத்தில் நட்சத்திரங்கள் தெரியும்.

ஆனால்,  நிலவு - முழுமதி தெரியுமா!... 

தெரியுமே!. அன்னையைச் சரணடைந்தால்!.

அப்படிச் சரணடைந்த அன்பருக்காகத்தான் - தை அமாவாசை அன்று -
வானில் முழுநிலவினைக் காட்டி அருளினாள் அபிராமவல்லி!..

அபிராமவல்லி மனம் உவந்து  நிகழ்த்திய பெருமைமிகு வரலாறு இதோ.....


திருக்கடவூர்!.....

தேவர்களும் அசுரர்களும் பெரும்பாடுபட்டு பலப்பல இன்னல்களுடன் -  கடைந்தெடுத்த  அமுதத்தினை நிறைத்த கடம் - அமிர்தகடேஸ்வரர் என லிங்க வடிவாகப் பொலிந்த திருத்தலம்.

அமுதம் நிறைந்த கடத்தினையும் விநாயகர் மறைத்து வைத்து விளையாடிய திருத்தலம்.

ஸ்ரீஹரிபரந்தாமன் மோகினியாக வடிவங்கொண்டு அமுதத்தைப் பகிர்ந்தளித்த திருத்தலம். 

அப்போது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் புகுந்து அமுதத்தினை அருந்திய அசுரனை மோகினி கரண்டியால்  அடித்து, தலையைத்  துண்டிக்க - ராகு - கேது என சாயாகிரகங்களாக  உருமாறிய திருத்தலம்.

ஈசனின் அட்டவீரட்டங்களுள் - காலசம்ஹாரம் நிகழ்ந்த திருத்தலம்.

குங்கிலியக் கலய நாயனார் வாழ்ந்த திருத்தலம். 

தேவார மூவராலும் பாடப்பெற்ற பெருமையினை உடைய திருத்தலம். 

இன்னும் பல பெருஞ்சிறப்புகளை உடைய திருக்கடவூரில் சுப்பிரமணியன்  என்ற அந்தணர் - செம்மை வேதியராக சிவநெறியில் நின்று, திருக் கோயிலில் கைங்கர்யங்களைச் செய்து வந்தார். 

தமிழுடன் சமஸ்கிருதமும், சமய தத்துவ ஆகம சாத்திரங்களில் தேர்ச்சியும் பெற்று விளங்கிய அவருக்கு திருக்கோயிலில் பஞ்சாங்கம் ஓதும் பணி. 

தானுண்டு - தன் பணியுண்டு என்று அன்னை அபிராமவல்லியின் சன்னதியில் அமர்ந்து அவள் திருவடித் தாமரைகளைத் தியானிப்பதைத் தலைமேற் கொண்டார்.

காலம் கைகூடிவர, அவர் பார்வையில்  எல்லாமே  அம்பிகையின் வடிவமாகத் தோன்றலாயின. 

உயரிய நிலையினை  நெருங்கிக் கொண்டிருந்த அவரை  
உணர்ந்து கொண்டவர்கள் பெருமையுற்றனர்.. ஆயினும்,

உணர்ந்து கொள்ள இயலாத மற்றவர்கள்,  அவரை 
உன்மத்தர் - என பிதற்றித் திரியலாயினர்.

அதுவும் அன்னையின் சித்தம் போலும்.

உத்தேசமாக 210 வருடங்களுக்கு முன் -

தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த மகாராஜா சரபோஜி (1799 -1832) தெய்வ பக்தியும் தேச பக்தியும் சமயப் பற்றும் மிக்கவர்.

தை அமாவாசையன்று பூம்புகாரில் கடல் நீராடி பிதுர்காரியங்களைச் செய்து விட்டு, தம் பரிவாரங்களுடன் திருக்கடவூர் திருக்கோயிலுக்கு சிவதரிசனம் செய்ய வந்தார்.

அரசர் உலா - தஞ்சை அரண்மனை ஓவியம்
பெருத்த கோலாகலத்துடன் வரவேற்கப்பட்டார் மன்னர்..

பெரும் பிளிறலுடன் யானைகள் அவரை வரவேற்றன..
ஜயபேரிகைகளும் துந்துபிகளும் முழங்கின..

திருக்கோயிலில் நந்தி பீடத்தை வணங்கி ஸ்ரீ கள்ளவாரணப் பெருமானையும்
திருமூலத்தானத்தில் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரரையும்
ஸ்ரீ பாலாம்பிகை உடனாகிய ஸ்ரீ காலசம்ஹார மூர்த்தியையும்
மெய்மறந்து தரிசித்த மன்னர் - திருச்சுற்றில் வலம் வந்து வணங்கிய பின்,

திருக்கொடிமரத்தினருகில் தண்டனிட்டு - பிரார்த்தித்துக் கொண்டார்..

அங்கிருந்து - அபிராமவல்லி அம்பிகையின் சந்நிதிக்குள் பிரவேசிக்கும்போது -

இந்த ஆரவாரங்களால் சிறிதும் பாதிக்கப்படாதவராக ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த சுப்ரமணிய குருக்களைக் கண்டார்.

ஊரெல்லாம் கூடி நின்று ஆரவார வாழ்த்தொலிகளுடன் நம்மை வரவேற்கும் போது,  இவர் மட்டும் அலட்சியமாக, ஆணவத்துடன்  அமர்ந்திருப்பது - நம்மை ஏளனம் செய்வது போல் இருக்கின்றதே!..

மன்னரின் மனதில் சற்றே வருத்தம் தோன்றியது.

அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், யாரிவர்?. - என்றார். 

திருக்கோயில் பணியாளர்.. பஞ்சாங்கம் ஓதுபவர்.. - என்றனர் அருகிருந்தோர் -

அவர் மனநிலை சரியில்லாதவர்!. - என்றனர் வேறு சிலர்..

இதுதான் வாய்ப்பு!.. - என, பொழுதெல்லாம் புறம் பேசித் திரிந்து கொண்டிருந்த மதியிலிகள் ஒன்றாகக்கூடி -

அதெல்லாம் சரிதான்.. ஆனால், எந்நேரமும் மது உண்டவராக மதி மயங்கிக் கிடப்பவர்.  ஆலயந்தேடி வரும் பெண்களை அகலக்கண் கொண்டு நோக்கிக் களிப்பவர். தமக்குத் தாமே - நிலை மறந்து சிரிப்பவர். எங்கள் பெருமைகளை எல்லாம் சரிப்பவர்!..

நெஞ்சகத்தில் புகைந்திருந்த புல்லறிவு கொண்டு கலகத் தீயினை மூட்டினர். 

அப்படிக் கூறியவர்களை ஏறெடுத்து நோக்கினார் மன்னர்.

நாங்கள் கண்டதைத்தான் சொல்கிறோம். மமகாரங்களுள் ஒன்றான மதுவில் மதி மயங்காதவர் எனில், மகாராஜா அவர்கள் முன்வந்து நின்றும் மதிக்காமல்- மனமுவந்து துதிக்காமல் துவண்டு கிடப்பதேன்?..

- என, புழுதி வாரித்தூற்றினர்.

மன்னர் ஏதுங்கூறாது, திருக்கோயிலினுள் சென்றார்..
அபிராமவல்லியைக் கண் குளிரத் தரிசனம் செய்தார்..

பொன்னும் பொருளும் வாரி வழங்கினார்..

திருக்கோயில் வழங்கிய மகாபிரசாதங்களையும் மரபின் மரியாதைகளையும்  மனங்குளிர்ந்து ஏற்றுக்கொண்டு வெளியில் வந்தபோது -

தியானங் கலையாத நிலையிலிருந்த சுப்ரமணிய குருக்களை மீண்டும் நோக்கினார்.

அவர் மீது சொல்லப்பட்ட அவதூறுகளை மன்னரின் மனம் ஏற்க மறுத்தது.

குருக்களின் நெற்றியில் திகழ்ந்த திருநீறும் குங்குமமும் -
முகத்தில் தவழ்ந்த அன்பும் அமைதியும்,
மன்னரை அவர்பால் ஈர்த்தது.. அவரிடம் பேச விரும்பினார்.

குருக்களைத் தாமே சோதிக்க விரும்பினார். மெதுவாக அவரிடம்,

ஐயா.. இன்று என்ன திதி?. - என்று கேட்டார்.

... ம்!..

இன்று என்ன திதி?.

அம்பிகையின் தியானத்தில் திளைத்துக் கொண்டிருந்த குருக்களின் முகத்தில் புன்முறுவல்..

இன்று முழுநிலவு.. பூர்ண கலை பொங்கித் ததும்பும் பெளர்ணமி!..

அப்படியானால் இன்று வானில் முழுநிலவு தோன்றுமோ?..

தோன்றுமே!..

நிச்சயமாக?..

சத்தியமாக!..

அப்படித் தோன்றாவிடில்?..

அது தோன்றாமல் வேறு எங்கே போகும்?.. 
இன்று மாலை மதியும் தோன்றும்.. உமக்கு மதியும் தோன்றும்!.. 

அப்படி வானில் முழுநிலவு இன்று தோன்றவில்லை எனில் பொய்யினைப்   புனைந்து உரைத்தவர் ஆவீர். ஆலயத்தினுள் அடாததைக் கூறிய நீர் அதை மெய்ப்பிக்கக் கடவீர்!. 

உமது கூற்றுப்படி வானில் முழுநிலவு இன்று தோன்ற வேண்டும். இல்லையேல் - பொய்யுரைத்த உமக்காக அக்னிகுண்டம் காத்திருக்கின்றது. அமாவாசையன்று முழுநிலவு உதிக்குமாமே!... என்ன அகங்காரம்!.. என்ன ஆணவம்!..

அரசர் கர்ஜித்தார். 

உடனடியாக அக்னி குண்டம் அமைக்க ஆணை பிறந்தது.

அலைகடலில் ஆடி வந்த அரசரின் மனம் -
ஆத்திரக் கடலில் ஆடிக் கொண்டிருந்தது.

கோபம் கொந்தளிக்க மாளிகைக்குத் திரும்பினார்.

அரசரின் ஆணையைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ந்தனர்.. பொல்லாதவற்றைப் புனைந்துரைத்தவர் உள்பட..

தியானம் கலையாத குருக்களின் முகத்தில் சாந்தம் தவழ்ந்து கொண்டிருந்தது. 

எல்லாரும் ஓடிச் சென்று குருக்களைப் பிடித்து உலுக்கினர்..
அம்பிகையின் தியானத்திலிருந்து எழுப்பினர்.. 
நடந்தவற்றை எல்லாம் விளக்கினர்.

நானா!. நானா அப்படிச் சொன்னேன்!.. - சுப்ரமணிய குருக்களுக்கு வியப்பு..

மன்னரை எதிர்த்துப் பேசும் அளவிற்கு எனக்குத் தைரியம் வந்து விட்டதா.. என்ன?..

ஆமாம்!.. நீர்தான்.. நீர்தான்.. சொன்னீர்!.. நிலவு வரும் என்று!..

அபிராமி!.. அவளல்லவா சொன்னாள் அப்படி!.. சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடி!.. அபிராமி அல்லவா சொன்னாள் அப்படி!..

எது எப்படியோ சுப்ரமண்யம்!.. மன்னரிடம் போய் ஏதாவது சொல்லித் தப்பிக்க வழி தேடும் ஐயா!..

எந்த வழியைத் தேடுவது!.. எதற்காகத் தேடுவது!..

அதோ பாரும்.. உமக்காக அக்னி குண்டம் தயாராவதை..
அங்கே சற்றுப் பாரும்.. கண்ணீரும் கம்பலையுமாய் உமது மனைவி மக்கள்..
அந்த முகங்களுக்காவது அரசரிடம் போய்ச் சொல்லுங்களேன்!..  

அம்பிகையிடம் முழுநம்பிக்கை கொண்டிருந்த குருக்கள் மனம் தளரவில்லை. 

அரசரிடம் போய் என்ன சொல்ல வேண்டும்?.. எதற்காக சொல்ல வேண்டும்?..  அபிராமி இதையெல்லாம் காணாமல் கண்களை மூடிக் கொண்டிருக்கின்றாள் என்று அல்லவா - நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றீர்கள்!.

அரசர் என்னை அக்னியில் இட்டாலும் சரி.. நடுக்கடலுள் வீழ்த்தினாலும் சரி..
காக்க வேண்டிய தருணத்தில் அவள் வந்து என்னைக்  காத்தருள்வாள் தானே!.
அப்பர் பெருமான் அருளியவாறு அது அவளுடைய கடமையாயிற்றே!..
ஆகையால்..

ஆகையால்?..

சந்திக்க வேண்டியது அரசரை அல்ல!..

 - என, அபிராமவல்லியைச் சிந்தித்தார். அவள் அருளை வந்தித்தார்.


திருக்கடவூர்.... மார்க்கண்டேயரின் உயிர் காத்த தலம் அல்லவா!..... 

காலசம்ஹாரனாகிய ஐயனின் இடப்பாகமாகி,
காலனைக் காலால் உதைத்த கற்பகவல்லி அவள் அல்லவா!....

அன்னை தான் கொடுங்காலனை உதைத்தவள்!.
ஆனால், வழங்கும் பெயர் ஐயனுக்கு!.

பெண்மைக்கே உரித்தான பெருங்குணம்  இது!...

அமுதீசர் ஒருபாகம் அகலாதவளாகிய அபிராமவல்லி -
தனது தவத்தினால் யோக சித்தியினை எய்தி ,
சர்வ சதா காலமும் தன்னையே தியானித்திருக்கும் -
தன் பக்தனுக்கு ஊறு நேரும்படிக்கு விடுவாளா!....

தானும் வேறல்ல.. தன் பக்தனும் வேறல்ல!..

என்பதை ஊருக்கும் உலகுக்கும் உணர்த்த அம்பிகை திருவுள்ளம் கொண்டாள்.

அரசரின் கட்டளைப்படி அக்னி குண்டத்தையும்,
அதன் மேலாக நூறு கயிறுகளால் கட்டப்பட்ட ஊஞ்சலையும்  அமைத்தனர்.

கொழுந்து விட்டு எரியும் அக்னி குண்டத்தின் மேல் ஊஞ்சலில் இருந்தபடி, பட்டர் ஒரு பாடலைப் பாடவேண்டும். வானில் நிலவு தோன்றவில்லை எனில் ஊஞ்சலின் கயிறுகளுள் ஒன்று அறுக்கப்படும். நூறு பாடல்களைப் பாடி முடித்த பின்னும் நிலவு தோன்றாவிட்டால், நூறாவது கயிறும் அறுக்கப்படும்.

அதன் பின் நடக்க இருப்பவை அம்பிகையின் சித்தம்.

(பட்டர் தமக்குத் தாமே அக்னி குண்டம் அமைத்து - தாம் கூறியபடி நிலவு வரவேண்டும். இல்லையேல் தமது பிழைக்குப் பிராயச்சித்தம் அக்னி குண்டம் தான்!.. - என்று, அம்பிகையைப் பிரார்த்தித்து பக்தியுடன் அந்தாதி பாடினார் என்றும் சொல்லப்படுகின்றது.)

அழுத கண்ணும் தொழுத கையுமாக அன்பர்கள் பரிதவித்து நின்றனர்..

ஆனால் - எதற்கும் கலங்காத சிந்தையராக - அந்த  ஊஞ்சலில்  ஏறி அமர்ந்தார் குருக்கள்.

தாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற 
சீரபிராமி அந்தாதி எப்போதும்  என்  சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே!..

- என்று கள்ளவாரணப் பிள்ளையாரைக் கைகூப்பி வணங்கினார்.

அப்போது, அரசரின் பட்டத்து யானை பெருங்குரலெடுத்துப் பிளிறிற்று.


அதைக் கேட்டதும் அவர் முகத்தில் மகிழ்ச்சி..

பிள்ளைப் பெருமானின் குரல் கேட்ட பின்னும்
பிடியதன் உருக்கொண்ட உமையாம்பிகைக்கு
வாராதிருக்க - வழக்கும் உண்டோ!..

அந்தாதியினைப் பாடத் தொடங்கினார் சுப்ரமணிய பட்டர். 

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே!.. (1)

என, முதல் பாடலைப் பாடி - பின்னும் தொடர்ந்தார்.

அம்பிகையின் அழகைப் பாடினார்.. ஆற்றலைப் பாடினார்.
பெயர்களைப் பாடினார். பெருமைகளைப் பாடினார்.

சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்
பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த
கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு  இதுபோலும் தவமில்லையே!. (53)

அம்பிகையைத் தியானிக்கும் வழியினை எளிதாகப் பாடினார்..

வாழ்வின் துன்பத்தைப் பாடினார். துயரத்தையும் பாடினார்.
துயரக் கடலிலிருந்து ஆன்மாக்களைக் கரையேற்றும்
அம்பிகையின் திருவடித் தாமரைகளைப் பாடினார்.

அவளது அன்பினைப் புகழ்ந்தார். அருட்செயலில் நெகிழ்ந்தார்..
அவளது அன்பினைப் பெற விழையாது - வீணாக
புறம் பேசிப் பொழுதைக் கழிப்பவரை இகழ்ந்தார்.

தனந்தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!.. (69)

கருணை வழியும் அபிராமியின்  கடைக்கண்களைப் பாடினார்.

அம்பிகையின் திருவிழி திறந்தால் - திறக்காத வழி என்று ஏதும் இல்லை!.. -
என்பதனைச் சுட்டிக் காட்டினார். 

விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு, அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு  என்ன கூட்டு இனியே?.. (79)

என்ற திருப்பாடலைப் பாடி முடித்ததும், அம்பிகை தன் காதில் அணிந்திருந்த தாடங்கத்தை வானில் வீசினாள்.  

அது  நிலவு என வானில்  ஒளியுடன் தவழ்ந்தது.. அங்கே -   

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத அபிராமவல்லி ஒரு பெருஞ்சுடராகத் திருக்காட்சி நல்கினாள்.


இருள் அடர்ந்து கிடந்த  வானில் ஒளி படர்ந்ததைக் கண்டனர்.

கண் கொண்ட பயன் இன்று கண்டு கொண்டோம்!.. - என்று களிப்படைந்தனர்.

உற்றாரும் மற்றோரும் ஜயகோஷம் எழுப்பியவாறு போற்றிப் பணிந்தனர்.

அரசனிடம் அடாததை சொல்லியோர் அதிசயங்கண்டு அயர்ந்தனர்.
பொழுதிற்கும் புறம்பேசித் திரிந்தோர் மெய் நடுங்கி, நா குழறி நின்றனர்.
தகாததைச் சொல்லி - தரம் தாழ்ந்தமைக்கு நாணித் தலை கவிழ்ந்தனர்.

அம்பிகையைப் போற்றி அந்தாதி பாடிய அருட்செல்வரின் -
அடித் தாமரைகளில் விழுந்து வணங்கினர்.. கண்ணீர் உகுத்துக் கதறினர்..

அன்பரின் பொருட்டு பெய்த அருள் மழையில் அனைவரும்  நனைந்தனர்.

அம்பிகையின் மெய்யடியாரை வருத்தி, அக்னி குண்டத்தில்  நிறுத்தித் துன்பஞ் செய்தமைக்கு வருந்தினார் சரபோஜி மன்னர்..

அதற்குப் பிராயச்சித்தமாகப் பெரிய அளவில் மரியாதை செய்து சிறப்பித்தார்..

அபிராமி பட்டர் - எனப் பட்டம் சூட்டி,
பொன்னும் பொருளும் தந்து பெருமைப்படுத்தினார்.

உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர்மதி செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளைத் தயங்குநுண்ணூல்
இடையாளை எங்கள்பெம்மான் இடையாளை இங்கு என்னைஇனிப்
படையாளை உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே!.. ( 84 )

என்று அம்பிகையைக் கண்ணாரக் கண்டு - பிறருக்கும் காண்பித்த பட்டருக்கு பொன் பொருள் புகழ் - எதுவும் தேவையாய் இருக்கவில்லை.

இருப்பினும் அவர்தம் இல்லத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு - திருக்கடவூர், திருவிடைக்கழி - உள்பட்ட சில கிராமங்களின் விளைச்சலில் ''வேலிக்கு நாழி'' என சாசனம் செய்து சரபோஜி மகாராஜா ஆணையிட்டார்.

அதன் பின்னரும், நாம் உய்யும் பொருட்டு அந்தாதியைத் தொடர்ந்து  பாடி,

குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும் கரும்புவில்லும்
விழையப் பொருதிறல் வேரியம்பாணமும் வெண்ணகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே!. ( 100 )

என நூறு பாடல்களாக நிறைவு செய்தருளினார் பட்டர்.

உதிக்கின்ற செங்கதிர்.. - எனத் தொடங்கிய, அந்தாதி -
நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே - என நிறைவடைந்தது.

வானில் தாடங்கத்தினை - நிலவெனத் தவழ விட்டு, தன் பக்தனின் மொழியை மெய்ப்பித்து - பக்தனையும் ''அபிராமி பட்டர்''  என்ற பெருமைக்கு  ஆளாக்கிய அம்பிகை -

அன்று முதல்  இன்று வரை, பட்டர் வழங்கிய அந்தாதியினை நாளும் பாராயணம் செய்து வணங்கும் பக்தர்தம் வாய்மொழியையும் மெய்ப்பித்து அருளுகின்றாள்...

அமாவாசை இருள் வானில் மதியும் வந்தது..
அடியவர் தம்மால் எதுவும் ஆகும் என்ற மதியும் வந்தது..
அன்பர் தமக்கெல்லாம் அந்தாதி எனும் நிதியும் வந்தது..


பட்டரின் நெஞ்சகத்தில் உலவிய ஒளியினை
மன்னரும் மற்றவரும் உணரும் பொருட்டு -
நீள்வானில் நிலவெனக் காட்டியருளிய அபிராமவல்லி,
நமக்கும் - ஒளி காட்டுவாள்!... நல்லதொரு வழி காட்டுவாள்!...

அன்னையே.. அபிராமவல்லி!..
உனக்கு என்ன கைமாறு செய்வேன்?.. 

என் தாயே!..என்னைப் பெற்றவளே!.. 
பெயர் சூட்டி அழைத்து மகிழ்ந்தவளே!.. 
பெருமையுடன் அணைத்து உச்சி முகர்ந்தவளே!..
உயிருக்குள் உதித்த உயிரென்று உகந்தவளே!..
மீண்டும் உன் மடி தேடி,  மழலையாய்த் தவழும் 
நாள் வரை - நான் வணங்கத் தகுந்தவளே!.. 

அந்த வரம்  மட்டும் தந்தருள்வாய் நீயே!..


என் அம்மையப்பனை
 அபிராம வல்லியை அமிர்த கடேஸ்வரனை 
நினைக்கையில் ஆனந்தம் வெள்ளமாகப் பெருக்கெடுக்கின்றது!..

இன்று தை அமாவாசை
திருக்கடவூரில் திருவிளையாடல் நிகழ்ந்த நாள்.

அபிராமி அந்தாதி மலர்ந்த நாள்.
அன்னையின் தாடங்கம் தண்ணிலவாய்ப் பொலிந்த நாள்.

விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி
பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே!..
***

ஆத்தாளை எங்கள்  அபிராமவல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம் பூநிறத்தாளைப் புவியடங்கக்
காத்தாளை அங்குச பாசங்குசமுங் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு  ஒரு தீங்கில்லையே!...

திருச்சிற்றம்பலம்
***

12 கருத்துகள்:

 1. அருமையான தொகுப்பு ,அபிராமிபட்டரின் அம்மன் சிந்தனை, அந்தாதி என தொகுப்பு அருமையாக இருக்கு, தங்கள் நடையில் அழகான புகைப்படங்களுடன் நல்ல விளக்கம், தொடருங்கள்,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. அபிராமி அந்தாதிக்கு ஒத்த நடையில் உங்கள் விளக்கம் மகிழ்ச்சியடையச் செய்கிறது வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்களது வருகையும் வாழ்த்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. வணக்கம் ஜி பிரமிப்பான விடயங்கள் நிறைய அரியாத தகவல்கள் அறியத்தந்தமைக்கு நன்றி வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்களது வருகையும் வாழ்த்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. அருமையான பதிவு ஐயா! அபிராமி அந்தாதி பற்றிய தகவல்கள். தினமும் முழுவதும் சொல்லாவிட்டாலும் தாரமர் கொன்றையும் வரிகளையும், தனம் தரும் கல்விதரும் என்பதையும் தினமும் சொல்லி வருகின்றோம் ஐயா! பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   அபிராமி அந்தாதி அல்லல்களை அகற்றும்..
   வாழ்வின் வழித்துணையாகும்..

   தங்களது வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களது வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. அபிராமவல்லி... அன்னை அபிராமி பற்றிய கட்டுரை...

  என்ன அழகாய்... அற்புதமாய் ஒரு படைப்பு...

  சினிமாவில் "சொல்லடி அபிராமி..." என வானில் நிலவு வர வைக்கும்பாடலைப் பார்த்துச் சிலிர்த்த நாம்... உங்கள் கட்டுரை வாயிலாக... அபிராமி அந்தாதியின் சில பாடல்களை படித்துத் திளைத்தோம்...

  வாசித்துக் கொண்டே வருகிறேன்... அவ்வளவு பரப்பரப்பு... அந்த பௌர்ணமி நிலவு போட்டோவில் நிலவு பிரகாசமாகி பின்னர் மெல்ல சுருங்கி மீண்டும் பிரகாசமாகிறது... பல முறை பார்த்தேன்... அது என்ன அப்படியான ஒரு GIF பைலான்னு தெரியலை... ஆனா எனக்கு கருமேகங்கள் கூடிக் குறைந்து பௌர்ணமியின் ஒளி வெள்ளம் பிரகாசமாகவும் மந்தகாசமாகவும் மாறி மாறி வந்தது...

  அருமை அய்யா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
   இனிய கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு