நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், செப்டம்பர் 29, 2015

உணவின் கண் உயிர்

உணவின் கண் உயிர்!..

கண் எனும்போது - இடம் என்றும் பொருள் கொள்ளலாம்..

அதன் முழுப் பொருளை -

இதனை இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் (517)

- என்ற குறள் விளக்கும்..

அதன்படி - உண்ணத் தக்க பொருள்களிடத்தில் உயிர் விளங்குகின்றது..

இன்று -

உலக இதய நாள்!..


எண் சாண் உடலில் எத்தனை எத்தனையோ உறுப்புகள் சிறந்து விளங்குகின்றன..  சொல்லித் தெரியவேண்டியதில்லை..

அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடப்படுபவை - இதயமும் கண்களும்..

ஒவ்வாதவற்றால் கலங்குபவை - இதயமும் கண்களும்!..

கண்கள் சிறந்து விளங்கினால் - அகமும் புறமும் சிறந்து விளங்கும்..

அதே போலத்தான் - இதயத்திற்கும்!..

புகழ்ச்சியான - மகிழ்ச்சியான வேளைகளில் -

இதயம் திறந்தது!.. - என்றும்

கண்கள் திறந்தன!.. என்றும் உரைப்பது உலகியல்..

வாழும் உலகினில் நம் வசப்படும் பொருள்களைக் கண் கொண்டு நோக்கினால் இதயம் வசப்படும்.. வளப்படும்..

எண்ணங்களின் பிறப்பிடம் - மூளை!..

ஆனாலும், காலகாலமாகக் குறிப்பது இதயத்தையே!..

அந்த இதயமும் - கண்மூடித் திறக்கும் பொழுதிற்குள் தன் செயலை நிறுத்திக் கொண்டு அமைதியில் ஆழ்ந்து விடுகின்றது..

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தனம் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே!..
(திருமந்திரம்)

விருப்பமானவற்றை சமைக்கச் சொன்னார்.. விரும்பியவாறே உண்டு மகிழ்ந்தார்.. மனையாளொடும் கூடியிருந்தார்.. இடப் பக்கம் இதயம் வலிக்கின்றதே.. என்று துடித்தார்.. சற்றே படுப்போம் என்று தலை சாய்த்தார்.. சாய்த்த தலையை நிமிர்க்காமல் போய்ச் சேர்ந்தே விட்டார்..

இது திருமூலர் காட்டும் வாழ்க்கை நிலையாமை..

நூற்றுக்கு நூறு மாரடைப்பு!..

என்ன நடந்தது.. எப்படி இருக்கின்றது!.. - கேட்டுத் தெரிந்து கொள்வதற்குள் எல்லாம் முடிந்து விடுகின்றது..

இப்படித் தடாலடியாய் வரும் முடிவையும் அப்பால் நிறுத்தி வைக்க முடியும்!.. - என்பது இன்றைய நவீன மருத்துவம்..

ஆனால் -

இதற்கெல்லாம் வேலையே இல்லாமல் செய்யலாம்..
நாம் மேற்கொள்ளும் சரியான உணவு பழக்கத்தால்!..

மரணத்தை வெல்ல யாராலும் முடியாது தான்!..

ஆனால், நோயை வெல்ல முடியும் .. குறைபாடுகளைக் கடக்க முடியும்..

இன்றைக்கு,  எல்லாமே - அவசரமாக முடிய வேண்டும்.. அல்லது முடிக்க வேண்டும்.. - என்ற நிலையில் தான் அணுகப்படுகின்றன..

இந்த மனோபாவம் முற்றிலும் தவறு..

இதுவே - இதயம் பலவீனமாவதன் முதற்படி..

பதறாத காரியம் சிதறாது!.. - என்பதும்,

பொறுத்தார் பூமி ஆள்வார்!.. - என்பதும் , நாம் நமது பதற்றத்தைக் கைவிட வேண்டும் என்பதற்காகத்தான்..

இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் என்னும் பதற்றமே - பாதாளத்தில் தள்ளுகின்றது..

நாளும் யோகா, தியானம் அமைதியான இறைவழிபாடு இவைகளால் பதற்றத்திலிருந்து இதயத்தை மீட்டெடுக்கலாம்..

நவீனமான நாகரிக உலகத்தில் பெரும்பான்மையான மக்களுக்கு உழைப்பு - என்பதே அற்றுப் போனது..

குளுகுளு அறையில் அமர்ந்து கொண்டு தளுக்காக செய்யும் வேலைகள் உடல் உழைப்பே அல்ல..

மாரடைப்பு வருவதற்கான காரணிகளுள் முக்கியமானது - ஒரே இடத்தில் பலமணி நேரம் அமர்ந்து பணி புரிவது..

ஆனாலும் - அப்படிப்பட்ட வாழ்க்கை முறைதான் அமைந்து விடுகின்றது..

பேருந்தின் நடத்துனரை விடவும் - மாரடைப்பினால் பாதிக்கப்படுபவர் - ஓட்டுனரே!..

இதற்குக் கண் முன்னே - சாட்சிகளும் காட்சிகளும் ஏராளம்..

நாள் தோறும் - காலாற நடப்பது, எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது, ஓடியாடி விளையாடுவது - இவையெல்லாம் உடலுக்கும் இதயத்திற்கும் நன்மை தரக் கூடியவை என்கின்றனர் மருத்துவர்கள்..

சைக்கிள் ஓட்டுவதும் நீந்திக் குளிப்பதும் சிறந்த உடற்பயிற்சிகள்..

இதய நோயின் இணையற்ற கூட்டாளிகள் - மதுவும் புகையும்..

ஆரோக்கியம் வேண்டுவோர் - இவற்றிலிருந்து ஒதுங்குவது மிக மிக அவசியம்..

குடும்பத்தின் பாரம்பர்யத்தில் மாரடைப்பு வரக்கூடும் என்றாலும் - அதனை வெல்வது எளிதே!..

அடுத்தபடியாக - உணவுப் பழக்க வழக்கம்!..

இதில் நம்மவர்களை அடித்துக் கொள்ளமுடியாது..

கண்ட நேரத்திலும் கண்டவற்றை தின்று தீர்ப்பதில் வல்லவர்கள்..

ஒரு காட்சி..

நெடுஞ்சாலைகளில் - இரவுப் பயணம் செல்லும்போது வழக்கமாக குறிப்பிட்ட இடத்தில் உணவுக்காக - பேருந்துகளை நிறுத்துவார்கள்..

பகலில் அந்த இடத்தைப் பார்த்தால் மூன்று நாட்களுக்குச் சோறு செல்லாது..

இரவுப் பயணமாக செல்லும் போது நள்ளிரவுப் பொழுதில் பரோட்டாவையும் மட்டரகமான புலால் உணவையும் -

காணததைக் கண்ட மாதிரி தின்று மகிழ்பவர் பல நூறு பேர்.. ஆனால்,

பொழுது விடியும் முன் - ஊருக்குச் சென்று சேரும் முன்பாகவே அவர்கள் படும் அவதி சொல்லி மாளாது..

ஏனிந்த அவலம்!..

நாக்கிற்கு அடிமையானது தான்!..

நாக்கை நம் வசப்படுத்தினால் - நானிலத்தையே வசப்படுத்தலாம்!..

துரித உணவு எனும் பேரில் - இன்று விற்கப்படும் எல்லாமே ஆபத்தானவை..

சமீபத்தில் நூடுல்ஸ்களுக்கு எதிராக பிரச்னை!..

அளவுக்கு அதிகமாக வேதிப் பொருட்கள் இருக்கின்றன!.. - என்று கூறியதற்கு -

அளவுக்கு அதிகமாக வேதிப் பொருட்கள் இல்லை!.. - என்று தயாரிப்பாளரின் தரப்பில் மறுத்திருக்கின்றார்கள்..

அதிகமாக இல்லை என்றுதான் கூறுகின்றார்களே -  தவிர,

வேதிப்பொருட்களே இல்லை!.. - என அவர்கள் கூறவில்லை..

ஏனெனில் - வேதிப்பொருட்களின் சேர்க்கை இல்லை எனில் நூடுல்ஸ்களும் இல்லை..


இதைப் போன்றே பலமாதங்கள் வைத்திருந்து சாப்பிடுவதற்கு ஏற்றவாறு இரசாயனங்களின் சேர்க்கையுடன் தான் பலவகையான பொருட்கள் தயாராகி சந்தைக்கு வருகின்றன..

பிஸ்ஸா (Pizza), ஹாம்பர்கர் (Hamburger), சாசேஜஸ் (Sausages) , நூடுல்ஸ் (Noodles)
எண்ணெயில் பொரித்த உருளைக் கிழங்கு ( Finger Fries) சாக்லேட், பிஸ்கட், இனிப்பு வகைகள், குளிர்பானங்கள் மற்றும் செயற்கை பழச்சாறுகள்

- என, எல்லா வகை ஆயத்த உணவு வகைகளும்,

உண்பவரை மெல்ல மெல்ல நோயாளியாக்குவதில் போட்டி போடுகின்றன..


White Flour, White Butter, White Sugar - ஆகியன தவிர்க்கப்பட வேண்டியவை..

சுவையூட்டிகள், நிறமூட்டிகள், மணமூட்டிகள், திடப்படுத்திகள் - எல்லாமே வேதிப்பொருட்கள்..

இவைகள் நிறைந்திருக்கும் உணவு வகைகள் - நாளாவட்டத்தில் மனிதனை மரணத்தின் எல்லைக்குக் கொண்டு செல்கின்றன என்பது மேலை நாட்டிலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது..

Monosodium Glutamate (MSG)

Monosodium glutamate (MSG) is a flavor enhancer commonly added to Chinese food, canned vegetables, soups and processed meats. The Food and Drug Administration (FDA) has classified MSG as a food ingredient that's "generally recognized as safe," but its use remains controversial. For this reason, when MSG is added to food, the FDA requires that it be listed on the label.
MSG has been used as a food additive for decades. Over the years, the FDA has received many anecdotal reports of adverse reactions to foods containing MSG. These reactions — known as MSG symptom complex — include:
  • Headache
  • Flushing
  • Sweating
  • Facial pressure or tightness
  • Numbness, tingling or burning in the face, neck and other areas
  • Rapid, fluttering heartbeats (heart palpitations)
  • Chest pain
  • Nausea
  • Weakness
However, researchers have found no definitive evidence of a link between MSG and these symptoms. Researchers acknowledge, though, that a small percentage of people may have short-term reactions to MSG. Symptoms are usually mild and don't require treatment.

The only way to prevent a reaction is to avoid foods containing MSG.
Thanks To:  http://www.mayoclinic.org/

இதை சொன்னாலும் நம்மவர்கள் புரிந்து கொள்வதில்லை..

நமக்கொன்றும் வராது!.. - என்பதுதான் அலட்சியமான பதில்..

தக்காளி, காரட், வெங்காயம், பூண்டு - போன்றவற்றை Dehydration முறையில் உலர்த்தி பலவகையான உணவுப் பொருட்களிலும் சேர்க்கின்றார்கள்..

அப்படி சேர்க்கும் போது - More Vitamins and Minerals Enriched - இயற்கையான சுவையுடன்!.. -  என்று விளம்பரம் செய்கின்றார்கள்..

அந்த பொருளிற்கு, ஆடல் பாடல் - என கூடுதல் விளம்பர அம்சங்கள்!..

செயற்கை பானங்களில் வெள்ளைச் சர்க்கரை அளவு
அதிகமான வைட்டமின்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்று இவர்கள் சொல்லும் போதே -

இயற்கை நிறைத்துத் தருகின்ற சத்துக்களை ஏன் அழிக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகின்றது அல்லவா!..

நம்நாட்டு உணவு வகைகளே - நமக்கு ஏற்றவை!..

ஆனாலும்,

அரிசி ஆபத்தானதா!.. - என்று காலையிலேயே பீதியைக் கிளப்புகின்றது வார இதழ் ஒன்று..

இரு வாரங்களுக்குப் பின் அதே இதழில் -

அரிசியில் நிறைந்திருக்கும் அற்புதம்!.. - என்று ஆரவாரம்!..

காசு கொடுத்து அந்த இதழினை வாங்கிப் படிப்பவன் பைத்தியக்காரன் ஆகிவிடுகின்றான்..

ஆண்மைக்கு ஆப்பிரிகாட்!.. பெண்மைக்கு அவகாடோ!..
சிவப்பழகுக்கு செர்ரி!.. சிகையழகுக்கு ஸ்ட்ராபெர்ரி!..
அதிலே இது இருக்கின்றது!.. இதிலே அது இருக்கின்றது!..

என்றெல்லாம் - நம்மைப் பார்த்துக் கதறிக் கண்ணீர் வடிக்கின்றார்கள்..

நாம் நலமுடன் வாழ்வதற்காக என்று - முதலைக் கண்ணீர்!..

நம்மிடம் இருக்கும் காசை - வார, மாத இதழ்களின் மூலம் கறக்கின்றார்கள்..

நமக்கு நாமே தெளிவு பெற வேண்டும்..

விளம்பரங்களைக் கண்டு ஏமாறாமல் -
பாரம்பர்ய உணவு வகைகளை மீறாமல் -
நம் உடல் நலனை நாமே காத்துக் கொள்ளவேண்டும்!..

கூடுமானவரை - வெளியில் உண்பதைத் தவிர்த்தல் நலம்..

சில வருடங்களுக்கு முன், இயற்கையானது - நலமானது என்று சொல்லி
மாலை வேளைகளில் மூலிகைச் சாற்றின் விற்பனை ஆரம்பமானது..

மக்களும் விரும்பி வாங்கிக் குடித்தார்கள்..

இப்போது, அதிலும் கலப்படக்காரர்கள் கைவரிசையைக் காட்டி விட்டார்கள்..

ஆகையினால் - நம் வீட்டு உணவுகள் தான் நமக்குப் பாதுகாப்பானவை..


பசுமை நிறைந்த காய்களாகட்டும் வகைவகையான பழங்களாகட்டும் - நம் நாட்டில் ஏராளமாக கிடைக்கின்றன..

தற்போது ரசாயனங்கள் இல்லாமல் - இயற்கை வேளாண் முறையில் பயிர்களை விளைவிக்கின்றனர்..

அரிசி என்றைக்குமே ஆபத்தானது அல்ல!..

வீணில் உண்டு களித்திருப்பவருக்கு எல்லாவகை உணவுகளுமே ஆபத்து தான்!..

கைக்குத்தல் அரிசியும் - சிறு தானியங்களும் மீண்டு வருகின்றன..

கம்பும் கேழ்வரகும் சோளமும் பச்சைப் பயறும் உளுந்தும் காராமணியும்
நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை..

இளநீரும் பதநீரும் கரும்புச்சாறும் - எல்லா வயதினருக்கும் உகந்தவை..

கருப்பட்டியும் சர்க்கரையும் என்றும் இனியவை..
தேங்காய்ப்பாலுக்கு இணை ஏதாவது உண்டா!..

இவற்றை ஒதுக்கி வாழ முற்படவேண்டாம்!..

நாம் இவற்றை ஆதரித்தால் - நம்மவர்களின் மனம் குளிரும்..
விவசாயிகளின் வாழ்வாதாரமும் உயரும்..


தாயின் அன்பைப் போல தயாரானது!.. - என்று விளம்பரம் செய்கின்றான்..

தாயின் அன்பைப் போல சமைப்பதற்கு இவன் யார்?..
அன்பைப் பொழிவதற்குத் தாயால் தான் இயலும்!..

அவளுக்கு அடுத்து அன்புக்குரிய மனையாள்!..
இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றுமில்லை - என்பது வேத வாக்கு!..

இதோ - பழந்தமிழரின் இனிய இல்லறம்..
கூடலூர்க் கிழார் இயற்றிய குறுந்தொகைப் பாடல்..

முளிதயிர் பிசைந்த காந்தள்மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅது உடீஇ
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான்றுழந்து இட்ட தீம்புளிப்பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே..
(நன்றி - முனைவர் மகேஸ்வரி பாலசந்திரன்)

நன்றாக உறைந்திருக்கும் தயிரைக் - காந்தள் மலரைப் போன்ற மெல்லிய விரல்களால் பிசைந்தாள்.. அந்த விரல்களைக் கழுவ வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை அவளுக்கு..

உடுத்தியிருக்கும் சேலையிலேயே துடைத்துக் கொண்டாள்.. கண் நிறைந்த கணவனுக்கு சீக்கிரமாக பரிமாற வேண்டுமே - என்ற அவசரம்!..

குவளை மலரைப் போலும் நீல நிற விழிகள்.. அவற்றில் மை வேறு அப்பிக் கிடக்கின்றது..

அந்த விழிகள் கூட - அடுப்பினில் இருந்து எழுந்த புகையால் கலங்கித் தவிக்கின்றன..

மையேந்திய விழியாள் - மலரேந்திய நறுங்குழலை வாரி முடிந்து கொண்டு - அப்படியும் இப்படியுமாகத் துழாவி ஒருவழியாக புளிக்குழம்பைச் செய்து விட்டாள்..

பணி முடித்து வந்த கணவனின் மனம் மகிழும்படி - தலை வாழை இலை விரித்து அதில் அன்புடன் குழைத்து வைத்த அடிசிலையும் புளிக்குழம்பையும் இட்டாள்..

மழலையின் சிறு கை அளாவிய கூழே தித்தித்திருக்கும் போது - 
மங்கை நல்லாள் ஆக்கி அளித்த அடிசில் - அமுதம் போல இனித்திருக்காதா!..

அப்படித்தான் இருந்தது - அவனுக்கும்!..

தகைகொண்ட அணங்கு தன்னிலையில் இட்ட அடிசிலென்று அகம் மகிழ்ந்தான்..

இனிது.. இனிது!.. - என்று முகம் மலர்ந்தான். முறுவலுடன் உண்டான்..

அவனது அகமும் புறமும் மலர்வதை குறிப்பால் உணர்ந்து மகிழ்ந்தாள் -நுண்ணியலாள் ஆன பெண்ணின் நல்லாள்..

இப்படி,

தீம்புளிப்பாகர் செய்தளித்த சேயிழையின் செந்தளிர்க்கரங்களுக்கு, வைர வளையும் முத்து வளையும் அணிவித்து ஆரத்தழுவி மகிழ்ந்தான் - என்பது வேறு கதை..

இனிய உறவுகள் இளமைக்கு நலம்!..
இனிய உணவுகள் இதயத்திற்கு நலம்!.. 

உலக இதய நாளின் குறிக்கோள் - வருமுன் காப்போம்!. - என்பதே..

அவ்வண்ணம் பேணி - வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோம்!..
நம்மைச் சேர்ந்தவர்களையும் நலமுடன் வாழ வைப்போம்!..

வாழ்க நலம்!.. 
* * *

உணவின் கண் உயிர் 
- எனும் இப்பதிவு, வலைப்பதிவர் சந்திப்பு 2015 
நடத்தும் மின்னிலக்கியப் போட்டிக்காக எழுதப்பட்டது..

வகை - 2
சுற்றுச் சூழல் விழிப்புணர்வு
(நம்மையும் காத்து நம்மைச் சேர்ந்தவரையும் காத்தல்)

இக்கட்டுரை எனது சொந்தக் கற்பனையே..
இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல..
போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் வெளிவராது..
- என்று, இதன் மூலம் உறுதியளிக்கின்றேன்..

அன்புடன்,
துரை செல்வராஜூ..  
* * *

திங்கள், செப்டம்பர் 28, 2015

என் பெயர் எது?..

உன் பெயர் எது!..

செல்வராஜூ..

சரி!..

தந்தை பெயருடன் - துரைராஜன் செல்வராஜூ., அதுவே துரை செல்வராஜூ..

அதெல்லாம் இல்லை!.. உண்மையில் உன் பெயர் எது?..

ஏ.. மனசாட்சி!.. காலமல்லாத காலத்தில் வந்து ஏன் கலாட்டா செய்கின்றாய்?..

கலாட்டா எல்லாம் செய்யவில்லை!.. வா.. உனக்குப் புரிய வைக்கின்றேன்!..


எங்கே அழைத்துச் செல்கின்றாய்?..

காலச் சக்கரத்தில் சற்றே பின்னோக்கிச் செல்வோம்!..

காலச்சக்கரமா!.. ஆஆ!.. ஆ!..

* * *

அது ஒரு ஈ!..

வெகுநேரமாக அங்கேயும் இங்கேயுமாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கின்றது..

அதுவும் ஒரு கேள்வியுடன்!..

அதனிடமும் கேள்வி இருக்கின்றதா!..

பதில்களைத் தவிர - எல்லாரிடமும் கேள்விகள் இருக்கின்றன!..

ஈ - அதற்கு என்னதான் பிரச்னை?..

அது தன் பெயரை மறந்து விட்டது..

அடடா!..

செல்லும் இடத்திலெல்லாம் - விரட்டியடிக்கின்றார்கள். வா!.. - என்று நல்வரவு கூறி, அழைப்பார் யாருமில்லாததால் - பெயர் மறந்து போயிற்று.. இப்போது அது தன் பெயரை அறிந்து கொள்ளவேண்டிய ஆவலுடன் இருக்கின்றது..

ஏன்?.. அதற்கு கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கின்றதா!..

நீயும் உன் பெயரை மறந்து விட்டாய்!. இதில் ஈயை ஏளனம் செய்வது எதற்கு?..

மன்னிக்கவும்.. மனசாட்சி!..

இதோ.. பார்.!.. அங்கே மேய்ந்து கொண்டிருக்கும் கன்றிடம் செல்கின்றது.. வா நாமும் செல்வோம்!..

என் பெயரைக் கூறுகின்றேன் என்று சொல்லி விட்டு அங்கேயும் இங்கேயும் அலைய வைக்கலாமா?..

நடந்தால் உடம்புக்கு நல்லது.. பேசாமல் வா.. என்னோடு!..

அருகில் சென்றோம்..

கன்றிடம் - என் பெயர் என்ன?.. - என்று கேட்டது - ஈ.

எனக்குத் தெரியாதே!.. என்று தலையை ஆட்டியபடி உரைத்தது கன்று..

அப்போது அதன் கழுத்திலிருந்த மணிகள் கலகல - என ஒலி எழுப்பின..

மனம் சோர்ந்தாலும் தன் முயற்சியில் தளராத - ஈ - அடுத்த இடம் நோக்கிப் பறந்தது..

இப்படியாக,

அலைந்து திரிந்த - ஈ - ஒரு குதிரையிடம் சென்று வழக்கமான கேள்வியைக் கேட்டது..

குனிந்த தலை நிமிராமல் - புல் மேய்ந்து கொண்டிருந்தது குதிரை..

நெற்றிக்கு முன்னால் - ஙொய்ங்!.. என்ற சத்தம் கேட்டுத் திடுக்கிட்ட குதிரை நிமிர்ந்து பார்த்தது.

ஹீஹீ..ஹீய்..ய்யீ.. ஈஈ.. ஈ!.. - என்று கனைத்தது..

இதைக் கேட்டதும் -  ஈக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை..

தன் முயற்சியில் வெற்றியடைந்த ஈ -
ஆனந்தக் களிப்புடன் ரீங்கரித்தபடி பறந்து போனது..

காட்சிகள் அனைத்தும் கலைந்து போயின..

ஆயினும், என் முன் வைக்கப்பட்ட கேள்விக்கு விடை?..  இதுவரை இல்லை..

திகைப்புடன் நோக்கினேன்..

இப்போது நடந்த நிகழ்ச்சிகளை ஒன்று இரண்டாக வரிசைப் படுத்திக் கூறு!..

நீ என்ன பார்வதி பராசக்தியா!.. ஔவையாரிடம் ஒன்று இரண்டு என வரிசைப் படுத்திப் பாடு!.. - என்று கேட்டமாதிரி?..

உனக்குத் தெரியா விட்டால் விடு!.. நான் சொல்கின்றேன்!..

கொழுகொழு கன்றே என்பெயர் என்ன?..
கன்றின் தாயே என்பெயர் என்ன?..

கன்று மேய்க்கும் ஆயனே என்பெயர் என்ன?..
ஆயன் கைக் கோலே என்பெயர் என்ன?..

கோலை வளர்த்த கொடிமரமே என்பெயர் என்ன?..
கொடிமரத்துக் கொக்கே என்பெயர் என்ன?..

கொக்கு உண்ணும் மீனே என்பெயர் என்ன?..
மீன் பிடிக்கும் வலைஞனே என்பெயர் என்ன?..

வலைஞன் கைக்கலயமே என்பெயர் என்ன?..
கலயம் செய்த குயவனே என்பெயர் என்ன?..

குயவன் கைச் சகடையே என்பெயர் என்ன?..
சகடை சுற்றும் மண்ணே என்பெயர் என்ன?..

மண்ணில் வளரும் புல்லே என்பெயர் என்ன?..
புல்லைத் தின்னும் குதிரையே என்பெயர் என்ன?..

ஹீஹீ..ஹீய்..ய்யீ.. ஈஈ.. ஈ!..

ஆகா!.. மனசாட்சி.. இது அந்தக் காலப் பாட்டு ஆயிற்றே!.. இன்னும் நினைவில் வைத்திருக்கின்றாயே!..

அதனால் தான் - நான் மனசாட்சி!..

சரி.. ரொம்பவும் பெருமை கொள்ளாதே.. இதில் என் பெயர் எங்கே வருகின்றது?..

அவசரப்படாதே!.. நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்!..

மறுபடியுமா!..

கொழுகொழு கன்றையும் அதன் தாயையும் பார்த்திருக்கின்றாயா?..

கன்றே கொழுகொழு என்று இருக்க - அதன் தாய்!.. நினைக்கவே பிரமிப்பாக இருக்கின்றது. எவ்வளவு ஆரோக்கியமான பாலும் நெய்யும் கிடைத்திருக்கும்!. அந்த மாதிரியான பசுவையும் கன்றையும் பாலையும் நெய்யையும் பார்த்தே பலகாலங்கள் ஆயின..

ஏன்?..

மாடுகள் மேய்வதற்கு இடம் இல்லை.. பசுமையான மேய்ச்சல் நிலங்களை ஒழித்தாயிற்று.. விவசாயிக்கே மாடும் கன்றும் சுமைகளாகிப் போயின.. அதனால - லாரியில ஏத்தி கொலைக்களத்துக்கு அனுப்பிடறாங்க!..

அப்புறம் - அந்த ஆயன்!..

எனக்கு அயன்.. தான் தெரியும்!.. நீ என்ன புதுசா சொல்கின்றாய்.. எனக்கு இதெல்லாம் தெரியாது!..

ஆயன் என்றால் - கால்நடைச் செல்வங்களை கவனமாகப் பராமரிப்பவன்!..

ஓ!.. மந்தைகள் தொலைந்தன.. மாடுகள் அழிந்தன.. ஆயன் மட்டும் இருந்து ஆகப் போவதென்ன!.. 

விளங்கிவிடும்!.. ஆயன் கை கோல்!..

இது தெரியுமே.. கோல் என்றால் பிரம்பு!.. அதானே!..

இல்லை.. ஆயனின் கையில் பிரம்பு இருக்காது.. கைக்கோல் என்றால் மூங்கில் குச்சி!.. சரி.. கொடிமரம்?..

கொடியேத்துவாங்களே அந்த மரம்.. மூங்கில்.. சரிதானே!..

சரிதான்.. பார்த்திருக்கின்றாயா!..

இல்லையே!..

அந்த மூங்கில் மரம் தான் - மனிதனின் தனிவழிக்குத் துணையான மரம்!.. இன்றைக்கு அது கூட இல்லாமல் போயிற்று.. சரி.. அதுக்கப்புறம்.. கொக்கு.. மீன்... மீன் பிடிக்கும் வலைஞன்..

இரு.. இரு.. மீன் பிடிப்பவருக்கு மீனவன்..ன்னு தானே பேரு!.. அதென்ன வலைஞன்?..

வலை வீசி மீனைப் பிடிப்பதால் வலைஞன் !..

ஓஹோ.. நல்லாயிருக்கு!.. மேலே சொல்!..

வலைஞனின் கையில் உள்ள கலயம்.. கலயத்தைச் செய்த குயவன்.. குயவர் வீட்டு சகடை!..

இரு.. இரு.. அது என்ன சகடை?..

சகடை என்றால் சக்கரம்.. களி மண்ணை இதில் வைத்துச் சுற்றித்தான் பானை சட்டி இதெல்லாம் வனைவார்கள்!..

ஏ.. நீ என்ன புதுசு புதுசா சொல்கின்றாய்?.. வனைதல் ..ன்னா என்ன?..

சக்கரத்தில் களிமண்ணை வைத்து சுழற்றி விட்டு கை விரல்களின் திறமையால் மட்பாண்டம் செய்வதற்கு வனைதல் அப்படின்னு பேரு!..

அடடா!.. நல்ல நல்ல சொல்லெல்லாம் தெரியாமல் போச்சே!..

அப்புறம்.. அந்த மண்ணில் வளரும் புல்!..  புல்லைத் தின்னும் குதிரை!.. இப்படி வந்து முடிகின்றது பாடல்!.. இத்தனையும் நடப்பது ஒரு குளக்கரையில்!..
இதுவரை சொல்லிய காட்சிகளை ஒன்றாகச் சேர்த்து சிந்தித்துப் பார்!..

அட!.. ஆமாம்!.. எவ்வளவு அற்புதமா இருக்கு!..

இன்னும் - அந்தக் குளத்தில அழகழகாத் தாமரைகள்.. நீர்ச் செடிகள்.. வண்ணத்துப் பூச்சிகள்..  தவளைகள்.. பாம்புகள்.. பறவைகள்.. குளக்கரையில தென்னை மரம்..  புங்க மரம்.. ஆலமரம்.. - எல்லாம் தெரிகின்றனவா!..

தெரியுதே!.. தெரியுதே!..

* * *


காலச் சக்கரம் -
கடகட.. என்று மறுபடியும் சுற்றிச் சுழன்று - நிகழ்காலத்தில் வந்து நின்றது..

இப்ப தெரியுதா!..

ஏஏ.. என்னது பழைய இடத்துக்கே வந்துட்டோம்!..

சற்று முன் பார்த்தாயே - 
அது தான் பழைய இடம்.. பூங்காவனம்!.. 
இது புதிய இடம்.. பொட்டல் காடு!.. 
நீ பார்த்த அந்தக் காட்சி எல்லாம் - 
உனக்கு மீண்டும் - எங்கேயாவது காணக் கிடைக்குமா?..

கிடைக்காது!..

ஏன்?..

தொலைத்து விட்டோம்!.. நாங்கள் தொலைந்து விட்டோம்!..

மனிதனின் ஆதியான தொழில் விவசாயம்!.. அதுக்கு ஆதாரம்.. நீர் நிலைகள்!.. மக்களோடு இணைந்த வாழ்வு!.. அந்த வாழ்வோடு இணைந்த மக்கள்.. அப்படி..ன்னு இருந்த எல்லாவற்றையுமே நவீனம் என்கிற போர்வையில் அழித்து விட்டீர்கள்!..

நியாயம் தான்..


காடு மலை.. ஆறு குளம்.. என்று கண்ணில் பட்ட எல்லாவற்றையும் சூறையாடி அழிவின் விளிம்புக்கு வந்து விட்டீர்கள்.. இயற்கை அழகு கொஞ்சும் பாடல்களை எல்லாம் எதற்காக வளரும் பருவத்தில் சொல்லிக் கொடுத்தார்கள்?.. அதையெல்லாம் காத்து நிற்பீர்கள் என்ற நம்பிக்கை.. ஆனால் - கற்றறிந்ததாகச் சொல்லிக் கொள்ளும் நீங்கள் செய்ததென்ன?..

இயற்கை வளங்களுக்கு எதிராக - நம்பிக்கைத் துரோகம்!..

ஆதியான தொழில்களைச் செய்தவர்கள் அத்தனை பேரும் அதைப் போட்டு விட்டு ஓடத் துணிந்தார்கள் என்றால் - நீங்கள் கற்ற கல்வியால் விளைந்ததென்ன!..

ஒன்றுமில்லை.. இயற்கையை அழித்ததைத் தவிர!..

நீரினால் மகரந்தச் சேர்க்கை.. பூச்சிகளினால் மகரந்தச் சேர்க்கை... ஏதொன்றுக்கும் வழி இல்லாமல் போனதே!.. 

... ... ... ...?



மரங்கள் உங்களுக்குச் செய்த தீமை என்ன?.. நிற்பதற்கு நிழல் கொடுத்தன.. உண்பதற்குக் கனி கொடுத்தன.. அப்படி இருந்தும் - உங்கள் வசதிக்காக  மரங்கள் எல்லாம் வேரோடு வெட்டிச் சாய்க்கப்பட்டன!.. உங்களுக்கு மட்டுமா மரங்கள் சொந்தம்?.. எண்ணற்ற பறவைகளின் அடைக்கலம் அல்லவா?.. 

... ... ... ...?

காற்று மாசு ஆயிற்று.. ஆறு நாசமாயிற்று.. பலநூறு சிற்றினங்கள் அழிந்தே போயின.. சிற்றினம் சேராதே!.. என்று பெரியவர்கள் சொன்னதை தப்பாக அர்த்தம் செய்து கொண்டீர்கள்!..

... ... ... ...?

வகை வகையாய் இயற்கையை அழித்து ஒழித்து விட்டு - 
உங்கள் வம்சம் மட்டும் வாழ்வாங்கு வாழ கனவு காணுகின்றீர்கள்!..

கால மாற்றத்தினால் கருத்தழிந்து போனோம்.. இனிமேல் ஓரளவுக்காவது - இயற்கையை மீட்டெடுக்க என்னால் ஆனதை செய்கின்றேன்.. பெரிதாக மாற்றம் வந்திட நான் விரும்பினால் மட்டும் போதுமோ!..

தரணியில் - மாற்றம் என்பது ஒவ்வொரு தனி மனிதனாலும் தான் ஆரம்பமாகி இருக்கின்றது..

இதுவரைக்கும் எந்த சிற்றுயிர்க்கும் நான் இடையூறு செய்ததில்லை.. இனியும் செய்யாதபடிக்கு என்னை நிலைப்படுத்திக் கொள்வேன்.. இயன்றவரை மரங்களைக் காப்பேன்.. பிறர்க்கும் இதனை எடுத்துரைப்பேன்..

மரம்.. அதுதான் இயற்கையின் வரம்!..
மரங்களை உங்கள் வாழ்விலிருந்து ஒருபோதும் அப்புறப்படுத்தாதீர்கள்!.. 
மரங்கள் அழிந்து போனால் ஒரு துளி நீருக்கு நீங்கள் பரிதவித்து நிற்பீர்கள்.. 
இதை என்றும் மறக்க வேண்டாம்!..

அன்பினுக்கும் அறிவுரைக்கும் நன்றி!..
ஆயினும்.. என் பெயர் என்னவென்று கூறவே இல்லையே!..

என்னை நிலைப்படுத்திக் கொண்டு - மரங்களைக் காப்பேன் - 
பிறருக்கும் இதனை எடுத்துரைப்பேன் என்றாய் அல்லவா!..

ஆமாம்!..

அப்போது உனக்கு ஒரு பெயர் கிடைக்கும்!..

அட!.. என் பெயர் எது என்று இப்போது புரிகின்றது!..

சொந்தப் பெயர் மறைந்து போகாமல் நிறைந்து நிற்க - நிலைத்து நிற்க - 
இந்தப் பெயரே துணைக்கு நிற்கும்!.. நல்வாழ்த்துகள்!..

* * *


மரம் வளர்ப்போம்..
மழை பெறுவோம்!..

மரங்கள்
இயற்கையின் வரங்கள்!..

மரங்கள் வாழ்க!..
மன்னுயிர்களும் வாழ்க!..  
* * *  

என் பெயர் எது?.. 
- எனும் இப்பதிவு, வலைப்பதிவர் சந்திப்பு 2015 
நடத்தும் மின்னிலக்கியப் போட்டிக்காக எழுதப்பட்டது..

வகை - 2
சுற்றுச் சூழல் விழிப்புணர்வு
(மண்ணில் உயிர்கள் வாழ மரங்களைக் காத்தல்)

இக்கட்டுரை எனது சொந்தக் கற்பனையே..
இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல..
போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் வெளிவராது..
- என்று, இதன் மூலம் உறுதியளிக்கின்றேன்..

அன்புடன்,
துரை செல்வராஜூ..  

ஞாயிறு, செப்டம்பர் 27, 2015

உலக சுற்றுலா நாள்

செப்டம்பர் - 27.

இன்று உலக சுற்றுலா நாள்..

1980ல் இருந்து உலகம் முழுதும் அனுசரிக்கப்படுகின்றது..

காணற்கரிய காட்சிகள் பலவும் பரந்த உலகில் விரிந்து கிடக்கின்றன..

பல்வேறு பட்ட மக்களின் கலை பண்பாடு நாகரிகம் - இவற்றை இயன்றவரை உய்த்து உணர்ந்து அனுபவித்தலே சுற்றுலாவின் நோக்கம்..


வேறெந்த நாட்டிலிருந்தும் -
வெளிநாட்டிற்கு ஒரு சுற்றுலா என்று விரலை நீட்டும் போது -

கண்ணெதிரே காட்சியாக விரிந்து நிற்பன - பாரதத்தின் சுற்றுலா தளங்கள்!..

ஆண்டுக்கு ஐந்து மில்லியனுக்கும் மேலாக வெளிநாட்டிலிருந்து -
இந்தியாவிற்கு சுற்றுலா பயணிகள் வருவதாக அறியப்படுகின்றது..

இது தான் - இவ்வளவு தான் என்றில்லாமல் -

கண்ணுக்கு இனிய மலைகள், வனங்கள், நதிகள், கடற்கரைகள் என,
பல்வேறு அழகின் சிரிப்புகளைத் தன்னகத்தே கொண்டது நம்நாடு..

பாரம்பர்யமிக்க வரலாறு, பண்பாடு - இவற்றுக்கான ஆதார பூமி - இந்தியா..

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த கட்டிடக் கலையை
நாம் கொண்டிருக்கின்றோம்!..

Elephanda Caves
வெளிநாடுகளில் இருந்து ஆன்மீக நாட்டம் கொண்டு -
புறப்படுவோரின் சரணாலயமாகத் திகழ்வது - நமது தாயகம்..

பழைமையும் புதுமையும் கலந்து விளங்கும் நாகரிகச்சின்னங்கள் தான் எத்தனை.. எத்தனை!..

மலையைக் குடைந்து வடிக்கப்பட்ட குடைவரை குகைக் கோயில்கள் தான் எத்தனை.. எத்தனை!..

உயர்ந்த தொழிற்நுட்பத்துடன் கூடிய தனித்துவமான கட்டுமானங்கள் அவை!..

வெள்ளியை உருக்கி வார்த்ததென பனி படர்ந்த இமாலயச் சிகரங்கள்.. 
பச்சைப் பட்டு போர்த்தினாற் போல மேற்கு மலைத் தொடர்கள்..

நீலச்சேலை கட்டிக் கொண்ட சமுத்திரப் பெண்ணாக கடற்கரை வெளி..

அவை மட்டுமா!..

ஒரு சிறு புல்லைக் கூடக் காண இயலாதபடிக்கு - பரந்து விளங்கும் பாலை நிலம்!..

மீனாட்சியம்மன் கோயில் - மதுரை
ஆயிரங்கால் மண்டபம் - மதுரை
மாமல்லபுரம்
அடர்ந்த வனங்கள், மலைச் சிகரங்கள், மலை இடுக்குகள், நீர்வீழ்ச்சிகள், நீர்த்தேக்கங்கள், நதிக்கரைகள், கடற்கரைகள் - என கொட்டிக் கிடக்கும் அழகை எல்லாம் பட்டியலிடவும் கூடுமோ!..

நகரங்களில், கிராமங்களில் - என, 

விண்ணுயர்ந்த நெடுங்கோபுரங்களுடன் - கண்ணைக் கவரும் சிற்ப அற்புதங்களுடன் - விளங்கும் கோயில்கள் தான் எத்தனை எத்தனை!..

கோயில்கள், அரண்மனைகள், கோட்டைகள், கொத்தளங்கள் - 
இன்னும் பழைமை மாறாமல் விளங்கும் மலை வாழிடங்கள்!..

அவை அத்தனையையும் - கண்டு மகிழ இந்த ஒரு பிறவி போதுமோ!?..

தஞ்சை பெரியகோயில்
தஞ்சை அரண்மனை - மணிமாடம்
தஞ்சை அரண்மனை - காவல்கோபுரம்
தஞ்சை அரண்மனை - மராட்டிய அரசவை
தஞ்சை அரண்மனை - சரஸ்வதி மஹால்
கங்கை கொண்ட சோழபுரம்
தாராசுரம்
மனோரா உப்பரிகை - மல்லிப்பட்டினம் - பட்டுக்கோட்டை
நீலகிரி மலைரயில்
வெளிநாட்டிலிருந்து நம்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளிடம் முறைகேடாக நடந்து கொள்ளும் மூடர்களும் மூர்க்கர்களும் நம்மிடையே இருக்கின்றனர்..

அவர்கள் அடக்கப்பட வேண்டியவர்கள். ஒழிக்கப்பட வேண்டியவர்கள்..

அங்கொன்றும் இங்கொன்றுமாக - நிகழும் வருத்தத்திற்குரிய சம்பவங்களைத் தவிர்த்து -

நம் நாட்டில் சுற்றுலா சிறப்புடனே திகழ்கின்றது..

ஹலபேடு - கர்நாடகா
கஜூராஹோ
இந்திய அரசின் சுற்றுலாத்துறை - அதன் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் நிறையவே செய்கின்றது

இந்திய சுற்றுலாத் தலங்களை இங்கே காணுக -  INCREDIBLE INDIA


இந்தியாவில் உலக பாரம்பர்ய சின்னங்கள் - 29.
இவற்றுள் - கலாச்சார சின்னங்கள் - 18.

கழுகுமலை - கோவில்பட்டி - தூத்துக்குடி
சித்தன்னவாசல் - புதுக்கோட்டை
கற்கால ஓவியங்கள் - திருமயம் - புதுக்கோட்டை
தமிழகத்தில் தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளவை - 410.

இவற்றுள் -
ஆதிச்சநல்லூர் போன்ற தொல்நகர்களுடன் கூடிய பாரம்பர்ய சின்னங்கள் - 248.

பெருமைமிகு தமிழக சுற்றுலாத் தலங்களை - இங்கே காணுக!..

இருப்பினும்,

சுற்றுலாத் தலங்களின் அழகை - பெருமையை, பாழ்படுத்துவதற்கெனவே - ஒரு கூட்டம் அலைகின்றது..

கையில் கிடைத்த கூரான கம்பிகளைக் கொண்டு ஆங்கே சுவர்களில் குடைந்து கிறுக்குவதும் , சிதைப்பதும் இவற்றின் நோக்கம்..

இந்த வக்கிரங்கள் களையப்பட வேண்டியவை..

இதில் இருவேறு கருத்துக்கள் இல்லை..

மேலும் - தமிழகத்தின் புராதனமான கோயில்களில் திருப்பணி என்ற பெயரில் கல்வெட்டுகளைச் சிதைக்கின்றனர்.. 

சிற்பங்களின் மீது கடுமையான வேகத்துடன் கூடிய Sand Blast செய்கின்றனர்..

சமீபத்தில் கும்பகோணத்தில் நாகேஸ்வரன் கோயிலில் - மணல் வீச்சு மூலம் - சிற்பம் ஒன்று பாழாகிப் போனது..

அனைத்து ஊடகங்களிலும் இந்தச் செய்தி வெளியானதும் - அந்தச் செயல் நிறுத்தப்பட்டது..

கலை வல்லுனர்கள் - திறமையுள்ள ஸ்தபதிகள் இவர்களைக் கொண்டு -
சீரமைக்கும் பணியை நடத்த வேண்டும் - என்பது அறநிலையத் துறைக்குத் தெரியாமல் போனது - வியப்புதான்!..

நம்மவர்கள் ஆக்கியதை விட - அழித்தவைகளே அதிகம்!..


திருக்குற்றாலம்
இருப்பினும் -

இயந்திரத்தனமாகிப் போன இன்றைய வாழ்வின் அவலங்களில் இருந்து சற்றேனும் நாம் நம்மை மீட்டெடுத்துக் கொள்ள சுற்றுலா பயணங்கள் இன்றியமையாதவை!.

நமக்கு அருகிலே இருக்கக்கூடிய ஆனந்த அருவிகள் - சுற்றுலாத் தலங்கள்!..

வாழுங்காலத்திலேயே மிகப்பெரிய சந்தோஷத்தைத் தரக்கூடியவை!.. 

கண் கவரும் கேரளம்

இந்த நாளில், பிறந்தநாள் காண்கின்றது - கூகுள்!..

நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வோம்!..


கவலைகளை எல்லாம் வீட்டிலேயே கழற்றிப் போட்டு விட்டு - 

அருகிலுள்ள ஏதாவதொரு சுற்றுலா தளத்தின் அழகில் - 
இயற்கை எழிலில் நாம் ஈடுபடுவோமேயானால் - 

இளமையையும் இனிமையையும் 
அழகையும் ஆரோக்கியத்தையும் 
மீட்டெடுக்கலாம் என்பது உறுதி!..

வாழ்க நலம்!.. 
* * *  

வெள்ளி, செப்டம்பர் 25, 2015

ஸ்ரீவேங்கடேச சரணம்

நாளெல்லாம் உந்தன் திருநாளே!..

- என என்றென்றும் விழாக்கோலம் பூண்டிருக்கும் திருப்பதியில் -

நிகழும் மங்கலகரமான ஸ்ரீ மன்மத வருடத்தின் பிரம்மோத்ஸவம் சிறப்பான முறையில் நிறைவேறியிருக்கின்றது..


கடந்த செப்டம்பர் 15 - நந்தவனத்திலிருந்து புற்றுமண் எடுத்து வந்து அதில் நவதானியங்களை விதைத்ததுடன் ( பாலிகை - முளைப்பாரி) திருவிழா தொடங்கியது..

மறுநாள் புதன் கிழமையன்று மாலை திருக்கொடியேற்றம்..

கொடியேற்றத்திற்குப் பின் - ஸ்ரீ மலையப்ப ஸ்வாமி சர்வ அலங்காரத்தில் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் திருவுலா..

தொடர்ந்து -

17/9 அன்று காலை சின்ன சேஷ வாகனத்திலும் இரவு அன்ன வாகனத்திலும்

18/9 அன்று காலை சிம்ம வாகனத்திலும் இரவு முத்துப் பந்தலிலும்

19/9 அன்று காலை கற்பக விருட்சத்திலும் இரவு ஸர்வபூபால வாகனத்திலும் எழுந்தருளினார்..




20/9 அன்று காலை மோகினி அலங்காரத்தில் திருக்காட்சி நல்கிய பெருமாள் - இரவு ஆண்டாள் பட்டுடுத்தி - கோதை நாச்சியார் சூடிக் களைந்த மாலையுடன் கருட சேவை அருளினார்..

21/9 அன்று காலை ஆஞ்சநேய வாகனத்திலும் இரவு யானை வாகனத்திலும்

22/9 அன்று காலை சூரிய பிரபையிலும் இரவு சந்திர பிரபையிலும் சேவை சாதித்தருளினார்.






23/9 அன்று காலை திருத்தேரோட்டம் நிகழ்ந்தது.. 

24/9 அன்று அதிகாலை ஸ்ரீ மலையப்ப ஸ்வாமி - தேவியருடனும் 
ஸ்ரீ சக்கரத்தாழ்வாருடனும் சூரிய புஷ்கரணிக்கு எழுந்தருளினார்.

ஸ்ரீ வராஹமூர்த்தியின் திருக்கோயிலுக்கு முன்பாக - திருமஞ்சனம் நடந்தது..




அதன் பின் திருக்குளத்தில் - ஸ்ரீ சக்கரத்திற்கு மூன்று முறை திருமுழுக்கு நடைபெற்றது.

அப்போது கூடியிருந்த பக்தர்களும் நீராடினர்..

மங்கலச் சடங்குகள் அனைத்தும் நிறைவேறிய பின் - 
பல்லக்கில் ஆரோகணித்து ஸ்ரீ மலையப்ப ஸ்வாமி திருக்கோயிலுக்கு எழுந்தருளினார்..

இந்த அளவில் பிரம்மோத்ஸவ வைபவங்கள் நிறைவேறிட - 
மாலையில் கொடியிறக்கத்துடன் திருவிழா மங்கலகரமாக நிறைவு பெற்றது..

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் - ஐயன் வேங்கடேசப் பெருமானுக்கு - குலசேகர ஆழ்வார் திருப்படியைத் தாண்டி திருமூலத்தானத்தில் -
மண் சட்டியில் தயிர் சோறு தான் பிரியமான திருவமுது!..

இதை சிந்தையில் கொள்வது அவசியம்!..

கோவிந்தன் வாழும் மலையில் 
கோலாகலங்களுக்குக் குறைவில்லை!..

கோவிந்தன் அன்பினில் கூடிவரும் 
அன்பர்களுக்கும் குறைவில்லை!..

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவ நின்கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துநின் பவளவாய் காண்பேனே!..
குலசேகராழ்வார்

ஸ்ரீ வேங்கடேச சரணம் சரணம் ப்ரபத்யே!..
* * *

வியாழன், செப்டம்பர் 24, 2015

பூஜ்யஸ்ரீ ஸ்வாமிகள்

ஆன்மிக வழிகாட்டும் பெரியோர்களுள் ஒருவரான -

பூஜ்யஸ்ரீ தயானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள் நேற்றிரவு (23/9) சித்தியடைந்தார்..



பலவகையிலும் -
குறிப்பாக மலைவாழ் மக்களுக்கு சிறப்பான சேவை செய்து வந்தவர்..

நுரையீரல் பாதிப்பு காரணமாக - கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்வாமிகள் -

சில மாதங்களுக்கு முன் - உயர் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்குச் சென்றார்..

தனது இறுதிக் காலத்தினை உணர்ந்த ஸ்வாமிகள் - கடைசி நிமிடங்களை ரிஷிகேஷில் உள்ள தனது ஆஸ்ரமத்தில் கழிக்க விரும்பினார்..

அதன்படி - கடந்த வாரம் அமெரிக்காவிலிருந்து ரிஷிகேசத்திற்கு திரும்பினார்..

தொடர்ந்த சிகிச்சைகள் - ஸ்வாமிகளின் விருப்பத்தின்படி நிறுத்தப்பட்டது...

இந்நிலையில் -
நேற்று முன்னிரவு 10.30 மணியளவில் ஸ்வாமிகள் சித்தியடைந்தார்..

ஸ்வாமிகளுக்கான இறுதிச் சடங்குகள் - நாளை ரிஷிகேசத்தில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

கோவை ஆனைகட்டியிலுள்ள - ஸ்வாமிகளின் ஆஸ்ரமத்தில் - பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்..


திருவாரூர் மாவட்டத்தில் மஞ்சக்குடி கிராமத்தில் 1930 ஆகஸ்ட் 15 அன்று பிறந்தவர் ஸ்வாமிகள்..

ஸ்வாமிகளின் இயற்பெயர் - நடராஜன்..
தந்தை - கோபால ஐயர். தாயார் வேலம்பாள்.

குடவாசலில் தொடக்கக் கல்வியை முடித்த ஸ்வாமிகள் - இந்திய விமானப் படையில் சேர்ந்தார்.. பணியில் நாட்டமில்லை. அங்கிருந்து விலகினார்..

அச்சமயத்தில் - ஸ்வாமி சின்மயானந்தரின் ஆன்மீக சொற்பொழிவுகளைக் கேட்டு - சின்மயா மிஷனில் தன்னை இணைத்துக் கொண்டார்..

தொடர்ந்து மதுரைக் கிளையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின் - பல நிலைகளைக் கடந்தார்..

1962ல் ஸ்வாமி சின்மயானந்தாஅவர்களிடம் நடராஜன் சந்நியாச தீட்சை பெற்றார்..

அப்போது அவருக்கு தயானந்த ஸரஸ்வதி என்ற பெயர் சூட்டப்பட்டது..


தொடர்ந்து - சின்மயா மிஷன் சார்பில் மும்பையில் தொடங்கப்பட்ட சாந்தீபனி சாதனாலயாவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

உடல்நிலை பாதிப்பின் காரணமாக - ஸ்வாமி சின்மயானந்தா அவர்களால் ஆன்மீகச் சொற்பொழிவுகளை நிகழ்த்த இயலாமற்போனது..

அந்தப் பணியை தயானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள் - தானே ஏற்று நடத்தினார்..

ஸ்வாமிகளின் சொழ்பொழிவுகளின் கவரப்பட்ட இளைஞர்களுக்காக - 1972ல் சின்மயா ஆஸ்ரமத்தில் மூன்றாண்டு குருகுல பட்டப் படிப்புகள் தொடங்கப் பட்டன.


1986ல் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள செய்லர்ஸ்பர்க் எனும் இடத்தில் ஆர்ஷ வித்யா குருகுலம் தொடங்கப் பெற்றது..

தொடர்ந்து - ரிஷிகேசத்திலும் ஆர்ஷ வித்யா பீடம் தொடங்கப் பெற்றது..

கோவை ஆனைகட்டியில் ஆர்ஷ வித்யா குருகுலமும்,
நாக்பூரில் ஆர்ஷ விஞ்ஞான குருகுலமும் தொடங்கப் பெற்றன..

மலைவாழ் கிராமங்களின் மக்களுக்கு மருத்துவம், கல்வி, சரியான பராமரிப்பில் உணவு வழங்கல் என பல்வேறு சேவைகள் ஸ்வாமிகளால் வழங்கப்பட்டன..

இதற்காக,  AIM For SEVA - எனும் இயக்கம் 2000ல் தொடங்கப்பட்டது..

இந்த இயக்கம் நாடுமுழுதும் 120 இடங்களில் தன் சேவையைத் தொடங்கியது..

கலாச்சார, சமூக, பொருளாதார ரீதியாக நலிவுற்றிருக்கும் மக்களுக்கு நல்வாழ்வளிப்பதே இதன் நோக்கம்..

இதன் மூலம் ஆயிரக்கணக்கான கிராமங்களில் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்..

ஸ்வாமிகளின் ஆஸ்ரம சந்நியாசிகளும் அங்கு பயின்ற மாணவர்களும் உலகின் பல்வேறு நாடுகளில் - வேதாந்தத்தைப் பயிற்றுவிக்கின்றனர்..



தயானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள் பல்வேறு சமயக் கருத்தரங்குகளை நடத்தியுள்ளார்..

ஆன்மிகம் மட்டுமின்றி கலை, கலாச்சாரம் மற்றும் சமூகப் பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டவர் - ஸ்வாமிகள்..


ஸ்வாமிகளின் பேருரைகள் - தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் முதலான மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன..

பூஜ்யஸ்ரீ தயானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகளை - 
ஆறாண்டுகளுக்கு முன் - சென்னை விமான நிலையத்தில் சந்தித்துள்ளேன்..

ஸ்வாமிகளின் ஆன்மா 
இறை நிழலில் இன்புற்றிருப்பதாக!..

ஓம் 
சாந்தி.. சாந்தி.. சாந்தி!..
* * *