நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மே 31, 2016

பகை எனும் புகை

இன்று சர்வதேச புகையிலை எதிர்ப்பு நாள்!..


மனிதனை அழிப்பதற்கு மனிதனால் உருவாக்கப்பட்டவை -
புகையிலை, பீடி, சுருட்டு, சிகரெட், பான்பராக், குட்கா - போன்றவை!..

எந்த ரூபத்தில் பயன்படுத்தினாலும் -
வாய், கன்னம், தொண்டை, நுரையீரல், கல்லீரல், உணவுக்குழாய்,
வயிறு, சிறுநீரகம் - என முழு உடலையும் சீரழித்து சிதைத்து -
சிதைக்கு அனுப்பி வைக்கும் வல்லமை பெற்றது - புகையிலை!..

புகைப்பவர்கள் பத்து பேரினுள் - இருவர் பெண்கள் என்கின்றது உலக சுகாதார நிறுவனம்!..

தற்காலத்தில் - ஆண்களுக்கு இணையாக பெண்களும் புகைப்பிடிக்கத் தொடங்கியிருப்பது - குறிப்பிடத்தக்கது...

புகைப் பழக்கமுடைய பெண்ணுக்கு - 
கருச்சிதைவும் கர்ப்பப்பை கோளாறுகளும் ஏற்படுகின்றன.. 
கருவிலுள்ள இளம் சிசுவும் வெகுவாகப் பாதிப்படைகின்றது

ஆண் பெண் யாராக இருந்தாலும் - சிகரெட் புகைப்பதனால் -
பக்கவாதம், ஒவ்வாமை, காசநோய், மலட்டுத் தன்மை, மாரடைப்பு 
- ஆகிய அதிரடி நோய்கள் சர்வநிச்சயம்!..

இவற்றுக்கும் மேலாக -

வாய், நுரையீரல்,சிறுநீரகம் - முதலான உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படுவது உறுதி!..


புகைப் பழக்கம் உள்ளவர்களால் சுற்றுச்சூழல் கெடுகின்றது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புகைப்பழக்கத்தால் நுரையீரலில் புற்று நோய் ஏற்படுகின்றது என்று இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட ஆண்டு - 1950.


புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் 
வருடந்தோறும் பல லட்சம் பேர் பரலோகத்திற்குப் 
பயணமாகின்றார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

புகையாளியிடமிருந்து தள்ளி நிற்பதை விட தூரமாகச் சென்று விடுவது   நலம்..

ஏனெனில் - ஒரு புகையாளியைச் சுற்றி நாற்பது அடி தூரத்திற்கு சுற்றுச்சூழல் மாசடைகின்றது...

சிகரெட் புகைத்த பின் - புகையாளியின் இரத்தத்திலுள்ள ஆக்ஸிஜன் இயல்பு நிலைக்குத் திரும்புதற்கு எட்டு மணி நேரமாகின்றது..

சிகரெட் புகையில் அடர்ந்திருக்கும் கார்பன் மோனாக்ஸைடு மிகக் கொடியது.
கார்பன் மோனாக்ஸைடு பலவிதமான நோய்களுக்கு அடிப்படை..

- என்றெல்லாம் சொல்கின்றார்கள் .

என்றாலும் திருந்துவோரைக் காணோம்!..

புகையாளிகளின் நுரையீரல் கெட்டுப் போய் விடுகின்றது.
அதனால் சுவாச பிரச்னைகள் - மற்றவர்களுக்கும் பரவுகின்றது.

எனவே பச்சிளங்குழந்தைகளை புகையாளியிடம் அனுமதிக்காமல் இருப்பது சாலச் சிறந்தது.

எதையும் அறியாமல் புகையின்பத்தில் (!?) ஆழ்ந்து
தமக்குத் தாமே தீ மூட்டிக் கொள்வதால் -

புகையாளிகள் தம்மைச் சேர்ந்தவர்களையும்
பெருந்துன்பத்துக்கு ஆளாக்கி விட்டு போய்ச் சேருகின்றனர்...புகையிலையினால் என்ன நன்மை என்பது இதுவரையில் தெரியவில்லை..
புகையிலை விளைவிக்கும் கேடுகள் பற்பல..

புகையிலையினுள் புதைந்திருக்கும் நிகோடின் புகைப்பவர்களைப் புதைத்து விடுகின்றது.

எரிந்து புகையும் சிகரெட் புகைப்பவனையும் எரித்து விடுகின்றது.

காசு கொடுத்து புகையிலைப் பொருட்களுடன் புற்று நோயையும் வாங்குவதில் படித்தவனும் படிக்காதவனும் சிறப்பிடம் பெறுகின்றனர்.

ஒவ்வொரு சிகரெட்டும் - புகைப்பவனின் வாழ்நாளில்
மகத்தான 18 நிமிடங்களைக் குறைக்கின்றது என்பது கூடுதல் செய்தி..

புகைப்பவனை நவீன எரிமேடைக்கு அனுப்பி வைப்பதைத் தவிர,
வேறொரு நல்லதையும் - புகையிலை செய்வதில்லை..புகையிலையின் தாயகம் - தென் அமெரிக்கா!..

இதன் காலம் கி.மு. 6000 என்கின்றார்கள்..

இந்த கொடூரத்தை - அங்கிருந்த பழங்குடி மக்களிடமிருந்து கைப்பற்றி - ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்திய பெருமை -

இந்தியாவுக்குக் கடல் வழி கண்டு பிடிக்கின்றேன்!.. - என்று கிளம்பி,
வழி தவறிப் போன கொலம்பஸுக்கு உரியது.

அந்தவகையில் கொலம்பஸ் செய்த கேடுகளுள் இதுவும் ஒன்று என்பர்.

நமது நாட்டில் இந்த புகையிலையை அறிமுகம் செய்தவர்கள் - ஐரோப்பியர்.

ஆயினும், அக்காலத்திலேயே - புகையிலையின் தீங்குகளை அறிந்திருந்தனர்.

அதனால் தான் - மற்ற நாடுகளிலும் பரப்பி விட்டார்கள் போலிருக்கின்றது!..புகைப் பழக்கத்தை விட்டுத் தொலைப்பதற்கு உறுதுணையாக இருப்பது - உலர் திராட்சை.

அவ்வப்போது உலர் திராட்சையை சுவைப்பதனால் புகைக்க வேண்டும் என்ற உணர்வு கட்டுப்படுகின்றது - என்றும் 

புகைப்பதால் இரத்தத்தில் கலக்கும் நிகோடினை - உலர்திராட்சை கரைத்து விடுகின்றது - என்றும் கண்டறிந்திருக்கின்றனர்...உலக அளவில் -
ஒவ்வொரு எட்டு விநாடிக்கும் ஒரு மனித உயிரை - 
மயானத்திற்கு அனுப்பி வைக்கின்றது - புகையிலை..

இந்தியாவில் -
ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ ஐந்து லட்சம் பேரை - 
தின்று தீர்க்கின்றது - புகையிலை...


சென்று சேர்ந்தாலும் சரி.. 
வந்து சேர்ந்தாலும் சரி!..
அழித்து ஒழிப்பது சினம்!..

அத்தகைய சினத்துடன் 
சரியாசனத்தில் அமர்ந்திருப்பது - புகை!..

புகை நல்வாழ்வுக்குப் பகை!..

நம் வாழ்வு நம் கையில்!..
வாழ்க நலம்!..
* * *

ஞாயிறு, மே 29, 2016

தஞ்சையில் கருடசேவை

திருஞானசம்பந்தப் பெருமான் முக்தி பெற்ற -
வைகாசி மூல நட்சத்திரத்தினை அனுசரித்து,

வருடந்தோறும் - தஞ்சை மாநகரில்,
முத்துப் பல்லக்குத் திருவிழா வெகுசிறப்பாக நிகழ்கின்றது.

அந்த வகையில் - கடந்த (மே/24) செவ்வாய்க் கிழமை
முத்துப் பல்லக்குத் திருவிழா நடைபெற்றது.

அன்றைய தினம் இரவு - திருஞானசம்பந்தப் பெருமானுடன்
தஞ்சை மாநகரிலுள்ள பிள்ளையார் கோயில்கள் மற்றும் முருகன் திருக்கோயில்களில் இருந்து மலர்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் - உற்சவமூர்த்திகள் எழுந்தருளினர். 

விடிய விடிய ராஜவீதிகள் நான்கிலும் திருவீதி உலா
சிறப்புடன் ஆடல் பாடல் இசை நிகழ்ச்சிகளுடன் நடந்தது. 

இதையடுத்து -


தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத சிறப்பாக - 
(மே/28)  நேற்றைய தினம் 23 கருட சேவை நடைபெற்றது..

முத்துப் பல்லக்கு திருவிழாவில் -
திருஞானசம்பந்தப் பெருமான் சிறப்பிக்கப்படுவதைப் போல - 

கருட சேவை திருவிழாவில் - 
திருமங்கை ஆழ்வார் சிறப்பிக்கப்படுகின்றார்..

திருமங்கை ஆழ்வாரால்  - 

''வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை மாமணிக் கோயில்!''.. 

- என போற்றி வணங்கப்பட்ட திவ்ய தேசம் தஞ்சை யாளி நகர்..

சிறப்புடைய தஞ்சை மாநகரில் -
மகத்தான கருட சேவைப் பெருவிழா நேற்று மங்கலகரமாக நிகழ்ந்துள்ளது.

அன்ன வாகனத்தில் ஆழ்வார்
மகோத்சவத்தின் முதல் நாளாகிய நேற்று முன்தினம் - வெள்ளியன்று
தஞ்சை யாளிநகர் ஸ்ரீ வீரநரசிம்ஹப் பெருமாள் திருக்கோயிலில்
திருமங்கை ஆழ்வார் எழுந்தருளி திவ்யதேசப் பெருமாளை மங்களாசாசனம் செய்வித்தார். 

அன்றிரவு திவ்ய தரிசன சேவை நிகழ்ந்தது.  

நேற்று (28/5) அதிகாலையில், தஞ்சை மாமணிக் கோயிலிலிருந்து
திருமங்கை ஆழ்வார் அன்னவாகனத்தில் எழுந்தருள -  

தஞ்சை மாமணிக்கோயில்  ஸ்ரீநீலமேகப் பெருமாளும் ஆண்டாளும், ஸ்ரீமணிக் குன்றப் பெருமாளும், தஞ்சை யாளிநகர் ஸ்ரீ நரசிம்ஹப் பெருமாளும் கருட வாகனத்தில் ஆழ்வாருக்குத் திருக்காட்சி நல்கி சேவை சாதித்தனர்.

தேவியருடன் பெருமாள்
காலை 6.30 மணியளவில் -
அன்ன வாகனத்தில் திருமங்கையாழ்வார் எழுந்தருளி முன்னே செல்ல -

சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாளுடன் ஸ்ரீநீலமேகப்பெருமாளும்   
ஸ்ரீ மணிக்குன்றப் பெருமாளும் 
யாளி நகர் ஸ்ரீ வீரநரசிம்ஹப் பெருமாளும் 

- தனித்தனியே கருட வாகனத்தில் எழுந்தருளினர்.

அதேவேளையில் வெண்ணாற்றின் வடகரையில் உள்ள திருக்கோயில்களில் இருந்தும் கருட வாகனங்கள் புறப்பாடாகின. 


1) ஸ்ரீ நீலமேக பெருமாள் - ஸ்ரீ ஆண்டாள்
2) ஸ்ரீ வீரநரசிம்ஹ பெருமாள்
3) ஸ்ரீ மணிக்குன்ற பெருமாள்
4) ஸ்ரீ வரதராஜ பெருமாள் - வேளூர்
5) ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள் - வெண்ணாற்றங்கரை

6) ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி - பள்ளி அக்ரஹாரம்
7) ஸ்ரீ லக்ஷ்மிநாராயண பெருமாள் - சுங்காந்திடல்
8) ஸ்ரீ யாதவ கண்ணன் - கரந்தை
9) ஸ்ரீ வெங்கடேச பெருமாள், கரந்தை
10) ஸ்ரீ யோகநரசிம்ஹ பெருமாள் - கொண்டிராஜபாளையம், கீழவாசல்.


11) ஸ்ரீ கோதண்டராமர் - கொண்டிராஜபாளையம், கீழவாசல்.
12) ஸ்ரீ வரதராஜ பெருமாள் - கீழராஜவீதி
13) ஸ்ரீ கலியுக வெங்கடேச பெருமாள், தெற்கு ராஜவீதி
14) ஸ்ரீ ராமஸ்வாமி, ஐயங்கடைத்தெரு (பஜார்)
15) ஸ்ரீ ஜனார்த்தன பெருமாள் - எல்லையம்மன் கோயில் தெரு


16) ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் - கோட்டை
17) ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் - கோட்டை
18) ஸ்ரீ ரங்கநாத பெருமாள் - மேல அலங்கம்
19) ஸ்ரீ விஜயராமஸ்வாமி - மேலராஜவீதி
20) ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் - மேலராஜவீதி


21) ஸ்ரீ பூலோககிருஷ்ணன் - சகாநாயக்கன் தெரு,
22) ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் - மானம்புச்சாவடி
23) ஸ்ரீ பிரசன்னவெங்கடேச பெருமாள் - மானம்புச்சாவடி.


மாநகரில் திகழும் மற்ற திருக்கோயில்களில் இருந்தும் கருடாரூடராக பெருமாள் எழுந்தருளி, தஞ்சை வடக்கு ராஜவீதியின் கொடிமரத்து மூலையில் ஒன்று கூடினர்.

கோலாகலம் கண்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து இன்புற்றனர்.. 

மகா தீபாராதனைக்குப் பின் - கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி என நான்கு ராஜவீதிகளிலும் சேவை சாதித்தருளினர்.

மீண்டும் கொடி மரத்து மூலையில் - ஒன்று சேரும் உற்சவமூர்த்திகளுக்கு மகாதீபாராதனை நிகழ்வுற்ற பின், 

உற்சவமூர்த்திகள் -  அவரவர் திருக்கோயில்களுக்கு திரும்பினர்.


அன்ன வாகனத்தில் - முன்செல்லும் திருமங்கை ஆழ்வாரைத்  தொடர்ந்து இருபத்து மூன்று கருட வாகனங்களின் வீதி உலா கண்கொள்ளாக் காட்சி... 

காலையில் இருந்தே ராஜவீதிகளில் ஆவலுடன் காத்திருக்கும் பக்தர்கள் - 
பகல் பொழுதில் - வெயிலையும் பொருட்படுத்தாமல் -

ஒவ்வொரு திருக்கோயிலின் பெருமாளையும் கருட வாகனத்தில் தரிசித்து, நம்மாழ்வார் அம்சம் எனும் சடாரி  சூட்டிக்கொள்வதில் ஆர்வம் கொண்டனர். 


மகத்தான கருடசேவையைத் தரிசித்திட வேண்டி - வெளியூர்களில் இருந்தும் - வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் - திரளான பக்தர்கள் தஞ்சைக்கு வந்திருந்ததாக அறியமுடிகின்றது.  


ஆதியில் பராசர மகரிஷிக்கும் மார்க்கண்டேயருக்கும் - பின்னாளில்,
திருமங்கை ஆழ்வாருக்கும் ப்ரத்யட்க்ஷமாகிய கருட வாகன தரிசனம் - 

எண்பது ஆண்டுகளுக்கு முன், தஞ்சை பள்ளியக்ரஹாரத்தில் வாழ்ந்த - ஸ்ரீதுவாதச கருடாழ்வார் ஸ்வாமிகளுக்கு மீண்டும் அருளப்பெற்றது.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்  - என, பன்னிரு கருட சேவையை, ஸ்ரீதுவாதச கருடாழ்வார் ஸ்வாமிகள் தான் தஞ்சை மண்ணில் துவக்கி வைத்து மக்கள் உய்யும் வழியைக் காட்டினார். 

அந்த மகத்தான அருளாளர் தொடங்கிய கருட சேவை - இன்று பரமன் அருளால் இருபத்து மூன்று கருட சேவை என தழைத்து விளங்குகின்றது.

இந்துசமய அறநிலையத் துறை, தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீராமானுஜ தர்சன சபையினர் இணைந்து விழாவினை வருடந்தோறும் சிறப்பாக நடத்துகின்றனர்.


அந்தவகையில் - 

மகத்தான இந்தத் திருவிழா நேற்று காலை தஞ்சை ராஜவீதிகளில் நிகழ்ந்தது..

இந்தப் பெருவிழாவினை அடுத்து -
இன்று அனைத்துத் திருக்கோயில்களிலும் நவநீத சேவை நிகழ்கின்றது..

ராஜவீதிகளில் வெண்ணெய்த் தாழியுடன் 
பல்லக்கில் பெருமாள் எழுந்தருள்வார்.

30/5 திங்களன்று விடையாற்றி நடைபெறும்.  


ராஜவீதிகளின் நெடுகிலும் நீர்மோர், பானகம், சித்ரான்னங்கள் 
- என, பக்தர்களுக்கு வழங்கி மகிழ்ந்திருக்கின்றனர் - இறையன்பர்கள்...

இன்றைய பதிவில் - 
நேற்று கோலாகலமாக நிகழ்ந்த கருட சேவையின் படங்கள்..

அன்புடன் வழங்கிய 
ஸ்ரீ சௌரிராஜன் ரகுநாதன் அவர்களுக்கும்
அனுதினம் கருட சேவை தளத்திற்கும் 
மனமார்ந்த நன்றி!..
***

இப்பெருவிழா சிறப்புடன் நிகழ்வதற்கு பலவகைகளிலும் உறுதுணையாய் விளங்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வணக்கமும் நன்றிகளும்!..

இருப்பினும் - இந்த வைபவத்தில் கலந்து கொள்ள இயலாதவாறு மிகவும் நலிவடைந்த நிலையில் சில திருக்கோயில்களும் நகரில் உள்ளன.

எதிர் வரும் ஆண்டுகளில் அந்தத் திருக்கோயில்களில் இருந்தும் பெருமான் - திருவீதி எழுந்தருள வேண்டும் என்பது நமது பிரார்த்தனை. 

அத்துடன் வேறொரு விருப்பமும் மனதில் உண்டு. 
உலகளந்த மூர்த்தி உள்ளுறையும் எண்ணம் ஈடேறிட அருள வேண்டும்..கருடவாகனனாக எழுந்தருளி
நம் கவலைகளைத் தீர்க்க வருபவன்
கார்மேக வண்ணன்!..

பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள்வதன் 
உட்பொருள் மகத்தானது.

அழைத்தவர் குரலுக்கு வருபவன் - அவன்!..
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிபவன்  - அவன்!..

தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்
தமருள்ளும் தண்பொருப்புவேலை - தமருள்ளும்
மாமல்லைகோவல் மதிட்குடந்தை என்பரே
ஏவல்ல எந்தைக்கு இடம்!.
-: பூதத்தாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
* * *

புதன், மே 25, 2016

தஞ்சை முத்துப் பல்லக்கு

சோறுடைத்த சோழ நாட்டின் சுந்தரத் திருநகர்  தஞ்சையம்பதி!..

நீர் வளமும் நிலவளமும் நிறையப் பெற்ற திருத்தலம். 

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாட 
நெஞ்சை அள்ளும் தஞ்சை..

என்பதும், 

கலைகளின் தாய்வீடு தஞ்சைத் தரணி  

- என்பதும் - இந்நகரின் சிறப்பு அடைமொழிகள்.. 

ஆனந்த விநாயகர்
புராணச் சிறப்புகள் வரலாற்றுச் சிறப்புகள் என அனைத்தும் ஒருங்கே உடைய தஞ்சை மாநகரில் - 

நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பாரம்பரிய விழாவான முத்துப் பல்லக்குத் திருவிழா, நேற்றிரவு கோலாகலமாக நடைபெற்றது. சமய குரவர்களுள் ஒருவரான திருஞான சம்பந்தப் பெருமான் முக்தி பெற்ற நாள் வைகாசி மூலம்...

அலங்கார பல்லக்கில் ஞானசம்பந்தர்

வைகாசி மூல நட்சத்திரத்தினை அனுசரித்து முத்துப் பல்லக்கு திருவிழா தஞ்சை மாநகரில் ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் -  வைகாசி மாதத்தில் ,

ஞானசம்பந்தப் பெருமானின் குருபூஜையின் போது  குறிச்சித் தெரு முருகன் கோவிலில் இருந்து - முதன்முதலாக முத்துப் பல்லக்கு  புறப்பட்டது. 

இடையில் சிலகாலம்  - பல காரணங்களினால் சற்றே எழில் குன்றியிருந்தது. ஸ்ரீ வல்லபை விநாயகர் - கீழவாசல்
தற்போது - தஞ்சை மாநகரில் உள்ள பெரும்பாலான கோயில்களில் இருந்தும் முத்துப் பல்லக்கு புறப்படுவதற்கு, 

அந்தந்த பகுதிகளில் உள்ள நல்ல மனம் கொண்ட இறையன்பர்கள்  இயன்றவரை பணி செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு முத்துப்பல்லக்கு விழாவினை முன்னிட்டு தஞ்சை மாநகரின்-

கீழவாசல், ஆட்டுமந்தைத் தெரு, குறிச்சித் தெரு,  அரிசிக்காரத் தெரு,
வார்காரத் தெரு, பட்டு நூல்காரத் தெரு, கிருஷ்ணன் கோயில் தெரு, புல்லுகாரத் தெரு, வண்டிகாரத் தெருமகர்நோன்புச் சாவடி,
கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேலராஜவீதி, வடக்கு வாசல்  

- என, பல்வேறு பகுதிகளிலிருக்கும் விநாயகர், முருகன் திருக்கோயில்களில் இருந்து மங்கள இசை முழங்க -

முத்துப் பல்லக்குகள் புறப்பட்டு கீழ ராஜவீதி மாமா சாகேப் மூலைக்கு வந்து சேர்ந்தன.

மாமா சாகேப் மூலை என்பது - கீழராஜ வீதியும் தெற்கு ராஜவீதியும் சந்திக்கும் இடம். பழைய பேருந்து நிலையத்திற்கு சற்று அருகில்..

பல்லக்குகளில் விநாயகர், முருகன் உற்சவ திருமேனிகள் மற்றும் திருஞான சம்பந்தரின் திருஉருவப்படங்கள் ஆபரணங்களாலும் மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பல்லக்குகள் பூக்களாலும் பலவண்ண காகிதங்களாலும் மணிச்சரங்களாலும் வண்ண மயமான குஞ்சங்களாலும்  மின் விளக்குகளாலும் தஞ்சைக்கே உரிய கலை நயத்துடன் எழிலாக வடிவமைக்கப்பட்டிருந்தன.  
பழைமையான கோயில்களான -   
கரந்தை - கருணாசாமி திருக்கோயில்
கீழவாசல் - வெள்ளைப் பிள்ளையார் திருக்கோயில்
பாம்பாட்டித்தெரு - சிந்தாமணி பிள்ளையார் திருக்கோயில் 
கொள்ளுபேட்டைத் தெரு - ஆனந்த விநாயகர் திருக்கோயில்

குறிச்சித் தெரு - சுப்ரமணியசாமி திருக்கோயில்
ஆட்டுமந்தைத் தெரு - தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்
சின்ன அரிசிக்காரத் தெரு - சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்

மகர்நோன்புச் சாவடி - ஜோதி விநாயகர் திருக்கோயில்
பூக்காரத்தெரு - சுப்ரமணியசுவாமி திருக்கோயில்.
ரயிலடி - வரசித்தி விநாயகர் திருக்கோயில்
மாமா சாகேப் மூலை - சித்தி விநாயகர் திருக்கோயில் 

இவற்றுடன் இன்னும் சில திருக்கோயில்கள் என -  
திருவிழாவில் பதினெட்டிற்கும் மேற்பட்ட பல்லக்குகள் தஞ்சையின் நான்கு ராஜ வீதிகளிலும் வலம் வந்தன. 


இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

இன்று காலை எட்டு மணி அளவில் பல்லக்குகள் -  அந்தந்த கோயில்களுக்குத் திரும்பிச் சென்று சிறப்பு பூஜைகளுடன் நிலை நிறுத்தப்பட்டன. புகைப்படங்கள்: 
Fb Thanjavur City , திரு., ஹரி மற்றும் திரு.. ஆறுமுகம் நடராஜன் -
ஆகியோர்க்கு மனமார்ந்த நன்றி
***


ராஜவீதிகளின் பல இடங்களிலும் சித்ரான்னங்கள் வழங்கலும் அன்ன தானமும் நடைபெற்றதாக அறியமுடிகின்றது..

முத்துப் பல்லக்கு விழாவினை முன்னிட்டு,  தஞ்சை மாநகரம்  முன்தினம் இரவு விழாக்கோலம் பூண்டிருந்தது. 

ராஜ வீதிகளில் தலையாட்டி பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள், இனிப்பு, பலகார வகைகள் - என, வியாபாரம் விடியும் வரை - களை கட்டியது. 


பல்லக்கின் முன் இசையரங்கம்
நூறாண்டுகளையும் கடந்து நடைபெறும் இவ்விழா - 
தஞ்சை மாநகருக்கு மேலும் புகழ் சேர்ப்பதாக அமைகின்றது.  

இவ்விழா  -  தஞ்சை மாநகரை நூறு ஆண்டுகளுக்கு முந்தைய சூழலுக்கு அழைத்து சென்றதில் மக்களின் மனங்களில் மகிழ்ச்சி ததும்பியது..

சென்ற ஆண்டுகளைப் போலவே - இந்த ஆண்டும் முத்துப் பல்லக்கு 
வைபவத்தினைப் பதிவிடுவதில் நானும் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்...

நிகழ்வுகளைப் படங்களாக வழங்கிய இறையன்பர்களுக்கு மீண்டும் நன்றி..

நேற்று முத்துப் பல்லக்கு திருவிழா நடைபெற்றதைத் தொடர்ந்து -  
அடுத்த சில தினங்களில் - வைகாசி திருவோண நட்சத்திரத்தை அனுசரித்து
மாபெரும் 23 கருட சேவையும் - தஞ்சை மாநகரில் நிகழ இருக்கின்றது..

மகிழ்ச்சி, மனநிறைவு 
இவைகளே நல்வாழ்விற்கு அடித்தளம்!.. 

வாழ்க நலமுடன்..
வாழ்க வளமுடன்!..  
***