நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மே 21, 2016

வைகாசி விசாகம்

வெங்காள கண்டர்கைச் சூலமும் திருமாயன்
வெற்றிபெறு சுடராழியும்

விபுதர்பதிக் குலிசமும் சூரன் குலங்கல்லி
வெல்லாதெனக் கருதியே

சங்க்ராம நீசயித் தருளெனத் தேவரும்
சதுர்முக னும் நின்றிரப்பச்

சயிலமொடு சூரனுடல் ஒருநொடியிலுருவியே
தனியாண்மை கொண்ட நெடுவேல்

கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி
கௌமாரி கமலாசனக்

கன்னிநா ரணிகுமரி திரிபுரை பயிரவிஅமலை
கௌரி காமாக்ஷி சைவ

சிங்காரி யாமளை பவானி கார்த்திகை கொற்றி
திரயம்பகி அளித்த செல்வச்

சிறுவன் அறுமுகன் முருகன் நிருதர்கள் குலாந்தகன்
செம்பொன் திருக்கை வேலே!..


அண்ட பகிரண்டமும் அதிர்ந்து தான் நின்றது!..

மாயையின் மகனை அழிக்க ஒண்ணாதோ?..

அஜமுகி எனும் தங்கையுடனும் தாரகன் மற்றும் சிங்க முகன் எனும் தம்பியரோடும் கிரவுஞ்சம் எனும் மாய மலையைக் கைக் கொண்டு அடாதன எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கும் சூர பத்மனை அழிக்கவே இயலாதோ!..

ஆயிரத்தெட்டு அண்டங்களிலும் நூற்றெட்டு யுகங்களாகக் கொடுங்கோல் ஆட்சி செய்து கொண்டிருக்கும் சூரனுக்கு முடிவு தான் எப்போது?..

காளம் எனும் விஷத்தைத் கண்டத்தில் கொண்டிருக்கும் காளகண்டரின் திரிசூலப் படை எங்கே?..

மாயனும் ஆயனும் ஆகிய ஸ்ரீ ஹரிபரந்தாமனின் சக்ராயுதம் தான் எங்கே?..

திக்கெட்டும் காக்கும் தேவேந்திரனின் வஜ்ராயுதமும் போய்ச் சேர்ந்தது எங்கே?..

சூரனையும் அவன் குலத்தையும் முற்றாக அழித்து ஒழிக்கத் தம்மால் ஆகாது!..

- எனக் கருதி, இவையெல்லாம் - தம்மைத் தாமே ஒளித்துக் கொண்டனவா!..

ஆயினும்,

சூரன் மாள்வதற்கு ஒரு மகன் எம்மிடமிருந்து உதிப்பான்!..

- என்று ஈசன் அருளிய வரத்தின் மீது எமக்கு நம்பிக்கை உண்டே!..  அடாதன எல்லாம் செய்து கொண்டிருக்கும் சூரனை ஜயித்து அருள வேண்டும்!.. அவனையும் அவனது கூட்டத்தாரையும் அழித்தருளவேண்டும்!..

தேவர்களும் நான்முகனும் கூடி நின்று வேண்டிக் கொண்ட வேளையில் -

கிரவுஞ்ச மலையையும் சூரர் தம் பெருங்கூட்டத்தையும் ஒரு நொடியில் ஊடுருவி அழித்து ஒழித்ததே - ஓங்கார வேல்!..

அது தனி ஆண்மை கொண்ட பெருவேல் அல்லவா!..

அந்த வேலாயுதமே அளப்பரிய பெருமை கொண்டதெனில் -

அதனை ஏந்தியிருக்கும் அறுமுகச் சிவபாலனின் பெருமை தான் என்னே!..


அவன் -

எல்லாம் வல்ல ஈசன் பிரளயம் எனும் பெருங்காலத்தில் ஊழித் தாண்டவம் இயற்றும் போது - ஈசனுக்கு இணையாக ஆடிக் களிக்கும் கங்காளியின் அன்பு மகனல்லவா!..

அவன் -

சாமுண்டி, வராஹி, இந்த்ராணி, கௌமாரி, நாரணி, குமரி, திரிபுரை, பயிரவி, அமலை, கௌரி,  - என்றெல்லாம் திருப்பெயர்களைக் கொண்டு - கமலாசனத்தில் வீற்றிருக்கும் நித்ய கன்னியின் திருமகனல்லவா!..

அவன் -

உலகேழையும் காத்தருளும் காமாட்சியின் மகனல்லவோ!..

அதனால் தானே - அசுரர்களிடமிருந்து அண்டங்களைக் காத்தருள - திருக்கையில் வேலேந்தி நின்றருளினான்!..

அவன் -

யாமளை, பவானி - என்றெல்லாம் புகழப்படும் சைவ சிங்காரியின் திருக்குமரன்!..

சைவ சிங்காரியாகிய கொற்றவை - போர்க்களங்களின் நாயகி!..

அதனால் தானே - போர் முகத்தில் தேவ சேனாதிபதியாகத் திருக்கோலம் கொண்டருளினான்!..

என்னாலோ - எனது சக்தியாலோ அன்றி உனக்கு வேறு எந்த விதத்திலும் வீழ்ச்சியில்லை!..

- என்பதே - ஈசன் சூரபத்மனுக்கு அளித்திருந்த வரம்..


அதன்படியன்றோ -

தானும் ஒருபாதியாகி ஈசனுடன் நின்ற தற்பரை -
தவப் புதல்வனைப் பெற்றெடுத்துப் பேருவகை கொண்டாள்..

அவள் உண்ணாமுலை நாயகி.. ஆயினும் -

தன் மகனுக்குப் பாலூட்டுதற்கு - என,
தானே - கார்த்திகைப் பெண்கள் எனும் வடிவம் தாங்கி வந்தாள்!..

ஈசன் மூன்று கண்களை உடையவன்..
அவ்வண்ணமே அம்பிகையும் மூன்று திருவிழிகளை உடையவள்..

திரயம்பகி எனும் திருப்பெயர் கொண்டவள்...
அம்பிகை அருளிய செல்வச் சிறுவன் - அறுமுகன்!..

அறுமுகனாகிய முருகப் பெருமான் ஞானமே வடிவாகியவன்!..

ஞான வடிவாகிய அவனால் தான் - அஞ்ஞானம் எனும் மாயையின் மக்களாகிய சூரபத்மனும் தாரகனும் சிங்கமுகனும் அஜமுகியும் அசுரப் பெருங் கூட்டத்தாரும் அடியோடு அழிந்தனர்...

திருமுருகன் தேவ சேனாதிபதியாக போர்க் கோலங்கொண்டு நின்ற போது அவனது திருக்கரத்தினில் திகழ்ந்த பெருமையை உடையது - வேல்!..

ஞானாசிரியன் எனவும் ஞானபண்டிதன் எனவும் போற்றி வணங்கப்படும் பெருமைக்கு உரியவன் முருகப்பெருமான்!..

அப்பெருமானின் திருக்கரத்தினில் இலங்கும் செம்பொன் வேலும் ஞானத்தின் வடிவம் தான்!..

அதுவே அஞ்ஞானத்தின் வேரறுக்க வல்லது!..


ஞானமே வடிவாகிய வயலூர் முருகனின் தனிப்பெருங் கருணையினாலே!..

- என்று, மொழிந்து தான் -

அருள்மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் - தமது இலக்கியப் பேருரைகளைத் தொடங்குவார்...

முருக பக்தர்கள் இதை எந்நாளும் நினைவில் கொண்டிருப்பர்..

இன்று மகத்தான விசாக நட்சத்திரம்..

வைகாசி விசாகத்தில் தான் திருமுருகன் உதித்தருளினன்..

திருமுருகனின் நட்சத்திரமாகி விசாகம் தனிப் பெருமை கொண்டது.. -

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தில் விசாகத் திருவிழா
தேவயானையுடன் திருமுருகன்
வயலூர் வள்ளல் பெருமான்
அருவமும் உருவமும்ஆகி அநாதியாய் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகி
கருணைகூர் முகங்கள் ஆறும்கரங்கள் பன்னிரண்டும் கொண்டு
ஒருதிருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய!..

என்றுரைப்பார் - கச்சியப்ப சிவாச்சார்யார்..

இந்த நன்னாளில் 
எம்பெருமான் கந்தவேளின் 
கழலடிகளைக் கருத்தில் கொள்வோம்..

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!..

ஹரஹர சிவசிவ 
ஷண்முக சரணம்!..  
***

15 கருத்துகள்:

 1. வைகாசி விசாகம் விரிவான விடயங்கள் நன்று ஜி வாழ்க நலம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. தகவல்கள் மற்றும் படங்கள் - மிகச் சிறப்பான பகிர்வு. நன்றி ஜி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும்ம் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. வைகாசி விசாகம் பௌத்தத்தோடும் தொடர்புடையது ஐயா. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. வைகாசி விசாகம் பதிவு மிக அருமை.. படங்கள் எல்லாம் அழகு.
  நேற்று முதன்முறையாக கந்தனுக்கு பால்குடம் எடுத்தேன் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பாலமுருகன் கோவிலில். மனதுக்கு நிம்மதி தந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   கந்தனுக்குப் பால்குடம் எடுத்த செய்தியறிந்து மிக்க மகிழ்ச்சி..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. விரிவான விளக்கம் ஐயா வைகாசி விசாகம் பற்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. அருமையான பகிர்வு ஐயா...!!!

  பதிலளிநீக்கு
 8. விசாகம் குறித்த தங்கள் பதிவு அருமை,,, புகைப்படங்கள் அனைத்தும் அழகு,, வயலூர் முருகன் கேள்விப்பட்டுள்ளேன் சென்றதில்லை,,, அருமையாக உள்ளது பதிவு.

  பதிலளிநீக்கு
 9. வைகாசி விசாகம் தகவல்கள் அறிந்தோம் ஐயா. படங்கள் வழக்கம் போல அருமை...

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..