நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மே 04, 2016

மழைச் சாரல் 1

பொன் அளந்த புத்தூர்..

அதுதான் - அந்த கிராமத்தின் பெயர்..

எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென்று!...

பட்டு விரித்தாற்போல் இருந்தது அந்த ஊர்..

அந்தப் பக்கமாக வளமான ஆறு..

ஆங்கே, ஆற்றின் வழிதனை அடைப்பார் யாரும் இல்லாததால்
இளங்குமரியின் கைவளை ஒலியினைப் போல் நீரோட்ட சலசலப்பு ..

அதிலும் -
விஷக் கழிவைக் கலப்பார் யாரும் இல்லாததால்
அறிஞர் தம் இதயம் போல - ஆற்று நீர் தெள்ளத் தெளிந்திருந்தது..

அந்த நீரில் - வெள்ளிச் சிதறல்களாக
எதிர் நீச்சலிட்டு எகிறிக் குதிக்கின்ற அயிரை மீன்கள்..

அழகு.. பேரழகு!.. அதை எல்லாம் காணக் கண்கோடி வேண்டும்..


நீரோடும் ஆற்றின் கரை நெடுக
காய் கனியுடன் நிழலும் நல்கும் நெடுமரங்கள்..

சூரியனின் கண்கள் படாதவாறு நிலமகளைக் காத்திருந்தன..
நிழலால் போர்த்தியிருந்தன - அடர்த்தியான கிளைகள்..

வெட்டுவாரும் விரட்டுவாரும் இல்லாததால் -
தன்னிச்சையாய்ப் பெருகிக் களித்திருந்தன
பல்வேறு வகையான பறவை இனங்கள்..

அந்த ஊரின் மக்களும் வெட்டிப் பேச்சுகளினின்று விலகியவர்களாக
ஏர் கலப்பை, மண்வெட்டி கூடை கடப்பாரை, அரிவாள் இவற்றுடன்
கருமமே கண்ணாக இயங்கிக் கொண்டிருந்தனர்..

வேளாண்மை..

அதுதான் அவர்களுடைய உயிர் மூச்சு..

பகட்டு வார்த்தைகளில் மயங்கி
பாரம்பர்யத்தை விட்டுத் தொலைக்காத காலம் அது..

அப்படியெனில், பலநூறு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது!..

அன்றையப் பொழுதும் நன்றாகத் தான் விடிந்திருந்தது..

சூரியன் உச்சிக்கு ஏறிய வேளை..

யாரும் நினைக்கவில்லை - இப்படியாகும் என்று!.

ஏராளமான விழுதுகளுடன் ஆலமரம்.. விரிந்து படர்ந்திருந்தது ..

அந்த ஆலமரத்தின் அருகில் அழகான குளம்..


அந்தக் குளத்தில் -
அல்லியும் ஆம்பலும் ஆரையும் கோரையும் மண்டிக் கிடக்க
குங்குமச் சிழிழ்களாக - தாமரை மலர்கள் சிரித்துக் கொண்டிருந்தன..


அந்தக் குளக்கரை ஆலமரத்தின் கீழே - அழகான பிள்ளையார்..

ஊரின் நடுவாக இருந்த ஆலமரத்து நிழலில் நீதியும் நேர்மையும் விளைந்தன..

நிழலில் விளைந்த நீதியும் நேர்மையும் - அந்த ஊருக்கே நடுவாக இருந்தன...

அந்த ஆலமரத்தில் -
ஆயிரக்கணக்கான குருவிகள் குடியிருந்தன.. கூடியிருந்தன..

இருந்தாலும் - கூட்டுக்குள் கூடிக் குதுகலித்துக் கொலுவிருந்தன.

அந்த ஆலமரத்தின் விழுதுகளில் நூற்றுக்கணக்கான
வானரங்களும் தத்தம் துணைகளுடன் விளையாடிக் களித்திருந்தன..


விலங்குகள் ஆனாலும் - மனிதர்களைப் போலல்லாமல்
அளவுடன் பெற்று வளமாக வாழ்ந்து கொண்டிருந்தன..

அத்தகைய ஆலமரத்தின் நிழலுக்குள் வந்து நின்றார் அந்தத் துறவி..

வியர்த்திருந்த கோலம் - வெகு தூர பயணத்தைக் கூறிற்று...

கையில் கமண்டலம். காவு தடி. தோளில் பழந்துணி மூட்டை...

அருகில் குளத்தைக் கண்டதும் அவருடைய கண்கள் விரிந்தன..

அழுக்குத் துணியைக் களைந்து விட்டு அலுப்பு தீரக் குளிக்க முற்பட்டார்...

இன்னும் ஒரு நொடிதான்..

குளத்துக்குள் இறங்கி விடலாம்..

யாருங்க அது.. தண்ணீல இறங்கறது!..

கம்பீரமான குரல்!.. சற்றே அதட்டலுடன்...

யாரப்பா அது?..தண்ணீரைத் தடுப்பது!..

துறவி ஆச்சர்யத்துடன் வினவினார்..

தண்ணிய யாரும் தடுக்கலீங்க.. குளத்துக்குள்ள இறங்கப்படாது..ன்னு தான் தடுக்குறேங்!..

இரண்டும் ஒன்று தானே!..

இல்லீங்க.. ரெண்டும் வேற.. வேறங்க!..

என்னது?.. ரெண்டும் வேற.. வேறயா!..
நான் யார் தெரியுமா?.. என்னிடமா அடாவடி பேசுகிறாய்!..

நீங்க யாரா வேணாலும் இருந்துட்டுப் போங்க!.. இந்தக் குளம் சோழ மகாராஜா வெட்டிக் கொடுத்ததுங்க!.. இதுக்கு மேல காக்கா பறக்காது.. இதுக்குள்ள நாரை எறங்காது!..

யார்டா அவன் சோழன்?.. காக்கா பறக்காது.. நாரை எறங்காது!..
என்னடா கதை விடுறீங்க!..

ஐயா.. மரியாதை முக்கியமுங்க.. எங்க ஆத்தா காதுல விழுந்தா போதும்!.. நாக்கை இழுத்து புடுச்சி அறுத்துப் போட்டுடுமுங்க!..

எச்சரிக்கை காதில் விழுந்ததும் திடுக்கிட்டுப் போனார் - துறவி...

தஞ்சாவூரு பெரிய கோயிலக் கட்டுனாரே.. ராஜராஜ மகாராஜா!.. அவரு பேரச் சொல்ற குளமுங்க இது!..

குளத்துல சேகரமாகிற தண்ணி தானா தெளிஞ்சி - 
பூமிக்கு ஆழத்தில போட்டுருக்கிற குழாய் வழியா ஊர்ல இருக்கற 
அத்தனை கேணிங்களுக்கும் போய்ச் சேருது... 
ஜனங்க அவங்க அவங்க வீட்டிலய இறைச்சுக்குவாங்க..

கேணி இல்லாத குடித்தனக்காரங்க இங்கே வந்து சேந்திக்குவாங்க!.. 
இது ஊருக்குப் பொதுவான நல்ல தண்ணிக் குளமுங்க.. 
யாரும் கையைக் காலைக் கழுவி புழங்கக் கூடாது!..  
இது ஊரு கட்டுமானமுங்க!..

மீறினால்?..

நான் ஊர்க்காவல்.. தலையாரி முன்னோடி வீரன்..  தடி கொண்ட தாண்டவன்..  ஊருக்குக் கேடு செய்தால் கண்ட துண்டமாக்கிடுவேன்!..

ஆ!.. நான் பெருந்துறவி!.. என்னிடமே வாலாட்டுகிறாயா?..

ஏன்.. உங்களுக்கு குடிக்க நல்ல தண்ணி வேணாமுங்களா?.. 
பெரிய தொறவி.. அப்படீங்கிறீங்க..  முதல்லே மனசைத் தொறந்து வைங்க!.. நல்ல தண்ணிய பாழாக்க கூடாது..ன்னு இத்தனை வயசாகியும் உங்களுக்குத் தெரியலையா!..

பேச்சு இரைச்சலாகும் வேளையில் முன்னோடி வீரனின் அருகிருந்த
காவல் நாய்கள் தரையைப் பிறாண்டியபடி சீற்றமடைந்தன..

அதற்குள் - ஆங்காங்கே வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த மக்கள் திரண்டு ஓடி வந்து விசாரித்தனர்..

முன்னோடி வீரன் நடந்ததை விவரித்தான்..

கோபத்துடன் பொங்கினார் துறவி..

என்னை அவமரியாதை செய்து விட்டான் உங்கள் தலையாரி!.. 

இல்லீங்களே.. நல்லது தானே சொல்லியிருக்கிறான்... நீரின்றி அமையாது உலகு.. அப்படினு தானே வள்ளுவரும் சொல்றாரு..

ஓ!...  திருக்குறள் எல்லாம் தெரியுமா!.. அந்த ஆணவத்திலே தான் எனக்கு அவமரியாதை செய்தீர்களோ?..

அப்படியெல்லாம்.. இல்லீங்க ஐயா!..

உங்களோட நிலவளம் அழியட்டும்.. நீர்வளம் அழியட்டும்..
ஒட்டு மொத்தமா.. இந்த ஊருல பன்னிரண்டு வருசத்துக்கு
மழையே பெய்யாம போகட்டும்!..

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது துறவிக்கு!..

துறவியின் சாபத்தினைக் கேட்டு -
ஊர்மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்..

சிவனே!.. - என்றிருந்த பிள்ளையாரும் திடுக்கிட்டார்..

என்ன சாமி.. இந்த மாதிரி சாபங் கொடுத்திட்டீங்க!..

உங்களோட ஆணவம் அழியட்டும்.. அகங்காரம் ஒழியட்டும்..

சரி.. அதுங்க போனா போய்த் தொலையட்டும்.. 
ஊருக்கு சாப விமோசனமாவது கொடுங்க!..

கிடையாது.. அதெல்லாம் கிடையாது.. 
உங்களுக்கு விமோசனமே கிடையாது!..

கர்ஜித்த துறவி மாயமாக மறைந்தார்..

அவருடைய கமண்டலம் காவுதடி அழுக்குத் துணிகள் அனைத்தும் காணாமல் போயிருந்தன..

தன்னால் தானே இந்த மாதிரி ஆயிற்று!..
- என, மனம் கலங்கினான் முன்னோடி வீரன்..

வருத்தமுற்றிருந்த வீரனை ஊர்மக்கள் அனைவரும் தேற்றினர்..

அத்துடன் கடமையில் கண்ணாக இருந்த வீரனுக்கு மாலையிட்டு மரியாதை செய்தனர்..

அடுத்த சில விநாடிகளில் - ஊர்க்கூட்டம் கூடியது..

அடுத்து வரவிருக்கும் வறட்சியான நாட்களை
எப்படி எதிர் கொள்வது என விவாதிக்கப்பட்டது...


மழையின்றிப் போனால் -  குளம் குட்டைகள் வற்றிப் போவதோடு
ஊரில் நல்லொழுக்கம் சிதைந்து போகுமே என்று நல்லோர்கள் வருந்தினர்..

ஆன்றோர்களும் சான்றோர்களும் கூடிப் பேசினர்..

அதன்பின் - அறிவிக்கப்பட்ட ஆக்க பூர்வமான முடிவுகளை -
ஊர் மக்கள் அனைவரும் ஏக மனதாக ஏற்றுக் கொண்டனர்..

ஏனோதானோ என்று விளைந்திருந்த வெள்ளாமையில் அந்த வருடம் ஓடி விட்டது..

இன்னும் பதினோரு வருடங்கள்..

காத்திருக்க வேண்டும் - அடுத்த அடைமழைக்கு!...

இந்த வேளையில் தான் அந்த ஆச்சர்யம் நிகழ்ந்தது..
***

நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு.. (0020)  
***

18 கருத்துகள்:

 1. நல்லதோர் ஆரம்பம். மக்கள் எப்படி இந்த இடரை எதிர்கொள்ளப் போகிறார்கள் எனத் தெரிந்து கொள்ளும் ஆவலுடன் தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. அருமையான வரலாற்றை அழகாய் சொல்கிறீர்கள்.
  குழாய் வழியாக ஊரில் உள்ள கேணிகளுக்கு தண்ணீர் போகும் குளத்தை அசுத்தபடுத்த கூடாது என்பதற்கு எவ்வளவு கவனம், பாதுகாப்பு.!
  இப்போது ஏரி, குளங்களை தூர்த்து அதில் அரசாங்க கட்டிடமும், பணம் படைத்தவர்களின் கட்டிடமும் கட்டப்படுகிறது. மழை நீர் சேகரிக்க ஏரி, குளம் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   ராஜராஜ சோழனின் ஆட்சியில் தஞ்சை பெரிய கோயிலை அடுத்துள்ள சிவகங்கை குளத்திலும் பின்னர் நாயக்கர் ஆட்சியில் சேவப்ப நாயக்கர் ஏரியிலும் பின்னர் ஐயங்குளத்திலும் - ஜலசூத்திரம் எனும் அமைப்பில் நீர் மேலாண்மை செய்யப்பட்டுள்ளதாக சான்றுகள் கிடைத்துள்ளன..

   மக்களாட்சியில் நல்ல விஷயங்கள் புறக்கணிக்கப்பட்டதே இன்றைய அவலங்களுக்குக் காரணம்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. அன்பின் ஜி
  நல்லதொரு தொடக்கம் சரித்திர நிகழ்வுகளை தொடர்கிறேன் அற்புதமாக கவிதை வடிவில் கதை தெளிந்த நீரூற்றாய் நானம் நீந்துகிறேன் அழகிய புகைப்படங்கள் நமது மூதாதையர்களையும் கண்டேன் வாழ்க நலம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. ஆகா. என்ன வரலாறு இது? அழகிய ப்டங்களுடன் கண்முன்னே காட்சிகளைக் கொன்டுவந்து நிறுத்திவிட்டீர்கள். அருமை. நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சிவகுமாரன்..

   தங்களுக்கு நல்வரவு..

   அன்றைய மன்னராட்சியில் - நாட்டு மக்களை எல்லாம் தம் மக்களாகப் பாவித்தனர்..

   இன்றைய மக்களாட்சியில் - ஆள்வோர்கள் - தம் மக்களை மட்டுமே மக்களாகப் பார்க்கின்றனர்..

   மக்களாட்சியில் நல்ல விஷயங்கள் புறக்கணிக்கப்பட்டதே இன்றைய அவலங்களுக்குக் காரணம்..

   தங்களது முதல் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. அருமை. அற்புதமான நடை. அடுத்து அறிந்து கொள்ள ஆவல்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. அடுத்த பதிவையும் நிச்சயம் வாசிப்பீர்கள் என நம்புகின்றேன்..

   இனிய கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 6. ஆஹா பின்னூட்டம் போட்ட நினைவில் சென்றேன் போலும்,,

  தஞ்சையின் காவியம் அரங்கேறுது.

  அருமையான நடை,, காத்திருக்கிறோம் அடுத்த பதிவிற்காய்,, தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
   பணிச் சுமைகளுக்கிடையேயும் தளத்திற்கு வந்து கருத்துரைத்தற்கு நன்றி..

   நீக்கு
 7. பதில்கள்
  1. அன்புடையீர்..

   அடுத்த பதிவில் காணுங்களேன்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. பதில்கள்
  1. அன்பின் குமார்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. புகைப்படங்கள் அருமை நண்பரே....
  கண்களை கவர்கிறது

  பதிலளிநீக்கு
 10. சுவையான ஆரம்பம். அழகான படங்கள்! பதிவையும் அனைத்துப் பின்னூட்டங்களையும் வாசித்தேன். ராஜராஜ சோழன் காலத்து நீர் மேலாண்மை உண்மைகள் வியப்பூட்டுகின்றன. முனிவரே ஆனாலும் அக்காலத்துத் தலையாரி கிராமத்துக்குக் குடிதண்ணீர் வழங்கும் நீர்நிலைகளைக் கடமை தவறாது காத்தது அறிந்து வியக்கிறேன். தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..