நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூன் 27, 2015

வானில் ஆடிய மயில்

நீலமயில் மண்ணில் தானே தோகை விரித்தாடும்!..

ஆனால் - இன்று காலம் மாறிவிட்டதால் -

மயில்கள் நீல வானிலும் ஆடி மகிழ்வித்திருக்கின்றன.

தஞ்சை விமானப் படைத் தளத்தில் இன்று காலை 8.30 மணியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு இந்திய விமானப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடந்திருக்கின்றன..

ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களிக்க -

விமானப் படையின் வீரர்கள் - நான்கு ஹெலிகாப்டர்களில் பறந்து சாகசங்களை நிகழ்த்தியுள்ளனர்.


தஞ்சைக்கு முதலாவதானது - இந்நிகழ்ச்சி..

முன்னதாக - தஞ்சை விமான தளத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் -
திரு. பிரசாந்த் குப்தா அவர்கள் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பின்படி -

இந்திய விமானப் படையின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியே இந்நிகழ்ச்சி என அறிய முடிகின்றது.

ஹெலிகாப்டரில் பறந்து சாகசம் செய்யும் குழுக்கள் - இரண்டு மட்டுமே!..

மயில்!.. (Sarang, The helicopter aerobatic display team of the Indian Air Force..)

மயில் - எனும் பெருமைக்குரிய குழுவினரை உடையது நம்நாடு!..

மற்றது -

நீலக் கழுகு!.. (Blue Eagles of the British Army.) பிரிட்டிஷ் ராணுவத்தின் குழு.

இன்று சாகச நிகழ்ச்சிகளைச் செய்வதற்கு முன் - ஜூன் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களும் ஒத்திகைகள் நடந்துள்ளன..

மேலும் - ஹெலிகாப்டர்களின் சாகசங்களுடன் - 


இந்திய விமானப் படையின் ஆகாஷ் கங்கா எனும் (“Akash Ganga” The IAF skydiving team.,)  குழுவினைச் சேர்ந்த பத்து வீரர்கள் பாராசூட் மூலமாக - விமானத்தில் இருந்து குதித்து சாகசம் நிகழ்த்தியுள்ளனர்.

ஏழாயிரம் அடி உயரத்தில் பறந்த (AN 32) விமானத்திலிருந்து - குழுத் தலைவர் கஜானந்த் யாதவ் - தேசியக்கொடி மற்றும் விமானப் படையின் கொடியுடன் முதலில் தரையிறங்கினார்.

அவரைத் தொடர்ந்து மற்ற ஒன்பது வீரர்களும் தரையிறங்கினர்..

இந்த ஆகாஷ் கங்கா குழுவினர் - வட துருவத்திலும் தென் துருவத்திலும் முத்திரை பதித்தவர்கள் என்பது பெருமைக்குரிய செய்தி..


தஞ்சை விமான தள உயரதிகாரி திரு. ஷிண்டே அவர்கள் , மாவட்ட ஆட்சியர் திரு சுப்பையன் அவர்கள் மற்றும் உயரதிகாரிகள் முன்னைலையில் இந்த சாகச நிகழ்ச்சி நடந்துள்ளது.

நிகழ்ச்சிகளை நாம் நேரில் காணவில்லை எனினும் -  

நிகழ்வின் படங்களை Facebook - ல் வழங்கிய  Thanjavur pages  மற்றும் செந்தில்குமார் பாலகிருஷ்ணன் (Thanjavur City ) ஆகியோருக்கு நன்றி..

அந்தப் படங்களில் சிலவற்றை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி..

பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்கள் - என,
திரண்டு வந்து கண்டு களித்தனர்.

சாகசங்களை நிகழ்த்திய வீரர்களை - ஆரவாரத்துடன் கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்திய மக்களின் கண்களில் அகலாதிருந்தது - பிரமிப்பு!..

அதுவே -

தஞ்சை மண்ணில் முதல் முறையாக 
இந்திய விமானப்படை வீரர்கள் நிகழ்த்திய 
சாகச விளையாட்டுக்குக் கிடைத்த வெற்றி!..

வாழ்க பாரதம்!..
ஜய்ஹிந்த்!.. 
* * *

புதன், ஜூன் 24, 2015

எங்கும் சிதம்பரம்

பூஜ்ஜியம்.

எதுவுமில்லை அதற்குள்..
ஆனால், எல்லாமும் இருக்கின்றன - அதற்குள்!...

கணிதவியலும் இறையியலும் ஒன்றிணைந்திருப்பது பூஜ்ஜியத்தில்!..

இரண்டையும் வழங்கிய பெருமை - புண்ணியம் மிகும் பாரத நாட்டிற்குத்தான்!.


பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு 
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப் 
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்!..

தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயைப் போல் இருப்பான் ஒருவன் - அவனைத்
தெரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்!..

முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்குச்
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனைத்
தொடர்ந்து சென்றால் அவன் தான் இறைவன்!..

கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன் - அந்த
ஏழையின் பேர் உலகில் இறைவன்!..

பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு 
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப் 
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்!..
-: கவியரசர் கண்ணதாசன் :-கவியரசருக்கு இன்று பிறந்த நாள்..
மெல்லிசை மன்னருக்கும் இன்று பிறந்த நாள்..
* * *

பூஜ்ஜியத்துக்குள் ராஜ்ஜியம் என்பது - வெளி.. வெட்டவெளி!.. ஆகாயம்!..

அங்கேதான்,  ஆனந்த நடனம் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது என்றனர் ஆன்றோர்கள்..

அதைக் குறிப்பதே ஞான ஆகாசம் எனப்படும் சித்சபை.

அதுவே திருச்சிற்றம்பலம் என போற்றப்படுவது..

புண்ணிய பாரதத்தில் எத்தனை எத்தனையோ திருக்கோயில்கள் இருப்பினும் திருச்சிற்றம்பலம் என சிறப்புடன் குறிப்பிடப்படுவது - 

தில்லை எனும் திருத்தலம்.


தில்லைத் திருச்சிற்றம்பலம் என்ற புகழுக்குரிய - சிதம்பரம் ஸ்ரீநடராஜர் திருக்கோயிலில் எத்தனையோ வைபவங்கள் நிகழ்வுறுகின்றன.

அவற்றுள் - மார்கழித் திருவாதிரையும் ஆனி உத்திரமும் சிறப்புடையவை.

ஏனெனில் இந்த இரு தினங்களில் மட்டுமே வைகறைப் பொழுதில் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பெறும்.

அவ்வண்ணமாக - ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்தியின் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த 15/6 திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அம்மையப்பன் விளங்கும் சித்சபையின் துவஜ மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளியிருக்க - காலை பத்து மணியளவில் ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது

அதனைத் தொடர்ந்து பத்து நாட்களாக பஞ்சமூர்த்தி வீதி உலாவுடன் உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
ஜூன் 16 அன்று வெள்ளி சந்திர பிரபையிலும்
17 அன்று தங்க சூரிய பிரபையிலும்
18 அன்று வெள்ளி பூதவாகனத்திலும்
19 அன்று வெள்ளி ரிஷப வாகனத்திலும் (தெருவடைச்சான்)
20 அன்று வெள்ளி யானை வாகனத்திலும்
21 அன்று தங்க கைலாச வாகனத்திலும்

எம்பெருமான் எழுந்தருள - திருவீதி உலா நடைபெற்றது.

22/6 அன்று மாணிக்கவாசகர் குருபூஜையும்
தொடர்ந்து - தங்க ரதத்தில் பிட்சாடனர் திருவீதிஉலாவும் நடைபெற்றது.
நேற்று (ஜூன்/23) செவ்வாய்க்கிழமை காலையில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்தி திருத்தேரில் எழுந்தருள - தேர்த் திருவிழா சிறப்புடன் நடைபெற்றது.

ஆயிரக்காணக்கான பக்தர்கள் அணி திரண்டு அழகுத் தேர்களின் வடம் பிடித்து இழுத்து தேரடியில் நிலைப்படுத்தினர்.

இரவு எட்டு மணியளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் -
எம்பெருமானுக்கு ஏககால லட்சார்ச்சனையும் நடைபெற்றது.

இன்று சூரியோதயத்திற்கு முன் - அதிகாலை 4.00 மணியளவில் ஸ்ரீசிவகாம சுந்தரிக்கும் ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கும் மகா அபிஷேகமும் ஷோடச உபசாரமும் நடைபெறுகின்றது.

பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜை நிகழ்வுறும்.
பஞ்சமூர்த்தி திருவீதி உலா எழுந்தருளிய பின் - 
பிற்பகல் இரண்டு மணியளவில் ஆனித் திருமஞ்சன மகா தரிசனம்.

அலங்கார தரிசனத்திற்குப் பின் - சிவகாமசுந்தரியும் நடராஜப்பெருமானும் ஆனந்தத் தாண்டவம் நிகழ்த்தியபடியே ஞானகாசம் எனும் சித்சபையினுள் எழுந்தருள்வர்.

சித்சபையினுள் எழுந்தருளிய பின் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது. 

நாளை (ஜூன்/25) பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு திருவீதி உலா. 

அந்த வைபவத்துடன் கொடியிறக்கம்.
உற்சவம் மங்கலகரமாக நிறைவடைகின்றது.


வெட்ட வெளியெனும் ஆகாயத் திருத்தலத்தில் ஆனந்தத் திருத்தாண்டவம் நிகழ்கின்றது என்பதை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஞானிகளும் யோகியரும் சித்தர்களும் சமயக் குரவர்களும் சொல்லி வந்திருக்கின்றனர்.

அந்தத் தாண்டவத்தின் வெளிக்கூறுதான் ஸ்ரீநடராஜ மூர்த்தியின் திருக்கோலம்.

தமிழகத்திலுள்ள சிவாலயங்கள் அனைத்திலும் சிறப்புடன் விளங்குவது ஸ்ரீநடராஜப் பெருமானின் திருவடிவ.

இத்திருமேனி - தமிழர்களாகிய நமக்கே சொந்தமானது..

சிவ சமயத்தின் தத்துவம் அழகின் வடிவமாக மெய்ஞானத்தை உணர்த்தியது.

அதையே - இன்றைய மேலை நாடுகளும் ஆமோதிக்கின்றன. 

ஸ்ரீநடராஜ தத்துவத்தை ஆய்ந்தறிவதற்கு முற்பட்டுள்ளன.

அதன் விளைவு -

ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் - பிரம்மாண்டமாக ஸ்ரீநடராஜரின் திருமேனி விளங்குகின்றது.

(அணுத் துகள் ஆய்வு மையம் பற்றிய தகவல்கள் Facebookல் பெற்றவை)

Sri Natarajar - CERN
CERN (The European Organization for Nuclear Research, known as CERN) என்பது ஸ்விட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள - இருபது நாடுகள் ஒன்றிணைந்த ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம். 

இங்குதான் - Large Hadron Collider (LHC) உலகின் மிகப்பெரிய துகள் முடுக்கி (Particle Accelerator) அமைக்கப்பட்டுள்ளது. இங்கே மூலத் துகள்களை அதிவேகத்தில் பயணிக்கச் செய்து அவற்றின் குணங்களை செயல்களை ஆராய்கின்றனர்.

CERN விஞ்ஞானிகள் - அணுத் துகள் இயக்கத்தையும் சிவபெருமானின் நடனத்தையும் ஒப்பிட்டுக் கூறி வியக்கின்றனர்.

அந்த வியப்பின் விளைவே - நடராஜர் திருமேனி!..

Sri Natarajar - CERN
எங்கும் திருமேனி - எங்கும் சிதம்பரம்!.. 

- என்று திருமூலர் குறித்த திருமந்திரம் மெய்யாகி விட்டது.

Sri Natarajar - CERN

அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் - நடராஜர் திருமேனி அமைந்துள்ளதைப் பற்றி, 

On June 18, 2004 - an unusual new landmark was unveiled at CERN - a 2mtr tall statue of the Hindu Creator/ Destroyer deity Shiva. Interesting choice.

- என்று குறிப்பிடப்படுகின்றது.


CERN விஞ்ஞானிகள் அணுத் துகள் நடனத்தையும் நடராஜரின் நடனத்தையும் ஒப்பிட்டு உணர்ந்து உலகிற்கு அறிவித்ததை சிறப்பிக்கும் பொருட்டு -

அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டிருக்கும் - நடராஜர் திருமேனியை - இந்திய அரசு பெருமையுடன் வழங்கியுள்ளது. 

அணுத் துகளை - தொடர்ந்து நடனமாடும் ஒன்றாக - அதிர்ந்து கொண்டே இருக்கும் ஒன்றாக - நவீன இயற்பியல் கூறுகின்றது. கீழை நாட்டின் ஞானிகள்  உலக இயக்கத்தைப் பற்றி விவரிக்கும் போது குறிப்பிடும் நடராஜரின் நடனம் போலவே இது உள்ளது.

அணுத்துகள் விஞ்ஞானம் கற்க விரும்புவோர் நடராஜரின் நடனத்தைப் பற்றி முதலில் அறிய வேண்டும்!..

இப்படிக் கூறுபவர் - இயற்பியலாளர் ஃபிரிட்ஜோப் காப்ரா (Fritjof Capra) .


THE TAO OF PHYSICS 
An Exploration of the Paralles Between Modern Physics and Eastern Mysticism., (Published in 1975)

- எனும் நூலை எழுதியவர்.

அணுவில் உள்ள அசைவை - சிவ நடனத்தில் கண்டு உணர்ந்த காப்ரா -
1977 அக்டோபர் 29 அன்று லாஸ் ஏஞ்சல் நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் உலகுக்கு விவரித்தார்.

நவீன கருவிகள் மூலமாக அணுத் துகள்கள் நடனமிடும் அற்புதத்தைப் படம் பிடித்து - அதை சிவநடனத்துடன் ஒப்பிடும் காட்சியைக் கண்ட உலக விஞ்ஞானிகள் வியந்தனர்.

விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம் -
தில்லை நடராஜனின் திருநடனம்!..

கடவுள் துகள் ஆராய்ச்சிக்குக் கிடைத்த தெளிவான பதில்தான் நடராஜர் சிலை!..

- இப்படிக் கூறியவர் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு A.P.J.அப்துல் கலாம் அவர்கள்!..

இதைத்தான் - அன்றே நமக்குச் சுட்டிக் காட்டினர் - ஆன்றோர்கள்.

அற்புதக் கூத்தனை ஆனந்தக் கூத்தனை
அம்மை அப்பனாம் சிற்றம்பலக் கூத்தனைக்
கண்டு உணர்ந்து களிப்பெய்துவோம்..


எங்கும் திருமேனி எங்கும் சிவசக்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே!..
திருமூலர்.

அரியானை அந்தணர்தம் சிந்தையானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும் 
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள் தங்கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் 
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத 
நாளெல்லாம் பிறவா நாளே!.. (6/1) 
திருநாவுக்கரசர்.

ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.
* * * 

திங்கள், ஜூன் 22, 2015

நல்லார் ஒருவர்..

வைகை மாநதியில் வெள்ளம்..

பாறைகளில் வைகையின் நீர் பட்டுத் தெறித்த காலம் போக - 

வைகையின் நீர் பட்டு - பாறைகள் தெறித்துக் கொண்டிருந்தன இப்போது!..

மதுரையம்பதி இதுவரையிலும் கண்டதேயில்லை - இப்படியொரு பெருக்கை!..

விழுது விட்டு வேரோடித் தழைத்திருந்த விருட்சங்கள் கூட சருகுகளைப் போல - வைகை வெள்ளத்தில் மிதந்து போய்க்கொண்டிருந்தன.. 

ஆயிரக்கணக்கான மக்கள் பரபரப்புடன் வேலை செய்து கொண்டிருக்க - 

அவன் ஒருவன் மட்டும் ஆடினான்.. பாடினான்.. அங்குமிங்கும் ஓடினான்..

வைகையின் வெள்ளம் இன்னும் வடியவில்லை..

ஊர் மக்கள் ஒன்றாகக் கூடி - கரையடைக்க முயன்றும் முடியவில்லை..

என்ன ஊழ்வினையோ.. யார் செய்த தீவினையோ?..

மக்கள் பரிதவித்த வேளையில் - இவன் மட்டும் எந்த பதற்றமும் இல்லாமல்!..

எப்படியிருக்க முடிகின்றது?.. ஒருவேளை அயலானோ.. அந்நியனோ?..

அவன் - அயலானும் அல்லன்.. அந்நியனும் அல்லன்!..

கயல்விழியாள் அங்கயற்கண்ணம்மையின் அன்புக் கணவன் என்பதையும்
சென்னியில் வெண்பிறை சூடிய சோமசுந்தரப் பெருமான் என்பதையும் 
நானிலத்தில் நல்லார் அனைவருக்கும் நல்லன் என்பதையும் -

அங்கிருந்த பெருங்கூட்டத்துள் எவரும் உணர்ந்தார்களில்லை.

அவன் செய்கையினால் சினம் கொண்டாலும் -
அவனிடம் சென்று ஏனென்று கேட்பதற்கு எவருக்கும் மனம் இல்லை!..


இப்படியொரு சுந்தரத் திருமுகத்தைத் தென்னவன் நாடெங்கும் கண்டிலமே!.. இவன் கூலியாளே அல்லன்!.. குறைதீர்க்க வந்த கோமகன் போல் அல்லவோ விளங்குகின்றான்.. ஆனாலும் - அவனுடைய செய்கை சிறுபிள்ளையைப் போலல்லவோ இலங்குகின்றது..

அத்தனை பரபரப்புக்கிடையேயும் அருகிருந்தோர் அயர்ந்து போயினர்!..

இவன் யாருக்காகக் கரை அடைப்பவன்?..

பிட்டு விற்கின்றாளே - வந்தியம்மை!.. அவளுடைய ஆளென்று தன்னைப் பதிவு செய்து கொண்டதைக் கண்டேன்!..

ஒருபாவமும் அறியாதவள் வந்தியம்மை.. அவள் பேரைக் கெடுக்க வந்தனன் போலும்!..

வந்தியம்மைக்குப் பேர் கொடுக்க வந்தவன் அவன் என்பதை அறியவில்லை யாரும்!..

குறுக்கு நெடுக்காக ஓடிய குறும்புக்காரன் வந்தியம்மையிடம் வந்து நின்றான்.. 


ஏற்கனவே பேசி ஒப்பந்தம் செய்து கொண்டதற்கிணங்க தன்னிடமிருந்த உதிர்ந்த பிட்டு தனை - வாஞ்சையுடன் வட்டிலில் வைத்துக் கொடுத்தாள் வந்தியம்மை.

தேங்காய்ப் பூவையும் பனஞ்சர்க்கரையையும் அதன் மேலே தூவினாள்..

இன்று ஏன் எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகின்றன.. - என்பதை வந்தி சிந்திக்க வில்லை..

எப்படியோ - நம்முடைய பங்கு அடைபட்டால் போதும்.. கரையடைக்கும் கடன் தீர்ந்தால் போதும்!..

எல்லாக் கடனும் தீர்ந்தே போனதை அறியவில்லை - வந்தியம்மை..

சுருக்க வேலைய முடிச்சிடு..  என் ராசா!..

ஆகட்டும் பாட்டி!.. - தலையசைத்தான் - இளங்காளையாய் வந்திருந்த ஈசன்.

வயிறு நிறைந்தது.. ஆனால் வந்த காரியம் இன்னும் நிறையவில்லை..

நீரின் வேகத்தில் இழுத்துச் செல்லப்படாது - நின்று கொண்டிருந்த மரத்தைக் கண்டான்..

அரைக்கு அசைத்துக் கொண்டிருந்த அழுக்குப் பழந்துணியை அவிழ்த்து உதறியபடி - அந்த மரத்தின் கீழ் தலை சாய்த்து - கண்ணயர்ந்தான்..

என்ன ஒரு ஆளுமை!.. இத்தனை பேர் வேலை செய்து கொண்டிருக்க .. இவன் மட்டும்!..

டேய்.. யாரங்கே!.. - தலையாரி கத்தினான்.

ஓடி வந்தான் கங்காணி..

யாரடா.. இவன்?.. 

வந்தியின் ஆள்.. நாழிகைப் பொழுதாயிற்று.. இன்னும் ஒரு கூடை மண் கூட கொட்டினான் இல்லை. வந்தியின் பங்கை இவன் அடைக்காததால் அடைபட்ட பங்கையும் அரித்துக் கொண்டு ஓடுகின்றது வைகை!..

தலையாரி - யாரையோ தேடிக் கொண்டு ஓடினான்..

அடுத்த சில நொடிகளில், பரிவாரங்கள் புடை சூழ - 
ஆங்கே வந்தான் - அரிமர்த்தன பாண்டியன்.

தலையாரியும் தண்டலரும் சொன்னது உண்மைதான்!..

நற.. நற.. - என்று பற்களைக் கடித்துக் கொண்டான்.. 
அவன் கையில் இருந்த பொற்பிரம்பு சுழன்றது.

உறங்கிக் கிடந்த இளைஞனை நோக்கி வீசினான்.

அடுத்த நொடி - அங்கே பல்லாயிரமாய் கூக்குரல்கள்..

இளைஞனின் மேல் பட்ட அடி - அனைவரது முதுகிலும் பட்டது.

அம்மா!.. யார் என்னை அடித்தது..

என்னையும் அடிக்கத் துணிவுண்டோ எவர்க்கும்?.. - என,  மன்னன் திகைத்துத் திரும்புவதற்குள்..

விழித்தெழுந்த இளைஞன் - தன் காலால் மண்ணை எற்றி விட்டு மறைந்தான்.

அந்த நொடியில் வைகையின் வெள்ளம் அடங்கியது. எங்கும் ஆனந்த கூச்சல்.

அதிர்ந்தான் அரிமர்த்தன பாண்டியன்.

அதேவேளையில் வானில் இருந்து பூமாரி பெய்தது. திருக்கயிலாய சிவ கணத்தாரின் பஞ்ச வாத்தியங்கள் முழங்கின.. தேவ துந்துபிகள் ஒலித்தன.
வந்தியம்மையை  சிவ கணங்கள் வரவேற்று விமானத்தில் அழைத்துச் செல்வதையும் கண்டான்.

அஞ்சி நடுங்கிய அரிமர்த்தனன் அயர்ந்து வீழ்ந்தனன். அப்போது -

யாம் - குதிரைச் சேவகனாக வந்தோம்.. வைகையை பெருகி வரச்செய்தோம்.. வந்தியம்மையின் பிட்டுக்காக கூலியாளாக வந்தோம்..  

இத்தனையும் உன்னால் துன்பமடைந்த திருவாதவூரன் பொருட்டு!..

நின் பொருளைப் பழுது செய்தான் என எண்ணி - நீ தண்டித்த  திருவாதவூரன் பொருட்டு!..

புண்ணிய மறையோர் குலத்தில் பிறந்திருந்தும் -  எண்ணரிய நிதிக்குவியல் தனை - காலம் பார்த்துக் கவர்வதற்கோ நீர் அமைச்சர் ஆகியது!?.. - என்று உன்னால் பழிக்கப்பட்ட திருவாதவூரன் பொருட்டு!..

அறத்தின் வழி நின்று நீ ஈட்டிய செல்வத்தினைக் கொண்டு நமக்கும் நம்மைச் சேர்ந்த அடியார் தமக்கும் திருவாதவூரன் நன்மைகளைச் செய்தனன். 

அத்தன்மை உடைய திருவாதவூரனின் பெருமையை நீ அறிக!..

திருவாதவூரன் - இந்த மண் விளங்க வந்த -  மாணிக்கவாசகன்!..

ஈசன் எம்பெருமான் திருவாய் மலர்ந்தருளினன்.


எம்பெருமானே!.. என்னைப் பொறுத்தருளுங்கள். தலையாய அமைச்சருக்கு இன்னல் விளைத்த என்னை மன்னித்தருளுங்கள். உண்மையை ஓர்ந்து உணராத உன்மத்தனாகிப் போனேன்.. 

பொருளே பெரிதென்ற புல்லுணர்வால் - புண்ணியராகிய திருவாதவூரரைப் புண்படுத்தி விட்டேன்.. அவரிடமிருந்து செல்வத்தைக் கவர்வதற்காக - அடிசுடும் மணலில் நிறுத்தி அநீதி செய்து விட்டேன்.. 

என் பாவ அழுக்கைத் தொலைப்பதற்கன்றோ வைகை பெருகி வந்தது.. 

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை   என்பது தமிழ்.. ந்தத் தமிழ் அரசோச்சும் மதுரையின் மன்னனாக இருந்தும் மதி மயங்கிப் போனேன்!.. 

நல்லாராகிய திருவாதவூரர் தம் தன்மையால் அல்லவோ - நானும் இந்நாட்டு மக்களும் சிவதரிசனம் கண்டோம்..

எம்பிழைகளைப் பொறுத்தருளுங்கள் பெருமானே!..

- என, ஈசனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்..

அரிமர்த்த பாண்டியனின் - விழிகளில் வைகையின் வெள்ளமென நீர் வழிந்தது.

தன் பிழையுணர்ந்த பாண்டியன் - மாணிக்கவாசகப் பெருமானை - தங்கப் பல்லக்கில் இருத்தி - சிறப்பு செய்து மகிழ்ந்தான். 


மதுரையம்பதிக்கு அருகில் உள்ள திருவாதவூர் எனும் திருத்தலத்தில் தான் பெருமானின் திரு அவதாரம் நிகழ்ந்தது.

சம்புபாதாச்ருதர் - சிவஞானவதி அம்மையார் என்போர் - தந்தையும் தாயும்.. 

பதினாறு வயதிற்குள் , அனைத்தும் அறிந்து ஞானச்சுடராக விளங்கியவர். 

விஷயமறிந்த  அரிமர்த்தன பாண்டியன் - அவரை விரும்பி அழைத்து - தலைமை அமைச்சராக அமர்த்தி அரசவைக்கு அழகு சேர்த்துக் கொண்டான். 

ஆனால் அவர் மனம் அதில் நிறைவடையவில்லை. 

தலைமை அமைச்சராக இருந்தும் அவருடைய மனம் தகவுடைய அறவழியில் இருந்தது. 

கருவூலத்தின் பெருஞ்சாவி அவருடைய கையில் இருந்தும் - நாட்டம் எல்லாம் - ''..பிறவியின் பயனை அடைதற்குரிய வழி என்ன!..'' என்பதிலேயே இருந்தது.

இளங்குதிரைகள் வேண்டும் என்று விரும்பிய மன்னனின் ஆணையை ஏற்றுக் கொண்டு - கீழைக் கடற்கரையை நோக்கிப் புறப்பட்டு வந்த திருவாதவூரரை -  

திருப்பெருந்துறை எனும் தலத்தில் - குருந்த மர நிழலில் ஞானகுருநாதனாக வீற்றிருந்த சிவபெருமான் ஆட்கொண்டார்.


அதன் பிறகு - திருப்பெருந்துறையில் நின்று விளங்குமாறு திருக்கோயிலைக்  கட்டினார். திருமடங்கள், நந்தவனங்கள்  அமைத்தார்.  மாகேசுவர பூசை பல நிகழ்த்தினார். 

குதிரை வாங்குவதற்குக் கொணர்ந்த பொருள்கள் அனைத்தையும் கோயில் பணிகளுக்கே செலவிட்டார்.

திருப்பெருந்துறையில் நிகழ்ந்தவற்றை - மன்னனிடம் விவரித்தனர்..

விளைவு - நரிகள் பரிகளாகின..

இறைவன் திருவாதவூரருக்காக,

சாய்ந்த கொண்டையுந் திருமுடிச்சாத்தும் வாள்வைரம்
வேய்ந்த கண்டியும் தொடிகளும் குழைகளும் வினையைக்
காய்ந்த புண்டர நுதலும் வெண்கலிங்கமுங் காப்பும்
ஆய்ந்த தொண்டர்தம் அகம்பிரி யாதழகெறிப்ப..

குதிரைச் சேவகனாக - பரிமேல் அழகனாக மாமதுரையின் மாட வீதிகளில்  வலம் வந்தான்!..

அதன் பிறகு நிகழ்ந்தவை அனைத்தும் திருவிளையாடலே!..

வந்தியின் கடனை அடைக்க வந்த வள்ளல் - 
மாணிக்கம் விற்ற மதுரையில் - உதிர்ந்த பிட்டுக்கு மண் சுமந்தான்.

அதோடல்லாமல் வேலைக்களத்தில் விளையாடிக் களித்ததற்காக அரசனிடம் பிரம்படியும் கொண்டான்!..


பண் சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்
கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலி மதுரை
மண் சுமந்து கூலி கொண்டு அக்கோலால் மொத்துண்டு
புண் சுமந்த பொன் மேனி பாடுதுங்கான் அம்மானாய்!..

- என ஈசனைப் போற்றிப் புகழ்ந்தார் மாணிக்கவாசகர். 

இறையருளின் படி தலயாத்திரை மேற்கொண்டு உத்தரகோச மங்கை என்னும் திருத்தலத்தில் அஷ்ட மா சித்திகளையும் பெற்றனர்.

பின்னும் சோழ நாட்டின் பல தலங்களையும் தரிசித்தார். திருஅண்ணாமலை திருக்கழுக்குன்றம் ஆகிய பதிகளில் இருந்து பல அருட் செயல்களை நிகழ்த்தி தில்லையம்பதியினை அடைந்தார். 

தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் வடக்கு திருவாசல் வழியாக பெருமான் , திருக்கோயிலுக்குள் சென்றதாக நம்பிக்கை.

தில்லையில் திருக்குடில் அமைத்து நல்லறம் புரிந்தார் - மாணிக்கவாசகர்.

இவ்வேளையில் ஒருநாள் - 

உலகம் உய்யும் பொருட்டு எல்லாம்வல்ல எம்பெருமான்  - 
அறவாழி அந்தணராக வந்து மணிவாசகப் பெருமானை அணுகி நின்றான்.  

பல சமயங்களிலும் பாடிய பாடல்களை முறையாகச் சொல்லும்படி மாணிக்க வாசகரிடம் கேட்டுக் கொண்டான். 

சுவாமிகளும் - தாம் பாடிய அனைத்தையும் மீண்டும் சொல்லியருளினார். 


வந்திருந்த அந்தணர் தம் திருக்கரத்தால் அவைகளை எழுதி - ''..பாவை பாடிய  திருவாயால்  கோவை பாடுக!..'' - என்று கேட்டுக்கொண்டார். 

அதன்படியே மாணிக்கவாசகர்  திருக்கோவை  அருளிச் செய்தார்.  

அந்தணர் அதையும் தம் திருக்கரத்தால் எழுதி முடித்து மறையவும் - தன்னைத் தேடி வந்து ஆட்கொண்டவர் சிவபிரானே என்பதை அறிந்துஆனந்தக் கண்ணீர் வடித்து  வணங்கிப் போற்றினார்.  

விடியற்காலையில் பொன்னம்பலத்தின் வாசற்படியினில்  -

திருவாதவூரன் சொல்லக் கேட்டு எழுதிய திருச்சிற்றம்பலமுடையான் திருச்சாத்து!..

- எனும் திருக்குறிப்புடன் ஓலை சுவடிகளைக் காணப் பெற்ற  தில்லைவாழ் அந்தணர்கள் வியப்புற்றனர். 

மாணிக்கவாசகப் பெருமானை அணுகி - 
''..இதன் பொருளை விளக்க வேண்டும்!..'' எனக் கேட்டுக் கொண்டனர். 

சுவாமிகள் தன் குடிலிலிருந்து  திருக்கோயிலுக்கு வந்தார். 


''..தில்லைச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள பெருமானே - இதன் பொருள்!..'' 

- என்றருளியபடி அம்பலத்தில் ஆடும் ஆனந்தக்கூத்தனுடன் இரண்டறக் கலந்தார்.

அருள் வாதவூரருக்கு செப்பிய நாலெட்டில் தெய்வீகம்!.. - என்கின்றது பழந் தமிழ்ப் பாடல் ஒன்று. 

அதன்படி அவருக்கு முப்பத்திரண்டு வயதென உணர முடிகின்றது. 

ரிஷப வாகனத்தில் மாணிக்கவாசகர்
மாணிக்கவாசகர் சிவசாயுஜ்யம் பெற்ற நாள்  - ஆனி மகம்!..

தில்லையில் மணிவாசகப் பெருமானின் குருபூஜை சிறப்புடன் நிகழ்கின்றது!.

திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் - மாணிக்க வாசகர் ரிஷப வாகனராக திருவீதி வலம் வந்தருள்கின்றார்

சிவாலயங்கள் தோறும் மாணிக்க வாசகப் பெருமானைப் போற்றி வணங்கித் தொழுகின்றனர் - இறையன்பர்கள். 

தென்னாடுடைய சிவனே போற்றி!.. 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!..

- எனும் மாணிக்க வரிகள் அவர் அருளியவை. 


ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி!.. 

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்!.. 
- என்பது தொல்மொழி.

திருவாசகத்தில் பிரபஞ்ச ரகசியங்களை விவரிப்பதுடன் மானுட கருப்பையில் கரு உருவாகும் விதத்தினையும் தெள்ளத் தெளிவாக  கூறுகின்றார். 

மகாஞானியாகிய மாணிக்கவாசகர் முதல் மந்திரியாக இருந்து வழி நடாத்திய நாடு - நம்முடையது!..

இறைவனின் திருவடிகளைப் பற்றிக் கொள்வதை பெருமான் கூறுகின்றார்!.. 

எப்படி?..
இதோ இப்படித்தான்!..

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே 
அன்பினில் விளைந்த ஆரமுதே..
பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் 
புழுத்தலைப் புலையனேன் தனக்கும்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னை சிக்கெனப் பிடித்தேன்!
எங்கெழுந்தருளுவது இனியே!...
* * *

நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க..
இமைப்பொழுதும் எந்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
* * *

ஞாயிறு, ஜூன் 21, 2015

நாளெல்லாம் யோகா

இன்று சர்வதேச யோகா தினம்..


பாரதப் பண்பாட்டின் மணிமகுடம்..

நம்மை நாமே உணர்வதற்கான முதற்படி!..

கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் - முதன்முறையாக ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய பாரதப் பிரதமர் மேதகு நரேந்திரமோடி அவர்கள்,

பாரதத்தின் பாரம்பர்ய கலையான யோகா பற்றிய விழிப்புணர்வை உலகம் முழுதும் ஏற்படுத்த வேண்டும். உடலையும் மனதையும் நெறிப்படுத்தும் யோகாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்

- என்று கோரிக்கை விடுத்தார்.

அதனை ஏற்றுக் கொண்ட ஐ.நா. - ஜூன் 21 -  சர்வதேச யோகா தினம் என அறிவித்தது.

கடந்த டிசம்பரில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது 177 நாடுகள் ஆதரவளித்தன.

பின்னும் பலநாடுகள் ஆர்வம் கொண்டன.


ஆக, 192 நாடுகளில், இன்று -
முதல் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் - நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் - ஐ. நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் தலைமையேற்க - முப்பது லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர்.

தலைநகர் புது தில்லியில் நிகழ இருக்கும் மாபெரும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கின்றார்.

உலகின் மிக உயரமான பாசறையான சியாச்சின் பனி மலைச்சிகரத்தில் யோகா தினம் அனுசரிக்கப்பட இருக்கின்றது.

சியாச்சின் மலைப்பகுதியில் - நமது ராணுவ வீரர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுவது போல் -

இந்தியப் பெருங்கடல்,  மேற்கு பசிபிக் பெருங்கடல், மத்திய தரைக் கடல் - பகுதிகளில் நங்கூரமிடப்பட்டுள்ள நமது கப்பற்படைத் தளங்களிலும் வீரர்களுக்கு யோகா பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.


யோகா என்றால் என்ன?..

நம்மை நாமே - உள்நோக்கி உணர்தல்!..

முறையான குரு மூலமாக யோக பயிலும் போது - நம்மை நாமே உணரலாம்.

நம்முள் - ஆனந்தம் பெருகுவதை உணரலாம்.. அன்பு பீறிடுவதை அறியலாம்!..

இவற்றினால் - ஆரோக்யம் பெருகுவதைக் காணலாம்!..

யோக பயிற்சிகள் பின்னும் - முத்ரா, தியானம், பிராணாயாமம் - என பலவாகத் தொடர்கின்றன.

யோகா - உடலுக்கும் மனதுக்கும் தேவையானதை அளிக்கவல்லது.

தினமும் பத்து நிமிடம் போதும் என்கிறார்கள்..ஏழு ஆண்டுகளுக்கு முன் - தஞ்சையில் நடை பெற்ற பயிற்சி வகுப்புக்கு என்னை அழைத்துச்சென்றவர் - திரு. காதர் பாட்சா.. - எனும் நண்பர்.

பயிற்சிக் காலம் - பத்து நாட்கள்..

எளிய முறையில் சுகாசனம் எனும் தொடக்கநிலையில் இருந்து அர்த்த பத்மாசனம், பத்மாசனம், வஜ்ராசனம் - இப்படி இன்னும் சில நிலைகளை பயிற்றுவித்தனர்.

நிறைவாக சவாசனம்..

பரிபூரண ஓய்வு.. நம்மில் இருந்து நம்மை நீக்குதல் அல்லது நீங்குதல்!..

பயிற்சியின் நிறைவு நாளன்று - வீரமாகாளியம்மனுக்கு வருடாந்திர பால்குட உற்சவம். என்னால் கலந்து கொள்ள இயலவில்லை..

நாளும் தவறாது பழகுங்கள்!..

- என்று, பயிற்சியளித்த குரு அறிவுரை வழங்கினார்.

ஆனால் - அதைத்தான் கடைப்பிடிக்கமுடியவில்லை..

பல்வேறு காரணங்கள்.. ஆனால் நிச்சயமாக சோம்பல் அல்ல!..

யோகா பழகுவதற்கு முன்னரே - இறையருளால் தியானம் சற்று கூடிவரும்.

உள்முகத்தில் உரையாடும் குருமூர்த்தியிடம் கேட்டேன்..

என்ன இது!.. இந்த மாதிரி ஆகிவிட்டதே!.. என்று.

பத்தாம் வகுப்பு படிப்பவனுக்கு அரிச்சுவடி எதற்கு?.. - என்று புன்னகைத்தார் குருமூர்த்தி.

மௌனமாகி விட்டேன்.


அடுத்து - மற்றொரு நண்பர் - காயகல்ப பயிற்சிக்கு அழைத்துச் சென்றார்.

இரண்டு நாள் கழித்து ஆசிரியர் வந்தார்.

என்னை ஒருமுறை உற்றுப் பார்த்தார்.

விளக்கேற்றி வைத்து - வழிபாடு நடந்தது.

பயிற்சி பெற்றவர்கள் கூடியிருந்து அதிர்வலைகளை உருவாக்கினர்..

நாவில் கற்கண்டு வைக்கப்பட்டது. குண்டலினியை எழுப்பினர்.

நிமிடங்கள் கரைந்தனவேயன்றி - கற்கண்டு கரையவில்லை.

எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை.

ஒருவழியாக மீள் நினைவுக்கு வந்தேன்..

இதற்கு முன் குண்டலினி பயிற்சி எடுத்ததுண்டா?.. - என்று கேட்டார்கள்..

இல்லை.. என்றேன்..

அநாகதத்தில் இருந்த குண்டலினியை ஆக்ஞா சக்கரத்தில் நிறுத்தியுள்ளோம். சில தினங்கள் தவறாமல் தியான வகுப்புகளுக்கு வாருங்கள்.. தலைவலி ஏதும் ஏற்பட்டால் - உடனே கீழே இறக்கி விடலாம்!.. - என்றார்கள்..

ஆறாதாரச் சக்கரங்கள் தெரியும். சும்மா கிடந்த குண்டலினியை நான் மேலே ஏற்றவில்லையே..

நான் ஏற்றவில்லை எனில் - வேறு யார் இந்த வேலையைச் செய்தது?..

அவர்களிடமே வினவினேன்..

கோயில்களுக்கெல்லாம் போவதுண்டா?.. - தியான பயிற்சியாளர் கேட்டார்.

அந்தக் கேள்விக்கான விடையை என்னை அழைத்துச் சென்ற நண்பர் விஜயகுமார் சொன்னார்..

அதுதான் காரணம்!.. - என்றார்கள்..

அன்றிரவு சவாசனத்தில் இருந்தபோது - குருமூர்த்தி புன்னகைத்தார்.

எனக்கு ஏதும் புரியவில்லை..

அடுத்த சில தினங்கள் - காயகல்ப பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றேன்.

அங்கே பொறுப்புடன் தியானம் பழகினாலும் - எனக்கு ஏதோ ஒன்று சரியாகப்படவில்லை..

தியானத்தின் குவிமுனையை சூன்யத்தில் வைக்கின்றார்களே - என்றிருந்தது.

ஈஸ்வரத் தியானம் அங்கில்லையே!.. - என்றேன் - குருமூர்த்தியிடம்..

ஒவ்வொன்றும் ஒருவிதம். உனக்கு என்ன வேண்டும்!.. - என்று கேட்டார்.

நீங்கள் வேண்டும்!.. - என்றேன்..

அதன் பிறகு காயகல்ப பயிற்சி வகுப்பிற்கும் செல்லவில்லை..

வீட்டில் பயங்கர முணுமுணுப்பு.. எதையும் பொறுப்பாக செய்வதில்லை என்று!..

அடுத்த சில மாதங்களில் குவைத்திற்கு வந்து விட்டேன்..

இதெல்லாம் நடந்து - ஐந்து வருடங்களாகி விட்டன.

நேரம் கெட்ட வேளையில் - வேலைக்குச் செல்வதும் திரும்புவதுமாக - ஆகி விட்டது.

யோகா பயிற்சி தொடக்க நிலைதான் என்றாலும் பயிற்சியாளர் இல்லாமல் தொடரக் கூடாது.

தியானம் அப்படியில்லை..

சுகாசனம்
தொடக்க நிலையாளர்களுக்கு என்றாலும் - பக்தி வழிபாடு எதற்கும் இதுவே முதல்படி. மிக எளிமையானது - சுகாசனம்.

சம்மணம் போட்டு அமர்வதே - சுகாசனம்.

உணவு உண்பதற்காக - தரையில் இருகால்களையும் மடக்கி அமரும் நிலையே சுகாசனம்.

சுகாசனம் எனும் இந்த நிலையை - அர்த்தபத்மாசனம் என்றும் சொல்வர்.

இதற்கு அடுத்த நிலையே - பத்மாசனம்.

சுத்தமான இடத்தில் சற்று அழுத்தமான தரை விரிப்பின் மீது அமர்ந்து - உடலையும் மனதையும் தளர்த்திக் கொண்டு,

இருகைகளிலும் சின்முத்திரை (சுட்டு விரல் நுனியும் பெருவிரல் நுனியும் தொட்டுக்கொள்ள மற்ற மூன்று விரல்களும் நீண்டிருக்கும் முத்திரை) தாங்கி பார்வையை மூக்கின் நுனியில் அல்லது புருவ மத்தியில் நிறுத்தினால் -

சற்றைக்கெல்லாம் மனம் அதுவாகவே அடங்கி விடும்.

ஆரம்பத்தில் மனம் - அங்குமிங்கும் அலைபாயத்தான் செய்யும்..

நாளாக நாளாக - அந்த நிலையிலேயே இருக்க மாட்டோமா.. என்று மனம் ஏங்கும்.

இப்போது தான் புரிகின்றது -

பத்தாம் வகுப்பு படிப்பவனுக்கு அரிச்சுவடி எதற்கு?.. - என்ற கேள்விக்கான விடை.

ஆனாலும் - பத்தாம் வகுப்பிலிருந்து மேலும் இரண்டு வகுப்புகளைக் கடந்து வந்து விட்டேன் என்பதில் மகிழ்ச்சி..

இப்போதெல்லாம் - நாற்காலியில் வசதியாக அமர்ந்து கொண்டு பார்வையை நிலைநிறுத்தினாலே - மனம் அடங்கி விடுகின்றது.

இத்தனைக்கும் காரணம் எது!?..

விநாயக வழிபாடு!..

ஔவையார் அருளிச் செய்த - விநாயகர் அகவல்!..

சில ஆண்டுகளுக்கு முன் வரை நித்ய பாராயணம்..

விடியற்காலையில் - குளித்து முடித்ததும் -

சீதக்களபச் செந்தாமரைப் பூம் பாதச்சிலம்பு பலஇசை பாட..

என்று தொடங்கி -

தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட வித்தக விநாயகா!.. விரைகழல் சரணே!..

- என, கண்களை மூடிக் கொண்டு பாடிப் பரவிய பின்னரே அடுத்தவேலை..

இதேபோல, ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமமும் பயில்வோரை யோகநிலைக்கு உயர்த்துவது.


இப்பொழுதெல்லாம் - குண்டலினி அநாகதத்திலிருந்து புறப்பட்டு விசுக்தி எனும் பின் கழுத்தில் வந்து நின்று கொள்கின்றது.

அங்கேயே சில தினங்களுக்கு நிலைத்து நின்று விடுகின்றது. மிகவும் சிரமம்.

அதனால் - வழிபாடு தியானம் இவற்றின் - ஆழத்திற்குச் செல்வதில்லை.

சரி.. யோகாவுக்கும் - இதற்கும் என்ன சம்பந்தம்?..

யோகா, தியானம் , பிராணாயாமம் - என்றெல்லாம் சொன்னேனே!..

இவற்றோடு இன்னும் பல பின்னிப் பிணைந்திருக்கின்றன.

அடிப்படை வாழ்வின் செயல்களில் சில ஆசனங்கள் பிரதிபலிப்பதாக இருந்தாலும் - சில குறிப்பிட்ட ஆசனங்களைத் தவறாமல் செய்தாலே நோய் நொடியின்றி நலமுடன் வாழலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

யோகா - தியானம் செய்வதால் மன அழுத்தம் நீங்குகின்றது.

எண்ணங்களால் தான் இடையூறுகள் ஏற்படுகின்றன.
யோகாவினால் உடலும் மனமும் செம்மையுறுகின்றன.

சாதாரணமாக - சுகாசனத்தில் இருந்து மனதை ஒருமுகப்படுத்தினாலே -
உடலின் சக்தி அதிகரிக்கும். மனம் புத்துணர்ச்சி பெருகும்.

அமைதியுறும் மனம் - நமக்கு வசப்பட்டிருக்கும்.

யோகாசனங்கள் எல்லாம் தகுந்த குருவின் மேற்பார்வையில் செய்யப்பட வேண்டியவை.

யார் யாருக்கு என்னென்ன செய்ய இயலுமோ - அவற்றைப் பின்பற்றுவதே நலம்.


முழுக்க முழுக்க - மெய்யான ஆன்மீகத்தில் சிறப்புற்று விளங்குவது - யோகா!..

சர்வேஸ்வரனின் யோக நிலை பிரசித்தம்!..


பராசக்தியாகிய அம்பிகை - திருஆரூரில் மகா மந்திர யோகினியாக - யோக ஆசனத்தில் வீற்றிருக்கின்றாள்..


ஸ்ரீ தர்மசாஸ்தா பட்ட பந்தத்துடன் யோக பத்ராசன நிலையில் வீற்றிருப்பது சபரிமலையில்!..

நலம் தரும் யோகாவினைப் பழகி மேல் நிலையினை அனைவரும் எய்துதல் வேண்டும்.

அதே சமயத்தில் -

நாம் பெறும் நலங்களில் பிறர் உய்வதற்கான சிந்தனையும் செயல்பாடுகளும் அவசியம்..

சில தினங்களுக்கு முன் -

கலையரசி அவர்களின் ஊஞ்சல் வலைத் தளத்தில் -
பசுமைப் புரட்சியின் வன்முறை என்ற பதிவுக்குக் கருத்துரையிடும் போது,

உழவனின் ஆசனத்தில் தீ வைத்த நிலையில்,
ஊரெல்லாம் கேளிக்கை யோகாசன நிலையில் -
இனியாவது வையகம் திருந்தி வளம் பெறட்டும்!..

- என்று குறித்திருந்தேன்..

அதுதான் இங்கும் - இப்பொழுதும்!..

ஏரின் பின்னது தான் உலகம்..
ஏர் ஏற்றம் பெற வேண்டும்..
உழவும் தொழிலும் ஒளி பெறவேண்டும்!..

வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்!..    
* * *