நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

மாணிக்கவாசகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாணிக்கவாசகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூன் 30, 2025

ஆனி மகம்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி மகம்
திங்கட்கிழமை


இன்று
ஸ்ரீ மாணிக்க வாசகர் குருபூஜை


அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே..

பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே..

கண்ணப்பன் ஒப்பதோர்
அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில்
என்னையும் ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
வா என்ற வான் கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே
சென்று ஊதாய் கோத்தும்பீ..


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா
போற்றி


மாணிக்க வாசகர் திருவடிகள் போற்றி

சிவாய நம ஓம்
**

புதன், ஜூலை 10, 2024

திருவாதவூரர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று 
ஆனி 26
புதன்கிழமை


இன்று ஆனி மகம்
ஸ்ரீ மாணிக்கவாசகர் குருபூஜை

அரிமர்த்தன பாண்டிய மன்னனின் அமைச்சரவையில் தன் அறிவின் திறத்தால் முதலமைச்சராக விளங்கியவர் திருவாதவூரர்..

அன்றைய கால கல்வி முறைப்படி அனைத்தையும் அறிந்திருந்தார்!..

அவர் அண்டப் பெருவெளியையும்  மானிட கர்ப்பத்தில் கருவின் வளர்ச்சியையும் அறிந்திருந்தார்..

பாண்டிய மன்னனின் வேண்டுகோளின்படி பெரும் பணத்துடன் உயர்தர குதிரைகள் வாங்குவதற்கு என்று சென்ற போது இடையில் திருப்பெருந்துறையில் இறைவன் அவரைத் தடுத்து ஆட்கொண்டனன்..

அதன் பின் நிகழ்ந்தவை எல்லாம் அருஞ்செயல்கள்..

மணிவாசகப் பெருமானின் திருவாக்கில் இருந்து திருவாசகம் திருக்கோவையார் எனும் ஞான நூல்கள் நமக்குக் கிடைத்தன..

மணிவாசகப் பெருமான் தில்லைக் கூத்தனுடன் இரண்டறக் கலந்த நாள் ஆனி மகம்..

சிறு பொழுதாவது ஸ்வாமிகளைப் பற்றிச் சிந்திப்போம்.


பூவேறு கோனும்
புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும்
நாரணனும் நான்மறையும்
மாவேறு சோதியும்
வானவரும் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே
சென்றூதாய் கோத்தும்பீ.. 1

கண்ணப்பன் ஒப்பதோர்
அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில்
என்னையும் ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
வா என்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.. 4

ஒன்றாய் முளைத்தெழுந்து
எத்தனையோ கவடுவிட்டு
நன்றாக வைத்தென்னை
நாய்சிவிகை ஏற்றுவித்த
என்தாதை தாதைக்கும்
எம்மனைக்கும் தம்பெருமான்
குன்றாத செல்வற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.. 8
-: திருக்கோத்தும்பி :-

சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாராயணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு
ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள் தாள் இணைபாடிப்
போரார்வேற் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ..1

மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்
தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்
காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்
போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.. 6
-: திருப்பொன்னூசல் :-

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.. 3

அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே
பெருந்திறல் அருந்தவர்க் கரசே
பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த
போகமே யோகத்தின் பொலிவே
தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த
செல்வமே சிவபெரு மானே
இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே..4

பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.. 9
-: பிடித்த பத்து :-


வேண்டத் தக்கது அறிவோய்நீ
வேண்ட முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற்கு அரியோய்நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீ யாது அருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின்அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே.. 6

அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னைஆட்
கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ
எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய்
நானோ இதற்கு நாயகமே.
-: குழைத்த பத்து :-

நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் எந்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க..

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..

திருவாதவூரர் திருத்தாள்
போற்றி போற்றி

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***

ஞாயிறு, ஜூன் 25, 2023

ஆனித்தேர்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 10
ஞாயிற்றுக்கிழமை

திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்தின்
திருப்பெருந்துறை திருக்கோயிலில் ஆனிப் பெருந் திருவிழாவின் ஒன்பதாம் நாளாகிய ஆனி 8  
வெள்ளிக்கிழமையன்று (23/6)
ஸ்ரீ மாணிக்கவாசகர் திருத்தேரில் எழுந்தருளிய திருக்காட்சிகள் இன்றைய பதிவில்..

படங்கள்
நன்றி: துறைசை ஆதீனம்



இணையம்















ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானை
சேயானை சேவகனை தென்னன் பெருந்துறையின்
மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை
நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனை
தாயானை தத்துவனை தானே உலகேழும்
ஆயானை ஆள்வானை பாடுதுங்காண் அம்மானாய்..
-: மாணிக்கவாசகர் :-

மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

வெள்ளி, ஜூன் 23, 2023

ஸ்ரீ மாணிக்கவாசகர்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 8 
 வெள்ளிக்கிழமை

இன்று
ஆனி மகம்

ஸ்ரீ மாணிக்கவாசகர் தில்லையம்பதியில் 
ஈசனொடு கலந்த நாள்..


மதுரையை அடுத்திருக்கும் திருவாதவூர் தனில் அவதரித்த புண்ணியர்..

கல்வி கேள்வியிற் சிறந்து விளங்கிய இவரைக் கண்டு வியந்த அரிமர்த்தன பாண்டியன் தனது அமைச்சராக ஆக்கிக் கொண்டான்..

படைப் பெருக்கத்திற்காக கொற்கை துறைமுகத்தில் வந்திறங்கும் குதிரைகளைத் தேர்வு செய்து வாங்கி வருமாறு பெரும் பொருளுடன் மன்னன் மாணிக்கவாசகரை அனுப்பி வைக்க - திருப்பெருந்துறையில் இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டார்.. 

அங்கே ஈசனுக்காக கோயில் ஒன்றினை எழுப்பினார்..

உடனிருந்தோர் நடந்தவற்றை மன்னனுக்குத் தெரிவிக்கவும் மன்னன் அழைத்து விசாரித்தான்..

ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்து சேரும் - என ஈசன் உரைத்த மொழியை  அப்படியே மன்னனிடம் தெரிவித்தார்..

ஈசனும் தான் உரைத்தபடியே குதிரைகளுடன் வந்தான்.. 

அது முதற்கொண்டு நடந்தவை எல்லாமும் திருவிளையாடல்கள்..

ஈசன் கொண்டு வந்த பரிகள் எல்லாம் நரிகளாகி  கொட்டடியில் இருந்த பிற குதிரைகளையும் கடித்து வைத்து விட்டு - ஓடிப் போனதால் சினம் கொண்ட அரசன் - திருவாதவூரரை கடுமையாகத் தண்டித்தான்.. அவர் பொருட்டு வைகை பெருகி வந்தது.. 

இதனூடாக வேலையாளாக வந்து
உதிர்ந்த பிட்டு தனைக் கூலியாக உண்டு வந்தியம்மைக்கும் சிவகதி அளித்தான் ஈசன்..


உண்மையை உணர்ந்த மன்னவன்,
சிவயோகத்தில் திளைத்திருந்த திருவாதவூரரிடம் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொண்டான்..

பொறுப்புகளில் இருந்து மீண்ட மாணிக்கவாசகர் மதுரையில் இருந்து தில்லையை வந்தடைந்தார்..

அங்கே திருக்கோவையார் இயற்றினார்.. அற்புதங்கள் பல நிகழ்ந்தன..


மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல ஆடற்கரசன் தானே - தன் கைப்பட அனைத்தையும் ஓலையில் வரைந்து பொன்னம்பலத்தில் வைத்து மறைந்தான்..

தில்லை மறையோர் இது கண்டு வியந்து - " இதன் பொருள் யாது?.. " - என வினவிய போது, சந்நிதியில் ஆடற்கரசனைக் காட்டி - 

" அவனே இதன் பொருள்!.."  - என்று உரைத்த வண்ணம் கருவறையினுள் ஒளியாகக் கலந்தார் மாணிக்கவாசகர்..


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் (26) 
மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30)
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்.. 

எல்லாப் பிறப்பும் பிறந்தாயிற்று.. 
உனக்கென்ன ஆணவம்?.. - என்று, 
நமது பழிகளைச் சுட்டெரிக்கும் 
அருட்பிழம்பு..


வார்கடல் உலகினில் 10
யானை முதலா எறும்பு ஈறாய
ஊனமில் யோனியின் உள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும் 15
இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களில் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களின் ஊறலர் பிழைத்தும் 20


ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்..

- என்று, கர்ப்பத்தினுள் உருவாகி வளரும் கருவின் வளர்ச்சியைப் பாடியருளிய சிவஞானி..


கண்ணப்பன் ஒப்பதோர்
அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில்
என்னையும் ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.. 4


தோலும் துகிலுங்
குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும்
பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க
வளையும் உடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக்
குளிர்ந்தூதாய் கோத்தும்பீ.. 18
***
எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்!..

மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி..

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

வெள்ளி, ஜூன் 26, 2020

அன்பின் ஆரமுது

இன்று ஆனி மகம்..

உதயத்திலிருந்து நண்பகல் வரை
மக நட்சத்திரம்..


ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான்
தில்லைத் திருச்சிற்றம்பலத்தில்
ஜோதியாய்க் கலந்த நாள்..

பெருமானைக் குறித்து
விரிவாக மனம் சிந்தித்தாலும்
இணையப் பிரச்னையின் காரணமாக
எழுத்துருவில் கொணர்வதற்கு
இயலவில்லை...
***

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்கும்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே இம்மையே 
யானுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் 
எங்கெழுந்து அருளுவது இனியே!...


நாடெல்லாம் நலங்கொண்டு
வாழ்தல் வேண்டி 
அதற்கென உழைத்து 
பற்பல இன்னல்களையும்
தாங்கிக் கொண்டு
பொன்னெனப் பொலிந்த
உத்தமர்..

மதுரை மா மண்டலத்தின்
முதலமைச்சராக வீற்றிருந்தும்
எளிய துறவு வாழ்க்கை வாழ்ந்த
மகா ஞானி..

அதனாலேயே அவர் பொருட்டு
எம்பெருமான் கூலியாளாய் ந்து 
கோமகனின் கோலால் அடிபட்டதாக
திருவிளையாடல் நிகழ்த்தினான்..

மாணிக்கவாசகர் காட்டிய
அற வாழ்க்கையை மேற்கொண்டு
இறைவனின் பேரருளுக்கு
ஆட்படுவோம்...

மாணிக்கவாசகப் பெருமானால்
கட்டிக் காக்கப்பட்ட
நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..

மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

சனி, ஜூலை 06, 2019

முதல்வர் வாழ்கவே..

என்னை மன்னித்தருள வேண்டுகின்றேன்.. ஐயனே!..

கடலாடும் கொற்கையின் முத்துக்களாலும்
கவிபாடும் ஈழத்தின் மாணிக்கங்களாலும்
அலங்கரிக்கப்பட்ட மணிமுடி இதோ!..

செல்வமலி தென்னாட்டை செம்மையுடன்
நடாத்திய செங்கோல் - இதோ தங்களது திருவடிகளில்!..

ஆயினும் -

கொண்டல்களைக் குலவி வந்த
குளிர் நிலவின் தண்நிழலாய் வெண்கொற்றக் குடை!..
பகை வென்று புகழ் கொண்டு
பனிமலை தொட்டு வந்த நல்லோர் வீற்றிருந்த கொற்றத் தவிசு!..

இவையிரண்டும் -
முழவோடு தமிழ் விளையாட
முகிலோடு மீன் விளையாடும்
கூடல் மாநகரின் அரண்மனையில்!..

இவை அனைத்தையும் தாங்கள் ஏற்றுக் கொண்டு
இம்மாநிலத்தை அரசாட்சி செய்திட வேண்டுகின்றேன்..

பெரியீர் தங்களுக்கு இச்சிறியேன் இழைத்த
அநீதிகளைப் பொறுத்தருளல் வேண்டும்!..

இனி இந்நாடு தங்களுடைமை..
நான் தங்களது பணியேற்கும் ஏவலன்..
தங்கள் ஆசிகளை வேண்டி நிற்கும் இரவலன்!..

கை கட்டி வாய் பொத்தி நின்றான் அரிமர்த்தன பாண்டியன்...

அவன் பின்னே - அவனது அரசு அலுவலர்களும் மற்றவர்களும்...

சற்று முன்னர் - சீறிச் சினந்து பொங்கிப் பெருகிப் பாய்ந்து கொண்டிருந்த வைகை நளினத்திலும் நளினமாக நெளிந்து கொண்டிருந்தது..


இதுவரை நடந்ததெல்லாம் கனவா!.. நினைவா?..
- எனத் திகைத்து நின்றிருந்தனர் பாண்டி நாட்டின் மக்கள்...

இன்று காலை வரை பிட்டு விற்றுக் கொண்டிருந்த 
பெருமாட்டி வந்தி - பெரும் புண்ணியத்திற்கு உரியவள்!.. -
என்பதை அறியாமற் போனோமே!..

எதன் பொருட்டு இத்தனை நாடகமும்!?..

எடுத்து ஆடும் திருவடியின் பேரழகை
வைகை மாநதியும் கண்டு மகிழட்டும் என்பதற்காகவோ!..

பாகம் பிரியாளின் பாகம் பிரிந்து வந்தது -
வந்தியம்மையின் கையால் வாங்கி 
உதிர்ந்த பிட்டு உண்பதற்காகவோ!...


எந்தை சொக்கநாதன் தலையில் சும்மாடு கட்டி வந்தது -
வந்தியம்மைக்கு வாழ்வளிப்பதற்காகவோ!...

கையில் கூடையுடன் மண் கொட்டும் தாங்கி, 
கூலியோ.. கூலி!.. - என்று கூவி வந்தது
வந்தியின் பிறவிக் கடன் தீர்ப்பதற்காகவோ!..

நாம் இவற்றையெல்லாம் அறியாதிருந்து விட்டோமே!..

மாமதுரையின் மக்கள் மனம் வருந்தினார்கள்...

பின்னும் இந்தத் திருவிளையாடல் எல்லாம் -

மக்களின் வரிப்பணம் கொண்டு குதிரைகளை வாங்குவது
கொடும் போர் நடாத்தி அப்பாவி மக்களை அழித்தொழிப்பதற்கா?..
இனியும் வேண்டாம்.. இந்தக் கொடுமை!..
இதிலிருந்து மாநிலத்தைக் காப்பது நமது கடமை!..

- என்று முனைந்து -

அருட்கோயில் எனும் அறக்கோயிலை அமைத்த
மாண்புமிகு முதல்வர் திருவாதவூரரைக் காப்பதற்காக அன்றோ!..

குதிரை வாங்குவதற்காகக் கொண்டு சென்ற 
பொருளைக் கொண்டு கோயில் ஒன்றைக் கட்டினார்!..

உண்மைதான்!..

ஆனாலும் - ஆய்ந்தறியாத மன்னன் அரிமர்த்தனன்
அடுத்துக் கடுத்திருந்தோர் தம் சொல்லுக்குச் செவி கொடுத்தனன்...

மனம் இலாதார் சொல்லிய சொல் கேட்டதனால் திருவாதவூரரை
மணல் சுடும் வைகையில் நிறுத்திக் கடுமையாக ஒறுத்தனன்..

அவனையும் மீட்டு அவன் பிழைதனையும் பொறுத்து 
அறவழியில் சேர்ப்பதற்காக அன்றோ -
குதிரையாளாக ஐயன் வந்ததும் 
கூலியாளாக மண் சுமந்ததும்!..

மதுரையின் மக்கள் மனம் திருந்தினார்கள்!..

இத்தனை நடந்தும் -

சித்தம் எல்லாம் சிவமயமே!..

- என்றிருந்த, திருவாதவூரர் முன்பாக அரிமர்த்தனன் பணிந்து நின்றான்..

தாங்கள் முன்போலவே தங்களது புவியெலாம் காவல் பூண்டு 
குற்றம் துடைத்து ஆள்வது ஆக வேண்டும்!..

- என்று,  இரந்து நின்றான்..

ஐயனே!.. நாட்டின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டு
எம்மைச் சீரிய வழிதனில் நடாத்த வேண்டும்!..

- என்று மக்களும் பெருங்குரலெடுத்துக் கூவினார்கள்..

அதுவரையில் அமைதியாக இருந்த திருவாதவூரர் - திருவாய் மலர்ந்தார்..

அரிமர்த்தன பாண்டியனே!.. எமது நோக்கம் அதுவன்று!..

அங்கும் இங்கும் புரள்கின்ற அலைகளைக் கொண்ட ஆழி சூழ்ந்த உலகம் அனைத்தையும் ஆட்சி கொண்டு ஆயிரங்கண் கொண்ட இந்திரனைப் போல வீற்றிருப்பீராக..

நாயகனாகிய சோமசுந்தரப் பெருமான் அருளியபடியே நயந்து நின்று நல்லாட்சி செய்வீராக!..

நான் உம்மை அடைந்த தன்மையால் உலக நடை, வேத ஒழுக்கம் ஆகிய இரண்டும் நன்கு தெளியப் பெற்றது.. அங்ஙனம் தெளியப் பெற்றதால் மனத் தூய்மை உண்டாகியது.. அதனால் சிவபெருமானிடத்து அன்பு விளைந்தது..

மந்தரம், கயிலை, மேரு, பருப்பதம், வாரணாசி எனும் திருத்தலங்களில் எழுந்தருளியிருக்கும் ஞானத் திருவாகிய இறைவன் -

எம்மைப் போன்றோரின் மனம் புறத்தே செல்லாமல் திருத்தி அதில் வீற்றிருக்கின்றான்..

அவனே - தனது அருள்வெளியாகிய பொன்னம்பலம் என்னும் தில்லைத் திருத்தலத்திற்குப் போகும்படிக்குப் பணித்தான்..

தாமும் அதற்கு உடன்படக் கடவீராக!..

- என்று, இனிமையுடன் உரைத்தார்.. 

அதைக் கேட்ட மன்னனும் மக்களும் மனம் நெகிழ்ந்தனர்..

கண்ணீர்ப் பெருக்குடன் - 
திருவாதவூரராகிய மாணிக்கவாசகப் பெருமானுக்கு விடை கொடுத்தனர்...

அந்த அளவில் விடை பெற்றுக் கொண்ட மாணிக்கவாசகர் வடதிசை நோக்கித் தனது திருப்பயணத்தைத் தொடர்ந்தார்..

மாண்புமிகு முதல்வர் வாழ்க!..
திருவாதவூரர் திருத்தாள் வாழ்க!..
மாணிக்கவாசகப் பெருந்தகை வாழ்க.. வாழ்க!..

- எனும் முழக்கத்தால் விண்ணும் மண்ணும் அதிர்ந்தன...

சிராப்பள்ளி, ஐயாறு, ஆரூர், அண்ணாமலை முதலான
திருத்தலங்களைத் தரிசித்த வண்ணம் 
தில்லை மூதூரை வந்தடைந்தார் - மாணிக்க வாசகர்...

ஆங்கே பற்பல அற்புதங்கள் அவரால் நிகழ்ந்தது..

ஈசன் எம்பெருமானே அவரை ஆட்கொள்ள வந்து
திருக்கோவையார் பாடும்படிக்கு அருளினன்...

மாணிக்கவாசகரை - நாடி வந்த தில்லை வாழ் அந்தணர் 
திருக்கோவையாரின் பொருளை வேண்டி நின்றனர்...

அது கேட்ட மாணிக்கவாசகர் புன்னகைத்தார்...

மெல்ல எழுந்து - பொன்னம்பலத்தினை நோக்கி நடந்தார்..

அம்பலத்தரசன்!.. அவனே இதற்குப் பொருள்!.. 

- என்றவாறு ஆனந்த நடமிடும் ஐயனுடன் ஜோதியாகக் கலந்தார்..

மாசறு மணிபோற் பன்னாள் வாசகமாலை சாத்திப்
பூசனை செய்து பன்னாட் புண்ணிய மன்றுள் ஆடும்
ஈசனது அடிக்கீழ் எய்தி ஈறிலா அறிவா னந்தத்
தேசொடு கலந்து நின்றார் சிவனருள் விளக்க வந்தார்..
-: திருவிளையாடற்புராணம் :-


மாணிக்கவாசகப் பெருமான் அண்டப் பெருவெளியை விவரிக்கின்றார்..
கருப்பையினுள் உயிர்க்கும் உயிரணுவின் வளர்ச்சியை உரைக்கின்றார்..

புல் முதற்கொண்டு தேவர் வரையிலான பிறவிகளைத் தொகுக்கின்றார்...
மானுடர் வாழ்வாங்கு வாழ்வதற்கான வாழ்வியல் நெறியை வகுக்கின்றார்..

மாணிக்கவாசகர் தம் திருவாக்கு
திருவாசகம் என்று போற்றப்படுகின்றது..

பன்னிரு திருமுறைகளுள்
எட்டாவதாக இலங்குகின்றது..

திருவாசகத்திற்கு உருகாதார் 
ஒருவாசகத்திற்கும் உருகார்!.. 
- என்பது ஆன்றோர் வாக்கு


இன்று ஆனி மகம்.. 
மாணிக்கவாசகப் பெருமான் 
இறைவனுடன் கலந்த நாள்..

தென்னாடுடைய சிவனே போற்றி..
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!..

எனும் இத்திருமுழக்கம்
ஆலயங்கள் தோறும் முழங்கப்படுவது ..
இதனைத் தந்தவர் மாணிக்கவாசகப் பெருமான்..

மாணிக்கவாசகப் பெருமான் - ஆவுடையார்கோயில்
பெருமான் அருளிய வழிநின்று வையகம் சிறக்கட்டும்!..
பெரும்பகையும் அழியட்டும்.. பெரும்பிணியும் தீரட்டும்!..
ஊர் கொண்ட நாடெல்லாம் சீர் கொண்டு பொலியட்டும்!..

மன்னவனும் திருந்தட்டும்..
மாநலமும் பெருகட்டும்!..
மன்னுயிரும் தழைக்கட்டும்..
மாநிலமும் செழிக்கட்டும்!...

மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி..

(நெருக்கடியான சூழ்நிலையின் காரணமாக
முந்தைய ஆண்டுகளின் பதிவு ஒன்று
மீண்டும் மலர்ந்திருக்கின்றது..)

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!.. 
***