நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூலை 10, 2024

திருவாதவூரர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று 
ஆனி 26
புதன்கிழமை


இன்று ஆனி மகம்
ஸ்ரீ மாணிக்கவாசகர் குருபூஜை

அரிமர்த்தன பாண்டிய மன்னனின் அமைச்சரவையில் தன் அறிவின் திறத்தால் முதலமைச்சராக விளங்கியவர் திருவாதவூரர்..

அன்றைய கால கல்வி முறைப்படி அனைத்தையும் அறிந்திருந்தார்!..

அவர் அண்டப் பெருவெளியையும்  மானிட கர்ப்பத்தில் கருவின் வளர்ச்சியையும் அறிந்திருந்தார்..

பாண்டிய மன்னனின் வேண்டுகோளின்படி பெரும் பணத்துடன் உயர்தர குதிரைகள் வாங்குவதற்கு என்று சென்ற போது இடையில் திருப்பெருந்துறையில் இறைவன் அவரைத் தடுத்து ஆட்கொண்டனன்..

அதன் பின் நிகழ்ந்தவை எல்லாம் அருஞ்செயல்கள்..

மணிவாசகப் பெருமானின் திருவாக்கில் இருந்து திருவாசகம் திருக்கோவையார் எனும் ஞான நூல்கள் நமக்குக் கிடைத்தன..

மணிவாசகப் பெருமான் தில்லைக் கூத்தனுடன் இரண்டறக் கலந்த நாள் ஆனி மகம்..

சிறு பொழுதாவது ஸ்வாமிகளைப் பற்றிச் சிந்திப்போம்.


பூவேறு கோனும்
புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும்
நாரணனும் நான்மறையும்
மாவேறு சோதியும்
வானவரும் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே
சென்றூதாய் கோத்தும்பீ.. 1

கண்ணப்பன் ஒப்பதோர்
அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில்
என்னையும் ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
வா என்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.. 4

ஒன்றாய் முளைத்தெழுந்து
எத்தனையோ கவடுவிட்டு
நன்றாக வைத்தென்னை
நாய்சிவிகை ஏற்றுவித்த
என்தாதை தாதைக்கும்
எம்மனைக்கும் தம்பெருமான்
குன்றாத செல்வற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.. 8
-: திருக்கோத்தும்பி :-

சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாராயணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு
ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள் தாள் இணைபாடிப்
போரார்வேற் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ..1

மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்
தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்
காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்
போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.. 6
-: திருப்பொன்னூசல் :-

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.. 3

அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே
பெருந்திறல் அருந்தவர்க் கரசே
பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த
போகமே யோகத்தின் பொலிவே
தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த
செல்வமே சிவபெரு மானே
இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே..4

பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.. 9
-: பிடித்த பத்து :-


வேண்டத் தக்கது அறிவோய்நீ
வேண்ட முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற்கு அரியோய்நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீ யாது அருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின்அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே.. 6

அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னைஆட்
கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ
எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய்
நானோ இதற்கு நாயகமே.
-: குழைத்த பத்து :-

நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் எந்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க..

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..

திருவாதவூரர் திருத்தாள்
போற்றி போற்றி

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. இந்த கலிகாலத்தில் நம்மை ஆட்கொள்ள எந்தப் பெருமானும் வருவதில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்வாமி வருகின்றார்.. நாம் தான் கண்டு கொள்வதில்லை..

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. மணிவாசகர் சொல்ல சொல்ல , இறைவனும் தன் திருக்கரத்தால்
    ஏட்டில் எழுதிய படம் அருமை.
    "பாவை பாடிய வாயால் கோவையும் பாடுக! என்று இறைவனே கேட்டு வாங்கிய சிறப்பு பெற்ற மாணிக்கவாசகரை பணிவோம்.
    நீங்கள் பகிர்ந்த பாடல்களை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. நேற்று ஆனி மகம் சிறப்பு குறித்து எஃப்.எம்.இல் கேட்டதாக சொல்லிக்கொண்டிருந்தார் மனைவி.

    நல்லதொரு பதிவு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      நீக்கு
  4. மாணிக்க வாசகர் பாடல்கள்பாடி வணங்கினோம்

    ஓம் சிவாய நமக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..