நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூலை 31, 2016

மாமன்னன் ராஜேந்திரன்

கடல் கடந்தும் களங்கண்ட வெற்றி வேங்கை!..

பிற்காலச் சோழர் தம் பெரு வரலாற்றில் -
மும்முடிச்சோழன் என்றும் சிவபாத சேகரன் என்றும் சிறப்பிக்கப்பட்ட
மாமன்னன் ராஜராஜ சோழனின் அருந்தவப் புதல்வன்..

ராஜேந்திர சோழன்!..

ராஜேந்திரனின் தாய் - வானவன் மாதேவி எனப்பட்ட திரிபுவன மாதேவி..

ராஜேந்திரனின் இயற்பெயர் - மதுராந்தகன் - என்பதாகும்.. 

தந்தையின் திருக்கரங்களினால் - இளவரசு பட்டம் சூட்டப் பெற்றபோது - ராஜேந்திரன் என புதிய பெயரினைக் கொண்டான்..

தந்தையின் அருகிருந்து ஆட்சியின் நுணுக்கங்களைப் பயின்றதோடு -
தந்தையைப் போலவே ஆட்சி காலம் முழுமைக்கும் வல்லமை பொருந்திய - பேரரசின் மகத்தான மாமன்னனாகத் திகழ்ந்தவன் - ராஜேந்திர சோழன். 

அகண்ட பாரதத்தில் - மிகச்சிறந்த கப்பல் படையினை கொண்டு. 
கடல் வழியே படை நடத்தி - மகத்தான வெற்றிகளைக் கண்ட பேரரசன்.

பூர்வ தேசமும் கங்கையும் கடாரமுங் கொண்ட கோப்பரகேசரி வர்மன் -  என்று ராஜேந்திர சோழனின்  கல்வெட்டுகள் புகழ்கின்றன. 


ராஜராஜ சோழன் சிவனடி சேர்ந்த பின், சோழ பேரரசின் மன்னராக முடிசூட்டிக் கொண்ட ஆண்டு - கி.பி.1014. 

இளவரசனாக இருந்த பொழுதே மகா தண்ட நாயகனாக அமர்த்தப்பட்டான். 

தந்தையின் கையால் - இளவரசனாக முடிசூட்டப்பட்ட பின், 
1012-ல் சத்யாஸ்ரயனை எதிர்த்து துங்கபத்ரை நதியை
முதன் முறையாகக் கடந்து படை நடத்தினான் - ராஜேந்திர சோழன்!.. 

தன் மகன் பதினாறடி பாய்வதற்குத் தயாராகி விட்டதை அறிந்த மாமன்னன் ராஜராஜன் மகனை வாரி அணைத்து மகிழ்ந்தான்.

ராஜேந்திரன் தலைமையேற்று நடத்திய படை மேற்குப் பகுதியை நோக்கி நகர்ந்தது..

வேங்கி, கலிங்கம், கொங்கணம், துளுவம் முதலான நாடுகள் ராஜேந்திரனின் காலடியில் வீழ்ந்தன..

தெலுங்கரையும் இராஷ்டிரகூடரையும் - ராஜேந்திரன் வென்று முடித்தான்...


கி.பி. 1018ல் ஈழ மண்டலத்தின் மீது படையெடுப்பு நடத்தப்பட்டது.

ராஜேந்திரனை எதிர்த்து நிற்க இயலாமல் சிங்களத்தின் ஐந்தாம் மகிந்தன் வீழ்ந்தான்..

இந்தப் போரில் தான் - பெரும் பாட்டனார் ஆன பராந்தக சோழரின் காலம் தொட்டு - கனவாக இருந்த பாண்டியரின் இரத்ன வாளும் முத்து மாலையும் கைப்பற்றப்பட்டன.

இதை சிங்களரின் மஹாவம்சம் எனும் வரலாறும் ஒத்துக் கொள்கின்றது.

அதே ஆண்டில் - தமது ஆட்சிக்கு உட்பட்ட  பாண்டிய, சேர பகுதிகளில் - சோழர்க்கு எதிராக நடத்தப்பட்ட கலகங்கள் அடக்கப்பட்டன.


1019-ல் சோழர்தம் பெரும்படை ராஜேந்திரனின்  தலைமையில் வடக்கை நோக்கிப் பயணித்தது..

கோதாவரி நதியைக் கடந்து கலிங்கத்தின் வழியாக கங்கைக் கரை நோக்கி நகர்ந்தது.

வங்கத்தின் மன்னன் மகிபாலனை வென்று கங்கையிலிருந்து நீர் எடுத்தது - இந்த போரில் தான்!..

இந்தப் பயணம் இரண்டாண்டுகள் நீடித்தது. அதன் பின் -

மேலைச் சாளுக்கியரை நோக்கிக் கவனத்தைத் திருப்பிய ஆண்டு - 1021.

பங்காளிச் சண்டை தொடங்கியது மேலைச் சாளுக்கியருக்கும் கீழைச் சாளுக்கியருக்கும்!..

மாமன்னர் ராஜராஜ சோழனின் மருமகன் விமலாதித்தன்.

தன் சகோதரியின் (விமலாதித்தன் - குந்தவை) மகனான ராஜராஜ நரேந்திரனுக்குத் தன் மகள் அம்மங்கா தேவியை மணமுடித்துக் கொடுத்தான்.

மீண்டும் மீண்டும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த மேலைசாளுக்கியன் ஜெயசிம்மனையும் விஜயாதித்தனையும் முற்றாகத் தொலைத்தது - 1035ல்.

இரட்டபாடி நாடு எனப்பட்ட மேலைச் சாளுக்கிய நாடு சோழரின் காலடியில் வீழ்ந்தது.

மேலை சாளுக்கியர்களையும் வேங்கியையும் கட்டுக்குள் கொண்டுவந்த பின் மாமன்னன் ராஜேந்திரன் தன்னுடைய சாம்ராஜ்யத்தின் பெருமையையும், பலத்தையும் காட்டும் பொருட்டு மேலும் பல இடங்களுக்குத் தன் படைகளை அனுப்பி வைத்தான்.

விஜயாலய சோழன் கி.பி.848-ல் புலிக்கொடியைத் தஞ்சையில் ஏற்றி வைத்தான்... 

அதன்பின் பராந்தக சோழன், ஆதித்த சோழன் ஆகியோர் படை நடத்தினர்..

மாமன்னன் ராஜராஜனைத் தொடர்ந்து -

வங்காளம் (பங்களாதேஷ்), பர்மா (மியன்மார்), தாய்லாந்து, கம்போடியா, 
கடாரம் (மலேஷியாவின் கெடா) , மலேஷியா (சிங்கப்பூர்), 
ஸ்ரீவிஜய ராஜ்யங்களான ஜாவா, சுமத்ரா, பாலி (இந்தோனேஷியா) 
அந்தமான் நிக்கோபார்  லட்சத் தீவுகள், மாலத்தீவுகள் - 

என, ராஜேந்திர சோழனின் திருவடிகள் பதியாத நிலம் என்று ஏதுமில்லை..

சோழர் தம் புலிக் கொடி கடல் கடந்தும் பட்டொளி வீசிப் பறந்தது - ராஜேந்திர சோழனின் காலத்தில்!..

(நன்றி - விக்கிபீடியா. வரலாற்றுத் தொகுப்பில் உதவி)

கங்கை கொண்ட சோழீசர்
வங்கத்தை சோழ பேரரசுடன் இணைத்த ராஜேந்திர சோழன் கங்கையில் நீரெடுத்த வெற்றியை சிறப்பிக்க, கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை உருவாக்கினான்.. 

தனது ஆட்சியினை புதிய தலைநகரத்திலிருந்து நடாத்தினான்.


தந்தை எழுப்பிய ராஜராஜேஸ்வரத்தின்  வடிவமைப்புடன் கங்கை கொண்ட சோழீஸ்வரம் எனும் கோயில் ஒன்றையும் எழுப்பினான் ராஜேந்திர சோழன்.

கங்கை கொண்ட சோழீஸ்வரரைப்  போற்றி - கருவூர்த் தேவர் பாடியுள்ளார்.

தலைநகரில் தான் உருவாக்கிய சோழ கங்கம் எனும் ஏரியில் கங்கை நீரை வார்த்தான்..

ராஜேந்திர சோழன் உருவாக்கிய சோழ கங்கம் தான் மனித முயற்சியில் உருவான மிகப் பெரிய ஏரி என்கின்றனர் ஆய்வியலாளர்கள்..

கருங்கற்களைக் கொண்ட நிலையான பெருங்கோயிலை இறைவனுக்கு என எழுப்பினாலும், தந்தையைப் போலவே -  அரண்மனையை  செங்கற்களால் கட்டிக் கொண்டான்!..

கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தின் தென்பகுதியில் ஐந்து கி.மீ தூரத்தில்- அரண்மனையின் எஞ்சிய பகுதிகள் காணப்படுகின்றன.

அந்த இடம் இன்றைக்கு மாளிகை மேடு எனப்படுகின்றது.


பல தேசங்களை தனக்கு கீழாகக் கொண்டு அதிக ஆண்டுகள் தலைநகராக இருந்த பெருமையை உடையது கங்கை கொண்ட சோழபுரம்..

ஆனால் - 
இன்றைக்கு அரியலூர் மாவட்டத்தில் ஒரு சிறுகிராமம் என்றாகி விட்டது..

இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக 
தலைநகர் எனத் திகழ்ந்த கங்கை கொண்ட சோழபுரத்தில் 
இன்றைக்கு அங்கே காணக் கிடைப்பவை - 
இடிந்த சுவர்களும், மண் மேடுகளும் புதர்களும்!..

மாடமாளிகைகளுடனும் கூடகோபுரங்களுடனும் - 
அற்புதமான தலைநகராக விளங்கிய - கங்கை கொண்ட சோழபுரம் -
மூன்றாம் குலோத்துங்கன் (1218) காலம் வரை சிறப்புற்றிருந்தது 

அதன் பின்னாட்களில் நலிவுற்று 1279-ல் பெருத்த அழிவிற்கு ஆளானது. 

சோழ நாட்டின் மீது படையெடுத்த முதலாம் சடைய வர்மன் சுந்தர பாண்டியன் தனது வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டான்..

மாடமாளிகைகளை எல்லாம் அழித்து நிர்மூலமாக்கினான்.. 
சோழநாட்டை பாண்டியப் பேரரசுடன் இணைத்துக் கொண்டான். 

ஆனாலும், அங்கே இன்னும் கம்பீரத்துடன் விளங்குவது - 
ராஜேந்திர சோழன் எழுப்பிய பெரிய கோயில்!.. 


விவசாயமும் வணிகமும் கணிதமும் மருத்துவமும் சித்திரமும் சிற்பமும் இசையும் நாட்டியமும்  கலையும் கட்டுமானமும் உச்சத்தை தொட்டிருந்தது சோழர்களின் காலத்தில் தான்!..

சோழர்களுடைய சாதனைகளுக்கும் கடல்கடந்து பெற்ற வெற்றிகளுக்கும்  தஞ்சை - கரந்தைச் செப்பேடுகளும் திருவாலங்காட்டு செப்பேடுகளும் ஆனை மங்கலச் செப்பேடுகளும் ஆதாரமாகத் திகழ்கின்றன..

தன் மீது பாசம் கொண்டிருந்த சிற்றன்னை பஞ்சவன் மாதேவிக்கு பட்டீஸ்வரத்தில் பள்ளிப்படைக்கோயில் எழுப்பினான்..

தனது தாய் திரிபுவன மாதேவி இறைவனடி சேர்ந்ததும் - 

சிதம்பரத்தை அடுத்துள்ள புவனகிரி ஆதிவராக நத்தம் எனும் கிராமத்தில் -
திரிபுவனமாதேவி ஈஸ்வரம் எனும் திருக்கோயிலை எடுப்பித்து - தாயின் நினைவினைச் சிறப்பித்தான்.. 

பரவை நங்கையுடன் ராஜேந்திர சோழன்
இன்று (31/ஜூலை) ஆடித் திருவாதிரை..

மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள்.. 

மாமன்னனின் பிறந்த நாள் கங்கை கொண்ட சோழபுரத்தில் வெகு சிறப்பாக நிகழ்கின்றது..

இவ்வேளையில் - தமிழராய்ப் பிறந்தோர் யாவரும் தத்தமது இல்லங்களில்
மாமன்னன் ராஜேந்திரனைக் கொண்டாடி மகிழ வேண்டும்..


மாமன்னன் ராஜேந்திர சோழனின் இணையிலா வீரத்தினால்
கடல் கடந்தும் தமிழர் தம் பெருமை பட்டொளி வீசிப் பறந்தது..

மாமன்னன் ராஜேந்திர சோழனை -
ஒரு கணம் சிந்தையில் வைத்துப் போற்றுவோம்.

மாமன்னன் ராஜேந்திர சோழனின் 
புகழ் வாழ்க!.. வளர்க!..
* * *

வெள்ளி, ஜூலை 29, 2016

கோலக் குங்குமம்

குங்குமம்..

அம்பிகையின் சந்நிதியில் வழங்கப் பெறும் மிக உயர்ந்த பிரசாதம் இதுவே!..

காலகாலமாக பாரதத்தின் மங்கல மங்கையர் -
கனவிலும் நினைவிலும் போற்றி வணங்குகின்ற புனிதம்...

ஆடி முதல் வெள்ளியன்று மங்கல மஞ்சளை சமர்ப்பித்தேன்..

இரண்டாம் வெள்ளியாகிய இன்று கோலக் குங்குமம்..


நெற்றிக் குங்குமத்தால் என்ன விசேஷம்!?..

நெற்றியில் - புருவ மத்தில் - மூளயின் பின்புறமாகத் தான் பீனியல் எனும் சுரப்பி (Pineal Gland) அமைந்துள்ளது..

யோக நிலைகளில் ஆக்ஞா எனக் குறிப்பிடப்படுவது - இதுவே..

ஞானக் கண் என்றும் மூன்றாவது கண் என சிறப்பிக்கப்படுவதும் இதுவே!..

பீனியல் சுரப்பி நமது உடல் செயல்பாட்டில் பெரும்பங்கு வகிக்கின்றது.


இது மெலட்டோனின் எனும் ஹார்மோனைச் சுரக்கின்றது.

மெலட்டோனின் தான் - உறக்கத்தையும் விழிப்பையும் கட்டுப்படுத்துகின்றது.

நல்ல தூக்கமும் விழிப்பும் தான் மனிதனை நிலைப்படுத்துவன..

மெலட்டோனின் இரவில் மட்டுமே சுரக்கின்றது..

அதிலும் இரவு ஒன்பது மணிக்கெல்லாம் உறங்கும் போது தான் சுரக்கின்றது.

பகல்பொழுதில் - கதவுகளை அடைத்து இருட்டாக்கிக் கொண்டு உறங்கினாலும் சுரப்பதில்லை..

மெலட்டோனின் சரிவர சுரந்தால் தான் -
மற்ற ஹார்மோன்களும் சரிவர சுரந்து உடல் நலமுடன் திகழும்.

இரவில் நன்றாக உறங்காதவர்களின் மனோநிலையை -
மறுநாள் காலையில் நாம் நிதர்சனமாகக் காணலாம்..

இளமை, ஆரோக்கியம் (நோய் எதிர்ப்பு சக்தி), பொறுமை, மன அமைதி - ஆகியவற்றுக்கு மெலட்டோனின் தான் காரணம்..

நெற்றி நடுவில் - புருவ மத்தியில் - நினைவுகளைக் குவியச் செய்வதன் மூலம் இந்த சுரப்பியை நிலைப்படுத்தலாம்..

அதனால் நமக்குக் கிடைப்பது - ஆன்மீக முன்னேற்றம்.


பீனியல் சுரப்பி செம்மையாக இருந்தால் - அமானுஷ்யத்தை உணரமுடியும் என்பது ஆன்றோர் வாக்கு..

தொலைவில் இருப்பதையும் உணர முடியும். 

எனவே தான் - மூன்றாவது கண் என சிறப்பிக்கப்பட்டது.

மனோவசியம் பழகியவர்கள் தங்கள் பார்வையை எதிராளியின் புருவ மத்தியில் குவிய வைத்து அவர்களைத் தங்கள் கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்..

நெற்றியின் மத்தியில் திருநீறு குங்குமம் திருமண் - இவை இருந்தால் - பிறரால் வசியம் செய்ய முடிவதில்லை..

தீய எண்ணங்கள் நம்மை அணுகமுடியாது..

நம்மைக் காப்பவை சமயச் சின்னங்கள் என்றாகின்றன..

அந்த சிறப்பினைப் பேணுவதற்காகவே - குங்குமம் இட்டுக் கொள்வது..

அனைவருடைய உடலிலிருந்து மின்காந்த அலைகள் வெளியாகின்றன..

எனினும் - மின் காந்த அலைகள் புருவ மத்தியில் இருந்து தான் அதிகமாக வெளிப்படுகின்றன..

அவற்றைக் கட்டுப்படுத்தவே - நெற்றியில் குங்குமம் சந்தனம் தரிப்பது..


புருவ மத்தியில் குங்குமம் சந்தனம் தரிப்பதால் - மனதின் சக்தி வீணாகாமல் தடுக்கப்படுகின்றது.

முகத்திற்குத் தனியாக அழகு கிடைக்கின்றது. இதுதான் தேஜஸ் எனப்படுவது.

நெற்றியில் திலகம் வைப்பது அழகு அலங்காரம் - என்றாலும்,
ஆரோக்கியத்திற்காகவும் என்பர் பெரியோர்..

ஆண்களும் பெண்களும் குங்குமம் தரித்துக் கொள்ள வேண்டியது அவசியம்..

என்றாலும் - தற்காலத்துப் பெண்கள் ஒட்டும் பொட்டிலேயே அதிக நாட்டம் கொண்டிருக்கின்றனர்.

உடலின் சக்தி நிலைகளாகக் கருதப்படும் ஏழு சக்கரங்களுள் ஆறாவதாக விளங்குவது ஆக்ஞா சக்கரம்..

நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரம் தான் - மூளை, நரம்பு மண்டலம், நாசி , காதுகள் மற்றும் கண்களைக் கட்டுப்படுத்துவதாகக் கூறுவர்.

மனம் இங்கே நிலைப்பட்டால் - புத்தி கூர்மையும் ஆன்ம சக்தியும் விளையும் என்பது குறிப்பு..

எனவே நலம் பல நிகழ்த்தும் நெற்றியின் மத்தியில் குங்குமம் வைத்து சிறப்பு சேர்க்கின்றோம்..


குங்குமம் என்றாலே மங்கலம்..

ஆனால் -
இன்றைக்கு களங்கமில்லாத குங்குமம் கிடைக்கின்றதா எனில் - இல்லை!..

பெரும்பாலான கடைகளில் குங்குமம் என்ற பெயரில் கிடைப்பவை - சாயப் பொடிகளே!..

அவைகளில் இரசாயனக் கலப்பு உள்ளதால் - நெற்றியில் அரிப்பும் புண்களும் உண்டாகின்றன..

இது இப்படி என்றால் - நாகரிகமாக ஒட்டிக் கொள்ளும் பொட்டில் கூட விஷத் தன்மை இருப்பதால் அவைகளும் பாதுகாப்பு அற்றவைகளாகின்றன..

அப்படியானால் நல்ல குங்குமம் கிடைப்பதேயில்லையா?..

கிடைக்கின்றது..


மதுரை மீனாட்சி அம்மனின் சந்நிதியில் தரமான குங்குமம் கிடைக்கின்றது..

காஞ்சி காமாட்சி அம்மனின் சந்நிதியிலும் உயர் ரக குங்குமமே!..

காஞ்சியில் உயர்தரமான குங்குமம் தயாரிக்கப்படுகின்றது..

சற்றே விழிப்புணர்வு கொண்ட பக்தர்கள் - உயர் தரமான குங்குமத்தை விலை கொடுத்து வாங்கி - உபயமாக வழங்குகின்றனர்...

குங்குமத்தை வலது கை மோதிர விரலால் தான் நெற்றியில் இட வேண்டும். மற்ற விரல்களைப் பயன்படுத்தக் கூடாது. 

குங்குமத்தை இடது கையில் போட்டுக் கொண்டு, வலது கைவிரலால் தொட்டு வைப்பது கூடாது. 

ஆலயங்களில் வலது கையில் பெறும் குங்குமத்தை, வலது கை மோதிர விரலால் தொட்டு நெற்றியில் இட்டுக் கொள்ளவேண்டும் என்பது மரபு.

இன்றைக்கு பெரும்பாலான இளைஞர்கள் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். 

ஆனால் - இளம் பெண்கள் மட்டும் நாகரிகம் என்ற பெயரில் தவிர்க்கின்றனர்.

மஞ்சள் பூசிக் கொள்வதிலும் மலர் சூடிக் கொள்வதிலும் கூட விருப்பம் கொள்வதில்லை..

ஆனாலும் - மங்கலம் மட்டும் வேண்டும் என்கின்றார்கள்..  குங்குமம் தரிப்பதால் சகல நன்மைகளும் விளையும் என்பர் பெரியோர்.

அம்பிகைக்கு குங்கும அர்ச்சனை செய்வது மிகுந்த சிறப்பு..

நாமே வீட்டில் - குங்குமத்தால் - அம்பிகைக்கு நூற்றெட்டு திருப்பெயர்களைச் சொல்லி அர்ச்சனை செய்து - அந்தக் குங்குமத்தைப் பயன்படுத்தலாம்..

நம் கையால் அர்ச்சனை செய்யப்பட்ட குங்குமம் மிகுந்த வீர்யமுள்ளது..


கொஞ்சிடக் கொஞ்சிடக் குளிர் நெற்றியிலே குங்குமம்..
வென்றிட வென்றிட வினை தீர்த்தருளும் குங்குமம்..


அஞ்சிட அஞ்சிட பகை வேரறுக்கும் குங்குமம்..
நெஞ்சினில் நெஞ்சினில் நின்று பேசுகின்ற குங்குமம்..

சஞ்சலம் சஞ்சலம் தனைச் சுட்டெரிக்கும் குங்குமம்..
வஞ்சனை வஞ்சனை பிணி ஓட்டுகின்ற குங்குமம்..


தங்கிடத் தங்கிட நலம் தந்தருளும் குங்குமம்..
சங்கரி சங்கரி சிவ துர்கையவள் குங்குமம்..

நற்பதம் நற்பதம் தரும் கற்பகத்தின் குங்குமம்..
அற்புதம் அற்புதம் எனும் அங்கயற்கண் குங்குமம்..

காஞ்சியில் காஞ்சியில் தேவி காமாட்சியின் குங்குமம்
காசியில் காசியில் பேசும் சாலாட்சியின் குங்குமம்.

தில்லையின் எல்லையில் ஆடும் ஆங்காரி குங்குமம்..
நெல்லையில் நெல்லையில் சிவ ஓங்காரி குங்குமம்..

மங்கலம் மங்கலம் தரும் காளியம்மன் குங்குமம்..
என்குலம் என்குலம் காக்கும் மாரியம்மன் குங்குமம்..
தஞ்சையின் நஞ்சையில் கொஞ்சும் வாராஹி குங்குமம்..
புன்னையில் புற்றுக்குள் வந்த மாரியம்மன் குங்குமம்..

நல்லன நல்லன தரும் நாடியம்மன் குங்குமம்
புண்ணியம் புண்ணியம் தரும் பூமகளின் குங்குமம்..

காவலில் காவலில் நிற்கும் காளியவள் குங்குமம்.
பூவிழி பூவிழி என்னும் கோலவிழிக் குங்குமம்..

சும்பனை சும்பனைக் கொன்ற கொற்றவையின் குங்குமம்..
பண்டனைத் தண்டனை செய்த கன்னியவள் குங்குமம்..

சண்டனை முண்டனைத் தீர்த்த சாமுண்டியின் குங்குமம்..
சங்கடம் சங்கடம் தீர்த்த சாம்பவியின் குங்குமம்..

தங்கிடத் தங்கிட நலம் தந்தருளும் குங்குமம்..
சங்கரி சங்கரி சிவ துர்கையவள் குங்குமம்..


ஸ்ரீ பத்ரகாளியின் அருள் பெற்ற மகாகவி காளிதாசன் - சியாமளா தண்டகத்தில் அம்பிகையின் அலங்காரங்களைக் கூறும்போது குங்குமக் கோலத்தினைக் குறிப்பிடுகின்றார்.

மாணிக்க வீணாம் உபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்சுள வாக்விலாஸாம்
மாஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி

சதுர்புஜே சந்த்ரகலா வதம்ஸே குசோன்னதே 
குங்கும ராகசோனே புண்ட்ரேஷூ 
பாஸாங்குச புஷ்பபாண ஹஸ்தே
நமஸ்தே ஜகத் ஏக மாதா:


உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே!..

அபிராமவல்லியின் நெற்றித் திலகம் உதிக்கின்ற செங்கதிர்!.. -  என, முதற் பாட்டிலேயே சிறப்பிக்கின்றார் அபிராமிபட்டர்.. 


குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலஞ் செய்து மணநீர்
அங்கவனோடும் உடன்சென்று அங்கானைமேல்
மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்..
என, தான் கண்ட நலம் உரைப்பவள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்..

காசி விசாலாட்சி கருணை முகத்தில் கலங்கரை காட்டும் குங்குமம்
கண்ணகியோடு மதுரை நகரில் கனலாய் எழுந்த குங்குமம்!..
என்றுரைப்பார் கவியரசர் கண்ணதாசன்.

இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி தென்றல் போல நீ ஆடடி..
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி தெய்வப் பாசுரம் பாடடி!..
என்றுரைத்தார் கவிஞர் வாலி..

நீராரும் கடலுடுத்த நிலமகளின் - திருமுகத்தில் 
திலகமாகத் திகழ்வது தமிழ்!..

தமிழே அன்னை மொழி.. அன்னையின் மொழி..
எனவே - செந்தமிழும் செழுந்தமிழானது..

குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்..
குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம்!..
* * *

வியாழன், ஜூலை 28, 2016

ஆடிக் கிருத்திகை

வெற்றி வடிவேலனே..
சக்தி உமைபாலனே..
வீரம் விளைத்த குகனே!..
உற்றதொரு பகைவெல்ல 
தோளிலும் நெஞ்சிலும்
ஓங்கிய வலிமை அருள்வாய்!..

தமிழ் மக்களின் தோளிலும் நெஞ்சிலும் உற்று உறவாடி நின்றவன் - வேலன்!..

அதனால் தான் - தமிழர் தம் ஊர்களிலும் உள்ளங்களிலும் உவப்புடன் திருக்கோயில் கொண்டு உறைகின்றான்..

வடிவேலன், உமைபாலன், சிவகுமாரன் - 
இன்னும் எத்தனை எத்தனை பெயர்கள் தான் அவனுக்கு!..

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் 
செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை 
விளங்கு வள்ளிக் காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனை -

- என்று வர்ணித்து மகிழ்வார் அருணகிரியார்...


எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்யினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்ற வளாமே
பிள்ளை என்றன்பாய் பிரியம் அளித்து
மைந்தன் என்மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்!..

- என்று, மக்கள் அனைவரும் அவனையே போற்றி நிற்கின்றனர்..

அத்தகைய முருகன் உலகம் உய்வடைவதற்காகத் தோன்றினான்!..
- என்றுரைப்பார் கந்த புராணம் இயற்றிய கச்சியப்ப சிவாச்சார்யார்..

அருவமும் உருவுமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும்கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே
ஒருதிருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய!..

அப்படி உலகம் உய்வதற்காக - 
ஆறு தீப்பொறிகளாக எம்பெருமானின் நெற்றிக் கண்களிலிருந்து தோன்றி சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக உதித்த திருமுருகனைத் தாலாட்டுதற்கும் சீராட்டுதற்கும் அம்பிகையின் திருவருளால் தேவ மகளிர் அறுவர் தோன்றினர்...

அவர்கள் தம் பணி நிறைவெய்திய வேளையில் - ஈசன் மனம் மகிழ்ந்து,

நீங்கள் அறுவரும் ஒருங்கிணைந்து கார்த்திகை நட்சத்திரங்களாகத் திகழ்வீர்களாக!.. உங்களால் வளர்க்கப்பட்ட  எங்கள் செல்வன் - கார்த்திகேயன் என்ற திருப்பெயருடன் மக்களால் வணங்கப்படுவான்.  கார்த்திகை நாளில் கார்த்திகேயனை வழிபடுவோர் எண்ணியதெல்லாம் ஈடேறப் பெற்று அனைத்து நலங்களையும் எய்துவர்!.. 

- என்று, வரம் அளித்தார்..

அதன்படியே - காலகாலமாக கார்த்திகை விரதம் அனுசரிக்கப்படுகின்றது..

அந்த வகையில் -
தட்சிணாயணத்தின் முதல் மாதமாகிய ஆடி மாதத்திலும்
உத்ராயணத்தின் முதல் மாதமாகிய தை மாதத்திலும்
வரும் கார்த்திகை நாட்கள் மிகச் சிறப்புடையவை..

இன்று ஆடிக் கார்த்திகை..

திருமுருகன் மூல மூர்த்தியாக விளங்கும் திருக்கோயில்களில் வழிபாடுகள் கோலாகலமாக நடைபெறுகின்றன..

அத்துடன் - சகல சிவாலயங்களிலும் முருகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நிகழ்கின்றன..

எங்கெங்கும் அவனுக்கே ஆடலும் பாடலும்
என்றென்றும் அவனுக்கே தேடலும் கூடலும்!..

அந்த வகையில்,
அருணகிரியார் அருளிய திருப்புகழ் பாடல் வரிகளுடன்
ஆறு சிவாலயங்களைத் தரிசிப்பதற்கு அன்புடன் அழைக்கின்றேன்..

குமார வயலூர்

இறைவன் - ஸ்ரீ அக்னீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ ஆதிநாயகி
தல விருட்சம் - வன்னி மரம்
தீர்த்தம் - சக்தி தீர்த்தம்


வாகையை முடித்துக் காட்டி கானவர் சம்ர்த்தைக் காட்டி
வாழ்மயில் நடத்திக் காட்டும் -- இளையோனே
மாமலை வெதுப்பிக் காட்டி தானவர் திறத்தைக் காட்டி
வானவர் சிரத்தைக் காத்த பெருமாளே!.. (915)

சிவாலயத்தில் - திருமூலத்தானத்திற்கு நேர் பின்னால் திருமுருகனின் சந்நிதி..

வள்ளி தெய்வயானையுடன் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கின்றான்..

திருஅண்ணாமலையில் திருமுருகனின் திருவருளால்
தடுத்தாட் கொள்ளப்பட்டவர் அருணகிரியார்...

அவ்வேளையில் முருகப் பெருமானைப் புகழ்ந்து பாடப்பட்டது தான் -

முத்தைத் தரு.. எனும் திருப்பாடல்..

அண்ணாமலையில் நிஷ்டையில் இருந்த அருணகிரியாரை -  வயலூருக்கு வா!.. என்றழைத்து பாடும் பணியை அருளினான் திருக்குமரன்..

முருகப்பெருமானின் திருப்புகழினை இத்திருத்தலத்திலிருந்தே பாடத் தொடங்கினார் - அருணகிரியார்..

குமார வயலூர் - திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ளது...
சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நிறைந்த பேருந்துகள் இயங்குகின்றன..
***

தஞ்சை

இறைவன் - ஸ்ரீ பிரகதீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ பிரகந்நாயகி
தலவிருட்சம் - வன்னி
தீர்த்தம் - சிவகங்கை  


அஞ்சன வேல்விழி -- மடமாதர்
அங்கவர் மாயையில் -- அலைவேனோ
விஞ்சுறு மாவுன -- தடிசேர
விம்பம தாயருள -- அருளாயோ..

நஞ்சமுதா உணும் -- அரனார்தம்
நன்குமரா அருள் -- உமைபாலா
தஞ்சென வாம்அடி -- யவர் வாழ
தஞ்சையில் மேவிய -- பெருமாளே!.. (883)

புகழ் பெற்ற இத்திருக்கோயிலில் கலையழகு மிக்கதாக விளங்கும்
கந்த கோட்டத்துள் வள்ளி தெய்வயானையுடன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்துடன் திகழ்கின்றான்..


ஆறு திருமுகங்களுடன் பன்னிருகரங்களும் கொண்டு பக்தருக்கு பலநூறு நலங்களையும் வளங்களையும் வாரி வழங்குகின்றனன்..

அருணகிரியார் மூன்று திருப்பாடல்கள் கொண்டு போற்றுகின்றார்..

சம்ப ராரியைக் கொன்ற தீவிழிச்
சம்பு போதகக் -- குருநாதா
சண்ட கோபுரச் செம்பொன் மாளிகைத்
தஞ்சை மாநகர்ப் -- பெருமாளே!.. (884)

- என்று பெரிய கோயிலையும் தஞ்சை மாநகரையும் சிறப்பித்தருள்கின்றார்..
*** 

திருஐயாறு

இறைவன் - அருள்திரு ஐயாறப்பர்
அம்பிகை - அருள்தரு அறம் வளர்த்த நாயகி
தல விருட்சம் - வில்வம்
தீர்த்தம் - காவிரி, சூரிய புஷ்கரணி

வில்லேந்திய வேலவன்
திருவின் மாமர மார்பழ னப்பதி
அயிலு சோறவை யாளுது றைப்பதி
திசையி னான்மறை தேடிய முற்குடி -- விதியாதிச்

சிரமு மாநிலம் வீழ்தரு மெய்ப்பதி
பதும நாயகன் வாழ்பதி நெய்ப்பதி
திருவை யாறுட னேழுதி ருப்பதி -- பெருமாளே!.. (886)

எண்ணரும் சிறப்புகளையுடைய திருத்தலம் திருஐயாறு..
சமயக்குரவர் நால்வரும் புகழ்ந்தேத்திய திருத்தலம்..

இத்திருத்தலத்தில் வில்லேந்திய வேலனாகத் திகழ்கின்றான் - திருமுருகன்..

வள்ளி தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் விளங்கும் வேலனின் வனப்பு அளவிடற்கரியது..

தஞ்சை நகரப் பேருந்து நிலையத்திலிருந்து
நிறைய பேருந்துகள் திருஐயாற்றுக்கு இயக்கப்படுகின்றன..
***

சிக்கல்

இறைவன் - ஸ்ரீ நவநீதேஸ்வரர்
அம்பிகை - அருள்தரு வேல்நெடுங்கண்ணி
தலவிருட்சம் - மல்லிகைக்கொடி
தீர்த்தம் - திருப்பாற்குளம்


அலர்தரு புஷ்பத் துண்டாகும் வாசனை
திசைதொறு முப்பத் தெண்காதம் வீசிய
அணிபொழி லுக்குச் சஞ்சார மாமளி -- இசையாலே

அழகிய சிக்கற் சிங்கார வேலவ
சமரிடை மெத்தப் பொங்கார மாய்வரும்
அசுரரை வெட்டிச் சங்கார மாடிய -- பெருமாளே!.. (827)


இத்திருத்தலத்தில் முருகனுக்கு சிங்கார வேலன் என்பது திருப்பெயர்..

வசிஷ்டர் காமதேனுவின் பாலிலிருந்து பெற்ற வெண்ணெய் கொண்டு சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்த திருத்தலம்..

அதனால் ஈசனுக்கு வெண்ணெய் நாதர் என்பது திருப்பெயர்..

அம்பிகை வேல் நெடுங்கண்ணி - முருகனுக்கு வேல் கொடுத்து வாழ்த்தினாள் - என்பது ஐதீகம்..

சூரசம்ஹாரப் பெருவிழாவில் அன்னையிடம் வேலினை வாங்கும்போது
திருக்குமரனின் முகத்தில் முத்து முத்தாக வேர்க்கின்றது..

திருக்கோயில் கட்டுமலையின் மீது அமைந்துள்ளது..

ஈசனுக்கு முன்பாக தெற்கு நோக்கிய வண்ணம் வள்ளி தெய்வானையுடன் சிங்கார வேலன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றான்..

ஆடிக் கார்த்தியன்று சிங்கார வேலனுக்கு மஹா அபிஷேகம் நிகழ்கின்றது.
இரவில் தங்க மயில் வாகனத்தில் வீதியுலா..

சிவாலயத்தினுள்ளேயே - வரசித்தி ஆஞ்சநேயரும் கோலவாமனப் பெருமாளும் திருக்கோயில் கொண்டுள்ளனர்..

திருஆரூருக்கும் நாகைக்கும் இடையில் அமைந்துள்ள திருத்தலம்..
***

எட்டுகுடி

இறைவன் - சௌந்தர நாயகர்
அம்பிகை - ஆனந்தவல்லி
தலவிருட்சம் - வன்னி
தீர்த்தம் - சரவணப்பொய்கை 


சோழ மண்டலத்தின் சிறப்பான தலங்களுள் இதுவும் ஒன்று..

திருமூலத்தான மூர்த்தியாக வள்ளி தெய்வயானையுடன் மயில் மீது அமர்ந்த திருக்கோலமாக விளங்குகின்றனன்..

இத்தலத்தில் சித்ரா பௌர்ணமி மிகச்சிறப்பாக நிகழும்..

முதல் நாளில் தொடங்கும் பாலாபிஷேகம் பௌர்ணமிக்கு மறுநாள் வரை தொடர்ந்து நிகழும்..

வன்மீக நாதர் எனும் சித்தர் பெருமான் இங்கே ஜீவசமாதி கொண்டுள்ளார்..

திருஆரூர், நாகை மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களிலிருந்து அடிக்கடி பேருந்துகள் இயங்குகின்றன..
***

திருவிடைக்கழி
(திருஇடைக்கழி)

இறைவன் - பாபநாசப் பெருமான்
அம்பிகை - பரமேஸ்வரி
தலவிருட்சம் - குரா, மகிழ்
தீர்த்தம் - சக்தி தீர்த்தம்


சிறக்கு மாதவ முனிவரர் மகபதி
இருக்கு வேதனும் இமையவர் பரவிய
திருக்கு ராவடி நிழல்தனில் உலவிய -- பெருமாளே!.. (797)

சந்நிதியில் சிவலிங்கத்திற்கு முன்பாக ஆறடி உயரத்துடன் கம்பீரமாக திகழ்கின்றனன்..

முருகப்பெருமான் சிவபூஜை செய்த திருத்தலங்களுள் திருவிடைக்கழியும் ஒன்று..

சிவபெருமானை குரா மரத்தின் நிழலில் - முருகன் வழிபட்டதாக ஐதீகம்..

அவ்வண்ணமே குரா மரத்தினடியில் சிவலிங்கம் திகழ்கின்றது..  

இங்கு முதலில் அர்த்த ஜாம பூஜை செய்யப்பட்ட பின்னரே சந்நிதியில் செய்யப்படுகின்றது..

அசுரரை வென்ற பின் - தேவயானைக்கும் முருகனுக்கும் இத்திருத்தலத்தில் தான் திருமண நிச்சயதார்த்தம் நிகழ்ந்து என்பர் ஆன்றோர்..

தெய்வயானை மட்டும் தனிச் சந்நிதியில் திகழ்கின்றனள்..


பிரசித்தி பெற்ற திருக்கடவூரில் இருந்து ஆறு கி.மீ தொலைவில் உள்ளது திருவிடைக்கழி

மயிலாடுதுறை மற்றும் நாகையிலிருந்து சிறப்பான பேருந்து வசதிகளை உடையது..


விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள் மொய்மைகுன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை பன்னிரு தோள்களும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!..

வேலும் மயிலும் துணை!.. - என வேண்டி நிற்போர் பல்லாயிரம்..

எந்த நேரத்திலும் கோலக் குறத்தியுடன் வந்தருள் செய்பவன் - என்பார் அருணகிரிநாதர்..

எல்லா நன்மைகளையும் தரவல்லது முருக வழிபாடு..

என்றென்றும் அறுமுகப் பெருமானத் துணைக் கொள்வோம்..

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!..

ஓம் 
சரவணபவ குக சண்முக சரணம்..
***