நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 29, 2016

கோலக் குங்குமம்

குங்குமம்..

அம்பிகையின் சந்நிதியில் வழங்கப் பெறும் மிக உயர்ந்த பிரசாதம் இதுவே!..

காலகாலமாக பாரதத்தின் மங்கல மங்கையர் -
கனவிலும் நினைவிலும் போற்றி வணங்குகின்ற புனிதம்...

ஆடி முதல் வெள்ளியன்று மங்கல மஞ்சளை சமர்ப்பித்தேன்..

இரண்டாம் வெள்ளியாகிய இன்று கோலக் குங்குமம்..


நெற்றிக் குங்குமத்தால் என்ன விசேஷம்!?..

நெற்றியில் - புருவ மத்தில் - மூளயின் பின்புறமாகத் தான் பீனியல் எனும் சுரப்பி (Pineal Gland) அமைந்துள்ளது..

யோக நிலைகளில் ஆக்ஞா எனக் குறிப்பிடப்படுவது - இதுவே..

ஞானக் கண் என்றும் மூன்றாவது கண் என சிறப்பிக்கப்படுவதும் இதுவே!..

பீனியல் சுரப்பி நமது உடல் செயல்பாட்டில் பெரும்பங்கு வகிக்கின்றது.


இது மெலட்டோனின் எனும் ஹார்மோனைச் சுரக்கின்றது.

மெலட்டோனின் தான் - உறக்கத்தையும் விழிப்பையும் கட்டுப்படுத்துகின்றது.

நல்ல தூக்கமும் விழிப்பும் தான் மனிதனை நிலைப்படுத்துவன..

மெலட்டோனின் இரவில் மட்டுமே சுரக்கின்றது..

அதிலும் இரவு ஒன்பது மணிக்கெல்லாம் உறங்கும் போது தான் சுரக்கின்றது.

பகல்பொழுதில் - கதவுகளை அடைத்து இருட்டாக்கிக் கொண்டு உறங்கினாலும் சுரப்பதில்லை..

மெலட்டோனின் சரிவர சுரந்தால் தான் -
மற்ற ஹார்மோன்களும் சரிவர சுரந்து உடல் நலமுடன் திகழும்.

இரவில் நன்றாக உறங்காதவர்களின் மனோநிலையை -
மறுநாள் காலையில் நாம் நிதர்சனமாகக் காணலாம்..

இளமை, ஆரோக்கியம் (நோய் எதிர்ப்பு சக்தி), பொறுமை, மன அமைதி - ஆகியவற்றுக்கு மெலட்டோனின் தான் காரணம்..

நெற்றி நடுவில் - புருவ மத்தியில் - நினைவுகளைக் குவியச் செய்வதன் மூலம் இந்த சுரப்பியை நிலைப்படுத்தலாம்..

அதனால் நமக்குக் கிடைப்பது - ஆன்மீக முன்னேற்றம்.


பீனியல் சுரப்பி செம்மையாக இருந்தால் - அமானுஷ்யத்தை உணரமுடியும் என்பது ஆன்றோர் வாக்கு..

தொலைவில் இருப்பதையும் உணர முடியும். 

எனவே தான் - மூன்றாவது கண் என சிறப்பிக்கப்பட்டது.

மனோவசியம் பழகியவர்கள் தங்கள் பார்வையை எதிராளியின் புருவ மத்தியில் குவிய வைத்து அவர்களைத் தங்கள் கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்..

நெற்றியின் மத்தியில் திருநீறு குங்குமம் திருமண் - இவை இருந்தால் - பிறரால் வசியம் செய்ய முடிவதில்லை..

தீய எண்ணங்கள் நம்மை அணுகமுடியாது..

நம்மைக் காப்பவை சமயச் சின்னங்கள் என்றாகின்றன..

அந்த சிறப்பினைப் பேணுவதற்காகவே - குங்குமம் இட்டுக் கொள்வது..

அனைவருடைய உடலிலிருந்து மின்காந்த அலைகள் வெளியாகின்றன..

எனினும் - மின் காந்த அலைகள் புருவ மத்தியில் இருந்து தான் அதிகமாக வெளிப்படுகின்றன..

அவற்றைக் கட்டுப்படுத்தவே - நெற்றியில் குங்குமம் சந்தனம் தரிப்பது..


புருவ மத்தியில் குங்குமம் சந்தனம் தரிப்பதால் - மனதின் சக்தி வீணாகாமல் தடுக்கப்படுகின்றது.

முகத்திற்குத் தனியாக அழகு கிடைக்கின்றது. இதுதான் தேஜஸ் எனப்படுவது.

நெற்றியில் திலகம் வைப்பது அழகு அலங்காரம் - என்றாலும்,
ஆரோக்கியத்திற்காகவும் என்பர் பெரியோர்..

ஆண்களும் பெண்களும் குங்குமம் தரித்துக் கொள்ள வேண்டியது அவசியம்..

என்றாலும் - தற்காலத்துப் பெண்கள் ஒட்டும் பொட்டிலேயே அதிக நாட்டம் கொண்டிருக்கின்றனர்.

உடலின் சக்தி நிலைகளாகக் கருதப்படும் ஏழு சக்கரங்களுள் ஆறாவதாக விளங்குவது ஆக்ஞா சக்கரம்..

நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரம் தான் - மூளை, நரம்பு மண்டலம், நாசி , காதுகள் மற்றும் கண்களைக் கட்டுப்படுத்துவதாகக் கூறுவர்.

மனம் இங்கே நிலைப்பட்டால் - புத்தி கூர்மையும் ஆன்ம சக்தியும் விளையும் என்பது குறிப்பு..

எனவே நலம் பல நிகழ்த்தும் நெற்றியின் மத்தியில் குங்குமம் வைத்து சிறப்பு சேர்க்கின்றோம்..


குங்குமம் என்றாலே மங்கலம்..

ஆனால் -
இன்றைக்கு களங்கமில்லாத குங்குமம் கிடைக்கின்றதா எனில் - இல்லை!..

பெரும்பாலான கடைகளில் குங்குமம் என்ற பெயரில் கிடைப்பவை - சாயப் பொடிகளே!..

அவைகளில் இரசாயனக் கலப்பு உள்ளதால் - நெற்றியில் அரிப்பும் புண்களும் உண்டாகின்றன..

இது இப்படி என்றால் - நாகரிகமாக ஒட்டிக் கொள்ளும் பொட்டில் கூட விஷத் தன்மை இருப்பதால் அவைகளும் பாதுகாப்பு அற்றவைகளாகின்றன..

அப்படியானால் நல்ல குங்குமம் கிடைப்பதேயில்லையா?..

கிடைக்கின்றது..


மதுரை மீனாட்சி அம்மனின் சந்நிதியில் தரமான குங்குமம் கிடைக்கின்றது..

காஞ்சி காமாட்சி அம்மனின் சந்நிதியிலும் உயர் ரக குங்குமமே!..

காஞ்சியில் உயர்தரமான குங்குமம் தயாரிக்கப்படுகின்றது..

சற்றே விழிப்புணர்வு கொண்ட பக்தர்கள் - உயர் தரமான குங்குமத்தை விலை கொடுத்து வாங்கி - உபயமாக வழங்குகின்றனர்...

குங்குமத்தை வலது கை மோதிர விரலால் தான் நெற்றியில் இட வேண்டும். மற்ற விரல்களைப் பயன்படுத்தக் கூடாது. 

குங்குமத்தை இடது கையில் போட்டுக் கொண்டு, வலது கைவிரலால் தொட்டு வைப்பது கூடாது. 

ஆலயங்களில் வலது கையில் பெறும் குங்குமத்தை, வலது கை மோதிர விரலால் தொட்டு நெற்றியில் இட்டுக் கொள்ளவேண்டும் என்பது மரபு.

இன்றைக்கு பெரும்பாலான இளைஞர்கள் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். 

ஆனால் - இளம் பெண்கள் மட்டும் நாகரிகம் என்ற பெயரில் தவிர்க்கின்றனர்.

மஞ்சள் பூசிக் கொள்வதிலும் மலர் சூடிக் கொள்வதிலும் கூட விருப்பம் கொள்வதில்லை..

ஆனாலும் - மங்கலம் மட்டும் வேண்டும் என்கின்றார்கள்..  



குங்குமம் தரிப்பதால் சகல நன்மைகளும் விளையும் என்பர் பெரியோர்.

அம்பிகைக்கு குங்கும அர்ச்சனை செய்வது மிகுந்த சிறப்பு..

நாமே வீட்டில் - குங்குமத்தால் - அம்பிகைக்கு நூற்றெட்டு திருப்பெயர்களைச் சொல்லி அர்ச்சனை செய்து - அந்தக் குங்குமத்தைப் பயன்படுத்தலாம்..

நம் கையால் அர்ச்சனை செய்யப்பட்ட குங்குமம் மிகுந்த வீர்யமுள்ளது..


கொஞ்சிடக் கொஞ்சிடக் குளிர் நெற்றியிலே குங்குமம்..
வென்றிட வென்றிட வினை தீர்த்தருளும் குங்குமம்..


அஞ்சிட அஞ்சிட பகை வேரறுக்கும் குங்குமம்..
நெஞ்சினில் நெஞ்சினில் நின்று பேசுகின்ற குங்குமம்..

சஞ்சலம் சஞ்சலம் தனைச் சுட்டெரிக்கும் குங்குமம்..
வஞ்சனை வஞ்சனை பிணி ஓட்டுகின்ற குங்குமம்..


தங்கிடத் தங்கிட நலம் தந்தருளும் குங்குமம்..
சங்கரி சங்கரி சிவ துர்கையவள் குங்குமம்..

நற்பதம் நற்பதம் தரும் கற்பகத்தின் குங்குமம்..
அற்புதம் அற்புதம் எனும் அங்கயற்கண் குங்குமம்..

காஞ்சியில் காஞ்சியில் தேவி காமாட்சியின் குங்குமம்
காசியில் காசியில் பேசும் சாலாட்சியின் குங்குமம்.

தில்லையின் எல்லையில் ஆடும் ஆங்காரி குங்குமம்..
நெல்லையில் நெல்லையில் சிவ ஓங்காரி குங்குமம்..

மங்கலம் மங்கலம் தரும் காளியம்மன் குங்குமம்..
என்குலம் என்குலம் காக்கும் மாரியம்மன் குங்குமம்..




தஞ்சையின் நஞ்சையில் கொஞ்சும் வாராஹி குங்குமம்..
புன்னையில் புற்றுக்குள் வந்த மாரியம்மன் குங்குமம்..

நல்லன நல்லன தரும் நாடியம்மன் குங்குமம்
புண்ணியம் புண்ணியம் தரும் பூமகளின் குங்குமம்..

காவலில் காவலில் நிற்கும் காளியவள் குங்குமம்.
பூவிழி பூவிழி என்னும் கோலவிழிக் குங்குமம்..

சும்பனை சும்பனைக் கொன்ற கொற்றவையின் குங்குமம்..
பண்டனைத் தண்டனை செய்த கன்னியவள் குங்குமம்..

சண்டனை முண்டனைத் தீர்த்த சாமுண்டியின் குங்குமம்..
சங்கடம் சங்கடம் தீர்த்த சாம்பவியின் குங்குமம்..

தங்கிடத் தங்கிட நலம் தந்தருளும் குங்குமம்..
சங்கரி சங்கரி சிவ துர்கையவள் குங்குமம்..


ஸ்ரீ பத்ரகாளியின் அருள் பெற்ற மகாகவி காளிதாசன் - சியாமளா தண்டகத்தில் அம்பிகையின் அலங்காரங்களைக் கூறும்போது குங்குமக் கோலத்தினைக் குறிப்பிடுகின்றார்.

மாணிக்க வீணாம் உபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்சுள வாக்விலாஸாம்
மாஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி

சதுர்புஜே சந்த்ரகலா வதம்ஸே குசோன்னதே 
குங்கும ராகசோனே புண்ட்ரேஷூ 
பாஸாங்குச புஷ்பபாண ஹஸ்தே
நமஸ்தே ஜகத் ஏக மாதா:


உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே!..

அபிராமவல்லியின் நெற்றித் திலகம் உதிக்கின்ற செங்கதிர்!.. -  என, முதற் பாட்டிலேயே சிறப்பிக்கின்றார் அபிராமிபட்டர்.. 


குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலஞ் செய்து மணநீர்
அங்கவனோடும் உடன்சென்று அங்கானைமேல்
மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்..
என, தான் கண்ட நலம் உரைப்பவள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்..

காசி விசாலாட்சி கருணை முகத்தில் கலங்கரை காட்டும் குங்குமம்
கண்ணகியோடு மதுரை நகரில் கனலாய் எழுந்த குங்குமம்!..
என்றுரைப்பார் கவியரசர் கண்ணதாசன்.

இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி தென்றல் போல நீ ஆடடி..
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி தெய்வப் பாசுரம் பாடடி!..
என்றுரைத்தார் கவிஞர் வாலி..

நீராரும் கடலுடுத்த நிலமகளின் - திருமுகத்தில் 
திலகமாகத் திகழ்வது தமிழ்!..

தமிழே அன்னை மொழி.. அன்னையின் மொழி..
எனவே - செந்தமிழும் செழுந்தமிழானது..

குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்..
குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம்!..
* * *

13 கருத்துகள்:

  1. கோலகுங்குமத்தை பற்றிய பதிவு மிக அருமை சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. அறிவியல் ரீதியானக் கருத்துக்களுடன் பதிவுக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. குங்குமத்தைப் பற்றி தங்களின் முன்பொரு பதிவினைப் படித்த நினைவு. உணர்த்தவேண்டியதை அழகாக உணர்த்தியுள்ளீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      முந்தைய பதிவு தங்கள் நினைவில் உள்ளதை அறிந்து மகிழ்ச்சி..
      அதனையே சற்று மாற்றி குங்குமப் பாடலுடன் வழங்கியுள்ளேன்

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. அன்பின் ஜி
    குங்குமத்தைக்குறித்து இவ்வளவு விசயங்களா ? பிரமிப்பாக இருக்கின்றது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. வணக்கம்,

    குங்கும் குறித்து அறிவியல் பொருத்திய அறிவு விளக்கம். முன்பும் ஒரு பதிவு படித்தேன் தங்கள் பதிவுகளில்.

    பாடல் தொகுப்பும் விளக்கமும் அருமை அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அந்தப் பதிவு தான் - இந்தப் பதிவு.. ஆனால் சற்று மாறுதலுடன்..

      குங்குமப் பாடல் இன்னும் அதிக கண்ணிகளை உடையது.. திட்டமிட்டு எழுதியதல்ல.. பதிவைத் தட்டச்சு செய்யும் போதே மனதில் உதித்தது..

      இன்னும் நிறைய கண்ணிகளை எழுதுவதற்குள் - ஆட்களின் நடமாட்டத்தால் - பாடல் தடைபட்டு விட்டது..

      காலம் கை கொடுத்தால் மீண்டும் வழங்குவேன்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
    2. வணக்கம்,,

      மகிழ்ச்சி,, அருமையான வார்த்தைக் கோர்வை,, என்னுள்ளும் பக்தி இலக்கியம் மீண்டும் படிக்க ஆர்வத்தை உருவாக்கும் பதிவுகள் தங்களுடையவை,,

      நீக்கு
    3. அன்புடையீர்..

      தங்கள் மீள்வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..