நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூலை 30, 2017

சீரார் ஆரூரன்

ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருஆரூரீர் வாழ்ந்து போதீரே!..

ஆற்றாது அழுதபடி அங்கும் இங்கும் அலைந்து திரிகின்ற வேளையிலும்
உமக்கு ஆளாய்  அடிமையாய் இருக்கும் அடியார்கள் உமது திருவாசலை நாடி வந்து   உம்மிடம்  தாமுற்ற அல்லலைச் சொல்லித் தவிக்கின்றார்கள்..

அவ்வேளையில்,
என்னவென்று கேட்காமலும்  ஏதென்று நோக்காமலும்
அமைதியாக இருக்கின்றீர்.. ஆரூரரே!.. நீரே வாழ்ந்து கொள்ளும்!..

ஈசன் எம்பெருமானிடம் இவ்வண்ணம் எதிர் வழக்கிட்டவர் -

சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள்..

திருக்கயிலாய மாமலையில் ஈசனுக்கு அருகில்
திருநீற்றுப் பேழையை ஏந்தியிருக்கும் அனுக்கத் தொண்டர்..

தேவர்களும் அசுரர்களும் அவர்களாகவே முடிவெடுத்து
இறைவனிடம் எவ்வித அனுமதியும் பெறாமல்
கடலைக் கலக்கி அமுதம் எடுக்க முயன்றனர்..

அவர்களுடைய பிழையால் இரண்டு விஷங்கள் தோன்றின..

மந்தர மலையின் நாணாக இருந்த வாசுகிப் பாம்பின் வாயிலிருந்தும்
கடலின் ஆழத்திலிருந்தும் - ஆக இரண்டு விஷங்கள்..

அவை ஒன்று திரண்டு திசையெங்கும் பரவியதைக் கண்டு அனைவரும் பயந்து நடுங்கி அடைக்கலமாக வந்து நின்ற இடம் - திருக்கயிலாயம்..

அடைக்கலமாக வந்து நின்றோரைக் காத்தருளும் பொருட்டு இறைவன் திருநோக்கம் கொண்டார்..

திருக்கயிலையின்  பளிங்குப் பாறைகளில் பிரதிபலித்த
ஈசன் திருமேனி அழகில் இருந்து இளைஞன் ஒருவன் தோன்றினான்..

அதனாலாயே சுந்தரன் எனப்பட்டான்..

அந்த இளைஞனை நோக்கிய எம்பெருமான் -

சுந்தரா!.. அவ்விடத்தை இவ்விடத்தே கொண்டு வா!.. - எனப் பணித்தார்...

சுந்தரரும் அந்த விஷத்தைக் கையில் ஏந்தி வந்து சிவபெருமானிடம் கொடுக்க - ஈசன் அதனை உண்டு தமது கண்டத்தினுள் நிறுத்திக் கொண்டார் ..

- என்று திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் அருளுரை செய்வார்...

இரண்டு விஷங்களையும் ஏந்தி வந்ததால் ஆலால சுந்தரர் என்ற புகழுரை..

சுந்தரர் திருக்கயிலாயத்தில் திருப்பணி செய்து வருங்கால் -
அம்பிகையின் சேடிப் பெண்களாகிய அநிந்திதை கமலினி எனும் இருவரையும் மலர் வனத்தில் மலர் கொய்யும் வேளையில்

இமைப் பொழுதிலும் நூற்றில் ஒரு பங்காக கண்ணுற்று அயர்ந்தார்..

அதன் விளைவாக - பூவுலகில் பிறக்க நேரிட்டது..


திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூர் எனும் திருத்தலத்தில் சடையனார் - இசைஞானியார் தம்பதியர்க்கு மகனாகப் பிறந்தார்..

அவருக்கு பெற்றோர்கள் சூட்டிய திருப்பெயர் நம்பி ஆரூரன்...

அவரது மேனி அழகினால் கவரப்பெற்ற நரசிங்க முனையரையர் அவரைத் தம் மகனாகக் கொண்டு தமது அரண்மனையில் வளர்த்து வந்தார்..

அநிந்திதை - திரு ஆரூரில் பரவை நாச்சியாராகவும்
கமலினி - திருஒற்றியூரில் சங்கிலி நாச்சியாராகவும் பிறந்தனர்..

சுந்தரர் திருமணப்  பருவம் எய்திய வேளையில் -
சடங்கவி சிவாச்சாரியாரின் திருமகளை மணம் பேசி நிச்சயித்தனர்..

திருநாவலூரில் திருமண நேரத்தில் ஈசன் முதியவராக வந்து,

நம்பி ஆரூரன் எனக்கு அடிமை! .. - எனச் சொல்லி
திருமணத்தைத் தடுத்து நிறுத்தினார்..

வழக்கு மூண்டது..

பித்தரோ நீர்?.. ஆருக்கு ஆர் அடிமை!.. - எனக் கொதித்தெழுந்தார் நம்பி ஆரூரன்..

பிரச்னைக்குரிய வழக்கை அரசன் தானே முன்னின்று விசாரிக்கவில்லை.

தமக்கு உரியவர்களான விசாரணைக் குழுவினையும் கூட்டவில்லை..

திருவெண்ணெய் நல்லூரில் இருந்த நீதி மன்றத்திற்குச் சென்றது - வழக்கு..

அங்கே அவையோரின் முன்பாக -

இவனுடைய சந்ததியே எனக்கு அடிமை!.. இதோ இவனுடைய பாட்டன் எழுதிக் கொடுத்த ஓலை!..

- என, முன்னைப் பழ ஆவணம்  ஒன்றினைக் காட்டினார் முதியவர்..

அந்த ஓலையைப் பிடுங்கிக் கிழித்துப் போட்டார் நம்பி ஆரூரன்..

இவன் இப்படிச் செய்யக்கூடும் என்று அறிந்தே நான் இதை ஒளித்துக் கொண்டு வந்தேன் - என்று அதனுடைய  மூலப் பிரதியைக் காட்டினார் முதியவர்..

அவையோர் அந்த ஓலையையும் நம்பி ஆரூரனின் பாட்டன் எழுதிய பழைய ஓலைகளையும் ஒத்துப் பார்த்தனர்..

இரண்டு ஓலைகளிலும் கையெழுத்து ஒன்றாகவே இருந்தது..

நல்லொழுக்கங்களுக்கு இருப்பிடமான சடையனாரின் மகன் என்றும் கருதவில்லை..
அரசனாகிய நரசிங்க முனையரையரின் வளர்ப்பு மகன் என்றும் கருதவில்லை..

கணப்பொழுதும் தாமதிக்காமல் தீர்ப்பினை வழங்கினர்...

நம்பியாரூரன் முதியவருக்கு அடிமை தான்.. எனவே அவர் பின்னே செல்லக் கடவன்!..

மனம் குலைந்த நம்பி ஆரூரன் முதியவரை நோக்கிக் கூவினார்..

என்னை அடிமையாய் கொண்ட பித்தனே.. நீர் யார்?.. உம்முடன் எங்கே வரவேண்டும்?..

அதோ.. அந்த கோயிலுக்கு!..  அருட்துறை எனும் திருக்கோயிலுக்கு!..

ஈசன் தன் திருவுருவங்காட்டி மறைந்தார்...

மனம் அதிர்ந்த நம்பி ஆரூரன் திகைத்தார்..
முன்னை நினைவுகள் மூண்டெழ இப்பிறவியின் மயக்கம் தீர்ந்தார்..

அப்பனே!.. - என அரற்றி அடி மலர்களில் வீழ்ந்தார்..

மனம் கனிந்த ஈசன்  -

சுந்தரா!.. எம்மைப் பாடுக!.. - என்றருளினார்..

எங்ஙனம் பாடுவேன் ஏழையேன்?.. - என உருகினார் நம்பி ஆரூரன்..

என்னைப் பித்தன் என்றனையே!.. அவ்வண்ணமே பாடுக... அதுவே எமக்கு அர்ச்சனைப் பாட்டாகும்!..

அந்த அளவில் தமிழமுதம் எங்கும் பொங்கிப் பரவியது..

அடுத்து வந்த நாட்களில் - திரு ஆரூரில் பரவை நாச்சியாருடன் திருமணத்தை நிகழ்த்தி வைத்தனன் - இறைவன்..

திரு ஒற்றியூரில் சங்கிலி நாச்சியாருடன் திருமணம் கூடி வந்த வேளையில் -
உனைப் பிரியேன்!.. - என, மகிழ மரத்தடியில் சத்தியம் செய்து கொடுத்தார்..

ஆயினும், திருஆரூரனைக் காணும் ஆவலினால் பிரியும்படி நேரிட்டது..

சங்கிலி நாச்சியார் அறியாத வண்ணம் சுந்தரர் அங்கிருந்து புறப்பட்டதும்
ஊர் எல்லையில் அவரது பார்வை பறிபோயிற்று..

திருவெண்பாக்கம் என்ற தலத்தில் அவருக்கு ஊன்றுகோல் அருளப்பெற்றது..
இருப்பினும் - மின்னொளியாக வழிகாட்டினாள் அம்பிகை..

சுந்தரருக்கு காஞ்சியில் வலக்கண்ணின் பார்வை அருளப்பெற்றது..

தொடர்ந்து நடந்த சுந்தரர் தமிழகம் எங்கும் பயணித்தார்..

திரு அவிநாசியில் முதலை விழுங்கிய பாலனை மீட்டளித்தார்..
திருமுருகன்பூண்டியில் வேடுவர் தொந்தரவில் இருந்து மக்களைக் காப்பாற்றினார்..

ஸ்வாமிகள் செய்தருளிய மக்கள் பணி அளப்பரியன..

அவர் பூமியில் வாழ்ந்த வருடங்கள் பதினெட்டு மட்டுமே!..

சுந்தரர்- பரவை நாச்சியார்
ஸ்வாமிகள் அருளிய பதிகங்கள் ஆயிரத்திற்கும் மேல் - என்றாலும்
நமக்குக் கிடைத்திருப்பன நூறு திருப்பதிகங்கள் மட்டுமே!..

அவற்றுள் பொதுப் பதிகங்கள் நான்கு..

இன்று ஆடிச் சுவாதி..

ஸ்வாமிகள் வெள்ளை யானையின் மீதமர்ந்து
திருக்கயிலை மாமலைக்கு ஏகி இறைவனுடன் கலந்து இன்புற்ற நாள்..

இநத நாளில் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் திருப்பதிகங்கள் அருளிய திருத்தலங்கள் சிலவற்றை நாமும் தரிசிப்போம்..

திருவெண்ணெய் நல்லூர்


இறைவன் - ஸ்ரீ அருட்துறைநாதர்
அம்பிகை - ஸ்ரீ வேற்கண்ணி அம்பிகை

பித்தா பிறைசூடீபெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்
அத்தா உனக்காளாய் இனிஅல்லேன் எனலாமே..(7/1/1)

நாயேன் பலநாளும் நினைப்பின்றி மனத்துன்னைப்
பேயாய்த் திரிந் தெய்த்தேன் பெறலாகா அருள் பெற்றேன்
வேயார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்துறையுள்
ஆயா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே..(7/1/2)
***

திருமழபாடி


இறைவன் - ஸ்ரீ வைத்யநாதர்
அம்பிகை - ஸ்ரீ சுந்தராம்பிகை

பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே..(7/24/1)

கீளார் கோவணமுந் திருநீறுமெய் பூசியுன்றன்
தாளே வந்தடைந்தேன் தலைவாஎனை ஏன்றுகொள் நீ
வாளார் கண்ணிபங்கா மழபாடியுள் மாணிக்கமே
கேளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே..(7/24/2)
***

திருக்குருகாவூர்


இறைவன் - ஸ்ரீ ஸ்வேத ரிஷபேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ காவியங்கண்ணி

வரும்பழி வாராமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
சுரும்புடை மலர்க்கொன்றைச் சுண்ண வெண்ணீற்றானே
அரும்புடை மலர்ப்பொய்கை அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே..(7/29/5)

பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய் கடுஇருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே..(7/29/6)
***

திருநாட்டியத்தான்குடி


இறைவன் - ஸ்ரீ மாணிக்க வண்ணர்
அம்பிகை - ஸ்ரீ மங்களாம்பிகை

அம்மையும் அப்பனும் 
நாற்று நட்ட திருக்கோலத்தில் 
உழவனும் உழத்தியுமாக
திருக்காட்சி நல்கிய தலம்..

கல்லேன் அல்லேன் நின்புகழ் அடிமை கல்லாதே பலகற்றேன்
நில்லேன் அல்லேன் நின்வழி நின்றார் தம்முடைய நீதியை நினைய
வல்லேன் அல்லேன் பொன்னடி பரவ மாட்டேன் மறுமையை நினைய
நல்லேன் அல்லேன் நானுமக்கு அல்லால் நாட்டியத் தான்குடி நம்பீ..(7/15/4)

மட்டார் பூங்குழல் மலைமகள் கணவனைக் கருதாதார் தமைக் கருதேன்
ஒட்டீர் ஆகிலும் ஒட்டுவன் அடியேன் உம்மடி அடைந்தவர்க்கு அடிமைப் 
பட்டேன் ஆகிலும் பாடுதல் ஒழியேன் பாடியும் நாடியும் அறிய
நட்டேன் ஆதலால் நான்மறக் கில்லேன் நாட்டியத் தான்குடி நம்பீ..(7/15/5)
***

திருவலம்புரம்


இறைவன் - ஸ்ரீ வலம்புர நாதர்
அம்பிகை - ஸ்ரீ வடுவகிர் கண்ணி

எனக்கினித் தினைத்தனை புகலிடம் அறிந்தேன்
பனைக்கனிப் பழம்படும் பரவையின் கரைமேல்
எனக்கினி அவன்தமர்க் கினியவன் எழுமையும்
மனக்கினி அவன்தன திடம்வலம் புரமே..(7/72/1)

நீறணி மேனியன் நெருப்புமிழ் அரவினன்
கூறணி கொடுமழு ஏந்தியோர் கையினன்
ஆறணி அவிர்சடை அழல்வளர் மழலைவெள்
ஏறணி அடிகள்தம் இடம்வலம் புரமே..(7/72/3)
***

திருவெண்கோயில் - வெண்பாக்கம்


இறைவன் - ஸ்ரீ ஊன்றீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ மின்னொளியம்மை

இன்றைக்கு இத்தலம் இல்லை..
பூண்டி நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டபோது
அதனுள் ஆழ்ந்து போயிற்று..

திருவள்ளூரை அடுத்த பூண்டியில்
புதிதாக கோயில் கட்டப்பட்டு அதனுள்
திருமேனிகள் விளங்குகின்றன..

மூல விக்ரகம் சென்னை புரசை வாக்கம்
கங்காதேஸ்வரர் திருக்கோயிலில் திகழ்வதாகவும்
சொல்லப்படுகின்றது...

கீழுள்ள திருப்பாடல்களின் வாயிலாக
சங்கிலி நாச்சியாருக்கு செய்தளித்த சூளுறவையும்
கண் பார்வை இழந்த சுந்தரர்
ஊன்று கோல் பெற்றதையும் அறியலாம்..

பொன்னவிலுங் கொன்றையினாய் போய்மகிழ்க் கீழிருவென்று
சொன்னஎனைக் காணாமே சூளுறவு மகிழ்க்கீழே
என்னவல்ல பெருமானே இங்கிருந்தாயோ என்ன
ஒன்னலரைக் கண்டாற்போல் உளோம்போகீர் என்றானே.. (7/89/9)

மான்றிகழுஞ் சங்கிலியைத் தந்துவரு பயன்களெல்லாம்
தோன்ற அருள் செய்தளித்தாய் என்றுரைக்க உலகமெல்லாம்
ஈன்றவனே வெண்கோயில் இங்கிருந்தாயோ என்ன
ஊன்றுவதோர் கோல்அருளி உளோம்போகீர் என்றானே..(7/89/10)
***

திருஆரூர்


இறைவன் - வன்மீக நாதர், புற்றிடங்கொண்டார்
அம்பிகை - அல்லியங்கோதை, கமலாம்பிகை

காஞ்சியில் வலக்கண் பெற்ற சுந்தரர்
திருஆரூரில் இடக்கண் பெற்றனர்..

இறைவனுக்கே ஆட்பட்ட அடியார்களைத் தொகுத்து
திருத்தொண்டத்தொகை எனும் திருப்பதிகமாக அருளினார்..

சுந்தரரின் பொருட்டு பற்பல திருவிளையாடல்கள்
நிகழ்த்தப்பெற்ற திருத்தலம் - திரு ஆரூர்..

பொன்னும் மெய்ப் பொருளும் தருவானைப்
போகமுந் திருவும் புணர்ப்பானைப்
பின்னை என்பிழையைப் பொறுப்பானைப்
பிழையெலாந் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்றறி வெண்ணா
எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற் பழனத்தணி
ஆரூரனை மறக்கலுமாமே..(7/59/1)

கரியானை உரிகொண்ட கையானைக்
கண்ணின் மேலொரு கண்ணுடையானை
வரியானை வருத்தங் களைவானை
மறையானைக் குறை மாமதி சூடற்கு
உரியானை உலகத்து உயிர்க்கு எல்லாம்
ஒளியானை உகந்து உள்கி நண்ணாதார்க்கு
அரியானை அடியேற்கு எளியானை
ஆரூரனை மறக்கலுமாமே..(7/59/7)
***


மக்களோடு மக்களாக வாழ்ந்த சுந்தரர்
தனது நண்பராகிய சேரமான் பெருமானுடன்
திருக்கயிலைக்கு ஏகிய நாள்
ஆடிச் சுவாதி..

இன்று சகல சிவாலயங்களிலும்
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுக்கும்
சேரமான் பெருமாள் நாயனாருக்கும்
சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன..

சுந்தரர் திருவடிகள் போற்றி.. போற்றி..
ஓம் நம சிவாய  சிவாய நம ஓம்..
*** 

வெள்ளி, ஜூலை 28, 2017

பரிமளப் பூங்கொடி

இன்று மங்கலகரமான
ஆடி மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமை..

இன்றைய பொழுதில் -
சிந்திப்பதற்கும் வந்திப்பதற்கும்
அன்னை அபிராமவல்லியின் திருவடிகள்..


ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி - ஸ்ரீ ஐயாறப்பர்

அதிசயம் ஆனவடிவுடையாள் அரவிந்தம் எல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி துணை  இரதி
பதிசயமானது அபசயம் ஆகமுன் பார்த்தவர்தம்
மதிசயம் ஆக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே!.. (017)

வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து என்விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே!.. (019)

உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒருபக்கமோ
அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே!.. (020)


மாமதுரை மீனாள்
மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கைச் சகலகலா மயில் தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும்பெண் கொடியே!.. (021)

மணியே மணியின் ஒளியே ஒளிரும் அணி புனைந்த
அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே!.. (024)

உடைத்தனை வஞ்சப் பிறவியை உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை சுந்தரி நின்னருள் ஏதென்று சொல்லுவதே!.. (027)

ஸ்ரீ காந்திமதி - நெல்லை


சொல்லும் பொருளும் என நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின்புது மலர்த்தாள்
அல்லும் பகலும்தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே!.. (028)

வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகும்
தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொற்
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே!.. (034)

கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்துமாலை விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும் பட்டும் எட்டுத்
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே!.. (037)

ஸ்ரீ அபிராமவல்லி
பரிமளப் பூங்கொடியே பைரவி
நின் புதுமலர்த் தாள்
போற்றி.. போற்றி!..

ஓம் சக்தி ஓம்!..
* * * 

வியாழன், ஜூலை 27, 2017

பண் உகந்த பரமன்

இன்று ராகு கேது பெயர்ச்சி 

சாயாக்கிரகங்களாகிய ராகுவும் கேதுவும் -
தலை கீழாகச் சுற்றி வருவதாக குறிக்கப்படுகின்றது..

இன்று மதியம் 12.48 மணியளவில் -

ராகு - சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும் 
(மக நட்சத்திரம் முதல் பாதத்திலிருந்து ஆயில்யம் நான்காம் பாதத்திற்கும்)

கேது - கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும்
(அவிட்ட நட்சத்திரம் மூன்றாம் பாதத்திலிருந்து அவிட்டம் இரண்டாம் பாதத்திற்கும்)

பெயர்ச்சி ஆகின்றார்கள் - என, கணித்துள்ளனர்..

ராகு கேது பெயர்ச்சியினால் -
ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் என்னென்ன விளைவுகள் ஏற்படும் ?..

அதெல்லாம் அவரவர் வாங்கி வந்த வரம்..


இதற்கு என்னென்ன பரிகாரம்?..


முடிந்தவரைக்கும் ராகு கேது இருவருக்கும் ஐஸ் வைக்கலாமா!.. 

அதற்கெல்லாம் இருவரும் மயங்கி விடுவார்களா?..

அதற்கெல்லாம் மயங்க மாட்டார்கள்.. 

வருவது எதுவானாலும் அனுபவித்துக் கழிக்க வேண்டியது தான்..
ராகுவும் கேதுவும் நமக்குக் கொடுப்பதெல்லாம் - 
போன ஜன்மத்தின் கணக்கு வழக்கில் மிச்சம் மீதி தான்!..

ஆனாலும் - பரிகாரம் என்பது அவரவர் விருப்பம்..
புகழ் பெற்ற சிவாலயங்களிலும் குறிப்பாக நாகம் வணங்கியதாக புகழ்ந்துரைக்கப்படும் திருக்கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நிகழ்கின்றன..

வீட்டின் அருகில் உள்ள திருக்கோயிலில் இறைவழிபாடு செய்வது சாலச் சிறந்தது..

ஏழை எளியோர்க்கு உதவுவது மிகச் சிறந்தது..

நாகம் வழிபட்டதாகச் சொல்லப்படும் சிவாலயங்களுள் சிறப்பான தலம் -

திருப்பாதாளீச்சரம்.. 

இத்திருத்தலம் இன்றைக்கு பாமணி என்று வழங்கப்படுகின்றது..

பாம்பணி என்பதே பாமணி என்று மருவியது என்கின்றனர்..

இத்திருத்தலம் - மன்னார்குடியில் இருந்து 2 கி,மீ., தொலைவில் உள்ளது..

இத்திருத்தலத்தில் இன்று ராகு கேது பெயர்ச்சி சிறப்பாக நடைபெறுகின்றது..

இத்திருத்தலத்தில் -
திருஞானசம்பந்தப் பெருமான் வழிபட்டு திருப்பதிகம் அருளியுள்ளார்..

திருநாவுக்கரசரும் சுந்தரரும் தமது திருவாக்கினால் குறித்துள்ளனர்..

திருப்பாதாளேஸ்வரம் குறித்த முந்தைய பதிவை இங்கே காணலாம்..

இன்றைய பதிவில்  இடம்பெற்றுள்ள ஸ்வாமி அம்பாள் படங்கள் தேவார திருத்தலங்கள் எனும் தளத்திலிருந்து பெறப்பட்டவை..

ஏனைய படங்கள் - எனது கைவண்ணம்.. 

இன்றைய பதிவில் - திருஞானசம்பந்தப் பெருமான் அருளியுள்ள திருப்பதிகம் இடம்பெறுகின்றது.. 

இத்திருப்பதிகம் முழுதும்  
ஈசன் எம்பெருமான் தனது செஞ்சடையின் மேல் பிறை, ஊமத்தம் பூ , கொன்றை மலர் ஆகியவற்றுடன்  கங்கையணிந்து உமையொரு பாகனாகத் திகழ்வதனை ஞான சம்பந்தப் பெருமான் புகழ்ந்துரைக்கின்றார்..

மேலும் - 

ஈசனின்  திருமேனியில் நாகம் விளங்குவதை - 
திருப்பதிகத்தின் ஒவ்வொரு திருப்பாடலிலும் குறித்தருள்கின்றார்...      

இத்திருப்பதிகத்தினால் நமக்கு என்ன நன்மை!?..

பாம்புகள் என்றாலே மனித குலத்தில் 99.9% பேருக்கு அச்சம் தான்.. 

அதிலும் விஷமுடைய  நாகங்கள் என்றால் சொல்ல வேண்டியதில்லை..

அத்தகைய நாகங்கள் நம்முடைய வழியில் இருந்து விலகுகின்றன...

அவ்வளவு தானா?...

அதை விட மேலாக -

மனித வடிவுடன் அலையும் நாகங்கள் பற்பல..

அவைகளும் நம்மை விட்டு விலகும்.. அல்லது,
நாம் அவற்றை விட்டு விலகுவோம்!...


திருத்தலம்
திருப்பாதாளீச்சுரம் - பாமணி


ஸ்ரீ பாதாளேஸ்வரர்
ஸ்ரீ அமிர்த நாயகி
இறைவன் - ஸ்ரீ நாகநாதர், பாதாளேஸ்வரர்
அம்பிகை  - ஸ்ரீ அமிர்த நாயகி

தல விருட்சம் - மா
தீர்த்தம் - நாக தீர்த்தம்திருஞான சம்பந்தர் அருளிய திருப்பதிகம்
முதலாம் திருமுறை
திருப்பதிக எண் - 108.


காவிரித் தென்கரையின்
நூற்று நான்காவது திருத்தலம்..

திருப்பதிகம் வழங்கியோர் 
தருமபுர ஆதீனம்
அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..


மின்னியல் செஞ்சடைமேல் விளங்குமதி மத்தமொடு நல்ல
பொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப் பொற்பமரும்
அன்ன மனநடையாள் ஒருபாகத்து அமர்ந்தருளி நாளும்
பன்னிய பாடலினான் உறைகோயில் பாதாளே..(01)

நீடலர் கொன்றையொடு நிரம்பா மதிசூடி வெள்ளைத்
தோடமர் காதில் நல்ல குழையான் சுடுநீற்றான்
ஆடரவம் பெருக அனலேந்திக் கைவீசி வேதம்
பாடலினால் இனியான் உறைகோயில் பாதாளே!..(02)

நாகமும் வான்மதியுந் நலமல்கு செஞ்சடையான் சாமம்
போகநல் வில்வரையாற் புரமூன்றெரித்து உகந்தான்
தோகைநன் மாமயில்போல் வளர்சாயல் தூமொழியைக் கூடப்
பாகமும் வைத்துகந்தான் உறைகோயில் பாதாளே..(03)


அங்கமும் நான்மறையும் அருள்செய்து அழகார்ந்த அஞ்சொல்
மங்கையோர் கூறுடையான் மறையோன் உறைகோயில்
செங்கயல் நின்றுகளுஞ் செறுவிற் றிகழ்கின்ற சோதிப்
பங்கய நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளே..(04)

பேய்பல வுந்நிலவப் பெருங்காடரங் காகவுன்னி நின்று
தீயொடு மான்மறியும் மழுவுந் திகழ்வித்துத்
தேய்பிறையும் அரவும் பொலிகொன்றைச் சடைதன் மேற்சேரப்
பாய்புனலும் உடையான் உறைகோயில் பாதாளே!..(05)

கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச் சடைதன் மேலன்று
விண்ணியன் மாமதியும் உடன்வைத்தவன் விரும்பும்
பெண்ணமர் மேனியினான் பெருங்கா டரங்காக ஆடும் 
 பண்ணியல் பாடலினான் உறைகோயில் பாதாளே..(06)


விண்டலர் மத்தமொடு மிளிரும் இளநாகம் வன்னிதிகழ்
வண்டலர் கொன்றைநகு மதிபுல்கு வார்சடையான்
விண்டவர் தம்புரமூன் றெரிசெய்து உரைவேத நான்கும் அவை
பண்டிசை பாடலினான் உறைகோயில் பாதாளே!..(07)

மல்கிய நுண்ணிடையாள் உமைநங்கை மறுக அன்று கையால்
தொல்லை மலையெடுத்த அரக்கன்தலை தோள்நெரித்தான்
கொல்லை விடையுகந்தான் குளிர்திங்கள் சடைக்கணிந்தோன்
பல்லிசை பாடலினான் உறைகோயில் பாதாளே!..(08)

தாமரை மேலயனும் அரியுந்தம தாள்வினையால் தேடிக்
காமனை வீடுவித்தான் கழல்காண்பில ராயகன்றார்
பூமரு வுங்குழாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்ல
பாமரு வுங்குணத்தான் உறைகோயில் பாதாளே!..(09)


காலையி லுண்பவருஞ் சமண்கையருங் கட்டுரை விட்டன்று 
ஆல விடநுகர்ந்தான் அவன் தன்னடியே பரவி
மாலையில் வண்டினங்கள் மதுவுண்டு இசைமுரல வாய்த்த
பாலையாழ்ப் பாட்டுகந்தான் உறைகோயில் பாதாளே!..(10)

பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த பாதாளைச் சேரப்
பொன்னியன் மாடமல்கு புகலிந்நகர் மன்னன்
தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன் சொன்ன
இன்னிசை பத்தும்வல்லார் எழில்வானத்து இருப்பாரே!..(11)
- திருச்சிற்றம்பலம் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
* * *  

புதன், ஜூலை 26, 2017

பெண் பிள்ளாய் வாழியே..

இன்று மங்கலகரமான நாள்..

ஆடி மாதத்தின் பூர நட்சத்திரம்..

அம்பிகை - பொங்கும் மங்கலத்தில் பூத்து நின்ற நாள்!..

ஊழிகளின் தொடக்கத்தில் - புவனம் முழுதையும் பூத்து அருள்வதற்காக - ஜகத் ஜனனியாகிய அம்பிகை - புஷ்பவதியாக பூத்து நின்றருளினள்.

அந்த மங்கலம் அனுசரிக்கப்படும் நாளே - ஆடிப் பூரம்!..

அம்மன் சந்நிதிகள் கோலாகலமாக விளங்கும் நாள் - ஆடிப்பூரம்!..


தமிழகம் எங்கும் அம்பிகைக்கு சிறப்பான வைபவங்கள் நிகழ்கின்றன..

மாமதுரை மீனாள்


புன்னைநல்லூர் மகமாயி

ஸ்ரீ உண்ணாமுலையாள்
ஸ்ரீகாந்திமதி - நெல்லை
ஏலவார் குழலகு
ஸ்ரீ துர்கை - வேதாரண்யம்
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவாமுகுந்தர்க்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே!..(013)
-: அபிராமி பட்டர் :-

மங்கலங்களுடன் மங்கலமாக -

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாளின் திருஅவதாரத் திருநாளாகவும் திகழ்கின்றது - ஆடிப்பூரம்!..

திரு ஆடிப்பூரம் - கோதை நாச்சியாரின் திரு அவதாரத் திருத்தலமாகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது..

சம்ப்ரதாயமாக திருக்கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது..

ஐந்தாம் திருநாளன்று ஐந்து கருட சேவை நடைபெற்றது..

ஏழாம் திருநாளன்று  ஸ்ரீ ஆண்டாள் மடியில் ஸ்ரீரங்க மன்னார் சயனத் திருக்கோல சேவை சாதித்தருளினார்..
எட்டாம் திருநாள்  புஷ்ப பல்லக்கு...

ஒன்பதாம் திருநாளான்று திருத்தேரோட்டம்..

இதை முன்னிட்டு - ஸ்ரீரங்கத்திலிருந்து -
ஸ்ரீ ஆண்டாளுக்கும் ஸ்ரீ ரங்க மன்னாருக்கும் வஸ்திர மரியாதை செய்யப் பெற்றது..

பட்டு வேஷ்டி, பட்டுப் புடவை முதலான சீர்வரிசைகள் பதினைந்து தட்டுகளில் ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வஸ்திர மரியாதையை ஏற்றுக் கொண்டு - ஆண்டாள் ஸ்ரீரங்கமன்னாருடன் திருத்தேரில் எழுந்தருள்கின்றாள்..

இதன்பிறகு யாகத்துடன் ஆடிப்பூரத் திருவிழா நிறைவடைகின்றது..
திருஆடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே
பெரும்பூதூர்  மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்தி மூன்றுரைத்தாள் வழியே
உயர் அரங்கர்க்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!..


மீண்டும் ஒரு கோடை வந்தது!.. - என்னும்படிக்கு வெயிலின் தாக்கம்..

நீர் நிலைகளின் நிலை சொல்லும் தரமன்று...
இந்த வருடமாவது வேளாண்மை தொடருமா?.. தெரியவில்லை..

இந்த நிலையிலும்  குலுக்கல்  கும்மாளங்களுடன் 
தங்களிடம்  மட்டுமே சேலை வாங்க வருமாறு 
கதறுகின்றன துணிக்கடைகள்..

அதைக் கேட்டு விட்டு - பெருகும் வியர்வையுடன் -
ஆடித் தள்ளுபடி!.. அந்தத் தள்ளுபடி!.. இந்தத் தள்ளுபடி!.. 
-  என்று அலைகின்றனர் மக்கள்...

இவற்றுக்கிடையில் -
திருக்கோயில்களை நாடிச் சென்று
ஐயனையும் அம்பிகையையும் 
வழிபட்டு உய்வடைவோர் ஆயிரம்.. ஆயிரம்..

எத்தனை எத்தனையோ மங்கலங்களுக்கு இருப்பிடம் ஆடி மாதம்!..

இந்த நாட்களில் - ஒருவருக்கொருவர் முகமன் கூறி - அன்பினைப் பரிமாறிக் கொள்ளுவதே சிறந்த நலன்களுக்கு அடிப்படை என்கின்றனர் ஆன்றோர்.

ஆடி மாதத்தில், அம்மன் கோயில்களில் - வீண் ஆடம்பரமின்றி -
ஏழை எளியவர்க்கு கூழ் வார்த்து வேண்டுதல் செய்வது அன்பின் வெளிப்பாடு..

மஞ்சள், குங்குமம், சந்தனம், வளையல் இவற்றுடன் தாம்பூலம் வைத்து அக்கம்பக்கம் அண்டை அயலாருடன் நட்பைப் பேணுதல் சிறப்பு..

அதிலும் முக்கியமாக -

ஏழைப் பெண் குழந்தைகளுக்கு இயன்றவரை புத்தாடை வளையல்களை வழங்கி மகிழ்வித்தால் - அம்பிகையை மகிழ்வித்ததாக ஆகின்றது..

அம்பிகை மனம் மகிழ்ந்தால் -
நிலையான செல்வம் நமது வீட்டில் குடி கொள்ளும் என்பது திருக்குறிப்பு..

ஆயுளும் ஆரோக்யமும் ஐஸ்வர்யமும் பெருகி - இல்லத்தில்
மகிழ்ச்சி நிலையாக குடிகொள்வதில் அனைவருக்கும் விருப்பம்!..

அவ்வண்ணம் நிகழ்வதற்கு அம்பிகையை வேண்டுவோம்!..

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து..

ஓம் சக்தி ஓம்..
* * *

திங்கள், ஜூலை 24, 2017

சிவ தரிசனம்

நேற்று ஆடி அமாவாசை...

அப்பர் ஸ்வாமிகளுக்கு திருக்கயிலாய தரிசனம் கிடைத்த நாள்..


விடியற்காலையில் இருந்தே -
திருஐயாற்றை நோக்கி மக்களின் பயணம்..

கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் -
நெல்லை, மதுரை, திண்டுக்கல், தேவகோட்டை, காரைக்குடி -
என, தமிழகத்தின்  பல பகுதியில் இருந்தும் மக்கள்  திரண்டிருந்தனர்..

காவிரியில் வெள்ளம்  இல்லை எனினும் அதன் கரையினில் மக்கள் வெள்ளம்..

சிவ தரிசனம் காண்பதற்கு - நானும் திருஐயாறு சென்றிருந்தேன்..

பேருந்து நிலையத்தில் இருந்து திருக்கோயில் செல்லும் வழியில் பேருந்துகளைத் தடுத்து மக்களுக்காக விட்டிருந்தாலும் நெரிசல் - கடுமையான நெரிசல்..

காவலர்கள் கடும் வெயிலிலும் மக்கள் பணி செய்து கொண்டிருந்தனர்...

அவர்களை மனதார வாழ்த்தினர் பலரும்..

திருஐயாற்றின் சிவாலயத்தில் தனிச் சிறப்பு -
தெற்கு கோபுர வாயிலில் அமைந்திருக்கும் குங்கிலியக் குண்டம்..

ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் புகைந்து கொண்டிருப்பது..,

கோயிலுக்குள் செல்லும் முன்பாக அதனுள் குங்கிலியத்தைப் போட்டு விட்டு எதிரிலுள்ள ஆட்கொண்டார் ஸ்வாமியை வணங்கிச் செல்வது மரபு..

கோபுர வாசலில் குங்கிலியப் பொட்டலங்கள் விற்கும் கடைகளும் உள்ளன..

சிறிய அளவில் குங்கிலியத்தை தாளில் மடித்துத் தருவார்கள்..

குங்கிலியத்தைக் குண்டத்தினுள் போட்டு விட்டு தாளை வெளியே போட வேண்டும்,..

ஆனால் -

உணர்ச்சி வசப்பட்ட மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டும், முட்டி மோதிக் கொண்டும் இன்னும் பலவிதமான சேட்டைகளைச் செய்து கொண்டும்

குங்கிலியக் குண்டத்தினுள் பொட்டலங்களை அப்படியே வீசிக் கொண்டிருந்தனர்...

அதன் விளைவு - புகைந்து கொண்டிருந்த குண்டம் குபீரெனத் தீப்பற்றிக் கொண்டது...நூற்றுக் கணக்கான மக்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கும் போது எங்கே தப்பித்து ஓடுவது?...

ஆபத்தான அந்த வேளையில் -

அஞ்சாத சிங்கமாக காவலர் ஒருவர் அருகிலிருந்த தேநீர்க்கடையில் இருந்து ஒரு வாளி தண்ணீரை எடுத்து வந்து குண்டத்தினுள் ஊற்றி -

மூண்டெழுந்த தீயையும் மக்களின் பதற்றத்தையும் தணித்து
சூழ்நிலையைக் குளிர வைத்தார்...

ஆனாலும், அடுத்த சில நொடிகளில் மக்கள் மீண்டும் குங்கிலியப் பொட்டலங்களைக் குண்டத்தினுள் போட்டுக் கொண்டிருந்தனர்...

மக்கள் திருந்த மாட்டார்கள் என்பது தான் தெரிந்த விஷயமாயிற்றே!..

வாருங்கள் நாம் கோயிலுக்குள் செல்வோம்...

ஆடி அமாவாசை தீர்த்தவாரியை முன்னிட்டு
ரிஷப வாகனத்தில் ஸ்வாமி அம்பாள் எழுந்தருள இருக்கின்றனர்..

தெற்கு வாசலின் இரண்டாவது ராஜகோபுரத்தின் அருகில் -
இதோ அறுபத்து மூவர் - பெரிய ரதத்தில் காட்சியளிக்கின்றனர்...திருக்கோயிலில் ஆங்காங்கே சிவனடியார்களின் தேவார பாராயணம்..
சிவகண திருக்கயிலாய இசைக்குழுவினரின் வாத்திய முழக்கம்..மக்கள் பணியில் நீர் வழங்குதல், அன்னதானம் என கோலாகலமாக இருந்தது..

சென்னை அம்பத்தூர் சிவனடியார் திருக்கூட்டத்தினர் திருக்கோயிலில் துப்புரவுப் பணி செய்து கொண்டிருந்தனர்..

திருக்கோயிலில் எங்கு காணினும் மக்கள் திரள்..

அவரவர்க்கும் ஆயிரம் ஆயிரமாகப் பிரச்னைகள்..

அத்தனையையும் விட்டுத் தள்ளி விட்டு
ஐயாறனின் அடித்தலமே துணை!.. - என்று கூடியிருக்கின்றனர்..

காவிரியில் தீர்த்தவாரி முடிந்ததும் நிகழ்ந்த திருவீதி உலாவின் சில காட்சிகள் - இன்றைய பதிவில்...முன்னிரவுப் போதில் அப்பர் ஸ்வாமிகளுக்கு கயிலாய தரிசனம் காட்டிய வைபவம்...

அதைக் கண்டு இன்புறத்தான் வீடு வாசலை மறந்து
கோயிலடியில் கொதிக்கும் வெயிலில் கிடக்கின்றார்கள்..

உச்சிப் பொழுது வரை திருக்கோயிலில் இருந்தேன்...

இரவு வரைக்கும் அங்கேயே இருப்பதற்குக் கொடுத்து வைக்கவில்லை..

உறவினர் ஒருவர் ஆபத்தான  நிலையில்.. சென்று பார்க்க வேண்டும்..

எல்லாவற்றுக்கும் ஐயாறப்பன் துணை.. - என்று
வேண்டிக் கொண்டபடி தஞ்சைக்குத் திரும்பினேன்...

பதிவில் உள்ள படங்கள் தங்களின் மனம் கவரும் என நம்புகின்றேன்..
  
காதல் மடப்பிடியோடுங் களிறு
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந் தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதல் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதங் கண்டறியாதன கண்டேன்!..
 

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் ஆனாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி.. போற்றி!..
திருநாவுக்கரசர் (6/55) 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
* * *