நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூலை 30, 2017

சீரார் ஆரூரன்

ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருஆரூரீர் வாழ்ந்து போதீரே!..

ஆற்றாது அழுதபடி அங்கும் இங்கும் அலைந்து திரிகின்ற வேளையிலும்
உமக்கு ஆளாய்  அடிமையாய் இருக்கும் அடியார்கள் உமது திருவாசலை நாடி வந்து   உம்மிடம்  தாமுற்ற அல்லலைச் சொல்லித் தவிக்கின்றார்கள்..

அவ்வேளையில்,
என்னவென்று கேட்காமலும்  ஏதென்று நோக்காமலும்
அமைதியாக இருக்கின்றீர்.. ஆரூரரே!.. நீரே வாழ்ந்து கொள்ளும்!..

ஈசன் எம்பெருமானிடம் இவ்வண்ணம் எதிர் வழக்கிட்டவர் -

சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள்..

திருக்கயிலாய மாமலையில் ஈசனுக்கு அருகில்
திருநீற்றுப் பேழையை ஏந்தியிருக்கும் அனுக்கத் தொண்டர்..

தேவர்களும் அசுரர்களும் அவர்களாகவே முடிவெடுத்து
இறைவனிடம் எவ்வித அனுமதியும் பெறாமல்
கடலைக் கலக்கி அமுதம் எடுக்க முயன்றனர்..

அவர்களுடைய பிழையால் இரண்டு விஷங்கள் தோன்றின..

மந்தர மலையின் நாணாக இருந்த வாசுகிப் பாம்பின் வாயிலிருந்தும்
கடலின் ஆழத்திலிருந்தும் - ஆக இரண்டு விஷங்கள்..

அவை ஒன்று திரண்டு திசையெங்கும் பரவியதைக் கண்டு அனைவரும் பயந்து நடுங்கி அடைக்கலமாக வந்து நின்ற இடம் - திருக்கயிலாயம்..

அடைக்கலமாக வந்து நின்றோரைக் காத்தருளும் பொருட்டு இறைவன் திருநோக்கம் கொண்டார்..

திருக்கயிலையின்  பளிங்குப் பாறைகளில் பிரதிபலித்த
ஈசன் திருமேனி அழகில் இருந்து இளைஞன் ஒருவன் தோன்றினான்..

அதனாலாயே சுந்தரன் எனப்பட்டான்..

அந்த இளைஞனை நோக்கிய எம்பெருமான் -

சுந்தரா!.. அவ்விடத்தை இவ்விடத்தே கொண்டு வா!.. - எனப் பணித்தார்...

சுந்தரரும் அந்த விஷத்தைக் கையில் ஏந்தி வந்து சிவபெருமானிடம் கொடுக்க - ஈசன் அதனை உண்டு தமது கண்டத்தினுள் நிறுத்திக் கொண்டார் ..

- என்று திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் அருளுரை செய்வார்...

இரண்டு விஷங்களையும் ஏந்தி வந்ததால் ஆலால சுந்தரர் என்ற புகழுரை..

சுந்தரர் திருக்கயிலாயத்தில் திருப்பணி செய்து வருங்கால் -
அம்பிகையின் சேடிப் பெண்களாகிய அநிந்திதை கமலினி எனும் இருவரையும் மலர் வனத்தில் மலர் கொய்யும் வேளையில்

இமைப் பொழுதிலும் நூற்றில் ஒரு பங்காக கண்ணுற்று அயர்ந்தார்..

அதன் விளைவாக - பூவுலகில் பிறக்க நேரிட்டது..


திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூர் எனும் திருத்தலத்தில் சடையனார் - இசைஞானியார் தம்பதியர்க்கு மகனாகப் பிறந்தார்..

அவருக்கு பெற்றோர்கள் சூட்டிய திருப்பெயர் நம்பி ஆரூரன்...

அவரது மேனி அழகினால் கவரப்பெற்ற நரசிங்க முனையரையர் அவரைத் தம் மகனாகக் கொண்டு தமது அரண்மனையில் வளர்த்து வந்தார்..

அநிந்திதை - திரு ஆரூரில் பரவை நாச்சியாராகவும்
கமலினி - திருஒற்றியூரில் சங்கிலி நாச்சியாராகவும் பிறந்தனர்..

சுந்தரர் திருமணப்  பருவம் எய்திய வேளையில் -
சடங்கவி சிவாச்சாரியாரின் திருமகளை மணம் பேசி நிச்சயித்தனர்..

திருநாவலூரில் திருமண நேரத்தில் ஈசன் முதியவராக வந்து,

நம்பி ஆரூரன் எனக்கு அடிமை! .. - எனச் சொல்லி
திருமணத்தைத் தடுத்து நிறுத்தினார்..

வழக்கு மூண்டது..

பித்தரோ நீர்?.. ஆருக்கு ஆர் அடிமை!.. - எனக் கொதித்தெழுந்தார் நம்பி ஆரூரன்..

பிரச்னைக்குரிய வழக்கை அரசன் தானே முன்னின்று விசாரிக்கவில்லை.

தமக்கு உரியவர்களான விசாரணைக் குழுவினையும் கூட்டவில்லை..

திருவெண்ணெய் நல்லூரில் இருந்த நீதி மன்றத்திற்குச் சென்றது - வழக்கு..

அங்கே அவையோரின் முன்பாக -

இவனுடைய சந்ததியே எனக்கு அடிமை!.. இதோ இவனுடைய பாட்டன் எழுதிக் கொடுத்த ஓலை!..

- என, முன்னைப் பழ ஆவணம்  ஒன்றினைக் காட்டினார் முதியவர்..

அந்த ஓலையைப் பிடுங்கிக் கிழித்துப் போட்டார் நம்பி ஆரூரன்..

இவன் இப்படிச் செய்யக்கூடும் என்று அறிந்தே நான் இதை ஒளித்துக் கொண்டு வந்தேன் - என்று அதனுடைய  மூலப் பிரதியைக் காட்டினார் முதியவர்..

அவையோர் அந்த ஓலையையும் நம்பி ஆரூரனின் பாட்டன் எழுதிய பழைய ஓலைகளையும் ஒத்துப் பார்த்தனர்..

இரண்டு ஓலைகளிலும் கையெழுத்து ஒன்றாகவே இருந்தது..

நல்லொழுக்கங்களுக்கு இருப்பிடமான சடையனாரின் மகன் என்றும் கருதவில்லை..
அரசனாகிய நரசிங்க முனையரையரின் வளர்ப்பு மகன் என்றும் கருதவில்லை..

கணப்பொழுதும் தாமதிக்காமல் தீர்ப்பினை வழங்கினர்...

நம்பியாரூரன் முதியவருக்கு அடிமை தான்.. எனவே அவர் பின்னே செல்லக் கடவன்!..

மனம் குலைந்த நம்பி ஆரூரன் முதியவரை நோக்கிக் கூவினார்..

என்னை அடிமையாய் கொண்ட பித்தனே.. நீர் யார்?.. உம்முடன் எங்கே வரவேண்டும்?..

அதோ.. அந்த கோயிலுக்கு!..  அருட்துறை எனும் திருக்கோயிலுக்கு!..

ஈசன் தன் திருவுருவங்காட்டி மறைந்தார்...

மனம் அதிர்ந்த நம்பி ஆரூரன் திகைத்தார்..
முன்னை நினைவுகள் மூண்டெழ இப்பிறவியின் மயக்கம் தீர்ந்தார்..

அப்பனே!.. - என அரற்றி அடி மலர்களில் வீழ்ந்தார்..

மனம் கனிந்த ஈசன்  -

சுந்தரா!.. எம்மைப் பாடுக!.. - என்றருளினார்..

எங்ஙனம் பாடுவேன் ஏழையேன்?.. - என உருகினார் நம்பி ஆரூரன்..

என்னைப் பித்தன் என்றனையே!.. அவ்வண்ணமே பாடுக... அதுவே எமக்கு அர்ச்சனைப் பாட்டாகும்!..

அந்த அளவில் தமிழமுதம் எங்கும் பொங்கிப் பரவியது..

அடுத்து வந்த நாட்களில் - திரு ஆரூரில் பரவை நாச்சியாருடன் திருமணத்தை நிகழ்த்தி வைத்தனன் - இறைவன்..

திரு ஒற்றியூரில் சங்கிலி நாச்சியாருடன் திருமணம் கூடி வந்த வேளையில் -
உனைப் பிரியேன்!.. - என, மகிழ மரத்தடியில் சத்தியம் செய்து கொடுத்தார்..

ஆயினும், திருஆரூரனைக் காணும் ஆவலினால் பிரியும்படி நேரிட்டது..

சங்கிலி நாச்சியார் அறியாத வண்ணம் சுந்தரர் அங்கிருந்து புறப்பட்டதும்
ஊர் எல்லையில் அவரது பார்வை பறிபோயிற்று..

திருவெண்பாக்கம் என்ற தலத்தில் அவருக்கு ஊன்றுகோல் அருளப்பெற்றது..
இருப்பினும் - மின்னொளியாக வழிகாட்டினாள் அம்பிகை..

சுந்தரருக்கு காஞ்சியில் வலக்கண்ணின் பார்வை அருளப்பெற்றது..

தொடர்ந்து நடந்த சுந்தரர் தமிழகம் எங்கும் பயணித்தார்..

திரு அவிநாசியில் முதலை விழுங்கிய பாலனை மீட்டளித்தார்..
திருமுருகன்பூண்டியில் வேடுவர் தொந்தரவில் இருந்து மக்களைக் காப்பாற்றினார்..

ஸ்வாமிகள் செய்தருளிய மக்கள் பணி அளப்பரியன..

அவர் பூமியில் வாழ்ந்த வருடங்கள் பதினெட்டு மட்டுமே!..

சுந்தரர்- பரவை நாச்சியார்
ஸ்வாமிகள் அருளிய பதிகங்கள் ஆயிரத்திற்கும் மேல் - என்றாலும்
நமக்குக் கிடைத்திருப்பன நூறு திருப்பதிகங்கள் மட்டுமே!..

அவற்றுள் பொதுப் பதிகங்கள் நான்கு..

இன்று ஆடிச் சுவாதி..

ஸ்வாமிகள் வெள்ளை யானையின் மீதமர்ந்து
திருக்கயிலை மாமலைக்கு ஏகி இறைவனுடன் கலந்து இன்புற்ற நாள்..

இநத நாளில் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் திருப்பதிகங்கள் அருளிய திருத்தலங்கள் சிலவற்றை நாமும் தரிசிப்போம்..

திருவெண்ணெய் நல்லூர்


இறைவன் - ஸ்ரீ அருட்துறைநாதர்
அம்பிகை - ஸ்ரீ வேற்கண்ணி அம்பிகை

பித்தா பிறைசூடீபெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்
அத்தா உனக்காளாய் இனிஅல்லேன் எனலாமே..(7/1/1)

நாயேன் பலநாளும் நினைப்பின்றி மனத்துன்னைப்
பேயாய்த் திரிந் தெய்த்தேன் பெறலாகா அருள் பெற்றேன்
வேயார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்துறையுள்
ஆயா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே..(7/1/2)
***

திருமழபாடி


இறைவன் - ஸ்ரீ வைத்யநாதர்
அம்பிகை - ஸ்ரீ சுந்தராம்பிகை

பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே..(7/24/1)

கீளார் கோவணமுந் திருநீறுமெய் பூசியுன்றன்
தாளே வந்தடைந்தேன் தலைவாஎனை ஏன்றுகொள் நீ
வாளார் கண்ணிபங்கா மழபாடியுள் மாணிக்கமே
கேளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே..(7/24/2)
***

திருக்குருகாவூர்


இறைவன் - ஸ்ரீ ஸ்வேத ரிஷபேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ காவியங்கண்ணி

வரும்பழி வாராமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
சுரும்புடை மலர்க்கொன்றைச் சுண்ண வெண்ணீற்றானே
அரும்புடை மலர்ப்பொய்கை அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே..(7/29/5)

பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய் கடுஇருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே..(7/29/6)
***

திருநாட்டியத்தான்குடி


இறைவன் - ஸ்ரீ மாணிக்க வண்ணர்
அம்பிகை - ஸ்ரீ மங்களாம்பிகை

அம்மையும் அப்பனும் 
நாற்று நட்ட திருக்கோலத்தில் 
உழவனும் உழத்தியுமாக
திருக்காட்சி நல்கிய தலம்..

கல்லேன் அல்லேன் நின்புகழ் அடிமை கல்லாதே பலகற்றேன்
நில்லேன் அல்லேன் நின்வழி நின்றார் தம்முடைய நீதியை நினைய
வல்லேன் அல்லேன் பொன்னடி பரவ மாட்டேன் மறுமையை நினைய
நல்லேன் அல்லேன் நானுமக்கு அல்லால் நாட்டியத் தான்குடி நம்பீ..(7/15/4)

மட்டார் பூங்குழல் மலைமகள் கணவனைக் கருதாதார் தமைக் கருதேன்
ஒட்டீர் ஆகிலும் ஒட்டுவன் அடியேன் உம்மடி அடைந்தவர்க்கு அடிமைப் 
பட்டேன் ஆகிலும் பாடுதல் ஒழியேன் பாடியும் நாடியும் அறிய
நட்டேன் ஆதலால் நான்மறக் கில்லேன் நாட்டியத் தான்குடி நம்பீ..(7/15/5)
***

திருவலம்புரம்


இறைவன் - ஸ்ரீ வலம்புர நாதர்
அம்பிகை - ஸ்ரீ வடுவகிர் கண்ணி

எனக்கினித் தினைத்தனை புகலிடம் அறிந்தேன்
பனைக்கனிப் பழம்படும் பரவையின் கரைமேல்
எனக்கினி அவன்தமர்க் கினியவன் எழுமையும்
மனக்கினி அவன்தன திடம்வலம் புரமே..(7/72/1)

நீறணி மேனியன் நெருப்புமிழ் அரவினன்
கூறணி கொடுமழு ஏந்தியோர் கையினன்
ஆறணி அவிர்சடை அழல்வளர் மழலைவெள்
ஏறணி அடிகள்தம் இடம்வலம் புரமே..(7/72/3)
***

திருவெண்கோயில் - வெண்பாக்கம்


இறைவன் - ஸ்ரீ ஊன்றீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ மின்னொளியம்மை

இன்றைக்கு இத்தலம் இல்லை..
பூண்டி நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டபோது
அதனுள் ஆழ்ந்து போயிற்று..

திருவள்ளூரை அடுத்த பூண்டியில்
புதிதாக கோயில் கட்டப்பட்டு அதனுள்
திருமேனிகள் விளங்குகின்றன..

மூல விக்ரகம் சென்னை புரசை வாக்கம்
கங்காதேஸ்வரர் திருக்கோயிலில் திகழ்வதாகவும்
சொல்லப்படுகின்றது...

கீழுள்ள திருப்பாடல்களின் வாயிலாக
சங்கிலி நாச்சியாருக்கு செய்தளித்த சூளுறவையும்
கண் பார்வை இழந்த சுந்தரர்
ஊன்று கோல் பெற்றதையும் அறியலாம்..

பொன்னவிலுங் கொன்றையினாய் போய்மகிழ்க் கீழிருவென்று
சொன்னஎனைக் காணாமே சூளுறவு மகிழ்க்கீழே
என்னவல்ல பெருமானே இங்கிருந்தாயோ என்ன
ஒன்னலரைக் கண்டாற்போல் உளோம்போகீர் என்றானே.. (7/89/9)

மான்றிகழுஞ் சங்கிலியைத் தந்துவரு பயன்களெல்லாம்
தோன்ற அருள் செய்தளித்தாய் என்றுரைக்க உலகமெல்லாம்
ஈன்றவனே வெண்கோயில் இங்கிருந்தாயோ என்ன
ஊன்றுவதோர் கோல்அருளி உளோம்போகீர் என்றானே..(7/89/10)
***

திருஆரூர்


இறைவன் - வன்மீக நாதர், புற்றிடங்கொண்டார்
அம்பிகை - அல்லியங்கோதை, கமலாம்பிகை

காஞ்சியில் வலக்கண் பெற்ற சுந்தரர்
திருஆரூரில் இடக்கண் பெற்றனர்..

இறைவனுக்கே ஆட்பட்ட அடியார்களைத் தொகுத்து
திருத்தொண்டத்தொகை எனும் திருப்பதிகமாக அருளினார்..

சுந்தரரின் பொருட்டு பற்பல திருவிளையாடல்கள்
நிகழ்த்தப்பெற்ற திருத்தலம் - திரு ஆரூர்..

பொன்னும் மெய்ப் பொருளும் தருவானைப்
போகமுந் திருவும் புணர்ப்பானைப்
பின்னை என்பிழையைப் பொறுப்பானைப்
பிழையெலாந் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்றறி வெண்ணா
எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற் பழனத்தணி
ஆரூரனை மறக்கலுமாமே..(7/59/1)

கரியானை உரிகொண்ட கையானைக்
கண்ணின் மேலொரு கண்ணுடையானை
வரியானை வருத்தங் களைவானை
மறையானைக் குறை மாமதி சூடற்கு
உரியானை உலகத்து உயிர்க்கு எல்லாம்
ஒளியானை உகந்து உள்கி நண்ணாதார்க்கு
அரியானை அடியேற்கு எளியானை
ஆரூரனை மறக்கலுமாமே..(7/59/7)
***


மக்களோடு மக்களாக வாழ்ந்த சுந்தரர்
தனது நண்பராகிய சேரமான் பெருமானுடன்
திருக்கயிலைக்கு ஏகிய நாள்
ஆடிச் சுவாதி..

இன்று சகல சிவாலயங்களிலும்
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுக்கும்
சேரமான் பெருமாள் நாயனாருக்கும்
சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன..

சுந்தரர் திருவடிகள் போற்றி.. போற்றி..
ஓம் நம சிவாய  சிவாய நம ஓம்..
*** 

17 கருத்துகள்:

 1. அருமை. ஒரு கடமையே போல அருட்பதிவுகள் அடுக்கடுக்காய் அளித்து வருகிறீர்கள். படித்தாலே பல் சுளுக்கிக் கொள்ளுமோ என்று தோன்றும் வரிகளை தவறின்றி அருமையாய்த் தட்டச்சித் தரும் உங்கள் சேவை போற்றுதலுக்குரியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. அறிந்திருந்தாலும் மீண்டும் ரசித்தேன்... தேன்...

  பதிலளிநீக்கு
 3. அன்பின் ஜி அழகிய நடையில் தரிசனம் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. சிறப்பான தகவல்கள். உங்கள் மூலம் நாங்களும் பக்தியில் திளைக்கிறோம்.... நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. எத்தனை அருமையான பாடல்கள்!! தகவல்கள் சிறப்பு! திருஆரூர் சென்றிருக்கிறோம்...அருமையான கோயில். பெரிய கோயிலும் கூட...அருமையான பதிவு...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. நேற்று மீனாட்சி கோவிலில் கயிலைக்காட்சி சுந்தருக்கும், சேரமான் பெருமானுக்கும். மீனாட்சி முளைக்கொட்டுத் திருவிழாவில்.
  அவர் பாடல்களும் அவர் வரலாறும் அருமை.
  சுந்தரர் திருவடி போற்றி போற்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   முளைக்கொட்டுத் திருவிழாவின் படங்களை நானும் பார்த்தேன்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. ஆற்றாது அங்குமிங்கும் என்று துவங்கி ஆரூரரே நீரே வாழ்ந்து கொள்ளும் என்று முடியும் வரை உள்ள வரிகள் செந்தரர் இய்ற்றியதா தமிழ் நடை வேறுபடுகிறார்போல் இருக்கிறதே இது ஏதாவதுபாட பேதமா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   பதிவின் முதலில் உள்ள நான்கு வரிகளும் சுந்தரர் திருப்பதிகத்தின் பாடல் வரிகள்..

   அந்தப் பதிகம் திரு ஆரூரில் பாடப் பெற்றது..

   திருப் பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும் வாழ்ந்து போதீரே.. - என்றே இறைவனிடம் சொல்லியிருப்பார்..

   திருப்பதிகத்தின் முதல் பாடலின் கடைசி நான்கு வரிகளைப் பதிவில் வழங்கியிருக்கின்றேன்..

   அந்தப் பாடலில் அடியார்களுடைய ஆற்றாமை சொல்லப்பட்டிருக்கின்றது..

   அதனுடைய எளிய அர்த்தத்தைத் தான் பாடலின் கீழாக எழுதியிருக்கின்றேன்..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் இயற்றியதா என்று படிக்க வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   சுந்தரர் பாடிய திருப்பதிகம் தான் அது..
   அடுத்த சில தினங்களில் முழுப் பதிகத்தையும் பதிவில் தருகின்றேன்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. முதல் பாடல் வரிகளிலிருந்து ரசிக்க ஆரம்பித்தேன். ரொம்ப நல்லா இருந்தது (வாளாங் கிருப்பீர் - வாளா அங்கு இருப்பீர்-என்ன அருமையான தமிழ்). 'வாழ்ந்து போதீரே' - கிட்டத்தட்ட கோபத்தில் வரும் வசைச் சொல். அருமை.

  லிங்க தரிசனமும் சிறப்பா இருந்தது. திருவெண்ணெய் நல்லூரில், சூரியனையும் சந்திரனையும் அணிந்திருப்பது, 'சூரியன்-மூன்றாவது கண்', சந்திரன்-செஞ்சடைமேலிருப்பது' அதற்காகவா?

  'அத்தா' - இந்த வார்த்தையை நாம் மறந்துவிட்டோம். இஸ்லாமியர்கள் உபயோகிக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   ஈசனிடம் தாம் கொண்ட அன்பினால் தான் - வாழ்ந்து போதீரே!.. என்று பாடுகின்றார்..

   தவிரவும் -

   இறைவனின் திருமேனியை சில சமயங்களில் மனம் போன போக்கில் அலங்கரிக்கின்றனர்..

   இறைவனின் திரு நேத்ரங்களாக -
   சூரியன் வலப்புறமும் சந்திரன் இடப்புறமும் திகழ்வதாக ஐதீகச் சிறப்பு.. திரிநேத்ரம் என்று சொல்லும்போது மூன்றாவது கண்ணாக அக்னி குறிக்கப்படுகின்றது..

   இங்கே திருவெண்ணெய் நல்லூரில் சூரிய சந்திர சுட்டிகளை சிவலிங்கத்தின் நெற்றியில் பதித்திருக்கின்றார்கள்..

   நாம் என்ன சொல்லமுடியும்.. அவரவர்களாக உணர்ந்து கொள்ளவேண்டும்..

   தமிழர்கள் மறந்துவிட்ட இனிய சொற்கள் மிக அதிகம்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..