நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூன் 30, 2020

தெய்வ தரிசனம்

நாடும்  வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
நேற்று (29/6)
ஸ்ரீ ஸுதர்சன ஜயந்தி..

இன்றைய பதிவில்
வடக்கு ராஜ வீதி
ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி திருக்கோயில்
ஸ்ரீ சுதர்சன மூர்த்தி திருக்காட்சி..ஓம்
ஸூதர்சனாய வித்மஹே
மஹா ஜ்வாலாய தீமஹி
தந்நோ: சக்ர ப்ரசோதயாத்..

அடுத்து
ஆனி மாத வைபவமாக
தஞ்சை மேலராஜ வீதி
ஸ்ரீ கொங்கணேஸ்வரர்
திருக்கோயிலில் நிகழ்ந்த 
அலங்காரத் திருக்காட்சிகள்..

அழகிய படங்களை ழங்கிய
திரு.ஞானசேகரன் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி...

ஸ்ரீ கொங்கணேஸ்வரர்

ஸ்ரீ ஞானாம்பிகை
ஸ்ரீ அன்னபூரணி

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை ஆவது நம சிவாயவே..
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ

திங்கள், ஜூன் 29, 2020

ஸ்ரீ வராஹி வாழ்க

நாடும் வீடும் நலம் பெறவேண்டும்
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
ஆனி மாதத்தின் அமாவாசையை அடுத்து
அனுசரிக்கப்படுவது ஆஷாட நவராத்திரி...

இந்த நவராத்திரி
ஸ்ரீ வராஹி அம்மனுக்கு
உரியதாகும்...

ஆஷாட நவராத்திரி இல்லங்களில்
கடைப்பிடிக்கப்படுவது அவரவர் விருப்பம் என்ற நிலையில்
சாக்த சம்பிரதாய மடங்களில்
அனுசரிக்கப்படுகின்றது..

சிவாலயங்களில்
சப்த கன்னியருள் விளங்கும்
ஸ்ரீ வராஹி அம்மனுக்கு
சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
நிகழ்கின்றன...


ஸ்ரீ வராஹி அம்மன்
காசி மாநகருக்கு அடுத்ததாக
தஞ்சை பெரிய கோயிலில் தான்
தனி சந்நிதியில்
கொலு வீற்றிருக்கின்றாள்
என்கின்றனர் ஆன்றோர்..

தற்சமயம்
தனிப்பட்ட அறக்கட்டளைகளைச்
சார்ந்த கோயில்களில்
ஸ்ரீ வைரவர், ஸ்ரீ வராஹி, 
ஸ்ரீ பிரத்தியங்கிரா - என
பிரதிஷ்டை செய்திருக்கிறனர்..
அவை இந்தக் கணக்கில்
சேர மாட்டாது...

இந்த அளவில்
தஞ்சையில் ஸ்ரீ வராஹி அம்மனுக்கு
ஆஷாட நவராத்திரி
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது..

அந்த வைபவத்தின்
திருக்கோலங்கள் 
இன்றைய பதிவில்..

படங்களை வழங்கிய
திரு. ஞானசேகரன் அவர்களுக்கு
நன்றி..வரம் தந்து வளம் தந்து
வளர்கின்ற நலம் தந்து
வாழ்விக்கும் அன்னையே
வாராஹி போற்றி.. போற்றி..

படை கொண்டு களம் கண்டு
பகை வென்று முடி கொண்டு
புகழ் கொண்ட சோழனின்
தோள் நின்ற தேவி போற்றி...

துணை என்று தமிழ் கொண்டு
தூ மலர் இதழ் கொண்டு
துதிக்கின்ற முகம் கண்டு
துயர் தீர்க்கும் அன்னை போற்றி..

நிலம் கண்டு நீர் கொண்டு
நிறைகின்ற நலம் கொண்டு
நிமிர்கின்ற மனம் கண்டு
மகிழ்கின்ற வாராஹி போற்றி...

வருகின்ற துயர் கண்டு
பயங்கொண்ட முகம் கண்டு
நான் உண்டு என வந்து
நலம்  காட்டும் அன்னை  போற்றி..

துயர் கொண்டு வழிகின்ற
விழி கண்டு முன் நின்று
பிணி மாற்றி அருள் கின்ற
வாராஹி அன்னை போற்றி..

அனல் கொண்ட வினை என்று
தளர் கின்ற நிலை கண்டு
புனல் கொண்ட முகில் என்று
வருகின்ற வாராஹி போற்றி..

சஞ்சலம் என்று வரும்
நெஞ்சகம் வாழ்ந்திட
அஞ்சல் என்றருள் கின்ற
தஞ்சையின் வாராஹி வாழ்க.. 


ஸ்ரீ வராஹி வாழ்க.. வாழ்க..
ஸ்ரீ வராஹி வாழ்க.. வாழ்க..
***
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

வெள்ளி, ஜூன் 26, 2020

அன்பின் ஆரமுது

இன்று ஆனி மகம்..

உதயத்திலிருந்து நண்பகல் வரை
மக நட்சத்திரம்..


ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான்
தில்லைத் திருச்சிற்றம்பலத்தில்
ஜோதியாய்க் கலந்த நாள்..

பெருமானைக் குறித்து
விரிவாக மனம் சிந்தித்தாலும்
இணையப் பிரச்னையின் காரணமாக
எழுத்துருவில் கொணர்வதற்கு
இயலவில்லை...
***

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்கும்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே இம்மையே 
யானுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் 
எங்கெழுந்து அருளுவது இனியே!...


நாடெல்லாம் நலங்கொண்டு
வாழ்தல் வேண்டி 
அதற்கென உழைத்து 
பற்பல இன்னல்களையும்
தாங்கிக் கொண்டு
பொன்னெனப் பொலிந்த
உத்தமர்..

மதுரை மா மண்டலத்தின்
முதலமைச்சராக வீற்றிருந்தும்
எளிய துறவு வாழ்க்கை வாழ்ந்த
மகா ஞானி..

அதனாலேயே அவர் பொருட்டு
எம்பெருமான் கூலியாளாய் ந்து 
கோமகனின் கோலால் அடிபட்டதாக
திருவிளையாடல் நிகழ்த்தினான்..

மாணிக்கவாசகர் காட்டிய
அற வாழ்க்கையை மேற்கொண்டு
இறைவனின் பேரருளுக்கு
ஆட்படுவோம்...

மாணிக்கவாசகப் பெருமானால்
கட்டிக் காக்கப்பட்ட
நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..

மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

வியாழன், ஜூன் 25, 2020

வருவாய் முருகா..

வருவாய்.. வருவாய்..
***

பாற்குடம் காவடி சேர்ந்தாட அங்கு 
பரமனும் சக்தியும் உடனாட
ஐங்கரன் அவனும் மகிழ்ந்தாட அங்கு
மூஷிகம் அதுவும் விளையாட
வள்ளி நாயகி தன்னோடு எழில்
தேவ யானையும் சேர்ந்தாட
மயிலொடு சேவலும் கூத்தாட அந்த சரவணப் பொய்கையின் மீனாட
தேவ இந்திரன் உடனாட எழில்
தேவ கன்னியரும் கலந்தாட
சித்தரும் பக்தரும் சேர்ந்தாட சிவ
கணங்களும்  கனிந்து கூத்தாட
குன்றும் மலைகளும் குளிர்ந்தாட
கொடு நாகமும் சிவசிவ என்றாட
கடலும் அலையும் கலந்தாட கன்னித்
தமிழும் இசையாய் நடமாட
நாரணன் நாரணி மகிழ்ந்தாட நல்ல
வீணையின் தேவி இசைபாட
நான்முகன் வேதத்துதி பாட வெள்ளிப் பளிங்கென நந்தியும் எழுந்தாட
ஹரஹர சிவசிவ மால்மருகா என
மண்ணும் விண்ணும் புகழ்பாட
சிவசிவ ஹரஹர வேல்முருகா என
திக்குகளும் திருக் கூத்தாட
வெற்றி விளைத்திடும் வீரவாகு அங்கு
வேல்வேல் என்றே கவிபாட
வயிரவர் வயிரவி மகிழ்ந்தாட வரும்
பூதங்களும் சுற்றிச் சுழன்றாட
வருவாய் வடிவுடை 
வேலுடனே வருவாய்..
வருவாய் எழிலுடை 
வேலுடனே வருவாய்!....
ஃஃஃ

புதிதாக வந்திருக்கும் அறையில்
கணினியை எடுத்து வைக்க
இயலாத சூழ்நிலை..

கணினியுடன் இணையத்தை இணைக்கும் Router எனும் சாதனமும்
பழுதாகி விட்டது...

பல நாட்களுக்குப் பிறகு
தஞ்சையம்பதியில்
வெளியாகும் பதிவு இது...

ஒரு மாதத்துக்கு முன்பு
எழுதிய பாடல் இது..
கைத்தொலைபேசி வழியாக
தளத்தில் இணைத்துள்ளேன்..

முருகன் வர வேண்டும்..
அவனருளால்
நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்...

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ

சனி, ஜூன் 13, 2020

உவரி தரிசனம்

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

தொடர்ந்து பதிவுகளை எழுதிக்கொண்டிருந்த நிலையில்
விரும்பத்தகாத சூழல் அமைந்து விட்டது..

கடுமையான காய்ச்சலில் இருந்து
நண்பர்களாகிய தங்களின் அன்பினாலும்
பெரியோர்களின் ஆசிகளினாலும்
தெய்வத்தின் பேரருளினாலும்
நல்லபடியாக மீண்டிருக்கிறேன்..

முன்பிருந்த பத்தாவது தளம் முற்றாகக் காலி செய்யப்பட்டு விட்டது...
அங்கு விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பணியாளர்களைக்
கொண்டு வந்து வைத்திருக்கின்றது நிறுவனம்...

நான் தற்போது எனது உடைமைகளுடன் வேறொரு அறையில்..
அங்கு நானே இடைஞ்சல்... கூடவே கணினியும் அதன் மேசையும்..

எனவே, வீண் பிரச்னைகள் வேண்டாம் என
பத்து நாட்களுக்கும் மேலாகக் 
கணினியைத் தொடவில்லை...

இன்று (12/6) சிறுகதை ஒன்றை வடித்து
ஸ்ரீராம் அவர்களுக்கு அனுப்பி விட்டு
இந்தப் பதிவினை வெளியிடுகின்றேன்..

வழக்கம் போல தங்கள் அன்பினை வேண்டுகிறேன்..
Blogger முதன் முறையாக
ஒத்துழைக்கவில்லை..
கைப்பேசி வழியாக
படங்களை இணைத்துள்ளேன்..

இன்றைய பதிவில்
திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகப் பாடல்களுடன்
சிவ தரிசனம்..

திருத்தலம் - உவரிஇறைவன் - ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி
அம்பிகை - ஸ்ரீ மனோன்மணியாள்தல விருட்சம் - கடம்பங்கொடி
தீர்த்தம் - அக்னி தீர்த்தம் எனப்படும் வங்கக்கடல்

ஸ்ரீ ப்ரம்ம சக்தி அம்பாள், ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ இசக்கியம்மன்
ஸ்ரீ மாடசாமி, ஸ்ரீ சிவனணைந்த பெருமாள், ஸ்ரீ முன்னோடியார் 
- என பரிவார மூர்த்திகள் விளங்குகின்றனர்...திருக்கோயிலுக்குப் பின்புறம் 
கன்னி மூலை ஸ்ரீ விநாயகரும்
வன்னியடி ஸ்ரீ சாஸ்தாவும்
தனிக்கோயில் கொண்டு விளங்குகின்றனர்..

இத்திருத்தலம் 
திருச்செந்தூரில் இருந்து குலசேகரன் பட்டினம் வழியாக
நாகர்கோயில் செல்லும் வழியில் 42 கி.மீ தொலைவிலுள்ளது..மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசுதென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே
ஈசன் எந்த இணையடி நிழலே.. (5/90)நமசிவாயவே ஞானமும் கல்வியும்
நம சிவாயவே நானறி இச்சையும்
நம சிவாயவே நா நாவின்றேத்துமே
நம சிவாயவே நன்னெறி காட்டுமே.. (5/90)

வேதநாயகன் வேதியர் நாயகன்
மாதின் நாயகன் மாதவர் நாயகன்
ஆதிநாயகன் ஆதிரை நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.. (5/100)அப்பன் நீ அம்மையும் நீ ஐயனும் நீ

அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண் பொருளும் நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என்னெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே..(6/95)

ஓம் நம சிவாய சிவாய நமஓம்
ஃஃஃ

ஞாயிறு, ஜூன் 07, 2020

திருஞானசம்பந்தர்

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று வைகாசி மூலம்..
ஞானசம்பந்தப்பெருமானின்
குருபூஜை நாள்...


இன்றைய பதிவில்
ஸ்வாமிகள் அருளிச் செய்த திருப்பதிகம்

முதலாம் திருமுறை
திருப்பதிக எண் - 130

திருத்தலம் - திருஐயாறு


இறைவன் ஸ்ரீ ஐயாறப்பர், செம்பொற்சோதிநாதர்
அம்பிகை - ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தனி

தல விரிட்சம் - வில்வம்
தீர்த்தம் - காவிரி, சூரிய புஷ்கரணி

ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி 
புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட்டு ஐம்மேலுந்தி
அலமந்தபோதாக அஞ்சலென்று அருள்செய்வான் அமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்று அஞ்சி
சிலமந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருஐயாறே.. 1

விடலேறு படநாகம் அரைக்கசைத்து வெற்பரையன் பாவையோடும்
அடலேறு ஒன்றதுவேறி அஞ்சொலீர் பலியென்னும் அடிகள்கோயில்
சுடலேறித் திரைமோதிக் காவிரியின் உடன்வந்து கங்குல்வைகித்
திடலேறிச் சுரிசங்கம் செழுமுத்துஅங்கு ஈன்றலைக்கும் திருஐயாறே.. 2

கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பேராளர் மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழில் நுழைந்து கூர்வாயால் இறகு உலர்த்திக் கூதல்நீங்கிச்
செங்கானல் வெண்குருகு பைங்கானல் இரைதேடும் திருஐயாறே.. 3

ஊன்பாயும் உடைதலை கொண்டூருரின் பலிக்குழல்வார் உமையாள்பங்கர்
தான்பாயும் விடையேறும் சங்கரனார் தழருவர் தங்குங்கோயில்
மான்பாய வயலருகே மரமேறி மந்திபாய் மடுக்கள் தோறும்
தேன்பாய மீன்பாயச் செழுங்கமல மொட்டலரும் திருஐயாறே.. 4


நீரோடு கூவிளமும் நிலாமதியும் வெள்ளெருக்கு நிறைந்த கொன்றைத்
தாரோடு தண்கரந்தை சடைக்கணிந்த தத்துவனார் தங்குங்கோயில்
காரோடி விசும்பளந்து கடிநாறும் பொழிலணைந்த கமழ்தார்வீதித்
தேரோடும் அரங்கேறிச் சேயிழையார் நடம்பயிலும் திருஐயாறே.. 5

வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறிகாட்டும் விகிர்தனாகிப்
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த புண்ணியனார் நண்ணுங்கோயில்
காந்தாரம் இசையமைத்துக் காரிகையார் பண்பாடக் கவினார்வீதித்
தேம்தாம் என்றுஅரங்கேறிச் சேயிழையார் நடமாடும் திருஐயாறே.. 6

நின்றுலா நெடுவிசும்பு நெருக்கிவரு புரமூன்று நீள்வாயம்பு
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி மலையாளி சேருங்கோயில்
குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச மலர் பாய்ந்து வாசமல்கு
தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு கண்வளரும் திருஐயாறே.. 7

அஞ்சாதே கயிலாய மலையெடுத்த அரக்கர்கோன் தலைபத்தும்
மஞ்சாடு தோள்நெரிய அடர்த்து அவனுக் கருள்புரிந்த மைந்தர்கோயில்
இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ இளமேதி இரிந்தங்கோடி
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல வயல் படியும் திருஐயாறே.. 8

ஸ்ரீ ஐயாறப்பர் - அறம்வளர்த்த நாயகி 
மேலோடி விசும்பணவி வியனிலத்தை மிகஅகழ்ந்து மிக்குநாடும்
 மாலொடு நான்முகனும் அறியாத வகைநின்றான் மன்னுங்கோயில்
கோலாடக் கோல்வளையார் கூத்தாடக் குவிமுலையார் முகத்தினின்று
சேலாடச் சிலையாடச் சேயிழையார் நடமாடும் திருஐயாறே.. 9

குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு சாக்கியருங் குணமொன்றில்லா
மிண்டாடு மிண்டருரை கேளாதே யாளாமின் மேவித் தொண்டீர்
எண்தோளர் முக்கண்ணர் எம்ஈசர் இறைவன் இனிதமருங்கோயில்
செண்டாடு புனற்பொன்னிச் செழுமணிகள் வந்தலைக்கும் திருஐயாறே.. 10

அன்னமலி பொழில்புடை சூழ்ஐயாற்றெம் பெருமானை அந்தண்காழி
மன்னிய சீர் மறைநாவன் வளர்ஞான சம்பந்தன் மருவுபாடல்
இன்னிசையால் இவைபத்தும் இசையுங்கால் ஈசனடி ஏத்துவார்கள்
தன்னிசையோடு அமருலகிற் தவநெறி சென்றெய்துவர் தாழாதன்றே.. 11
-: திருச்சிற்றம்பலம் :-ஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ