நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

நந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஏப்ரல் 10, 2025

திருமழபாடி 2

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 27
வியாழக்கிழமை

கொளுத்துகின்ற வெயிலையும் பொருட்படுத்தாமல் கோயிலின் எதிரில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த காட்சி மனதை உருக்கியது..

ஊர் மக்கள் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கியும் கல்யாண விருந்து அளித்தும் சிவத் தொண்டு புரிந்து கொண்டிருந்தனர்..

மாலையில் திருக்கல்யாண வைபவ விழா  தொடங்கி - இரவு எட்டரை மணியளவில் எம்பெருமான் ஸ்ரீ நந்தீசனுக்கும் வசிஷ்ட மகரிஷியின் பேத்தியும் வியாக்ரபாத முனிவரின் மகளுமான
சுயம்பிரகாஷிணி தேவிக்கும் திருக் கல்யாணம் இனிதே நடை பெற்றது.. 

நிகழ்வுகளை இயன்றவரை காட்சிப்படுத்தியுள்ளேன்..

அன்றிரவு,
கோயிலின் எதிரில் தூங்கி விட்டு பொழுது விடிந்ததும் இல்லத்திற்குத் திரும்பினோம்..
















கலையி னான்மறை
  யான்கதி யாகிய
மலையி னான்மரு
  வார்புர மூன்றெய்த
சிலையி னான்சேர்
  திருமழ பாடியைத்
தலையி னால்வணங்
  கத்தவ மாகுமே..3/48/4
திருஞானசம்பந்தர் 

நீராகி நெடுவரைக ளானான் கண்டாய்
நிழலாகி நீள்விசும்பு மானான் கண்டாய்
பாராகிப் பௌவமே ழானான் கண்டாய்
பகலாகி வானாகி நின்றான் கண்டாய்
ஆரேனுந் தன்னடியார்க் கன்பன் கண்டாய்
அணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய்
வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் தானே.. 6/39/7
திருநாவுக்கரசர்

கண்ணாய் ஏழுலகுங்
  கருத்தாய அருத்தமுமாய்ப்
பண்ணார் இன் தமிழாய்ப்
  பரமாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில்சூழ்
  மழபாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னையல்லால்
  இனியாரை நினைக்கேனே.. 7/24/5
சுந்தரர்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

புதன், ஏப்ரல் 09, 2025

திருமழபாடி 1

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 26
புதன் கிழமை

கடந்த ஞாயிறன்று விடியற்காலையில் எழுந்திருந்தும் - தாமதம் ஆகி விட்டதோ என்ற அச்சத்தினால் குளித்து முடித்து விட்டு பாரம்பரிய வழித்தடத்தில் செல்லாமல் நானும் என் மகனும் மேலும் சிறிது தாமதத்துடன் திருமானூர் வழியாக திருமழபாடி கொள்ளிடப் பேராற்றின் கரைக்கு வந்து சேர்ந்தபோது முற்பகல் 10:30...

திரு ஐயாற்றில் இருந்து
பல்லக்குகள் வருவதில் தாமதம்..

பல்லக்குகள் ஒவ்வொரு ஊரிலும் நின்று மாலை மரியாதையை ஏற்றுக் கொண்டு  வருவதால் தாமதம் ஆகின்றது என்றார்கள்... 

ஒருவழியாக 11: 30 மணியளவில் வைத்யநாதன் பேட்டை மண்டகப்படி மரியாதைகளை ஏற்றுக் கொண்டு மாப்பிள்ளை நந்தீசன் குதிரை வாகனத்தில் ஆற்றைக் கடந்து 
திருமழபாடி 
மண்டகப்படிக்கு வந்து சேர்ந்தார்... 

நடுப்பகல் 12:00 மணியளவில் ஸ்ரீ ஐயாறப்பர் பல்லக்கு பேராற்றைக் கடந்து வந்தது..

திருமழபாடி ஸ்ரீ வைத்திய நாதர் சுந்தராம்பிகையுடன் எதிர் கொண்டார்.. 

12:15 மணியளவில்  கொள்ளிடப் பேராற்றில் எதிர்சேவையும் தீப ஆராதனையும் நடைபெற்றது..


திருச்சுற்று வீதியில் வீட்டுக்கு வீடு வாசலில் மாவிலை தோரணங்களுடன் வாழை மரம் கட்டப்பட்டிருக்க  பல்லக்குகள் வெகு சிறப்பாக வரவேற்கப்பட்டன..

நிகழ்வுகளை இயன்றவரை காட்சிப்படுத்தியுள்ளேன்...





வைக்கோல் நடைபாதை



மாப்பிள்ளை வருகின்றார்






சுவாமி அம்பாள்


ஸ்ரீ வைத்யநாதர் வரவேற்பு 















ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

செவ்வாய், ஏப்ரல் 08, 2025

நந்தீச ஜனனம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 25
செவ்வாய்க்கிழமை

கடந்த சனிக்கிழமை காலை திரு ஐயாறு அந்தணக்குறிச்சியில் நந்தீசன் ஜனன வைபவம்  நிகழ்ந்தது... 

சிலாதன முனிவர்  பொன்னேர் கொண்டு நிலத்தை உழுத்த போது அவரது தவத்திற்கு இணங்கி
நெற்றி மேல் நிமிர் கண்ணும் நிலா ஒளிர் பொற்றடம் புய நான்கும் பொருந்துறப் பெற்று  பொற்பேழையில்  இருந்து மழலையாகத் தோன்றினார் நந்தீசன்.. 

பதினாறு ஆண்டுகளே விதிக்கப்பட்டிருந்த நந்தீசன் சிவ ஆகமங்களை ஓதாமல் உணரப் பெற்றதால் குரு பரம்பரைக்கு முதற்குருவாக ஆனார்.. 

கங்கை நதியில் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு எண்ணாயிரம் கோடி முறை பஞ்சாட்சர மந்திரம் ஜபித்ததால் பொற்பிரம்புடன் திருக்கயிலாயத்தில் அதிகார நந்தியாக ஈசனால் நியமிக்கப்பட்டார்... 

இன்றைய பதிவில் நந்தீச ஜனன வைபவத் திருவிழா காட்சிகள்.. 

என்னால் இயன்ற படங்கள்..
















ஆலயத்திற்கு திரும்புதல்












கீழுள்ள படங்கள் 
இரவு பட்டாபிஷேக தரிசனம்
நன்றி
திருவையாறு 
ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கூட்டம்




ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**