நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

தஞ்சாவூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தஞ்சாவூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஆகஸ்ட் 09, 2026

ராகுவும் கேதுவும்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி 
ஞாயிற்றுக்கிழமை


 ராகுவும் கேதுவும்

தயாநிதி வீரராகவன்

நன்றி Fb

தஞ்சாவூருக்கு அருகில் ஒரு கிராமம். 

அங்கு இளம் விவசாயி ஒருவர்.. 

மாதவன் என்று பெயர் . 

நிலம் இருக்கு, தண்ணீர் இருக்கு, உழைக்கவும் தெம்பு இருக்கு. ஆனால் மூன்று வருஷமாக விளைச்சலே இல்லை.

ஜாதகத்தை எடுத்துக் கொண்டு
ஊர்  ஜோதிடரிடம் ஓடினான். 

ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் சொன்னார், 

" உனக்கு ராகு தோஷம். ராகு வயலை மறைக்கிறான். 50,000 ரூபாய்க்கு பரிகார பூஜை பண்ணனும்."

மாதவன் வீட்டில் இருந்த கொஞ்ச நகையையும் விற்று பூஜை பண்ணான். மறு வருஷமும் விளைச்சல் இல்லை.

கோபத்துடன் இன்னொரு பெரிய ஜோதிடரிடம் சென்றான். 

அவர் சொன்னார், "இது ராகு இல்லை, கேது.. உன் நிலத்தை கேது பிடிச்சிருக்கு.. இன்னொரு பரிகாரம் பண்ணனும்."

மாதவனுக்கு வெறுத்து போச்சு.

நேராக ஆத்தங்கரையில் உட்கார்ந்திருந்த கோயில் குருக்களிடம்  சென்றான். அவர் ஜாதகம் பார்க்க மாட்டார்.. மனுஷங்களை மட்டும் பார்ப்பார்.

மாதவன் கத்தினான்..

"சாமி, என் ஜாதகத்துல என்ன தோஷம் இருக்குன்னு பார்த்து சொல்லுங்க. ராகுவா, கேதுவா?."

குருக்கள் அவன் ஜாதகத்தை வாங்கினார். ஒரு நிமிஷம் பார்த்தார். அடுத்த நிமிஷம் அதை இரண்டாகக் கிழித்து வாய்க்காலில் வீசி விட்டார்.

மாதவனுக்கு உலகமே இருண்டு போச்சு. 

"என்ன சாமி இப்படி பண்ணிட்டீங்க!.."

குருக்கள் சிரித்தார்..

" தோஷம் ஜாதகத்துல இல்ல.. மாதவா... உன் பழக்கத்துல இருக்கு.. மூனு வருஷமா நீ என்ன செய்தாய் ? புதுசு புதுசா விதை  வாங்கி விதைச்சு யூடியூப் - ல பார்த்துப் பார்த்து புதுப்புது மருந்தா அடித்தாய்.. ஊர் முழுக்க ஜோதிடரை தேடி அலைந்தாய் .. ஆனா, உனக்கு அடுத்த நிலத்து ராமு என்ன பண்ணான் தெரியுமா?  தினமும் காலையில அஞ்சு மணிக்கு வயலுக்கு போறான். மண்ணைப் பார்த்து. வரப்பை சரி செஞ்சான்.. ஒரே பயிரை சாகுபடி பண்ணி பொறுமையா பார்த்துக்கிட்டான்."

"ராகு உன் நிலத்தை மறைக்கலடா.. பொறுமை இல்லாத்தனம் தான் உன் கண்ணை மறைச்சிருக்கு. கேது உன் வயலை பிடிக்கல, நீ யூடியூப் பேச்சை கேட்டுட்டு மாத்தி மாத்தி செஞ்சது தான் உன் வயலை பிடிச்சிருக்கு."

"ஜோதிடம் என்பது வானிலை அறிக்கை மாதிரி. மழை வரும்னு சொன்னா, நீ குடைய எடுத்துட்டு போகணும். மழையை நிறுத்த பூஜை பண்ணக்கூடாது."

மாதவனுக்குப் புரிந்தது.. பரிகாரம் தேடுவதை நிறுத்தினான்.

அடுத்த ஆறு மாதம் ஜோதிடம், யூடியூப் என்று எதையும் பார்க்கவில்லை. 

தினமும் வயலில் இருந்தான். மண்ணைப் புரிந்து கொண்டான்.

அந்த வருஷம்  கிராமத்திலேயே அதிக விளைச்சல் அவனுக்கு தான் கிடைத்தது.

ஜாதகத்தை கிழித்த குருக்களிடம்  ஓடிச் சென்று சொன்னான் -

"சாமி.. ராகு தோஷம் போயிடுச்சு!"

குருக்கள் சொன்னார்..

"ராகு எங்கேயும் போகலடா. அவன் அங்கே தான் இருக்கான். அவன் உனக்கு தோஷத்தை கொடுக்க வரல, புதுசா ஒரு பாடத்தைக் கத்துக்  கொடுக்க வந்தான். நீயும்  கத்துக்கிட்ட.. அவ்வளவு தான்."

***

புதன், மே 07, 2025

ரயில்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 24 
புதன்கிழமை


தமிழக தொடர் வண்டி நிலையங்களின் வருவாய் அடிப்படையில் முதல் 25 நிலையங்களின் வரிசைப் பட்டியல்..

சென்னை சென்ட்ரல் 1
சென்னை எழும்பூர் 2
கோயம்புத்தூர் 3
சென்னை தாம்பரம் 4
மதுரை 5
திருச்சிராப்பள்ளி 6
காட்பாடி 7
திருநெல்வேலி 8
சேலம் 9
ஈரோடு 10
திருப்பூர் 11
சென்னை பெரம்பூர் 12
நாகர்கோயில் 13
திண்டுக்கல் 14
விழுப்புரம் 15
தஞ்சாவூர் 16
ஜோலார்பேட்டை 17
அரக்கோணம் 18
செங்கல்பட்டு 19
கன்னியாகுமரி 20
தூத்துக்குடி 21
விருதுநகர் 22
கும்பகோணம் 23
மயிலாடுதுறை 24
கோவில்பட்டி 25


நன்றி 
தஞ்சை ரயில் பயணியர் சங்கம் Fb


இத்தனைக்கும் தஞ்சையில் இருந்து சென்னைக்கு தினசரி விரைவு வண்டி ஒன்று மட்டும்.. பெங்களூருக்கு அந்தப் பக்கம் வரை செல்கின்ற வாராந்திர விரைவு 
வண்டி ஒன்று.. அவ்வளவே..

திருப்பதிக்கோ நாகர்கோயிலுக்கோவேறு பெரு நகரங்களுக்கோ தஞ்சையில் இருந்து புறப்படுகின்ற வண்டிகள் எவையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..

தஞ்சாவூர் பட்டுக்கோட்டை வழித்தடம் கூட எழுபது வருடங்களுக்கு மேலாக கிடப்பில்! ...

இங்கே காவிரிப் படுகை மாவட்டங்களில் - சுற்றுலாவிலும் மற்ற நிலைகளிலும்  எங்கள் ஊர் தான் பெரிய ஊர் என்ற அளவில் எப்போதும் புரளி ஒன்றை
 உருட்டிக் கொண்டு இருப்பார்கள்..

இருக்கட்டும்..
இருக்கட்டும்..

மேலே உள்ள தர வரிசைப் பட்டியலில் 
தஞ்சை சந்திப்பின் வருவாய் நிலையைத்
தெளிவாகக் கண்டு கொள்க...

இன்று தஞ்சையில்
தேர்த் திருவிழா

வாழ்க தஞ்சை
வளர்க தஞ்சை 
**

ஞாயிறு, ஜனவரி 19, 2025

கோபூஜை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 6
ஞாயிற்றுக்கிழமை

தை இரண்டாம் நாளன்று தஞ்சை பெரிய கோயிலில் நடந்த கோபூஜை விழாவின் காட்சிகள்






நூற்று இருபத்தைந்து பசுக்களுக்கு வழிபாடு செய்யப் பெற்றது..



பூஜை நிறைவுற்றதும் பசுக்களும் கன்றுகளும் பக்தர்களுடன் திருச்சுற்றில் வலம் வந்த காட்சி கிடைத்தற்கரியது..

தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் அன்பர்கள் வந்திருந்து தரிசனம் செய்தனர்..






அனைவருக்கும் வணக்கம்..
இப்போது ஓரளவுக்கு கைத்தலபேசி சீராகி இருக்கின்றது...

விரைவில் கருத்துரை பகுதிக்கு வருகின்றேன்..
மகிழ்ச்சி.. நன்றி..
**

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

புதன், நவம்பர் 22, 2023

தஞ்சை அரண்மனை


நாடும் வீடும் 
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 6
 புதன்கிழமை


தமிழகத்தில் குறிப்பிடத்தக்கது - இயல்  இசை நாட்டியம் எனச் சிறப்புற்றிருந்த தஞ்சை அரண்மனை..

இது மாநகரின் மத்தியில் அமைந்துள்ளது.. அரண்மனையைச் சுற்றிலும் வீதிகள்.. ராஜ வீதிகள் எனப்பட்டவை காலப் போக்கில் பல மாற்றங்களில்!..

ராஜ வீதிகளைச் சுற்றிலும் வட்டமான  பாதுகாப்பு சாலை அலங்கம் என்ற பெயரில்.
இதனை அடுத்ததே அகழி.. 

ஊரை காத்த அகழியின்
இன்றைய நிலை பரிதாபம்..

இந்த அரண்மனை தஞ்சை நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது..

ஆனால், கீழே உள்ள அஸ்திவாரம் சோழர்களுடையது என்றும் செவிவழிச் செய்திகள் உலவுகின்றன..

தஞ்சை நாயக்க வம்சமும் மதுரை நாயக்க வம்சமும் அடிதடி சண்டை சச்சரவு என, இறங்கியதில் வெகுவாகப் பாதிக்கப்பட்டது இந்த அரண்மனை..

நாயக்கர்கள் வீழ்ச்சிக்குப் பின்னர்  தஞ்சாவூர் மராட்டிய அரசர்களின் வசமானது..

சோழர்களின் அரண்மனைத் தடம் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் - கோட்டை கொத்தளங்கள்  என, 
தஞ்சை மீண்டும் பொலிவுற்றது நாயக்கர் ஆட்சியில்..

அதன் பின் மேலும்  மராட்டியர் ஆட்சியில் சிறப்புற்றது..

அரண்மனையிலுள்ள அருங்காட்சியகத்தில் மராட்டிய மன்னர்களது  உடைகள் இசைக் கருவிகள் பண்ட பாத்திரங்கள் புழக்கத்தில் இருந்த நாணயங்கள் போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் என பற்பல கலைப்பொருட்கள் நிறைந்துள்ளன..

அரண்மனையின் கலைக்கூடத்தில் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கிடைத்த விக்ரகங்களும் சிற்பங்களும் பாதுகாக்கப்படுகின்றன..

சரபோஜி மன்னரின் பளிங்குச் சிலையும் இங்குள்ளது..

இரண்டாம் சரபோஜி மன்னரால் உருவாக்கப்பட்ட சரஸ்வதி மஹால் இங்கு தான் அமைந்துள்ளது..

அரண்மனைக்குள் நுழையும் போதே கட்டணம்.. இந்த அனுமதிச் சீட்டைக் கொண்டு அருங்காட்சியகம், கலைக்கூடம்,  அரசவைக் கூடம் - இவற்றைப் பார்க்க இயலும்..

நான் சரஸ்வதி மஹாலுக்குச் சென்றதால் இந்தச் சீட்டு எடுக்கவில்லை..

பதிவில் உள்ளவை அனைத்தும் வெளித் தோற்றங்களே.. மறுமுறை  ஒருநாள் இதற்காக ஒதுக்க வேண்டும்..

சரஸ்வதி மஹால் பற்றி தனியானதொரு பதிவு தரவேண்டும்..

அரண்மனை வளாகத்திற்கு செல்ல நேர்ந்ததற்கு அன்பின் நெல்லை அவர்களுக்கு  நன்றி..

நுழைவாயிலில் விரும்பத்தகாத காட்சிகள்.. எனவே இங்கு இடம் பெறவில்லை..

நுழைவாயில் யானை சிற்பம்

சரஸ்வதி மஹால்
முன்புற கூடம்







மணிக்கோபுரம்
(தொள்ளக்காது மண்டபம்)









கலைக்கூட நுழை வாயில்
ஆயுத கோபுரம்


ஆயுத கோபுரம்




அரண்மனை வாசல்


சதார் மாளிகை

மேலும் பல செய்திகளுடன் 
அடுத்தொரு பதிவில் சந்திப்போம்..

வாழ்க நலம்
நலம் வாழ்க
***

புதன், நவம்பர் 08, 2023

ஆதுரசாலை

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 22
புதன்கிழமை

இணையத்தில்
சேகரிக்கப்பட்ட செய்திகளுடன்..
நன்றி - விக்கி.
 

ஸ்ரீ ராஜராஜ சோழரின் தமக்கையான குந்தவை நாச்சியார் மிகச்சிறந்த ஆளுமை உடையவர்.. சோழப் பேரரசின் அடையாளமாகத் திகழ்ந்த மாதரசி..

நற்குணவதியாகிய இவர் - தனது தந்தை சுந்தர சோழர் பெயரில் தஞ்சையில் ஆதுர சாலை எனப்பட்ட மருத்துவ மனை 
ஒன்றை அமைத்திருக்கின்றார்..

மேலும், பற்பல அறங்களையும் செய்திருக்கின்றார்.. 

இதற்கான சான்றுகள் தஞ்சை கோயிலிலும் தாராசுரம் கோயிலிலும் கல்வெட்டுகளாக இருக்கின்றன..


அதன் வழியே -
தஞ்சையின் பெருமைமிகு  அடையாளமாக - இன்றளவும் சிறப்புடன் திகழ்கின்ற - ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை குறித்த தகவல்களுடன் இன்றைய பதிவு..

தஞ்சை நகரின் மத்தியில்  அமைந்துள்ள  இந்த மருத்துவமனை 1876 ​​ல்  நிறுவப்பட்டது.. 

இந்த மருத்துவ மனைக்கான 
முந்தைய வரலாறு சிறப்புடையதாகும்..

இசை, கலை, கல்வி மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் வல்லுநராக இருந்த 
மன்னர் சரபோஜி - II மருத்துவத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

இவரது நிர்வாகத்தில்
தஞ்சை அரண்மனைக்குள் தன்வந்திரி ஆரோக்கிய சாலை  - என்ற பெயருடன் மருத்துவமனை ஒன்று நாட்டு மக்களுக்காக  இருந்திருக்கின்றது..

சித்தா, ஆயுர்வேதம் மற்றும் யுனானி ஆகியவற்றை ஆதரித்த இவர் 1810 ல் தஞ்சையில் மேற்கத்திய மருத்துவ முறையை அறிமுகம் செய்தார்..

1827 ல் நவ வைத்திய கலாநிதி சாலையைத் தொடங்கினார். 

அரசருடைய மருத்துவ மையமாகிய தன்வந்திரி ஆரோக்கிய சாலை  - மருத்துவ ஆராய்ச்சி மையமாகவும் செயல்பட்டிருக்கிறது.

சரஸ்வதி மஹால் நூலகப் பதிவுகளின்படி, 1828 ல், அந்த மருத்துவ மனையில் - கண்புரை  அறுவை சிகிச்சை  செய்யப்பட்டிருக்கின்றது.. சிகிச்சைக்குப் பின் சிறந்த உணவுடன்
நேரடி கவனிப்பும் இருந்திருக்கின்றது.. சிகிச்சை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் போது பொருள் உதவியும் செய்யப் பட்டிருக்கின்றது..

மன்னரின் காலத்திற்குப் பிறகு, ஆரோக்ய சாலையின் சேவைகளை இளவரசி காமாட்சி அம்பா பாய் சாஹேப் அவர்கள் (ஐம்பது ஆண்டுகள்) நடத்தியிருக்கிறார்..

தனது குடிமக்களின் நலன் மற்றும் நாட்டின் நலனுக்காக - என்று  பெரிய கோயிலுக்கு எதிரில் 40 ஏக்கர் நிலத்தை வழங்கி 30,000 பணத்தையும் இளவரசி கொடை அளித்தார்..

அத்துடன்,
திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தின் ஆதீனகர்த்தர் மற்றும் தஞ்சையின் மிராசுதாரர்கள் - 
திரு பூண்டி வீரையா வாண்டையார், திரு கபிஸ்தலம் துரைசாமி மூப்பனார், திரு பொறையார் தவசிமுத்து நாடார் ஆகியோரும் பொருளுதவி செய்தனர்..

இதனாலேயே இந்த மருத்துவமனைக்கு - ராஜா மிராசுதார் மருத்துவமனை -  என்ற பெயர் அமைந்தது..

காமாட்சி அம்பா பாய் சாஹேப் அவர்களுக்குப் பிறகு அரண்மனையின் ஆரோக்கிய சாலைக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை..

1875 ல் இந்தியாவிற்கு வருகை தந்த வேல்ஸ் இளவரசர் - ஏழாம் எட்வர்ட் - தஞ்சாவூர், மதுரை, ராயபுரம் (சென்னை) நாக்பூர்,  விசாகப்பட்டினம் மற்றும் கோழிக்கோடு உட்பட ஆறு நகரங்களில் மருத்துவப் படிப்பை 'Licentiate Medical Practioner' (LMP) தொடங்குவதற்கு உத்தரவு இட்டதன்படி, தஞ்சையில் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் (LMP) மருத்துவப்பள்ளி செயல்படத் தொடங்கியது..

1879 ல் சர் சல்லிவன் தாமஸ், மருத்துவ மனை வளாகத்தில் புதிய கட்டிடங்கள் மற்றும் அவசர,  அறுவை சிகிச்சை கூடங்களைக் கட்டினார்..

தாமஸ் ஹால்



இன்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு 'தாமஸ் ஹால்' என்றே  பெயர்..

1919 ல் மருத்துவ மனை வளாகத்தின் கிழக்குப் பகுதியில் - கண் சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல்லை  நீதிபதி EH வாலஸ், ICS நாட்டினார்.. அதன்பின் 1926 ல் திறக்கப்பட்டது.. 




மருத்துவமனை வளாகத்தில் (RMH) உள்ள கண் மருத்துவ பிரிவு நூறு ஆண்டுகளைக் கடந்த பெருமை உடையது..

மேலே உள்ள கட்டிடங்கள் பழைமையானவை..

தற்போது மண்டல கண் சிகிச்சைப் பிரிவு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடத்தில் சிறப்புடன் இயங்கி வருகின்றது..

மூன்று புறங்களிலும் இருந்த பெரிய பெரிய இரும்புக் கதவுகள் கால சூழ்நிலையில் மாறிவிட்டன.. சிரத்தையுடன் கட்டப்பட்டிருந்த பழைமையான கட்டிடங்களும் நவீனம் என்ற பெயரில் மாற்றப்பட்டு விட்டன..

நாற்பது வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட குந்தவை நாச்சியார் மகப்பேறு பிரிவு - மேலும் சில வசதிகளுடன் இயங்கிக் கொண்டு இருக்கின்றது..

தற்போது 
ராஜா மிராசுதார் மருத்துவ மனை தஞ்சை மருத்துவக் கல்லூரியின் ஒரு பகுதியாக விளங்குகின்றது..

தஞ்சை மருத்துவமனை வளாகத்தில் - சில காட்சிகள்..

படங்கள்: தஞ்சையம்பதி..








புதிதாக ஸ்ரீ சாயி



மேல் திசையில் பிரம்மாண்டமான ஆலமரம்..

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட இந்த ஆலமரத்தடியில் ஸ்ரீ முனீஸ்வரர் விளங்குகின்றார்..







வேண்டுதலின் பேரில் நடப்பட்ட திரிசூலங்கள் நூற்றுக்கணக்கில்!.. 

சுகப் பிரசவத்துக்காக 
வளையல் மாலைகள்!..



வெள்ளையர் காலத்திற்கு முன்பிருந்தே இங்கு முனி ஐயா இருப்பதாக
நம்பிக்கை..

அறுபது ஆண்டுகளுக்குப் 
பின் அன்றைக்குத் தான் சென்று வணங்கினேன்..

கிழக்கிந்தியக் கம்பெனி வருவதற்கு முன்பே இங்கிருந்த  அரண்மனை தன்வந்திரி ஆரோக்கிய சாலையின் விரிவாக்கமே இன்றைய மருத்துவ மனை..

இத்தனைக்கும் அடிப்படை ஆதாரமான ராணி காமாட்சி அம்பா சாஹேப் அவர்களது பெயர் எங்கேயாவது விளங்குகின்றதா?.. 
என்றால் -

தெரியவில்லை!..

நாம் தான் செந்தமிழர்கள் ஆயிற்றே!..

வாழ்க நலம்
***