நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, செப்டம்பர் 22, 2023

திருப்புகழ்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 5
வெள்ளிக்கிழமை

இன்று
கதிர்காம திருப்புகழ்

முருகன் சந்நிதி - கதிர்காமம்

தனதனன தான தனதனன தான
தனதனன தானத் ... தனதான
 

திருமகள் உலாவும் இருபுயமு ராரி
திருமருக நாமப் ... பெருமாள்காண்

செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதருகு மாரப் ... பெருமாள்காண்

மருவும்அடி யார்கள் மனதில்விளை யாடு
மரகதம யூரப் ... பெருமாள்காண்

மணிதரளம் வீசி அணியருவி சூழ
மருவுகதிர் காமப் ... பெருமாள்காண்..

அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப் ... பெருமாள்காண்

அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் ... பெருமாள்காண்

இருவினையி லாத தருவினைவி டாத
இமையவர்கு லேசப் ... பெருமாள்காண்

இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி நோதப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
 

ஏ..மனமே!..
திருமகள் விளையாடுகின்ற 
புயங்களை உடைய திருமாலின் மருமகன் எனும் 
திருப்பெயர் கொண்ட  பெருமானைக்  காண்பாயாக.

மண்ணிலும் விண்ணிலும்
போற்றிப் புகழப் பெறும் திருப் பாடல்களை
அளித்தருளிய குமாரப் பெருமானைக் காண்பாயாக..

வணங்குகின்ற
அடியவர்களின் மனதில் 
விளையாடி மகிழ்கின்றவனும்
மரகத மயில் வாகனத்தை உடையவனும் 
ஆகிய பெருமானைக் காண்பாயாக..

மணியையும் முத்தையும் அள்ளி வீசுகின்ற 
அருவி சூழ்ந்து விளங்குகின்ற 
கதிர்காமப் பெருமானைக் காண்பாயாக..

பெரிய மலைகள் நீறாகவும் கொடிய அசுரர்கள் 
அழிந்து ஒழியவும் வீரப்போர் 
புரிந்த பெருமானைக் காண்பாயாக..

சடாமுடியில் பாம்பு பிறை கங்கை இவற்றைக் 
கொண்டிருக்கின்ற சிவபெருமானுக்கு
குருநாதனாகிய பெருமானைக் காண்பாயாக..

இருவினைகளாகிய 
நல்வினை தீவினை இல்லாதவர்களும்
கற்பக விருட்சத்தினை விட்டு
நீங்காதவர்களும் ஆகிய தேவர்களது குலத்திற்கு
ஈசனாக விளங்கும் பெருமானைக் காண்பாயாக..

இலகுவான வில்லினை உடைய வேடர் தம் குலக் கொடியாகிய வள்ளி நாயகியை அணைந்து 
மகிழ்கின்ற பெருமானைக் காண்பாயாக...
**
 
முருகா முருகா
முருகா முருகா..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***