நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 30, 2014

படிக்காசு வைத்த பரமன்

சைவம் வளர்த்த சான்றோர்களாகிய திருநாவுக்கரசு ஸ்வாமிகளும் திருஞானசம்பந்தப் பெருமானும் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் மாணிக்க வாசகப் பெருமானும் ஊர் ஊராகச் சென்று,


திருப்பதிகங்களைப் பாடி - எல்லாம் வல்ல இறைவனைத் துதிக்கும் போது - பல்வேறு தகவல்களைக் குறித்தே பாடி மகிழ்கின்றனர்.

பற்பல புராண வரலாற்றுச் செய்திகள் அவர்களது திருப்பதிகங்களில் விரவிக் கிடக்கின்றன.

திருக்கோயிலின் அமைப்பு,  மக்களின் வாழ்வு, ஊரின் தன்மை, ஆறு குளம் வயல் வரப்பு, விலங்குகள் பறவைகள் -  என, அரிய தகவல்கள் பலவற்றையும் பதிவு செய்திருக்கின்றனர்.

அவர்கள் காலத்தில் அல்லது அதற்கு முன்னால் வாழ்ந்த பெருமக்களைப் பற்றியும் திருப்பதிகங்களின் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

அந்த வகையில் -

திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசு ஸ்வாமிகள், சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ஆகிய மூவரும் குறிப்பிடும் திருத்தொண்டர் ஒருவரைப் பற்றிய பதிவு!..

மாறாத அன்பினுக்காக - இவருக்கு , பரமன் படிக்காசு அருளினன்  எனில் - அவருடைய பெருமைதான் என்னே!.

தன் பசிக்காக வைத்திருந்த உலர்ந்த நெல்லிக் கனியினை - தானமாக அளித்த தன்மைக்காகவே - அன்று ஏழைக்குடிலில் - கனக மழை பெய்தது. 

தனக்கென வாழாத் தகைமையாளர்களால் தான் - இந்தத் தரணி இன்னும் சீருடன் விளங்குகின்றது என்பர் - சான்றோர்.

இதுவே - அக்ஷய திரிதியை நாளின்  - அடி நாதம்!..

இத்தன்மையுடன் கூடிய ஒரு வரலாறு சோழ நாட்டில் நிகழ்ந்துள்ளது!..

* * *

அழகாபுத்தூர். 

கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் உள்ள திருத்தலம். 

தேவாரம் பயின்ற கால கட்டத்தில் அரிசிற்கரைபுத்தூர் என்பது இவ்வூரின் பெயர். 

அழகாபுத்தூரின் கண் அமைந்துள்ள திருக்கோயிலில் வீற்றிருக்கும் -
இறைவனின் திருப்பெயர் - படிக்காசு வைத்த பரமன், சொர்ணபுரீஸ்வரர்.
இறைவியின் திருப்பெயர் - சௌந்தரநாயகி.


தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் - அமிர்த புஷ்கரணி, அரசலாறு.

மேற்கு நோக்கிய திருக்கோயில்.

ஏறத்தாழ ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் - இத்திருக்கோயிலில் நாளும்  இறைப் பணிகளைச் செய்து வந்தவர் - ஆதிசைவர் குலத்தில் தோன்றிய புகழ்த் துணையார் என்பவர். 

புகழ்த் துணையார் - ஒருங்கிய மனத்துடன் சிவாகம நெறியில் நின்று வழிபாடுகளை நிகழ்த்தி வரும் காலத்தில் - பெரும் பஞ்சம் வந்துற்றது. 

படிக்காசு வைத்த பரமன்
வளமும் வாழ்வும் குன்றிப் போயின. மக்கள் தங்கள் தேவைகளைத் தேடி வேறிடங்களுக்குக் குடி பெயர்ந்தனர். 

உண்ணும் உணவும் குடிக்கும் நீரும் அரிய பொருள்களாயின. 

அந்த நிலையிலும் மனம் தளராத புகழ்த் துணையார் - ''..எம் இறைவனை நான் விடுவேன் அல்லேன்!..'' -  என்ற மன உறுதி மிக்கவராகி - 

எங்கெங்கோ அலைந்து திரிந்து - ஆழக் கிணறுகளைத் தேடி பிரயத்தனத்துடன் நீர் சேகரித்தும், மலர்களையும் தழைகளையும் பறித்து மாலை தொடுத்தும்  இறைபணியை ஆற்றுவார் ஆயினார். 

ஆனால், அவர் தனக்கு உண்ணக் கிடைக்காததைப் பற்றிக் கருதவில்லை. 

ஒருநாள்  - 

தேடிக் கொணர்ந்த சிறிதளவு நீரினால் சிவலிங்கத் திருமேனியை அபிஷேகம் செய்யும் போது - கொடும் பசியினால் வருந்தித் துவண்டு, நிலை தளர்ந்து  நீர் நிறைந்த திருமஞ்சனக் குடத்தைத் தாங்க மாட்டாமல், 

சிவலிங்கத்தின் மீதே நழுவ விட்டவராக - மயங்கி சிவலிங்கத்தின் மீதே சரிந்து விழுந்து விடுகின்றார். 

அவரது தூய அன்பினைக் கண்ட எம்பெருமான்,

''..அன்பனே!.. உன் வாட்டம் தீர்வதற்கென்று பஞ்சம் தீரும் வரை - நாம் நாள்தோறும் இங்கு உனக்கு  ஒரு காசு வைப்போம்!..'' - என்று அருளினார். 

மயக்கத்திலிருந்து மீண்ட புகழ்த்துணையார் - தமது மயக்கத்தில் நிகழ்ந்தவற்றை சிந்தித்து உணர்ந்து தெளிந்தபோது சிவ பீடத்தில் ஒரு பொற்காசு இருக்கக் கண்டு மகிழ்வெய்தினார். 

அந்தப் பொற்காசினைக்  கொண்டு -  சகல உயிர்களின் பசிப்பிணியும் நீங்கும் படிக்கு  அன்னம் பாலித்து அரும் தொண்டாற்றினார். 

புகழ்த்துணையார் மனைவியுடன்
அதன்பின்,  கோள்கள் நிலை மாறி  - மாரி பொழிந்து ஊர் வளம் பெற்றபோதும் தமது அறப்பணிகளில் இருந்து வழுவாதவராக - அனைவருடைய  அல்லலும் நீங்கும்படிக்கு அறம் பல ஆற்றினார். 

நிறைவாழ்வு வாழ்ந்த புகழ்த்துணையார் - ஆவணி மாதத்தின் ஆயில்யத்தன்று சிவகணங்கள் எதிர்வந்து அழைக்க - சிவகதியினை அடைந்தார். 

புகழ்த்துணையாரின் அரும்செயலைத் திருஞானசம்பந்தப்பெருமான் - 

நிலந்த ணீரோ டனல்கால் விசும்பின் நீர்மையான்
சிலந்தி செங்கட் சோழனாகச் செய்தான்ஊர்
அலந்த அடியான் அற்றைக்கு அன்றோர் காசுஎய்திப்
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே!.  (2/73) 

- என்று திருப்பதிகத்தில் புகழ்ந்துரைத்துப் பாடி மகிழ்கின்றார். 

அவ்வாறே - திருநாவுக்கரசு சுவாமிகளும்,

அரிசி லின்கரை மேலணி யார்தரு
புரிசை நந்திருப் புத்தூர்ப் புனிதனைப்
பரிசொ டும்பர விப்பணி வார்க்கெலாம்
துரிசில் நன்னெறி தோன்றிடுங் காண்மினே!..(5/61)


- என்று புகழ்த்துணையார் பெற்ற அரும்பேற்றினை மறைபொருளாகக் குறிப்பிட்டு மகிழ்கின்றார். 

பின்னாளில் - 
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்!..

- என்று திருத் தொண்டத் தொகையில் பாடி மகிழும் சுந்தரமூர்த்தி சுவாமிகள், 

அகத்தடி மைசெய்யும் அந்தணன்றான்
அரிசிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்
மிகத்தளர் வெய்திக் குடத்தையும்நும்
முடிமேல்விழுத் திட்டு நடுங்குதலும்
வகுத்தவ னுக்குநித் தற்படியும்
வரும்என்றொரு காசினை நின்றநன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்துகந்தீர்
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே!. (7/9)

- என்று, அழகாபுத்தூர் திருப்பதிகத்தில் - புகழ்த்துணை நாயனாரின் அருஞ்செயலை விரிவாகவே எடுத்துரைக்கின்றார்.
 
தீராத கஷ்டத்தில் இருப்பவர்கள் - படிக்காசு வைத்த பரமனின்  சந்நிதியில் இரண்டு காசுகளை வைத்து வேண்டிக்கொள்கின்றனர். அவற்றில் ஒன்றை மட்டும் வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்து பூஜிக்கின்றனர்.

இதனால், குடும்பத்தில் கஷ்டங்கள் தீர்ந்து ஐஸ்வர்யம் பெருகியதற்கு ஆயிரம் ஆயிரமாகச் சாட்சிகள்.


இத்திருத்தலத்தில் தான் - எம்பெருமான் முருகவேள் திருக்கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்தி - எழிலார் கோலங்கொண்டு  திகழ்கின்றனன்.

திருக்கோயிலின் மண்டபத்தில்  - புகழ்த்துணை நாயனார், தன் மனைவியுடன் விளங்குகின்றார். கோச்செங்கட்சோழரால் எழுப்பப் பெற்ற திருக்கோயில்.

தான் நலிவுற்றாலும் பிறர் வாழ வேண்டும் என்று விரும்பிய அருளாளர்கள் பலர் வாழ்ந்ததற்கான சாட்சிகள் - காட்சிகளாகக் காணக் கிடைக்கின்றன.

கண் கொண்டு அவற்றைக் காணுவோம்.
கருத்தினில் வைத்து நலம் பேணுவோம்!..
சிவாய திருச்சிற்றம்பலம்!..

செவ்வாய், ஏப்ரல் 29, 2014

அக்ஷய திரிதியை

அக்ஷய திரிதியை என்றாலே - தங்கம் வாங்குவதற்கான நாள்!..  - என்று தான் பலரும் இன்றளவும் நம்புகின்றனர். 

அந்த அளவுக்கு வியாபார தந்திரம் வெற்றி பெற்றிருக்கின்றது. 

ஒரு நாளிதழ் கூறுகின்றது - ''..இயன்ற அளவு வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குங்கள்!..'' -  என்று..

அதுவுமில்லாமல் - சயம் என்றால் குறைவுடையது. அட்சயம் என்றால்  குறைவில்லாதது. வளர்வது - என்றும் விளக்கம் அளிக்கின்றனர். 

அட்சயம்  - அல்ல!..  

அக்ஷய - என்பதே சரி!. க்ஷய எனில் தேய்வுடையது.  அக்ஷய எனில் தேய்வில்லாதது, குறைவில்லாதது - என்பது பொருள்.


அக்ஷய பாத்ரம் - அள்ள அள்ளக் குறையாத  - நிறைவினை உடையது. 

தட்சனுக்கும் சந்திரனுக்கும் பிரச்னை!..  முடிவில் சந்திரன் சபிக்கப்பட்டான்.

''..என் மகள்கள் இருபத்தெழுவரையும் சமமாகப் பாவிக்காத உன் அழகு தேய்ந்து அழியக்கடவது!..''

சாபம் கொடுத்த தட்சன் சாப விமோசனம் சொல்லாமல் போய்விட்டான். 

தவித்தான் சந்திரன். எங்கெல்லாமோ ஓடி அலைந்தான். 

அவனுடைய அழகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலையாகத் தேய்ந்து கொண்டே வந்தது. 

யாராலும்  சந்திரனுக்கு உதவ முடியவில்லை. அது மட்டுமில்லாமல் -

தட்சப்பிராஜாபதியைப் பகைத்துக் கொள்ள எவரும் விரும்பவில்லை. 


முன்பு ஒருமுறை  - சதுர்த்தி அன்று மோதகத்துடன் மூஷிகத்தின் மீது உலா வந்த முதற்பொருளைக் கண்டு நகையாடியதும்,  அதனால் ஐங்கரனின் கோபத்துக்கு ஆளாகியதும் - பின் அவரது அன்புக்குப் பாத்திரமாகியதும் சந்திரனின் நினைவுக்கு வந்தது.  

ஓடிப் போய்த் திருவடிகளில் விழுந்து கதறினான். 

காலடியில் கிடந்து கதறும் சந்திரனைப் பரிவுடன் நோக்கிய கஜானனன் - கருணக் கடலாகிய அம்மையப்பனைச் சுட்டிக் காட்டினார். 

அவர் காட்டியபடியே - சர்வேஸ்வரனைச் சரணடைந்தான். 

அந்த நாள், சந்திரன் தேய் பிறையான - திரயோதசி.

சந்திரனைத் தேற்றிய பரமேஸ்வரன் - அவனது கலையினைத் தன் ஜடா மகுடத்தில் தரித்துக் கொண்டார். சந்த்ர சேகர மூர்த்தியாகத் திருக்காட்சி நல்கினார். 

ஆனாலும்  தட்சன் வழங்கிய சாபத்தின் படியே தேய்ந்தான்.  உலகோர் பார்வையிலிருந்து மறைந்தான். 

சந்திரன் தேய்ந்தான் - மாய்ந்தான்!.. என - தட்சன் இறுமாந்திருந்த வேளையில், ஐயனின் வரப்ரசாதத்தினால் வளர்ந்தான். பொன்னொளி கொண்டு பொலிந்தான். 


அந்த வளர்பிறையின் மூன்றாம் கலையினைத் தான் அம்பிகை, தனது பங்கிற்கு - ஜடாமகுடத்தில் சூடிக் கொண்டாள். சந்த்ர கலாதரி என நின்றாள் ஈஸ்வரி. 

சந்த்ர சடாதரி - என அபிராமவல்லியைப்  புகழ்கின்றார் பட்டர்.

இப்படிச் சிறப்புடைய இந்த நாள் தான் அக்ஷய திரிதியை!.. 

இந்நாள் தான்,  பின்னால் - பல சிறப்புகளுக்குக் காரணமான பொன்னாள்!..

எனினும், பொன்னால் மட்டுமே நம்மை நாம்- வளப்படுத்திக் கொள்வதற்கான நன்னாள் அல்ல இது!.. 

அக்ஷய திரிதியை நாளில் செய்யும் செயல் ஒன்றுக்குப் பத்தாகப் பெருகும் என்பது உண்மையே!.. 

எனினும், செல்வ அபிவிருத்தி ஒன்றே  நோக்கம் அல்ல!.. புண்ணியத்தைப் பெறுவதும் அதனைப் பன்மடங்காகப் பெருக்குவதும் தான் அடிப்படை!..


நாம் வாழ - நமக்குத் தேவை பொருட்செல்வம்!.. அதைக் கொண்டு -  நம்மால் பிறரும் வாழ வேண்டும். அதற்குத் தேவை - அருட்செல்வம்!..

அதற்காகவே - பலவிதமான தான தர்மங்கள்!..  இறை வழிபாடுகள்!..

ஆணவத்தினால் கனம் கொண்டிருந்த நான்முகப் பிரம்மனின் ஐந்தாவது சிரம் அறுபட்டதுடன் - வைரவக்கோலங் கொண்டிருந்த பரமனின் கரத்திலேயே ஒட்டிக் கொண்டது. 

அது கழன்று விழ வேண்டும். எப்படி!.. ஆணவம் அற்ற எவரும் இடும் பிட்சையினால் தான் அது சாத்தியம். 

அப்படிப்பட்ட எவரும் அண்ட பகிரண்டம் எங்கும் காணப்படவில்லை. 

தலை போன வேதனையிலும் நான்முகன் நகைத்தான். ''..வேதியனின் தலை பறித்த விமலனே!.. இது தான் உமக்குக் கதி!..'' -  என்று. 


அப்போது தான் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி - அன்னபூரணியாக வந்து ஐயனின் கபாலத்தில் பிட்சை இட்டாள். கரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த கபாலம் கழன்று கங்கையில் வீழ்ந்தது. 

எனினும், அன்னை காளி என வந்த போது - அதே பிரம்ம கபாலத்தினைத் தன் திருக்கரத்தில் கொண்டவளாக விளங்கினாள். 

''..அது ஏன்?..'' எனக்கேட்டு சப்தரிஷிகளும் தாள் பணிந்து நின்றனர். அம்பிகை புன்முறுவலுடன் சொன்னாள். 

''..ஆணவங்கொண்டோர் கண்டு திருந்துதற்கு!..'' - என்று.

இப்படி,  படியளக்கும் பரமனின் கரத்திலிருந்த பிரம்ம கபாலம்  - அன்ன பூரணியாகி அம்பிகை இட்ட பிட்சையினால் நிறைந்த நாள் - 

அக்ஷய திரிதியை!..

பழந்துணியில் முடிந்து கொண்டு வந்த அவலை வழங்குவதற்கு  - குசேலன் வெட்கப்பட்டுக் கொண்டிருக்க - எல்லாம் அறிந்த எம்பெருமான் - அதனை விருப்புடன் வாங்கி உண்டு - குபேர சம்பத்தைப் பிரசாதித்த நாள்  - 

அக்ஷய திரிதியை!.. 

இந்த நன்னாளில் - இல்லத்தில் மங்கலகரமாக பூஜை செய்வதுடன், ஆலய தரிசனம் செய்வது மிக மிக சிறப்பு. சகல தேவகடாட்சமும் கிட்டும். 


தங்கம் தான் வாங்க வேண்டும் என்று, எங்கும் சொல்லப்படவில்லை. 

அக்ஷய திரிதியை அன்று செய்யப்படும் எந்த ஒரு நல்ல காரியமும் அதிக பலன்களைத் தரும். இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும்  இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் - என்று விளம்பரம் செய்கின்றனர். 

அதன்படி குளிர் சாதனப்பெட்டி ஒன்று வாங்கலாம். அது எப்போதும் நிறைந்திருக்கும் தான். ஆனால் - அதனால் விளைவது அனைத்தும் நன்மையா!.. 

ஒரு கிராம் அளவாவது பொன்நகை வாங்குங்கள் என்று புன்னகையுடன் நம்மைத் தூண்டுகின்றார்கள். 

ஆனால் - அது அனைவராலும் முடியாதே!.. 

தங்க நகையினை வாங்கச் சொல்பவர்கள் -  தான தர்மங்களை செய்யும்படி - நம்மைத் தூண்டுவதில்லை!.. 

நாம் - தான தர்மம் செய்வதனால் அவர்களுக்கு என்ன பயன்?. ஒன்றும் இல்லை. அதனால் தான்!.. 

தங்கம் வாங்க இயலவில்லையா!.. மனம் தளர வேண்டாம்.


அனைவராலும் வாங்க முடிந்த எளிமையான மங்கலகரமான பொருள் - உப்பு!.. 

இது மகாலக்ஷ்மியின் அம்சம்!.. மகாலக்ஷ்மியின் தாய் வீட்டுச் சீதனம்!.. 

பொருள் வசதியிருந்தால் - வீட்டிற்கு அருகில் உள்ள விநாயகருக்கு அக்ஷய திரிதியை அன்று அபிஷேக ஆராதனை அலங்காரம் செய்விக்கலாம். 

தரிசனம் செய்ய வரும் அன்பர்களுக்கு - சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், தயிர் சோறு, எள் சோறு - என அன்னதானம் செய்யலாம். 

மேலும், தானம் செய்வதற்கு உகந்தவை - நெல் , அரிசி, துவரை, உளுந்து, பச்சைப் பயறு, கோதுமை, நல்லெண்ணெய்.

ஏழைக் குழந்தைகளுக்கு சர்க்கரை கலந்த பால் வழங்கலாம். ஏழை தம்பதியர்க்கு உணவு வழங்கி வஸ்திர தானம் செய்யலாம். ஏழை மாணவரின் கல்விக்கு உதவலாம். 

ஏழை நோயாளிகளுக்கும் பார்வையற்றவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் உதவலாம். ஆதரவற்ற பிள்ளைகளுக்கும் முதியவர்களுக்கும் உதவலாம். 

பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவளிக்கலாம். 


அக்ஷய திரிதியை - அள்ள அள்ளக் குறையாத வளம் சேரும் தான். எனினும், 

பொருள் ஒருநாள் தீர்ந்து போகும். நம்முடன் வருவதும் இல்லை!.. 
அருள் ஒன்று தான் சேர்ந்து வரும்.  நம்முடன் சேர்ந்தும் வரும்!..

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி.

ஞாயிறு, ஏப்ரல் 27, 2014

சித்திரைப் பெருவிழா

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. 

அருள்மிகு பிரஹந்நாயகி சமேத அருள்மிகு பிரஹதீஸ்வர பெருமான் சர்வாலங்காரத்துடன் எழுந்தருளியிருக்க -

சித்திரைப் பெருவிழாவிற்கான - துவஜாரோகணம்  மங்கலகரமாக நிகழ்ந்தது.


தக்ஷிண மேரு என சிறப்பிக்கப்படுவது தஞ்சை பெரிய கோயில்.

சர்வலோக நாயகனாகிய சிவபெருமான் - விஸ்வரூபங் கொண்டு  விளங்கும் திருத்தலம்.

இத் திருத்தலத்தில். ஸ்ரீ ஜய வருடம் சித்திரைத் திங்கள் பன்னிரண்டாம் நாள் - வெள்ளிக்கிழமை  (25/4)  காலை (6.00/7.15) வேத மந்த்ர - தேவார திருவாசக திருமுறைகள் முழக்கத்துடன் கொடியேற்றப்பட்டது.

வெள்ளி அன்று தொடங்கிய திருவிழா பதினெட்டு நாட்கள் நிகழும்.


முதல் நாள் பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் எழுந்தருளினர்.


இரண்டாம் நாள் சனிக்கிழமை காலையில் பல்லக்கு. அன்று மாலை சிம்ம வாகனத்தில் விநாயகர் திருவீதி உலா எழுந்தருளினார்.

மூன்றாம் நாளாகிய (ஞாயிறு) இன்று காலையில் பல்லக்கு. மாலை மூஷிக வாகனத்தில் விநாயகர் திருவீதி உலா.

நாளை (திங்கள்) காலையில் விநாயகப்பெருமானுக்கு சந்தனக் காப்பு அலங்காரம். மாலையில் , மேஷ வாகனத்தில் ஸ்ரீ சுப்ரமண்யர் திருவீதி உலா.


ஐந்தாம் நாள் காலை ஸ்ரீ சுப்ரமண்யர் பல்லக்கில் எழுந்தருளல்.  மாலையில் வெள்ளி மயில் வாகனம்.

ஆறாம் நாள் காலை - ஸ்ரீ முருகப்பெருமானுக்கு சந்தனக்காப்பு அலங்காரம். 

மாலையில் - அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் - எழுந்தருளல்.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் - தெய்வ திருமேனிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் சந்தனக் காப்பு வைபவம். 


சித்திரை இருபதாம் நாள் - அஷ்டத் துவஜாரோகணம் நிகழும்.

திருமேனிகள் பல்லக்கிலும் - சிறிய ரிஷபம், பெரிய ரிஷபம்,  யானை  , மயில் , மான் , குதிரை , பூத வாகனம்  - என வாகனங்களிலும் சூர்ய பிரபை மற்றும் சந்திர பிரபையிலும் எழுந்தருளி திருவீதி உலா.

திருவிழா நாட்களில் - தேவார திருவாசக பாராயணங்கள், இன்னிசை நிகழ்ச்சிகள் நிகழ்கின்றன. 

பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சூர், கோவா - என, நாட்டின் பல்வேறு பகுதிகளின் நாட்டியக் கலைஞர்கள் - நாட்டியாஞ்சலி நிகழ்த்துகின்றனர். 

பதினெட்டாம் நாள் (சித்திரை - 29) காலையில் ஸ்ரீதியாகராஜர் ருத்ரபாத தரிசனத்துடன் யதாஸ்தான பிரவேசம். அதனைத் தொடர்ந்து - ராஜவீதிகளில் ஸ்ரீ நடராஜப் பெருமான்  திருவீதி உலா. 

மதியம் ஸ்ரீசந்த்ரசேகரர் திருக்கோயிலுக்குள்  எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல். அன்று மாலையில் துவஜ அவரோகணம். 

இரவு பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் எம்பெருமானும் அம்பிகையும் எழுந்தருள பஞ்ச மூர்த்திகள் நகர் வலம் வருகின்றனர்.

அரண்மனை தேவஸ்தானத்தின் எண்பத்தெட்டுத் திருக்கோயில்களுள் பிரதானமானது - பெரு உடையார் திருக்கோயில்.

திருநாவுக்கரசு சுவாமிகளின் திருவாக்கினால்  - தஞ்சைத் தளிக்குளம் எனப் புகழப்பெற்ற தொன்மையான திருத்தலம். ஞானசம்பந்தப் பெருமானின் திருவாக்கினிலும் சுந்தரரின் திருவாக்கினிலும் குறிப்பிடப் பெற்ற திருத்தலம்.


மஹாநந்தி விளங்கும் திருத்தலம்.

சித்தர் பெருமானாகிய கருவூராரின் திருப்பதிகம் பெற்ற திருக்கோயில்.

அருணகிரிநாதர்  வலம் வந்து வணங்கிய திருத்தலம் - தஞ்சை. 

பெரிய கோயிலின் திருச்சுற்றில் விளங்கும் முருகப்பெருமானைப் புகழ்ந்து - திருப்புகழ் பாடியுள்ளார்.

மாமன்னன் ராஜராஜ சோழனின் அற்புத கலைப் படைப்பாக நெடிதுயர்ந்து இராசராசேச்சுரம் என விளங்குகின்றது.


ஸ்ரீபிரஹதீஸ்வர மாகாத்மியம், சமிவன க்ஷேத்திர மகாத்மியம் என இரண்டு வடமொழிப் புராணங்கள் விளங்குகின்றன.

மராட்டிய மாமன்னர் சரபோஜி காலத்தில் - தஞ்சைப் பெரு உடையார் உலா எனும் நூல் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகரால்  பாடப் பெற்றது.

ராஜராஜன் திருஆரூர் தியாகராசப் பெருமானிடம் மிகுந்த பற்று உடையவன். ஆதலால் தஞ்சை இராசராசேச்சரத்தில் சோமாஸ்கந்த மூர்த்தியை தியாக ராஜப் பெருமானாகவே எழுந்தருளச் செய்தான்.  

திருஆரூரில் தியாகராஜ ஸ்வாமிக்கு  நடைபெறும் சிறப்புக்களை எல்லாம் இத்தலத்தில் இவருக்கும் நடத்தி மகிழ்ந்தான்.  தஞ்சை விடங்கர் என்பது சோமாஸ்கந்த மூர்த்தியின் திருப்பெயர்.

மூலஸ்தானத்தின் வலப்புறம் உள்ளது - தியாகராஜர் சந்நிதி.  

தியாகராஜருக்கு எதிரில்  ராஜராஜனின் திருமேனி கூப்பிய கரங்களுடன்  விளங்குகின்றது.


ஸ்ரீவராஹி அம்மன் சந்நிதி , சித்தர் கருவூரார்  சந்நிதி - என அருள் விளங்குகின்றது.

அனைவரும் தஞ்சை சித்திரைப் பெருவிழாவில் கலந்து கொண்டு ஐயனின் அருள் பெற்று இன்புற விழைகின்றேன்.

பன்நெடுங் காலம் பணிசெய்து பழையோர்
தாம்பலர் ஏம்பலித் திருக்க
என்நெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த
எளிமையை என்றும் நான் மறக்கேன்
மின்நெடும் புருவத்து இளமயில் அனையார்
விலங்கல்செய் நாடக சாலை
இன்நடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத்து  இவர்க்கே!..

கருவூரார்.

வியாழன், ஏப்ரல் 24, 2014

அப்பர் சுவாமிகள்

திருமுனைப்பாடி நாட்டின் திலகம் என விளங்கிய  திருவாமூர்.

இந்தத் திருவூரில்தான் வேளாண் குலத்தில் குறுக்கையர் குடியில், புகழனார் - மாதினியார் எனும் தவப்பெருந் தம்பதியர்க்கு மகனாகத் தோன்றினார் திருநாவுக்கரசர்.

இயற் பெயர் மருள்நீக்கியார். இவர்தம் மூத்த சகோதரி திலகவதி.

மங்கை நல்லாளாகிய திலகவதியை கலிப்பகையார் எனும் பல்லவ படைத் தளபதிக்கு மணம் பேசி நிச்சயித்திருந்த நேரத்தில் தந்தையார் விண்ணுலகு எய்தினார்.  தாயும் உடன் உயிர் நீத்தார். 

அதேவேளையில் வடபுலத்தில் நிகழ்ந்த போரில் கலிப்பகையார் வீரமரணம் எய்தினார். நிச்சயிக்கப்பட்டபடி அவரே என் மணவாளர்!.. -  எனக் கூறி திலகவதியும் இன்னுயிர் துறக்க யத்தனித்தபோது,

தம்பியின் ஆதரவற்ற நிலையைக் கருத்தில் கொண்டு, தம்பிக்காக தவ வாழ்வினை மேற்கொண்டார் திலகவதியார். 

அடுத்தடுத்த பேரிடிகளால் அல்லலுற்ற வேளையிலும் சிவத் தொண்டுகள் புரிந்து வந்த மருள்நீக்கியார் - சமண சமயத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு புறசமயத்தைச் சார்ந்தார். 

தருமசேனர் எனும் பெயர் தாங்கி - காஞ்சியில் தலைமைப்பீடத்தில் இருந்த அவர் - தமக்கை திலகவதியாரின் வேண்டுதலினால் கொடும் வயிற்றுவலிக்கு ஆளாகி, மீண்டும் சைவ சமயம் திரும்பி- 

கூற்றானவாறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நானறியேன்!..

- என, திருவதிகை வீரட்டானத் திருக்கோயிலில் சிவபெருமானைப் பாடிப் பரவிய போது - திருநாவுக்கரசு எனும் பெயர் சூட்டி இறைவன் ஆட்கொண்டார்.

தன் தவறினை உணர்ந்த மகேந்திர பல்லவன் (590-630) -   திருநாவுக்கரசரின் ஆசிகளுடன் சமணத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறிய பின்னர்-   குணபதீச்சுரம் என்ற கோயிலை எழுப்பினான் என்று பெரியபுராணம் கூறுகின்றது.  

 இச்செய்தியைத் திருச்சிராப்பள்ளிக் கல்வெட்டும் உறுதிப் படுத்துகின்றது.


அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்றுவாய் நீ
துணையாய் என்நெஞ்சந் துறப்பிப்பாய் நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத்துநீ
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே. 

அதன்பின் ஊர்கள் தோறும் சென்று செந்தமிழால் பாடிப் பரவியும் திருக்கோயில்களை உழவாரங் கொண்டு தூய்மைப்படுத்தியும்  மக்களுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கியும் சைவத் திருப்பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் - திருநாவுக்கரசர்.

தனது முதிர்ந்த வயதில் பாலகராயிருந்த திருஞான சம்பந்தருடன் சேர்ந்து திருத்தல யாத்திரைகள் செய்தார். 

ஏழாம் நூற்றாண்டுகளில்  திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் சிவ தத்துவத்தை எடுத்துரைத்துச் சைவ சமயத்தை வளரச் செய்தனர். 

திருஞான சம்பந்தப்பெருமானால் அப்பர் எனவும் அழைக்கப்பட்டார். 

திருநாவுக்கரசர்  கடலிலிருந்து கரையேறிய தலம்  - கரையேறிய குப்பம் - திருப்பாதிரிப் புலியூர்.

பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரமயோகி
எத்தினாற் பத்தி செய்கேன் என்னைநீ இகழவேண்டா
முத்தனே முதல்வா தில்லை அம்பலத் தாடுகின்ற
அத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே!..

திருநாவுக்கரசர் - தன் கால்களால் மிதிக்க அஞ்சி , மண்ணில் உருண்டு அங்கப் பிரதட்சணமாக வலஞ்செய்து வணங்கிய திருத்தலம்  - தில்லை!..

தமக்கு - ரிஷபக்குறியும் சூலக்குறியும் இடவேண்டுமென, வேண்டிப் பெற்ற திருத்தலம்  - திருப்பெண்ணாகடம்

இறைவனின் திருவடி தீட்சையை பெற்ற திருத்தலம் - தஞ்சை பாபநாசத்திற்கு அடுத்துள்ள  - திருநல்லூர். 

தம்மை அறியாமலே தம்மிடம் பெரும் பக்தி கொண்டிருந்த அப்பூதி அடிகளின் மகனை நாக விஷத்திலிருந்து உயிர்ப்பித்து எழுப்பிய திருத்தலம் - திங்களூர். 

எளிய மக்களின்  பணி செய்தற்கு என -  திருமடம் அமைத்த திருத்தலங்கள் - திருப்பூந்துருத்தி, திருவீழிமிழலை.

பஞ்சம் தீர்ப்பதற்கு என படிக்காசு அருளப் பெற்றது -  திருவீழிமிழலையில்!..

பண்ணி னேர்மொழி யாளுமை பங்கரோ
மண்ணி னார்வலஞ் செய்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே!..

வேதங்களால் அடைக்கபட்டிருந்த கதவங்களைப் பதிகம் பாடித் திறப்பித்தது - திருமறைக்காட்டில்!.. 

இவரது வருகையை அறிந்த மாற்றார் - ஆலயத்தைத் தாளிட்டு அடைத்து விட - ஆலய தரிசனம் பெறும் வரை உண்ணாநோன்பு என்று அமர்ந்த திருத்தலம் - பழையாறை வடதளி. 

இவர் பொருட்டு ,  பொதி சோறும் நீரும் தாங்கி வந்து - உண்ணச் செய்து - ஈசன் மகிழ்ந்த திருத்தலம் - திருப்பைஞ்ஞீலி. 




மாதர்ப் பிறைக்கண்ணி யானைமலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல்ஐயா றடைகின்ற போது
காதல் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டேன்  அவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்!..
 

திருக்கயிலாய மாமலையைத் தரிசிக்க வேண்டி - தள்ளாத வயதிலும் தளாராத ஊக்கத்துடன் பயணித்த திருநாவுக்கரசருக்கு - கயிலாயத் திருக்காட்சியுடன்  சர்வம் சிவமயம் எனத் திருக்காட்சி நல்கிய திருத்தலம் - திருஐயாறு.

கற்றவர்கள் உ ண்ணுங் கனியே போற்றி
கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
அல்லலறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
திருமூலத் தானனே போற்றி போற்றி!..

திருநாவுக்கரசரின் பற்றற்ற தன்மையை நிரூபிக்க - அரம்பையரின் ஆடல் பாடலுடன் பொன்னையும் மணியையும் பூமியில் வாரி இறைத்து சோதித்து அருளிய திருத்தலம் - திருஆரூர். 

என் கடன் பணி செய்து கிடப்பதே என சிவத்தொண்டு புரிந்த    திருநாவுக்கரசு சுவாமிகளை - ஈசன் தன் திருவடிக் கீழ்ச் சேர்த்துக் கொண்ட திருத்தலம் - திருப்புகலூர்.  

திருநாவுக்கரசர் தொண்டு வழியில் இறைவனை வழிபட்டவர். இதனால் இவர் உழவாரத் தொண்டர் எனவும் சிறப்பிக்கப்பட்டார். 

தேவாரம் தொகுக்கப்பட்ட முறையைப் பற்றி சைவ ஆச்சாரியர் உமாபதி சிவம் திருமுறை கண்ட புராணத்தில் - அப்பர் சுவாமிகள் நாற்பத்தொன்பதாயிரம் பாடல்களைப் பாடிய விவரத்தினை திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார் அருளியதாக குறித்துள்ளார். 


கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்
கொங்கு தண் குமரித்துறை ஆடிலென்
ஓங்கு மாகடல் ஓதநீர் ஆடிலென்
எங்கும்  ஈசன் எனாதவர்க்கில்லையே!.. 

அரனுக்கு அன்பில்லாமல், அவன் படைத்த உயிர்களிடத்தில் அன்பில்லாமல் - தேடிச் சென்று தீர்த்தங்கள் பலவற்றில் மூழ்கிக் குளித்தாலும் எந்தப் பலனும் இல்லை!.. - என முழங்கிய பெருந்தகையாளர்.

திருநாவுக்கரசர்  பாடியருளிய  திருப்பதிகங்கள் 4, 5, 6 ஆகிய மூன்று திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளன.  

மக்கள் தொண்டு தான் மகேசன் தொண்டு - என வாழ்ந்த அப்பர் பெருமான்,  தமது எண்பத்தொன்றாவது வயதில் சிவனடிக் கீழ் முக்தியடைந்த நாள் - சித்திரைச் சதயம்.

இன்றைய தினம் சித்திரைச் சதயம் (24 ஏப்ரல்).  
அப்பர் சுவாமிகளின் குருபூஜை!.. 

திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி!.. போற்றி!..

செவ்வாய், ஏப்ரல் 22, 2014

வாழ்க வையகம்

புவி நாள் (Earth day) இன்று. 

கெட்டுப் போவதில் இருந்து - 

பூமியும் அதன் சுற்றுச்சூழலும் காப்பாற்றப்பட வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தி  - வருடந்தோறும் - 175 நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் நாள்.


பூமி ஏன் காக்கப்பட வேண்டும்?..

அண்டார்டிகாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பனிமலைகள் உருகிச் சரிகின்றன. காரணம் - வெப்ப நிலை அதிகரித்துவிட்டது. 

உலகை நவீன மயமாக்கி விட்டதால்  ஏற்பட்ட விளவு!..

அப்படியானால்,  உலகம் நவீனமாக வேண்டாமா!?.. வேண்டும் தான்!.. 

ஆனால் - பின் விளைவுகளைப் பற்றிய சிந்தனை இல்லாமல் போனதே!..

மிதமிஞ்சிய கரியமில வாயுவின் தாக்கத்தால் - ஓசோன் படலம் கிழிந்து போய்விட்டது. கிழிந்து போனால் என்ன!..

பஞ்ச பூதங்களில் அக்னியைத் தவிர மற்ற நான்கும் மாசடைந்து விட்டன.

மண் கெட்டதால் - நீரும், காற்றும் மாசடைந்தன. அதனாலேயே - ஓசோனில் கிழிசல்!.. இதனால் பலநாடுகளிலும் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு விட்டது. 

 
இயற்கை வளம் மிக்கதாக இருந்த பூமியின் காடுகளை அழித்தான் மனிதன். இதனால், இயற்கைச் சங்கிலியின்  கண்ணிகளான - மற்ற உயிர்க் குலமும் நாசம் அடைந்தன. 

எத்தனை எத்தனையோ உயிரினங்கள்  - இன்று பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில்!.. 

பலவிதமான பலன்களை நல்கிய  தாவரங்கள் முற்றிலுமாக அழிந்தே விட்டன. விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்டன. 

அவற்றை வாழ விடாமல் செய்து விட்டோம். வளி மண்டலம் ஒரு வழியானது. சகல ஜீவராசிகளுக்கும் வலியானது. 

பருவநிலை மாற்றத்தால் பூமியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. 

இதன் விளைவே  அடிக்கடி நிகழும் - நிலநடுக்கம், ஆழிப்பேரலை , கடுங்கோடை, வெப்பம், வறட்சி, பனிப்பாறை உருகி வெள்ளம் போன்றவை!.. 

இவற்றுக்கெல்லாம் மனிதர்களாகிய நாமே காரணம். 


நம்முடைய தவறுகளால் வாழ்வாங்கு வாழ வேண்டி வையத்துள் வந்த உயிர்கள் அனைத்தும் பரிதவித்து நிற்கின்றன.

இந்நிலையில் - பூமியைக் காக்கும் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக அமைந்ததே - பூமிநாள்!..

1990 ஏப்ரல் 22 முதல் அனுசரிக்கப்பட்டு வரும் இந்நாளின் வரலாறு!..

{விக்கி பீடியா - வழங்கியுள்ள தகவல்கள் - இதன் கீழ் குறிப்பிடப்படுகின்றன}

1969-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சாண்டா பார்பரா  கடல் பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான எண்ணெய் சிதறலைப் பார்வையிடுவதற்காக அமெரிக்க சுற்றுச் சூழலியல் நிபுணரும் செனட்டரும் ஆன - கெய்லார்ட் நெல்சன் என்பவர்,  பயணம் மேற்கொண்டார். 

Gaylord Nelson.
அங்கே எண்ணெய் சிதறலை நேரில் கண்டு ஆய்வு செய்தபின்,  தலைநகர் வாஷிங்டனுக்குத் திரும்பிய கெய்லார்ட் நெல்சன்  ஏப்ரல் 22-ஆம் நாளைத் தேசியச் சுற்றுச் சூழல் நாளாக அறிவிக்கும் மசோதாவை  சமர்ப்பித்தார்.  

John McConnell
அதே 1969ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு  நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல் (John McConnell). அவர் உலக அமைதிக்காகக் குரல் கொடுத்த ஒரு மாமனிதர். 

மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காப்பாற்ற மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்று அவர் கருதினார். 

அதோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்று - ஒருநாளை அனுசரிப்பது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார்.

இந்த சமயத்தில் தான் ,  கேலார்ட் நெல்சன் - சுற்றுச் சூழல் பற்றிய அறிவைப் பரப்புதற்கு -  அழைப்பு விடுத்தார். 


இதனைத் தொடர்ந்து - சுற்றுச்சூழல் பற்றிய யுனெஸ்கோ மாநாட்டில்  புவி நாளை - 1970 ஏப்ரல் 22-ல் கொண்டாடுவது பற்றி  ஜான் மெக்கானெல் அறிவித்தார்.

இந்த நாளின்போது புவியின் வட கோளப் பகுதி வசந்த காலமாகவும், தென் கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.

1990-ம் ஆண்டு புவி நாளன்று 141 நாடுகளில் 20 கோடி மக்களைத் திரட்டிச் சுற்றுச்சூழல் பிரச்னைகளை உலகறியச் செய்ததன் மூலம், மறுசுழற்சி முயற்சிகளுக்கு மிகப் பெரிய உத்வேகம் கிடைத்தது. 

இது, நவீன சுற்றுச்சூழல் போராட்டத்தின் தொடக்கம் என குறிக்கப்படுகின்றது. 
 
{விக்கி பீடியா வழங்கிய தகவல்களுக்கு நன்றி}


உலகில் நகரங்களே பெரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்குக் காரணமாக இருக்கின்றன. 

இந்த பாதிப்பால் அதிக அளவில் மக்கள் அவதியுறுவது நகரங்களில்தான். 

எனவே, நகரங்களைக் கூடுமானவரை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்ற வேண்டும். அதற்கு சுற்றுச்சூழலுக்கு இணக்கமான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்  - என இந்தப் புவி நாள் வலியுறுத்துகிறது. 

நாமும் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான நடைமுறைகளைக் கடைபிடித்து புவியினைக்  காத்து நிற்போம்!.. 


இந்த மாதிரியான குறியீட்டு தினங்களுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே-

நம்முடைய முன்னோர்கள் - நாம் வாழும் புவியை எப்படி வாழ வைப்பது என்பதில் கருத்தாக இருந்தனர்.

வேதங்களிலும் இதிகாசங்களிலும் தேவார திருமுறைகளிலும் ஏராளமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

நம்முடைய புராணங்களில், பூமியைப்  பெண்ணாக உருவகித்து, ஸ்ரீபூமாதேவி எனப் பெயரும் சூட்டி - அவளைக் காக்கும் கடவுளான மஹாவிஷ்ணுவின் பத்தினியாகப் பாவித்துக் கொண்டாடுவது மரபாக இருக்கின்றது. 

படித்ததில் பிடித்தது..!..

நெற்றியில் உள்ள திருமண் குறியினைக் கொண்டு எவனும் வைஷ்ணவன் என்று ஆவதில்லை. மற்ற உயிரினங்களின் துயரங்களை யார் ஒருவன் தனது துயராகக் கொண்டு உதவுகின்றானோ - அவனே வைஷ்ணவன்!.. உலக நன்மையைத் தன் கருத்தினில் கொண்டுள்ளவன் எவனோ - அவனே வைஷ்ணவன்!..

காலே வர்ஷது பர்ஜன்ய
பிருத்வி சஸ்ய ஷாலினி 
தேசோ யாம் க்ஷோப ரஹித 
சஜ்ஜன சந்து நிர்பய.

மழைக் காலத்தில்,  மழை - அமோகமாகப் பெய்யட்டும். இந்தப் பூமி  - இளம் பயிர்களால் நன்கு சூழப்படட்டும். தேசம் பிரச்னைகள் இன்றி சுபமாக இருக்கட்டும். நல்ல மக்கள் பயம் இன்றி இருக்கட்டும். 



ஓம் 
சர்வேஷாம் ஸ்வஸ்திர் பவது
சர்வேஷாம் சாந்திர் பவது
சர்வேஷாம் பூர்ணம் பவது
சர்வேஷாம் மங்களம் பவது
ஓம் சாந்தி சாந்தி சாந்தி:

பரந்து விரிந்த ப்ரபஞ்சம்

எங்கும் நன்மை உண்டாகட்டும்
எங்கும் அமைதி உண்டாகட்டும்
எங்கும் முழுமை உண்டாகட்டும்
எங்கும் வளம் உண்டாகட்டும்!..



வையகத்தை நாம் காப்போம்!.. 
வையகம் நம்மை காக்கும்!..  
லோகா சமஸ்தா சுகினோ பவந்து.

திங்கள், ஏப்ரல் 21, 2014

பாவேந்தர் பாரதிதாசன்

குருநாதர் மீது கொண்ட பாசத்தினால் - சுப்பு ரத்தினம் எனும் தன் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்ட தகைமையாளர். 

அப்படி- பெயரை மாற்றிக் கொண்டபோது, ஆர்ப்பரித்து எழுந்தன - எதிர்ப்புகள்.


''..சாதிக் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் பாரதி என்பதால் அவருடைய பெயரை வைத்துக் கொண்டேன். எவர் எதிர்த்தாலும் கவலை இல்லை!..'' - என்று அஞ்சாமல் முழங்கியவர்  புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். 

புதுவையில் மகாகவி பாரதியார் தங்கியிருந்த போது, நண்பர்களுடன் அவரை - அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றவர். 

அப்படி ஒரு சமயத்தில்  - பாரதியாரின் விருப்பப்படி  - அவரது முன்னிலையில் பாடிய பாட்டு தான் - இது!.. 

எங்கெங்கு காணினும் சக்தியடா தம்பி 
ஏழுகடல் அவள் வண்ணமடா - அங்குத் 
தங்கும் வெளியினிற் கோடியண்டம்  - அந்தத் 
தாயின் கைப்பந்தென ஓடுமடா!.. 

கங்குலில் ஏழு முகிலினமும் வந்து 
கர்ஜனை செய்வதை கண்டதுண்டோ - அந்த
மங்கை நகைத்த ஒலி எனலாம் - அவள்
மந்த நகையங்கு மின்னுதடா!.. 

காளை ஒருவன் கவிச்சுவையைக் கரை
காண நினைத்த முழு நினைப்பில் - அன்னை
தோளசைத் தங்கே நடம் புரிவாள் - அவன் 
தொல்லறிவாளர் திறம் பெறுவான்!..

வாளைச் சுழற்றும் விசையினினிலே இந்த 
வையம் முழுவதும் துண்டு செய்வேன் - என
நீள இடையின்றி நீ நினைத்தால் - அன்னை
நேர்ப்படுவாள் உந்தன் தோளினிலே!..

பாவேந்தரின் இந்தப் பாடல் - பின்னாளில் நம்ம வீட்டு தெய்வம் எனும் திரைப் படத்தில் இடம் பெற்றது.
இசையமைப்பு -திரு. குன்னக்குடி வைத்யநாதன்.
பாடியவர்- திரு. T.M. சௌந்தரராஜன் - குழுவினர்.


அ - அணில் என்று பயிற்றுவித்த  அன்றைய தமிழ் நடையினை மாற்றி,
அ - அம்மா என - மழலைகளுக்குத் தமிழமுதினை ஊட்டியவர் - பாவேந்தர்!.. 

புரட்சிக் கவிஞரின் பாடல்கள் திரைப்படங்களிலும் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றுள் சில!..

பாடல்களைக் கேட்டு மகிழ்வதற்கு Mp3   இணைக்கத் தெரியவில்லை. எனவே திரைப்படத்தின் பெயரில் காணொளி சுட்டியினை இணைத்துள்ளேன்.

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட் டாயா? - எமக்
கின்பம் சேர்க்கமாட் டாயா?.. நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்கமாட் டாயா? - கண்ணே
அல்லல் நீக்கமாட் டாயா?..

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க - எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க - நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட் டாயா? - கண்ணே
ஆடிக் காட்டமாட் டாயா?..

அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே
அறிகி ல்லாத போது - யாம்
அறிகி ல்லாத போது - தமிழ்
இறைவ னாரின்திருக் குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்டமாட் டாயா? - கண்ணே
இயம்பிக் காட்டமாட் டாயா?.. 
 

திரைப்படம் -  ஓர் இரவு. 
இசையமைப்பு - திரு. M.M.தண்டபாணி தேசிகர் - சுதர்சனம்.
பாடியோர்- திருமதி.M.S. ராஜேஸ்வரி, திரு.J. வர்மா.
கீழுள்ள இணைப்புகளில் இனிமையான இந்தப் பாடலைக் கேட்டு மகிழுங்கள்.
நித்யஸ்ரீ மகாதேவன்.
சுதா ரகுநாதன்


தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் !
தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் !
 

தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் !
தமிழுக்கு மதுவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர் !


தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் !
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் !
 

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் !
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ!..


திரைப்படம் -  பஞ்சவர்ணக்கிளி 
இசையமைப்பு - திரு. M.S. விஸ்வநாதன்.
பாடியவர்- திருமதி.P.சுசிலா.

* * *

சங்கே முழங்கு!.. சங்கே முழங்கு!..

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

பொங்கும் தமிழர்க்கின்னல் விளைத்தால்

சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு! 

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் 
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த 

தமிழுடன் பிறந்தோம் நாங்கள் - ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு 

ஞாபகம்செய் - முழங்கு சங்கே!
  
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் 

தோளெங்கள் வெற்றித் தோள்கள்..
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் 

ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனில்கமழ்ந்து வீரம்செய்கின்ற

தமிழ் எங்கள் மூச்சாம்!..

திரைப்படம் -  கலங்கரை விளக்கம்.
இசையமைப்பு - திரு. M.S. விஸ்வநாதன் -ராமமூர்த்தி.
பாடியோர் - திரு. சீர்காழி S. கோவிந்தராஜன், திருமதி. P.சுசிலா - குழுவினர்.

சங்கே முழங்கு!..  - எனும் இந்தப் பாடல் வீரம் செறிந்தது!.. 

கண்களை மூடிய வண்ணம்  பாடலைக்கேட்கும் போதெல்லாம் தோள்கள் விம்மிப் புடைக்கும்!.. 

இதற்கு இணையாக வேறு ஒரு பாடலைக் குறிக்க முடியவில்லை!..

அன்புச் சகோதரர் திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்கள், புரட்சிக் கவிஞரின் அருமைப் புதல்வர் திரு. மன்னர் மன்னன் அவர்களைச் சந்தித்து மகிழ்ந்த தருணத்தை தனக்கே உரிய பாணியில் பதிவு செய்துள்ளார்.

இதோ,  இணைப்பு - பாரதிதாசனைச் சந்தித்தோம்.



கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
 

பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
 

நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்
 

இனியன என்பேன்!.. எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!..




அலையெறிந்து ஆர்ப்பரித்த அந்தத் 
தமிழ்க் கடல் ஓய்ந்த நாள் இன்று!..


தமிழ் எங்கள் இளமைக்குப் பால்!..  
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்!.. 
தாய் எனவும் தந்தை எனவும் தமிழைக் காட்டிய கவிவேந்தரின் நினைவுகள் என்றும் நெஞ்சை விட்டு நீங்குவதேயில்லை!..