நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 20, 2014

உதித்தெழுந்த ஞாயிறு

சூரியன்  உதித்தெழுந்த காலை நேரம் அது. 

மகதலேனா மரியாள், சலோமி, யாக்கோபின் தாயான மரியாள் ஆகியோருடன் வேறு சில பெண்களும் இயேசுவின் சரீரத்தின் மீது நறுமணத் திரவியங்களைப் பூச விரும்பினர்.  


ஆயினும் - பெரிய கல்லினால் கல்லறையை மூடி வைத்திருந்தார்களே.. அதனை நமக்காக யார் அகற்றுவார்கள் என பேசிக் கொண்டனர். ஆனால் - கல்லறையின் அருகிலே வந்த போது, கல்லறையை அடைத்திருந்த மிகப்பெரிய கல் அகற்றப்பட்டிருந்தது. 

அவர்கள் உள்ளே நுழைந்தனர். அங்கே -  வலப் பக்கத்தில் ஒளி வடிவான வெண்ணிற ஆடை அணிந்த ஒருவன் அமர்ந்திருக்கக் கண்டு அஞ்சினர். 

அப்போது -  ''..அஞ்ச வேண்டாம். நீங்கள் நசரேயனாகிய இயேசுவைத் தேடுகின்றீர்கள். சிலுவையில் அறையப்பட்ட அவர் உயிர்த்தெழுந்து விட்டார். அவரைக் கிடத்திய இடம் இதுதான்!.. அவரது சீடர்களிடம் சென்று கூறுங்கள். இயேசு கலிலேயாவுக்குச் சென்று கொண்டிருக்கின்றார். உங்களுக்கு ஏற்கனவே சொன்னபடி அவரை நீங்கள் பார்ப்பீர்கள்!..'' - என்றான். 

அந்தப் பெண்கள் பயந்து கல்லறையை விட்டு விலகி நின்றார்கள்.

அதேசமயம், கல்லறைக்குக் காவலிருந்த படையாட்கள் பயந்து - ஓடிப்போய் தலைமை ஆச்சாரியனிடம் சொன்னார்கள். அவன் மற்றவர்களுடன் கூடி - இயேசுவின் சரீரத்தை சீடர்கள் இரவோடு இரவாக தூக்கிச் சென்று விட்டனர் - என்று கையூட்டாக பணத்தைக் கொடுத்து பொய்க் கதையை  பரப்பி விட்டான். (அப்-1:6-8)

இன்றைக்கும்,  யூதர்களுக்கிடையில் இந்த பொய்யான கதை  சொல்லப்பட்டு வருகின்றது.(..மத்தேயு)

வந்திருந்த பெண்கள் அச்சத்தால் குழப்பம் அடைந்திருந்தனர்.


அதே சமயம் மகிழ்ச்சியடைந்தார்கள். நடந்ததை சீடர்களிடம் சொல்வதற்கு விரைந்து சென்றார்கள்.
அப்போது அவர்களின் முன் வந்து நின்ற இயேசு - முதன் முதலாக மகதலேனா மரியாளுக்குத் தரிசனம் ஆனார்.

''..வாழ்க!..'' - என்றார். 

இயேசுவின் அருகில் சென்ற பெண்கள் அவரது கால்களைத் தொட்டு வணங்கினர்.

''.. அஞ்சாதீர்கள். சீடர்களை கலிலேயாவிற்கு வரச் சொல்லுங்கள். அங்கே என்னைக் காண்பார்கள்!.. ''- என்றார். 

அந்தப் பெண்கள் சீடர்களைத் தேடிப் போனார்கள். வெகு துக்கப்பட்டு அழுது கொண்டிருந்த சீடர்களை கண்டறிந்தார்கள். 

மகதலேனா மரியாள் அவர்களிடம் - ''.. இயேசு உயிர்த்தெழுந்தார். அவரை நாங்கள் கண்டோம்!..'' -  என்று சொன்னாள். ஆனால் அவர்கள் நம்பவில்லை. 

பின்னர், சாலையில் நடந்து கொண்டிருந்த இருவரோடு சேர்ந்து நடந்து அவர்களுடன் ஒரு விடுதியில் தங்கி, உணவு உண்ணும் போது தம்மை அடையாளம் காட்டி காட்சி தந்தார். 

இருப்பினும் இறப்பிற்கு முன்னிருந்த விதமாக பார்ப்பதற்கு  அரிதாக இருந்தது. அந்த இருவரும் போய் மற்ற சீடர்களிடம் கூறினர். இப்போதும் அவர்கள் நம்பவில்லை.


பின்னர் - பதினோரு சீடர்களும் உணவு உண்ணும் வேளையில் அவர்களுக்கு மத்தியில் நின்றிருந்தார் இயேசு.

சீடர்கள் காணுமாறு தரிசனம் தந்தருளினார் - இயேசு.

''..உங்களுக்குச் சமாதனம் உண்டாவதாக!..'' - என்றார்.

சீடர்கள் அதிர்ச்சியுடன் பயந்தார்கள்.

உயிர்த்தெழுந்த தம்மைக் கண்டவர்களை  - அவர்கள் நம்பாமல் இருந்ததன் நிமித்தம் - அவர்களுடைய அவநம்பிக்கையையும்  கடின இதயத்தையும் குறித்து கடிந்து கொண்டார்.

''..நீங்கள் எதற்காகக் குழப்பம் அடைகின்றீர்கள்?. என்னைக் காண்பதில் ஏன் ஐயம் கொள்கின்றீர்கள்?..  ஆவி இப்படிப்பட்ட உடல் கொண்டிருக்காது. என் கைகளையும் பாதங்களையும் பாருங்கள்!..''

- என்றவாறு தன் கைகளிலும் பாதங்களிலும் இருந்த ஆணித் துளைகளைக் காட்டினார்.

சீடர்கள் ஆச்சர்யத்துடன் மகிழ்ந்தார்கள் எனினும் தாம் பார்த்ததை அவர்களால் நம்பமுடியவே இல்லை.

இயேசு அவர்களை நோக்கி - ''..சாப்பிடுவதற்கு ஏதாவது இருக்கின்றதா?..'' என்று கேட்டார். அவர்கள் சமைத்த மீன் துண்டுகளில் ஒன்றினைக் கொடுத்தனர்.

அவர்கள் முன்பாக - அந்த மீனை இயேசு உண்டார்.

பின்னர் வேதாகமங்களை விளக்கினார்.

''.. நான் உங்களோடு இருந்த நாட்களை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். மோசேயின் சட்டத்திலும் தீர்க்கதரிசிகளின் நூல்களிலும் சங்கீதத்திலும் என்னைப் பற்றி எழுதப்பட்டிருக்கின்ற அனைத்தும் நடந்தேயாக வேண்டும்- என்று நான் சொன்னேன்!..'' - என்றார் இயேசு.

தன்னைப் பற்றி எழுதப்பட்டிருக்கின்ற காரியங்களை அவர்கள் புரிந்து கொள்வதற்கு உதவினார். (..மாற்கு)

பதினொரு சீடர்களும் கலிலேயாவில் மலைக்குச் சென்றனர். மலை மீது இயேசுவைக் கண்டு வணங்கினார்கள். அப்போதும் கூட அவர்களில் சிலர் நம்பாமல் இருந்தார்கள்.

இயேசு அவர்களிடம் -

''..வானத்திலும் பூமியிலும் முழு அதிகாரமும் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. நடந்தவை அனைத்தையும் பார்த்தீர்கள். நீங்களே சாட்சிகள். மக்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட முடியும் என்று நீங்கள் சொல்லவேண்டும். அவர்கள் மனம் மாறி, தாம் செய்த பாவங்களுக்காக வருந்த வேண்டும். அதைச் செய்தால் தேவனால் மன்னிக்கப்படுவர். 


உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் நான் உங்களிடம் கூறிய  நற்செய்திகள் கூறப்பட வேண்டும். நான் எப்பொழுதும் உங்களுடனே இருப்பேன். உலகின் முடிவு வரையிலும் நான் உங்களுடன் தொடர்ந்து இருப்பேன் என்பதில் உறுதியாய் இருங்கள்!..''

- என்று கூறினார்.

பின்பு கைகளை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார். எருசலேமில் இருந்து பெத்தானியா வரைக்கும் அவர்களை அழைத்துச் சென்றார்.

பின்னர் - மீண்டும் ஒரு நாள்  இயேசு தரிசனம் தந்தார்.


திபேரியா (கலிலேயா) கடற்கரையில் - விடியற்காலைப் பொழுதில் - இயேசு நின்றிருந்தார்.

இரவில் சீமோன் பேதுருவுடன் மீன் பிடிக்கச் சென்றவர்கள் அதுவரையில் எந்த  மீனையும் பிடிக்கவில்லை. அப்போது - இயேசு,

''..வலையை படகுக்கு வலப்புறமாகப் போடுங்கள்!..'' - என்றார்.

அதன்படியே செய்தனர். படகுக்குள் இழுக்க முடியாதபடிக்கு வலைக்குள் ஏராளமான மீன்கள் சிக்கின.


சீமோன் பேதுரு வலையை கரைக்கு இழுத்தான். வலையில் 153 மீன்கள் - அனைத்தும் கனமுடையனவாய் இருந்தன.

இயேசு அவர்களிடம் வாருங்கள். சாப்பிடுங்கள் என்றார்.

கரையில் கரியடுப்பில் மீன்கள் சுடப்பட்டிருந்தன. அப்பமும் அங்கிருந்தது. அவர்களில் எவரும் எதையும் தைரியமாகக் கேட்கவில்லை. அவர் இயேசு கிறிஸ்து தான் என்று அவர்கள் அறிந்திருந்தனர்.

இயேசு அப்பத்தையும் மீனையும் அவர்களுக்குக் கொடுத்தார்.

உண்டு முடிந்ததும் - இயேசு பேதுருவிடம்,


''..யோவானின் மகனான சீமோனே! மற்றவர்கள் என்னை நேசிப்பதை விட என்னை நீ மிகுதியாக நேசிக்கின்றாயா?..'' - என்று கேட்டார்.

அதற்கு பேதுரு, ''.. ஆம் ஆண்டவரே!.. நான் நேசிக்கின்றேன். அது உங்களுக்குத் தெரியும்!..'' - என்றான். அவனிடம் -

இயேசு  - ''.. எனது ஆட்டுக்குட்டிகளைக் கவனித்துக்கொள்!..'' - என்றார்.

இந்த வாக்கு தத்தம் மூன்று முறை நிகழ்ந்தது.

இயேசு - மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்ததும் ஒரு வார காலத்திற்குள்ளாக மூன்று முறை தன் சீடர்களுக்குக் காட்சியளித்தார். (.. யோவான்)

தன் கரங்களை உயர்த்தி - அவர்களை வாழ்த்தினார்.


அவர்களை வாழ்த்தும்போது, அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு - இறைமகன் இயேசு பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். சீடர்கள் அவரை அங்கே வணங்கினர். (..லூக்கா)

எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர்.

எப்போதும்  மனமகிழ்ச்சியுடன் தேவனை   வாழ்த்தியவாறே - தேவாலயத்தில் தங்கியிருந்தனர்.


தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் (1774 -1864). இவர் இரண்டாம் சரபோஜி மன்னரின் உற்ற தோழர். இவர் தஞ்சையிலும் சுற்றியுள்ள ஊர்களிலும் சுவிஷேச பள்ளிகளில் ஆசிரியராகவும், பின் தலைமை ஆசிரியராகவும் பணி புரிந்தவர். சிறந்த தமிழ்ப் புலமை உடையவர். இவரது கல்லறை, தஞ்சை செயிண்ட் பீட்டர் தேவாலயத்தின் பின்புற தோட்டத்தில் உள்ளது.

தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார்  இயற்றிய கீர்த்தனை.

சீர் இயேசு நாதனுக்கு ஜய மங்களம் - ஆதி 
திரியேக நாதனுக்கு சுபமங்களம்!.. 

பாரேறு நீதனுக்குப் பரம பொற்பாதனுக்கு 
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு
சீர் இயேசு நாதனுக்கு ஜய மங்களம்  - ஆதி 
திரியேக நாதனுக்கு சுபமங்களம்!..

ஆதி சருவேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகில ப்ரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு ..

மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர்கலை ஞானனுக்கு நியாயனுக்கு மங்களம்
கானான் நல்தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்கு
கோனார் சகாயனுக்குக் கூறுபெத்த லேயனுக்கு ..

பத்துலட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்குச் சர்வஅதி காரனுக்கு
பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு ..

சீர் இயேசு நாதனுக்கு ஜய மங்களம் - ஆதி 
திரியேக நாதனுக்கு சுபமங்களம்!..

14 கருத்துகள்:

 1. ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   இனிய ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

   நீக்கு
 2. ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்களின் வருகைக்கும் நல்வாழ்த்தினுக்கும் நன்றி..

   நீக்கு
 3. சீர் யேசுநாதனுக்கு மங்களம் சில நாட்களுக்கு முன் திரு .வைகோவின் தளத்தில் காஞ்சிப் பெரியவர் ஏசு. ஈசன் எனும் பெயர்களிலுள்ள ஒற்றுமையை சிலாகித்ததாகப் அடித்த நினைவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   நதிகள் பிறக்கும் இடம் பலவாகும்.. எல்லா நதிகளும் கலக்கும் இடம் கடலாகும்!.. - என்பது உயர்நிலையான கருத்து.
   மகாபெரியவர் அருளியவை என்றும் இனிமையே..
   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 4. ஈஸ்ட்ர் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் நல்வாழ்த்தினுக்கும் நன்றி..

   நீக்கு
 5. பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் நல்வாழ்த்தினுக்கும் நன்றி..

   நீக்கு
 6. ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள் ஐயா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி.. வாழ்க நலம்!..
   தங்களுக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்!..

   நீக்கு
 7. ஈஸ்டர் திரு நாள் வாழ்த்துக்கள்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..