நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஏப்ரல் 29, 2014

அக்ஷய திரிதியை

அக்ஷய திரிதியை என்றாலே - தங்கம் வாங்குவதற்கான நாள்!..  - என்று தான் பலரும் இன்றளவும் நம்புகின்றனர். 

அந்த அளவுக்கு வியாபார தந்திரம் வெற்றி பெற்றிருக்கின்றது. 

ஒரு நாளிதழ் கூறுகின்றது - ''..இயன்ற அளவு வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குங்கள்!..'' -  என்று..

அதுவுமில்லாமல் - சயம் என்றால் குறைவுடையது. அட்சயம் என்றால்  குறைவில்லாதது. வளர்வது - என்றும் விளக்கம் அளிக்கின்றனர். 

அட்சயம்  - அல்ல!..  

அக்ஷய - என்பதே சரி!. க்ஷய எனில் தேய்வுடையது.  அக்ஷய எனில் தேய்வில்லாதது, குறைவில்லாதது - என்பது பொருள்.


அக்ஷய பாத்ரம் - அள்ள அள்ளக் குறையாத  - நிறைவினை உடையது. 

தட்சனுக்கும் சந்திரனுக்கும் பிரச்னை!..  முடிவில் சந்திரன் சபிக்கப்பட்டான்.

''..என் மகள்கள் இருபத்தெழுவரையும் சமமாகப் பாவிக்காத உன் அழகு தேய்ந்து அழியக்கடவது!..''

சாபம் கொடுத்த தட்சன் சாப விமோசனம் சொல்லாமல் போய்விட்டான். 

தவித்தான் சந்திரன். எங்கெல்லாமோ ஓடி அலைந்தான். 

அவனுடைய அழகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலையாகத் தேய்ந்து கொண்டே வந்தது. 

யாராலும்  சந்திரனுக்கு உதவ முடியவில்லை. அது மட்டுமில்லாமல் -

தட்சப்பிராஜாபதியைப் பகைத்துக் கொள்ள எவரும் விரும்பவில்லை. 


முன்பு ஒருமுறை  - சதுர்த்தி அன்று மோதகத்துடன் மூஷிகத்தின் மீது உலா வந்த முதற்பொருளைக் கண்டு நகையாடியதும்,  அதனால் ஐங்கரனின் கோபத்துக்கு ஆளாகியதும் - பின் அவரது அன்புக்குப் பாத்திரமாகியதும் சந்திரனின் நினைவுக்கு வந்தது.  

ஓடிப் போய்த் திருவடிகளில் விழுந்து கதறினான். 

காலடியில் கிடந்து கதறும் சந்திரனைப் பரிவுடன் நோக்கிய கஜானனன் - கருணக் கடலாகிய அம்மையப்பனைச் சுட்டிக் காட்டினார். 

அவர் காட்டியபடியே - சர்வேஸ்வரனைச் சரணடைந்தான். 

அந்த நாள், சந்திரன் தேய் பிறையான - திரயோதசி.

சந்திரனைத் தேற்றிய பரமேஸ்வரன் - அவனது கலையினைத் தன் ஜடா மகுடத்தில் தரித்துக் கொண்டார். சந்த்ர சேகர மூர்த்தியாகத் திருக்காட்சி நல்கினார். 

ஆனாலும்  தட்சன் வழங்கிய சாபத்தின் படியே தேய்ந்தான்.  உலகோர் பார்வையிலிருந்து மறைந்தான். 

சந்திரன் தேய்ந்தான் - மாய்ந்தான்!.. என - தட்சன் இறுமாந்திருந்த வேளையில், ஐயனின் வரப்ரசாதத்தினால் வளர்ந்தான். பொன்னொளி கொண்டு பொலிந்தான். 


அந்த வளர்பிறையின் மூன்றாம் கலையினைத் தான் அம்பிகை, தனது பங்கிற்கு - ஜடாமகுடத்தில் சூடிக் கொண்டாள். சந்த்ர கலாதரி என நின்றாள் ஈஸ்வரி. 

சந்த்ர சடாதரி - என அபிராமவல்லியைப்  புகழ்கின்றார் பட்டர்.

இப்படிச் சிறப்புடைய இந்த நாள் தான் அக்ஷய திரிதியை!.. 

இந்நாள் தான்,  பின்னால் - பல சிறப்புகளுக்குக் காரணமான பொன்னாள்!..

எனினும், பொன்னால் மட்டுமே நம்மை நாம்- வளப்படுத்திக் கொள்வதற்கான நன்னாள் அல்ல இது!.. 

அக்ஷய திரிதியை நாளில் செய்யும் செயல் ஒன்றுக்குப் பத்தாகப் பெருகும் என்பது உண்மையே!.. 

எனினும், செல்வ அபிவிருத்தி ஒன்றே  நோக்கம் அல்ல!.. புண்ணியத்தைப் பெறுவதும் அதனைப் பன்மடங்காகப் பெருக்குவதும் தான் அடிப்படை!..


நாம் வாழ - நமக்குத் தேவை பொருட்செல்வம்!.. அதைக் கொண்டு -  நம்மால் பிறரும் வாழ வேண்டும். அதற்குத் தேவை - அருட்செல்வம்!..

அதற்காகவே - பலவிதமான தான தர்மங்கள்!..  இறை வழிபாடுகள்!..

ஆணவத்தினால் கனம் கொண்டிருந்த நான்முகப் பிரம்மனின் ஐந்தாவது சிரம் அறுபட்டதுடன் - வைரவக்கோலங் கொண்டிருந்த பரமனின் கரத்திலேயே ஒட்டிக் கொண்டது. 

அது கழன்று விழ வேண்டும். எப்படி!.. ஆணவம் அற்ற எவரும் இடும் பிட்சையினால் தான் அது சாத்தியம். 

அப்படிப்பட்ட எவரும் அண்ட பகிரண்டம் எங்கும் காணப்படவில்லை. 

தலை போன வேதனையிலும் நான்முகன் நகைத்தான். ''..வேதியனின் தலை பறித்த விமலனே!.. இது தான் உமக்குக் கதி!..'' -  என்று. 


அப்போது தான் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி - அன்னபூரணியாக வந்து ஐயனின் கபாலத்தில் பிட்சை இட்டாள். கரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த கபாலம் கழன்று கங்கையில் வீழ்ந்தது. 

எனினும், அன்னை காளி என வந்த போது - அதே பிரம்ம கபாலத்தினைத் தன் திருக்கரத்தில் கொண்டவளாக விளங்கினாள். 

''..அது ஏன்?..'' எனக்கேட்டு சப்தரிஷிகளும் தாள் பணிந்து நின்றனர். அம்பிகை புன்முறுவலுடன் சொன்னாள். 

''..ஆணவங்கொண்டோர் கண்டு திருந்துதற்கு!..'' - என்று.

இப்படி,  படியளக்கும் பரமனின் கரத்திலிருந்த பிரம்ம கபாலம்  - அன்ன பூரணியாகி அம்பிகை இட்ட பிட்சையினால் நிறைந்த நாள் - 

அக்ஷய திரிதியை!..

பழந்துணியில் முடிந்து கொண்டு வந்த அவலை வழங்குவதற்கு  - குசேலன் வெட்கப்பட்டுக் கொண்டிருக்க - எல்லாம் அறிந்த எம்பெருமான் - அதனை விருப்புடன் வாங்கி உண்டு - குபேர சம்பத்தைப் பிரசாதித்த நாள்  - 

அக்ஷய திரிதியை!.. 

இந்த நன்னாளில் - இல்லத்தில் மங்கலகரமாக பூஜை செய்வதுடன், ஆலய தரிசனம் செய்வது மிக மிக சிறப்பு. சகல தேவகடாட்சமும் கிட்டும். 


தங்கம் தான் வாங்க வேண்டும் என்று, எங்கும் சொல்லப்படவில்லை. 

அக்ஷய திரிதியை அன்று செய்யப்படும் எந்த ஒரு நல்ல காரியமும் அதிக பலன்களைத் தரும். இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும்  இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் - என்று விளம்பரம் செய்கின்றனர். 

அதன்படி குளிர் சாதனப்பெட்டி ஒன்று வாங்கலாம். அது எப்போதும் நிறைந்திருக்கும் தான். ஆனால் - அதனால் விளைவது அனைத்தும் நன்மையா!.. 

ஒரு கிராம் அளவாவது பொன்நகை வாங்குங்கள் என்று புன்னகையுடன் நம்மைத் தூண்டுகின்றார்கள். 

ஆனால் - அது அனைவராலும் முடியாதே!.. 

தங்க நகையினை வாங்கச் சொல்பவர்கள் -  தான தர்மங்களை செய்யும்படி - நம்மைத் தூண்டுவதில்லை!.. 

நாம் - தான தர்மம் செய்வதனால் அவர்களுக்கு என்ன பயன்?. ஒன்றும் இல்லை. அதனால் தான்!.. 

தங்கம் வாங்க இயலவில்லையா!.. மனம் தளர வேண்டாம்.


அனைவராலும் வாங்க முடிந்த எளிமையான மங்கலகரமான பொருள் - உப்பு!.. 

இது மகாலக்ஷ்மியின் அம்சம்!.. மகாலக்ஷ்மியின் தாய் வீட்டுச் சீதனம்!.. 

பொருள் வசதியிருந்தால் - வீட்டிற்கு அருகில் உள்ள விநாயகருக்கு அக்ஷய திரிதியை அன்று அபிஷேக ஆராதனை அலங்காரம் செய்விக்கலாம். 

தரிசனம் செய்ய வரும் அன்பர்களுக்கு - சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், தயிர் சோறு, எள் சோறு - என அன்னதானம் செய்யலாம். 

மேலும், தானம் செய்வதற்கு உகந்தவை - நெல் , அரிசி, துவரை, உளுந்து, பச்சைப் பயறு, கோதுமை, நல்லெண்ணெய்.

ஏழைக் குழந்தைகளுக்கு சர்க்கரை கலந்த பால் வழங்கலாம். ஏழை தம்பதியர்க்கு உணவு வழங்கி வஸ்திர தானம் செய்யலாம். ஏழை மாணவரின் கல்விக்கு உதவலாம். 

ஏழை நோயாளிகளுக்கும் பார்வையற்றவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் உதவலாம். ஆதரவற்ற பிள்ளைகளுக்கும் முதியவர்களுக்கும் உதவலாம். 

பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவளிக்கலாம். 


அக்ஷய திரிதியை - அள்ள அள்ளக் குறையாத வளம் சேரும் தான். எனினும், 

பொருள் ஒருநாள் தீர்ந்து போகும். நம்முடன் வருவதும் இல்லை!.. 
அருள் ஒன்று தான் சேர்ந்து வரும்.  நம்முடன் சேர்ந்தும் வரும்!..

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி.

14 கருத்துகள்:

  1. அள்ள குறையாத அட்சய பாத்திரமாய் அருமையான கருத்துகள்..பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. அருமையாக அக்ஷயதிரிதியைப் பற்றி சொன்னீர்கள்.அருள் ஒன்று தான் சேர்ந்து வரும் என்பது உண்மை. இருப்பவருக்கு கொடுப்பதை விட இல்லாதவருக்கு கொடுப்பதே நல்லது.
    வெள்ளிக்கிழமை உப்பு வாங்குவது நல்லது என்பார்கள் அதுவும் அக்ஷயதிதியை வெள்ளி வருகிறது உப்பு வாங்கி மகிழ்வோம்.
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      வறியவர்க்கு ஒன்று ஈவதே ஈகை - திருவள்ளுவரின் வாக்கு!..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  3. அக்ஷயத் திரிதியைப் பற்றிய செய்திகள் அத்தனையும் அருமை. அருள் ஒன்று தான் நம்மோடு சேர்ந்து வரும் என்பதில் ஐயமில்லை. அதனால் முடிந்த வரை தான தருமங்கள் செய்து கொஞ்சமாவது அருள் சேர்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      உண்மைதான். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  4. மிகவும் சரியான விளக்கங்கள்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  5. என்னதான் விளக்கங்கள் சொன்னாலும் இன்றைய மாந்தர் நினைவுக்கு அக்ஷய திரிதியை பொருள் வாங்க நல்ல நாள் என்றே எண்ணம் இருக்கிறது. அதுமட்டுமல்ல இதற்கு வேறு பின்னணியும் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள உங்கள் இந்தப் பதிவு உதவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      வசதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆடம்பர மோகம் வேண்டாம் என்பதே பணிவான எண்ணம்.
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..ஐயா!..

      நீக்கு
  6. அக்ஷய திருதியை என்றாலே நகை வாங்குவதுதான் என்றாகி விட்ட இத்தருணத்தில், ஓர் அருமையான பதிவு ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி!...

      நீக்கு
  7. அருமையான தகவல்கள்....

    சில வருடங்களாகத் தான் இந்த நாளில் தங்கம் வாங்குவது அதிகமாகி விட்டது..... விளம்பரங்களும் காரணம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..