நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 03, 2023

நகர் வலம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 17
ஞாயிற்றுக்கிழமை



ரயில் நிலையத்தின் பழைமையான விநாயகர் கோயில்..


அரசமரத்தின் கீழிருந்த சிறிய கோயில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணி செய்யப்பட்டது..


கீதா அக்கா அவர்கள் இந்தக் கோயிலை நினைவு வைத்திருந்து முன்பொரு பதிவில் கேட்டிருந்தார்கள்..




நிலையத்தில் சீரமைப்புப் 
பணிகள் தொடங்கப்பட்டுள்ளன..


பழைமை மாறாமல் இருக்கின்ற நடைமேடை




பழைமையான அறிவிப்புகள்





கீழ் நடைவழி












மறுபடியும்
நகர் வலம் வந்தபின்
 வேறொரு பதிவில் சந்திப்போம்..
**
வாழ்க நலம்
***

சனி, டிசம்பர் 02, 2023

அறம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 16
சனிக்கிழமை


அறத்தின் வழி நின்ற அன்பர்களை ஈசன் ஆட்கொண்டது அன்னதானத்தின் அடிப்படையில் தான்..

உலகுக்கு நாம் ஒன்றை வழங்கினால் நமக்கென ஒன்றை ஈசன் வழங்குவான் என்பதற்கு உதாரணமே ஔவையாருக்கு வழங்கப்பெற்ற சுட்டபழம்..

உணவு வழங்குதல் முப்பத்திரண்டு அறங்களுள் ஒன்று..

வேறு வழியில்லாதோர் உண் பொருளை விற்று பொருள் ஈட்டி தம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்..

ஆனால்,
உணவு விற்பதையே நிரந்தர வழியாகக் கைக்கொள்வது தகாது என்பதே ஆன்றோர் வாக்கு..

இதுவே மதுரையில் வந்தியம்மை பிட்டு விற்றதன் அடிப்படை..

வைகையின் கரை அடைபட்டதற்குக் காரணம் வந்தியம்மையின் பிட்டு..

கிழங்கோ கிழங்கு - என்று கூடையைத் தூக்கிக் கொண்டு சரஸ்வதியம்மை வீதியில் வந்தது நினைவுக்கு வருகின்றதா!..

கனகதாரையின் மூலகாரணம் உலர்ந்த நெல்லிக்கனி..

முதல் நாள் வயலில் விதைக்கப்பட்ட நெல்லை நள்ளிருள் பொழுதில் திரட்டி வந்து இடித்து சோறாக்கி இட்டவர் - இளையான்குடி மாறன்..


நண்பகலில் வீடு தேடி வந்த முதியவருக்கு தயிரன்னத்துடன் மாம்பழத்தை வழங்கி சிவமுக்தி அடைந்தவர் காரைக்கால் அம்மையார்..

முன்னிரவில் பசி என்று வந்த பெரியவருக்கு பச்சரிசி இடித்து பயற்றம் பருப்பு சர்க்கரை சேர்த்து ஈர அடுப்பை மூட்டி பக்குவப்படுத்தி - ஏழை சேந்தனாரின் மனைவி வழங்கியதே திரு ஆதிரைக் களி..

யாருமே செய்யத் துணியாதபடிக்கு அமுது படைத்தவரே பெருந்தொண்டராகிய சிறுத்தொண்டர்..

அடியார்க்கு அன்னம் ஈவது புண்ணியம்.. 

அதனால்தான் சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளின் பசி தீருவதற்காக ஈசன் திருக்கச்சூரில் இரந்து இட்டார்.. விருந்து இட்டார்..

ஸ்ரீ வாரியார் ஸ்வாமிகளின் அறவுரை இது..

உணவை வழங்கியவர் - " என்ன பெரிதாக செய்து விட்டோம்.. "  என்றிருக்க வேண்டும்.. 

உணவை உண்டோர்  - " இதற்கு என்ன கைம்மாறு செய்வது.. " என்றிருக்க வேண்டும்..

இப்படியான நிலையில் அறச்சாலையில் உணவு உட்கொண்டவர்கள் தம்மால் ஆனவற்றை அந்த அறச்சாலைக்குச் செய்தனர்..

அவை உடல் உழைப்பாகவோ அல்லது பொருள் உதவியாகவோ அமைந்தது..

அப்படியான நிலை - இன்று இல்லாமல் போனது.. 

உணவு வணிகம் என்பது பலரையும் அச்சுறுத்துவதாக அமைந்து விட்டது..





சைவ உணவகங்களில் கூட பல நிலைகளிலும் உணவில் அலட்சியமும் சீர்கேடும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பது உண்மை.. 


இப்படியான செய்திகளை வெளியிடுகின்ற நாளிதழ்கள் தொடர்புடைய  உணவகத்தின் பெயரை வெளியில் சொல்வதில்லை என்பது கூடுதல் சிறப்பு!..

இதுவே கலியின் லீலை.. 

இதிலிருந்து நம்மை நாமே மீட்டுக் கொள்ள வேண்டும்..


அதற்கான வலிமையை - வைத்யநாதனும் தையல்நாயகியும் நமக்கு அருள வேண்டும்..


காக்க காக்க கனக வேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க..
**
ஓம் நம சிவாய 
சிவாய திருச்சிற்றம்பலம்
***

வெள்ளி, டிசம்பர் 01, 2023

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 15
வெள்ளிக்கிழமை

இன்று
பொதுத் திருப்புகழ்
( அகத்துறை பாடல்)


தானந்த தானத்தம் ... தனதான
 
நீலங்கொள் மேகத்தின் ... மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் ... டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் ... மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் ... தருள்வாயே..

வேல்கொண்டு வேலைப்பண் ... டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் ... குலகாலா
நாலந்த வேதத்தின் ... பொருளோனே
நானென்று மார்தட்டும் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


நீல நிற மேகத்தைப் 
போன்று விளங்கும் மயிலின் மீது
நீ எழுந்தருளிய அழகைக்
 கண்டு மயங்கி

பேதைப் பெண்ணாகிய நான் 
உன்னிடம் மையல்
கொண்டேன்.. 

(எனது மயக்கம் தீரும்படிக்கு)
அழகிய உனது மார்பில் விளங்கும் 
நறுமணம் மிக்க மலர் மாலையைத் தந்து 
அருள் புரியமாட்டாயா..

சூரசங்கார காலத்தில்
பெருங்கடல் வற்றிப் 
போகும்படிக்கு உனது 
வேலினை எறிந்தவனே..

வீரமுடைய அசுர குலத்திற்கு 
யமனாக விளங்கியவனே..

நான்கு வேதங்களுக்கும் 
உட்பொருளாக விளங்குகின்றவனே..

எல்லா உயிர்களிலும் 
உள் நிறைந்து 
இருப்பவன் நான் - என்ற 
பெருமையுடன் மார்தட்டிக் 
கொள்ளும் பெருமாளே!..

முருகா.. முருகா..
முருகா.. முருகா..
 
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வியாழன், நவம்பர் 30, 2023

திங்களூர் 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 14
வியாழக்கிழமை


 
திங்களூர் ஸ்ரீ கயிலாயநாதர் கோயிலுக்கு அருகே ஸ்ரீ மூங்கில் அமர்ந்தாள் ஈஸ்வரி எனும்  பெயருடன்  திருக்கோயில்..

குல தெய்வக் கோயிலாக நிர்வகிக்கப்படுகின்றது..



இக்கோயிலுக்கு முன்பாக ஸ்ரீ கருப்ப ஸ்வாமி பீடங்கள்..

பெரிய அளவிலான இரண்டு அரிவாள்கள்  ஒரு மாத்தடி ஆகியன கிழக்கு நோக்கி இருக்கின்றன.. பீடத்தில்  கருப்பர், சங்கிலி கருப்பர் என பெயர்கள் ..


தெற்கு நோக்கி விளங்கும் பீடத்தில் 
ஒரு அரிவாள்  ஒரு சூலம் ஒரு வாள் ஆகியன 
முன்னோடி கருப்பர், வீரன் என்ற பெயர்கள்..



இக்கோயிலில் சப்த மாதர் எனும் நவ கன்னியர் மூலஸ்தானத்தில் வீற்றிருக்க 
ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பாப்பாத்தியம்மன், ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ பட்டவர்  - என சந்நிதிகள் உள்ளன..
















பெரிய வேம்பும் மணி மண்டபமும் அணி செய்கின்றன..

திருக்கோயில் உச்சிப் பொழுதில் மட்டுமே திறக்கப்படுகின்றது.. 


திரளான பெண்கள் கோயிலின் உள்ளிருந்ததால் உட்புறத்தில் படம் பிடிக்கவில்லை.. 


நவ கன்னியர் திருவடிகள் போற்றி..

ஓம் சக்தி ஓம்

ஓம் சிவாய திருச்சிற்றம்பலம்
***