நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, டிசம்பர் 30, 2023

தமிழமுதம் 14

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 14
சனிக்கிழமை

 குறளமுதம்

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.. 77
**

ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை


உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்  செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற்பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்  தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்  நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்..14
**

நங்கையே.. உங்கள் வீட்டுத் தோட்டத்துக் குளத்தில் செங்கழுநீர்ப் பூ மலர்ந்து ஆம்பல் கூம்பி விட்டதைப் பார்ப்பதற்காவது எழுந்து வா..

தவமுடையார்கள் பல் துலக்கிக் குளித்து செங்கற் பொடி நிற  ஆடையுடன் திருக்கோயிலில் சங்கொலிப்பதற்குச்
செல்கின்றனர்..

அதிகாலையில் வந்து எங்களை  எழுப்புவேன் என்று 
சொன்னவளே.. நாணமில்லா நாவினை உடையவளே.. எழுந்து வருவாயாக..

சங்கொடு சக்கரம் ஏந்திய தடக்கையனை தாமரைக் கண்ணனைப் பாடிப் பரவுவோம்!..
**

திருப்பாசுரம்


இறையும் நிலனும்  இருவிசும்பும் காற்றும்
அறைபுனலும் செந்தீயும் ஆவான் பிறைமருப்பின்
பைங்கண்மால் யானை  படுதுயரம் காத்துஅளித்த
செங்கண்மால் கண்டாய் தெளி.. 2110
-: பொய்கையாழ்வார் :-
**

சிவதரிசனம்
தேவாரம்
திருக்கடைக்காப்பு


மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை
புரிந்துகேட்கப் படும் புண்ணியங்கள் இவை
திருந்துதேவன் குடித் தேவர் தேவெய்திய
அருந்தவத் தோர் தொழும் அடிகள் வே டங்களே.. 3/25/1
-: திருஞானசம்பந்தர் :-
**

போற்றித்
திருத்தாண்டகம்
(திரு ஆரூர்)


மலையான் மடந்தை மணாளா போற்றி
மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
நிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி
நெற்றிமேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி
இலையார்ந்த மூவிலைவேல் ஏந்தீ போற்றி
ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி
சிலையால் அன்றெயில் எரித்த சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.. 3
-: திருநாவுக்கரசர் :-
**

திருவாசகம்


அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.. 3
-: மாணிக்கவாசகர் :-
**

தொகுப்பிற்குத் துணை

நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**

தஞ்சையில் உயிர் காக்கும் பாரம்பரிய உணவுத் திருவிழா..

எவ்வித செயற்கை கலப்பும் இல்லாத நூறு சதவீத சுத்த சித்த சைவ உணவுகள்..

நுழைவுக் கட்டணம் இன்றி நடைபெறுகின்றது..

பார்வையாளர்களுக்கு எவ்வித கட்டணமும் இன்றி பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட உள்ளன..

30 டிச 2023, 30 டிச 2023
1 ஜன 2024 
ஆகிய மூன்று நாட்களும்
காலை 11.30 முதல்  இரவு 10 மணி வரை நடைபெற இருக்கின்றது..

தஞ்சை - மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள கந்தசரஸ் மஹாலில் - 
உணவியல் கண்காட்சியுடன்
நூற்று முப்பதுக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகளின் கண்காட்சியும் நடைபெறுகின்றது..
**
ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

4 கருத்துகள்:

 1. //அதிகாலையில் எழுந்து எங்களை எழுப்புவேன் என்று சொன்னவளே...//

  இரவு ரொம்ப எல்லாம் செல்போனில் கண்ணன் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தாளோ...!

  அப்போதெல்லாம் உள்ளங்கையை உற்றுப் பார்த்தாலே காட்சி தெரியுமாம்.  சுபத்திரா கூட லேப்டாப்பில் அபிமன்யுவைப் பார்த்திருக்கிறார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாயா பஜார் திரைப்படத்தில் மடி கணினி வரும்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. பாடல்களை பாடி இறைவனை வணங்கி கொண்டேன், படங்கள் அருமை.
  உணவு திருவிழாவில் கலந்து கொண்டு அங்கு எந்த விதமான பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டது என்று அறிந்து கொள்ள ஆவல். அதை பதிவு செய்து விடுங்கள். மூலீகை செடிகள் கண்காட்சி நல்லது, பேர், பயன்கள் தெரிந்து கொள்ள உதவும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக...

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..