நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 10, 2023

முத்தாரம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 
ஞாயிற்றுக்கிழமை

வித்தகப் பதிவரான
ஸ்ரீமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்களது தளத்தில் நவம்பர் 30 அன்று
வெளியாகியிருந்த பதிவு..

காரைக்குடி முத்தாளம்மன் கோயில்

அந்தப் பதிவில் இருந்து தோன்றிய பாடல் இது..

கைத்தலபேசியில் இருந்து வலைத் தளப் பதிவுகளை ஒழுங்கு செய்வது சிரமம்..

எனவே சற்று தாமதம் ஆயிற்று..

நல்லதொரு பதிவினை அளித்த ஸ்ரீமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்களுக்கு நன்றி..

ஸ்ரீ முத்தாளம்மன் அனைவருக்கும் 
நலம் அருள்வாளாக..

முத்தாரம்


அத்தாளம் இட்டெங்கும்
அங்கம் புரண்டாலும்
இத்தாளம் இட்டெங்கும்
எதிரொலித்து நின்றாலும்

கற்றாரும் கனிந்தாரும்
கசிந்துருகும் நாயகியே
பொற்றாரும் பொன்னடிகள்
போற்றுவதும் புண்ணியமே..

எத்தாளம் இசைத்தாலும்
எழுந்து வரும் பேரரசி
முத்தாளம் பேரைச் சொல்ல
முகிழ்த் தருளும் எழிலரசி..

கைத்தாளம் வாழ்வினிலே
காற்றோடு கலந்து விட
முத்தளம்மா வருவாய்
வருவாயே நீமகிழ்ந்து..

அத்தாழம் பூ வைத்து
அடிமலர்கள் போற்றிடவே
வித்தாரம் தாரும் அம்மா
வினைதீர்க்கும் நாயகியே...

பெற்றாலும் வளர்த்தாலும்
பேணியெனைக் காத்தாலும்
கற்காமல் திரிந்தஎனை
கனிவுடன் காத்தவளே..

முத்தாடும் மொழிகொடுத்து
முன்னிருந்து பார்த்தவளே
வெற்றாடி வீழாமல்
வெற்றி நலம் சேர்த்தவளே..

முத்தாளம்மா உனக்கு
முத்தாரம் சூட்டுதற்கு
முந்திவரும் தமிழெடுத்து
சிந்தையிலே தொடுத்தேனே..

சிந்தையினைத் தொடுந்தேனே
சீர் கொண்டு துதித்தேனே..
முந்தை வினை வீழ்ந்திடவே
நேர் நின்று அருள்வாயே..


பொற்றா மரைப் பாதம்
புரிந்த நலம் ஆயிரமாய்
பெற்றாளும் பேச்சியம்மன்
பேசு மனம் தாயெனவாய்..

எட்டான திசைகொண்டு
என்றென்றும் காப்பவளே..
கட்டான வினை என்ற
காரிருளைத் தீர்ப்பவளே..

உற்றாலும் உகந்தாலும்
திருமுகமே நானறிய
நற்றாளும் நல்கிஎனை
நன்றாய் நீ காத்திடம்மா..
**

ஓம் சக்தி ஓம் 

ஓம் சிவாய 
திருச்சிற்றம்பலம்
***

5 கருத்துகள்:

 1. அற்புதம். அம்மா காத்தருள்வாய் எங்களை.

  பதிலளிநீக்கு
 2. ஞாயிறு அன்னையின் பாமாலை அருமை.
  கவிதையை படித்து முத்தாளாம்மனை வேண்டிக் கொண்டேன்.
  முத்தாளாம்மன் எல்லோருக்கும் எல்லா நலங்களையும் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. முத்தாளம்மன் பாடல் அருமை.
  அவள் பாதம் பணிவோம்.

  பதிலளிநீக்கு
 4. ஓம் நமசிவாய
  வாழ்க வையகம்

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..