நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 05, 2023

ஸ்ரீ பைரவர்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 
செவ்வாய்க்கிழமை
தேய்பிறை அஷ்டமி


சிவபெருமானின்
அறுபத்து நான்கு திருத்தோற்றங்களுள் . வைரவத் திருக்கோலமும் ஒன்று.. 

தமிழில் வயிரவர் என்பது மரபு..

ஆதியில் 
ஐந்து முகங்களுடன் அகந்தை கொண்டு பேசிய பிரம்மனைத் தண்டிப்பதற்காக ஈசனின் உக்ரம் அவரது மேனியில் இருந்து அக்னிப் பிழம்பாக வெளிப்பட்டது.. 

அந்த ஜோதியே ஸ்ரீ வைரவ மூர்த்தி..

இதனை அப்பர் ஸ்வாமிகள் அருளியச் 
செய்த திருப்பாடலின் வழியே அறியலாம்.. 

இதுவே நமக்குப் பிரமாணம்..


ஆதிக்கண் நான்முகத்தில் ஒன்று சென்று
    அல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளால்
சேதித்த திருவடியைச் செல்ல நல்ல
    சிவலோக நெறிவகுத்துக் காட்டு வானை
மாதிமைய மாதொருகூறு ஆயி னானை
    மாமலர்மேல் அயனோடு மாலுங் காணா
நாதியை நம்பியை நள்ளாற் றானை
    நானடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த வாறே.. 6/20/1
-: திருநாவுக்கரசர்:-

ஸ்ரீ பைரவர்
பதினெட்டு வயதினராகத் திருத்தோற்றம்.. 
பன்னிரு திருக்கரங்கள் நாக யக்ஞோபவீதம் (பூணூல்).. சந்திரனைத் தலையில் சூடி - சூலம், பாசம், சங்கு சக்கரம், அங்குசம், தண்டம், உடுக்கை என ஏனைய ஆயுதங்களைத் தாங்கி நிர்வாணத் திருக்கோலம்.. 

இவர் திருத்தோற்றமுற்ற நாள் கார்த்திகை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி..

இவரே க்ஷேத்திரபாலகர்..
இவருக்கான பொழுது நள்ளிரவு..

ஸ்ரீ கபால பைரவர் - இந்த்ராணி
இந்தப் பொழுதிலேயே இவருக்கான சக்தி இவருடன் கூடுகின்றது.. 

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் அபிராமி அந்தாதி வழியாக இதனை உணரலாம்..


இவருக்கு அறுபத்து நான்கு திருக்கோலங்கள்.. 

பஞ்ச பூதங்களையும் எட்டு திசைகளையும்  நவ கிரகங்களையும் பன்னிரன்டு ராசிகளையும் அடக்கி ஆள்வதாக ஐதீகம்..
இவர் மார்த்தாண்ட பைரவர் என சூரியனுக்கு மேம்பட்டவராக ஜொலிக்கின்றார்.. இவரே சனைச்சரனுக்கு குரு.. 


எட்டு வாகனங்களுடன் கூடிய திருத்தோற்றங்களை திருநாகேஸ்வரம் - உப்பிலியப்பன் கோயிலை அடுத்துள்ள ஐவர் பாடி எனும் ஐயா வாடியில் அமைந்திருக்கும் ஸ்ரீ பிரத்யங்கிரா கோயிலில் சித்திர ரூபங்களாகத் தரிசிக்கலாம்..
 
தாருகாவனத்து முனிவர்கள் ஈசன் மீது ஏவி விட்ட அபிசார யானையை உரித்துப் போட்ட திருக்கோலமும் வைரவத் திருக்கோலமே என்கின்றது தேவாரம்.. 

அபிசார யானையை கிழித்து உரித்துப் போட்ட பின் கஜ சம்ஹார மூர்த்தி எனப் பெயர் கொண்டார் ஈசன்..
கஜ சம்ஹார மூர்த்தி
வம்பு பூங்குழல் மாது மறுகவோர்
கம்ப யானை யுரித்த கரத்தினர்
செம்பொ னாரித ழிம்மலர்ச் செஞ்சடை
நம்பர் போல்திரு நாகேச் சரவரே..5/52/6
-: திருநாவுக்கரசர் :-

கஜ சம்ஹார நிகழ்வு தேவாரத் திருப்பதிகங்கள் பலவற்றிலும் பேசப்படுகின்றன..

பைரவரின் பிரதான திருத்தலம் காசியம்பதி..

தமிழகத்து சிவாலயங்களில் பொதுவாக ஈசானிய மூலையில் மேற்கு முகமாக திகழ்பவர்..

தல விசேஷங்களைப் பொருத்து தெற்கு முகமாக விளங்குவதும் உண்டு..

பட்டுக்கோட்டையை அடுத்த தாமரங்கோட்டை தஞ்சையை அடுத்த திட்டை  தலங்களில் தெற்கு முகம்... இன்னும் சில தலங்கள். பெயர் நினைவில் இல்லை..

தேவாரத்தில் வயிரவர் என்று திருப்பெயர் பயின்று வருவது திருச்சேறை திருப்பதிகத்தில் மட்டுமே!..

விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமரு கங்கை
தரித்ததோர் கோல கால பயிரவன் ஆகி வேழம்
உரித்துமை யஞ்சக் கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே..4/73/6
-: திருநாவுக்கரசர் :-

திருப்பத்தூர் யோக பைரவர் செட்டிநாட்டு வயிரவர் கோயில்கள் சிறப்பு.. அண்ணாமலை வயிரவன் பழனியப்பன் என்னும் பெயர்கள் செட்டி நாட்டின் சீதனம்..

அட்ட் வீரட்டங்களுள் முதலாவதான
திருக்கண்டியூர் வீரட்டம் தஞ்சைக்கு அருகில் உள்ளது (ஆறு கிமீ)..


கும்பகோணம் - பட்டீஸ்வரத்தின் வயிரவத் திருமேனி வனப்பு மிக்கது..
பைரவரின் வாகனங்களாக 
ரிஷபம், யானை, சிங்கம், குதிரை, கருடன், மயில், அன்னம், நாய் -
குறிப்பிடப்படுகின்றன.

பைரவ வழிபாடு உடையவர்கள் எதற்கும் அஞ்ச வேண்டியது இல்லை.. ஆனாலும் விதி யாரையும் விடுவதில்லை!..

எனினும்
நம்மிடம் நியாயம் இருப்பின் - நமது விருப்பங்களை ஏற்று
ஸ்ரீ வயிரவ மூர்த்தி காத்தருள்வார்..

தியான ஸ்லோகம்

ஸ்ரீ பைரவர்
பட்டீஸ்வரம்
ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம்
ஹஸ்தே சூல கபால பாச டமருகம்
லோகஸ்ய ரக்ஷா கரம்
நிர்வாணம் ஸுநவாகனம்
திரிநயனம் ச அனந்த கோலாகலம்
வந்தே பூத பிசாச நாத வடுகம்
ஷேத்ரக்ஷ்ய பாலம் சிவம்

ஓம்
ஸ்வான த்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி 
தந்நோ: பைரவ ப்ரசோதயாத் 

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

 1. கார்த்திகை தேய்பிறை அஷ்டமி இல் அவதரித்த வைரவர் திருக்கோலங்கள் கண்டு வணங்கினோம்.

  ஓம் பைரவாய நமக.

  பதிலளிநீக்கு
 2. கார்த்திகை தேய்பிறை அஷ்டமி மிகவும் சிறப்பு. பைரவர் பாடல்கள், படங்கள் போட்டு பதிவு சிறப்பாக இருக்கிறது.

  பைரவர் பாடல்களை பாடி இறைவனை வேண்டிக் கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 3. இப்படியான கார்த்திகை தேய்பிறை அஷ்டமியில்தான் தங்கை, அவள் மகளுடன் திருப்பத்தூரைச் சுற்றி - யோகபைரவர், பைரவ தலங்களுக்குப் போய் வந்தோம் பரிகாரங்கள் என்று. பதிவும் போட்டிருந்தேன்.

  படங்களும் தேவாரப் பதிகங்களும் சிறப்பு துரை அண்ணா.

  கீதா

  பதிலளிநீக்கு
 4. ஓம் நம சிவாய
  வாழ்க வையகம்

  பதிலளிநீக்கு
 5. விளக்கங்கள் அருமை...

  ஓம் நம சிவாய...

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..