நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், அக்டோபர் 31, 2022

முருகா சரணம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 14
திங்கட்கிழமை

திருக்கயிலாயம், 
காளத்தி, தில்லை, 
பவானி, தஞ்சை, 
திருச்செந்தூர் - என
சஷ்டிப் பதிவுகளின்
நிறைவாக
மாமதுரைத் திருப்புகழ்


தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ... தனதான

ஆனைமுக வற்கு நேரிளைய பத்த 
ஆறுமுக வித்த ... கமரேசா

ஆதியர னுக்கும் வேதமுதல் வற்கும் 
ஆரணமு ரைத்த ... குருநாதா

தானவர் குலத்தை வாள்கொடு துணித்த 
சால்சதுர் மிகுத்த ... திறல்வீரா

தாளிணைக ளுற்று மேவியப தத்தில் 
வாழ்வொடு சிறக்க ... அருள்வாயே

வானெழு புவிக்கு மாலுமய னுக்கும் 
யாவரொரு வர்க்கு ... மறியாத

மாமதுரை சொக்கர் மாதுமை களிக்க 
மாமயில் நடத்து ... முருகோனே

தேனெழு புனத்தில் மான்விழி குறத்தி 
சேரமரு வுற்ற ... திரள்தோளா

தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை 
வேல்கொடு தணித்த ... பெருமாளே..
-: ஸ்ரீ அருணகிரிநாதர் :- 
நன்றி: கௌமாரம்


யானைமுக விநாயக மூர்த்திக்கு நேர் இளையவனாகத் தோன்றிய அன்பனே,

ஆறுமுகமான ஞான வித்தகனே, தேவர்களின் இறைவனே,

ஆதியில் சிவபெருமானுக்கும்
வேத முதல்வன் பிரமனுக்கும் வேத மந்திரத்தை உபதேசித்த குருநாதனே,

அசுரர் குலத்தை வாளினால் வெட்டி வீழ்த்திய
பராக்கிரமனே,

உன்னிரு திருவடிகளிலும் மனம் பொருந்தி நல்வாழ்வுடன் நான் சிறந்து விளங்குதற்கு அருள் புரிவாயாக..

வானும் புவி ஏழும் திருமாலும் பிரம்மனும்
வேறு எவரும் அறிய முடியாத

மாமதுரைத் தலத்தில்
சொக்கேசப் பெருமானும், உமையாம்பிகையும் மகிழும்படி அழகிய மயிலின் மீதமர்ந்து அதனை நடத்தும் முருகனே,

தேன் ததும்பும்  தினைப் புனத்தில் மான்விழிக் குறத்தி வள்ளி நாயகி உன்னைச் சேரும்படி அவளை அணைத்திட்ட திண் தோள்களை உடையவனே,

தேவர்களது மனதில் சூரனைப் பற்றித் தோன்றியிருந்த அச்சத்தை வேலாயுதத்தால் அழித்திட்ட பெருமாளே..
***

மயில் வாகனனே சரணம் சரணம்
மாநகர் மதுரை அழகா சரணம்
சோம சுந்தர சுதனே சரணம்
சுந்தரி மீனாள் குமரா சரணம்
குஞ்சரி தொழுதிடும் குகனே சரணம்
வள்ளி அணைந்திடும் வாழ்வே சரணம்
அன்பர் வணங்கிடும் அமுதே சரணம்
அருள்வாய் அருள்வாய் சரணம் சரணம்..
***

ஞாயிறு, அக்டோபர் 30, 2022

சஷ்டி 6


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 13
ஞாயிற்றுக்கிழமை
சஷ்டி ஆறாம் நாள்

சூர சங்காரத் திருவிழா


திருச்செந்தூர் திருப்புகழ்

தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந்
தந்ததன தந்தனந் ... தந்ததானா

தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி லம்புடன் ... கொஞ்சவேநின்

தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம ணைந்துநின் ... றன்புபோலக்

கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங
கஞ்சமலர் செங்கையுஞ் ... சிந்துவேலும்

கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
கண்குளிர என்றன்முன் ... சந்தியாவோ

புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் ... கொண்டபோது

பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் ... சிந்தைகூரக்

கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் ... கந்தவேளே

கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
கும்பமுனி கும்பிடுந் ... தம்பிரானே..
-: ஸ்ரீஅருணகிரிநாதர் :- 
நன்றி : கௌமாரம்


தண்டை, வெண்டையம், கிண்கிணி, சலங்கை, தண் கழல், சிலம்பு - எனும் அனைத்து அணிகலன்களும் உனது திருவடிகளில்  ஒலித்துக் கொஞ்சிட

தந்தையை அன்புடன் வலம் வந்து
மகிழ்ச்சியுடன் அணைந்து நின்ற அந்த அன்பினைப் போல உன்னைக் கண்டு மனம் ஒன்றுபட,

கடம்ப மாலையும், அழகிய மணிமுடிகளும், தாமரை மலர் போன்ற சிவந்த கரமும் அதில் அழகு சிந்தும் வேலும்,

பன்னிரு விழிகளும் நிலவின் ஒளி போல அழகு ததும்பும் அறுமுகங்களும்,

எனது கண்கள் குளிரும்படிக்கு
எந்தன் முன்பாக வந்து தோன்ற மாட்டாதோ?..

தாமரையில் தோன்றிய பிரம்மனின் உலகமும்,
அது கொண்டு விளங்கும் ஏனைய அண்டங்களும்,
மகிழ்ச்சியடையும்படி போர்க்களத்திற்கு நீ சென்ற போது,

பொன்மலை எனும் படி அழகில் சிறந்து
எல்லாத் திசைகளிலும் நிறைந்து நின்று
தாமரைக் கண்ணனாகிய நாரணனும் சிவ பெருமானும்
மகிழும்படிக்கு திருப்பதங்கள் பதித்து நீ ஆடிய நடனத்தைப் போல  

திருச்செந்தூர் எனும் இந்தத் தலத்தில்,

அடியவனாகிய எந்தன் முன் கொஞ்சி நடனம் செய்கின்ற - மன்மத ஸ்வரூபனாகிய கந்தப் பெருமானே..

சந்தன மணம் கொண்ட குறமங்கை வள்ளி நாயகியின் தனங்களில் அணைந்தவனே..

கும்பத்தில் தோன்றிய  அகத்திய முனிவர் வணங்கிப் போற்றுகின்ற தம்பிரானே..
*
கீழுள்ள காணொளி
கந்தன் கருணை திரைப்படத்தில் இருந்து..



குஞ்சரி கொஞ்சிடும் குமரா சரணம்
கோலமயில் வள்ளி நாயக சரணம்
செந்திற் பதியின் அரசே சரணம்
செந்தமிழ்ச் செல்வா சரணம் சரணம்
***

சனி, அக்டோபர் 29, 2022

சஷ்டி 5


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 12
சனிக்கிழமை
சஷ்டி ஐந்தாம் நாள்


தஞ்சை திருப்புகழ்

தந்தன தானன ... தனதான
தந்தன தானன ... தனதான

அஞ்சன வேல்விழி ... மடமாதர்
அங்கவர் மாயையி .... லலைவேனோ
விஞ்சுறு மாவுன ... தடிசேர
விம்பம தாயரு ... ளருளாதோ

நஞ்சமு தாவுணு ... மரனார்தம்
நல்கும ராஉமை ... யருள்பாலா
தஞ்சென வாமடி ... யவர்வாழத்
தஞ்சையில் மேவிய ... பெருமாளே..
-: ஸ்ரீ அருணகிரிநாதர் :-
நன்றி: கௌமாரம்


வேல் போன்ற விழிகளில் மை எழுதியபடித் திரியும்  பெண்களின் அழகில் மயக்கம் கொண்டு அலைவேனோ?..

எனது புத்தி மேம்பட்டு  உனது திருவடிகளை யே நினைப்பதற்கு ஒளியாய்த் திகழ்ந்து  திருவருள் புரியக் கூடாதா?..

ஆலகால விஷத்தை அமுதமாக உண்ட சிவபெருமானுடைய திருக்குமரனே, 

உமையாள் பெற்றருளிய பாலகனே,

நீயே சரணம்!.. -  என, உளத்தில் கொண்டிருக்கும்  உனது அடியார்கள் வாழ்வதற்காக தஞ்சை மாநகரில் வீற்றிருக்கும் பெருமாளே!..

படங்களுக்கு நன்றி
முருகனடியார்கள் Fb






சேவற்கொடியுடை செல்வா சரணம்
செந்தூர் வேலா சரணம் சரணம் 
தஞ்சையின் தலைவா சரணம் சரணம்
தமிழே அமுதே சரணம் சரணம்
***

வெள்ளி, அக்டோபர் 28, 2022

சஷ்டி 4


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 11
வெள்ளிக்கிழமை
சஷ்டியின் நான்காம் நாள்


திருக்கூடல் (பவானி)
திருப்புகழ்

தனதான தானத் தனதான
தனதான தானத் ... தனதான

கலைமேவு ஞானப் பிரகாசக்
கடலாடி ஆசைக் ... கடலேறிப்

பலமாய வாதிற் பிறழாதே
பதிஞான வாழ்வைத் ... தருவாயே

மலைமேவு மாயக் குறமாதின்
மனமேவு வாலக் ... குமரேசா

சிலைவேட சேவற் கொடியோனே
திருவாணி கூடற் ... பெருமாளே..
-: ஸ்ரீ அருணகிரிநாதர் :-
நன்றி : கௌமாரம்


சகலவிதமான  நற்கலைகளுடன்
பேரொளியாகத் திகழும் ஞானக் கடலிலே குளித்து,

மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை எனும் மூன்று நிலைகளையும் கடந்து,

பலவிதமான சமய வாதங்களில் மூழ்கி மாறுபட்ட கருத்துகளுடன் கலங்கிக் கிடக்காமல்,

எம்பெருமானின் சிவ ஞான வாழ்வினை எனக்குத் தந்தருள்வாயாக.

மலையில் வாழ்கின்ற குறவர் தம் குலப் பெண்ணாகிய வள்ளியம்மையின் மனதிலே மருவிடும்
இளங்குமரனே,

அந்த வள்ளி நாயகிக்காக வில்லைக் கையில் ஏந்தியபடி வேடனாக வந்தவனே,

சேவற் கொடியினை  உடையவனே,

மகாலக்ஷ்மியும் சரஸ்வதியும் கூடுகின்ற கூடற்பதியாகிய பவானியில் உறைகின்ற பெருமாளே!..

படங்களுக்கு நன்றி
முருகனடியார்கள் Fb


ஸ்ரீ செல்வமுத்துக் குமர ஸ்வாமி


சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலன்
**
சரவணபவனே சரணம் சரணம்
சண்முக நாதா சரணம் சரணம்
***

வியாழன், அக்டோபர் 27, 2022

சஷ்டி 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 10
வியாழக்கிழமை
சஷ்டி மூன்றாம் நாள்


கனகசபைத் திருப்புகழ்

தனதனன தான தனதனன தான
தனதனன தானத் ... தனதானா

கனகசபை மேவு மெனதுகுரு நாத 
கருணைமுரு கேசப் ... பெருமாள் காண்

கனகநிற வேத னபயமிட மோது
கரகமல சோதிப் ... பெருமாள் காண்

வினவுமடி யாரை மருவிவிளை யாடு
விரகுரச மோகப் ... பெருமாள் காண்

விதிமுநிவர் தேவ ரருணகிரி நாதர்
விமலசர சோதிப் ... பெருமாள் காண்

சனகிமண வாளன் மருகனென வேத
சதமகிழ்கு மாரப் ... பெருமாள் காண்

சரணசிவ காமி யிரணகுல காரி
தருமுருக நாமப் ... பெருமாள் காண்

இனிதுவன மேவு மமிர்தகுற மாதொ
டியல்பரவு காதற் ... பெருமாள் காண்

இணையிலிப தோகை மதியின்மக ளோடு 
மியல்புலியுர் வாழ்பொற் ... பெருமாளே..
-: ஸ்ரீ அருணகிரிநாதர் :-
நன்றி : கௌமாரம்


ஏ.. மனமே!..
பொன் அம்பலமாகிய தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் 
நடனம் புரிகின்ற எனது குருநாதனாகிய
கருணை நிறைந்த முருகேசப் பெருமானைக் காண்..

பொன்னிறமுடைய நான்முகன்
அபயம் என்று  சரணடைய,
நான்முகனின் பிழை நீங்குதற்காகத்  தாமரை போன்ற கரத்தினால் தலையில் குட்டிய ஜோதிப் பெருமானைக் காண்..

அவன் புகழைக் காதாரக் கேட்டு உளமாறத் துதிக்கும்
அடியார்களிடம் ஆர்வம், மகிழ்ச்சி, அன்பு அனைத்தும்
கொண்டு இணைந்து விளையாடுகின்ற  பெருமானைக் காண்..

நான்முகன், முனிவர்கள்,தேவர்கள், அருணாசலேஸ்வரர், மற்றும் தூய்மையான காற்றினால் வாழும் உயிர்ப் பொருள் எல்லாமும் ஆகி விளங்கும் பெருமானைக் காண்..

ஜானகியின் மணவாளன் - ஸ்ரீ ராமனின் மருமகன் என்று, நூற்றுக் கணக்கான முறை வேதங்கள் சொல்லி மகிழும் குமாரப் பெருமானைக் காண்.

அடைக்கலம் அருள்பவளாகிய சிவகாமி - போர்க் குணமுடைய அசுர குலத்தைச் சங்கரித்தவள்,
அவள் தந்தருளிய முருகன் என்னும் திருப்பெயருடைய  பெருமானைக் காண்.

இனிதாகிய  தினைப் புனத்தில் அமுதை ஒத்த குறமகள் வள்ளியுடன் அன்பு நிறைந்த காதல் கொண்ட பெருமானைக் காண்..

ஒப்பற்ற ஐராவதம் வளர்த்த மயிலாகிய  அறிவு நிறைந்த தேவயானை எனும் நங்கையுடன் திருமிகு புலியூரில் (சிதம்பரத்தில்) வாழ்கின்ற அழகின் பெருமாளைக் கண்ணாரக் காண்பாயாக!.. 
**
அன்பின் ஸ்ரீராம் அவர்கள் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார்.. 
அவர் பூரண நலம் அடைவதற்கு 
வேண்டிக்கொள்வோம்..

சிக்கலைத் தீர்த்து வைப்பாய் 
ஜகம் புகழ் சிக்கல் சிங்கார வேலா!..
*
அறுமுகனின் அருட்கோலங்கள் ..
நன்றி : Fb

சிக்கல் ஸ்ரீ சிங்கார வேலன்



கந்தா சரணம்
கடம்பா சரணம்
கார்த்திகை மைந்தா
சரணம்.. சரணம்..
***

புதன், அக்டோபர் 26, 2022

சஷ்டி 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 9
புதன்கிழமை
சஷ்டி இரண்டாம் நாள்


திருக்காளத்தித் திருப்புகழ்

தனத்தா தத்தத் ... தனதான
தனத்தா தத்தத் ... தனதான

சிரத்தா னத்திற் ... பணியாதே
செகத்தோர் பற்றைக் ... குறியாதே

வருத்தா மற்றொப் ... பிலதான
மலர்த்தாள் வைத்தெத் ... தனையாள்வாய்

நிருத்தா கர்த்தத் ... துவநேசா
நினைத்தார் சித்தத் .. துறைவோனே

திருத்தாள் முத்தர்க் ... கருள்வோனே
திருக்கா ளத்திப் ... பெருமாளே.
-: ஸ்ரீ அருணகிரிநாதர் -:
நன்றி : கௌமாரம்


தலை வணங்கி உன்னைப்
பணியாமல் காடு மேடெல்லாம் சுற்றித் திரிந்த நான்
(இனியும்) இந்த
உலகத்தின் பந்தபாசங்களில்
மனதைச் செலுத்தி
வருந்தாமல்  இருக்கும்படிக்கு

தமக்கு நிகர் வேறு 
இல்லாதவனே..

எத்தித் திரிந்த என்னையும்
உனது அருகில்  சேர்த்துக் கொண்டு உனது திருவடி மலர்களை சிந்தை செய்வதற்கு அருள்வாயாக..

ஈசனைப் போல நடனம் ஆட வல்லவனே,
(திருச்செந்தூரில் அருணகிரி நாதருக்குத் நடனத் திருகாட்சி நல்கினன் திருக்குமரன்)
எல்லாவற்றிலும் கர்த்தனாக
விளங்கும் நேசனே,

உன்னை நினைப்பவர் தம் நெஞ்சத்தில் உறைபவனே,

முக்தராகிய ஞானியர்க்கு திருவடித் தாமரைகளைத்
தந்து அருள்பவனே 

திருக்காளத்தி மாமலையில் 
உறைகின்ற பெருமாளே..

காணொளி: 
கந்த சஷ்டி காப்பு அணிவித்தல்..
நன்றி - கௌமார மடாலயம்.
சிரவை ஆதீனம்


முருகா சரணம்
அழகா சரணம்
முத்துக் குமரா 
சரணம் சரணம்..
***

செவ்வாய், அக்டோபர் 25, 2022

சஷ்டி 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 8
செவ்வாய்க்கிழமை
ஸ்ரீ கந்தசஷ்டி விரதத்தின்
முதல் நாள்


திருக்கயிலைத் திருப்புகழ்

தனதனனத் ... தனதான
தனதனனத் ... தனதான

புமியதனிற் ... ப்ரபுவான 
புகலியில்வித் ... தகர்போல

அமிர்தகவித் ... தொடைபாட 
அடிமைதனக் ... கருள்வாயே

சமரிலெதிர்த் ... தசுர்மாளத் 
தனியயில்விட் ... டருள்வோனே..

நமசிவயப் ... பொருளானே 
ரசதகிரிப் ... பெருமாளே..
-: அருணகிரி நாதர் :-
நன்றி: கௌமாரம்


இப் பூமண்டலத்தின் தனிப் பெரும் தலைவரும்,

சீர்காழிப் பதியில் அவதரித்தவருமான
திருஞான சம்பந்த மூர்த்தியைப் போல

மரணமிலா வாழ்வினைத் தரவல்ல திருப் பதிகங்களைப் பாடுதற்கு

இந்த அடிமைக்கும் அருள் புரிவாயாக.

போரில் எதிர்த்து வந்த சூரன் மாண்டு ஒழிவதற்காக

ஒப்பற்ற வேலாயுதத்தை 
செலுத்தியவனே,

நமசிவாய என்ற ஐந்தெழுத்தின்
உட்பொருளானவனே,

வெள்ளியங்கிரியில் (கயிலைமலை) திகழும்
பெருமாளே..

முருகா சரணம் அழகா சரணம்
முத்துக் குமரா சரணம் சரணம்
***

திங்கள், அக்டோபர் 24, 2022

திருவலஞ்சுழி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
அனைவருக்கும்
அன்பின் இனிய
தீப ஆவளித் திருநாள்
நல்வாழ்த்துகள்..

ஸ்ரீ வெள்ளை விநாயகர்

திருத்தலம்
திருவலஞ்சுழி

இறைவன்
ஸ்ரீ வலஞ்சுழிநாதர்
அம்பிகை
ஸ்ரீ பிரகந்நாயகி

தீர்த்தம்
காவிரி, அரசலாறு
ஜடாமகுட தீர்த்தம்

தலவிருட்சம்
வில்வம்

திருஞானசம்பந்தரும்
அப்பர் பெருமானும்
வழிபட்டு பதிகம்
பாடியுள்ளனர்..

ஒரு சமயம் சிவ பூஜை செய்வதற்காக பாதாளத்தில் இருந்து பூமியைத் துளைத்துக் கொண்டு மேலே எழுந்து வந்தான் ஆதிசேஷன்..  

அந்தத் துளை - பிலத்தினுள் விழுந்து மறைந்து போனாள் காவிரி.. சோழ நாடும் வறண்டு பொலிவிழந்து  நின்றது.. 

மன்னன் செய்வதறியாது திகைக்க - ஊர் செழிக்க உத்தமர் ஒருவர் பிலத்தினுள் 
வீழ்வார் எனில் காவிரி மீண்டு வருவாள்- என, அசரீரி வந்தது.. 

தான் விழுவதென முனைந்த மன்னனைத் தடுத்து நிறுத்திவிட்டு கொட்டையூர் குடிலில் இருந்த ஹேரண்ட முனிவர் தானே  - பிலம் எனும் பெருந்துளையினுள் குதித்தார்..

தன்னைத் தானே இந்த மண்ணுக்கு என, அர்ப்பணித்தார்.. 

அது கண்டு மகிழ்ந்த இறைவன் காவிரித் தென்கரைத் தலமாக
பூம்புகாருக்கு அருகில் உள்ள வலம்புரத்தில் ஹேரண்ட முனிவரை மீட்டெடுத்துக் கொடுத்தருளினான்..

தலமுறைத் தொகுப்பிலும் திருவலஞ்சுழிக்கு அடுத்த திருத்தலம் திருவலம்புரம்..

ஸ்ரீ ஹேரண்ட முனிவருக்கு இக்கோயிலிலும் கொட்டையூரிலும் திருவலம்புரத்திலும் சந்நிதிகள் உள்ளன..

இக்கோயிலில் தான் அரிதினும் அரிதான ஸ்வேத விநாயகர் திருமேனி அமைந்துள்ளது..

பாற்கடலை கடைவதற்கு முன் விநாயக வழிபாடு செய்வதற்கு மறந்த பாவம் தீரும் பொருட்டு தேவேந்திரன் பாற்கடல் நுரையால் திருமேனி ஒன்றினை வடிவமைத்து வழிபட்டான்..

கணபதியும் மகிழ்ந்து அதில் சாந்நித்யம் கொண்டருளி இன்றும் நல்லருள் புரிகின்றார்..

சில தினங்களுக்கு முன் இத்திருக்கோயிலில் சப்தகன்னியர் வழிபாடு நடந்தது.. 

இன்றைய பதிவில் வைபவத்தின் காட்சிகள்..
படங்களுக்கு நன்றி : அகில்.














என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே
இருங்கடல் வையத்து
முன்ன நீபுரி நல்வினைப் பயனிடை
முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி
வாணனை வாயாரப்
பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும்
வழிபடும் அதனாலே.. 2/106/1
-: திருஞானசம்பந்தர் :-

தேடுவார் பிரமன் திருமாலவர்
ஆடுபாதம் அவரும் அறிகிலார்
மாடவீதி வலஞ்சுழி ஈசனைத்
தேடுவான் உறுகின்றதென் சிந்தையே.. 
5/66/8
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

ஞாயிறு, அக்டோபர் 23, 2022

தீப ஆவளி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
  ஐப்பசி 6
ஞாயிற்றுக்கிழமை
இன்று பின்னிரவு
திங்கட்கிழமை உதயத்திற்கு 
முன்பாக நரக சதுர்த்தி ஸ்நானம்

அனைவருக்கும் அன்பின் இனிய
தீப ஆவளித் திருநாள்
நல்வாழ்த்துகள்..


அன்னையின் கையினால் தான் எனக்கு!.. 

அப்படியானதொரு வரத்தைக் கேட்டு வாங்கியிருந்தான் அதி மேதாவியாகிய - நரகன்..

அவனது தந்தை ஸ்ரீ வராஹர்..
தாய் பூமாதேவி..

காலங்களால் நரகன் நரகாசுரன் என்றானான்..

அவனைப் போட்டுத் தள்ளுவது தான் ஒரே வழி என்றானது..

நரகாசுரனுடன் போர் செய்வதற்கு
ஸ்ரீ கிருஷ்ணன்
புறப்பட்டான்.. 

கண்ணனுக்கு ருக்மணி வெற்றித் திலகமிட்ட நேரத்தில் அந்தப் பக்கமாக ஒதுங்கி நின்றிருந்தாள் சத்யபாமா..

பொறுமையின் சிகரமான அவளுக்கு இதெல்லாம் ஒத்துக் கொள்ளாது.. 

ஸ்ரீ கிருஷ்ணன் அவளை வலிய அழைத்து செங்கரம் பற்றி இழுத்து கருட வாகனத்தில் ஏற்றிக் கொண்டான்..

ஸ்ரீகிருஷ்ணன் ஸ்ரீமதி சத்யபாமாவுடன் மேலெழுந்து பறந்த கருடன் சுற்றிச் சுழன்று போர் முனையில் போய் இறங்கினான்.

போர் முகம்.. 
விழிகளை நெரித்தபடி எதிரில் நோக்கினான் நரகாசுரன்..

ஸ்ரீ வராக மூர்த்தியும் பூமாதேவியும் தான் வந்து நிற்கின்றனர் என்பதை அவன் உணர்ந்தானில்லை..

பற்களைக் கடித்துக் கொண்டு கையில் கிடைத்த ஆயுதங்களை வீசி எறிந்தான்..

அங்குமிங்குமாக அம்பு மழை.. 

ஒரு கட்டத்தில் மாயக் கண்ணன் மயங்கி விழுந்ததைப் போல் நடித்தான்.. 

தர்மம் வெல்வதற்கு இதுவும் தேவை தானோ!..



அவ்வளவு தான்.. கோபாவேசமானாள் சத்யபாமா..

தொடுத்த கணையை விடுத்தாள்.. நடந்த நாடகத்தை முடித்தாள்..

தாய் ஆனாலும் மகன் ஆனாலும் நீதி - நீதி தான் என்று வெற்றிக் கொடியைப் பிடித்தாள் !.. 


தீயவனிடமிருந்து விடுபட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் தீபங்களை வரிசை வரிசையாக ஏற்றி வைத்து எல்லாம் வல்ல இறைவனை வணங்கினர்.. 

அதுவரையிலும் வறண்டு கிடந்த வாழ்வில் வசந்தம் வீசிட - ஆடை ஆபரணங்களை அணிந்தனர்..  

நல்ல இனிப்புகளை உண்டு மகிழ்ந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்..

ஆன்றோர்கள் கூறுவர் நரகாசுரனின் வீழ்ச்சி என்பது நம்மை நாமே திருத்திக் கொள்வதே - என்று..

இந்த காலகட்டத்தில் தான் - 

நல்லநாள் என்றால்  - தவறுகளுக்கு எல்லாம் தலையாகிய தவறுகளைச் செய்தல் மது அருந்தி மயங்கிக் கிடத்தல் என்று ஆகி விட்டது..

தீபம் என்பது விளக்கு.
ஆவளி எனில் வரிசை.

காலப்போக்கில்,
தீபங்களின் வரிசை -
தீப ஆவளி என்பது தீபாவளி தீப ஒளி என்றெல்லாம் ஆகி இன்றைக்கு டீப்பாவெலி என்று காதில் கேட்கின்றது..

உள்ளங்கையில் நாமாக வரவழைத்துக் கொண்ட செல்போனுக்குள் ஏகப்பட்ட சத்தங்கள்..

சம்பிரதாயத்துக்கு சம்பந்தமில்லாத நச்சரவுகளிடம் இருந்து!.. 

" டீபாவலி அவனுங்களோடது.. நீங்க எல்லாம் இவனுங்க!.. "

" யாரோடதா இருந்தா என்னடா?.. அவனுங்கிட்ட இருந்து விடுபட்டதை சுதந்திர தினமா கொண்டாட வில்லையா!.. அது மாதிரி எடுத்துக் கொள்ளேன்!.. "

" நான் தீபங்களை ஏற்றி வணங்கி புத்தாடை உடுத்தி இனிப்பினை உண்டு பிறருக்கும் கொடுத்து மகிழ்வதில் உன் கூட்டத்துக்கு என்னடா பிரச்னை?.. "
**
இத்துடன்
இன்றைய பதிவில் அழகான 
இனிமையான நெகிழ்வான பாடல்..
  
அன்னையின் ஆணை 
திரைப்படத்தில் 
இடம் பெற்ற 
இப்பாடலை இயற்றியவர் 
கவிஞர்  திரு. மருதகாசி அவர்கள்

இசை: திரு S.M.சுப்பையா நாயுடு 
அவர்கள்
(ராகம்: சாருகேசி)
   
பாடியிருப்பவர் 
ஸ்ரீமதி P.லீலா அவர்கள்..

காட்சியில் 
ஸ்ரீமதி பண்டரிபாய் அவர்கள்..
(நன்றி: இணையம்)
**

நீயே கதி ஈஸ்வரி எனக்கு
நீயே கதி ஈஸ்வரி 

மாயா உலகிலே
ஓயாத துயராலே
வாடாமலே ஒரு
வழி காட்டவே எனக்கு
நீயே கதி ஈஸ்வரி ..

ஆதியே அருளே
ஆகமப் பொருளே
அன்புடன் தாராயோ
உன் திருவருளே
ஆவதும் அழிவதும்
யாவும் உன்னாலே
அன்னையே பாராயோ
என்னையும் கண்ணாலே

தீயவர் வாழவும்
நல்லவர் தாழவும்
செய்வதேனோ இது
தருமம் தானோ
செய்வதேனோ இது
தருமம் தானோ..

எனக்கு
நீயே கதி ஈஸ்வரி ..
***

தீயவர் வாழவும்
நல்லவர் தாழவும்
செய்வதேனோ இது
தர்மம் தானோ!..

இதுதான்
தீப ஆவளித் திருநாளின் அடிநாதம்..

நல்லவர்களின் விருப்பம் வேண்டுதல்
இப்பாடலின் சரணத்தில் மிளிர்கின்றன..

சரணம் சரணம்
அன்னையின் திருவடிகளே
சரணம்..

நீதி தழைக்கட்டும்
நேர்மை வெல்லட்டும்..

வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்
**

சனி, அக்டோபர் 22, 2022

முறுக்கு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

முறுக்கு
-: சிறுகதை :- 

" அக்கா.. அக்கா!.. "

" வாம்மா தாமரை!.. உனக்குத் தான் சிரமம் கொடுத்துட்டேன்.. "

வாசல் கதவைத் திறந்து  கொண்டு உள்ளே வந்து ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்திய தாமரையை முக மலர்ச்சியுடன் வரவேற்றாள் செல்வி - தமிழ்ச் செல்வி.. 

கையெல்லாம் ஈரமான மாவு அப்பிக் கிடந்தது..

" என்னக்கா நீங்க.. இதுக்குப் போய்?.." 

" இருக்கட்டும்மா.. தீவாளிக்கு இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு.. அங்கே உங்க வீட்ல எல்லாத்தையும் முடிச்சுட்டு இங்க வந்து அந்த அடுப்பு வேலையையே திரும்பவும் செய்றதுன்னா.. அலுப்பு தானே!..  உனக்கு நல்ல மனசுடா தங்கம்!.. "

" உங்களுக்குத் தான் ரொம்ப ரொம்ப நல்ல மனசு.. பண்டிகை பலகாரம்... ன்னா சில பேர்  வீட்டுக்குள்ள யாரையும் விடமாட்டாங்க.. கண்ணு பட்டுடும்.. ன்னு.. " 

- கலகல என்று சிரித்த தாமரை தொடர்ந்தாள்..

" சரி.. சரி.. வாங்க அக்கா.. நம்ம வேலைய ஆரம்பிப்போம்.. கரண்டு கம்பிய அணில் குட்டி எப்போ கடிச்சு வைக்கும்.. ன்னு தெரியாது.. "

மறுபடியும் சிரித்தாள் தாமரை..

" நமக்கு ஏம்மா அந்தப் பேச்சு?.. கரண்டு வந்தா வரட்டும்.. போனா போகட்டும்..போன வாரம் தான் இன்வர்டர் வாங்கிட்டு வந்தாங்க அத்தான்..  அதோ.. அங்கே இருக்கே.. " 

" ஓ... இதான்.. இப்போதைக்கு  வேணும்!.. "

" காஃபி குடிச்சுட்டு வேலைய ஆரம்பிக்கலாமா.. இப்போதான தேங்காய்ப் பால் ஊற்றி மாவு பிசைஞ்சு வெச்சிருக்கேன்.. அஞ்சு நிமிஷம் ஆகட்டும்..." 

" சரிக்கா.. ஆனா, காஃபி அப்புறம்..  இப்போதான் சாப்பிட்டுட்டு நேரே வர்றேன்... "

பேசிக் கொண்டே சமையலறைக்குள் வந்தனர் இருவரும்.. மேடையில் இருந்த ஸ்டவ் கீழே இறக்கி வைக்கப்பட்டிருந்தது.. முறுக்கு பிழிவதற்கு முன்னேற்பாடுகள் எல்லாம் செம்மையாக இருந்தன..

திடீரென தாமரை ஆச்சர்யமானாள்...

" அக்கா... நீங்களும் கடலை எண்ணெய்க்கு மாறிட்டீங்களா!.. "

" அது ஆச்சு மூனு மாசம்.. பாமாயிலுக்கும் டாட்டா காட்டியாச்சு.. "

" இந்த எண்ணெய் கடையில வாங்குனதா அக்கா.. "

" இல்லேம்மா... நேரிடையா செக்குல ஆட்டி எடுத்தது.. பாரு அந்த வாசத்தை... "

" ஆகா!.. "

எண்ணெய்யை நுகர்ந்த தாமரையின் முகம் மலர்ந்தது..

" அக்கா இந்த தேங்காய்ப்பால் முறுக்குக்கு உங்க கைப் பக்குவத்தைச் சொல்லுங்களேன்.. "

" ஏம்மா.. உனக்குத் தெரியாதா?.. "

" தெரியும்... ஆனா இந்தக் குழாயடியில சொல்றாங்க கடல மாவு, மைதா மாவு, கல்லு மாவு, கண்ணாடி மாவு.. ன்னு என்னென்னமோ சொல்றான்.. களே... "

" அதெல்லாம் விட்டுத் தள்ளு.. அரைக்கிலோ பச்சரிசிக்கு நூத்தம்பது கிராம் வெள்ளை உளுத்தம் பருப்பு அரை மூடி தேங்காய், பசு வெண்ணெய் அம்பது கிராம்.. கறுப்பு எள், ஒமம், சீரகம் இது மூனுல ஏதாவது ஒன்னு கொஞ்சம் போல வறுத்து எடுத்துக்கணும்.. அதுக்கு மேல உப்பு.. அவ்வளவு தான்..  அரிசி உளுந்து வறுத்து அரைச்சு மாவுல வெண்ணெய் ஓமம் போட்டு தேங்காய்ப் பால் பிழிஞ்சு விட்டு பக்குவமா பிசைஞ்சு எடுத்துட்டா.. அதான் தேங்காய்ப் பால் முறுக்கு.. "

" அதான் எனக்குத் தெரியுமே.. இருந்தாலும் வேற ஏதாவது தொழில் நுட்பம் எதுவும் வெச்சி இருக்கீங்களோ.. ன்னு தான் கேட்டேன்... "

தாமரையிடம் மீண்டும் சிரிப்பு..

அக்காவும் சிரித்துக் கொள்ள - வெகு மும்முரமாக முறுக்கு சுடும் வைபவம் களை கட்டியது..

" அக்கா நான் பிழிஞ்சு தர்றேன்.. நீங்க திருப்பிப் போட்டு எடுங்க.. சரியா!.. "

அருகில் இருந்த அரிகரண்டிகளில் ஒத்தாற்போல - தாமரை பிழிந்து கொடுத்த முறுக்குகள் பதமான சூட்டில் இருந்த எண்ணெய்க்குள் இறங்கி சுறுசுறு என பூரித்து வட்டமிட்டன..

" அக்கா ஒரு முறுக்கு ஜோக் சொல்லவா!.. "

" முறுக்கு ஜோக்கா?.. "

" அதான் கடி ஜோக்!.. "

" சொல்லேன்.. "

" நானும் அத்தையும் அன்னைக்கு கடைத் தெருவுக்குப் போயிருந்தப்போ ஜவுளிக் கடைக்கு முன்னால கூட்டம்.. என்னான்னு எட்டிப் பார்த்தா சாக்கு மூட்டையை போட்டு ரெண்டு பேர் அடிச்சுக்கிட்டு இருந்தானுங்க.. என்னடா இது ன்னு கேட்டதும்... என்ன சொன்னானுங்க தெரியுமா!.. "

" என்ன சொன்னானுங்க?.. "

" விலையை அடிச்சி நொறுக்கிட்டானுங்களாம்!.." 

அக்கா வாய் விட்டு சிரிக்க அருகில் இருந்த அடுக்கு முறுக்குகளால் நிறைந்து கொண்டிருந்தது..

" பசங்களுக்கு புதுத்துணி எடுத்துத் தரணுமே..ன்னு அப்பாவுக்குக் கவலை.. வாய்க்கு ருசியா பலகாரம் அமையணுமே..ன்னு அம்மாவுக்குக் கவலை.. பட்டாசு எல்லாம் வெடிக்கிறதுக்கு மழை இல்லாம இருக்கணுமே.. ன்னு பசங்களுக்குக் கவலை.. கையைக் கடிச்சிடாம முதல் எடுக்கணுமே.. ன்னு  ஏவாரிகளுக்குக் கவலை.. விடியறதுக்குள்ளே சட்டையக் கொடுத்துடணுமே.. ன்னு துணி தைக்கிறவருக்குக் கவலை.. "

அக்கா சொல்லிக் கொண்டிருந்தாள்..

" விடியக்காலம் சுழியம் சுட்டு முடிச்சி  ரெண்டு ஈடு இட்லி வைச்சிட்டு தலைக்கு எண்ணெய் வைச்சுக்கிற நேரத்தில மளிகைக் கடைய பூட்டிட்டு வருவாங்க தாத்தாவும் அப்பாவும் .. மூனு நாளா ஏவாரம் பார்த்த அலுப்பு அப்படியே தெரியும்.. ஒன்னுக்குப் போறதுக்குக் கூட நேரம் கிடைச்சிருக்காது.. "

அக்காவின் முகத்தில் முப்பதாண்டுகளுக்கு முந்தைய ரேகைகள்..

" ஐப்பசி அடமழை ஊத்திக்கிட்டு இருக்கும்.. ஓட்டு வீடு ஒழுகும்.. கரண்டு போனா எப்போ வரும்.. ன்னு தெரியாது.. ஈர விறகப் போட்டு ஊதி ஊதி அடுப்பு எரித்து எல்லாம் செய்வாங்க அம்மா.. துணைக்கு அப்பத்தா.. நாங்களும் கூடமாட ஒத்தாசை செய்வோம்.. "



" எண்ணெய் தேய்ச்சு குளிச்சிட்டு பாவாடை சட்டையப் போட்டுக்கிட்டு தீப தரிசனம் செஞ்சுட்டு திண்ணையில வைச்சி நம்ம வீட்லருந்து, டமார்.. ன்னு முதல் வெடியப் போட்டதும் அப்பத்தா முகத்திலயும் அம்மா முகத்திலயும் ஒரு சிரிப்பு வரும் பாரு... அந்த சிரிப்புக்காகவே தவங்கிடக்கலாம்.. "

அக்காவின் கண்கள் கடந்த கால நினைவுகளுடன் ததும்பியிருந்தன..

" என்னக்கா செய்றது.. எங்க வீட்லயும் ஒரு தடவை நூறு ரூபாயில தீவாளி கொண்டாடி இருக்கிறோம்.. "

" இவ்வளவு காலம் கஷ்டப்பட்டுட்டு நல்லா இருக்குற நேரத்தில நாம மட்டுந்தான்.. ங்கறது தான் வாழ்க்கை!.. "

விழியோரத்தைத் துடைத்துக் கொண்ட அக்கா முத்தாய்ப்பாகச் சொன்ன போது - முறுக்கு பிழியும் வைபவத்தை சுபமாக நிறைவேற்றியிருந்தாள் தாமரை..

" இந்த வருசம் வேற என்ன என்ன அக்கா?.. "

" ரவா லாடு, பாசிப் பருப்பு உருண்டை, பால்கோவா, சேவு, இதோ இந்த முறுக்கு,  காலைல சுழியம், வடை, இட்லி, சட்னி அவ்வளவு தான் தீபாவளி!.. "

" எங்க வீட்ல கேரட் அல்வா, தேங்காய் பர்பி, ஓமப்பொடி, முறுக்கு.. காலைல சுழியன், பஜ்ஜி, இட்லி சாம்பார்.. இவ்ளோ தான்.. மூனு பேருக்கு இதுவே அதிகம்..  பக்கத்து வீடுகளுக்கு கொடுக்கலாம்.. ன்னா  ஒரு பக்கம் இதெல்லாம் எங்களுக்கு ஆகாது.. ம்பாங்க... இன்னொரு பக்கம் நம்மள மாதிரியே எல்லாம் செஞ்சிக்கிட்டு நாங்கள்.. லாம் நீங்க.. இல்லே.. ம்பாங்க.."

" போங்க அக்கா மனசு விட்டுப் போச்சு.. நாம நம்ம வரைக்கும் இருந்துக்க வேண்டியது தான்!.. "

" அந்தக் காலத்து.. ல தெருவுக்கே செய்யணும்.. ன்னு சொல்லுவாங்க அப்பத்தா!... ஏழை பாழைங்க வாசலுக்கு வந்தா தட்டு நிறைய பலகாரமும் கையில ரெண்டு ரூபாயும் கொடுப்பாங்க.. அவ்வளவு சந்தோஷமா இருக்கும்.. இப்போ ஒவ்வொரு ஆளா வந்து நூறு கொடு.. எரநூறு கொடு.. ன்னு ஆர்ப்பாட்டம்.. எல்லாம் காலக் கொடுமை!.. "

சொல்லிக் கொண்டிருக்கும் போதே வானில், 'கடகட.. ' - என்று இடியோசை..

" தூத்தலும் விடாது.. தூவானமும் விடாது..  நான் கெளம்பறேன்..  அக்கா!.."

அப்போது, 
அக்கா வாளி ஒன்றை நீட்டினாள்..

கையில் வாங்கிக் கொண்ட தாமரை கேட்டாள்..

" என்னக்கா இது!.. "

" தீபாவளி பலகாரம்.. மாமா அத்தைகிட்டே கொடு.. காலைல புதுசு கட்டிக்கிட்டு மாமா அத்தை.. ய விழுந்து கும்பிட்டுட்டு இங்கே கிளம்பி வா.. "

" சரிங்க அக்கா.. நான் போய்ட்டு வர்றேன்!.. "

"சரிம்மா... கவனம்!.. "

தாமரை சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் சடசட.. - என்று மழைத்துளிகள் இறங்கின..

" நல்லவேளை.. தாமரை இந்நேரம் வீட்டிற்குச் சென்றிருப்பாள்!... "

அக்காவின் மனதில் நிம்மதி..
*** 
அனைவருக்கும்
அன்பின் இனிய
தீபாவளி
நல்வாழ்த்துகள்
***

வெள்ளி, அக்டோபர் 21, 2022

கந்தா - என,

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 4
வெள்ளிக்கிழமை

ஸ்ரீ அருணகிரிநாதர்
அருளிச்செய்த
திருப்புகழ்


திருச்செங்கோடு

தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த ... தனதான

அன்பாக வந்து உன்றாள் பணிந்து
ஐம்பூத மொன்ற ... நினையாமல்

அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க
ளம்போரு கங்கள் ... முலைதானும்

கொந்தே மிகுந்து வண்டாடி நின்று
கொண்டாடு கின்ற ... குழலாரைக்

கொண்டே நினைந்து மன்பேது மண்டி
குன்றா மலைந்து ... அலைவேனோ!.

மன்றாடி தந்த மைந்தா மிகுந்த
வம்பார் கடம்பை ... யணிவோனே

வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
வம்பே தொலைந்த ... வடிவேலா

சென்றே யிடங்கள் கந்தா எனும் போ(து)
செஞ்சேவல் கொண்டு ... வரவேணும்

செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த
செங்கோ டமர்ந்த ... பெருமாளே!..
-: ஸ்ரீ அருணகிரிநாதர் :-
நன்றி : கௌமாரம்


உன் மீது அன்பு கொண்டு உன் சந்நிதிக்கு வந்து உன்
பாதங்களைப் பணிந்து,

ஐம் பூதங்களுடன் ஐம்புலன்களும்
ஒன்றுபட்டு நின்று
உள்ளம் உருகி உன்னை நினைத்து வணங்காமல்,

அழகு நங்கையரின் மாயம் எனும் நஞ்சு நிறைந்த கண்களையும், தாமரை மொட்டுப் போன்ற
மார்புகளையும்,

வண்டுகள் மொய்க்கின்ற பூக்கள் நிறைந்த
கூந்தலையும் மனதில் நினைத்து அவர்கள் மீதில் மோகம் அதிகமாகி,

அறியாமை மிகுந்து மனங்குன்றி அதனால் ஒருவழிப்படாமல் - உருப்படாமல்
அலைவேனோ?..

(அவ்விதமாக ஆகி விடாமல்)
கனகசபையில் நடனமிடும் சிவ பெருமான் தந்த
திருக்குமரனே,

நறுமணம் மிகுந்த கடம்ப மலர்களை மாலையாய் அணிபவனே,

உன் சந்நிதிக்கு வந்து வணங்கி நிற்கின்ற
அடியவர்களின் பிறவிகளை அடியோடு தொலைக்கின்ற வடிவேலை உடையவனே,

பற்பல தலங்களுக்கும் சென்று "கந்தா.. " - என, அழைத்து வணங்கும் போது செஞ்சேவற் கொடியுடன், எனது முன் வந்தருள வேண்டும்...

செந்நெற்பயிரும் தாமரையும் ஒன்றாக வளரும் வயல்கள் நிறைந்த திருச்செங்கோட்டில் உறைகின்ற பெருமாளே!..

முருகா சரணம்
முதல்வா சரணம்
முத்துக் குமரா
சரணம்.. சரணம்..
***