நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், அக்டோபர் 17, 2022

கொக்கரக்கோ


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
கொக்கரக்கக்.. கோ.. 
- சிறுகதை -
**

" கொக் கொக்கக் கோ.. "
" கொக் கொக்கக் கோ.. "

மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும் பொடியனின் சத்தம்  ..

மேல் மாடியில் நின்று கொண்டிருந்த சுந்தரம் கவனித்தார் -

எங்கிருந்து சத்தம் வருகிறது?.. என்று...

அதோ அந்த சீமைக் கருவைப் புதருக்கு அருகில் தன்னந் தனியாய் நிற்கின்றான்..

பாவம்.. நேற்றைக்கு ரொம்பவே அடி வாங்கி விட்டான்.. அந்த முரட்டுத் தடியன் இந்தப் பொடியனை துரத்தித் துரத்தி துவம்சம் பண்ணி விட்டான்..

பிரச்னை வேறொன்றும் இல்லை... 
வேலிக்கு அருகில் கோழி ஒன்றை மடக்க முயற்சித்தான் என்பதே..

அதற்காக -
அலகால்  கொத்தப்பட்டு - சிறகுகளால் மடார்.. மடார்.. என்று சாத்தப்பட்டு -  இதெல்லாம் போதாது என்று கால் நகங்களால் கீறிக் கிழிக்கப்பட்டு...

ஆக்ரோஷமான அடிதடியில் அருகில் மேய்ந்து கொண்டிருந்த பெட்டைகளும் நடுங்கிப் போயின..

கடைசியில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கூவினான் தடியன் - 

" நான் தான்டா  நாட்டாமே!.. " - என்று..

மூன்று போகம் கொடுத்த வயல் வெளியில் ஊர்க் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டி மனைப் பிரிவுகள் என்றாக்கி லட்சக் கணக்கில் கல்லா கட்டி விட்டார்கள்.. 

நாலு நாளைக்கு  விடாமல் மழை பெய்தால்  முழங்காலுக்கு மேல் தண்ணீர் நிற்கும்.. தெப்பம் கட்டினால் தான் மெயின் ரோட்டுக்கு வரமுடியும்.. ஆத்திரம் அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் கூட உள்ளே வர முடியாது... 

டவுன்.. ல இருந்து ஆட்டோவைக் கூப்பிட்டால் - பத்து ரூபாயை நம் கையில் கொடுத்தபடி, " காஃபி ஹவுஸ்ல ஒரு டீ குடிச்சுட்டு பொடி  நடையா நடந்து போய்டுங்க சார்!.. " - என்றபடி ஓடி விடுவார்கள்..

அப்படியாகப்பட்ட இடம் இது..

இங்கே மனைப் பிரிவை வாங்கிய வேகத்தில் வீட்டைக் கட்டி விட்டார்கள் பலரும்.. எல்லாம் ரெண்டு கைகளாலும் பணம் பிறாண்டுகின்ற கோஷ்டிகள்..

அறுபது மனைப் பிரிவுகளில் இருபது தான் கை மாறி இருக்கின்றன.. அதில் அங்குமிங்குமாக பதினைந்து  வீடுகள்..

அதிலும் பெரும்பாலான வீடுகளில் சனி ஞாயிறு மற்ற விடுமுறை தின கொண்டாட்டங்களில் தான் ஆள் புழக்கம் இருக்கும் .. இப்போது புரிந்திருக்குமே எல்லாரும் துறை சார்ந்த அலுவலர்கள் என்று!.... 

ஒன்றிரண்டு கிழங்கள் மட்டும் கிடைத்ததைத் தின்றுவிட்டு  கீழே இருந்து மாடிக்கு ஏறி  நடை பழகுவதும் கீழே இறங்கி பொழுதைப் போக்குவதுமாக..

இந்தக் கணக்கில் சுந்தரமும் ஒருவர்..  

அங்கே மேய்கின்ற  கோழிகளும் சுற்றி திரிந்து கொண்டிருக்கும் நாய்களும் அவ்வப்போது வந்து சேரும் காக்கைகளும் தவிட்டுக் குருவிகளும் தான் உள்ளார்ந்த நட்புகள்..

இப்போதும் மனைப் பிரிவுகள் வயல் பரப்பு என்பதனால் புழு பூச்சிகள் தாராளம்.. ஆக, கோழிகளின் வயிற்றுப் பாட்டிற்குப் பிரச்னை இல்லை.. 

நாய்கள் தான் பாவம்... ஞாயிற்றுக்கிழமை எல்லா வீடுகளிலும் குருமா என்றாகி விட்டதால் அன்றைக்கு மட்டுமே நாய்களுக்குள் அடிதடி நடக்கும்..

மற்ற நாட்களில் ஒற்றுமையோ ஒற்றுமை..

இந்தக் கோழி வளர்ப்பை மூன்றாவது வீட்டு போஸ்ட் மாஸ்டர்  தான் முதலில் ஆரம்பத்து வைத்தார்.. 
நாட்டுக் கோழியும் நல்லது.. முட்டையும் நல்லது என்று!.. 

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் கோழிக்கும்  முட்டைக்கும் தனித்தனி செலவு.. வீட்டுக் கோழி என்றால் ஒற்றைச் செலவு.. வீட்டிற்கு கோழியும் முட்டையும் பொருளாதாரம்.. 


தவிர, ஒரு கோழியைப் பிடித்து விற்றால் ஐநூறு ரூபாய்.. ஒரு நாளைக்கு அஞ்சு முட்டை விற்றாலும் ஆயிரத்தைந்நூறு ரூபாய்.. சிரமம் இல்லாத வழியில் ஆதாயம்.. 

ஒரு ஈடு முட்டையை அடை காக்க வைத்து விட்டால் ரொம்பவும் வசதி..

இப்படியாக கோழிகள் அவ்வப்போது  குருமாவாகிக் குறைந்தாலும் எண்ணிக்கையில் பெருகிக் கொண்டிருந்தன..

வீட்டில் ஓய்ந்திருக்கும் பெரிசுகளின் வேலை அவ்வப்போது ரெண்டு கை அரிசியோ வேறு தானியங்களையோ கோழிகளுக்கு இறைப்பது தான்..

இந்தக் கோழிகளை கட்டியாண்டு கொண்டிருக்கும் சேவல்களுக்குள் தான் அவ்வப்போது பெரிய அளவில் அடிதடி வந்து விடும்.. 

எல்லாம் உரிமைப் பிரச்னை..

இந்த நாட்டுச் சேவல்கள் இயற்கையாகவே கோபம் உடையவை.. வீரம் மிகுந்தவை.. துரத்திப் பிடித்து அணைந்து தமக்குரியதாக ஆக்கிக் கொண்ட கோழிகளை ஒருபோதும் கை விடாத குணம் உடையவை.. வேறு சேவல் எதையும் தமது எல்லைக்குள் விடாத வல்லமை உடையவை..

" ஒழுங்கா குரலெடுத்து கூவத் தெரியலை..  அதுக்குள்ள உனக்குக் கோழி கேக்குதா.. கோழி?.. "

தடியன் பொடியனைப் போட்டுச் சாத்தியதற்கு இதுதான் காரணம்...

" இதென்ன.. ரோட்டு ஓரத்துல வச்சி மஞ்சக் கயிறு கட்ற விசயமா!.. வீரம் வேணும் டா வீரம்!.. "

" கொக்க ரக்கோ.. கோ.. "

சரி... அந்த ஆறு வாரக் கோழி எல்லாம் எப்படி?..

அங்க தான் சேவல் கிடையாதே.. குறு வாழ்க்கைக் கோழி - சேவலைப் பார்ப்பதற்கான வாய்ப்பே இல்லை.. முட்டையிடும் பாக்கியமும் கிடையாது.. அந்தக் கோழியா
ல தான் மனுசனுக்கு பலப்பல பிரச்னைகள்.. அதெல்லாம் நமக்கு எதற்கு?.. - என்று நினைத்துக் கொண்ட சுந்தரம் மாடியில் இருந்து கீழே இறங்கினார்..

சில நாட்கள் கழிந்த நிலையில் மாடியில் நடை பழகிக் கொண்டிருந்த போது கீழேயிருந்து சேவலின் கூவல்..

" கொக்க ரக்கோ.. கோ.. "
" கொக்க ரக்கோ.. கோ.. "

வியப்புடன் வெளியே எட்டிப் பார்த்தார்..

அவன் தான்.. 
அவனே தான்.. 
துணைக்கு ஒரு கோழியுடன் பூமியைக் கிளறிக் கொண்டிருக்கின்றான்...

" கொக்க ரக்கக் .. கோ.. "

நெஞ்சு நிமிர்ந்த குரல்.. அவனிடமிருந்து தான்..

" நானுந்தான் டா.. நாட்டாமே!.. "
***

29 கருத்துகள்:

 1. அவனும் ஆளாயிட்டான் போல...   எல்லோருக்கும் ஒரு நேரம் வரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //எல்லோருக்கும் ஒரு நேரம் வரும்..//

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்...

   நீக்கு
 2. 'ரோடோரத்தில் மஞ்சக்கயிறு கட்டப்பட்ட பெண்' நாளை மணமேடையில் யாருடன் அமர்வாள்?   தந்தையரைப் பற்றி யோசிக்க மாட்டார்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உற்றார் உறவுகளுடன் வாழ்வதாய் இருந்தால் நிதர்சனம் புரிந்திருக்கும்..

   சிந்திக்கும் கல்வி முறை என்றாலாவது நல்ல புத்தி வந்திருக்கும்..

   இன்றைக்குத் தான் அப்படி எதுவும் இல்லையே..

   சின்னத் திரையும் பெரிய திரையும் தான் காரணம்!..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 3. //இதென்ன.. ரோட்டு ஓரத்துல வச்சி மஞ்சக் கயிறு கட்ற விசயமா!.. வீரம் வேணும் டா வீரம்//

  ஹா.. ஹா.. சிதம்பரம் நினைவில் ஆடியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிதம்பரம் என்றாலே எப்போதும் ஆட்டம் தான்..

   ஆனா, அது வேற தத்துவம்.. இது புதுசு..

   வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி...

   நீக்கு
 4. ஹாஹாஹா சிறு கதை.

  அது சரி...நடை பழகுவது என்பது குழந்தையின் குணமல்லவா? பெரியவர்களுக்கு அதை எப்படி உபயோகப்படுத்தலாம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அறுபதுக்கு மேல் வயது ஆகி விட்டால் எல்லாரும் குழந்தைகளே.. மூட்டு வலி முழங்கால் வலி எனும்போது நடை தடுமாறி விடுகிறது.. அதனால் தான் அப்படி எழுதினேன்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 5. ஹாஹாஹாஹா....செம ரசித்து வாசித்தேன் துரை அண்ணா.

  நேத்து நடந்த விஷயம் கூட இடையில்....

  சேவலைப் பார்ப்பதற்கான வாய்ப்பே இல்லை...முட்டையிடும் பாக்கியமும் இல்லை//

  துரை அண்ணா கோழி முட்டையிட சேவல் வேண்டாமே....அது மாதாந்திரம் வருவது போல முட்டை வந்துவிடும்....அதன் பின் சேவலுடன் இணைந்தால் மூட்டை சினையாகி குஞ்சு உருவாகும்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா? எனக்கு இந்த விஷயமே தெரியாது. கோழிப்பண்ணைகளில் கோழிகளோடு சேவல்கள் ஒரு சிலவும் இருக்கும் என்று நினைத்தேன்.

   நீக்கு
  2. அன்பின் சகோதரி..

   தாங்கள் சொல்லி இருக்கும் விஷயம் புதிது.. ஆனாலும் வீட்டில் கோழி வளர்த்த போது விடைக் கோழிக்ளுக்கு முக்ம் சிவந்ததுமே சேவலுடன் சேர்ந்து விடும்.. அதைத் தான் இது நாள்வரை நம்பிக் கொண்டிருக்கின்றேன்.

   ஆனாலும் குறு வாழ்க்கை கோழிக்கு ஆறு வாரத்துக்கு மேல் வேலை இல்லை.. கடைசி வரை பெட்டிதான் வாழ்க்கை..

   இதில் நிறைய யோசிக்க வேண்டி இருக்கின்றது..

   அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

   தகவலுக்கு நன்றி..

   நீக்கு
  3. கோழிப்பண்ணைகள் செயல்படும் விதம், கோழியை முட்டையிடும் மெஷினாகச் செயல்படுத்தும் இயல்பு, முழுவதும் இயற்கையல்லாத உணவு என்று அந்த முறையைப் பார்த்தவர்கள் முட்டை பக்கமே போகமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  4. // முழுவதும் இயற்கையல்லாத உணவு ..//

   முழுக்க முழுக்க இயற்கையை மீறியது இன்றைய குறு நாள் கோழி..

   இதையெல்லாம் விட்டு விலகி பல வருடங்கள் ஆகி விட்டன...

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. ரோட்டோரம் கல்யாணம் - கூத்து. அதுவும் கல்யாணம் செய்யும் வயசா என்ன? பெற்றோர் என்ன செய்து கொண்டிருக்கிறாங்களோ......

  கீதா

  பதிலளிநீக்கு
 7. கடைசில பொடியனும் நெஞ்சு நிமிர்த்திட்டான் பாருங்க!!! அதானே நானுந்தேன் நாட்டாமை...பக்கத்துல கோழி வேற...ஹையோ அடுத்த சண்டை வந்துருமோ...!!! தடியன் கண்ணுல படலை போல!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிமேல் தடியன் தொந்தரவு செய்ய மாட்டான்.. அவனுடைய எல்லைகள் தெரிந்து அதில் நுழைய கூடாது.. அவ்வளவு தான் ..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ

   நீக்கு
 8. அண்ணா என் கருத்து/கள் ஒளிந்து கொண்டு விட்டது/ன....கொஞ்சம் பாருங்க அதைப் பிடிச்சு இங்க கொண்டு போட முடியுதான் பாருங்க!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு கருத்து மட்டுமே இருந்தது அதையும் எடுத்தாயிற்று..
   நன்றி சகோ..

   நீக்கு
 9. அதுக்கும் நேரம் வந்திருக்குப் போல. போகட்டும். நெஞ்சு நிமிர்த்தி நடை பழகலாம் இனிமேலே! இப்போல்லாம் கோழி, சேவல்களைப் பார்த்தே பல வருடங்கள் ஆகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாம் காலக் கோளாறு தான்.. கிராமங்களில் கால்நடைகளையே காண முடியவில்லை..

   என்ன சொல்வது?..

   நீக்கு
 10. அடை காக்க வேண்டிய முட்டை என்பதை எப்படிக் கண்டு பிடிப்பீர்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோழி இடும் முட்டையை சேகரித்து வைக்கும் போது தேதியை நினைவில் வைத்துக் கொள்வார்கள்.. ஈடு வைக்கும் பொழுது கணக்கு புரியும்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி .. கருத்துரைக்கு நன்றியக்கா..

   நீக்கு
 11. கதை நன்றாக இருக்கிறது.
  சேவலின் குணநலன்களை தெரிந்து கொண்டேன்.
  படங்கள் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி ..

   கருத்துரைக்கு நன்றி..

   வாழ்க நலமுடன்

   நீக்கு
 12. வணக்கம் சகோதரரே

  கதை அருமை. படங்கள் துல்லியமாக உள்ளது. எதற்கும் ஒரு நேரம் என்பது வர வேண்டுமே..! அதற்குள் இப்படி ரோட்டோரத்தில், மரங்களின் அடியில் என மாங்கல்யதாரணம்... கேட்கவே அசிங்கமாக உள்ளது. என்ன செய்வது? நாம் கலி முத்திய காலத்தில் நடமாடி கொண்டிருக்கிறோம் ..

  கோழி, சேவல்களை எப்போதோ கிராமத்தில் பார்த்தது.அதன்பின நகரத்தின் வாசத்தில் காண முடியவில்லை. அவைகளை பற்றிய விபரங்களையும் தெரிந்து கொண்டேன்.

  இன்றைய நகர (நரக) வாழ்க்கையுடன் சேவல் கதையை இணைத்து சொல்லிய விதம் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // இப்படி ரோட்டோரத்தில், மரங்களின் அடியில் என மாங்கல்ய தாரணம்... கேட்கவே அசிங்கமாக உள்ளது. என்ன செய்வது? நாம் கலி முத்திய காலத்தில் நடமாடி கொண்டிருக்கிறோம்//

   உண்மை உண்மை..
   மனதை கல்லாக்கி கொள்ள வேண்டியது தான்..

   நாம் நல்லவர்களாக வளர்ந்த வரைக்கும் மகிழ்ச்சி.. அவ்வளவே..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   .கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..