நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூன் 23, 2019

பரிதியப்பர் தரிசனம் 1

தன் மகள் தாட்சாயணியைக் கவர்ந்து சென்று விட்டான்
- என்ற கடுங்கோபம் தட்சனுக்கு...

அதனால் சிவபெருமானை மட்டும் ஒதுக்கி விட்டு
தட்சன் யாகம் ஒன்றினை நடத்தினான்...

ஈசனை அவமதித்துச் செய்யப்படும்
யாகம் என்பதனைத் தெரிந்து கொண்ட பிறகும்
ஈசன் எம்பெருமானுக்குப் பெண்ணைக் கொடுத்தவன்
என்று வாளா இருந்த தேவர்கள் அவிர் பாகமும் பெற்றனர்... 

இதனால் சிவ நிந்தை  செய்த தோஷம் ஏற்பட்டது.  

சிவபெருமானின் கோபத்திலிருந்து வெளிப்பட்ட ஸ்ரீ வீரபத்ரமூர்த்தி -
யாகத்திற்குச் சென்றவர்களையெல்லாம் வெளுத்துக் கட்டினார்..

அவர்களுள் சூரியனும் ஒருவன்..
தண்டத்தால் அடிபட்டதில் முன்பற்கள் உதிர்ந்து போயின..
சூரியனது பேரொளியும் குன்றிப் போனது..

தட்சனைப் பெரியவன் என்று எண்ணியதற்காக சூரியன் வருந்தினான்..
குற்றம் நீங்க வேண்டி சிவத்தலங்கள் பலவற்றுக்கும் சென்று வழிபாடு செய்தான். 

அப்படி வழிபாடு செய்த தலங்களுள் இந்தத் திருத்தலமும் ஒன்று...

சூரியனின் வழிபாட்டினை ஏற்றுக் கொண்ட -
எம்பெருமான் அவனை மன்னித்தருளினன்..

சூரியனும் தன் முக அழகையும் பேரொளியையும் திரும்பப் பெற்றான்..

இதனால் மகிழ்ச்சி அடைந்த சூரியன் நன்றிக்கடனாக -
இன்றளவும் சந்நிதியிலேயே நேருக்கு நேர் நின்று  
சிவ பெருமானை - வழிபட்டுக் கொண்டிருக்கின்றான்.

மேலும் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் 18,19,20  
ஆகிய மூன்று நாட்களில் உதிக்கும் வேளையில் 
செங்கதிர்களால் எம்பெருமானைத் தழுவி வணங்குகின்றான். 

இன்றும் நந்தி, பலிபீடம் - அடுத்து மூலவருக்கு எதிரில் நின்று வழிபடும்  சூரியனின் திருமேனியினைக் காணலாம்.

இந்தத் திருத்தலத்தில் சூரியனுக்கு தோஷ நிவர்த்தி ஆனதால், 
இத்தலம் பிதுர் தோஷ பரிகார தலமாக விளங்குகிறது..

இத்தலத்தின் தொன்மைத் திருப்பெயர் - பரிதிநியமம். 

பரிதியப்பர் கோயில் என்று இந்நாளில் வழங்கப்படுகின்றது..

திருக்கோயிலின் பெயரும் இதுவே... திருத்தலத்தின் பெயரும் இதுவே... 

திருத்தலம்
திருப்பரிதிநியமம்


இறைவன் - அருள்மிகு பரிதியப்பர்
அம்பிகை - அருள்தரு மங்கல நாயகி


தலவிருட்சம் - அரச மரம்
தீர்த்தம் - சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், வேத தீர்த்தம்..

சூரியனின் திருப்பெயர்களுள் ஒன்று பரிதி...

சிவபெருமானை வழிபட்டு சூரியன்பழி நீங்கப்பெற்றதால்,
சுயம்பு மூர்த்தியான சுவாமிக்கு பரிதியப்பர், பரிதீசர், பாஸ்கரேஸ்வரர் என்றெல்லாம் திருப்பெயர்கள். 

பரிதியப்பர் - என்ற பெயரை பருத்தியப்பர் என்றும் சொல்கிறார்கள்... 

அழகின் வடிவாகிய மங்கலநாயகி பெண்களுக்கு
மாங்கல்ய பாக்கியத்துடன் சகல ஐஸ்வர்யங்களையும் அருளுகின்றாள்.  

இன்று ஞாயிற்றுக் கிழமை...
சூரியன் வழிபட்டு நிற்கும் ஸ்ரீ பரிதியப்பர் திருக்கோயில் தரிசனம்...

திருக்கோயிலுக்குச் செல்லும் முன்
வழியில் காணும் பசுமை அழகு தங்களுக்காக...

கொடுக்காப்புளி மரம் தூக்கணாங்குருவிக் கூடுகள் 
கூந்தல் பனை 
பூத்திருக்கும் புரசு
தஞ்சை பட்டுக்கோட்டை சாலையில் 12 கி.மீ.,  தொலைவில் உழூர் கிராமம்.. அங்கிருந்து வடக்காக 2 கி.மீ., தொலைவிலுள்ளது பரிதியப்பர் திருக்கோயில்..

கோபுர தரிசனம் 

விண்கொண்ட தூமதி சூடிநீடு விரிபுன் சடைதாழப்
பெண்கொண்ட மார்பில் வெண்ணீறுபூசிப் பேணார் பலிதேர்ந்து
கண்கொண்ட சாயலோடு ஏர்கவர்ந்த கள்வர்க்கிடம்போலும்
பண்கொண்ட வண்டினம் பாடியாடும் பரிதிந்நியமமே.. (3/104) 
-: திருஞான சம்பந்தர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

33 கருத்துகள்:

 1. குட்மார்னிங்.

  கடவுளுக்கும் கோபம் வருமா? சூரியனையும் உதைப்பாரா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..

   தங்களுக்கு நல்வரவு..

   தட்ச யாகத்தில் அடிபட்டவர்களைப் பற்றி
   நான்கு சமயாச்சார்யார்களும் பேசுகின்றனர்...

   அதெல்லாம் படித்ததில்லையா?...

   நீக்கு
 2. தஞ்சையில் பள்ளியில் எனக்கு ஒரு வருட ஸீனியர் ஒருவர் இருந்தார்.அவர் பெயர் பரிதியப்பன். அவர் மாமா வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார். மாமா பெயர் பூவலிங்கம். யாகப்பா நகரில் வீடு.... எவ்வளவு பழைய நண்பர்கள் சட்டென இன்று நினைவுக்கு வந்தார்கள்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்...

   இந்தப் பதிவினால் - பழைய நண்பர்கள் நினைவுக்கு வந்தனரா!..

   மகிழ்ச்சி.. நன்றி!..

   நீக்கு
 3. அழகிய படங்களை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..

   நேற்று மாடக் கோயிலுக்கு விளக்கம் தந்திருந்தேன்.. வாசித்தீர்களா?..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
  2. நேற்றே படித்து விட்டேன்.

   இன்றைய கதை தெரிந்ததுதான் என்றாலும் ஏற்கெனவே நான் எனக்குள் அடிக்கடி எழுப்பிக் கொள்ளும் கேள்வி கடவுளுக்குக்கோபம் வருமா? வந்தால் அவர் கடவுளா?

   நீக்கு
  3. ஶ்ரீராம், மனிதர்களின் குணாதிசயங்களை இறைவனுக்கும் சுமத்திப் பார்த்தால் நீங்கள் கேட்கும் கேள்வி சரி தான்! ஆனால் உங்க அம்மா உங்களை எப்போவும் கொஞ்சிக்கொண்டே இருந்திருப்பார்களா? எதற்கேனும் கண்டித்தது இல்லையா? சின்ன அடியானும் வாங்கி இருப்பீங்களா இல்லையா?

   நீக்கு
  4. பொதுவாக இத்தகைய புராண/தலவரலாற்றுக் கதைகள் சொல்லும் நீதியைத் தான் பார்க்க வேண்டும். யாராக இருந்தாலும் அகம்பாவமோ, கோபமோ, ஆத்திரமோ கூடாது. அப்படித் தவறிழைத்தால் தண்டனை உண்டு. தவறுக்கு வருந்தினால் மன்னிப்பும் உண்டு. இது தான் நம் போன்ற சாமானியர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

   நீக்கு
  5. துரை அவர் பாணியில் கொடுக்கப் போகும் மேல் அதிக விளக்கத்துக்கு நானும் காத்திருக்கேன்.
   சில தாத்பரியங்களை நம்மால் விளங்கிக்கொள்ள முடியாது!

   நீக்கு
  6. அக்கா அவர்கள் கொடுத்திருக்கும் விளக்கத்திற்கு மேலொரு விளக்கமா?..

   இருந்தாலும் அவர்கள் சொல்வது போல சிலவற்றை நம்மால் விளங்கிக் கொள்ளவே இயலாது..

   அதற்குத் தான் சரணாகதி தத்துவம்..

   சமீப நாட்களாக சில கருத்துரைகளுக்குத் தனியாகவே பதிவு போடலாம் போல் இருக்கிறது...

   அந்த அளவுக்கு படிப்பறியாப் பாமரனாகிய என்னையும் பரமன் பகுத்து வைத்திருக்கிறான் எனில் அவன் கருணையே கருணை..

   முயற்சிக்கிறேன்..
   அம்பாள் துணையிருப்பாள்..

   நீக்கு
  7. அழகிய தஞ்சைப் படங்கள். இந்தப் பசுமை என்றும் நிலைக்கட்டும். தவறு செய்தால் வருந்தத்தான் வேண்டும். தெய்வம் என்று ஒன்று இருப்பதால் தானே இன்னும் சிலராவது பிழை புரியாமல் இருக்கிறார்கள். பரிதியப்பர் தரிசனம் எனக்கு ஞாயிறு அன்று கிடைத்ததே

   அருமை. என்றும் வாழ்க வளமுடன்.

   நீக்கு
  8. தங்கள் அன்பின் வருகையும்
   வாழ்த்துரையும் மகிழ்ச்சி... நன்றி அம்மா...

   நீக்கு
 4. முற்றிலும் அறியாத, தெரியாத, சென்றிராத ஒரு கோயில். அறிமுகத்துக்கு நன்றி துரை. கோயிலும் செல்லும் வழியும் அழகோ அழகு. ஒவ்வொரு முறை கருவிலி,பரவாக்கரை செல்லும்போதெல்லாம் தஞ்சை/கும்பகோணம் மாவட்டங்களின் அழகு இன்னமும் முற்றிலும் போகவில்லை என மனம் ஆறுதல் அடையும். இந்தப் படங்கள் மேலும் நம்பிக்கையைத் தருகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 5. பரிதியப்பர் கோயில், இப்பகுதியில் பார்க்கவேண்டிய கோயில்களில் ஒன்று. உங்களால் இன்று மறுபடியும் தரிசனம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. பரிதியப்பர் வரலாறு தந்தமைக்கு நன்றி ஜி வாழ்க வையகம்!

  பதிலளிநீக்கு
 7. அழகான கிராமிய சூழலில் ஒரு கோவில். தகவல் தந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. பரிதியப்பர் கோவில். நான் கேள்விப்பட்டதே இல்லை. கும்பகோணத்தில் தங்கி, கோவில்களைப் பார்த்து மாளாது போல. ஏகப்பட்ட புராதானமான கோவில்கள்.

  இணையத்தில் தரிசிக்க முடிந்தது. நேரில்...அவன் மனது வைக்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெல்லை..

   இந்தக் கோயில் தஞ்சை நகருக்கு அருகில் உள்ளது..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. திருப்பரிதிநியமத்தின் ஈசனைப் பற்றிய பாடலும் மனதைக் கவர்ந்தது.

  பேணார் பலி தேர்ந்து - பெருமைக்கு ஒவ்வாத இரந்துண்ணும் நியமம் கடைபிடித்த சிவபெருமான்.

  பதிகங்களின் அர்த்தம் புரியலைனா, தேடிக் கண்டுபிடிக்க வைக்கிறீங்க. நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெல்லை..

   அவசியம் தரிசனம் செய்யுங்கள்...
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 10. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 11. கோவிலும், போகும் வழியும் மிக அருமை.
  புராண வரலாறும் மிக அழகாய் சொன்னீர்கள்.
  நான் தரிசனம் செய்த நினைவு இல்லை.
  தஞ்சை பக்கம் இருக்கும் கோவில்கள் பாடல் பெறாத கோவில்களும் போய் இருக்கிறோம்.

  தரிசனம் செய்ய வைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 12. பாடல் பெற்ற தலம் இது போய் இருக்கிறேன்.
  போய் வந்த தலங்கள் எழுதி வைத்து இருக்கிறேன். பார்த்தேன் போய் இருக்கிறேன்.
  பருதி நியமம் என்றும் சொல்வார்கள் இல்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பரிதிநியமம் என்பது தொல்பெயர்..
   ஞானசம்பந்தர் இப்படித்தான் பாடுகின்றார்...

   வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 13. பருதியப்பர் தரிசனம் - தெரியாத கோவிலும் , வரலாறும் அறிந்துக் கொண்டேன் இன்று ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 14. தட்சன், எம்பெருமானின் கோபம் பற்றிய கதை அறிந்திருந்தாலும் இப்படிப் பரிதியப்பரான இத்திருத்தலத்தில் புராணக் கதை இது என்பது அறிந்திருக்கவில்லை. படங்கள் விவரணங்கள் வழக்கம் போல் அருமை ஐயா/துரை அண்ணா

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..