நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூன் 21, 2019

சிக்கல் 1

செந்தூரில் போர் முடிப்பதற்கு - முருகன்
சிக்கலிலே வேல் வாங்கினான்!..

- என்றுரைப்பர் ஆன்றோர்...

மிகப்பெரும் சிவாலயம்.. எனினும்,
இத்திருக்கோயிலில் குடிகொண்டிருக்கும்
திருமுருகனின் புகழ் அளவிடற்கரியது...

முன்பு ஒரு ஊழியில் -
காலமல்லாத காலத்தில் பெரும்பஞ்சம் வந்துற்றது..

அவ்வேளையில் ஏதோ ஒரு வினையினால்
உண்ணக் கூடாத ஒன்றை உண்ணும் நிலைக்கு ஆளானது - காமதேனு..

அந்தத் தவறினால் - நிலை தடுமாறிய காமதேனுவை
பூமிக்குச் சென்று வழிபாடு இயற்றும்படிக்கு ஆணையிட்டார் எம்பெருமான்..

கயிலாய நாதனின் கருணையின்படி
ஆரூர் எனும் பெரும்பதிக்கு நேர் கிழக்காக விளங்கிய
மல்லிகை வனத்தை வந்தடைந்தது - காமதேனு....

பக்தி மேலிட்ட நிலையில் -
காமதேனுவுக்கு அது கொண்ட இயல்பினால்
பால் சுரந்து வழிந்திட - அது குளமாகக் கூடி நின்றது...

அந்த நேரத்தில்
அக்குளக்கரையில் சிவபூஜை நிகழ்த்துமாறு
வசிஷ்ட மகரிஷியை அனுப்பி வைத்தார் சிவபெருமான்..

ஈசனின் ஆணையைத் தலைமேற்கொண்ட
வசிஷ்ட மகரிஷி திருப்பாற்குளத்தை அடைந்தபோது
இறையருளால் அங்கே வெண்ணெய் திரண்டு நின்றது...

வசிஷ்ட மகரிஷி அவ்வெண்ணெய்யைத் திரட்டி
லிங்கமாக சமைத்தார்...

அனைத்து வித உபசாரங்களுடன் சிவ வழிபாட்டினை நடத்தி
மகா தீப ஆராதனையை நிகழ்த்தினார்...

காமதேனுவும் அருகிருந்து தரிசித்து பேறு பெற்று
பழி நீங்கிடப் புண்ணியம் எய்தியது...

வசிஷ்டர் தேவலோகத்திற்குத் திரும்புதற்கான வேளை நெருங்கியது..

தாம் வெண்ணெயில் வடித்த சிவலிங்கத்தை விசர்ஜனம் செய்திட எண்ணி
லிங்கத்தை அதன் பீடத்திலிருந்து எடுத்தபோது இறுகி இருந்தது..

எவ்வளவு முயற்சித்தும் எள்ளளவு கூட அசையவில்லை...

தன்னளவில் திகைத்திருந்த வசிஷ்டர்
வழிபாட்டில் பிழையேதும் நேர்ந்ததோ என்று மனம் அயர்ந்தார்...

அப்போது -
அம்பிகையுடன் விடைவாகனத்தில் திருக்காட்சி நல்கிய எம்பெருமான்
தாம் இத்தலத்திலேயே நிலைத்திருக்க திருவுளம் கொண்டிருப்பதாக அருளினார்...

அந்த அளவில்
அத்திருத்தலம் - சிக்கல் எனத் திருப்பெயர் கொண்டது..

ஐயன் இத்திருத்தலத்தில் வெண்ணெய் நாதர் எனத் திருப்பெயர் கொள்ள
அம்பிகை வேல் நெடுங்கண்ணி எனத் திருப்பெயர் கொண்டாள்...

இங்கே - 
ஸ்ரீஹரி பரந்தாமன் வாமனாவதாரத்தில் சிவ வழிபாடு செய்ததாக ஐதீகம்..

பெருமான் - கோலவாமனப் பெருமாள் என, குடிகொள்ள
ஸ்ரீ மஹாலக்ஷ்மி வழிபட்டு நின்றாள் என்பது தலபுராணம்...

இங்குள்ள மற்றொரு தீர்த்தம் - லக்ஷ்மி தீர்த்தம்...

கூடவே ஸ்ரீ ஆஞ்சநேயரும் நல்லருள் புரியும் திருத்தலம்...

ஆலய தரிசனம் செய்யும் நிலையில்
சில படங்கள் - தங்களுக்காக!...
ஸ்ரீ விமான தரிசனம் 

அறுபத்து மூவர் தரிசனம் வேல் வாங்கிய வேலவனின் திருமுகத்தில் வியர்வைத் துளிகள் 
தேவியருடன் ஸ்ரீ சிங்காரவேலவன் 
திருச்செந்தூரில்
ஸ்ரீஹரி பரந்தாமன் சயன திருக்கோலத்தில் அருள்பாலிப்பது போலவே
சிக்கல் எனும் இத்திருத்தலத்தில்
கோலவாமனப் பெருமாளாக நின்ற திருக்கோலத்தில்
சேவை சாதிக்கின்றனன்..

வாமன மூர்த்தியாகி மண்ணையும் விண்ணையும் அளந்த
ஸ்ரீஹரி பரந்தாமனின் மருகனாகிய முருகப்பெருமானின் திருவடிகளை
நினைந்து அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரத் திருப்பாடலை
இவ்வேளையில் சிந்தை செய்வோம்...

தாவடியோட்டு மயிலிலும் தேவர் தலையிலும்என்
பாவடியேட்டிலும் பட்டதன்றோபடி மாவலிபால்
மூவடி கேட்டுஅன்று மூதண்ட கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன்தன் சிற்றடியே...
-: கந்தர் அலங்காரம் :-

கந்தா போற்றி.. கடம்பா போற்றி..
சிக்கலில் வளரும் செல்வா போற்றி!...
ஃஃஃ

20 கருத்துகள்:

 1. குட்மார்னிங். திருச்செந்தூர் செல்லவேண்டும் என்கிற எண்ணம் ஒரு வார காலமாக மனதில் உதித்திருந்தது. அது மாமியாரின் விருப்பம். அதை நிறைவேற்றிட எண்ணி யோசித்திருந்தேன். இன்றைய பதிவில் செந்தூர் பெயர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்...

   தங்களுக்கு நல்வரவு...

   இது போன்ற செய்திகள் தான் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகின்றன..
   செந்தில் நாதன் நல்லருள் புரியட்டும்.. வாழ்க நலம்...

   நீக்கு
 2. வெண்ணெய் நாதர் பற்றிய விவரங்கள் புதிது. வியர்த்த முருகன் முகம் அருமை. அழகான புகைப்படங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்...

   தலபுராணத்தைத்தான் சொல்லியிருக்கின்றேன்...

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. திருச்செந்தூரில் போர் முடித்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் பாடல் நினைவுக்கு வருகிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்...

   தெய்வம் படத்தில் நல்லதொரு பாடல்...

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. இனிய காலையில் முருகப்பெருமானைக் கண்டோம்.

  பதிலளிநீக்கு
 5. அழகன் முருகன், சிக்கல் சிங்காரவேலன். இருமுறை போயிருக்கோம். சிங்காரவேலனின் அழகைச் சொல்லி முடியாது. அங்கே திருவெண்ணெய்நாதரை விட இவனுக்குத் தான் அதிகம் பெயர்! கோயிலும் அதன் விபரங்களும் அறிந்திருந்தாலும் மீண்டும் படிக்கக் கிடைத்தது. படங்களும் அருமை! சிங்காரவேலனின் வியர்த்த திருமுகக் காட்சி அற்புதம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அக்கா..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   சிங்காரவேலவனின் அழகைச் சொல்லுதற்கும் மொழியுண்டோ!..

   நீக்கு
 6. முருகன் தரிசனம் அருமையாக கிடைத்தது .
  இரண்டு, மூன்று முறை பார்த்து இருக்கிறோம்.
  தலவரலாறு , படங்கள் எல்லாம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நான் பலதவை தரிசனம் செய்திருக்கின்றேன்..
   கந்த சஷ்டி சமயத்தில் சென்றதில்லை..

   சிங்கார வேலவன் நல்லவர் தமக்கு நன்மைகளை அருள்வானாக!..

   நீக்கு
 7. திருவெண்ணெய் நாதர் அருள் எங்கும் நிறையட்டும். மனம் மகிழ் திருத்தல வரலாறு. முருகன் முகம் தான் எத்தனை அழகு. துடைக்கத் துடைக்க வியர்வை
  துளிர்க்குமாமே.
  மிக மிக அருமை அன்பு துரை ராஜு. இன்று இரவு பேரனுக்குச் சொல்ல நல்ல கதை.
  நன்றி. சிக்கல் சிங்காரவேலன் அருள் என்றும் நிலைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   சிங்கார வேலவனின் திருமுகத்தின் வியர்வைத் துளிகளைக் காட்டி
   இந்த வருடம் காணொளிகள் எல்லாம் வந்திருந்தன..

   சிங்காரவேலன் அருள் என்றென்றும் நிலைக்கட்டும்...

   நீக்கு
 8. சிக்கல் வரலாற்றோடு முருகனை தரிசிக்க வைத்தமைக்கு நன்றி ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. இனிய தரிசனம் ....

  கோலவாமனப் பெருமாள் ...அழகிய பெயர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பு வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 10. சிக்கல் என்றதும் சிங்காரவேலன் பற்றிய பதிவு என நினைத்தேன். சிக்கல் தலத்தில் இருக்கும் மற்ற மூர்த்திகள் பற்றிய தலவரலாறு சிறப்பு. இதுவரை சிக்கல் சென்றதில்லை. செல்லும் வாய்ப்பு கிடைக்க அவன் அருள் புரியட்டும்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்...

   தங்கள் விருப்பங்கள் நிறைவேறட்டும்...
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 11. சிக்கல் சிங்காரவேலன் என்று நினைத்தோம் ஆனால் அங்கு வெண்ணை நாதர் கேட்டதில்லை. குறிப்புகள் அறிந்து கொண்டோம்.

  எப்படியோ சிக்கல் மூர்த்திகள் அனைவரும் எல்லார் வாழ்விலும் சிக்கல்கள் இல்லாமல், இருக்கும் சிக்கல்களையும் களைந்து அருள் புரியவேண்டும்.

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..