நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 30, 2021

அன்னைக்கு மடல்

              

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
கடந்த வாரத்தில்
அன்புக்குரிய வல்லியமா,
அன்புக்குரிய கோமதிஅரசு,
அன்புக்குரிய கமலாஹரிஹரன்
ஆகியோரது
வலைத்தளங்களில்
கடிதங்கள் பல 
மலர்ந்திருக்கின்றன..

அந்த வகையில் அப்போதே
மடல் ஒன்றினை
நானும் வரைந்தேன்..

வேறு சில இனிய பதிவுகளில்
கவனம் செலுத்தியது
இக்கவிதையை மேலும் மேலும்
செதுக்கியது - என,
வலைத் தள
அஞ்சலில் சேர்ப்பதற்குத்
தாமதமாகி விட்டது..

அஞ்சல் தாமதமாயினும்
அஞ்சல் என்று வருபவள்
அனைத்தையும் அறிவாள்...

இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள
ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன்,
பேச்சியம்மன், இசக்கியம்மன்,
பிடாரியம்மன்
முதலானோர் எங்களது
குலதெய்வக்கோயிலில்
விளங்குகின்றனர்..

ஸ்ரீ நாறும் பூ நாயகி
ஆவுடையாள் (கோமதி)
எனும் திருப்பெயர்கள்
எனது தாத்தா வாழ்ந்த ஊரில்
விளங்கும் அம்பிகையின்
திருப்பெயர்களாகும்...

அன்னைக்கு எழுதப்பட்ட
அந்த மடல்
இன்றைய பதிவில்!..


அம்மா உந்தன் அருள் நோக்கி
அடியேன் வரைந்திடும் கடிதம்..
அம்மா நீயும் இரங்கி வந்தால்
அடியேன் மடலுக்கும்  புனிதம்..

நாயகி உந்தன் நல்லருளாலே
நானும் நலமே நாளும் நலமே
நலமே நலமாய் நின்றிருக்க
நற்றமிழ் மலரை நான் தொடுத்தேன்..

தாயே தமிழே தலைமகளே
தாள்மலர் பணிந்தேன் குலமகளே..
தண்மலர் தமிழ்மலர் தானெடுத்து
தாய் உன்னிடத்தில் நலம் கேட்டேன்..
 

அசுரர் நலத்தினைத் தீர்த்திட்ட
கூர்முனைச் சூலம் நலந்தானா..
நல்லவர் தம்மை வாழ்விக்கும்
அக்கினிக் கொழுந்தும் நலந்தானா..

வஞ்சகர் வலியைத் தீர்க்கின்ற
வாட்படை தானும் நலந்தானா..
கயவர் கூட்டக் கதை முடிக்கும்
பெருங் கதை அதுவும் நலந்தானா..
பேரிடி என்றே ஓசையிடும்
உடுக்கை யதுவும் நலந்தானா..

கொஞ்சு தமிழ்த் திரு ஓங்கார
சங்கு சக்கரம் நலந்தானா..
அரவுடன்  பாசம் காபாலம் 
ஐங்கணை அனைத்தும் நலந்தானா..

பொன்மணி கேடயம் ஈட்டியுடன்
கூர்வேல் அதுவும் நலந்தானா..
அணங்குகள் உந்தன் பரிவாரம்
அவைகளும் ஆங்கே நலந்தானா..
கோமகள் உன்னுடன் விளையாடும்
கோளரி அதுவும் நலந்தானா!..

அனைத்தும் நலமாய் விளங்கட்டும்
அவனியை நன்றாய் காக்கட்டும்..
ஆயினும் அம்மா எனக்கென்று
ஆசைகள் சொன்னேன் உனக்கின்று..

அம்மா உன் அருள் விழிகள்
ஆறுதலைக் காட்டாதா
அங்கும் இங்கும் விளையாடி
அடும் பகையை ஓட்டாதா..
அம்மா உன் புன்னகை தான்
அருள் நெறியைக் கூட்டாதா
அண்டி வரும் பிள்ளை மனம்
மகிழ்வதற்குத் தேற்றாதா..

அம்மா உன் கையிரண்டும்
வாரி என்னைச் சேர்க்காதா
வாட்டமுறும் என் அகத்தில்
வருங்கவலை தீர்க்காதா..
அம்மா உன் திருச்செவியில்
எந்தன் குறை கேட்காதா
என் மகனே.. மகனே.. என்று
செவ்விதழ்கள் மலராதா..


தஞ்சை மகா மண்டலத்தில்
தங்க மாரி ஆனவளே..
சஞ்சலத்தைத் தீர்த்தருளும்
சமயபுர சங்கரியே..
பத்ரகாளி என்றெழுந்து
பகை விரட்டும் அம்பிகையே..
அருள் சுரக்கும் ஆவுடையாளே
ஆதி சிவ நாயகியே..

ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன்
பிரியமுடன் பிரம்ம சக்தி
என்று எங்கும் காப்பவளே
கை கொடுத்து வழி நடத்தி
நல்வினையில் சேர்ப்பவளே..

காத்து அருளும் தாயாகி
கனியமுதம் கொடுத்தவளே..
கோடி நலம் தானருளும்
கோமதியாய்ப் பொலிபவளே..

ஸ்ரீ பேச்சியம்மன்
பேச்சி முத்து என்றே வந்து
பிரியமுடன் பேசுகின்றாய்..
இன்னல் தீர்த்து எந்தன் நெஞ்சில்
இசக்கி என்றே வசிக்கின்றாய்..
எங்கும் பிணி தீர்ப்பவளே
இளங்காளி பிடாரியம்மா..
பீடைகளைப் பிளந்தெறிந்து
பெருந்துணையாய் நிற்பவளே...

தங்க மலர்த் தாமரையில்
தான் பிறந்து வந்தவளே..
எங்கும் துயர் தீர்க்க என்று
சிங்கத்துடன் நின்றவளே..

மஞ்சள் முக மல்லிகையில்
செம்பவளக் குங்குமப்பூ
கொன்றை தவழ் வேணியனின்
மேனி திகழ் சண்பகப்பூ..

தங்க நிறத் தாமரையும்
தண்முல்லை மருக்கொழுந்து
தாழம்மடல் வாசத்துடன்
மகிழம்பூ தாய் உனக்கு..

நாறுங் குழல் நாயகியாள்
நாளும் நலம் சூடிடவே
பவளமல்லி வெட்சியுடன்
தனிநீலக் குவளைப் பூ..

ஸ்ரீ வடபத்ர காளி - தஞ்சை..

அம்மா உன் திருவடியில்
அணி மலர்கள் ஆயிரமாம்
பொன் மலராய்  ஒளி சிந்தும்
அகல் விளக்கும் ஆயிரமாம்...

அம்மா உன் திருவடிகள்
என் கண்ணில் ஒளியாகும்...
அம்மா உன் திருவடியில்
என் சொல்லும் பூவாகும்!..
***
ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம்
ஃஃஃ

ஞாயிறு, மார்ச் 28, 2021

மயிலோன் வாழ்க

              

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி உத்திரத் திருநாள்..

அனைத்து ஆலயங்களிலும்
சிறப்பான வழிபாடுகள்...

இந்நாளில்
செல்வ முத்துக்குமரனை நினைந்து
சிறியதொரு பாடல்...
***

வேலும் மயிலும் துணையாக
வேலவன் மலரடி மனதாக
நாயகன் அழகே மொழியாக
நானும் வாழ்வேன் வாழ்வாக...

வள்ளி நாயகி தாயாக
வளர் குஞ்சரி மடியினில் சேயாக
அருள் தரும் அரசு அவனாக
அடிமலர் பாடும் கிளியாவேன்...

செந்தமிழ் தந்த குருநாதன்
சந்ததம் அருளும் சிவபாலன்
செல்லும் வழிதனில் இனிதாவான்
சொல்லில் கனிந்த கனியாவான்...


குற்றம் கொடுமைகள் பொறுத்திடுவான்
பெற்றவன் என்னைத் திருத்திடுவான்..
தினம் என்னை நல்வழி நடத்திடுவான்..
திரும்பவும் என்னைப் படைத்திடுவான்..

ஹரஹர சிவசிவ மால் மருகன்
அன்பினில் மலரும் திருக்குமரன்
அடியவர் குறைகள் தீர்த்திடுவான்
அமுதொடு திருவருள் சேர்த்திடுவான்..

அருணகிரி வளர் அருள்வேலன்
தருணம் அறிந்து வரு வடிவேலன்
சிக்கலில்  வேல் கொண்ட செல்வனவன்
செந்திலில் சேவற் கொடி கொண்டான்..

அடியவர் அன்பே மயிலாக
அறிவெனும் சுடரே அழகாக
அழகெனும் அழகே முருகாக
அவனும் வருவான் அருகாக..

மனமே மனமே கலங்காதே...
மதி கெட்டு இனியும் தயங்காதே..
தமிழ் வளர் தலைவன் அருகிருக்க
நாளும் பொழுதும் நலம் தானே!..
ஃஃஃ


வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா
வீரவேல் முருகனுக்கு அரோஹரா..
ஃஃஃ

வெள்ளி, மார்ச் 26, 2021

ஆழித் தேரோட்டம்

              

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

நேற்று
ஆரூர்ப் பெரும்பதியில்
நிகழ்ந்த
ஆழித் தேரோட்டத்தின்
சில காட்சிகள்...

திருத்தலம் - திரு ஆரூர்
பஞ்ச பூதத் திருத்தலங்களுள்
மண்ணின் பகுப்பு

இறைவன் சுயம்புமூர்த்தி
புற்று மண்..


இறைவன்
ஸ்ரீவன்மீகநாதர்
(புற்றிடங்கொண்டார்)
ஸ்ரீதியாகராஜ மூர்த்தி
(விடங்கப் பெருமான்)


அம்பிகை
ஸ்ரீ அல்லியங்கோதை
ஸ்ரீகமலாம்பிகை

தீர்த்தம் - கமலாலயத் திருக்குளம்
தல விருட்சம் - பாதிரி

நால்வர் பாடல் பெற்ற
திருத்தலம்..

திருமூலட்டானம் என்பதும்
ஆழித்திருத்தேர் என்பதும் சிறப்பு..

திருத்தேரோட்டத்தின்
காணொளிகளை
வலை தலத்தில்
பகிர்ந்தவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
 

வல்லியந் தோலுடையான் வளர்திங்கட்
கண்ணியினான் வாய்த்த
நல்லிய நான்முகத்தோன்
தலையின் நறவேற்றான்
அல்லியங்கோதை தன்னை ஆகத்
தமர்ந்தருளி ஆரூர்ப்
புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே.. (1/108)
-: திருஞானசம்பந்தர் :-


மட்டுவார் குழலாளொடு மால்விடை
இட்டமா உகந்தேறும் இறைவனார்
கட்டுவாங்கங் கனல்மழு மான் தனோடு
அட்டமாம் புயமாகும் ஆரூரரே.. (5/6)
-: திருநாவுக்கரசர் :-


முன்னெறி வானவர் கூடித் தொழுதேத்து முழுமுதலை
அந்நெறியை அமரர் தொழும்
நாயகனை அடியார்கள்
செந்நெறியைத் தேவர்குலக்
கொழுந்தை மறந்திங்ஙனம் நான்
என்னறிவான் பிரிந்திருக்கேன்
என் ஆரூர் இறைவனையே.. (7/51)
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-


பூங்கமலத்தயனொடு மால் அறியாத நெறியானே
கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடீ
ஓங்கெயில்சூழ் திரு ஆரூர்
உடையானே அடியேன் நின்
பூங்கழல்கள் அவையல்லாது
எவையாதும் புகழேனே!..
-: மாணிக்கவாசகர் :-

 ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

வியாழன், மார்ச் 25, 2021

கருட தரிசனம்

              

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

நேற்று
நாச்சியார் கோயிலின்
பங்குனிப் பெருவிழாவில்
நிகழ்ந்த கருடசேவை
காணொளிகள்
இன்றைய பதிவில்..

வலையேற்றியவர் தமக்கு
நெஞ்சார்ந்த நன்றி..

திவ்ய தேசம் - திருநறையூர்
( நாச்சியார் கோயில்)
பெருமாள் - ஸ்ரீ ஸ்ரீநிவாசன்
தாயார் - ஸ்ரீ வஞ்சுளவல்லி
தீர்த்தம் - அநிருத்த தீர்த்தம்
தல விருட்சம் - வகுளம் (மகிழ மரம்)
**
ஸ்ரீநிவாஸ விமானத்தின் கீழ்
கிழக்குத் திருமுகமாக
கல்யாணத் திருக்கோலம்..


இத்திருத்தலத்தின் சிறப்பு
கல் கருடன்..

பங்குனி
ப்ரம்மோத்ஸவத்தின்
நான்காம் நாள்
கல் கருட சேவை..

இன்று கருட தரிசனம்
கருடாழ்வாரின்
அற்புத தரிசனம்..மங்களாசாசனம்..
பாரை ஊரும் பாரம் தீரப் பார்த்தன் தன்
தேரை ஊரும் தேவதேவன் சேரும் ஊர்
தாரை ஊரும் தண்தளிர் வேலி புடை சூழ
நாரை ஊரும் நல்வயல் சூழ்ந்த நறையூரே..
-: திருமங்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
ஃஃஃ

புதன், மார்ச் 24, 2021

கல்யாண தரிசனம்

              

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

நேற்று (23.3.21)
திருமழபாடி
ஸ்ரீ சுந்தராம்பிகை உடனாகிய
ஸ்ரீ வைத்யநாதர் திருக்கோயிலில் நடைபெற்ற
ஸ்ரீ நந்திகேஸ்வரர் திருக்கல்யாண
வைபவத் திருக்காட்சிகள்..

வலை தளத்தில்
திருக்கல்யாண வைபவங்களைப்
பதிவேற்றம் செய்த
தருமபுர ஆதீனத்தார் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
**
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்..

ஸ்ரீ நந்திகேஸ்வரர் திருவடிகள் போற்றி
ஸ்ரீ சுயம்பிரகாஷிணி திருவடிகள் போற்றி.. போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ


செவ்வாய், மார்ச் 23, 2021

நந்தி கல்யாணம்

             

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி மாதத்தின் புனர்பூசம்

சிவநேயச் செல்வர்கள்
விரும்பியேத்தும் நாள்..

" நந்தி திருக்கல்யாணம்!.. "


ஈசன் எம்பெருமான்
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளை
விரும்பியழைத்துத்
திருக்காட்சி நல்கிய
திருமழபாடியில் நிகழ்கின்றது..


கடந்த ஆண்டு தீ நுண்மித்
தொற்றின் காரணமாக
திருக்கோயிலினுள்
நிகழ்ந்த வைபவம்
இவ்வாண்டு
பொது வெளியில் மக்கள்
மத்தியில் நிகழ்கின்றது...


அம்மையப்பனின்
அபிமானம் பெற்று
சிலாத முனிவருக்கு
திருக்குமாரராக அவதரித்த
நந்தீசனுக்கும்
வியாக்ரபாத முனிவரின்
திருக்குமாரியாகிய
சுயம்பிரகாஷிணிக்கும்
சுபயோக சுபதினமாகிய
இன்று மாலை
திருமழபாடி
ஸ்ரீ சுந்தராம்பிகை உடனாகிய
ஸ்ரீ வைத்தியநாத ஸ்வாமி
திருக்கோயிலில்
சீரும் சிறப்புமாக
திருக்கல்யாண வைபவம் 
நிகழ்கின்றது..அனைவரும் திருவருளைச்
சிந்தித்து மகிழ்க..

முந்தைய ஆண்டின்
திரைக்காட்சிகள்
இன்றைய பதிவில்!...
***

அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மை பூண்டு
நங்குரு மரபிற்கெல்லாம்
முதற்குரு நாதன் ஆகி
பங்கயந் துளவ நாறும் வேத்திரப் படை பொறுத்த
செங்கை எம்பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி..
-: காஞ்சிப்புராணம் :-

எந்தை நந்தீசன் திருவடிகள் போற்றி..
என் தாய் சுயம்பிரகாஷிணி
போற்றி.. போற்றி..

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

திங்கள், மார்ச் 22, 2021

நரியின் சிரிப்பு

            

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நேற்று
அன்பின் திரு. கில்லர் ஜி
அவர்களது பதிவினைப் படித்ததும்
மனதில் தோன்றியவை
இன்று தங்களுக்காக!...


நரியே.. நரியே!..
உன்னைக் குறை கூறுவது
எனது நோக்கம் அல்ல..
அன்புடன் மன்னிக்கவும்..
***

கோடாங்கிப் பாட்டு..
(கில்லர் ஜி அவர்களுக்கு நன்றி..)
**
காலாங்கிச் சித்தர் வந்து
கதைத்தாலும் புரியாது..
கடுவெளியின் சித்தர் நின்று
உதைத்தாலும் விளங்காது..

குறள் வாங்கிப் படிக்காத
குணக்கேடர் மத்தியிலே
கோடாங்கி அடித்தாலும்
குருதியிலே ஏறாது.. ஏறாதப்பா!...

Go டாங்கி என்றாலும்
ஏ  Donkey என்றாலும்
பணப் பொட்டி 
நெறைஞ்சு விட்டா போதுங்க..
அதுக்கு சாலையில
உருண்டிடுவான் பாருங்க..
சாணி சகதியில
புரண்டிடுவான் பாருங்க!..

காலம் மாறிப் போச்சுங்க
பழய கதை ஏனுங்க...
சொந்த வீட்டை இருட்டாகி
தெரு விளக்கை எரிய வச்ச
தியாகம் எல்லாம்
தெருவோட போனதாலே
கூத்தாடி கும்மியடிச்சி
பொதுப் பணத்தைக்
கொள்ளை யடிச்சி
பொங்க வைக்கும்
பொழுதாகிப் போச்சுங்க...

நடை மறந்த நரி அதுக்கு
வாலறுந்து போன கதை
படிச்சிருக்கோம்..
பார்த்திருக்கோம் தெரியாதா!...

நரி வந்து ஞானியாகி
நமக்கு எல்லாம் உபதேசம் 
பண்ணும் போது உள்வேசம்
ஊருக்கெல்லாம் புரியாதா!..

குறி மறைக்க மறந்த நரி
கோவணத்தைத் துறந்து விட்டு
கூச்சலிட்டு வருவதையும் பாருங்க
கூச்சம் விட்டுப் போனதையும் பாருங்க..

அத நெனச்சு இத நெனச்சு
அதனால ரத்தம் கொதிச்சு
ஆகப் போவதேதும்
உண்டா கில்லர் ஜி..

நல்ல வழிய நாம் தேடி
நடக்கும்போது வழி தேடி
நானிலமே நமைத் தொடரும்
அண்ணாச்சி!..
***
அவ்வப்போது
இவ்வாறான
பதிவுகள் வரலாம்
என்பதனை அன்புடன்
தெரிவித்துக் கொள்கிறேன்..

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்..
ஃஃஃ

சனி, மார்ச் 20, 2021

வாழிய பல்லாண்டு

           

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
உலக சிட்டுக்குருவிகள் நாள்..

இப்பூவுலகின்
உயிர்கள் அனைத்தும்
இன்புற்று வாழ்வதற்கு
நம்மால் ஆனவற்றைச் செய்து
அவற்றின் நல்வாழ்வுக்கு
வேண்டிக் கொள்வோம்..

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

வியாழன், மார்ச் 18, 2021

குரு தரிசனம்

          

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

கடந்த வியாழன்று
எங்கள் பிளாக்கில்
அன்பின் ஸ்ரீராம் அவர்களது
பதிவுக்குக் கருத்துரை இடும்போது
அப்படி இப்படி சுற்றிக் கொண்டு
தஞ்சை வடவாற்றின் தென்கரையில் விளங்கும்
ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளது
ப்ருந்தாவனத்தைப் பற்றிச்
சொல்ல வேண்டியதாயிற்று..


கருத்துரைகளின்
ஊடாக சொல்லப்பட்டிருந்த
அதனைப் பற்றி அடுத்தடுத்த
நாட்களில் சிந்தனை..


ஞாயிறன்று காலை
எனது Fb யில்
ஆனந்த அலைகளாக
ஸ்ரீ ஸ்வாமிகள் விளங்கும்
தஞ்சை ப்ருந்தாவனத்தின்
திருக்காட்சிகள்
தரிசனம் ஆகின..ஸ்வாமிகள்
தஞ்சை வடவாற்றின் கரையில்
சந்நியாசம் (1621) ஏற்ற பிறகு
பன்னிரண்டு ஆண்டுகள் தவம் இருந்திருக்கின்றார்கள்...

பின்னாளில் அந்த இடத்தை
அறிய இயலாமல் அன்பர்கள்
தவித்த போது
ஐந்தலை அரவு ஒன்று
அங்கே தோன்றி
ஸ்வாமிகள் தவமிருந்த
இடத்தை மண்டலமிட்டுக்
காட்டியதாக வரலாறு..


மேற்கூரையில்லாமல்
விளங்குகின்ற
ப்ருந்தாவனத்தின் பீடத்தின் கீழ்
ஐந்தலை அரவின்
ஸ்வரூபத்தினைத்
தரிசிக்கலாம்...


ஸ்ரீ ராகவேந்த்ர ஸ்வாமிகள் தான்
அவ்விதம் தோன்றியருளினார் என்றும் போற்றுகின்றனர்...

ஸ்ரீ ப்ருந்தாவனத்தின்
அலங்காரத் திருக்காட்சிகளை
இன்று பதிவு செய்வதில்
மகிழ்ச்சியடைகின்றேன்..அழகிய படங்களை வலையேற்றிய
( Thanjavur Ragavendraswamy Brindavanam)அன்பர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
***
தஞ்சை பழைய பேருந்து 
நிலையத்திலிருந்து
சீனிவாச புரம் வழியாக
பூதலூர் செல்லும் பேருந்துகள்
ஸ்ரீ ராகவேந்திர பிருந்தாவனம்
வழியாகச் செல்கின்றன..

வியாழக் கிழமைகளில்
சிவகங்கைப் பூங்கா கோட்டை
வாசலில் இருந்து ஆட்டோக்கள்
இயக்கப்படுகின்றன...


பூஜ்யாய ராகவேந்த்ராய
சத்ய தர்ம ரதாய ச பஜதாம்
கல்ப வ்ருக்ஷாய நமதாம்
காமதேனவே..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

சனி, மார்ச் 13, 2021

துயர் தீர்கவே

         

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
தஞ்சை
ஸ்ரீ ராஜராஜேஸ்வரத்தில்
ஸ்ரீ மஹா சிவராத்திரியன்று
மூன்றாம் காலத்தில்
அம்மையும் அப்பனும்
ரிஷப வாகனத்தில்
எழுந்தருளிய திருக்காட்சி..


அபிஷேக ஆராதனை - என,
நான்கு காலங்களிலும்
சிறப்புடன் நிகழ்ந்த
வழிபாடுகளின் போது
ஒரு லட்சம் பக்தர்கள்
தரிசனம் செய்ததாக
செய்தி..

இவ்வேளையில்
அம்மையப்பனைத் தரிசித்து
நாடெங்கும்
நலமும் நல்லறமும் தழைப்பதற்கு
வேண்டிக் கொள்வோம்..
***
கீழுள்ள படம்
பெரிய கோயிலை அடுத்துள்ள 
சிவகங்கைக் குளத்தின்
நடுத்திட்டில் அமைந்திருக்கும்
சிறு கோயிலில் விளங்கும்
சிவமூர்த்தி..


இது தான்
அப்பர் பெருமான் பாடியருளிய தஞ்சைத் தளிக்குளத்தார்
திருக்கோயில் என்று
தற்போது சொல்கின்றனர்..

இத்திருக்கோயிலில் இருந்து
தட்சிண மேருவின்
தரிசனம்..


தஞ்சை வெட்டாற்றின்
கரையிலுள்ள நெடார்
திருக்கோயிலில்
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர்
ஸ்ரீ மங்களாம்பிகை
தரிசனம்..
உவரி
ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி
திருக்கோயிலில்
ஸ்ரீ சந்திரசேகரர்
ஸ்ரீ மனோன்மணி அம்மை
திருக்காட்சி..திரு ஐயாறு
ஸ்ரீ செம்பொற்சோதி
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி
தரிசனம்..

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே!..
-: திருஞானசம்பந்தர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ