நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூன் 28, 2019

கீழ்வேளூர் 1

வெற்றி வேல்!.. வீர வேல்!..

செந்திற் கடற்கரையில் எழுந்த ஜயகோஷம்
அண்ட பகிரண்டம் எங்கும் எதிரொலித்தது.!..

மூம்மூர்த்திகளும் கூடி நின்று  பூமாரி பொழிந்தனர்!..

சூரபத்மன் வீழ்ந்தான்..
ஆணவம் அழிந்த நிலையில் அடங்கி ஒடுங்கி, 

''..முருகா சரணம்!. முதல்வா சரணம்!.'' - என - 

 கந்தனின் காலடியில் கிடந்தான்.. 

அவனைப் பரிவுடன் நோக்கிய கந்தப் பெருமான், - 
''..இனி எமது மயில் வாகனத்துள் இன்புற்றிருப்பாயாக!..'' 
- என, இன்தமிழால் மொழிந்தான்... 

அவ்வண்ணமே - ஆகி - பெருவாழ்வு பெற்ற சூரன்,
இப்படியும் அப்படியுமாக நடை பழகி - தன் பசுந்தோகையை விரித்து
ஆடியபடி - ஆறுமுகப்பெருமானை வலம் வந்து வணங்கினான்...

மயில் வாகனனாகத் திருக்காட்சி நல்கிய எம்பெருமானின்
திருவடிகளில் விழுந்து வணங்கினர் - மறுவாழ்வு பெற்ற தேவர்கள்...


சர்வம் சுப மங்கலம்  - என்றிருந்தது பிரபஞ்சம் முழுதும்... 

அந்த வேளையில், ஏகாந்தமாக இருந்த கந்தவேள் - தனக்குள் சிந்தித்தான்.

சிவபக்தனாகத் தவமிருந்த சூரபத்மன் - சிந்தை கெட்டதால் சீரழிந்தான்!..

தந்தையின் ஆணைப்படி - அவன் கொண்ட ஆணவத்தை அழித்தாயிற்று!.. 

ஆயினும் ... ஆயினும் ...

மயிலோனின் மனம் அமைதி கொள்ளவில்லை... 

அம்மையப்பனைத் தரிசித்து, வலம் வந்து வணங்கி நின்றான்..

செல்வமுத்துக் குமரனின் உள்ளக் கிடக்கையைப்
புரிந்து கொண்ட சிவப்பரம் பொருள் - புன்னகை பூத்தது.

இது நிகழ்ந்தது - திருக்கயிலை மாமலையில் என்றால் - 
அங்கே திருப்பாற் கடலில் தூங்காமல் தூங்கிக் கிடக்கும்
திருத்துழாய் மார்பன் - தானும் புன்னகை பூத்தான்!..

தம்பியர் எண்மருடன் வீரபாகு உடன் வர -  பூதப்படையும் சூழ்ந்து வர  , 

பூவுலகம் வந்தடைந்த முருகனை - வரவேற்பது போல
பிரம்மாண்டமாகத் தழைத்து நின்றது - இலந்தை மரம்...

முருகன் தன் வேலினைக் கொண்டு
ஆங்கொரு ஒரு தடாகத்தை உருவாக்கினான்...

சரவணப்பொய்கை எனப்பட்ட தீர்த்தத்தில் அனைவரும் நீராடினார்கள்...

நவ வீரர்களும் சூழ்ந்து நின்றனர்...
பூதப்படை அவர்களுக்கு அரணாக நின்றது..

ஒன்றிய மனத்துடன் கரங்குவித்து நின்ற செல்வக்குமரனின்
முன்பாக சுயம்பு லிங்கம் ஒன்று மூண்டெழுந்தது...

தாழ்ந்து பணிந்து வணங்கிய வள்ளல் பெருமான்  -
தான் எண்ணி வந்த காரியத்தைத் தொடங்கினான்...

அந்த நொடியிலேயே பேரிரைச்சல்... பெருஞ்சத்தம்...

சூரபத்மனுடன் நடாத்திய போரில் மாண்டு விழுந்த
அசுரக் கூட்டம் ஆவி ரூபமாகியும் வெறி அடங்காமல்
அந்தப் பகுதியை கலக்கியடிக்க முனைந்தன...

காம வசப்பட்ட மாயை - காசியப முனிவருடன் கூடிக்
கணக்கின்றிப் பெற்றெடுத்த மாயைகள் அல்லவா!..

ஒரு கணம் தவித்து நின்றான் கந்தப்பெருமான்...

கடைக் கண் விழித்து நோக்கினாலும் போதும்...

அந்த மாயைகள் அனைத்தும்
சருகுகளாகக் கருகிப் போய்விடக்கூடியவை தான்!...

ஆனாலும் சிந்தையை சிவபூஜையில் செலுத்திய பின்
வேறொன்றைக் கருத்தில் கொள்வதா?...

சற்றே, மனம் உருகியது.. இதுவும் தகுமோ?...

பரமேஸ்வரன் மலர்ந்த புன்னகையுடன்
அருகிருந்த தேவியை நோக்கியருளினார்...

அந்த மட்டில் அம்பிகைக்கு உற்சாகம் பீறிட்டெழுந்தது...

ஆக வேண்டியதனைத்தும் இம்மி பிசகாமல் நடந்தேறின...


ஆனந்தப் புன்னகையுடன் முருகன் தனது வழிபாட்டினை நடத்தி முடித்தான்..

இப்படியாக முருகப் பெருமான்
சிவபூஜை நிகழ்த்திய திருத்தலம் தான் கீழ்வேளூர்...

இன்றைக்கு கீவளூர் என வழங்கப்படுகின்றது...

இத்திருத்தலத்தைத் தரிசனம் செய்வதற்கு
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்...திருமுருகன் வழிபட்ட திருத்தலம் எனினும்
ஈசன் எம்பெருமானே மூல மூர்த்தி...

கீழ்வேளூர் - தேவாரத் திருப்பதிகம் பெற்ற திருத்தலமாகும்..

திருத்தலம் - கீழ்வேளூர் (கீவளூர்)

இறைவன் - கேடிலியப்பர், அட்சயலிங்கேஸ்வரர்..
அம்பிகை - வனமுலை நாயகி, சுந்தரகுஜாம்பிகை..


தலவிருட்சம் - இலந்தை
 தீர்த்தம் - சரவணப்பொய்கை, பிரம்மதீர்த்தம்

பிரம்மாண்டமான சுதை நந்தி
திருக்கோயில் கட்டுமலை..
கோசெங்கட்சோழரால் அமைக்கப்பட்ட மாடக்கோயில்..

மூலஸ்தானத்திற்குச் செல்லும் படிக்கட்டுகள்  
மாடக் கோயிலின் படிக்கட்டுகளுக்குத் தென்புறம் முருகனின் சந்நிதி...
முருகன் வடக்கு முகமாகத் திகழ்கின்றனன்...

சிக்கல் தலத்தில் மாடக்கோயிலில் சிவ சந்நிதிக்கு அருகில்
தெற்கு முகமாக முருகனின் சந்நிதி..

கீழ்வேளூரில் மாடக்கோயிலின் கீழ் வடக்கு முகமாக முருகனின் சந்நிதி..

முருகன் சிவபூஜை நிகழ்த்திய தலம் ஆதலின்
ஸ்ரீ வள்ளி தேவயானையுடன் கூடிய சந்நிதி கிடையாது...

முருகன் சந்நிதி அருகேயே மேஜை போட்டு அர்ச்சனை சீட்டு விற்பனை...
கேட்பதற்குத் தயக்கம்.. எனவே அங்கே படம் ஏதும் எடுக்கவில்லை...

மாடக்கோயிலில் இருந்து கோபுர தரிசனம்  
மூலஸ்தானமும் வீதி விடங்கர் விமானமும் 
விநாயகர் சந்நிதியில் இருந்து இரட்டை விமானங்கள் 
ஞானசம்பந்தப்பெருமானும் அப்பர் ஸ்வாமிகளும்
திருப்பதிகம் பாடிப்பரவிய திருத்தலம் கீழ்வேளூர்...

ஆளான அடியவர்கட்கு அன்பன் தன்னை
ஆனஞ்சும் ஆடியைநான் அபயம் புக்க
தாளானைத் தன்னொப்பார் இல்லா தானைச்
சந்தனமுங் குங்குமமுஞ் சாந்துந் தோய்ந்த
தோளானைத் தோளாத முத்தொப் பானைத்
தூவெளுத்த கோவணத்தை அரையில் ஆர்த்த
கீளானைக் கீழ்வேளூர் ஆளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடிலாரே!.. (6/67)
-: அப்பர் பெருமான் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ

27 கருத்துகள்:

 1. குட்மார்னிங்.

  கீவளூர் தல வரலாறு அறிந்தேன்.

  பதிலளிநீக்கு
 2. அழகிய படங்கள். மூலஸ்தானத்திற்கு இட்டுச் செல்லும் படிக்கட்டுகள் ஆவலைத்தூண்டுகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..

   சிக்கல் கோயிலிலும் இப்படித்தான் இருக்கும்...

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 3. உந்தி எமை உள்ளனுப்பும்
  நந்தியம்பெருமானே
  முந்தி நீ இருக்கிறாய்
  உள்ளிருக்கும் பெம்மானை
  எந்நேரமும் தரிசித்தவண்ணம்
  எங்களுக்கும் வழிவிட்டு
  அருள்செய்
  தங்கமகனை நாங்களும்
  தரிசிக்க வசதியாய்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகா...
   கவிதை அருமை... அருமை...

   ஆனால் இங்கே நந்தி மறைக்க வில்லை..

   ஸ்வாமி மாடி வீட்டுக்காரர்...

   ம்கிழ்ச்சியும் நன்றியும்...

   நீக்கு
 4. கீவளூர் பற்றிய விபரங்களும் தரிசனத்தோடு கூடி தந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி .. நன்றி...

   நீக்கு
 5. கீழ்வேளூர் கோவில் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.

  வீதி விடங்கர் விமானம், இரட்டை விமானங்கள் படம் மிக அழகு.
  அனைத்து படங்களும் மிக அழகு.
  நன்றி.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களன்பின் வருகையும் கருத்துரையும்
   வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 6. பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   நான் நலமாக இருக்கிறேன்.. தங்கள் நலமும் தங்களது குடும்பத்தினர் நலமும் அன்புடன் விழைகிறேன்..

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. பல வருடங்கள் முன்னர் போனது கீவளூர். இங்கே தானே அம்பிகை அஞ்சு வட்டத்து அம்மையாக உக்கிரமாகக் காட்சி கொடுக்கிறாளோ? அல்லது அது வேறு ஊரா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் அக்கா தங்களது வருகைக்கு மகிழ்ச்சி..

   அஞ்சுவட்டத்து அம்மை என உக்ர தரிசனம் இத்தலத்தில் தான்..

   ஞாயிறன்று அவளது தரிசனம்...

   மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 8. கீவளூரில் தான் துர்கை வடிவில் அம்பிகை உக்கிரமாகக் காட்சி தந்த நினைவு. பல வருடங்கள் முன்னர் போனது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களன்பின் வருகையும்
   கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 9. சரவணப் பொய்கை முருகனால் உண்டாக்கப்பட்டதா கார்த்திகைப் பெண்கள் அறு முகனை கண்டெடுத்த இடம் என்றுதான் வாசித்த நினைவு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆறுமுகனைக் கண்டு எடுக்கவில்லை. ஆறு பொறிகளும் சரவணப்பொய்கைக்கு வந்து சேர ஈசன் கார்த்திகைப் பெண்களைக் குழந்தைகளை வளர்க்கப் பணித்தார். அந்த சரவணப் பொய்கை இமயச் சாரலில் உள்ளது. அதன் கதை சொல்லப் போனால் நீளும்! இது வேறே! தல தீர்த்தம். சரவணனால் உண்டாக்கப்பட்டது என்பது ஐதிகம் என்பதால் சரவணப் பொய்கை எனப்படும். பொதுவாக முருகன் இருக்கும் கோயில் கொண்டிருக்கும் இடங்களின் குளங்களை பக்தி மேலீட்டால் சரவணப் பொய்கை என்றே சொல்லுபவர்களும் உண்டு.

   நீக்கு
  2. http://sivamgss.blogspot.com/2008/11/blog-post_06.html சரவணப்பொய்கை பற்றியும் கந்தன் அங்கே வந்து சேர்ந்தது குறித்தும் இந்தப் பதிவில் படிக்கலாம். சரவணப் பொய்கை அம்பிகையின் அம்சம். இதன் உள்ளார்ந்த தத்துவம் விளக்க விளக்க மனம் அமைதி அடையும்!

   நீக்கு
  3. அன்பின் ஐயா அவர்களது வருகைக்கு மகிழ்ச்சி...

   கீழ்வேளூரில் திருக்குளத்தை வேல் கொண்டு உருவாக்கியதாக ஐதீகம்...

   பழனியில் சண்முக தீர்த்தம் என்பார்கள்.. திருப்பரங்குன்றத்தில் தீர்த்தக்குளம் சரவணப் பொய்கை எனப்படும்...

   கீதா அக்கா அவர்கள் சொல்லிய்து போல எல்லாம் பக்தி மேலீட்டினால் தான்...

   கயிலை மாமலைக்குத் தெற்கே திருச்சிராப்பள்ளி மலையை தக்ஷிண கயிலாயம் என்பதுவும் காசிக்குத் தெற்கே தமிழகத்தில் தென்காசி என்பதுவும் பக்தி உணர்வு மேலிட்டதனால் தான்..

   தஞ்சை பெரிய கோயிலுக்கே
   தக்ஷிண மேரு என்று ஒரு பெயர்.

   ஆங்குள்ள விடங்க மூர்த்தியை
   தக்ஷிண விடங்கர் என்றும் குறிப்பர்..

   ஐயா அவர்களது வருகையும்
   கீதாக்கா அவர்களது விளக்கமும் மகிழ்ச்சி.. நன்றி....

   நீக்கு
 10. கீழ வேளூர் கேள்விப்பட்ட பெயராக இருக்கிறது. ஆனால் சென்றதில்லை. பார்க்க வேண்டிய தலங்கள் எத்தனை எத்தனை? என்றைக்கு இவையெல்லாம் காணக் கிடைத்திடுமோ? இப்போது உங்கள் மூலம் தரிசித்துக் கொண்டோம். மிக்க நன்றி.
  பதிகங்களை போடும்பொழுது அவற்றின் பொருளையும் எழுதினால் நன்றாக இருக்கும். உதாரணமாக 'ஆனஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க' என்னும் வரியில் ஆனஞ்சும் ஆடி என்பது எதைக் குறிக்கிறது? என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

   ஆனஞ்சு என்பது ஆன் அஞ்சு.. என்றாகும்...

   பசுவிலிருந்து பெறப்படும் ஐந்து பொருள்களாலும் அபிஷேகம் செய்யப்படுபவன் என்பதாகும்...

   பதிவுகள் பெரும்பாலும் பெரியதாக இருக்கையில் திருப்பாடல்களும் அதன் விளக்கங்களும் இன்னும் அதிகமாக இருக்கும்..

   அதோடு எளிமையாக இருக்கும் திருப்பாடல்களை மட்டும் பதிவில் தருவதால் அனைவருக்கும் புரியும் என எண்ணினேன்...

   நல்லதொரு கருத்தைச் சொல்லியதற்கு மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 11. அழகான நந்தி...

  தல வரலாறு என அனைத்தும் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி... நன்றி...

   நீக்கு
 12. விடங்கர் விமானம்...பார்க்கப் பார்க்க பார்த்துக்கொண்டேயிருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 13. படங்கள் பார்க்கப் பார்க்கப் பரவசம். எத்தனை அழகான கோவில்கள் நம் ஊரில்.

  கீவளூர் பற்றிய தகவல்களுக்கு நன்றி. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 14. படங்கள் அனைத்தும் மிக மிக நன்றாக இருக்கின்றன. தலவரலாறும் சிறப்பு. புதிய தகவல்கல்,

  நந்திஎம்பெருமானும் கடைசி இரு ப்டங்களும் மனதைக் கவர்கின்றன.

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு