நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 15, 2022

ஸ்ரீ வேங்கடேசம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று 
ஸ்ரீ சுபகிருது வருடம் 
புரட்டாசி மாதத்தின்
நான்காவது 
சனிக்கிழமை

இன்றைய தரிசனம்

திருவேங்கட மாமலை


ஸ்வாமி
திருவேங்கடநாதன்

தாயேதந்தை என்றும் தாரமே கிளைமக்களென்றும்
நோயே பட்டொழிந்தேன் உன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கி ஆள் என்னைக் கொண்டருளே.. 1028

தெரியேன் பாலகனாய்ப் பலதீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயின பின் பிறர்க்கே உழைத்து ஏழையானேன்
கரிசேர் பூம்பொழில்சூழ் கனமாமலை வேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.. 1034
-: திருமங்கையாழ்வார் :-

மேற்கண்ட
திருப்பாசுரங்கள்
இரண்டிற்கும்
நான் என்னளவில்
பொருள் கண்டிருக்கின்றேன்..


தாய் தந்தை சுற்றம் மனைவி மக்கள
எனும்  இந்த 
சொந்தங்கள் பந்தங்கள்
எல்லாம் நீ தந்தவை.. 

என்றாலும் 
இவையெல்லாம் 
உடைத்து விட முடியாத - 
விடக் கூடாத சங்கிலிகள் 
என்கின்றன
உலகியல் நூல்கள்..

அறியாப் பிள்ளையாய்
பிறந்ததனால் நீதி நெறி 
எனும் புரிதல்  இல்லாமல் போனது..  

பால வயது விடலைப் பருவம் எல்லாமும்  
 விதியின் விளையாட்டுகள்!.. 

விதி தான் வலியது 
சொல்லவும் வேண்டுமோ! ..

எத்தனை எத்தனை பிழைகள்
எத்தனை எத்தனை குறைகள் 
எண்ணவும் தெரியவில்லை..
எண்ணிக்கையும் தெரியவில்லை.. 

 காம குரோத லோப மோகம் 
என, எதிலும் வீழ்ந்ததில்லை..

மது மாந்தியதில்லை..
சூதாடித் தொலைந்தது இல்லை..
மனை மாறிப் புகுந்ததில்லை..
பொய் கொண்டு
சொன்னதில்லை..

என்றாலும்,
உறவுகளுக்கு என்று உழைத்து 
ஓய்ந்த போது தான்
ஏழையாகவே இருப்பதை 
உணர்ந்தேன்.. 

எல்லாம் விழலுக்குத் தானா?.. 
அருளுக்கு என  எதுவுமே இல்லையா!.. 
என்று, அயர்ந்த நேரத்தில் 
செல்வர்க்கு அழகு 
செழுங்கிளை தாங்குதல் 
என்றொரு நீதி இருப்பதையும் 
அறிந்தேன்..

அந்த நீதியின் படி
இயன்ற அளவுக்கு 
நடந்ததனால் - 
அதுவும் நீ வகுத்ததே!..
என்ன பலன் என்பது 
உனக்கு மட்டுமே
தெரிந்த ரகசியம்..

இந்நிலையில்
பொருளைத் தேடி திரிந்தும்
ஏழையாகத் தான் 
இருக்கின்றேன் ஐயா!.. 

ஆனால்,
உன் அருளைத் தேடுவதில் 
ஏழையாகி விட மாட்டேன்..

ஈர்க்கு இடை போகா இளமுலை மாதர்தம் 
கூர்த்த நயனக் கொள்ளையில்  பிழைத்தும் 
பித்த உலகர் பெருந்துறைப் பரப்பினுள் மத்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்தும்

நீ விதித்தபடியான 
சூழ்நிலைகளில்
 நீ விதித்தபடியே
வாழ்ந்து விட்டு  இப்போது உனது 
அருளை நாடி வந்திருக்கின்றேன்..

வினையின்படி
சொல்லால் செயலால்
சிந்தையால்  
சரியோ பிழையோ என்னை 
அன்புடன் பொறுத்தருளல் 
வேண்டும்..


யானைகள் கூட்டமாக சுற்றித் திரிகின்ற
வனங்களுடன் பசுமையான மூங்கில்
காடுகளும் நறுமணம் கமழும்
பூஞ்சோலைகளும் 
நிறைந்திருக்கும் திரு வேங்கட 
மாமலையை உடையவனே..


அந்தரங்கம் அறிந்த
அந்த ரங்கனே
என்னைப்
பொறுத்தருள்வாய்..

ஸ்ரீ ஹரி பரந்தாமனே 
அடியேனையும் 
ஆண்டருள்வாய்!..
***
(அழகிய படங்களுக்கு 
நன்றி : இணையம்)

காட்சித் தொகுப்பு
காணொளி
தஞ்சையம்பதி

திருப்பாசுரத்தைப் பாடி 
வைத்தோருக்கு 
நெஞ்சார்ந்த நன்றி..


ஸ்ரீ வேங்கடேசாய மங்களம்

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
***

14 கருத்துகள்:

 1. மனசாட்சி:
  பெரிய யோக்கியன் மாதிரி எழுதி இருக்கின்றாய்...

  பெருமாளுக்குத் தெரியாதா?...

  எல்லாம் தெரியுமே.. ஆனாலும் , மற்றவங்களுக்குத் தெரியாது இல்லையா.. அதனால் தான்!..

  பதிலளிநீக்கு
 2. பாசுரமும், விளக்கமும் படித்தேன். கோவிந்தனை பாடி மகிழ்வோம். பாடல் காணொளி அருமை.
  திருவேங்கடவன் அனைவரையும் காக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // திருவேங்கடவன் அனைவரையும் காக்க வேண்டும்.//

   அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. நோய் என்பது, எக்காலத்திலும் தீராத நோய் என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டது. அலை என்றைக்கு நிற்பது, அலைகடலில் என்றைக்கு நீராடுவது? ஒவ்வொரு நிலையிலும் நம்முடைய உழைப்பு, உதவி குடும்பத்துக்கு எப்போதுமே தேவையாகவே இருக்கும். அப்போது நமக்கு என்று எப்போது நேரம் கிடைக்கும்? நமக்கு என்றால் என்ன? நம் பாவச்சுமையை எப்போது குறைப்பது?

  பிறர்க்கு உழைப்பதில் நாம் எப்படி ஏழையாகமுடியும்? காரணம், நம் முயற்சி உழைப்பு நம் நல்லதற்காகத்தான் இருக்கும். மனைவி, மகன், பெற்றோர் என்ற தனித் தனி ஜீவன்கள் நம்முடன் சேர்ந்திருப்பதினாலேயே நாம் அவர்களுக்கே உழைத்துக்கொண்டிருந்தால் நம் ஜீவனைக் கடைத்தேற்றுவது எப்போது? மற்றவர்களுக்கு உழைக்கும்போது, அதனால் நமக்கு ஏறும் பாவமூட்டையும், நம்மை இன்னும் ஏழையாக்கத்தானே செய்யும்?

  நிறைய யோசிக்கவைத்த பதிவு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது என்னளவில் எனக்காக எழுதப்பட்டது..

   ஆச்சார்யார்கள் அருளிச் செய்த பொருள் வேறு..
   இது ஒரு முறையீடு..

   தனது துவார பாலகர்களையே தன்னை நிந்திக்குமாறு அனுப்பி வைத்த கருணைக் கடல் அவனல்லவோ!..

   அன்பின் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. பாசுரங்களும் விளக்கமும் நன்றாகவே இருக்கிறது. இது கடைசி சனிக்கிழமை. திருவேங்கடவன் தரிசனம் கிடைத்தமைக்கு நன்றி. இப்போதைய நிலைமையில் அவனே சரணாகதி என விழுந்தால் மட்டுமே நன்மை. நடப்பதெல்லாம் மனதை வேதனைப்படுத்தவே செய்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அவனே சரணாகதி என விழுந்தால் மட்டுமே நன்மை..//

   அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
   நன்றியக்கா..

   நீக்கு
 5. அழகான பதிவு துரை அண்ணா.

  ஆம் சாதாரண மனிதர்கள்தானே நாம் இல்லையா...உங்கள் பொருள் வரிகள் அருமை

  ஆனால் எனக்கு ஒன்று தோன்றும்....எல்லாமே அவன் செயல் என்றுதானே நாம் சொல்கிறோம் இல்லையா..நம் கைக்கு அப்பாற்பட்டது...விதி என்று சொல்லும் நாம்... விரக்தி வரும் போது மட்டும் ஏன் பிரித்துப் பார்க்கிறோம்?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //விதி என்று சொல்லும் நாம்... விரக்தி வரும் போது மட்டும் ஏன் பிரித்துப் பார்க்கிறோம்?..//

   விரக்தியும் நமக்கு விதிக்கப்பட்ட விதி தான்..

   அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  அருமையான பதிவு. இந்த வருட கடைசி புரட்டாசி சனிக்கிழமையன்று பெருமாளை தரிசிக்கும் வாய்ப்பு தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி.

  திருமங்கையாழ்வார் பாடிய திருப்பாசுரங்கள் இரண்டும் அருமை. அவற்றிற்கு தாங்கள் அளித்த விளக்கமும் மிக அருமை.

  "பலனை எதிர்பாராமல் கடமையை செய்" என்று நமக்கு அறிவுரை தந்தவன் அவன்தானே.. அவனை தரிசிக்க, மனமாற வழிபட நமக்கென்று நேரத்தை வகுத்துத் தருபவனும் அவன்தானே. அவனையே.. அவன் பாதங்களையே சரணடைவோம். அவனருள் நமக்கு கண்டிப்பாக நமக்கு துணையாக வரும். இதில் எந்த மாற்றமுமில்லை.

  காணொளி பாடல் அருமை. அதற்கென தாங்கள் தொகுத்த ஒளிக்காட்சிகளும் பக்தி பூர்வமாக நன்றாக இருந்தன. இன்றைய அருமையான தரிசனப் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // அவனையே.. அவன் பாதங்களையே சரணடைவோம். அவனருள் நமக்கு கண்டிப்பாக நமக்கு துணையாக வரும்... //

   அன்பின் வருகையும் ஆறுதலான கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..