நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், அக்டோபர் 20, 2022

ஐந்து வீட்டு சுவாமி 8


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
உடன்குடி - செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி தரிசனம் தொடர்கின்றது..

ஐந்து வீட்டு சுவாமிகள் என்றாலும் இங்கேயுள்ள சந்நிதிகள் எட்டு..

இங்கே பிரதானமாக சொல்லப்படும் மந்திரமும் எட்டெழுத்து..

மூன்று பதிவு என நினைத்த என்னை கூடுதலாக ஐந்து  எழுத வைத்ததும் எட்டெழுத்து.. 

ஐந்து வீட்டு சுவாமிகள் வலைத்தளம்,  Fb இவை இரண்டும் தகவல் தொகுப்பிற்கு உறுதுணையாக இருந்தன..

அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..

முதல் இரண்டு படங்களும் தஞ்சையம்பதி..

மற்ற படங்கள்: ஐந்து வீட்டு சுவாமி Fb
புளிய மரம்
ஜாதி வேறுபாடுகள் மலிந்திருந்த அந்த காலகட்டத்தில ஐந்து வீட்டுக் கோயிலில் சுவாமிகளுக்கு பொங்கல் படைத்து வழிபட்டார் ஏழை ஒருவர்.. 

அந்தப் பிரசாதத்தை மற்றவர்களுக்கு கொடுத்த போது, அதனைப் பெற்றுக் கொள்வதற்கு எவரும் முன் வரவில்லை. 

காரணம், அவர்  துப்புரவுத் தொழிலாளி என்பதே..

வருத்தத்துடன் அழுது புலம்பித் தவித்த அந்த ஏழை சோர்வடைந்து கோயில் வாசலிலேயே தூங்கி விட்டார்.  

அவரது கனவில் தோன்றிய பெரிய சுவாமிகள் - 

"இந்தப் பிரசாதத்தை இங்கே எங்காவது புதைத்து வைத்து விட்டு அடுத்த வருடம் வந்து திறந்து பார்!.. "- 

எனக் கூறி மறைந்தார்.

புளிய மரத்தின் அருகில் நாக வடிவங்கள்

திடுக்கிட்டு விழித்த  தொழிலாளி கோயிலுக்குத் தெற்குப் பக்கத்தில்  இருந்த புளிய மரத்தின் கீழ்  வாழை இலையை வைத்து பிரசாதத்தை மூடி, அதைப் பானையோடு புதைத்து வைத்தார்..


மறுவருடம் கோயிலுக்கு வந்த அவர் பெரிய சுவாமியை வணங்கி விட்டு, புதைத்து வைத்திருந்த அந்த பானையைத் தோண்டி எடுக்க, 

அந்தப் பிரசாதமானது அப்பொழுதுதான்  சமைத்ததைப் போல ஆவி பறக்க இருந்தது. அங்கு இருந்தவர்கள் இதைப் பார்த்ததும் திகைத்துப் போயினர்..  

அந்தத் தொழிலாளியின் பக்தியையும் பிரசாதத்தின் மகிமையையும் புரிந்து கொண்டனர்..

அந்தப் பிரசாதத்தைத் தங்களுக்கும் தந்தருள வேண்டுமென்று அனைவரும் தண்டனிட்டு நின்றனர்.. கேட்டு கேட்டு வாங்கிச் சாப்பிட்டனர். 

ஏழைத் தொழிலாளிக்கு இறைவன் அளித்த நல்லருள் இது - என்று அந்த நாளில் இருந்து  இக் கோயிலில் ஜாதி பேதம் என்று எவரும் மனதாலும் பார்ப்பதில்லை.

பனையறுப்பு பொங்கல்


ஒவ்வொரு ஆண்டும் தை முதல் தேதி அன்று அந்த வருடத்தின் முதல் பனை அறுவடை செய்யப்படுகிறது, 

அன்று செட்டியாபத்து மக்கள் ஊர் கூடி முதலில் அறுவடை செய்த பனை ஓலையை பெரிய சுவாமி சந்நிதியின் முன் வாழை மரம் கட்டுவது போலக் கட்டி 
வைக்கின்றனர்..

மக்கள் கூடி வணங்கி தங்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவும்படி வேண்டிக் கொள்கிறார்கள். 

மேலும், அன்று கோயிலில் பொங்கல் வைத்ததும் பொங்கல் வைக்கப்பட்டதை ஊருக்கு அறிவிக்கிறார்கள். அதன் பிறகு தான் ஊரில் அனைவரும் பொங்கல் பானை வைக்கின்றார்கள். 

கோயிலில் பொங்கல் வைப்பதற்கு முன் ஊரில் யாரும் பொங்கல் வைப்பதில்லை..

ஸ்ரீ பெரிய பிராட்டி அம்மன்
ஐந்து வீட்டு சுவாமிகள் தரிசனத்திற்கு எந்த சூழ்நிலையிலும் பெண்கள் வரலாம்.. எந்த ஒரு தடையும் இல்லை..

இக்கோயிலில்
கர்ப்பிணிப் பெண்களின்  குழந்தைக்கும் சேர்த்து இரட்டைப் பிரசாதம் என்பது சிறப்பு..

ஸ்ரீ பெரிய சுவாமி
பழிகள் கொலைகள் செய்தாலும் பாவம் 
அதிகம் நினைத்தாலும்
விழிகண் குருடு கால் கைகள் முடக்கம் 
இருந்தால் மனம் உருகி
அழியாதிருக்கும் எட்டெழுத்தை அன்பாய் 
துதித்து வினை தீர்த்து 
தெளிவாய்  மனதில் அருள் புரியும் சிவமாய் 
உதித்த திருமணியே!..

ஸ்ரீ ஆத்தி சுவாமி
அஞ்சும் மூன்றும் எட்டெழுத்து ஹரி ஓம் 
எனும் உயிரெழுத்து
துஞ்சாதிருக்கும் வடவம்பில் தோன்றும் 
சங்கு சக்கரமும்
நெஞ்சில் அடக்கி எட்டெழுத்தை நினைத்தோர் துன்பம் தீர்த்து வைக்கும்
செஞ்சொல் தமிழே தந்தருளும் சிவமாய் 
உதித்த திருமணியே!..
**
இந்த அளவில் ஐந்து வீட்டு சுவாமிகளின் 
தரிசனம் நிறைவு எனக் கொள்வோம்..

ஐந்து வீட்டு சுவாமிகள் நல்லருளால்
நன்மைகள் என்றும் தொடரட்டும்..


ஐந்து வீட்டு 
சுவாமிகளே போற்றி..
***

17 கருத்துகள்:

 1. சுவையான தகவல்கள்.  ஆங்காங்கே அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.  நமக்குதான் தெரிவதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // ஆங்காங்கே அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.. //

   அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. ஐந்து வீட்டு சுவாமி பற்றிய பதிவுகள் எல்லாம் அருமை.
  பாடலை பாடி வேண்டிக் கொண்டேன். எட்டு எழுத்தை சொல்லி மனம் உருக வேண்டிக் கொள்வோம்.
  பெண்கள் கோயிலுக்கு எந்த சூழ்நிலையிலும் வரலாம் என்றால் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி.
  தூத்துகுடியில் இருக்கும் போது பொங்கல் வைக்க வண்டிகளில் முந்தின நாள் வந்து வீட்டுக்கு வீடு பனை ஓலைகளை போட்டு விட்டு காசு வாங்கி போவார்கள்.கார்த்திகை மாதம் கோவில்களுக்கு பனை ஓலை போடுவார்கள் , சொக்கபனை கொழுத்த பனை மரம் உயரம் பாகம்பிரியாள் கோயிலில் சொக்க்பனை கொழுத்துவார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // தூத்துக்குடியில் இருக்கும் போது பொங்கல் வைக்க வண்டிகளில் முந்தின நாள் வந்து வீட்டுக்கு வீடு பனை ஓலைகளை போட்டு விட்டு காசு வாங்கி போவார்கள்.//

   நானும் கேள்விப் பட்டிருக்கின்றேன்..

   அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி

   நீக்கு
 3. ஆச்சரியமான கதை. அடுத்த வருடமும் அப்படியே இருந்த பிரசாதம்...எப்படியோ எல்லோரும் அதை வாங்கிக் கொண்டது சிறப்பு. பனை ஓலை விஷயமும் சிறப்பு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // எப்படியோ எல்லோரும் அதை வாங்கிக் கொண்டது சிறப்பு.. //

   அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   நீக்கு
 4. தகவல்கள் ஆச்சர்யமளிக்கிறது ஜி வாழ்க நலம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   நீக்கு
 5. பெண்களுக்குத் தனிச் சிறப்புக் கொடுத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எல்லாமே புதிய அறியாத விபரங்கள். பகிர்வுக்கும் படங்களுக்கும் நன்றி. ஐந்து வீட்டு சுவாமி என்னும் பெயரே உங்கள் மூலமே கேள்விப் படுகிறேன்.

  பதிலளிநீக்கு
 6. //Geetha Sambasivam "ஐந்து வீட்டு சுவாமி 8” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

  பெண்களுக்குத் தனிச் சிறப்புக் கொடுத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எல்லாமே புதிய அறியாத விபரங்கள். பகிர்வுக்கும் படங்களுக்கும் நன்றி. ஐந்து வீட்டு சுவாமி என்னும் பெயரே உங்கள் மூலமே கேள்விப் படுகிறேன்.// மெயில் பாக்சில் இருந்து இழுத்துக் கொண்டு வந்து சேர்த்திருக்கேன். கொஞ்ச நாட்கள் தொந்திரவு இல்லாமல் இருந்தது. இன்னிக்கு மறுபடி ஆரம்பிச்சுடுச்சு போல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // பெண்களுக்குத் தனிச் சிறப்புக் கொடுத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.//

   அனைவரையும் ஐந்து வீட்டு சுவாமிகள் காத்தருளட்டும்..

   அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 7. ஐந்து வீட்டு சுவாமி பற்றிய கதை சுவாரசியமாக இருக்கிறது. மிகவும் வியப்பான நிகழ்வு.

  நீங்கள் எடுத்திருக்கும் படங்கள் நன்றாக இருக்கின்றன

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // நீங்கள் எடுத்திருக்கும் படங்கள் நன்றாக இருக்கின்றன..//

   படங்கள் அவர்களுடைய தளத்தில் இருந்து.. கடைசியில் உள்ள குதிரை மட்டும் நம்முடையது..

   அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி துளசிதரன்..

   நீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. இந்தப் பதிவு நேற்று எனக்கு எப்படியோ மிஸ்ஸாகி விட்டது. வருந்துகிறேன். மன்னிக்கவும்.

  படங்கள் நன்றாக உள்ளன. ஐந்து வீட்டு சுவாமி கோவிலின் ஒவ்வொரு தகவலும் சிலிர்க்க வைக்கின்றன. ஒரு வருடமாகியும் அவர் சமைத்த உணவு வீணாகாமல் அப்படியே சுடச்சுட இருந்த தெய்வ அருள் உண்மையிலேயே சிலிர்க்க வைக்கிறது.

  கோவிலுக்கு வரும் பெண்களுக்கு தரும் மரியாதையும், அங்கு பொங்கல் வைத்த பின் ஊரில் அனைவரும் பொங்கல் கொண்டாடும் செய்தியும் கோவிலில் உள்ள தெய்வங்களை அந்த ஊரில் உள்ள அனைவரும் பக்தியுடன் வழிபடுவதை நிரூபிக்கிறது. எட்டெழுத்து மந்திரத்தை நானும் பக்தியுடன் ஜபித்துக்கொண்டேன். ஐந்து வீட்டு சுவாமி தெய்வங்களை பக்தியுடன் வணங்கிக் கொள்கிறேன். கோவில் பற்றிய சுவையான தகவல்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன். .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // ஐந்து வீட்டு சுவாமி கோயிலின் ஒவ்வொரு தகவலும் சிலிர்க்க வைக்கின்றன. ஒரு வருடமாகியும் அவர் சமைத்த உணவு வீணாகாமல் அப்படியே சுடச்சுட இருந்த தெய்வ அருள் உண்மையிலேயே சிலிர்க்க வைக்கிறது.//

   எல்லாம் அன்புதான் அருள் தான்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..