நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, அக்டோபர் 21, 2022

கந்தா - என,

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 4
வெள்ளிக்கிழமை

ஸ்ரீ அருணகிரிநாதர்
அருளிச்செய்த
திருப்புகழ்


திருச்செங்கோடு

தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த ... தனதான

அன்பாக வந்து உன்றாள் பணிந்து
ஐம்பூத மொன்ற ... நினையாமல்

அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க
ளம்போரு கங்கள் ... முலைதானும்

கொந்தே மிகுந்து வண்டாடி நின்று
கொண்டாடு கின்ற ... குழலாரைக்

கொண்டே நினைந்து மன்பேது மண்டி
குன்றா மலைந்து ... அலைவேனோ!.

மன்றாடி தந்த மைந்தா மிகுந்த
வம்பார் கடம்பை ... யணிவோனே

வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
வம்பே தொலைந்த ... வடிவேலா

சென்றே யிடங்கள் கந்தா எனும் போ(து)
செஞ்சேவல் கொண்டு ... வரவேணும்

செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த
செங்கோ டமர்ந்த ... பெருமாளே!..
-: ஸ்ரீ அருணகிரிநாதர் :-
நன்றி : கௌமாரம்


உன் மீது அன்பு கொண்டு உன் சந்நிதிக்கு வந்து உன்
பாதங்களைப் பணிந்து,

ஐம் பூதங்களுடன் ஐம்புலன்களும்
ஒன்றுபட்டு நின்று
உள்ளம் உருகி உன்னை நினைத்து வணங்காமல்,

அழகு நங்கையரின் மாயம் எனும் நஞ்சு நிறைந்த கண்களையும், தாமரை மொட்டுப் போன்ற
மார்புகளையும்,

வண்டுகள் மொய்க்கின்ற பூக்கள் நிறைந்த
கூந்தலையும் மனதில் நினைத்து அவர்கள் மீதில் மோகம் அதிகமாகி,

அறியாமை மிகுந்து மனங்குன்றி அதனால் ஒருவழிப்படாமல் - உருப்படாமல்
அலைவேனோ?..

(அவ்விதமாக ஆகி விடாமல்)
கனகசபையில் நடனமிடும் சிவ பெருமான் தந்த
திருக்குமரனே,

நறுமணம் மிகுந்த கடம்ப மலர்களை மாலையாய் அணிபவனே,

உன் சந்நிதிக்கு வந்து வணங்கி நிற்கின்ற
அடியவர்களின் பிறவிகளை அடியோடு தொலைக்கின்ற வடிவேலை உடையவனே,

பற்பல தலங்களுக்கும் சென்று "கந்தா.. " - என, அழைத்து வணங்கும் போது செஞ்சேவற் கொடியுடன், எனது முன் வந்தருள வேண்டும்...

செந்நெற்பயிரும் தாமரையும் ஒன்றாக வளரும் வயல்கள் நிறைந்த திருச்செங்கோட்டில் உறைகின்ற பெருமாளே!..

முருகா சரணம்
முதல்வா சரணம்
முத்துக் குமரா
சரணம்.. சரணம்..
***

16 கருத்துகள்:

 1. அவ்வண்ணமே எமக்கும் அருள்வாய் முருகா..  முத்துக்குமரா....  

  கடம்ப மாலையா கடப்ப மாலையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக.. வருக...
   எமக்கும் அருள்வாய் ..
   எல்லாருக்கும் அருள்வாய் முருகா..

   கடம்ப மாலை தான்..
   கடம்ப மாலையானை கடப்பதும் உண்டோ!..

   மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. சூதனாய்க் கள்வனாகி தூர்த்தரோடு இசைந்த காலம், மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை...... என்ற திருமாலை பாசுரம் நினைவுக்கு வந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதே மாதிரி அப்பர் பெருமானின் தேவாரமும் உள்ளது.. அனைத்தும் நம் பொருட்டுத் தான்..

   நெல்லை அவர்களின்
   அன்பு வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 3. திருசெங்கோட்டில் உறைகின்ற முருக பெருமானை திருப்புகழ் பாடி வணங்கி விட்டேன். நன்றி.
  அருள்வாய் குகனே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருள்வாய் குகனே..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. திருப்புகழ் பாடல் நன்றாக உள்ளது அதன் விளக்கமும் அருமை. வெள்ளியன்று முருகப்பெருமான் தரிசனம் நன்று. அனைத்தும் நலமாக அனைவரும் சுபிட்சமாக வாழ அவனருள் புரிய வேண்டுமென மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
  கந்தா சரணம்.🙏
  கடம்பா சரணம். 🙏
  கார்த்திகேயா சரணம். 🙏
  கதிர்வேலா சரணம். 🙏
  பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அனைவரும் சுபிட்சமாக வாழ அவனருள் புரிய வேண்டுமென..//

   அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. தங்களது கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 5. திருச்செங்கோட்டுப் பெருமானின் திருப்புகழைப் பொருளுடன் தெரிந்து கொண்டேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //திருப்புகழைப் பொருளுடன் தெரிந்து கொண்டேன்..//

   அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. தங்களது கருத்துரைக்கு நன்றி சகோ..

   நீக்கு
 6. நல்லதொரு பகிர்வு. திருச்செங்கோடு ஒரே முறை தான் போனோம். பொருளுடன் படிக்கக் கொடுத்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // பொருளுடன் படிக்கக் கொடுத்தமைக்கு நன்றி.//

   அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. தங்களது கருத்துரைக்கு நன்றியக்கா..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..