நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 01, 2022

ஸ்ரீ ராஜகோபாலம்

 


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று 
ஸ்ரீ சுபகிருது வருடம் 
புரட்டாசி 14 
இரண்டாவது சனிக்கிழமை

இன்றொரு தரிசனம்

தலம்
செண்பகாரண்யம்
ராஜமன்னார்குடி
(அபிமான தலம்)


மூல மூர்த்தி
வாசுதேவப்பெருமாள்

உற்சவ மூர்த்தி
ஸ்ரீ ராஜ கோபால(ன்) சுவாமி


தாயார்
செங்கமலவல்லி 
செண்பக லக்ஷ்மி, 
ஹேமாம்புஜ நாயகி

தீர்த்தம்
ஹரித்ரா நதி (தெப்பக்குளம்)
சங்கு தீர்த்தம்,சக்கர தீர்த்தம்.

தலவிருட்சம்
செண்பக மரம்


முதலாம் குலோத்துங்க சோழன் இக்கோயிலைக் கட்டியிருக்கின்றான்.. பின்னாட்களில் தஞ்சை நாயக்கர்கள் திருப்பணி செய்திருக்கின்றனர்..

தலைநகர் தஞ்சையில் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயில் என்ற பெயருடன் இன்றும் இருக்கின்றது.. மூலஸ்தானத்தில் உபய நாச்சியார்களுடன் ஸ்ரீ சுதர்சன மூர்த்தி விளங்குகின்றார்..

ஆனாலும்  ராஜ கோபால சாமி கோயில் என்று தான் பெயர்.. 

அந்தக் கோயிலுக்குள்  ஸ்ரீ சிவேந்திரர் என்று சிவ ஆலயமும் ஸ்ரீ பகளாமுகி என்று காளி கோயிலும் உள்ளன - என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?..

தஞ்சையில் இருந்த ஸ்ரீ ராஜ கோபாலர் தான் மன்னார்குடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டார் - என்றும் அந்தக் காலத்தில் பேசிக் கொள்வார்கள்..


இங்கே
மன்னார்குடி ஸ்ரீ ராஜ கோபால சுவாமி கோயிலில் 
பங்குனி மாதத்தில் பதினெட்டு நாட்கள் பிரம்மோத்ஸவம்.. 

பதினாறாம் நாள் வெண்ணெய்த் தாழி உற்ஸவம் சிறப்பானது.. 

கோயிலின் சிறப்புகள் ஏராளம்.. மன்னார்குடியில் மட்டுமே ராஜ கோபுரத்துக்கு எதிரே கருட ஸ்தம்பம் உள்ளது..

தாயார் சந்நிதிக்கு எதிரில் கருடன் பெண் வடிவில் அமர்ந்திருக்கின்றாராம்.. 

ஏன் என்று தெரியவில்லை.. கோயிலுக்குப் பலமுறை சென்றிருந்தும் நான் கவனித்ததில்லை..

பெருமானின் அழகு கொஞ்சம் திருமேனிகளில் இதுவும் ஒன்று..

இரண்டாம் சனிக்கிழமையாகிய இன்று ஸ்ரீ ராஜ கோபால சுவாமியை மனதார சிந்தித்து இருப்போம்..

(படங்கள் எல்லாம் இணையத்தில் இருந்து பெற்றவை)


விண்கொள் அமரர்கள் வேதனைதீர முன்
மண்கொள் வசுதேவர்தம் மகனாய் வந்து
திண்கொள் அசுரரைத் தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே
கனவளையீர் வந்துகாணீரே.. 38

பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளி மணிவண்ணன்
புருவம் இருந்தவா காணீரே
பூண்முலையீர் வந்து காணீரே.. 39

மண்ணும் மலையும் கடலும் உலகேழும்
உண்ணுந் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு
வண்ணம் எழில்கொள் மகரக் குழையிவை
திண்ணம் இருந்தவா காணீரே சேயிழையீர். 
வந்துகாணீரே.. 40

முற்றிலும் தூதையும் முன்கைம் மேல்பூவையும்
சிற்றில் இழைத்துத் திரி தருவோர்களை
பற்றிப் பறித்துக் கொண்டு ஓடும் பரமன்தன்
நெற்றி இருந்தவா காணீரே
நேரிழையீர் வந்து காணீரே.. 41

அழகிய பைம் பொன்னின் கோல் அங்கைக்கொண்டு
கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப
மழகன்றினங்கள் மறித்துத் திரிவான் 
குழல்கள் இருந்தவா காணீரே குவிமுலையீர்
வந்து காணீரே.. 42
-: பெரியாழ்வார் :-

வழக்கம் போல
தஞ்சையம்பதி
வழங்கும்
காட்சித் தொகுப்புக்
காணொளி ஒன்று..

 
ஓம் ஹரி ஓம்
***

5 கருத்துகள்:

 1. ஓம் நமோ நாராயணாய.  வேங்கடராமா கோவிந்தா..

  பதிலளிநீக்கு
 2. படங்களும், நீங்கள் தொகுத்த காணொளி அருமை.
  ஸ்ரீராஜகோபால சுவாமியை மனதார பிரார்த்தனை செய்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 3. ராஜகோபாலசுவாமி தரிசனம் பெற்றோம் படங்கள் காட்சிகள் அழகு.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..