நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி 27
நான்காவது
சனிக்கிழமை
இன்று
மஹாளய அமாவாசை
திருவேங்கட தரிசனம்
கிழக்கே திருமுகம் காட்டி
ஆனந்த விமானத்தின் கீழ் நின்ற திருக்கோலம்..
தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டொழிந்தேன் நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்
வேயேய் பூம் பொழில் சூழ் விரையார் திருவேங்கடவா
நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னைக் கொண்டருளே.. 1028
மானேய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம்பொழில் சூழ் திருவேங்கட மா மலை
என் ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.. 1029
கொன்றேன் பல்லுயிரை குறிக்கோள் ஒன்று இலாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிது ஆக உரைத்து அறியேன்
குன்றேய் மேகம் அதிர் குளிர் மா மலை வேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.. 1030
எப் பாவம் பலவும் இவையே செய்து இளைத்தொழிந்தேன்
துப்பா நின் அடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்
செப்பார் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை
என் அப்பா வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.. 1032
தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்
கரிசேர் பூம் பொழில் சூழ் கன மா மலை வேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.. 1034
பற்றேல் ஒன்றும் இலேன் பாவமே செய்து பாவி ஆனேன்
மற்றேல் ஒன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல்தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா
அற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.. 1036
-: திருமங்கையாழ்வார் :-
நன்றி நாலாயிர திவ்யப்ரபந்தம்
*
தஞ்சை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசர் தரிசனம்