நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், செப்டம்பர் 28, 2015

என் பெயர் எது?..

உன் பெயர் எது!..

செல்வராஜூ..

சரி!..

தந்தை பெயருடன் - துரைராஜன் செல்வராஜூ., அதுவே துரை செல்வராஜூ..

அதெல்லாம் இல்லை!.. உண்மையில் உன் பெயர் எது?..

ஏ.. மனசாட்சி!.. காலமல்லாத காலத்தில் வந்து ஏன் கலாட்டா செய்கின்றாய்?..

கலாட்டா எல்லாம் செய்யவில்லை!.. வா.. உனக்குப் புரிய வைக்கின்றேன்!..


எங்கே அழைத்துச் செல்கின்றாய்?..

காலச் சக்கரத்தில் சற்றே பின்னோக்கிச் செல்வோம்!..

காலச்சக்கரமா!.. ஆஆ!.. ஆ!..

* * *

அது ஒரு ஈ!..

வெகுநேரமாக அங்கேயும் இங்கேயுமாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கின்றது..

அதுவும் ஒரு கேள்வியுடன்!..

அதனிடமும் கேள்வி இருக்கின்றதா!..

பதில்களைத் தவிர - எல்லாரிடமும் கேள்விகள் இருக்கின்றன!..

ஈ - அதற்கு என்னதான் பிரச்னை?..

அது தன் பெயரை மறந்து விட்டது..

அடடா!..

செல்லும் இடத்திலெல்லாம் - விரட்டியடிக்கின்றார்கள். வா!.. - என்று நல்வரவு கூறி, அழைப்பார் யாருமில்லாததால் - பெயர் மறந்து போயிற்று.. இப்போது அது தன் பெயரை அறிந்து கொள்ளவேண்டிய ஆவலுடன் இருக்கின்றது..

ஏன்?.. அதற்கு கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கின்றதா!..

நீயும் உன் பெயரை மறந்து விட்டாய்!. இதில் ஈயை ஏளனம் செய்வது எதற்கு?..

மன்னிக்கவும்.. மனசாட்சி!..

இதோ.. பார்.!.. அங்கே மேய்ந்து கொண்டிருக்கும் கன்றிடம் செல்கின்றது.. வா நாமும் செல்வோம்!..

என் பெயரைக் கூறுகின்றேன் என்று சொல்லி விட்டு அங்கேயும் இங்கேயும் அலைய வைக்கலாமா?..

நடந்தால் உடம்புக்கு நல்லது.. பேசாமல் வா.. என்னோடு!..

அருகில் சென்றோம்..

கன்றிடம் - என் பெயர் என்ன?.. - என்று கேட்டது - ஈ.

எனக்குத் தெரியாதே!.. என்று தலையை ஆட்டியபடி உரைத்தது கன்று..

அப்போது அதன் கழுத்திலிருந்த மணிகள் கலகல - என ஒலி எழுப்பின..

மனம் சோர்ந்தாலும் தன் முயற்சியில் தளராத - ஈ - அடுத்த இடம் நோக்கிப் பறந்தது..

இப்படியாக,

அலைந்து திரிந்த - ஈ - ஒரு குதிரையிடம் சென்று வழக்கமான கேள்வியைக் கேட்டது..

குனிந்த தலை நிமிராமல் - புல் மேய்ந்து கொண்டிருந்தது குதிரை..

நெற்றிக்கு முன்னால் - ஙொய்ங்!.. என்ற சத்தம் கேட்டுத் திடுக்கிட்ட குதிரை நிமிர்ந்து பார்த்தது.

ஹீஹீ..ஹீய்..ய்யீ.. ஈஈ.. ஈ!.. - என்று கனைத்தது..

இதைக் கேட்டதும் -  ஈக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை..

தன் முயற்சியில் வெற்றியடைந்த ஈ -
ஆனந்தக் களிப்புடன் ரீங்கரித்தபடி பறந்து போனது..

காட்சிகள் அனைத்தும் கலைந்து போயின..

ஆயினும், என் முன் வைக்கப்பட்ட கேள்விக்கு விடை?..  இதுவரை இல்லை..

திகைப்புடன் நோக்கினேன்..

இப்போது நடந்த நிகழ்ச்சிகளை ஒன்று இரண்டாக வரிசைப் படுத்திக் கூறு!..

நீ என்ன பார்வதி பராசக்தியா!.. ஔவையாரிடம் ஒன்று இரண்டு என வரிசைப் படுத்திப் பாடு!.. - என்று கேட்டமாதிரி?..

உனக்குத் தெரியா விட்டால் விடு!.. நான் சொல்கின்றேன்!..

கொழுகொழு கன்றே என்பெயர் என்ன?..
கன்றின் தாயே என்பெயர் என்ன?..

கன்று மேய்க்கும் ஆயனே என்பெயர் என்ன?..
ஆயன் கைக் கோலே என்பெயர் என்ன?..

கோலை வளர்த்த கொடிமரமே என்பெயர் என்ன?..
கொடிமரத்துக் கொக்கே என்பெயர் என்ன?..

கொக்கு உண்ணும் மீனே என்பெயர் என்ன?..
மீன் பிடிக்கும் வலைஞனே என்பெயர் என்ன?..

வலைஞன் கைக்கலயமே என்பெயர் என்ன?..
கலயம் செய்த குயவனே என்பெயர் என்ன?..

குயவன் கைச் சகடையே என்பெயர் என்ன?..
சகடை சுற்றும் மண்ணே என்பெயர் என்ன?..

மண்ணில் வளரும் புல்லே என்பெயர் என்ன?..
புல்லைத் தின்னும் குதிரையே என்பெயர் என்ன?..

ஹீஹீ..ஹீய்..ய்யீ.. ஈஈ.. ஈ!..

ஆகா!.. மனசாட்சி.. இது அந்தக் காலப் பாட்டு ஆயிற்றே!.. இன்னும் நினைவில் வைத்திருக்கின்றாயே!..

அதனால் தான் - நான் மனசாட்சி!..

சரி.. ரொம்பவும் பெருமை கொள்ளாதே.. இதில் என் பெயர் எங்கே வருகின்றது?..

அவசரப்படாதே!.. நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்!..

மறுபடியுமா!..

கொழுகொழு கன்றையும் அதன் தாயையும் பார்த்திருக்கின்றாயா?..

கன்றே கொழுகொழு என்று இருக்க - அதன் தாய்!.. நினைக்கவே பிரமிப்பாக இருக்கின்றது. எவ்வளவு ஆரோக்கியமான பாலும் நெய்யும் கிடைத்திருக்கும்!. அந்த மாதிரியான பசுவையும் கன்றையும் பாலையும் நெய்யையும் பார்த்தே பலகாலங்கள் ஆயின..

ஏன்?..

மாடுகள் மேய்வதற்கு இடம் இல்லை.. பசுமையான மேய்ச்சல் நிலங்களை ஒழித்தாயிற்று.. விவசாயிக்கே மாடும் கன்றும் சுமைகளாகிப் போயின.. அதனால - லாரியில ஏத்தி கொலைக்களத்துக்கு அனுப்பிடறாங்க!..

அப்புறம் - அந்த ஆயன்!..

எனக்கு அயன்.. தான் தெரியும்!.. நீ என்ன புதுசா சொல்கின்றாய்.. எனக்கு இதெல்லாம் தெரியாது!..

ஆயன் என்றால் - கால்நடைச் செல்வங்களை கவனமாகப் பராமரிப்பவன்!..

ஓ!.. மந்தைகள் தொலைந்தன.. மாடுகள் அழிந்தன.. ஆயன் மட்டும் இருந்து ஆகப் போவதென்ன!.. 

விளங்கிவிடும்!.. ஆயன் கை கோல்!..

இது தெரியுமே.. கோல் என்றால் பிரம்பு!.. அதானே!..

இல்லை.. ஆயனின் கையில் பிரம்பு இருக்காது.. கைக்கோல் என்றால் மூங்கில் குச்சி!.. சரி.. கொடிமரம்?..

கொடியேத்துவாங்களே அந்த மரம்.. மூங்கில்.. சரிதானே!..

சரிதான்.. பார்த்திருக்கின்றாயா!..

இல்லையே!..

அந்த மூங்கில் மரம் தான் - மனிதனின் தனிவழிக்குத் துணையான மரம்!.. இன்றைக்கு அது கூட இல்லாமல் போயிற்று.. சரி.. அதுக்கப்புறம்.. கொக்கு.. மீன்... மீன் பிடிக்கும் வலைஞன்..

இரு.. இரு.. மீன் பிடிப்பவருக்கு மீனவன்..ன்னு தானே பேரு!.. அதென்ன வலைஞன்?..

வலை வீசி மீனைப் பிடிப்பதால் வலைஞன் !..

ஓஹோ.. நல்லாயிருக்கு!.. மேலே சொல்!..

வலைஞனின் கையில் உள்ள கலயம்.. கலயத்தைச் செய்த குயவன்.. குயவர் வீட்டு சகடை!..

இரு.. இரு.. அது என்ன சகடை?..

சகடை என்றால் சக்கரம்.. களி மண்ணை இதில் வைத்துச் சுற்றித்தான் பானை சட்டி இதெல்லாம் வனைவார்கள்!..

ஏ.. நீ என்ன புதுசு புதுசா சொல்கின்றாய்?.. வனைதல் ..ன்னா என்ன?..

சக்கரத்தில் களிமண்ணை வைத்து சுழற்றி விட்டு கை விரல்களின் திறமையால் மட்பாண்டம் செய்வதற்கு வனைதல் அப்படின்னு பேரு!..

அடடா!.. நல்ல நல்ல சொல்லெல்லாம் தெரியாமல் போச்சே!..

அப்புறம்.. அந்த மண்ணில் வளரும் புல்!..  புல்லைத் தின்னும் குதிரை!.. இப்படி வந்து முடிகின்றது பாடல்!.. இத்தனையும் நடப்பது ஒரு குளக்கரையில்!..
இதுவரை சொல்லிய காட்சிகளை ஒன்றாகச் சேர்த்து சிந்தித்துப் பார்!..

அட!.. ஆமாம்!.. எவ்வளவு அற்புதமா இருக்கு!..

இன்னும் - அந்தக் குளத்தில அழகழகாத் தாமரைகள்.. நீர்ச் செடிகள்.. வண்ணத்துப் பூச்சிகள்..  தவளைகள்.. பாம்புகள்.. பறவைகள்.. குளக்கரையில தென்னை மரம்..  புங்க மரம்.. ஆலமரம்.. - எல்லாம் தெரிகின்றனவா!..

தெரியுதே!.. தெரியுதே!..

* * *


காலச் சக்கரம் -
கடகட.. என்று மறுபடியும் சுற்றிச் சுழன்று - நிகழ்காலத்தில் வந்து நின்றது..

இப்ப தெரியுதா!..

ஏஏ.. என்னது பழைய இடத்துக்கே வந்துட்டோம்!..

சற்று முன் பார்த்தாயே - 
அது தான் பழைய இடம்.. பூங்காவனம்!.. 
இது புதிய இடம்.. பொட்டல் காடு!.. 
நீ பார்த்த அந்தக் காட்சி எல்லாம் - 
உனக்கு மீண்டும் - எங்கேயாவது காணக் கிடைக்குமா?..

கிடைக்காது!..

ஏன்?..

தொலைத்து விட்டோம்!.. நாங்கள் தொலைந்து விட்டோம்!..

மனிதனின் ஆதியான தொழில் விவசாயம்!.. அதுக்கு ஆதாரம்.. நீர் நிலைகள்!.. மக்களோடு இணைந்த வாழ்வு!.. அந்த வாழ்வோடு இணைந்த மக்கள்.. அப்படி..ன்னு இருந்த எல்லாவற்றையுமே நவீனம் என்கிற போர்வையில் அழித்து விட்டீர்கள்!..

நியாயம் தான்..


காடு மலை.. ஆறு குளம்.. என்று கண்ணில் பட்ட எல்லாவற்றையும் சூறையாடி அழிவின் விளிம்புக்கு வந்து விட்டீர்கள்.. இயற்கை அழகு கொஞ்சும் பாடல்களை எல்லாம் எதற்காக வளரும் பருவத்தில் சொல்லிக் கொடுத்தார்கள்?.. அதையெல்லாம் காத்து நிற்பீர்கள் என்ற நம்பிக்கை.. ஆனால் - கற்றறிந்ததாகச் சொல்லிக் கொள்ளும் நீங்கள் செய்ததென்ன?..

இயற்கை வளங்களுக்கு எதிராக - நம்பிக்கைத் துரோகம்!..

ஆதியான தொழில்களைச் செய்தவர்கள் அத்தனை பேரும் அதைப் போட்டு விட்டு ஓடத் துணிந்தார்கள் என்றால் - நீங்கள் கற்ற கல்வியால் விளைந்ததென்ன!..

ஒன்றுமில்லை.. இயற்கையை அழித்ததைத் தவிர!..

நீரினால் மகரந்தச் சேர்க்கை.. பூச்சிகளினால் மகரந்தச் சேர்க்கை... ஏதொன்றுக்கும் வழி இல்லாமல் போனதே!.. 

... ... ... ...?மரங்கள் உங்களுக்குச் செய்த தீமை என்ன?.. நிற்பதற்கு நிழல் கொடுத்தன.. உண்பதற்குக் கனி கொடுத்தன.. அப்படி இருந்தும் - உங்கள் வசதிக்காக  மரங்கள் எல்லாம் வேரோடு வெட்டிச் சாய்க்கப்பட்டன!.. உங்களுக்கு மட்டுமா மரங்கள் சொந்தம்?.. எண்ணற்ற பறவைகளின் அடைக்கலம் அல்லவா?.. 

... ... ... ...?

காற்று மாசு ஆயிற்று.. ஆறு நாசமாயிற்று.. பலநூறு சிற்றினங்கள் அழிந்தே போயின.. சிற்றினம் சேராதே!.. என்று பெரியவர்கள் சொன்னதை தப்பாக அர்த்தம் செய்து கொண்டீர்கள்!..

... ... ... ...?

வகை வகையாய் இயற்கையை அழித்து ஒழித்து விட்டு - 
உங்கள் வம்சம் மட்டும் வாழ்வாங்கு வாழ கனவு காணுகின்றீர்கள்!..

கால மாற்றத்தினால் கருத்தழிந்து போனோம்.. இனிமேல் ஓரளவுக்காவது - இயற்கையை மீட்டெடுக்க என்னால் ஆனதை செய்கின்றேன்.. பெரிதாக மாற்றம் வந்திட நான் விரும்பினால் மட்டும் போதுமோ!..

தரணியில் - மாற்றம் என்பது ஒவ்வொரு தனி மனிதனாலும் தான் ஆரம்பமாகி இருக்கின்றது..

இதுவரைக்கும் எந்த சிற்றுயிர்க்கும் நான் இடையூறு செய்ததில்லை.. இனியும் செய்யாதபடிக்கு என்னை நிலைப்படுத்திக் கொள்வேன்.. இயன்றவரை மரங்களைக் காப்பேன்.. பிறர்க்கும் இதனை எடுத்துரைப்பேன்..

மரம்.. அதுதான் இயற்கையின் வரம்!..
மரங்களை உங்கள் வாழ்விலிருந்து ஒருபோதும் அப்புறப்படுத்தாதீர்கள்!.. 
மரங்கள் அழிந்து போனால் ஒரு துளி நீருக்கு நீங்கள் பரிதவித்து நிற்பீர்கள்.. 
இதை என்றும் மறக்க வேண்டாம்!..

அன்பினுக்கும் அறிவுரைக்கும் நன்றி!..
ஆயினும்.. என் பெயர் என்னவென்று கூறவே இல்லையே!..

என்னை நிலைப்படுத்திக் கொண்டு - மரங்களைக் காப்பேன் - 
பிறருக்கும் இதனை எடுத்துரைப்பேன் என்றாய் அல்லவா!..

ஆமாம்!..

அப்போது உனக்கு ஒரு பெயர் கிடைக்கும்!..

அட!.. என் பெயர் எது என்று இப்போது புரிகின்றது!..

சொந்தப் பெயர் மறைந்து போகாமல் நிறைந்து நிற்க - நிலைத்து நிற்க - 
இந்தப் பெயரே துணைக்கு நிற்கும்!.. நல்வாழ்த்துகள்!..

* * *


மரம் வளர்ப்போம்..
மழை பெறுவோம்!..

மரங்கள்
இயற்கையின் வரங்கள்!..

மரங்கள் வாழ்க!..
மன்னுயிர்களும் வாழ்க!..  
* * *  

என் பெயர் எது?.. 
- எனும் இப்பதிவு, வலைப்பதிவர் சந்திப்பு 2015 
நடத்தும் மின்னிலக்கியப் போட்டிக்காக எழுதப்பட்டது..

வகை - 2
சுற்றுச் சூழல் விழிப்புணர்வு
(மண்ணில் உயிர்கள் வாழ மரங்களைக் காத்தல்)

இக்கட்டுரை எனது சொந்தக் கற்பனையே..
இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல..
போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் வெளிவராது..
- என்று, இதன் மூலம் உறுதியளிக்கின்றேன்..

அன்புடன்,
துரை செல்வராஜூ..  

26 கருத்துகள்:

 1. ஆஹா வாருங்கள் வாருங்கள்,
  ஏதோ நாங்க கொஞ்சம் வாங்கலாம் என்று எழுதிக்கிட்டு இருந்தோம்,,,
  வந்துட்டியலா,, எத்துனை விறுவிறுப்பான சுற்று,,, அம்மாடியோ,,
  நல்லாதான் இருக்கு, திரும்புமா? அக்காலம்,,,, அருமை அருமை
  வாழ்த்துக்கள் மனம் நிறைய வெற்றிபெற வாழ்த்துக்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   நான் - அதனால தான் கடைசியா வந்தேன்!..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 2. நன்றி...

  நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

  இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..

   தங்களுக்கும், விழாக்குழுவினருக்கும் மனமார்ந்த நன்றி.. மகிழ்ச்சி..

   நீக்கு
 3. வணக்கம் ஐயா! தங்கள் தளத்திற்கு புதியவன்!! மரம் அழிப்பை பற்றிய சிறந்த பகிர்வு! பாடல் உரையாடல் மூலம் உண்மையை உரைத்த விதம் நன்று! சாலையை அகலப்படுத்துகிறேம் என்று மரத்தை அழித்தார்கள்! தொழில்நுட்ப வளர்ச்சி என்று விவசாயத்தையும் அழித்தார்கள்...நன்றி!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் திரு. கரூர் பூபகீதன் அவர்களுக்கு நல்வரவு..

   வருக.. வருக.. என வரவேற்கின்றேன்.. மகிழ்ச்சி

   கருத்துரையில் - நிதர்சனமான உண்மையை நிறைவாக சொல்லியிருக்கின்றீர்கள்.. நன்றி..

   நீக்கு
 4. அன்பின் ஜி மிகவும் அருமை ஒவ்வொரு விடயங்களையும்
  அலசி
  ஆராய்ந்து
  இதமாய்
  ஈயைக் கொண்டு
  உண்மையை
  ஊரறிய
  எடுத்துக்காட்டி
  ஏற்றுக்கொள்ள
  ஐயமின்றி
  ஒளிரச்செய்து
  ஓங்காரமாய்
  சொல்லி விட்டீர்கள் வெள்றி உமதே பரிசு கிடைத்ததும் எமக்கு ஒரு சுலைமாணி அபுதாபிக்கு பார்சல்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   நானே நேரில் சுலைமானி எடுத்து வருகின்றேன்.. (உண்மையிலேயே)

   தங்களது பதிவில் தான் புதுமை என்றால் கருத்துரையிலும் புதுமையா!..

   இப்போதே பரிசு கிடைத்த மாதிரி இருக்கின்றது..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. ஆத்திச்சூடிக்கு நன்றி..

   நீக்கு
 5. நன்றி அய்யா!!! என்தளம் வந்து சிறப்பான கருத்துகளை கூறி ஊக்கப்படுத்தியமைக்கு இனிய நன்றிகளும் இனிய வணக்கங்களும்!! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நண்ப.,

   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. சுற்றுச் சூழல் விழிப்புணர்வை இதைவிட எளிமையாக
  யாராலும் கூற இயலாது ஐயா
  நமது இன்றையத் தேவை
  இதுபோன்ற பாடங்கள்
  மாணவர்களின் புத்தகங்களில் இடம் பெற வேண்டும்
  சிறு வயது மாணவ்ன் கூட படித்தவுடன் கருத்தையும்
  வார்த்தைகளின் இனிமையினையும் ரசிக்க வேண்டும்
  ஆனால் இன்று ஆசிரியர்களுக்கே கோணார் தேவைப் படுகிறார்
  அருமையான விழிப்புணர்வுப் பதிவு ஐயா
  நன்றி
  வெற்றி பெற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   இனிய கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 7. ஈக்குப் பெயர் வந்தகதை என்னும் தலைப்பில் ஒரு பதிவு எழுதி இருந்தேன் ஈயின் பெயர்க்கதையை கொண்டே ஒரு விழிப்புண்ர்வுப் பதிவு. அருமை ஐயா. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
   இனிய கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 8. வித்தியாசமான முறையில் விழிப்புணர்வுப் பதிவு! மிகவும் அருமை! இன்னும் நிறைய எழுதுங்கள். பரிசுக்காக மட்டும் அன்று. பங்கு பெறுவது தான் முக்கியம். இப்போட்டியைச் சாக்காக வைத்து நாம் எழுதும் இப்பதிவுகள் மூலம் ஒரு சிலருக்காகவாவது விழிப்புணர்வு கிடைத்தாலே அது நாம் செய்யும் மகத்தான சமூக சேவை! வெற்றியில் பரிசு பெற வாழ்த்துக்கிறேன் துரை சார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தாங்கள் தான் - ஏன் இன்னும் போட்டிக்குப் பதிவு அனுப்பவில்லை - எனக் கேட்டிருந்தீர்கள்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   இனிய கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 9. ஆஹா... அருமையான கட்டுரை ஐயா...
  சொக்கா பரிசுப் பணம் போச்சே... ஐயாவுக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
   அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி..

   நீக்கு
 10. உரையாடல் பாட்டு எனப் புதுமையாக அமைந்த கட்டுரை. வெற்றிபெற வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாவலர் ஐயா அவர்களுக்கு நல்வரவு..

   வருக.. வருக.. என வரவேற்கின்றேன்..

   தங்களது முதல் வருகை கண்டு மகிழ்ச்சி..
   வாழ்த்துரைக்கு மிக்க நன்றி..

   நீக்கு
 11. நம்மை, நம்பெருமையை நாம் தொலைத்துக் கொண்டிருப்பதை ஆதங்கத்தோடு பகிர்ந்த விதம் நன்று. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 12. சுற்று சூழல் விழிப்புண்ர்வு பதிவு அருமை.
  வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி..

   நீக்கு
 13. அருமையான விழிப்புணர்வுப் பதிவு. இதுக்குப் பரிசு என்ன கொடுத்தாலும் தகும். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு