நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், செப்டம்பர் 08, 2015

ஏரகத்தில் குடமுழுக்கு

ஓம்..

உவந்தெழு மந்திரத்தை உரைத்தார் தம் சிந்தையிலும்
உயிர்ப்புறு மந்திரத்தை உணர்ந்தார் தம் நெஞ்சினிலும்

ஒளிமிகும் சுடராய் விரிந்திடும் கதிராய்
ஒளிதரும் குகனே.. பொன்னடி போற்றி!..


சேலார் வயற்பொழிற் செங்கோடனைக் கண்டு தொழ
நாலாயி ரங்கண் படைத்திலனே அந்த நான்முகனே!..

- என்று, வருந்திக் கலங்குவார் அருணகிரிநாதர்..

அதை அப்படியே - திருவேரகத்தானுக்கும் கொள்ளலாம்..

ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மனோகர
ராஜ கம்பிர நாடாளு நாயகனே - வயலூரா!..

- என்று பழனியம்பதியில் நின்று கொண்டு வயலூர் வள்ளலையும் நினைவு கூர்ந்து - திருப்புகழ் மொழிந்தருள்வார்..

அதை அப்படியே - குருமலை எனப்படும் சுவாமிமலை மீதினில் உறையும்
ஸ்ரீ சுவாமிநாத ஸ்வாமிக்கும் கொள்ளலாம்!..

ஏழ்தலம் புகழும் காவேரியால் வளங்கொண்டு விளங்குவது சோழமண்டலம்!.

சோழ மண்டலத்தில் மனோகரமாகத் திகழ்வது - திருவேரகம்!..

சோழ மண்டலத்தின் மனோகரனாகத் திகழ்பவன் - சுவாமி நாதன்!..

அவன் - ஸ்ரீசுவாமி நாதனே - ராஜ கம்பீரன்!..

நமக்குத் தான் ஆயிரத்தெட்டு அண்டங்கள்!..

ஆயினும், ஆயிரத்தெட்டு அண்டங்களும் - அவன் காலடியின் தூசு!..

அவனே -
அனைத்துப் பெருமைகளுக்கும் உரியவன்!..
அத்தனை பெருமைகளையும் உடையவன்!..

அதனால் தான் -  அவன் காலடித் தூசும் - பெருமையுடன் நாடு எனப்பட்டது..

ஆகையால் தான் - நாடாளும் நாயகன்!..

இப்படி -

ராஜ கம்பீர நாடாளும் நாயகனாகிய ஸ்ரீ சுவாமி நாத ஸ்வாமி - உறையும் திருக்கோயிலுக்கு நாளைய தினம் திருக்குடமுழுக்கு விழா!..


திருவேரகம் எனும் சுவாமிமலையை 38 திருப்பாடல்களைக் கொண்டு புகழ்ந்து மகிழ்கின்றார் - அருணகிரிநாதர்.

செகமாயை உற்றென் அகவாழ்வில் வைத்த - எனும் திருப்பாடலை நிறைவு செய்யும் போது,

தருகாவிரிக்கு வடபாரிசத்தில்
சமர்வேலெடுத்த பெருமாளே!..

- என்று போற்றுகின்றார்..

செல்வச்சிறு முருகனின் திரு அவதாரம் - சூரபத்மாதியர்களை வீழ்த்தவே நிகழ்ந்தது..

மழலையாகத் தவழ்ந்த திருமுருகு - மாங்கனி ஒன்றிற்காக கோபித்துக் கொண்டாற்போல திருவிளையாடல் ஒன்றினை நிகழ்த்தியது..

பின்னும் - திசைக்கு ஒன்றாகத் திருமுகங்கள் நான்கிருந்தும் - நான்முகன் - தன் படைப்பினில் கவனம் வைக்காததால் - சிரசில் குட்டிச் சிறையில் இருத்தி விட்டு -

பிரம்ம சாஸ்தா - என, ஜபமாலையும் அமிர்தகலசமும் ஏந்தி - தானே சகல உயிரினங்களையும் படைத்து மகிழ்ந்தது..

அவ்வேளையில் தான் - ஐயன் சிவபெருமானிடம் பிரணவத்தின் பொருளுரைத்து தகப்பன் சாமியாக - பரமகுருவாகத் திகழ்ந்தது..

காலம் கனிந்த சூழலில் - கடும்பகை முடிக்கக் கையில் வேலேந்தி நின்றது..

இதனைத் தான் ஆன்றோர்கள் - சிக்கலிலே வேல் வாங்கி செந்தூரில் போர் முடித்தான்!.. - என்று போற்றுகின்றனர்..

இதற்கிடையில் -

தருகாவிரிக்கு வடபாரிசத்தில்
சமர்வேலெடுத்த பெருமாளே!..

தழைத்திருக்கும் மரங்கள் அடர்ந்த கரைகளுடன் விளங்கும், காவிரி நதிக்கு வடபுறத்தில் விளங்குவதான சுவாமிமலையில் இருந்து - அசுரர்களுடன் போர் புரிவதற்கு வேலெடுத்த பெருமாள்!..

- என்று புகழ்கின்றாரே - என்ன காரணம்!..

மூத்தவன் சூரபத்மன்.
அடுத்தவன் சிங்கமுகாசுரன்.
இளையவன் யானை முகங்கொண்ட தாரகாசுரன்.
இவர்கள் மூவருக்கும் இளையவள் அஜமுகி. ஆட்டின் முகங்கொண்டவள்.

இந்த நால்வரும் - கூடவே பல்லாயிரக் கணக்கான அசுரர்களும் -
காசியப முனிவருக்கும் மாயை என்பவளுக்கும் - காலமல்லாத காலத்தில் மூண்டெழுந்த கடுங்காமத்தின் விளைவாகப் பிறந்தவர்கள்..

மாயையின் மக்கள் இருள் எனும் அஞ்ஞான வடிவங்கள்..

அஞ்ஞான இருள் ஒழிவதற்கு ஒளி உதயமாக வேண்டும்..

அதனால் தான் - திருமுகனின் திரு அவதாரத்தை -

அருவமும் உருவுமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்றசோதிப் பிழம்பதோர் மேனியாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும்கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே
ஒருதிருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய!..

என்று - கந்தபுராணத்தில் போற்றினார் கச்சியப்ப சிவாச்சார்யார்..

இப்படி உதித்தருளிய முருகப் பெருமானை - ஞான பண்டித ஸ்வாமி நமோ நம!.. - என்று அர்ச்சிக்கின்றார் அருணகிரியார்..

முருகனுக்கு ஞானபண்டிதன் எனும் திருப்பெயர் சூட்டப்பெற்ற திருத்தலம் சுவாமிமலை..

இங்கு தான் - நான்முகப் பிரம்மன் - கந்தனிடமிருந்து ஞானம் பெற்றனன்..

இங்குதான் - பிரணவ மந்திரத்தின் உட்பொருளை - ஐயன் சிவபெருமானுக்கு -
குருவினுக்கும் குருவாக அமர்ந்து - கந்தன் உணர்த்தினான்..

ஆக, ஞானம் விளைந்த திருத்தலம் - சுவாமிமலை..

ஞானம் என்பது ஒளி.. அறிவு..

அலைகடலுக்கு அப்பால் - தெற்கே,
வீரமகேந்திரபுரத்தில் இருந்த அஞ்ஞானமாகிய அசுரர் குலம் அழிவதற்கு -

ஞானபுரியாகிய சுவாமி மலையில் இருந்து,
ஞானமூர்த்தியாகிய சரவணபவ குக சண்முகநாதன் வேலெடுத்து எறிந்தான்!..

அதனால் தான் -

தருகாவிரிக்கு வடபாரிசத்தில்
சமர்வேலெடுத்த பெருமாளே!..

- என்று போற்றிப் புகழ்ந்தார் அருணகிரியார்..


படைவீடுகளின் வரிசையில் நான்காவதாகப் போற்றப்படுவது - சுவாமிமலை!.

கடந்த 28/9/2012 அன்று பாலாலயம் செய்யப்பெற்றது -  இத்திருக்கோயில்.

பல லட்ச ரூபாய் செலவில் - 
திருக்கோயில் முழுதும் திருப்பணி செய்யப்பட்டுள்ள நிலையில் - நாளை (9/செப்) புதன்கிழமையன்று அதிகாலை திருக்குடமுழுக்கு நடைபெற இருக்கின்றது..

இத்திருத்தலம் - கட்டுமலையாகும். மூன்று தளங்களாக விளங்குகின்றது..

கீழ்தளத்தில் - ஸ்ரீசொக்கநாதரும் அன்னை மீனாக்ஷியும் உறைகின்றனர்.

நடுவிலுள்ள தளம் திருச்சுற்றாகத் திகழ -  மூன்றாவது தளத்தில் -
திருமுருகன் திருக்கோயில் கொண்டு விளங்குகின்றான்.

மூன்றாவது தளத்தை அடைந்ததுமே -
நாம் எதிர்கொண்டு தரிசனம் செய்வது ஸ்ரீ விநாயகப் பெருமானை!..

இத்திருத்தலத்தில் அவருடைய திருப்பெயர் -

ஸ்ரீ நேத்ர விநாயகர்.. கண் கொடுத்த விநாயகர்..

ஞான சூரியப் பிரகாசனனாக விளங்கும் - ஸ்ரீ ஸ்வாமிநாதப் பெருமானைக் கண்டு மகிழ்வதற்கு ஏதுவாகக் கண் கொடுப்பதாக ஐதீகம்..

கண்கள் எனில் புறத்தே விளங்கும் ஊனக் கண்கள் அல்ல!..

பரம குரு என விளங்கும் உபதேச மூர்த்தியை -
உய்த்து உணர்வதற்கான - ஞானக் கண்கள் என்பது ஐதீகம்..


கடந்த (6/9) ஞாயிறன்று காலையில் - காவிரியிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பெற்று - கலாகர்ஷணம் யாத்ரா தானம் ஆகியன நிகழ்ந்தன..

இரவு யாகசாலை பூஜைகள் தொடங்கி முதற்கால பூர்ணாஹூதி வழங்கப்பட்டது.

நேற்று - இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றன.
இன்று நான்காம் கால மற்றும் ஐந்தாம் கால பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன..

நாளை அதிகாலையில் - ஆறாம் கால பூகைகள் நிறைவுற்றும் பூர்ணாஹூதி வழங்கப் பெற்றதும்

புனித நீர் நிறைந்த கடங்கள் புறப்பாடாகின்றன..

ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமியின் திருமூலஸ்தானம் உள்பட அனைத்து சந்நிதிகளுக்கும் மற்றும் ராஜகோபுரங்களுக்கும் ஏக காலத்தில் - அதிகாலை 6.00 - 6.45 மணிக்குள்ளாக மகா கும்பாபிஷேகம் நிகழ்கின்றது..

மாலை 6.30 மணியளவில் மகா அபிஷேகம் நிகழ்கின்றது.. இரவு பஞ்ச மூர்த்தி எழுந்தருளி வீதி வலம் வருகின்றனர்..

யாகசாலை நிகழ்வுகளை வழங்கிய தம்பிரான் ஸ்வாமிகளுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி..

அனைவரும் வருக!.. ஐயனின் அருளமுதைப் பெறுக!..


ஹே ஸ்வாமிநாத கருணாகர தீனபந்தோ
ஸ்ரீபார்வதீச முகபங்கஜ பத்மபந்தோ
ஸ்ரீஷாதி தேவகண பூஜித பாதபத்ம
வல்லீச நாத மம தேஹி கராவலம்பம்..

கருணாகரனாகிய ஸ்ரீஸ்வாமி நாதன் எளியோர்க்கு உற்றவன்!.. 
- என்கின்றார் ஸ்ரீ ஆதிசங்கரர்..

எங்கள் ஸ்வாமிநாதப் பெருமானே!.. 
மகா கும்பாபிஷேக நிகழ்வுகள் 
எளியேனுக்கு காணக் கிடைக்காதவைகளாகின...
உன் திருவுளக்கிடக்கையை யாரால் அறிந்து கொள்ள இயலும்?..

ஆயினும், என் மனம் ஒரு மலராக 
உன் திருவடித் தாமரைகளிலேயே கிடக்கின்றது..

என்றனை ஆளும் ஏரகச் செல்வ!..
மைந்தன் வேண்டும் வரம் மகிழ்ந்து உதவு!..

எம்பெருமானே!.. 
எல்லாருக்கும் இன்னருள் புரிவாயாக!..

காமியத் தழுந்தி இளையாதே
காலர் கைப்படிந்து மடியாதே
ஓமெழுத்தில் அன்பு மிகவூறி
ஓவியத்தில் அந்தம் அருள்வாயே!..

தூமமெய்க் கணிந்த சுகலீலா
சூரனைக் கடிந்த கதிர்வேலா
ஏமவெற் புயர்ந்த மயில்வீரா
ஏரகத் தமர்ந்த பெருமாளே!..

சிவகுருநாதா சரணம். சரணம்..
சுவாமிநாதா சரணம்.. சரணம்!.. 
* * *

18 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. மிக அருமையான தகவல்! அருணகிரியார் பாடல் சொல்லி சிறப்பித்ததையும் அறிந்தோம் ஐயா...மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 3. அன்பின் ஜி புகைப்படங்கள் அனைத்தும் அழகு சிறப்பான பதிவுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 4. ஆறுமுகனை எந்தக் கோவிலில் இருந்து தொழுதாலும் அவன் ஆறுமுகன்தானே மாதா கோவில்களுக்குச் சென்றாலும் ஐயனே சரணம் என்றுதான் சொல்வாள் என் மனைவி. கோவில்களும் கடவுளர்களும் ஒரு அடையாளம் தானே. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   இனிய கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 5. பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 6. பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. மிகவும் சிறப்பான பதிவு ஐயா! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். அங்கு இருந்து காணயியலாத மனவருத்தம் உங்களுக்கு, இங்கு இருந்தும் போக முடியாத நிலை, எல்லாம் அவன் செயல் இதுதானோ,,,,,,
  அப்பா,,,,,,,,, எப்படி தான் உங்களால் இப்படி முடிகிறதோ,,,,, என் கண்ணே பட்டும்போல் உள்ளது.
  வாழ்த்துக்கள், புகைப்படங்கள் அருமை,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   கடல் கடந்து இருக்கையில் - மனம் காணாத மகிழ்ச்சிகளுள் இதுவும் ஒன்று..

   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
   இனிய கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 9. அருமையான நேரடி ஒளிபரப்பு போல் உள்ளது.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   அன்பின் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

   நீக்கு