நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூன் 28, 2018

திருமலை தரிசனம் 3

ஆங்காங்கே அமர்ந்து சற்று இளைப்பாறி மெதுவாகச் சென்றாலும்
மூன்றில் இரண்டு பங்கு தூரத்தைக் கடந்தாயிற்று...

இதோ - படிக்கட்டு எண் 2083..

ஒன்றரை மணி நேரத்தில் -
நள்ளிரவு 10 மணியளவில் காலி கோபுரத்தை வந்தடைந்து விட்டோம்...

இங்கு தான் ஆதார் அட்டையைப் பரிசோதித்தபின்
திவ்ய தரிசனத்திற்கான அடையாளச் சீட்டு வழங்கப்படுகின்றது...

இங்கே எந்நேரமும் இயங்கும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது..

பலவிதமான கடைகளும் மக்கள் குறை தீர்க்கின்றன...

மக்கள் ஆங்காங்கே வழக்கத்தை மீறாமல் -
கையில் சிற்றுண்டிகளுடன் அமர்ந்து கொண்டிருக்கின்றனர்..

நிறைய பெண்கள் அங்கே இருந்தனர்...
மிகப் பிரகாசமான தொகுப்பு விளக்குகள் வேறு..

வேறு என்ன!.. - படங்கள் ஏதும் எடுக்கவில்லை...

காலி கோபுரம். படிக்கட்டு எண் 2083
எப்பாவம்பல வும்இவையே செய்திளைத் தொழிந்தேன்
துப்பாநின் அடியேதொடர்ந் தேத்தவும் கிற்கின்றிலேன்
செப்பார்த் திண்வரைசூழ் திருவேங்கட மாமலையென்
அப்பா வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே!..(1032)
-: திருமங்கையாழ்வார் :-


காலி கோபுரத்திலுள்ள சிற்பங்கள்.. 
காலி கோபுரத்தைக் கடந்து -
தொடர்ந்த வழியில் மான்கள் விளையாடித் திரிகின்றன...
மக்கள் பழக்கி விட்டதால் வழிச் செல்வோரை உற்று நோக்குகின்றன...

கையில் கொண்டு சென்ற பழங்களையும் பிஸ்கட் வகைகளையும் கொடுத்தோம்...

இவ்வாறு கொடுக்கக் கூடாது தான்!..
ஆனாலும் மனம் கேட்கவில்லை...

தவிரவும் - மான்களுக்குக் கொடுப்பதற்கென்று
அங்கே பழங்களும் விற்கப்படுகின்றன...

மான்களுக்குப் பழம் கொடுக்கின்றான் - என் மகன்.. 
காலி கோபுரத்தைக் கடந்ததும்
சற்றே சரிவாக - நடப்பதற்கு இலகுவாக சாய்தளமான படிக்கட்டுகள்....


படிக்கட்டுகளுக்கு அருகிலேயே வாகனங்களின் ஓசை... இரைச்சல்... 

திருமலையிலிருந்து கீழே இறங்கும் சாலையில் வாகனங்கள் விரைந்து கொண்டிருக்கின்றன....

மலைப்பாதைக்கு மேலாக சாலை அமைத்திருக்கின்றார்கள்...
சற்றே கீழிறங்கி மேலேறுகின்றோம்...

பிரகாசமான விளக்கொளியுடன் பரந்தவெளி...

அதோ - ஸ்ரீ ஆஞ்சநேயர்!...

ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர் 
விஸ்வரூபமாக கண் நிறைந்த தரிசனம்..

நெடிதுயர்ந்து விளங்கும் ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர்...

மாருதியைக் கண்டதும் மனமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளம்...

பக்தர்கள் வலம் வந்து -  கற்பூரம் ஏற்றி வணங்குகின்றனர்

ஆஞ்சநேயரின் திருமேனியை நோக்கியபடி ஒளி மிளிரும் விளக்குகள்...
எனவே, உற்று நோக்கி அவரைப் படமெடுக்க இயலவில்லை..

ஆஞ்சநேயர் பீடத்தில் கட்டப்பட்டுள்ள மணிகள் 

அங்கிருந்து தொடர்ந்து நடக்க வழியில்,
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில்... 
திருநடை அடைக்கப்பட்டிருந்தது...

நரசிம்ம ஸ்வாமி கோயிலின் அருகில் -
காலி கோபுரத்தில் கொடுக்கப்பட்ட தரிசன சீட்டை
சரிபார்த்து அதில் முத்திரை வைக்கின்றார்கள்..

சற்றே அங்கு இளைப்பாறி விட்டு நடக்கின்றோம்..

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோயிலிலிருந்து
ஒரு கி.மீ., நடந்த அளவில் திருமலையில் இருந்து
இறங்கும் சாலையுடன் இணைந்து கொள்கிறது மலைப்பாதை...

அந்த சாலையிலேயே ஒரு ஓரமாக பயணிக்க
நேர் எதிரில் பெரிய ராஜகோபுரம்...

அப்போது நேரம் - நள்ளிரவு 1.45 மணி.

இந்த இடம்தான் மோக்காலு மிட்டா கோபுரம்..
இங்கே படிக்கட்டு எண் 2910 என்று குறிக்கப்பட்டுள்ளது...

இந்த இடத்தில் செங்குத்தான படிகள்..
இந்த இடமே முழங்கால் முறிச்சான் எனப்படுகின்றது...

திருமலையில் கால் பதித்து நடப்பதற்கு அஞ்சிய
ஸ்ரீ உடையவர் முழங்கால்களால் தவழ்ந்தே ஏறினார்...
இங்கே அவரது கால் எலும்புகள் இற்று உடைந்தன...

- என்று, ஏற்கனவே படித்திருக்கிறேன்...

அந்த இடத்தை நேரில் கண்டபோது கண்கள் கலங்கின.. 

மேலும்,

ஸ்ரீ அன்னமாச்சார்யா
அன்னமாச்சார்யார் ஸ்வாமிகள் - தமது இளவயதில்
முதன்முதலாக திருமலையில் ஏறியபோது
பசி தாகம் இவற்றால் துவண்டு வாடிய வேளையில்
ஸ்ரீமஹாலக்ஷ்மி ஆட்கொண்டு அருள்வதாக -

அன்னமய்யா - திரைப்படத்தில் காட்டப்படும்...

அப்படி ஆட்கொள்ளப்பட்ட இடம் மோக்காலு மிட்டா...
- என்று சமீபத்தில் அறிந்து கொண்டபோது மேனி சிலிர்த்தது...


மண்ணாய் நீரெரிகால் மஞ்சுலாவும் ஆகாசமுமாம்
புண்ணார் ஆக்கைதன்னுள் புலம்பித் தளர்ந்தெய்த் தொழிந்தேன்
விண்ணார் நீள்சிகர விரையார்த் திருவேங்கடவா
அண்ணா வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே..(1033)
-: திருமங்கையாழ்வார் :-

எப்பேர்ப்பட்ட ஆளாக இருந்தாலும் சரி...
சக்கையாய்ப் பிழிந்து எடுத்து விடும் இடம் - மோக்காலு மிட்டா...

வேங்கடசப் பெருமாளை முற்றுமாக நாம் உணர்வது 
- இந்த இடத்தில்தான்!..

இதில், யாதொரு ஐயமும் இல்லை!...தெரியேன்பால கனாய்ப்பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேனாயின பின்பிறர்க்கே உழைத்து ஏழையானேன்
கரிசேர்ப்பூம் பொழில்சூழ் கனமாமலை வேங்கடவா
அரியேவந் தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே..(1034)
-: திருமங்கையாழ்வார் :-


இந்த கோபுரத்தை அடுத்துள்ள 45 ( அல்லது 48) படிகளையும் 
முடிந்தவர்கள் - முழங்காலிட்டுக் கடக்கின்றனர்...

இயலாதவர்கள் படிகளைத் தொட்டு வணங்கிவிட்டு
மேலே தொடர்ந்து நடக்கின்றனர்..

நாங்கள் ஒரு சில படிகளை மட்டுமே முழங்காலிட்டுக் கடந்தோம்..

ஸ்ரீ ஐயப்பன் மீன் வாகனத்தில்..
மோக்காலு மிட்டா கோபுரத்தைக் கடந்து
செல்லும் வழியில் ஒரு மண்டபம்...

அந்த மண்டபத்தில் உள் திண்ணை தட்டிகளால் அடைக்கப்பட்டிருந்தது..

அந்த மண்டபத்தூண் ஒன்றில் மீன் மீது அமர்ந்த விதமாக ஸ்ரீஐயப்பன்....
கன்னத்தில் கை வைத்த திருக்கோலம் மனதைக் கவர்கின்றது...

இந்த மக்களை எப்படிக் கரையேற்றுவது?.. 

- என்ற கவலையா!.. அல்லது,

என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார்களே!.. 

என்ற ஆதங்கமா!.. தெரியவில்லை....

அதைக் கடந்த சிறுபொழுதில் மலைப் பாதை முடிவுறுகின்றது...

இப்போது - இரவு 2.30 மணி...

இதோ படிக்கட்டு எண் - 3550...

நன்றி - கூகுள்..
வழி நெடுக தசாவதார மண்டபங்களில் 
பெருமாளின் திருக்கோலங்களைத் தரிசித்தோம்...

பெரும்பாலான மண்டபங்களைப் படம் எடுக்க இயலவில்லை...

தசாவதார மண்டபங்கள் முடிவுற்றதும் -
ஆழ்வார்களின் திருமேனி மண்டபங்கள் தொடர்கின்றன...

3550 படிக்கட்டுகளையும் கடந்த சிறிது தூரத்தில்
அடிவாரத்தில் கொடுத்த பொருள்களைத் திரும்பப் பெறும்
வளாகத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் மண்டபத்தில் -

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்!...

அவளது திருவடிகளில் புஷ்பாஞ்சலி..

தாயே.. தமிழே!.. 
உனக்கு இவர்கள் செலுத்தும் மரியாதையைக் கூட
எங்கள் நாட்டில் செலுத்தவில்லையே!...

- என்று மனம் அரற்றியது...

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் 
பற்றேல் ஒன்றுமிலேன் பாவமேசெய்து பாவியானேன்
மற்றேல் ஒன்றறியேன் மாயனேஎங்கள் மாதவனே
கல்தேன் பாய்ந்தொழுகும் கமலச்சுனை வேங்கடவா
அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே..(1336)
-: திருமங்கையாழ்வார் :-
***

இந்த அளவில் மலைப் பாதையைக் கடந்து
ஸ்ரீ வேங்கடாத்ரியை அடைந்து விட்டோம்...

இனி அடுத்தது
திருவேங்கடவனின் திவ்ய தரிசனம் தான்!..

நீரார்க் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏராலம் இளந்தளிர் மேல்துயில் எழுந்தாய்
சீரார் திருவேங்கட மாமலை மேய
ஆரா அமுதே அடியேற்கு அருளாயே!..(1040)

-: திருமங்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்..
***

29 கருத்துகள்:

 1. காலை வணக்கம். நான் இப்படி படிகளை முன்னர் கண்ட நினைவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..

   தங்களுக்கு நல்வரவு...
   வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. "முழங்கால் முறிச்சான்" -- மோக்காலு மிட்டா -- ஹா.. ஹா.. ஹா... உண்மைதான். செங்குத்தான படிகள் முழங்கால்களுக்கு சோதனை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..

   பல ஆண்டுகளுக்கு முன்பே -
   திருமலை ஏறுவது பற்றி படித்தவகையில்
   இந்த முழங்கால் முறிச்சான் படிகளுக்குத் தான் அச்சமாக இருந்தது..

   கொஞ்சம் கஷ்டமாக இருந்ததே தவிர -
   மற்றபடிக்கு சிரமம் ஏதுமில்லை..

   வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. படங்கள் சிறப்பு. நானும் பெருமாளின் தரிசனத்துக்கு அருகில் வந்துவிட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..

   சனிக்கிழமை காலையில் பெருமாள் தரிசனம் தான்!..
   உடன் வருவதற்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. காலையில் நானும் தரிசித்தேன் ஜி.
  வாழ்க நலம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. நாங்களும் உங்களுடன் படிகளில் ஏறிவந்த உணர்வு. தரிசனத்திற்காகக் காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. நான் (ங்கள்) மலைப்பாதையில் நடந்து சென்றதை நினைவுபடுத்தியது. நீங்கள் எடுத்திருப்பீர்களோ இல்லையோ என சில படங்கள் அனுப்பலாம் என நினைத்தேன்.

  இப்போது ஆதார் தேவையா? சமீபத்தில்தான் கிடைத்தது.

  கண்ணார் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன், பெரியதிருமொழி பத்து, உங்கள் இடுகையில் வந்ததால் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். தாயே தந்தையே, நான் அவ்வப்போது சொல்வதுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெ.த..

   ஆதார அட்டை அவசியமாகின்றது..
   வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. கொடுத்து வைத்த பயணம், முன்னாலேயே நடந்தெல்லாம் போனதில்லை. இத்தனைக்கும் நினைச்சால் திருப்பதி போய் வந்திருக்கோம். இப்போ நினைச்சால் கூட முடியாது! மிக அருமையான விபரங்கள். இதெல்லாம் எனக்குத் தெரியாது. பையர் இப்போ மார்ச்-ஏப்ரலில் வந்தப்போக் குட்டிக் குஞ்சுலுவைத் தூக்கிக் கொண்டு மலை ஏறிப் போய்த் தரிசனம் செய்தார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   >> இப்போ நினைச்சால் கூட முடியாது.. <<

   பெருமாள் நினைத்தால் எதுவும் முடியும்!..

   குட்டிக் குஞ்சுலு மாதிரி ஏகப்பட்ட குஞ்சுலுகள் மலையேறியதைப் பார்க்கையில் எத்தனை மகிழ்ச்சி..

   வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. நீங்க முன்னாடி போய்ட்டீங்களா நாங்க பின்னாடி வர லேட்டாகிப் போச்சு...இப்ப உங்க கூட காலிகோபுரத்திலிருந்து...

  ஓ ஆதார் இப்போ தேவையோ....

  முழங்கால் பதித்து ஏறினீர்களா அண்ணா ஆஹா!!

  எனக்கு பேருந்தில் போவதை விட மெதுவாகவேனும் படி ஏறுவதுதான் மிகவும் பிடிக்கும்.

  உங்கள் விவரணம் அருமை. அந்த அஞ்சு செம அழகா இருப்பார். அந்த இடம் முதலில் நாங்க போனப்ப எல்லாம் இத்தனை மணிகள் இருந்ததாக நினைவில்லை ஓபனாக த்தான் இருப்பார். இப்போ சுற்றிலும் நிறைய வந்திருப்பது போல் உள்ளது.

  ரசித்து ஏறினோம் அண்ணா உங்களுடன்...ஏறியாச்சு....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோ..

   ஆதார் அட்டை அவசியம்..
   ஐந்து படிகள் மட்டும் முழங்கால் பதித்து ஏறினேன்...
   அதற்கே பெருமூச்சு ஆனது. வரும் பதிவுகளில் விவரம் பேசுவோம்..

   அஞ்சு வெட்டவெளியில் தான் நிற்கிறார்...

   உடன் வருவதில் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. மிக அழகிய தரிசனம்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின்
   வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 11. 2011ல பகல்ல படம் எடுக்கணும் என்பதற்காகவே, குடும்பத்தோடு நடந்து சென்றோம். பெண்ணும் மனைவியும் கொஞ்சம் கஷ்டப்பட்டுட்டாங்க. பையன் சமாளிச்சுட்டான். (காலை 9.15க்கு ஆரம்பித்து பகல் 2:45க்கு மலைக்குப் போய்ச்சேர்ந்தோம்). இப்போல்லாம் அன்றைக்கே தரிசனம் கிடைக்குமா என்பது தெரியவில்லை. அடுத்தவாரம் செல்லலாம் என்று நினைத்திருக்கிறேன் (நடந்து... முடியுமா என்று சந்தேகமாகவும் இருக்கு)

  படங்களை முடிந்தால் உங்களுக்கு இன்று அனுப்புகிறேன் துரை செல்வராஜு சார் (முழங்கால் முறிச்சான், ஆஞ்சநேயர் போன்றவை)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெ.த.,

   எனக்கும் இப்படியொரு ஆசை உண்டு - பகலில் செல்வதற்கு...
   அடுத்த வாரம் தங்களது பயணம் நல்லபடியாக அமையட்டும்..

   வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 12. மனதைரியமும், வைராக்கியமும் , மலையப்பன் அருளும் இருந்தால்தான் மலைஏறி மலையப்பனை தரிசனம் செய்ய இயலும் என்பது உங்கள் பதிவின் மூலம் தெரிகிறது. இரவு பயணம் முன்பு பயம் என்பார்கள் இப்போது படி கட்டியபின் பயம் இல்லை போலும், கடைகள் இருக்கிறது, வேலிகள் இருக்கிறது போலும்.
  படங்களும், பாடல் பகிர்வும், இனி போக விருப்பபடுகிறவர்களுக்கு ஏற்ற விபரங்களும் அடங்கிய பதிவு அருமை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   மனதைரியம், வைராக்கியம் -
   இதற்கெல்லாம் மேலாக வெங்கடேசப் பெருமானின் நல்லருள்!..

   அது தான் காரணம்...

   இன்னும் சொல்ல வேண்டியவை இருக்கின்றன..
   ஆயினும், பயம் எதற்கு - பரமன் அருகிருக்கையில்!..

   வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

   நீக்கு
 13. அன்பு துரை ராஜு.
  இத்தனை அழகான அருமையன படிகள் தரிசனம் எங்கும் கண்டதில்லை. உங்கள் எழுத்து வன்மையால் திருமலைக்கே வந்துவிட்டேன். அந்தத் தெய்வத்தின் அருள்
  பதிவு முழுவதும் பிரபந்தப் பாடல்களாக விரவி இருக்கிறது. என்னே உங்கள் பாக்கியம்.
  மனம் நெகிழ நெகிழப் படித்தேன். இனிமேல் அவன் அழைத்தால் தான் உண்டு.
  இன்று எனக்கு மிக நல்ல நாள். படியேறிப் பரமன், ஆண்டாள் பாதங்கள் அடைந்தேன். வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களுக்கு நல்வரவு...

   எளியேன் நான்...
   என்னால் ஆனதென்று ஏதுமில்லை.

   அவனருள் கூடி வந்தது..
   எங்களுடன் கூட வந்தது..

   தங்களது கருத்துரை கண்டு மனம் நெகிழ்ந்தது...

   அனைவருக்கும் அவனருள் கூடிவர வேண்டும்...

   வாழ்க நலம்..
   மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  அழகான படங்கள். அருமையான பக்தி பாமாலைகளுடன் நடக்கும் சிரமம் தெரியாது தங்களுடன் நாங்களும் ஏறி விட்டோம். வேங்கடவனின் தரிசனம் அவனருளால் கிடைத்திட வேண்டியபடி காத்திருக்கிறேன். அனைத்தும் அவன் செயல் அல்லவா? மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்...

   அவனருளால் அவன் தாள் வணங்கி - என்றுரைப்பார் மாணிக்கவாசகர்..

   அவ்வாறே,
   அவனருளால் அவனைத் தரிசித்தோம் - ஆனந்த நிலையத்தில்!..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 15. 3550 படிகள்.... உங்களுடன் நடந்து வந்த உணர்வு. நேரே சென்று பார்ப்பதெப்போதோ......

  படிகள் வழியே செல்ல முடிகிறதோ இல்லையோ, பேருந்திலாவது செல்ல வேண்டும் - பார்க்கலாம் அடுத்த முறையாவது திருமலை பயணம் முடிகிறதா என....

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..