நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஆடி கிருத்திகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆடி கிருத்திகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஆகஸ்ட் 07, 2026

கிருத்திகை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி 22
வெள்ளிக்கிழமை

ஆடிக்கிருத்திகை


தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ... தனதான


அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
     அழகுபெற வேந டந்து ... இளைஞோனாய்

அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
     அதிவிதம தாய்வ ளர்ந்து ... பதினாறாய்

சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
     திருவடிக ளேநி னைந்து ... துதியாமல்

தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
     திரியுமடி யேனை யுன்ற ... னடிசேராய்

மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
     மணிமுடியின் மீத ணிந்த ... மகதேவர்

மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
     மலைமகள்கு மார துங்க ... வடிவேலா

பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
     படியதிர வேந டந்த ... கழல்வீரா

பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
     பழநிமலை மேல மர்ந்த ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-

 நன்றி
கௌமாரம்

முருகா முருகா
***

திங்கள், ஜூலை 29, 2024

கிருத்திகை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஆடி 13
கிருத்திகை
திங்கட்கிழமை


ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சிணாயன புண்ணிய காலத்தில் நிகழ்கின்ற முதல் கிருத்திகை..


தான் தோன்றிய  நட்சத்திரம் 
விசாகம் என்றாலும் , தன்னைப் பாலூட்டி சீராட்டி வளர்த்த கார்த்திகைக் கன்னியர்  அறுவரும் விண்ணில் “கார்த்திகை” நட்சத்திரங்களாகத் திகழும்படிக்கு ஈசனிடம் வரம் பெற்றுத் தந்தவர் முருகப் பெருமான்..


இதன்படி  கார்த்திகை அன்று நோன்பிருந்து கந்தனை
வழிபடுகின்ற அடியார்கள் எல்லா நலங்களையும் எய்துவர் என்பது ஈசன் எம்பெருமான் அளித்த வரமாகும்..

கிழமைகளில் வெள்ளியும்
திதிகளில் சஷ்டியும், , நட்சத்திரங்களில் கார்த்திகையும் முருகனுக்கு சிறப்பு என்பது நாமறிந்ததே..


தனதனன தாத்த ... தனதான
தனதனன தாத்த ... தனதான

தலம்
பழனியம்பதி

வசனமிக வேற்றி ... மறவாதே
     மனதுதுய ராற்றி ... லுழலாதே

இசைபயில்ஷ டாக்ஷ ... ரமதாலே
     இகபரசெள பாக்ய ... மருள்வாயே

பசுபதிசி வாக்ய ... முணர்வோனே
     பழநிமலை வீற்ற ... ருளும்வேலா

அசுரர்கிளை வாட்டி ... மிகவாழ
     அமரர்சிறை மீட்ட .. பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


உள்ளத்தில் மிகவும் உருவேற்றி அதனால்  
உன்னை மறவாமல் இருந்து 
 
துயரம் தருகின்ற வழிகளில் என் மனம்
அலைந்து திரியாமல் இருக்கவும் 

புகழுடன் சொல்லிப் பயில்கின்ற 
ஆறெழுத்து மந்திரத்தினால் 
இம்மைக்கும் மறுமைக்கும் 
நல்வாழ்வை அருள்வாயாக..

 சிவபெருமானது வேத ஆகமங்களை  
உணர்ந்தவனே..
 
பழனிமலையில் வீற்றிருந்து
அருள் புரிகின்ற வேலனே..

அசுரர் கூட்டத்தினை அழித்து
தேவர்கள் வாழும்படிக்கு
 சிறையினின்று விடுவித்த 
பெருமாளே..


முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

புதன், ஆகஸ்ட் 09, 2023

ஆடி கிருத்திகை

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 24
புதன்கிழமை

ஆடிக் கிருத்திகை
நல்வாழ்த்துகள்


தான தந்தன தானா தனாதன
     தான தந்தன தானா தனாதன
          தான தந்தன தானா தனாதன ... தனதான

நாத விந்துக லாதீ நமோநம
     வேத மந்த்ரசொ ரூபா நமோ நம
          ஞான பண்டித ஸாமீ நமோ நம ... வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோ நம
     போக அந்தரி பாலா நமோ நம
          நாக பந்தம யூரா நமோநம ... பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம
     கீத கிண்கிணி பாதா நமோநம
          தீர சம்ப்ரம வீரா நமோநம ... கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
     தூய அம்பல லீலா நமோநம
          தேவ குஞ்சரி பாகா நமோநம ... அருள்தாராய்

ஈத லும்பல கோலா லபூஜையும்
     ஓத லுங்குண ஆசா ரநீதியும்
          ஈர முங்குரு சீர்பா தசேவையு ... மறவாத

ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
     சோழ மண்டல மீதே மநோகர
          ராஜ கம்பீர நாடா ளுநாயக ... வயலூரா

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
     சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
          ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ... லையிலேகி

ஆதி யந்தவு லாவா சுபாடிய
     சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
          ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
(நன்றி கௌமாரம்)


சிவம், சக்தி எனும்
தத்துவங்களுக்கு உரிய 
மூலப்பொருள் எனத் 
திகழ்பவனே போற்றி.. போற்றி..

வேத மந்திரங்களின் உருவமாக 
விளங்குபவனே போற்றி.. போற்றி..

ஞானத் தலைவனாக 
விளங்கும் முருகனே 
போற்றி.. போற்றி..

பல கோடி 
திருப்பெயர்களை உடைய 
ஈசனின் திருக்குமாரனே 
போற்றி.. போற்றி..

அனைத்து உயிர்களுக்கும்
சுக போகங்களை நல்கும் 
பார்வதியின் புத்திரனே 
போற்றி.. போற்றி..

நாக பந்தம்  உடைய 
மயிலை வாகனமாகக் 
கொண்டவனே 
போற்றி.. போற்றி..

தேவர்களுக்கு எதிரான 
சூரர்களைத் தண்டித்து 
அழித்தவனே 
போற்றி.. போற்றி..

இன்னிசை தவழும் 
சதங்கைகளை திருவடிகளில்
உடையவனே போற்றி.. போற்றி..

தீரனே ஈடு இணையற்ற வீரனே 
போற்றி.. போற்றி..

மலைகளுக்கெல்லாம் அரசனே..
திருவிளக்குகளின் மங்கல ஒளியாய்த் 
திகழ்பவனே போற்றி.. போற்றி..

 பொன்னம்பலத்தில் 
திருவிளையாடல்களைப் 
புரிபவனே போற்றி.. போற்றி..

தேவ குஞ்சரியைப் 
பக்கத்தில் கொண்டவனே 
போற்றி.. போற்றி..

உனது திருவருளை 
அடியேனுக்குத் தந்தருள்வாயாக..

தானம், சிறப்பான வழிபாடுகள் 
பலவற்றைத் தவறாது செய்தல், 
நல்ல நூல்களைக் கற்றல், நற்குணம், 
நல்லொழுக்கம், நீதி நியாயம்,

கருணை, குருவின்
பாதங்களை வணங்குதல் 
இவற்றை மறவாமல்,

ஏழு உலகினரும் புகழ்ந்து 
வணங்குகின்ற காவேரியால்  
வளமுற்று விளங்கும்
சோழ மண்டலத்தில் 

மனதுக்கு மகிழ்ச்சியுடன்
ராஜ கம்பீர நாடாளும் நாயகனே..
வயலூருக்குத் தலைவனே..

தன்மீது அன்பு வைத்திருக்கும்
ஆரூர் சுந்தரருடன் தோழமை கொண்டு 
அவருடன் முன்பு ஒருநாள்

ஆடல்பரி எனும் சிறந்த குதிரையின் மீதேறி 
கயிலாய மாமலைக்குச் சென்று அங்கே
ஞான உலாவினைப்  பாடிய

சேரமான் பெருமானுக்கு உரிய 
கொங்கு மண்டலத்தின்
வைகாவூர்  நாட்டில்  

திரு ஆவினன்குடி என்னும் 
திருத்தலத்தில் 
தேவர்களின் வாழ்வாக 
வீற்றிருக்கும்  பெருமாளே..
**

முருகா.. முருகா
முருகா.. முருகா
***

வியாழன், ஜூலை 28, 2016

ஆடிக் கிருத்திகை

வெற்றி வடிவேலனே..
சக்தி உமைபாலனே..
வீரம் விளைத்த குகனே!..
உற்றதொரு பகைவெல்ல 
தோளிலும் நெஞ்சிலும்
ஓங்கிய வலிமை அருள்வாய்!..

தமிழ் மக்களின் தோளிலும் நெஞ்சிலும் உற்று உறவாடி நின்றவன் - வேலன்!..

அதனால் தான் - தமிழர் தம் ஊர்களிலும் உள்ளங்களிலும் உவப்புடன் திருக்கோயில் கொண்டு உறைகின்றான்..

வடிவேலன், உமைபாலன், சிவகுமாரன் - 
இன்னும் எத்தனை எத்தனை பெயர்கள் தான் அவனுக்கு!..

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் 
செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை 
விளங்கு வள்ளிக் காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனை -

- என்று வர்ணித்து மகிழ்வார் அருணகிரியார்...


எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்யினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்ற வளாமே
பிள்ளை என்றன்பாய் பிரியம் அளித்து
மைந்தன் என்மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்!..

- என்று, மக்கள் அனைவரும் அவனையே போற்றி நிற்கின்றனர்..

அத்தகைய முருகன் உலகம் உய்வடைவதற்காகத் தோன்றினான்!..
- என்றுரைப்பார் கந்த புராணம் இயற்றிய கச்சியப்ப சிவாச்சார்யார்..

அருவமும் உருவுமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும்கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே
ஒருதிருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய!..

அப்படி உலகம் உய்வதற்காக - 
ஆறு தீப்பொறிகளாக எம்பெருமானின் நெற்றிக் கண்களிலிருந்து தோன்றி சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக உதித்த திருமுருகனைத் தாலாட்டுதற்கும் சீராட்டுதற்கும் அம்பிகையின் திருவருளால் தேவ மகளிர் அறுவர் தோன்றினர்...

அவர்கள் தம் பணி நிறைவெய்திய வேளையில் - ஈசன் மனம் மகிழ்ந்து,

நீங்கள் அறுவரும் ஒருங்கிணைந்து கார்த்திகை நட்சத்திரங்களாகத் திகழ்வீர்களாக!.. உங்களால் வளர்க்கப்பட்ட  எங்கள் செல்வன் - கார்த்திகேயன் என்ற திருப்பெயருடன் மக்களால் வணங்கப்படுவான்.  கார்த்திகை நாளில் கார்த்திகேயனை வழிபடுவோர் எண்ணியதெல்லாம் ஈடேறப் பெற்று அனைத்து நலங்களையும் எய்துவர்!.. 

- என்று, வரம் அளித்தார்..

அதன்படியே - காலகாலமாக கார்த்திகை விரதம் அனுசரிக்கப்படுகின்றது..

அந்த வகையில் -
தட்சிணாயணத்தின் முதல் மாதமாகிய ஆடி மாதத்திலும்
உத்ராயணத்தின் முதல் மாதமாகிய தை மாதத்திலும்
வரும் கார்த்திகை நாட்கள் மிகச் சிறப்புடையவை..

இன்று ஆடிக் கார்த்திகை..

திருமுருகன் மூல மூர்த்தியாக விளங்கும் திருக்கோயில்களில் வழிபாடுகள் கோலாகலமாக நடைபெறுகின்றன..

அத்துடன் - சகல சிவாலயங்களிலும் முருகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நிகழ்கின்றன..

எங்கெங்கும் அவனுக்கே ஆடலும் பாடலும்
என்றென்றும் அவனுக்கே தேடலும் கூடலும்!..

அந்த வகையில்,
அருணகிரியார் அருளிய திருப்புகழ் பாடல் வரிகளுடன்
ஆறு சிவாலயங்களைத் தரிசிப்பதற்கு அன்புடன் அழைக்கின்றேன்..

குமார வயலூர்

இறைவன் - ஸ்ரீ அக்னீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ ஆதிநாயகி
தல விருட்சம் - வன்னி மரம்
தீர்த்தம் - சக்தி தீர்த்தம்


வாகையை முடித்துக் காட்டி கானவர் சம்ர்த்தைக் காட்டி
வாழ்மயில் நடத்திக் காட்டும் -- இளையோனே
மாமலை வெதுப்பிக் காட்டி தானவர் திறத்தைக் காட்டி
வானவர் சிரத்தைக் காத்த பெருமாளே!.. (915)

சிவாலயத்தில் - திருமூலத்தானத்திற்கு நேர் பின்னால் திருமுருகனின் சந்நிதி..

வள்ளி தெய்வயானையுடன் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கின்றான்..

திருஅண்ணாமலையில் திருமுருகனின் திருவருளால்
தடுத்தாட் கொள்ளப்பட்டவர் அருணகிரியார்...

அவ்வேளையில் முருகப் பெருமானைப் புகழ்ந்து பாடப்பட்டது தான் -

முத்தைத் தரு.. எனும் திருப்பாடல்..

அண்ணாமலையில் நிஷ்டையில் இருந்த அருணகிரியாரை -  வயலூருக்கு வா!.. என்றழைத்து பாடும் பணியை அருளினான் திருக்குமரன்..

முருகப்பெருமானின் திருப்புகழினை இத்திருத்தலத்திலிருந்தே பாடத் தொடங்கினார் - அருணகிரியார்..

குமார வயலூர் - திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ளது...
சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நிறைந்த பேருந்துகள் இயங்குகின்றன..
***

தஞ்சை

இறைவன் - ஸ்ரீ பிரகதீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ பிரகந்நாயகி
தலவிருட்சம் - வன்னி
தீர்த்தம் - சிவகங்கை  


அஞ்சன வேல்விழி -- மடமாதர்
அங்கவர் மாயையில் -- அலைவேனோ
விஞ்சுறு மாவுன -- தடிசேர
விம்பம தாயருள -- அருளாயோ..

நஞ்சமுதா உணும் -- அரனார்தம்
நன்குமரா அருள் -- உமைபாலா
தஞ்சென வாம்அடி -- யவர் வாழ
தஞ்சையில் மேவிய -- பெருமாளே!.. (883)

புகழ் பெற்ற இத்திருக்கோயிலில் கலையழகு மிக்கதாக விளங்கும்
கந்த கோட்டத்துள் வள்ளி தெய்வயானையுடன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்துடன் திகழ்கின்றான்..


ஆறு திருமுகங்களுடன் பன்னிருகரங்களும் கொண்டு பக்தருக்கு பலநூறு நலங்களையும் வளங்களையும் வாரி வழங்குகின்றனன்..

அருணகிரியார் மூன்று திருப்பாடல்கள் கொண்டு போற்றுகின்றார்..

சம்ப ராரியைக் கொன்ற தீவிழிச்
சம்பு போதகக் -- குருநாதா
சண்ட கோபுரச் செம்பொன் மாளிகைத்
தஞ்சை மாநகர்ப் -- பெருமாளே!.. (884)

- என்று பெரிய கோயிலையும் தஞ்சை மாநகரையும் சிறப்பித்தருள்கின்றார்..
*** 

திருஐயாறு

இறைவன் - அருள்திரு ஐயாறப்பர்
அம்பிகை - அருள்தரு அறம் வளர்த்த நாயகி
தல விருட்சம் - வில்வம்
தீர்த்தம் - காவிரி, சூரிய புஷ்கரணி

வில்லேந்திய வேலவன்
திருவின் மாமர மார்பழ னப்பதி
அயிலு சோறவை யாளுது றைப்பதி
திசையி னான்மறை தேடிய முற்குடி -- விதியாதிச்

சிரமு மாநிலம் வீழ்தரு மெய்ப்பதி
பதும நாயகன் வாழ்பதி நெய்ப்பதி
திருவை யாறுட னேழுதி ருப்பதி -- பெருமாளே!.. (886)

எண்ணரும் சிறப்புகளையுடைய திருத்தலம் திருஐயாறு..
சமயக்குரவர் நால்வரும் புகழ்ந்தேத்திய திருத்தலம்..

இத்திருத்தலத்தில் வில்லேந்திய வேலனாகத் திகழ்கின்றான் - திருமுருகன்..

வள்ளி தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் விளங்கும் வேலனின் வனப்பு அளவிடற்கரியது..

தஞ்சை நகரப் பேருந்து நிலையத்திலிருந்து
நிறைய பேருந்துகள் திருஐயாற்றுக்கு இயக்கப்படுகின்றன..
***

சிக்கல்

இறைவன் - ஸ்ரீ நவநீதேஸ்வரர்
அம்பிகை - அருள்தரு வேல்நெடுங்கண்ணி
தலவிருட்சம் - மல்லிகைக்கொடி
தீர்த்தம் - திருப்பாற்குளம்


அலர்தரு புஷ்பத் துண்டாகும் வாசனை
திசைதொறு முப்பத் தெண்காதம் வீசிய
அணிபொழி லுக்குச் சஞ்சார மாமளி -- இசையாலே

அழகிய சிக்கற் சிங்கார வேலவ
சமரிடை மெத்தப் பொங்கார மாய்வரும்
அசுரரை வெட்டிச் சங்கார மாடிய -- பெருமாளே!.. (827)


இத்திருத்தலத்தில் முருகனுக்கு சிங்கார வேலன் என்பது திருப்பெயர்..

வசிஷ்டர் காமதேனுவின் பாலிலிருந்து பெற்ற வெண்ணெய் கொண்டு சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்த திருத்தலம்..

அதனால் ஈசனுக்கு வெண்ணெய் நாதர் என்பது திருப்பெயர்..

அம்பிகை வேல் நெடுங்கண்ணி - முருகனுக்கு வேல் கொடுத்து வாழ்த்தினாள் - என்பது ஐதீகம்..

சூரசம்ஹாரப் பெருவிழாவில் அன்னையிடம் வேலினை வாங்கும்போது
திருக்குமரனின் முகத்தில் முத்து முத்தாக வேர்க்கின்றது..

திருக்கோயில் கட்டுமலையின் மீது அமைந்துள்ளது..

ஈசனுக்கு முன்பாக தெற்கு நோக்கிய வண்ணம் வள்ளி தெய்வானையுடன் சிங்கார வேலன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றான்..

ஆடிக் கார்த்தியன்று சிங்கார வேலனுக்கு மஹா அபிஷேகம் நிகழ்கின்றது.
இரவில் தங்க மயில் வாகனத்தில் வீதியுலா..

சிவாலயத்தினுள்ளேயே - வரசித்தி ஆஞ்சநேயரும் கோலவாமனப் பெருமாளும் திருக்கோயில் கொண்டுள்ளனர்..

திருஆரூருக்கும் நாகைக்கும் இடையில் அமைந்துள்ள திருத்தலம்..
***

எட்டுகுடி

இறைவன் - சௌந்தர நாயகர்
அம்பிகை - ஆனந்தவல்லி
தலவிருட்சம் - வன்னி
தீர்த்தம் - சரவணப்பொய்கை 


சோழ மண்டலத்தின் சிறப்பான தலங்களுள் இதுவும் ஒன்று..

திருமூலத்தான மூர்த்தியாக வள்ளி தெய்வயானையுடன் மயில் மீது அமர்ந்த திருக்கோலமாக விளங்குகின்றனன்..

இத்தலத்தில் சித்ரா பௌர்ணமி மிகச்சிறப்பாக நிகழும்..

முதல் நாளில் தொடங்கும் பாலாபிஷேகம் பௌர்ணமிக்கு மறுநாள் வரை தொடர்ந்து நிகழும்..

வன்மீக நாதர் எனும் சித்தர் பெருமான் இங்கே ஜீவசமாதி கொண்டுள்ளார்..

திருஆரூர், நாகை மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களிலிருந்து அடிக்கடி பேருந்துகள் இயங்குகின்றன..
***

திருவிடைக்கழி
(திருஇடைக்கழி)

இறைவன் - பாபநாசப் பெருமான்
அம்பிகை - பரமேஸ்வரி
தலவிருட்சம் - குரா, மகிழ்
தீர்த்தம் - சக்தி தீர்த்தம்


சிறக்கு மாதவ முனிவரர் மகபதி
இருக்கு வேதனும் இமையவர் பரவிய
திருக்கு ராவடி நிழல்தனில் உலவிய -- பெருமாளே!.. (797)

சந்நிதியில் சிவலிங்கத்திற்கு முன்பாக ஆறடி உயரத்துடன் கம்பீரமாக திகழ்கின்றனன்..

முருகப்பெருமான் சிவபூஜை செய்த திருத்தலங்களுள் திருவிடைக்கழியும் ஒன்று..

சிவபெருமானை குரா மரத்தின் நிழலில் - முருகன் வழிபட்டதாக ஐதீகம்..

அவ்வண்ணமே குரா மரத்தினடியில் சிவலிங்கம் திகழ்கின்றது..  

இங்கு முதலில் அர்த்த ஜாம பூஜை செய்யப்பட்ட பின்னரே சந்நிதியில் செய்யப்படுகின்றது..

அசுரரை வென்ற பின் - தேவயானைக்கும் முருகனுக்கும் இத்திருத்தலத்தில் தான் திருமண நிச்சயதார்த்தம் நிகழ்ந்து என்பர் ஆன்றோர்..

தெய்வயானை மட்டும் தனிச் சந்நிதியில் திகழ்கின்றனள்..


பிரசித்தி பெற்ற திருக்கடவூரில் இருந்து ஆறு கி.மீ தொலைவில் உள்ளது திருவிடைக்கழி

மயிலாடுதுறை மற்றும் நாகையிலிருந்து சிறப்பான பேருந்து வசதிகளை உடையது..


விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள் மொய்மைகுன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை பன்னிரு தோள்களும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!..

வேலும் மயிலும் துணை!.. - என வேண்டி நிற்போர் பல்லாயிரம்..

எந்த நேரத்திலும் கோலக் குறத்தியுடன் வந்தருள் செய்பவன் - என்பார் அருணகிரிநாதர்..

எல்லா நன்மைகளையும் தரவல்லது முருக வழிபாடு..

என்றென்றும் அறுமுகப் பெருமானத் துணைக் கொள்வோம்..

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!..

ஓம் 
சரவணபவ குக சண்முக சரணம்..
***

சனி, ஆகஸ்ட் 08, 2015

தமிழ்வேள் தரிசனம்

இன்று ஆடிக் கிருத்திகை..

தேவர்களுக்கு விளக்கேற்றும் பொழுதாகிய - தட்சிணாயண காலத்தில் அனுசரிக்கப்படும் கார்த்திகை நாட்களுக்குள் மிகச்சிறப்பானது.


தமிழ் கூறும் நல்லுலகில் -
எங்கெல்லாம் திருக்குமரனின் ஆலயங்கள் இருக்கின்றனவோ - அங்கெல்லாம் அவனுடைய அன்பர்கள் புகழ்பாடி மகிழும் நாள்!..

அடியார்களுக்குள் அவனருள் பெற்று உய்வடைந்தோர் ஆயிரம் ஆயிரம்!..

அவர்களுள் மிகச்சிறந்தவராகக் கருதப்படுபவர் அருணகிரிநாதர்.

முருகன் - தன் திருவருளால் கவி பாடும் வல்லமை பெற்றவர்..

அவர் அருளிய திருப்பாடல்கள் திருப்புகழ் எனப்படுபவை..

கந்தரனுபூதி, கந்தரலங்காரம், கந்தரந்தாதி, மயில் வகுப்பு, வேல் வகுப்பு, சேவல் வகுப்பு என்பனவும் அருணகிரிநாதர் அருளியவையே!..

அறுமுக நாதனின் திருவடிகளை நெஞ்சில் நிறுத்தி -
அருணகிரி நாதரின் திருப்பாடல்களைப் பாடிக் களிக்கும் போது -
வேலோடும் மயிலோடும் திருமுருகன் வந்தருள்வான் என்பது திண்ணம்..

அறுபடை வீடுகளையும் அடியேன் தரிசித்திருக்கின்றேன்..

பின்னும் - மருதமலை, சென்னிமலை, திருச்செங்கோடு, குன்றக்குடி, வயலூர், எட்டிக்குடி, எண்கண், சிக்கல், கந்தகோட்டம் - முதலான திருத்தலங்களையும் தரிசித்துள்ளேன்..

இன்னும் பல தலங்களைத் தரிசிக்க வேண்டும்..

அதற்கான வரத்தினை அறுமுகப்பெருமானே அளித்தருள வேண்டும்..

இன்றைய பதிவில் அறுபடை சுற்றுலாவிற்கு அழைக்கின்றேன்..


திருப்பரங்குன்றம்

சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே
கந்தனென் றென்றுற் றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் றிடுவேனோ..

தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே!..
திருப்புகழ்..

திருமுருகனுக்கும் தெய்வானை அம்மைக்கும் திருமணம் நிகழ்ந்த தலம்.

புராதனமான குடைவரைக் கோயில். முருகனின் வேலுக்குத் தான் இங்கு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

மதுரை மாநகரின் ஒரு பகுதியாக விளங்குகின்றது..


திருச்செந்தூர்

இயலிசையி லுசித வஞ்சிக் கயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித் துழலாதே
உயர்கருணை புரியு மின்பக் கடல்மூழ்கி
உனையெனது ளமறியு மன்பைத் தருவாயே..

மயில்தகர்க லிடைய ரந்தத் தினைக் காவல்
வனசகுற மகளை வந்தித் தணைவோனே
கயிலைமலை யனைய செந்திற் பதிவாழ்வே
கரிமுகவ னிளைய கந்தப் பெருமாளே!..
திருப்புகழ்

தேவர் சிறை மீட்க வந்த எம்பெருமான் -  சூரனை வென்ற பின் - சிவபூஜை நிகழ்த்திய திருத்தலம்..

கடற்கரையில் அமைந்துள்ள திருக்கோயில்..

சந்நிதியின் வடபுறமாக ஆதியில் விளங்கிய சந்தன மாமலை இன்னும் திகழ்கின்றது..

திருநெல்வேலியிலிருந்து 55 கி.மீ., தொலைவில் உள்ளது திருச்செந்தூர்..


பழனியம்பதி

வசனமிக வேற்றி மறவாதே
மனதுதுய ராற்றி லுழலாதே
இசைபயில் சடாட்ச ரமதாலே
இகபர சௌபாக்யம் அருள்வாயே..

பசுபதி சிவாக்யம் உணர்வோனே
பழனிமலை வீற்ற ருளும்வேலா
அசுரர்கிளை வாட்டி மிகவாழ
அமரர் சிறைமீட்ட பெருமாளே!..
திருப்புகழ்

கந்த வேலன் - பால விளையாட்டாக - ஒரு பழத்தின் பொருட்டு கோபம் கொண்டு - தனி மலையில் நிற்பதாக ஐதீகம்.

சித்த புருஷரான போகரால் வடிவமைக்கப்பட்ட நவபாஷாண திருமேனி -பழனி மலையின் உச்சியில் விளங்குகின்றது..

மலை உச்சியில் திருக்கோயிலுக்கு அருகில் போகரின் ஜீவசமாதியும் அமைந்துள்ளது

பழனி மலையடிவாரத்தில் திருஆவினன்குடி திருக்கோயில் அமைந்துள்ளது..
திண்டுக்கல்லிலிருந்து 60 கி.மீ., தொலைவில் உள்ளது பழனி..


சுவாமிமலை

பாதி மதிநதி போது மணிசடை
நாதரருளிய குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா

காதுமொரு விழி காகமுற அருள்
மாய னரிதிரு மருகோனே
கால னெனையணு காமலுனதிரு
காலில் வழிபட அருள்வாயே..

ஆதி அயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு சிறைமீளா
ஆடும் மயிலினில் ஏறிஅமரர்கள்
சூழ வலம்வரும் இளையோனே

சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனில் உறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே!..
திருப்புகழ்

நான்முகன் அறியாத பிரணவத்தின் பொருளை - தந்தைக்கு உபதேசித்தருளிய திருத்தலம்.

திருக்கோயில் கட்டுமலை..  மூன்று தளங்களும் அறுபது படிக்கட்டுகளும் கொண்டு விளங்குகின்றது..

காவிரியின் வடகரையில் உள்ள திருத்தலம்..
தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் - திருவலஞ்சுழியில் இருந்து வடக்கே 2.கி.மீ தொலைவு. கும்பகோணத்திலிருந்து 10.கி.மீ தொலைவு.


திருத்தணிகை

இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி விடமே நீ
ரிழிவு விடாத தலைவலி சோகை
எழுகள மாலை இவையோடே

பெருவயிறீளை எரிகுலைசூலை
பெருவலிவேறு முளநோய்கள்
பிறவிகள் தோறும் எனைநலியாத
படியுன தாள்கள் அருள்வாயே..

வருமொருகோடி அசுரர்பதாதி
மடிய அநேக இசைபாடி
வருமொரு கால வயிரவராட
வடிசுடர் வேலை விடுவோனே

தருநிழல் மீதிலுறைமுகி லூர்தி
தருதிரு மாதின் மணவாளா
சலமிடை பூவின் நடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே!..
திருப்புகழ்

திருமுருகன் வள்ளி நாச்சியாரின் திருக்கரம் பற்றிய திருத்தலம்..
பெருமானின் கோபம் தணிந்த தலம். அதனால் தணிகை என்பர்..

மலை உச்சியின் மீது திருக்கோயில்.
சென்னையிலிருந்து 90 கி.மீ., தொலைவிலுள்ளது.


பழமுதிர்சோலை

அகரமுமாகி அதிபனுமாகி அதிகமுமாகி அகமாகி
அயனெனவாகி அரியெனவாகி அரனெனவாகி - அவர்மேலாய்
இகரமுமாகி எவைகளுமாகி இனிமையுமாகி வருவோனே
இருநிலமீதில் எளியனும் வாழ எனதுமுனோடி வரவேணும்..

மகபதியாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் வடிவோனே
வனமுறைவேடன் அருளிய பூஜை மகிழ்கதிர்காமம் உடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடும் மயிலோனே
திருமலிவான பழமுதிர்சோலைமலைமிசை மேவு பெருமாளே!..
திருப்புகழ்

திருமுருகன் வள்ளி தெய்வயானையுடன் திருக்காட்சி நல்கும் திருத்தலம்.. குன்று தோறாடல் எனவும் கூறுவர்.

அழகர் மலைக்கு மேலே 3 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கோயில்.
மதுரையிலிருந்து 23 கி.மீ தொலைவில் உள்ளது - பழமுதிர்சோலை.


வேண்டுவோர்க்கு வேண்டுவன அருள்பவன் வெற்றி வேற்குமரன்..

அவனது திருவடிகளை நெஞ்சில் நிறுத்தி வழிபட்டு மேன்மை நலம் எய்துவோமாக!..

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித்தோனை விளங்குவள்ளிக்
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச் 
சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே!..
கந்தரலங்காரம்.

முருகா சரணம் முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம் .. சரணம்!..

முருகன் திருவருள் முன்னின்று காக்கும்..
* * *

திங்கள், ஜூலை 21, 2014

ஆடிக் கிருத்திகை

தெய்வீக மணம் கமழும் ஆடி மாதத்தின் சிறப்புகளில் மற்றொன்று!..

வேலுண்டு வினையில்லை..
மயிலுண்டு பயமில்லை!..
குகனுண்டு குறைவில்லை மனமே..
குகனுண்டு குறைவில்லை மனமே!..


வெள்ளிக் கிழமையும் வளர்பிறை சஷ்டியும் கிருத்திகையும் முருகனருள் பெறச் சிறந்தவை!.. 

ஏன்!.. எப்படி?.. - என்று கேட்டால் -

வாரத்தின் ஆறாம் நாள் வெள்ளிக்கிழமை. திதிகளில் ஆறாவது சஷ்டி. ஆறு தேவ மங்கையரின் அம்சம் கார்த்திகை நட்சத்திரக் கூட்டம். சர்வேஸ்வரன் ஆறு திருமுகங்கள் கொண்டே, திருமுருகனைத் தோற்றுவித்தார்.


அருவமும் உருவம் ஆகிஅநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகிக்
கருணைசேர் முகங்கள் ஆறும்கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய!..
கந்தபுராணம்.

இப்படி உலகம் உய்ய வேண்டி - திருமுருகன் உதிப்பதற்கு  - பரம் பொருளாகிய சிவபெருமான் தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஈசானம் எனும் ஐந்து முகங்களுடன் அதோ முகமும் கொண்டு திருவருள் புரிந்தார். 

ஐயனின் ஆறுமுகங்களிலிருந்தும் ஆறு தீப்பொறிகள் தோன்றின. அவற்றை வாயுவும் அக்னியும் சேர்ந்து கங்கா நதியில் விட - கங்கை அவற்றை சரவணத்தினில் சேர்த்தனள். 

சரவணத்தின் கமலங்களிலிருந்து ஆறு குழந்தைகள் தோன்றின. 

அந்த ஆறு குழந்தைகளையும் தேவ மங்கையர் அறுவர் தம் திருக்கரங்களில் ஏந்தி சீராட்டி பாராட்டி பாலூட்டி வளர்த்தனர். 

அது கண்டு மகிழ்ந்த ஐயனும் அம்பிகையும் ரிஷப வாகனராக  அறுவருடன் விளையாடும் தன் அன்புச் செல்வங்களைக் காண வந்தருளினர். 

அம்பிகையை நோக்கி ஐயன் - நின் மகன்தனைக் கொண்டு வருக!.. என்றார்.

சரவணந்தனில் தனதுசேய் ஆறு உருத் தனையும் 
இருகரங்களால் அன்புடன் எடுத்தனள் புல்லித்
திருமுகங்கள் ஓராறு பன்னிருபுயம் சேர்ந்த 
உருவம் ஒன்றெனச் செய்தனள் உலகம் ஈன்றுடையாள்.

அந்த வேளையில் - கந்தன் என்று பேர் பெற்றனன் கௌரி தன் குமரன்.

கந்தனை வாரி அணைத்து  கொங்கையில் பொழிந்த அமுதினை - அன்பு மிக ஊறியவளாக - தன் மகற்கு அன்பினால் அருத்தினாள் கௌரி.

சிவபெருமானின் திருமுன் திருக்குமரனை இறைஞ்சு வித்திட - ஐயனும் மகனை அன்புடன் அணைத்து மகிழ்ந்து  தன்னருகில் இருத்திக் கொண்டான்.


ஏலவார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும் 
பாலனாகிய குமரவேள் நடுஉறும் பான்மை 
ஞாலமே லுறும் இரவொடு பகலுக்கும் நடுவாய் 
மாலையா னதொன்று அழிவின்றி வைகுமாறு ஒக்கும்.

அற்புதக் காட்சியினைக் கண்டு அகமகிழ்ந்த தேவ மங்கையர் அறுவரும் ஐயனையும் அம்பிகையையும் பேரன்புடன் பணிந்து வணங்கினர்.  

தாள் பணிந்த மங்கையர் அறுவருக்கும் பெருமான் தண்ணளி புரிந்தான்.

கந்தன்தனை நீர் போற்றிய கடனால் இவன் உங்கள் 
மைந்தன் எனும் பெயர் ஆகுக மகிழ்வால் எவரேனும் 
நுந்தம் பகலிடை இன்னவன் நோன்றாள் வழிபடுவோர் 
தந்தம் குறை முடித்தே பரந்தனை நல்குவம் என்றான்!.. 
 கந்தபுராணம்  - சரவணப்படலம்.

கந்தனாகிய இவனுக்கு நீங்கள் அறுவரும் அன்புடன் பாலூட்டி வளர்த்த காரணத்தால் - இது முதல் இவன் உங்கள் மைந்தன் எனும்படி கார்த்திகேயன் என அழைக்கப்படுவான். நீங்களும் சிறப்புற வானில் விண்மீண்கள் எனத் திகழ்வீர்களாக!.. உங்களுக்குரிய கார்த்திகை நாளில் விரதம் இருப்பவர் எவராயினும் அவர்தம் குறைகளை நீக்கி நல்வாழ்வினை அளித்து முக்தியும் அளிப்போம்!..  - என சிவபெருமான் கருணையுடன் மொழிந்தார்..

- என்பது கச்சியப்ப சிவாச்சார்யரின் திருவாக்கு!..

இத்தனை சிறப்புடையது  கார்த்திகை விரதம்.

முதல் நாள் இரவில் ஏதும் உண்ணாதிருந்து கந்தனின் நினைவுகளுடன் துயின்று - கிருத்திகை நட்சத்திரத்தன்று விடியற்காலையில் எழுந்து நீராடி சுத்தமான உடையினை உடுத்து - திருநீறு தரித்து திருக்கோயிலில் சென்று வணங்கி முருகனை வழிபட வேண்டும். 

தண்ணீர் மட்டும் அருந்தி இயன்றவரை திருப்புகழ் திருப்பாடல்களைப் பாராயணம் செய்வதும் முருக மந்திரங்களைத் தியானம் செய்வதும் அவசியம் என்பர் ஆன்றோர்.  

மாலையில் மீண்டும் நீராடி நித்ய வழிபாடுகளைச் செய்தபின் எளிய உணவுடன் விரதத்தினை நிறைவு செய்வது வழக்கம். ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனை, அர்ச்சனைகளில் பங்கு கொள்வதும் அடியார்களுக்கு அன்னதானம் செய்வதும்  சிறப்புடையன. 


முருகனின் அருள் பெறுதற்கு எளிய விரதங்கள் ஏற்றவை. 

தன்னுடலைத் தானே வருத்திக் கொள்ளும்படி எந்த ஒரு திருக்குறிப்பும் மக்களுக்கு அளிக்கப்பட வில்லை!.. 

கந்தனின் அருள் பெற அவனை சரணடைதலே பெரியோர்கள் நமக்குக் காட்டியவழி..  

தேவர்களின் இரவுப் பொழுதான தட்சிணாயனத்தின் முதல் மாதமான ஆடி பிரதோஷ நேரமாகக் கருதப்படுகின்றது. 

எனவே  - ஆடி மாதம்  விளக்கேற்றும் பொழுது என்றாகின்றது .

எனவே தான்  - ஆடி மாதம் சிறப்பான வழிபாடுகள்  நடத்தப்படுவதற்கு உகந்த மாதமாகின்றது. ஆடிக் கார்த்திகையும்  சிறப்பாகச் சொல்லப்படுகிறது. 


வையிற்கதிர் வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்க்கு என்றும்
நொய்யின் பிளவு அளவேனும் பகிர்மின்கள் !.. 

- என்பது கந்தர் அலங்காரம். 

அது என்ன நொய்யின் பிளவு!?..

ஒரு அரிசி இருபாதியாக உடைந்தால் அது நொய் எனப்படும். 
அந்த நொய் இருபிளவாக ஆனால் - அது குறு நொய்!.. 

திரண்ட செல்வத்திலிருந்து அந்த குறு நொய்யின் அளவாவது அற்றார்க்கும் அலந்தார்க்கும் உதவுங்கள் என்பது அருணகிரியாரின் அருள்வாக்கு!..

அறவழி நின்றால்  - அறுமுகனின் அருள் பெறலாம்!.. என்பது திருக்குறிப்பு.

அறுபடை வீடுகளிலும் மற்றுமுள்ள முருகன் திருச்சந்நிதிகளிலும் ஆடிக் கிருத்திகை சிறப்பாக அனுசரிக்கப்படுகின்றது.

பஞ்சாமிர்தம் போல - பழனித் திருப்புகழ்


தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ...... தனதான

கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து
     கலைகள்பல வேதெ ரிந்து - மதனாலே
கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து
     கவலைபெரி தாகி நொந்து - மிகவாடி

அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று
     அறுசமய நீதி யொன்று - மறியாமல்
அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
     அநுதினமு நாண மின்றி - யழிவேனோ!..

உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர்
     உலகளவு மால்ம கிழ்ந்த - மருகோனே
உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க
     உறைபுகலி யூரி லன்று - வருவோனே..

பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற
     பரமனரு ளால்வ ளர்ந்த - குமரேசா
பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று
     பழநிமலை மீதில் நின்ற - பெருமாளே!.. (133)

தேவர்கள் சிறையினின்று மீளும்படியாக 
அசுரர் தம் சேனைகளை  வென்று
பழநிமலை மீதில் நின்ற பெருமாளே!..

நின் திருவடிகள் சரணம்.. சரணம்!..
* * *