நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஆகஸ்ட் 25, 2014

அருள்மொழி அரசு

படித்தவர் முதல் பாமரர் வரை அனைத்துத் தரப்பினரும்  அவருடைய இனிய கதாபிரசங்கங்களைக் கேட்பதற்குக் காத்துக் கிடப்பதில் இன்புற்றனர்.

அவரது இலக்கியச் சொற்பொழிவுகளைக் காதாரக் கேட்டு இன்புற்றோர் ஆயிரம் ஆயிரம்!.. 

அவர் சொல் கேட்டு தம்முடைய வாழ்வினைத் திருத்திக் கொண்டவர் ஆயிரம் ஆயிரம்!..

அவர் தம் நல்லுரைகளைச் செவிமடுத்து - தம் வாழ்விவினைச் செம்மைப் படுத்திக் கொண்டவர் ஆயிரம் ஆயிரம்!..


திரு முருக எனும் உயர்ந்த திருப்பெயரினால் - சிறப்பிக்கப்பட்ட தமிழ்க்கடல்!..

அந்தத் தமிழ்க் கடலைத் தான் தமிழ் கூறும் நல்லுலகம் அருள்மொழி அரசு என்றும் திருப்புகழ் ஜோதி என்றும் சிறப்பித்துப் பாராட்டி மகிழ்ந்தது!..

திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்!..

ஸ்வாமிகளின் திருப்பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே ஐம்புலன்களிலும் ஆனந்த வெள்ளம் பாயும்!..

அப்போதெல்லாம் - இந்த அளவிற்கு கல்யாண மண்டபங்கள் எங்கும் கிடையாது.

பெரும்பாலும் ஆலய வளாகங்களே அவரது சொற்பொழிவுகளுக்குக் களங்களாயின.  நாளும் ஏதாவது ஒரு ஊரின் மாலைப் பொழுது  அவரால் மங்களகரமானது என்றே கூற வேண்டும்!..

இன்னிசைச் சொற்பொழிவினைக் கேட்கத் திரண்டிருக்கும் மக்கள் -  ஸ்வாமிகளின் வருகையினைக் கண்டு, மழை முகம் கண்ட பயிர் போல மகிழ்வார்கள் என்றால் அதில் வியப்பில்லை.

சுவாமிகள் - திருமுருகாற்றுப்படை, தேவாரம், திருவாசகம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவருட்பா முதலான தோத்திர நூல்களில் இருந்து பல பாடல்களைத் தட்டுத் தடங்கல் இன்றி இசையோடு பாடி விரிவுரை வழங்கும் போது - கூடியிருக்கும்  மக்கள் ஆனந்தத் தேன் உண்ட வண்டு என மெய்மறந்து கேட்டுப் பரவசம் எய்தியதை - இன்னும் தமிழுலகம் மறந்திருக்காது.

வேழமுடைத்து மலைநாடு மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல் தொண்டை
நன்னாடு சான்றோர் உடைத்து.


- என்பது ஔவையார் திருவாக்கு. அவ்வண்ணமே ,

தொண்டை நன்நாட்டில் காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையிலுள்ள காங்கேயநல்லூரில் அவதரித்தார்.

தந்தை சிவத்திரு மல்லையதாசர். இசையிலும் இயலிலும் வல்லவர். தாயார் கனகவல்லி அம்மையார். செங்குந்த வீர சைவ மரபினர்.

ஸ்வாமிகளின் பிறந்த நாள் -  ஆகஸ்ட் 25 1906.

பெற்றோர் இட்ட பெயர் - கிருபானந்தவாரி என்பதாகும்.

மூன்று வயதளவில் தந்தையே குருவாக இருந்து எழுத்தறிவித்தார். பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே பாடங்களைக் கற்பித்தார்.


பன்னிரண்டு வயது நிரம்பியபோதே தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான நூல்களில் பதினாயிரம் பாடல்கள் மனப்பாடம் ஆகிவிட்டது என்றும், அவை தான் தம் வாழ்நாளில் அமைந்த பெருஞ்செல்வம் என்றும் வாரியார் ஸ்வாமிகள் குறிப்பிட்டுள்ளார். 

ஸ்வாமிகள்  வெண்பாக்கள் இயற்றுவதில் வல்லவர்.

தன் தந்தையின் வழியில் வாரியார் ஸ்வாமிகள் தமது பதினைந்தாம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார். பத்தொன்பது வயதிலிருந்தே தனியாகப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார்.

ஸ்வாமிகள்  விரிவுரை செய்யும் பொழுது தேவார திருவாசக - திருப்புகழ் பாடல்களை  இன்னிசையுடன் பாடுவது எத்தனை ஆயிரம் முறை கேட்டாலும் தித்திப்பது.

ஸ்வாமிகளுக்கும் உரிய வயதில் திருமணம் நிகழ்ந்தது. இல்லத்தரசியார் - அமிர்தவல்லி அம்மையார்.

ஸ்வாமிகளை ஆட்கொண்ட வள்ளல் - குமார வயலூர் முருகன்!..


வயலூர் முருகனின் திருப்பெயரைச் சொல்லியபடிதான் ஸ்வாமிகள் பேருரைகளைத் தொடங்குவார்.

பற்பல திருக்கோயில்களுக்கும் திருப்பணி செய்து அரும்பணியாற்றினார்.

ஸ்வாமிகளின் காலத்திலேயே - வயலூர் ராஜ கோபுரத்தில் ஸ்வாமிகள் முருகப்பெருமானை வணங்கும் நிலையில் சுதை சிற்பம் அமைக்கப்பட்டது.

இன்றும் வயலூர் திருக்கோயிலின் முன்மண்டபத்தில் ஸ்வாமிகளின் பெரிய திரு உருவப்படத்துடன் கூடிய தியான மண்டபம் விளங்குகின்றது.

அவரது சீரிய முயற்சியினால் - பலநூறு திருக்கோயில்கள் மீண்டும் பொலிந்து நின்றன.

பேசுவதற்கு மேற்கொண்ட பொருள் எதுவானாலும்  அதனுடன் -

திருக்குறள், ஔவையின் அருந் தமிழ், சிலப்பதிகாரம், தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திவ்ய பிரபந்தம், நீதிநெறி விளக்கம், நாலடியார்  - என அனைத்து ஞான நூல்களின் சாறெடுத்து வழங்கிய ஞானச்சுடர்!..

ஸ்வாமிகளுடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் எளிய மக்களை ஒட்டியே அமைந்திருந்தது. அதன் காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவர் ஆனார்.

ஸ்வாமிகளின் சொற்பொழிவுகளினால் பாமரர்களுக்கும் ஆன்மிகம்  புரிந்தது.

வேத வேதாந்த சித்தாந்தக் கருத்துகளின் நுணுக்கங்களை எளிமையாக  வழங்குவதில் அவருக்கு ஈடு இணையில்லை!..


தமிழோடு சைவ சித்தாந்தத்தில் பெரும் புலமை பெற்று விளங்கிய ஸ்வாமிகள் - அற்புதமான நினைவாற்றலும் நாவன்மையும் பெற்றவர்.

ஸ்வாமிகள் நகைச்சுவையுடன் நடைமுறைச் செய்திகளை நயம்படச் சொல்வதில் வல்லவர்.

அனைவரையும் கவரும் விதமாக சொற்பொழிவுகளின் ஊடாக அவர் கூறும் சின்னச் சின்னக் கதைகள் ரசனையானவை.


வாரியார் ஸ்வாமிகள் இசையில் வல்லவர். வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர்.

சிவாகம விதிப்படி தீட்சை பெற்றுக் கொண்டவர். தம் வாழ்வில் தகுதியுடைய பலருக்கும் சிவதீட்சை வழங்கியிருப்பதாக அறிய முடிகின்றது.

வெறும் கதைகளை மட்டும் அவர் மக்களிடம் பரப்பவில்லை. எளிய மக்களையும் சிந்திக்கத் தூண்டினார்.   

அவருடைய சொற்பொழிவுகளால் மக்களுக்குள் தெய்வ பக்தி வளர்ந்தது.

மக்கள் ஞான மார்க்கத்தில் செல்வதற்குத் தலைப்பட்டனர். 
 
ஸ்வாமிகள் திருப்புகழ் அமிர்தம் எனும் திங்கள் இதழினை நடத்தினார்

அந்த இதழில் ஒவ்வொரு மாதமும் ஒரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரை, கந்தர் அலங்காரம், இறை நெறிக் கதைகள், அறநெறிக் கட்டுரைகள்  - என  ஸ்வாமிகள் வெளியிட்டார்.

வாரியார் ஸ்வாமிகள் - ஓரளவு படிக்கத் தெரிந்த எளிய மக்களுக்கும் புரியும் படியான இலக்கியத் தரம் வாய்ந்த ஆன்மிகக்  கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார்.

வாரியார் ஸ்வாமிகளின் தமிழ் நடை தெள்ளத் தெளிந்த நீரோட்டம் போல தென்மலைத் தென்றல் போல இனிய நடையில் அமைந்தவை. அவற்றுள் இராமயணம், மகாபாரதம், கந்தபுராணம் மற்றும் பெரிய புராணக் கதைகள்  சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.


சிறு குழந்தைகளும் படித்து இன்புற - புராண இதிகாச நீதி நெறிக் கதைகளை எளிமையாக அவர்வழங்கினர்.

சண்முகப்பெருமானை நேரில் தரிசித்த மகான்  - பாம்பன் சுவாமிகள்.  அவர்தம் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் ஸ்வாமிகள் எழுதியுள்ளார்.

காதாரக் கேட்டு இன்புறுவதற்கு காவியச் சொற்பொழிவுகள், மனமாரப் படித்து இன்புறுவதற்கு கதை, கட்டுரை  என  இலக்கிய இன்பத்தை இறை இன்பமாக வழங்கியவர் வாரியார் ஸ்வாமிகள்!..

வாரியார் ஸ்வாமிகள் நல்லதொரு ஞானாசிரியர்.
பல புராண நூல்களுக்கு விளக்கவுரை எழுதிய நூலாசிரியர்.
மிகச்சிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளர். இலக்கியப் பேருரையாளர்.

வாரியார் சுவாமிகள் நிகழ்த்திய  திருப்புகழ் விரிவுரைகளைச் செவிமடுத்து இன்புற்ற மக்களுள்  எளியேனும் ஒருவன்!..


வளரும் காலத்தில் ஸ்வாமிகளின் இலக்கியப் பேருரைகளை - தொடர் சொற் பொழிவுகளை அருகிருந்து கேட்டதாலேயே - மனம் பண்பட்டது. வாழ்க்கை மேம்பட்டது.

அப்போதெல்லாம் தஞ்சை இராஜராஜ சமய சங்கத்தினரால் - தஞ்சை பெரிய கோயிலில் ஸ்வாமிகளின் இலக்கியப் பேருரைகள் தொடர் சொற்பொழிவுகள் என நிகழும்.

தஞ்சை ராஜா சரபோஜி அரசு கலைக் கல்லூரியில் பயின்ற காலம் அது.
இனிய மாலைப் பொழுதுகள் எல்லாம் பெரிய கோயிலிலேயே!..

ஸ்வாமிகள் எழுதிய நூல்களில் - ஸ்வாமிகளின் கையொப்பம் பெற்றதும் எளியேன் முருகனைப் பற்றி எழுதிய பாடலைப் படித்துப் பார்த்து ஆசி கூறி கையொப்பமிட்டதும் என்றும் பசுமையான நினைவுகள்..

ஸ்வாமிகளின் பாதம் தொட்டு வணங்கி - அவர்தம் திருக்கரத்தினால் - எளியேன் திருநீறு பெற்றது பெரும் பேறு!..

என் மகளுக்கும் ஸ்வாமிகள் திருநீறு இட்டு வாழ்த்தி இருக்கின்றார்!..

அமுதத் தமிழை அள்ளி வழங்கிய ஸ்வாமிகளைப் பற்றி இன்னும் எழுதிக் கொண்டே இருக்கலாம்.

அதற்குக் காலம் துணை செய்ய வேண்டும்.

ஸ்வாமிகளின் பிறந்தநாள் இன்று!..
தமிழ் கூறும் நல்லுலகில் அவர்தம் திருப்பெயர் 
என்றென்றும் நிலைத்திருக்கும்!..
குருநாதர் திருவடிகள் போற்றி!.. போற்றி!..
சிவாய திருச்சிற்றம்பலம்!..
* * *

22 கருத்துகள்:

 1. திருமுருக கிருபானந்தவாரியாரைப் பற்றி வலைப் பதிவில் யாரும் எழுதக் காணோமே , நாமாவது எழுதலாமா என்று எண்ணியிருத நேரத்தில் , தஞ்சையம்பதியின் சிவபக்தரான தாங்கள் எழுதி இருப்பது கண்டு மகிழ்ந்தேன். பதிவை ஒரு கண்ணோட்டம் பார்த்து விட்டேன். மீண்டும் வருவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் அன்பான வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்..

   நீக்கு
 2. வாரியார் சுவாமிகளை நினைவுகூர்ந்த தங்களின் நல் உள்ளம் போற்றுதலுக்கு உரியது ஐயா.
  வாரியார் சுவாமிகளின் நினைவினைப் போற்றுவோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 3. 1985 அல்லது 1986ம் வருடம் என்று நினைக்கிறேன்.
  அப்போது எங்கள் மத்திய அலுவலகத்தின் தணிக்கை பிரிவில் இந்தியா முழுவதும் சுற்றிக்கொண்டு இருந்த காலம் அது.

  ஒரு நாள் இரவு, ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரஸில் தஞ்சையில் இருந்து கிளம்பி, ரயில் வந்தவுடன், எனது ஏ . ஸி . கோச்சில் ஏறி அமர்ந்தேன்.

  மேலும் கீழும் நாலு பெர்த்கள் இருந்தாலும் நானும் இன்னொரு வயதான பெரியவரும் தான் இருந்தோம். அந்தப் பெரியவர் அந்த ரயிலில் இதற்கு முன்னம் வரும் ஸ்டேஷனில் ஏறியிருக்கலாம் என நினைத்தேன்.

  ரயில் புறப்பட்ட பின் தான் அவரைக் கவனித்தேன். ஆஹா.!! இவர் நாம் வணங்கும் திருமுருக கிருபானந்த வாரி சுவாமிகள் அல்லவோ ?

  என்னை அறியாது, உடன் அவர் கால்களில் வணங்கினேன். எனது பணிவான வணக்கத்தினைச் சொன்னேன்.

  என்ன பேசுவது என்று தெரியவில்லை.

  நானோ கிணற்றுத் தவளை. அவரோ கடல்.

  வெகு நாட்களாக ஒரு ஐயம் மனதில் இருந்து வந்தது.
  சிவ புராணத்தில் இறுதியான ஒரு ஸ்லோகம்.

  பிலவ பத்ரை ப்ரஷைஸ் ச புஷ்பைஸ் ச துளசி தலை ஹி


  பூக்களிலே மிகச் சிறந்ததான பூவும் இலைகளிலே புனிதமான துளசியையும் கொண்டு சிவனைப் பூசித்தல் சிவனிடமே நமைச் சேர்க்கும் எனும் பொருள் கொண்ட இருவரிப் பாடல் அது.

  ஐயா !! எனக்குத் தெரிந்த வரை, துளசியைக் கொண்டு பெருமாளையும் வில்வத்தைக் கொண்டு சிவனையும் அல்லவா பூசிப்பார்கள். இந்த பதிகத்திலே துளசி மலரைக் கொண்டு சிவனைப் பூசிக்க சொல்லப்பட்டு இருக்கிறதே !! அதுவும் துளசி புஷ்பம் !!

  தங்கள் விளக்கம் என்ன என்று அறியலாமா? எனக்கேட்டு விட்டேன்.

  ஒரு கணம் என்னை உற்று நோக்கிப் பின் சொன்னார்.

  ஆம். துளசி புஷ்பமாக நாம் பார்ப்பது அபூர்வம். துளசி துளிராக இருக்கும்போதே அதை பறித்து பெருமாளுக்கு சமர்ப்பித்து விடுவோம்.

  நமது மனம் பக்குவம் ஆன பின்னே, துளசி என்ன ? வில்வம் என்ன ? எல்லா பத்ரங்களிலும் எல்லா புஷ்பங்களிலும் அவன் தானே இருக்கிறான். அவனே தானே எல்லா பத்ரங்களும் புஷ்பங்களும்.
  என்ற அறிவு வந்தபின்,

  துளசியாலும் பூசிக்கலாம்.
  வில்வமும் சரியே.

  எந்த பூ, இலை இருந்தாலும் பூசிப்பதற்கே.

  நமது பார்வை தான் வேறு. எல்லாமே ஒன்று தான்.

  பத்ரம், புஷ்பம், பலம் தோயம் என்று சொல்லி,
  தண்ணீர் கூட பூசிக்க போதுமே !!

  என்றார்.

  என்னை நெகிழச் செய்த அந்த பதில் இன்னும் என் நினைவில் இருக்கிறது.


  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   கொடுத்து வைத்தவர் தாங்கள்!..

   மனம் பக்குவமான பின்னே - துளசி என்ன!.. வில்வம் என்ன!.. எல்லா பத்ரங்களிலும் புஷ்பங்களிலும் அவன் தானே இருக்கின்றான். அவன்தானே எல்லா பத்ரங்களும் புஷ்பங்களும்!..

   ஸ்வாமிகளைத் தவிர வேறு யாரால் இப்படிக் கூற முடியும்!..

   தாங்கள் வருகை தந்து தங்களின் அனுபவத்தினைப் பகிர்ந்து கொண்டதில் மனம் நெகிழ்கின்றது ஐயா..

   நீக்கு
 4. சமயக் குரவர்கள் நால்வரைப் போன்று அருந்தமிழால் சமய இலக்கியப்பணி செய்தவர் திருமுருக கிருபானந்த வாரியார். சுவாமிகள். நான் படித்த திருச்சி நேஷனல் உயர்நிலைப் பள்ளி மைதானத்திற்கு சமயச் சொற்பொழிவாற்ற வரும்போது பார்த்து இருக்கிறேன்.

  இன்று அவருடைய (ஆகஸ்ட், 25) பிறந்தநாள். இந்நாளில் அவர் செய்த சமயப் பணி, இலக்கியப்பணி, ஆலயப்பணி ஆகியவற்றை மறக்காமல் விரிவாக எடுத்துரைத்தமைக்கு நன்றி. திருச்சி வயலூர் சுப்ரமண்யசுவாமி கோயில் என்றாலே அவர் ஆற்றிய ஆலயப்பணிதான் எனக்கு ஞாபகம் வரும்.

  மேலே சொன்ன சுப்பு தாத்தாவின் அனுபவம் அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   வயலூர் ராஜ கோபுரத்தில் ஸ்வாமிகளின் திருவுருவ சிற்பத்தை தரிசித்திருக்கின்றீர்களா!..

   தங்களின் மேலான வருகையும் அன்பின் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 5. வாரியார் சுவாமிகள் நிகழ்த்திய திருப்புகழ் விரிவுரைகளைச் செவிமடுத்து இன்புற்ற மக்களுள் எளியேனும் ஒருவன்!..//

  சுவாமிகள் எங்கள் இல்லத்திற்கும் எழுந்தருளி ஆசி வழங்கியிருக்கிறார்கள்..

  திருக்கோவில் கட்டும் பணியில் பங்குகொண்டு சொற்பொழிவுகள் வழ்ங்கி திருத்தொண்டாற்றி புகழ்பெற்றவர்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   கேட்கவே இனிமையாக இருக்கின்றது.
   அனைத்தும் ஈசன் அருள்.

   தங்களின் அன்பான வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு
 6. வணக்கம் ஐயா!

  வாரியார் சுவாமிகளை நினைவு கூர்ந்து
  அற்புதமாகப் பதிவிட்டுள்ளீர்கள்!
  அறிந்திராத பல தகவல்கள். அதி சிறப்பு ஐயா!

  ஐயா!.. எமக்கு வலையுலகு தந்த வரப்பிரசாதம் நீங்கள்!
  எத்தனை சிறப்பு மிக்க பதிவுகளைத் திரட்டி
  அயராது தருகிறீர்கள்!.

  தங்களின் நற் சேவையையும் சிறந்த மனத்தினையும் ஒவ்வொருவரும் உணர்ந்து போற்ற வேண்டும்.!

  உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   எளியேன் மனதில் இருப்பதைப் பதிவில் வழங்குகின்றேன்.
   எல்லாம் எனை ஆளும் ஈசனின் செயல். தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. தங்களின் இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

   நீக்கு
 7. அந்தக் காலத்தினர் கொடுத்து வைத்தவர். தொலைக்காட்சிகள் இல்லாத நேரத்தில் கோவில் வளாகங்களிலும் மண்டபங்களிலும் அவர் பேசி இருப்பதைப்பலமுறை ரசித்தவன். குழந்தைகளிடம் எளிய கேள்விகள் கேட்டு அவர்களும் மகிழ தானும் மகிழ்ந்து சிறிய பரிசுகள் கொடுப்பார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   குழந்தைகளுடன் தானும் ஒரு குழந்தையாய் மகிழ்வது பார்க்கப் பரவசமாக இருக்கும்.. தங்கள் அன்பான வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 8. சிறுவயதில் தேவகோட்டை கோயில்களில் பலமுறை ஐயாவின் சொற்பொழிவை கேட்டிருக்கிறேன் ஐயா பழையதை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தமிழகத்தில் அவர் செல்லாத ஊர் இல்லை என்பார்கள்.. தங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 9. தொலைக் காட்சி நம் நேரத்தைத் திருடி விட்டது என்றே சொல்ல வேண்டும்.. தொழில்நுட்பத்தினால் நண்மையும் இருக்கிறதே. சுவாமிகளின் நந்தனார் அருளுரை சமீபத்தில் யு ட்யூபில் கிடைத்தது. கேட்டு மகிழ்ந்தோம். சுவாமிகளிப்ப் பற்றியப் பதிவு மிகவும் அருமை. நன்றி பகிர்விற்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தொழில் நுட்பத்தினால் நன்மைகள் தான்.. அருளாளர்களின் அருளுரைகளை இளந்தலைமுறையினரும் அறிந்து கொள்ள முடிகின்றது. தங்களின் அன்பான வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 10. நானும் பலமுறை அவரின் சொற்பொழிவுகளை கேட்டு மகிழ்ந்து இருக்கிறேன். பின் சூரி சாருக்கு ஏற்பட்ட அனுபவம் போல் திருமுருககிருபானந்தவாரியாருடன் நானும் என் அண்ணனும் உடன் பயணித்தோம். அப்போது என்னை என் அண்ணன் இரண்டாவது பிரசவத்திற்கு அழைத்து சென்றார். சாரின் அண்ணன் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வந்து வாரியார் அவர்களை பார்த்து என் தம்பியின் மனைவி இவள் பிரசவத்திற்கு அம்மாவீடு போகிறாள் ஆசீர்வாதம் செய்யுங்கள் என்றார்கள். சுவாமிகள் ஆசீர்வாதம் செய்தார்கள். அவர்கள் ஆசிபெற்ற மகன் அவர் பேச்சின் ரசிகன். எங்கள் ஊர் முருகன் கோவில் கும்பாபிசேகத்திற்கு வந்து பேசிய போது அவரை வணங்கி என் மகனை ஆசிர்வாதம் பெற செய்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டோம். சிறுமியாக இருக்கும் போது சிவாகாசியில் சொற்பொழிவு செய்ய வந்த போது அவர் இரைதேடுவதுடன் இறையும் தேடு என்று கையெழுத்து போட்டு சிறு புத்தகம் வழங்கினார்.
  அதை மறக்க முடியாது. உங்கள் இந்த பதிவில் என் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி சார்.


  வாரியார் அவர்களும் ஆசீர்வாதம் செய்து வைத்தார்கள். இந்து அறநிலையதுறையில் செயல் அலுவலராக இருந்தார்கள். அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி வாரியார் சுவாமிகள் வந்து இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி புத்தகம் எழுதி இருக்கிறார்கள்.
  இப்போது கோவை சென்ற போது தினம் ரெயின்போ எப் எம் வானொலியில் அவரின் பட்டினத்தார் பற்றிய உரை, மற்றும் சேக்கிழார் சிந்தனைகள் என்று நாயன்மார்கள் பேசிக் கொண்டு இருக்கிறார். அதை கேட்டு மகிழ்ந்தேன்.
  வாரியார் சுவாமிகள் பற்றி நல்ல பதிவை தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   இரை தேடுவதுடன் இறையும் தேடு - என்பது ஸ்வாமிகளின் தனித்துவமான பொன்மொழி.. ஸ்வாமிகள் பற்றிய நிகழ்வினை எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி..
   தங்களின் இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 11. மனம் நெகிழ்கிறது கண்கள் கலங்கின அவரது நினைவுகள். சுவாமிகள் பற்றி எடுத்து வந்த பதிவுக்கு தலை வணங்குகிறேன் சகோ ! வாழ்த்துக்கள் ...! நலம் தானே சகோ ! follower ஐ சரி செய்யாததால்இவற்றை எல்லாம் தவற விட்டு விட்டேன் சகோ! நேரமின்மையும் தான் இருந்தாலும். இதுவும் பெரிய காரணம் தான். மன்னிக்கவும் இனி தொடர்கிறேன். வாழ்த்துக்கள் ...!சகோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   இறைவன் அருளால் என்றும் நலமே..
   தங்களின் கருத்துரையினைக் கண்டு மனம் நெகிழ்கின்றது..
   தங்கள் அன்பான வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..